Showing posts with label ரங்கநாயகம்மா. Show all posts
Showing posts with label ரங்கநாயகம்மா. Show all posts

Sunday, November 12, 2017

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.





மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து -
பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள் 
(hit-or-miss reformers)

“ மார்க்சின் இயங்கியல் பொருள்முதல்வாதத்துடன், அம்பேத்கரின் சாதி ஒழிப்பு இயக்கத்தை இணைப்பதென்பது இந்தியப் புரட்சிக்கு ஒரு பரந்த பாதையை இடும் என்று கே.ஜி. சத்தியமூர்த்தி கருதுகிறார். ரங்கநாயகம்மாவுக்குப் பதிலாக அவர் எழுதிய ‘அம்பேத்கர் என்னும் சூரியன்’ எனும் தத்துவார்த்த ஆய்வறிக்கையில், இந்த அம்சத்தை அவர் விரிவாக விளக்கியுள்ளார்.” (ஆந்திர ஜோதி, ஏப்ரல் 30).

கடந்தகாலத்திலும் சரி, இன்றைக்கும் சரி ‘அம்பேத்கர் என்னும் சூரியன்’ நூலை எனது நூலுக்கான பதிலாக நான் கருதவே இல்லை. ஆனால், அந்த நூல் மார்க்ஸையும், அம்பேத்கரையும் கலப்பது எனும் மாபெரும் ‘தத்துவார்த்த ஆய்வாக’ முன்வைக்கப்படுவதால், அதில் உள்ள சில பகுதிகளுக்கு மட்டும் பதிலளிக்க விரும்புகிறேன்.

சத்தியமூர்த்தி (மக்கள் யுத்தக் கட்சி, சிபிஐ-எம்எல்லின் ஒருமுறை செயலாளர், பின்னர் அவர் பிஎஸ்பியில் சேர்ந்தார், பின்னர் பஹுஜன் குடியரசு கட்சியில் சேர்ந்தார், அதன் பின்னர் பல அமைப்புகளில் இருந்தார். சமீபத்தில் காலமானார்). தங்களுக்கு விருப்பமான வகையில் மண்ணுக்கேற்ற மார்க்சியம் அல்லது தேசிய மார்க்சியம் என்றெல்லாம் வளைக்க முயற்சிக்கும் ஏனோதானோவென்று அறிவொளி பெற்ற சீர்திருத்தவாதிகளுள் ஒருவர்.

தொழிலாளர்வர்க்கம் வர்க்கப் போராட்டம் தொடுப்பதன் மூலம் சுரண்டல்வாத வர்க்க உறவுகளையும், சுரண்டல்வாத உழைப்புப் பிரிவினையையும் ஒழிக்க வேண்டும் என்று மார்க்ஸின் மார்க்சியமானது வலியுறுத்துகிறது. இந்தக் கோட்பாட்டின்படி, வர்க்க முரண்பாடு நிலவும் எந்த ஒரு நாட்டிலும் வர்க்கப் போராட்டமே தொழிலாளர் வர்க்கத்தின் பிரதானக் கொள்கையாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட நாட்டின் குறிப்பிட்ட பிரச்சினையானது, அந்தப் பிரதானக் கொள்கையால் ஆளப்பட்டு, அடிப்படை நிலைமைகளை மாற்றியமைப்பதன் மூலம் மட்டுமே தீர்க்க முடியும்.

பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் விளைவால், சுரண்டும் வர்க்கமும் உற்பத்தியாளர்களாகி, தம் உழைப்பில் வாழத் தொடங்கும். எஜமானர்-தொழிலாளர் உறவுகள் மறையும். இந்த உண்மையை வலியுறுத்தும் மார்க்ஸின் கோட்பாட்டை சுரண்டும் வர்க்கம் நிராகரிப்பதில் வியப்பேதுமில்லை. ஆனால், உழைப்புச் சுரண்டலை ஒழிக்கச் சொல்லும் அக்கோட்பாட்டை இந்தியாவின் பெரும்பான்மை தொழிலாளர் வர்க்கங்களான பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கூட ஏற்காதது வியக்கத்தக்கதே. ஆனால் அவர்களின் தலைவர்கள் இதைப் பற்றி ஏதும் கற்றுக்கொடுக்காததே இந்த நிராகரிப்புக்குக் காரணம். பூர்ஷுவாமயமாதலே அவர்களின் இலக்கு! சுரண்டல் முறையிலேயே முன்னேறுவது. இது காரணமில்லையென்றால், மார்க்சியத்தை இத்தனை தூரம் அவர்கள் எதிர்க்க வேண்டிய அவசியமே இல்லை.

இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாடுகள் பிடிக்கவில்லையெனில் அத்தகைய தலைவர்கள் தாமாக மார்க்சியத்தைப் படித்து, தங்களுக்கென ஒரு கம்யூனிஸ்ட் அமைப்பை உருவாக்கலாம், தங்களின் மக்களுக்கு அதைக் கற்றுக் கொடுத்து, தங்களின் முன் இருக்கும் புரட்சிகர இலக்கைப் புரிய வைக்கலாம். மார்க்சியம் ஒன்றும் ஏற்கனவே இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சொத்தல்ல.

சத்தியமூர்த்தி போன்ற ஒரு தலைவரை நாம் எடுத்துக் கொண்டால், அவருடையது ஒரு கோட்பாடல்ல, முரண்பாடான இரண்டு கோட்பாடுகளின் கலவையாகும். ஒருபுறம், அவர் அம்பேத்கரின் மார்க்சிய எதிர்ப்பை தழுவிக் கொள்கிறார்  அதேவேளை பொதுமக்களிடம் மார்க்சியத்திற்கு இருக்கும் ‘மவுசை’ அவரால் தட்டிக் கழிக்கவும் முடியவில்லை. இத்தகைய தலைவர்கள் மார்க்சியத்தை முழுமையாக கைவிட மாட்டார்கள். அதனால் அவர்கள் சில புத்திசாலித்தனமான தீர்வுகளுக்கு வருகின்றனர்.

இந்த நாட்டில் கிடைக்கும் உடனடித் தீர்வு என்னவெனில், அம்பேத்கரையும், மார்க்ஸையும் இணைப்பது! அல்லது தேவைப்பட்டால் இந்தக் கலவையில் காந்தியையும் கலப்பது!

பெயர்கள் தானே எத்தனை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். சரி, கோட்பாட்டளவில் அந்த இரண்டையும் கலக்க முடியுமா? இணைக்க முடியுமா?

மார்க்சின் கோட்பாடு என்னது? உழைப்புச் சுரண்டல் உறவுகளை ஒழிப்பது. வர்க்கப் போராட்டம் வன்முறையல்ல. உழைப்புச் சுரண்டலைத் தொடர்வதற்காக எஜமானர்கள் தொடுக்கும் வன்முறையை நிறுத்துவதற்காகத் தேவைப்படும் வன்முறை அது. தொழிலாளர் வர்க்கத்திற்கான தற்காப்பு தவிற வேறெதுவுமில்லை. பழைய முரண்பாடான நிலைமைகளை மாற்றியமைத்தாலன்றி  வர்க்க உறவுகளிலிருந்து எழும் குறிப்பிட்ட எந்தப் பிரச்சினையையும் தனியாகத் தீர்க்க முடியாது. மார்க்சிடம் மதமில்லை. அவருடையது பொருள்முதல்வாதமாகும்.

அம்பேத்கருடையக் கோட்பாடு என்னது? வர்க்கப் போராட்டமே தேவையில்லை! சீர்திருத்தம் இருக்கிறது. சாதி கூடாது! மதம் அவசியம். அதை நாம் சீர்திருத்துவோம்! ஆன்மீகத்தைக் கைவிடக் கூடாது. சாதியை ஒழித்த பின்னர் நாம் வர்க்கம் பற்றி கவலைப்படுவோம்!

காந்தியின் கோட்பாடு என்னது? தொழிலதிபர்களைத் தொடாதீர்கள்! அவர்கள்தான் அனைத்து சொத்துகளின் தர்மகர்த்தாக்கள்! இந்த தர்மகர்த்தா முறை மூலம் உழைப்பாளர்களை பெருந்தன்மையோடு நடத்தினால் போதும். அப்படியென்றால் சாதி? நாம் தீண்டாமையைக் கைவிட வேண்டும். சாதி எப்போதும்போல் இருக்கட்டும். சலவைத் தொழிலாளி எப்போதும் சலவையே செய்யட்டும், கழிப்பறை தூய்மை செய்பவர் எப்போதும் கழிப்பறையையே தூய்மை செய்யட்டும், அதேபோல் பிராமணர் அவருடைய வேலையை செய்யட்டும். இது எவ்வளவு நல்லது! இந்துமதத்தில் என்ன தவறு இருக்கிறது, அது அற்புதமான மதம்! வாருங்கள் நாம் ராமரையும், அல்லாவையும் ஒன்றாகப் புகழ்ந்து பாடுவோம். போராட்டமா? கூடாது! கூடவே கூடாது! அது வன்முறையானது. இருப்பினும், அரசாங்கத்திற்கு காவல்காரர்களும், இராணுவ வீரர்களும் தேவை. அது வன்முறையாகாது.

அப்படியென்றால் வர்க்கப் போராட்டம்? அது கொடுமையான வன்முறை.

இப்போது, நாம் இம்மூன்று கோட்பாடுகளையும் அல்லது இரண்டையாவது இணைக்க வேண்டும். சரி இணைப்போம்! ஒன்றுகலக்குமா?

அம்பேத்கரின் கோட்பாடு: காந்திக்கு எதிரானது. மார்க்ஸுக்கு எதிரானது.
காந்தியின் கோட்பாடு: அம்பேத்கருக்கு எதிரானது. மார்க்ஸுக்கு 
எதிரானது.



மார்க்சின் கோட்பாடு: இரண்டிற்கும் எதிரானது.
                                  
வர்க்கக் கலப்பு மற்றும் சீர்திருத்தத்தவாதத்திற்கு எதிரானது.

புத்தரை எடுத்துக்கொண்டால், அவருடைய அஷ்டாங்க மார்க்கம், ஒன்றுக்கும் உதவாது.

இவற்றில் எந்த இரண்டையும் ஒன்றாகக் கலக்க முடியாது என்பதை இக்கோட்பாடுகளுக்கிடையில் உள்ள முரண்பாடுகளை அறிந்தவர்களுக்குத் தெரியும். அதை அறிந்தவர்கள் என்ன சொல்ல வேண்டும்? காந்தியின் கோட்பாடு பயனற்றது என்று தூக்கி எறிய வேண்டியும்.

அம்பேத்கரின் கோட்பாட்டிலிருந்து ‘சாதி ஒழிப்பு’ எனும் அம்சத்தை எடுத்துக்கொள்ள வேண்டும், ஆனால் சாதியை ஒழிப்பதற்கு, உழைப்புசார் உறவுகளை தலைகீழாக மாற்றியமைக்கும் இலக்கைக் கொண்ட வர்க்கப் போராட்டத்தால் மட்டுமே முடியும். கீழ்நிலை சாதிகளின் பொருளாதார நிலைமைகளை மாற்றியமைக்காமல் சாதி ஒழிப்பு சாத்தியமில்லை.

எல்லாவற்றிலும் ஒரு தர்க்கம் இருக்கும். அந்தந்த தர்க்கத்தின்படி, ஒற்றுமையும், முரண்பாடும் உருவாகின்றன. ‘குறிப்பிட்ட பிரச்சினைகள் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தினால் மட்டுமே தீர்க்க முடியும்’ என்று சொல்லக்கூடிய ஒரு கொள்கையை, ‘சாதியை ஒழித்த பின்பு மட்டுமே வர்க்கப் பிரச்சினையைக் கையில் எடுக்க வேண்டும்’ என்று சொல்லும் மற்றொரு கொள்கையை எப்படி இணைக்க முடியும். சத்தியமூர்த்தி போன்ற அறிவுஜீவிகளுக்கு எதுவும் சாத்தியம். தர்க்க நியாயங்கள் எதுவும் தேவையில்லை. அவரைப் பொறுத்தவரை, அம்பேத்கரையும், மார்க்ஸையும் இணைக்க முடியும். இரண்டையும் ஒரு கோட்பாடாக்க முடியும். பிறகு, மார்க்சியத்தை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் மாற்றலாம். போராட்டங்களைக் கைவிட்டு, கூட்டிணைப்புகளை விரிவுபடுத்தலாம். மார்க்சியத்தை நாம் மண்ணுக்கேற்ற மார்க்சியமாக மாற்ற வேண்டும். அதுதான் நமது நாட்டின் தேவை. அதாவது, மார்க்சியம் ஜெர்மனியில் ஜெர்மானிய மார்க்சியமாகவும், இங்கிலாந்தில் ஆங்கிலேயே மார்க்சியமாகவும், ஃப்ரான்சில் ஃப்ரெஞ்சு மார்க்சியமாகவும் இருக்கும். அதேபோல், இந்திய மார்க்சியம் என்று ஒன்று வேண்டும். நாட்டுக்கும், பிராந்தியங்களுக்கும் ஏற்றார்போல் மார்க்சியம் வர்க்கப் போராட்டத்தைக் கைவிட வேண்டும்.

நமது மண்ணுக்கேற்ற மார்க்சியமானது அம்பேத்கர், புத்தர் மற்றும் மார்க்சின் கலவையாக இருக்கும். காந்தி பக்தர்கள், ‘காந்தியையும் நாம் இணைத்துக் கொள்ள வேண்டும்!’ என்பார்கள். சாய்பாபாவின் பக்தர்கள் ‘பாபாவையும்’ சேர்த்துக் கொள்ளச் சொல்வார்கள்.

இது எப்படி ஒரு விவேகமுள்ள இணைப்பாக இருக்க முடியும்?  வெகு காலத்திற்கு முன்னரே அந்நிய நாடுகள் இதனை முயற்சித்துள்ளன! காலதாமதாமகவும், புத்திசாலித்தனத்துடனும் சத்தியமூர்த்தி மார்க்சியத்தை மண்ணுக்கேற்ற மார்க்சியமாக்குகிறார். ஆனால் அவர் தனது அறிவை சற்று குறை அறிவோடு வெளிப்படுத்தியிருக்கிறார். புத்தர், அம்பேத்கர் மற்றும் மார்க்ஸையும் சமன்படுத்தி, ‘இம் மூன்று மாபெரும் ஆளுமைகளும்’ (திருமூர்த்திகள்) சுரண்டலும், ஒடுக்குமுறையுமற்ற ஒரு சமூகத்தைக் கனவு கண்டவர்கள், தத்துவவாதிகள் என்றார். ஆனால் பாருங்கள், மூவரையும் ஒப்பிட்டவர் அம்பேத்கரை மட்டும்தான் ‘சூரியன்’ என்கிறார்! (’அம்பேத்கர் எனும் சூரியன்’ நூலைப் பார்க்கவும், அந்தப் புகைப்படங்கள் இருக்கும் பக்கத்தில் எண் இல்லை) ‘புத்தரும் அம்பேதகரும் சுரண்டலற்ற, ஒடுக்குமுறையற்ற சமூகங்களைக் கனவு கண்டார்களா’ எனும் கேள்வியை நான் ஒதுக்கிவிடுகிறேன். அதுபற்றி ஏதும் கேட்கக்கூட மாட்டேன். மூவரும் சமமான சிந்தனையாளர்கள் மற்றும் மாபெரும் ஆளுமைகள் என்றால், அதெப்படி அம்பேத்கர் மட்டும் ‘சூரியன்’ ஆனார்? அப்படியென்றால், புத்தர் யார்? அவர் இரண்டாம் சூரியனா? மார்க்ஸ் யார்? மூன்றாம் சூரியனா? மூவரும் சமம் என்று சொல்லிவிட்டு அம்பேத்கரை மட்டும் ’சூரியன்’ என்று சொன்னால், இதுபோன்ற கேள்விகள் எழாதா? ‘மூவரும் சூரியன்கள்’ என்று அவர் சொன்னால், ‘பூமியில் மூன்று சூரியன்கள் அல்லது இரண்டு சூரியன்கள் இருக்கிறதா’ எனும் கேள்வி தொடருமே! சரியோ தவறோ, ‘மூன்று சூரியன்கள்’ என்று ஏன் அவர் சொல்லவில்லை?

கன்ஷிராம் மற்றும் மாயாவதி போன்ற தலித் தலைவர்களின் பார்வையில் அம்பேத்கர் சூரியனாக இருப்பது சரி, ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை அம்பேத்கர் மட்டுமே இருக்கிறார், மார்க்ஸ் இல்லை. ஆனால், சத்தியமூர்த்தியின் வாதப்படி, ஒற்றைக் கண் பார்வையுடைய அறிவுஜீவி இல்லை அவர். மூன்று கண் பார்வை கொண்டவர்! அம்பேத்கர் என்னும் சூரியனை அவர் எப்படி சூரியனல்லாத புத்தர் மற்றும் மார்க்ஸுடன் ஒப்பிட்டார்? மற்ற இருவருக்கும் மேலாக அம்பேத்கரை வைத்திருந்தால் மட்டுமே அம்பேத்கர் சூரியனாக முடியும். ஒட்டுமொத்த சமூகத்தையும் தம் வெளிச்சத்தால் நிரப்பும் சூரியன் அம்பேத்கர்! புத்தரும், மார்க்ஸும் அம்பேத்கரின் இடம், வலம் என்று அருகில் நிற்கலாம். அப்படி இருந்தால் மட்டுமே அம்பேத்கர் சூரியனாக இருக்க முடியும்.

சத்தியமூர்த்தி கம்யூனிஸ்ட் கட்சியை கைவிடலாம் பரவாயில்லை, ஆனால் அவர் கம்யூனிசத்தையும் கைவிட்டு அடையாள அரசியலை தம் முக்கிய குறிக்கோளாகக் கைகொண்டார். ஒவ்வொரு அடையாளக் குழுக்களும் வெவ்வேறு பிரிவுகள். அவரவருக்கு சொந்தப் பிரச்சினைகள் உள்ளது. குறிப்பிட்ட பிரச்சினையைத் தீர்க்க குறிப்பிட்ட இயக்கங்கள் தேவை! அது நியாயமானதே. ஆனால் அத்தகைய அடையாளக் குழுக்களிடம் என்ன தீர்வு இருக்கிறது? பூர்ஷுவாமயமாதல்!

பூர்ஷுவாமயமாதல் மட்டுமே மார்க்சியத்திலிருந்து வர்க்க உணர்வை பிரிக்கக் கூடியது. நாம் பூர்ஷுவாக்களாக வேண்டும்! நாம் பூர்ஷுவா ஆட்சியாளர்களாக வேண்டும்! அது நடந்தால் அது ஒரு தலித் அறிவுஜீவிக்கு நல்லது. ஒரு தலித் முதலாளி ஆனால், தனக்குக் கீழ் ஆயிரக்கணக்கான தலித்துகளை தொழிலாளர்களாக அமர்த்தி சுரண்டிப் பிழைப்பது அவருக்கு ஆனந்தம் தரலாம். இத்தகைய குறுங்குழுவாத இயக்கங்கள் அத்தகைய தலித் வளர்ச்சியையே விரும்புகின்றன.

அடையாள, குறுங்குழுவாத இயக்கங்களின் செயல்பாட்டாளர்கள் தங்களுடைய பாத்திரம் என்ன, தங்களுடைய இடம் என்ன என்பதை மறந்துவிடுகிறார்கள். சமத்துவமற்ற உற்பத்தி உறவுகளில் அவர்களுடைய அடையாளக் குழு சிறைபட்டுக் கிடப்பதை அவர்கள் உணர்வதில்லை. தமது குழுக்கள் சுதந்திரமானவை, தங்களுடைய பிரச்சினைத் தனியானது மற்ற பிரச்சினைகளோடு தொடர்பில்லை, ஆகவே தனியான தீர்வைப் பெற முடியும் என்று அவர்கள் கனவு காண்கிறார்கள்.

பூமியானது, தன்னைத் தானே சுற்றி வருவதோடு, சூரியனையும் சுற்றி வருகிறது. இயற்கை விதி அது. ஒவ்வொரு குழுக்களுக்கும் அத்தகைய சட்டம் பொருந்தும். ஒவ்வொரு குழுக்களும் தங்களுடைய குறிப்பிட்ட பிரச்சினையைச் சுற்றி வருவதோடு, தனது வர்க்க உணர்வையும் சுற்றி வரவேண்டும். இல்லையென்றால் எந்த அடையாள-சூரியனும் எந்த அடையாளக் குழுக்களையும் காக்க இயலாது.

தலித் சாதிகளுக்காக அம்பேத்கர் எனும் சூரியன் ஏற்படுத்திய இடஒதுக்கீடு எனும்  வெளிச்சம் எத்தனை காலம் தொடரும்? உலகம் இருக்கும் வரையிலுமா? அப்படியென்றால் கீழ்நிலை சாதிகளும் அப்படியே இருக்க வேண்டும் இல்லையா? சாதி இருந்தால் மட்டுமே இடஒதுக்கீடு இருக்கும், இல்லையா?

ஆனால், இடஒதுக்கீடு என்பதும் ஒருவகையான பாகுபாடே. அது சுய-மரியாதை இன்மையைக் காட்டுகிறது. இடஒதுக்கீட்டை தற்காலிக நிவாரணமாகக் கருதி நிரந்தர தீர்வை நாம் தேடிப்போக வேண்டாமா? இல்லை இடஒதுக்கீட்டை நிரந்தரமாக்கி, கீழ்நிலை சாதிகளின் நிலையையும் என்றென்றைக்கும் தக்கவைக்கப் போகிறோமா?

சரி, இடஒதுக்கீடு என்பது தற்காலிக நிவாரணம் என்றால் சாதியமைப்பை ஒழிக்க நிரந்தரத் தீர்வு என்னது? கலப்புத் திருமணங்கள் ஒரு தீர்வு என்று அனைவருக்கும் தெரியும். சரி, கலப்புத் திருமணங்களைச் சாத்தியப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்? இதற்குப் பாதை தெரிய, ஒரு நூறு கலப்புத் திருமணங்களையாவது ஆய்வு செய்ய வேண்டும். (அம்பேத்கருடையதையும் சேர்த்து). என்னக் காரணங்களால் அந்த கலப்புத் திருமணங்கள் சாத்தியமாயிற்று என்று பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த சமூகத்திலும் கலப்புத் திருமணங்கள் நிகழ்வதற்கான நிலைமையை உருவாக்குவது அவசியம். இதுவே சாதி ஒழிப்பிற்கு நிரந்தர தீர்வு, இல்லையா?

மார்க்சியத்தை மண்ணுக்கேற்ற மார்க்சியமாக மாற்ற நினைக்கும் அறிவுஜீவிகள் கொஞ்ச நஞ்சமல்ல. அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் அவர்களைக் காணலாம். புச்சலப்பள்ளி சுந்தரைய்யாவை ‘மார்க்சிய காந்தி’ என்று குறிப்பிட்ட ஒரு கட்டுரையை சமீபத்தில் படித்தேன். ஒரு மார்க்சியருக்கும் காந்திக்குமான ஒப்புமைதான் சாத்தியமா? காந்தியின் எளிமையைப் பராமரிப்பதுதான் உண்மையில் மிகவும் செலவுமிக்கதாக இருக்கிறது என்று ஒருமுறை சரோஜினி நாயுடு குறிப்பிட்டதை இந்தக் கட்டுரையாளர் கேள்விப்பட்டதில்லையா? பகத்சிங்கின் மரணதண்டனைக்கு காந்திதான் காரணமாக இருந்தார் என்பது அவருக்குத் தெரியாதா? இளம் பெண்களை நிர்வாணமாக அருகில் படுக்கச் செய்து, ‘நான் எனது பிரம்மச்சரியத்தை பரிசோதிக்கிறேன்’ என்று தார்மீகக் கொள்கைகளை உதிர்த்ததை அவர் அறியமாட்டாரா? எந்த வகையில் காந்தி ஒரு உதாரணப் புருஷர்? சுந்தரைய்யாவை காந்தியோடு ஒப்பிடுவது எப்படி அவரை கௌரவிப்பதாகும்? கம்யூனிஸ்ட் கட்சிகள் இதற்கெல்லாம் வெட்கப்படுவதே இல்லை. மற்றவர்களின் விமர்சனங்களுக்கு செவிமடுப்பதில்லை எனும் அளவுக்கு பிடிவாதம் கொண்டவர்களாகி விட்டனர். தங்களது கூட்டங்களுக்குப் பெரும் மரியாதையுடன் பூர்ஷுவா அமைச்சர்களை கூப்பிட்டு மகிழ்கின்றனர். இத்தகைய பழக்கங்கள் அனைத்தும் மார்க்சியத்தை பூர்ஷுவா மார்க்சியமாக மாற்றுவதற்கான வெளிப்பாடுகளே.

பூர்ஷுவாமயமாக்கப்பட்ட கம்யூனிஸ்டுகளை பாட்டாளி வர்க்கம் சகித்துக் கொண்டால், அதற்கு மண்ணுக்கேற்ற மார்க்சியம் அல்லது தேசிய மார்க்சியம் கிடைக்கும். அது, பூர்ஷுவா ஆட்சியாளர்கள் பெருந்தன்மையுடன் அனுமதிக்கும் சட்டபூர்வ மார்க்சியமன்றி வேறில்லை. அதன் விளைவாக நாம் எங்கிருக்கிறோமோ அங்கேயே இருப்போம்: அடையாளக் குழுக்கள் அதே கீழ்நிலை உடல் உழைப்பிலும்; பெண்கள்  சமையலறையிலும்!

எந்த சூரியனும் நம்மைக் காக்க இயலாது. மார்க்சியம் பூர்ஷுவாமயமாக்கப்பட்ட பின்பு சூரியன் என்ன செய்கிறதென்று பார்ப்போம்!



                                                                             - ரங்கநாயகம்மா

Sunday, October 29, 2017

தோழர் ஜி.ராமகிருஷ்ணனுக்கு பகிரங்கக் கடிதம்.

சிபிஎம் கட்சியின்  மாநிலச் செயலாளரான தோழர். ஜி.ராமகிருஷ்ணனுக்குப் பகிரங்கக் கடிதம்.





வணக்கம் தோழர், சமீபகாலமாக உங்கள் அமைப்பில் முழு நேர ஊழியராக இருக்கும் ஒரு சிலர் ஒரு புரட்சிகர முன்னெடுப்பை எடுத்துச்செல்கின்றனர். அதாவது முழுநேர ஊழியராக இருப்பவரே புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் அருகதையுடையவர் என்று எண்ணும் அளவுக்கு சென்றுவிட்டனர்.

பாரதி புத்தகாலயத்தில் பணிபுரியும் மேலாளர் சிராஜுதீன் என்பவர் நான் செய்யும் தொழிலைத் தெரிந்துகொண்டே அதை மானம் கெட்ட தொழில், அப்படிப் பிழைத்து அதில் வரும் வருமானம் அவமானத்திற்குரியது என்று பொதுவெளியில் தன் கருத்தை வைத்தார். அப்பொழுது அது குறித்து அவரிடம், மானம் கெட்ட தொழிலில் சம்பாரித்த காசை, உங்கள் பாரதி புத்தகாலயத்துக்கு நிதி உதவியாகச் செய்யலாமா என அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு,  “தோழர்.. மன்னிச்சிடுங்க உணர்சிவசப்பட்டுவிட்டேன்” என்றார். அந்த மன்னிப்பைப் பொருட்படுத்தினேன். அதே சமயம் அதை பொதுவெளியில் வைக்கச் சொன்னேன் அவர் செய்யவில்லை.

தோழர் எனது வேலை சின்னத்திரைத் தொடர்களுக்கு வசனம் எழுதுவது. அப்படி வசனம் எழுதிய பலருக்கு, உங்களது கட்சியின் கலை இலக்கிய அமைப்பான தமுஎகச சம்பந்தப்பட்ட சீரியலின் பெயரை அழைப்பிதழில் அச்சிட்டு விருதும் கொடுத்திருக்கிறது. மன்னிக்கவும். அந்த சீரியலும் புரட்சிகர கருத்தியலை வாரி வழங்கும் தொடரல்ல.

ஒரு நேரத்தில் சின்னத்திரையில் இருப்பவர்கள் எங்களது அமைப்பில் இருக்கிறார்கள் என்று கூறுவதில் பெருமிதம் அடைவதும், சில கேள்விகளை முன்வைத்தால் மானம் கெட்ட தொழில் அவமானகரமான வருமானம் எனச் சொல்லுவதும் ஏன். சின்னத்திரையின் எழுத்தாளர் சங்கத்தில் இருக்கும் நான் இதுகுறித்து ஏன் கேள்விகளை எழுப்பக் கூடாது.

மேலும் தோழர் இந்த ஒட்டுமொத்த வசைகளுக்கும் காரணமாக அமைந்தது எனது வாழ்நாள் தோழியான தோழர் கொற்றவை,  தோழர் ரங்கநாயகம்மா அவர்களின்  “சாதியப் பிரச்சினைக்கு தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத்தேவை!” என்ற நூலிலிருந்து கிளம்பியதுதான்.

அந்த நூலை முன்வைத்துப் பேசுகிறேன் என, அம்பேத்கரின் கருத்துக்களையோ அவரது ஆய்வுகளையோ மார்க்சியத் தளத்தில் முன்வைக்காது, சிபிஎம் கட்சி பொலிட் பீரோவில் பார்ப்பனர்கள் அதிகம் இருக்கிறார்கள், அது குறித்து எனக்கு கேள்விகள் இருக்கிறது என  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்களின் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா பொது ஊடகத்தில் பேட்டி கொடுத்துள்ளார். அந்தக் கேள்விக்கு இதுவரை தமுஎகசவோ, சிபிஎம் கட்சியோ எந்த விதமான பதில்களையும் தரவில்லை.

அதே சமயம், ஆதவன் தீட்சண்யாவை தனி நபர் துதி பாடலில் முன்வைத்த சிராஜுதீன், அவர் அடுத்த அம்பேத்கராக இருந்தால் என்ன என்று கேள்வியை முன்வைத்தார். மேலும் இன்னொரு நபரான கருப்பு கருணா என்பவர், பொதுவெளியில் அவன் இவன் எனப் பேசுவதையே முழுநேர ஊழியப் பணியாக செய்துவருகிறார்.  “வக்காலி” என்று அழைப்பது புரட்சிகர வசனமாக அவருக்கு இருக்கிறது. கட்சியின் தத்துவங்கள் சார்ந்தோ, அதன் விதிகள் சார்ந்தோ எதுவும் பேசத் தேவையில்லை. அவதூறுகளை இரைப்பதுதான் முழுநேர ஊழியரின் பணியா?

மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவன் என்ற அடிப்படையில், நான் சாதிகுறித்த ஒடுக்குமுறைகளை எதிர்ப்பவன். அத்தோடு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்ட காலத்துக்கு முன், அறிவிக்கப்படாத முழுநேர ஊழியனாய் இருந்திருக்கிறேன். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட கன்வீனராக, மாணவர் பெருமன்ற மாவட்ட கன்வீனராக, கட்சியின் உறுப்பினராக இருந்து பணிசெய்திருக்கிறேன். இப்பொழுது எந்த அமைப்பிலும் இல்லை.

மார்க்சிய வழியில் பயணிக்கும் என்னை, சிராஜுதின் என்பவர் எல்லா நேரங்களிலும் தேவர் சாதி என்றே சொல்லி அடையாளப்படுத்தி அவதூறும் பரப்பி வருகிறார். நானே என்னை சாதி நீக்கம் செய்து கொண்டபிறகு, அம்பேத்கரை விமர்சித்த ஒரே காரணத்தால், எனக்கு சாதி முத்திரை குத்தியும் அவதூறு செய்தும், வசுமித்ர என்னும் என் பெயரை பசுமித்ரா என்றெழுதுவதும், மானங்கெட்ட தொழில் செய்பவன் என்று சொல்வதையே ஒரு பணியாக நினைக்கிறார். இதுதான் உங்கள் அமைப்பு முழுநேர ஊழியர்களுக்கு கற்றுக்கொடுக்கும் விமர்சனப் பண்பா.

கிடாரி என்கிற திரைப்படத்தில் நான் நடித்ததையும். ஒரு வாய்ப்பாக முன்வைத்து அவதூறு செய்கிறார். தோழர் அந்தத் திரைப்படத்தில் வேலராமமூர்த்தியும் நடித்திருந்தார். செம்மலரின் வந்த கிடாரி விமர்சனத்தை தோழர் தமிழ்ச்செல்வன் எழுதியிருந்தார். அதில்  “அட நம்ம வேலா” என்றெழுதி புளங்காங்கிதம் அடைந்திருந்தார். அது சாதிப் பாசமா.. இல்லை வேறெதும் பாசமா என்று எனக்குத் தெரியவில்லை.

மேலும், சோம்நாத் சட்டர்ஜி என்று பெயரில் இருப்பதாலும், பூணுல் கல்யாணம் நடத்தியதாலும், அவர் பார்ப்பனர் என்று எனக்குத் தெரிகிறது. சாதி முறைகளை அவர் இன்னும் கடக்கவில்லை என்றும் புரிகிறது. அவப்பேறாக, நான் தீர்மானிக்கமுடியாத பிறப்பின் சாதியை வைத்துப் பேசும், உங்களது அமைப்பைச் சேர்ந்தவர்களை முன்வைத்து, இப்பொழுது எனக்கு சில விளக்கங்கள் தேவைப்படுகிறது. இந்த மாதிரியான அணுகுமுறைகள் மூலம்தான் சாதியைக் கடக்கமுடியும் என்று அவர்கள் நினைப்பதால் அதையே நானும் இப்பொழுது கேள்விகளாக முன்வைக்கிறேன்.

நீங்கள் என்ன சாதி, உங்களது வெகுஜன அமைப்பில் இருக்கும் தலைவர்கள் செயலாளர்களின் சாதிகள் என்ன? நீங்கள் எல்லாம் எப்படி சாதியைக் கடந்தவர்கள் என்று பாரதிபுத்தகாலயத்தின் மேலாளர் சிராஜுதின் எப்படி ஏற்றுக்கொண்டார் என்று தெரிவித்தால், நானும் அப்படிப் பட்ட சான்றிதழைப் பெறுவதற்கு ஆயத்தமாக உள்ளேன்.

மேலும், உங்களது அமைப்பில் சேர்ந்தால்தான், சாதியைக் கடக்கமுடியுமெனில், அதை பொதுவெளியில் வைத்து உரையாடுங்கள். நான் மட்டுமல்லாது, பலரும் உங்களது அமைப்பில் சேர்ந்து சாதியைக் கடப்பார்கள். சாதியை ஒழிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது சிபிஎம்மில் சேர்வது என்றானபின், இந்தியாவில் சாதி ஒழிந்துவிடும் இல்லையா!

தோழரே...

எஸ்.வி.இராஜதுரை உங்களது கட்சியின் தேசியச் செயலாளரான, பிரகாஷ் காரட்டுக்கு அரசியல் அரிச்சுவடி கூட தெரியாதெனச் சொல்லியவர். பாரதிய ஜனதாவுக்கும், சிபிஎம்முக்கும் வேறுபாடுகள் இல்லை எனச் சொன்னவர். அதற்கு இன்றுவரை சிபிஎம் எந்தப் பதிலும், விளக்கமும் கொடுக்கவில்லை. ஆனால், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அவருக்கு தேனி மாவட்டத்தில் மார்க்சிய அறிஞர் பட்டம் கொடுத்தார்கள்.  

அதே சமயம், உங்களது கட்சியின் பார்வையில், கண்டவர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கொடுக்கத் தேவையில்லை என்ற நோக்கம் இருக்கலாம். ஆனால் அப்படிச் சொல்லும் ஒருவரை மார்க்சிய அறிஞர் எனச் சொல்லுவது, பிரகாஷ் காரட்டுக்கு அரசியல் அரிச்சுவடி கூடத் தெரியாது என்பதை உங்கள் கட்சி வெகுஜன அமைப்பான தமுஎகச மார்க்சிய அறிஞர் பட்டம் கொடுத்திருப்பதால் அதை உறுதி செய்வதாகவே தோன்றுகிறது. மேலும் மார்க்சிய அறிஞர், விருது கொடுத்த மேடையிலேயே,  “மார்க்சியத்தை பன்றித்தத்துவம்” என அம்பேத்கர் சொன்னது சரி, என விளக்கம் கொடுத்தபோது, அங்கிருந்த சிபிஎம்மின் தோழர்களில், ஒருவர் கூட குரல் எழுப்பவில்லை. விவாதிக்க முனைந்த என்னையும் வெளியே தள்ளிச் சென்றார்கள்.

தோழர், நான் மேடையில் அதைப் பேசினேன் இதைப் பேசினேன் என்று திரிக்க, ஆதவன் தீட்சண்யா, சிராஜுதீன், கருப்பு கருணா போன்றவர்கள் முன்னெடுக்கலாம். ஆனால் நான் மேடையில் பேசியதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. மேலும் தேனியில் நடந்தது என்ன என்று நீங்கள் உங்கள் கமிட்டியில் ஒரு ஆய்வையும் செய்யச் சொல்லலாம். அதுகுறித்து என் தரப்பைச் சொல்ல ஆவலோடு காத்திருக்கிறேன்.

அதோடு அக்கூட்டத்தில் பங்கேற்ற தோழர். தி.சு.நடராஜன், பிராங்க்பர்ட் மார்க்சியவாதியெல்லாம் மார்க்சிய அறிஞர் என்று அழைக்கப்படுவதில் எனக்கும் உடன்பாடில்லை என்று என்னிடம் சொல்லவும் செய்தார். தமிழ்ச்செல்வன் ‘தம்பி உன் கருத்துக்கு எதிர்ப்பு மட்டுமல்ல ஆதரவும் இருக்கு’ என இதை முன்வைத்தே சொன்னார்.

கலந்துரையாடல் என அறிவித்துவிட்டு, மேடையில்  “மார்க்சியம் பன்றித்தத்துவம்” என்று வாதிடுபவருக்கு எதிராக, எந்தக் கேள்வியையும் கேட்காமல், என்னை வெளியே அனுப்பியதுதான் தமுஎகசவின் கருத்துச் சுதந்திரம் என்பதை அன்று அறிந்துகொண்டேன்.

மேலும் அதன் தொடர்ச்சியாக தமுஎகசவின் கலை இலக்கியத் தூண்களாக தேனியில் அறியப்படும் தோழர் சீருடையானிடம், ராஜதுரைக்கு நீங்கள் எப்படி மார்க்சிய அறிஞர் எனப் பட்டம் கொடுத்தீர்கள் எனக் கேட்டதற்கு, ராஜதுரையின் இரண்டு கட்டுரைகளை படித்தேன், அதனால் அவருக்கு அந்தப் பட்டம் ஏற்புடையதே என்றார். இதை பதிவு செய்யலாமா எனக் கேட்டதற்கு சம்மதமும் கொடுத்தார்.

அடுத்து தோழர் காமுத்துரை ஒரு கட்டுரையும் படிக்கவில்லை என்று சொன்னார். முக்கியப் பொறுப்பிலிருக்கும் தோழர்களே இப்படி இருக்கும் போது, ராஜதுரையை மார்க்சிய அறிஞர் எனச் சொன்னது யார். அதன் நோக்கங்கள் விளக்கங்கள் என்ன. மேலும் கம்யூனீஸ்ட் கட்சி அறிக்கையை மொழிபெயர்த்ததாலேயே அவர் மார்க்சிய பேரரறிஞர் என்று இப்பொழுதைய தமுஎகசவின் மாநிலச் செயலாளர் சு.வெங்கடேசன் அங்கு சொன்னதாக அறிந்தேன். இது ஒன்றுதான் மார்க்சிய அறிஞராகும் தகுதியா?

மேலும் புத்தகம் பேசுது இதழில் கோணங்கி குறித்து ஒரு துதி பேட்டி வெளிவந்தது. அது குறித்த எனது கேள்விகளை முன்வைத்து எழுதிய கடிதத்தை பிரசுரிக்கவும் இல்லை. ஆனால் அந்தப் பேட்டியில் கலைஞனை நம்புவதும் கலைஞனைப் பின் தொடர்வதுதான் மனிதகுலத்திற்கு விடுதலை என்று முன்னட்டையிலேயே கொட்டை எழுத்துக்களில் போட்டிருந்தார்கள். அப்படி நம்பும் வகையில் ஒரு கலைஞனை தமுஎகசவிலாவது சுட்டிக்காட்டமுடியுமா என எனக்குத் தெரியவில்லை. இதை ஒரு எழுத்தாளர் கூற்று என எடுத்துக்கொண்டாலும் அந்த எழுத்தாளர் கூற்றுக்கு பதில் சொல்லும் எழுத்தாளர் தமுஎகசவில் இல்லையா.

தோழர்... தொடர்ந்து இது போன்ற தனிமனிதக் குழுக்களை, அவர்களை முன்னெடுத்து முதுகு சொறியும் நபர்களை, முழுநேர ஊழியர்கள் என்றும், அவர்கள்தான் புரட்சியை முன்னெடுத்துச் செல்பவர்கள் என்றும் கவனத்தில் கொள்ள முடியுமா?

மேலும் ரங்கநாயகம்மாவின் புத்தகத்தை பாரதி புத்தகாலயம் தனது அடுக்குகளில் கூட வைக்காமல் ஒளித்து வைத்தே விற்கிறது. மாறாக ஆந்திராவில் சிபிஎம் கட்சியின் பத்திரிக்கையில் ரங்கநாயகம்மா தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இருக்கிறார். அவரது கட்டுரைகளை சிபிஎம்மின் கட்சிப் பத்திரிக்கை பிரசுரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது.

கட்சியில் இருந்துகொண்டு, தலித்தியம்தான் விடுதலை, மார்க்ஸ் தேவையில்லை என்று கருதும் நபர்கள், உங்கள் அமைப்பில் முழுநேர ஊழியராகவும், மற்றவர்களை ஏக வசனத்தில் திட்டி தன் பிழைப்புவாதத்தை வளர்த்துக்கொள்பவராகவும் இருப்பது ஏன்.

மேலும் தலித்தியத்தை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் மார்க்ஸ் தேவையில்லை எனும் இவர்களுக்கு நீங்கள் அறிந்த மார்க்சியத்தின் படி கூறும் பதில்கள் என்ன.

எல்லாவற்றிற்கும் மேலாக மார்க்சிய அறிஞராக ,செயலூக்கமான வழிகாட்டியாக பல புத்தகங்களை எழுதிய, இப்பொழுதும் எழுதிக்கொண்டிருக்கிற தோழர் ரங்கநாயகம்மாவை நக்கல் நையாண்டி செய்து சிராஜுதீன், ஆதவன் தீட்சண்யா கருப்பு கருணா போன்றவர்கள் ஆற்றும் பணிகளையும் நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.

உங்களது வாசிப்பு வசதிக்காக எனது கேள்விகளைத் தொகுத்துக் கேட்கிறேன்.

1.சின்னத்திரையில் கதை வசனம் எழுதுவது, சினிமாவில் நடிப்பது கேவலமான பிழைப்பா? அதில் வரும் வருமானம் அவமானகரமான வருமானமா?

2. சாதியப் பிரச்சினைக்கு அம்பேத்கர் சொல்லும் தீர்வுகள் என்ன?

3.புத்தரா கார்ல் மார்க்ஸா என்றும் அம்பேத்கரின் நூல் குறித்து உங்களது பார்வை என்ன?

4. சிபிஎம் கட்சி அம்பேத்கரின் சாதி ஒழிப்புக் கருத்தியல்களை எப்படி ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துகிறது.

5.சாதி ஒழிப்புக்கு மார்க்சியம் உதவுமா?
உதவுமெனில். அதன் தத்துவார்த்த புரிதல்கள் என்ன?

இறுதியாக, விமர்சனம் செய்வதற்கான உரிமையை, அரசியல் அமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியிருக்க, ஒரு நூலை எழுதியதற்காகவே சாதி முத்திரை குத்துவதும், அவதூறு செய்வதும், நூலை  “நரகல்” என்று சொல்வதுமாக இருக்கும் சிபிஎம் முழுநேர ஊழியர்களின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள். அமைப்பில் உள்ளதானலேயே இந்த அதிகாரம் கிடைத்துவிடுமா?

அதோடு, என் குறித்தான கேள்வியில், தேவர் சாதி சங்கங்களில் சென்று பிரச்சாரம் செய்வார்களா என்றொரு கேள்வி வந்தது. அதே பாணியை முன்வைத்து, சிபிஎம் தலைவர்கள் அனைவரும், அவர்களின் சாதி சங்கங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்திருக்கிறீர்களா என்று நான் கேட்கிறேன். மேலும் ஒருவர் இந்த சாதியில் பிறக்கவேண்டும் என்பது அவரது தேர்வாக இருக்கமுடியுமா.?

மறுபடியும் அழுத்தமாகப் பதிவு செய்கிறேன். சிபிஎம் பொலிட் பீரோவில் பார்ப்பனர்கள் அதிகம் இருக்கிறார்கள், தலித் உறுப்பினர் இல்லை எனும், ஆதவன் தீட்சண்யா கேள்விக்கு பதில் சொல்லவேண்டும்.

அதே சமயம், தலித்துக்களுக்கு வாய்ப்பளிக்காத சிபிஎம் கட்சியில், இந்த தலித்தியப் போராளிகள்,  அமைப்பாளர்களாக, பணியாளர்களாக, உறுப்பினர்களாக ஏன் இருக்கிறார்கள்.? என்பதையும் ஆய்ந்தறிந்து சொல்லுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

தலித்துக்களின் மேம்பாட்டிற்காக இந்த தலித்திய போராளிகள் கட்சிக்குள் இதுவரை என்ன வகையான போராட்டங்களை முன்வைத்திருக்கிறார்கள்,அதற்கு கட்சி கூறிய பதில்கள் என்ன, என்கிற ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் அதையும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
வசுமித்ர


Wednesday, August 9, 2017

“இடது” இதழ் வெளியிடாத கடிதம்.






 ( இடது’ இதழ்  (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி, இடது இதழ் வெளியிடாத கடிதம்.)


இதழின் பொறுப்பாசிரியர் ஓடை.பொ. துரை அரசன் அவர்களுக்கும்,
ஆசிரியர் குழுவுக்கும்...

நடப்பு இதழான செப்டம்பர் 2016 இதழில் உங்களது தலையங்கத்தைப் படித்தேன். அதில் எஸ்.வி.ராஜதுரை குறித்து தேனியில் எஸ்.வி.ஆரை  மார்க்சிய அறிஞரா எனக் கேள்வி எழுப்பப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் கேள்வியை எழுப்பியது நான்தான். அது குறித்தான எனது விளக்கங்களையும் கேள்விகளையும் முன்வைத்தே இதை எழுதுகிறேன்.


தோழர்களே... கடந்த செப்டம்பர் 2016 ராஜதுரைக்கு தமுஎகச வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது. என் வரையில் அது வரவேற்கத் தகுந்த ஒன்றே. விருதுக்கான தொகையை ராஜதுரை தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு அப்போதே அளித்தார். அதுவும் வரவேற்கத்தக்கதே. (அதே சமயம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற பெயருக்கும், சாதி ஒழிப்புக்கும் உள்ள பாரதூரமான வித்தியாசங்களை இன்னும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.) உங்களது தலையங்கத்தில் ராஜதுரையின் சில கருத்துக்கள் வாதப் பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டாலும் அவரது மார்க்சிய ஈடுபாடு குறித்து எவரொருவரும் ஐயம் கொள்ள மாட்டார்கள் என்ற குறிப்பும் உள்ளது. இதையொட்டியே எனது கருத்தையும், ரங்கநாயகம்மா நூல் விசயத்தில் அங்கு நடந்ததையும் விளக்க எண்ணுகிறேன். இதுகுறித்து தாங்கள் எனது முக நூல் பக்கத்திலோ, வலைப்பக்கத்திலோ படித்திருக்கும் பட்சத்தில், இக்கடிதம் கூறியது கூறலாக இருக்கும் தன்மையைக் கொடுக்கும். அதையும் கவனத்தில் கொள்கிறேன். அது குறித்து நீங்கள் ஏதும் அறியாத பட்சத்தில் இது உங்களுக்கு உதவும்.

ரங்கநாயகம்மா நூல் வெளிவந்து, கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் சவ அமைதியே நிலவியவது. பிற்பாடு ஆதவன் தீட்சண்யா என்பவர் நூலின் மீதான அவதூறுகளை முதலில் தொடங்கி வைத்தார். நூலின் குறைந்த விலை  உட்பட அனைத்தையும் மிக மோசமான குறுக்குப் புத்தியுடன் விமர்சிக்கத் தொடங்கினார். ரங்கநாயகம்மா நூலை “பீ” க்கு ஒப்பாகவும் அவரால் துணிந்து எழுத முடிந்தது. அவரது அவதூறுகளை மறுக்கும் முகமாக முகநூலிலும் வலைப்பக்கங்களுலும் நானும் கொற்றவையும் பதில் கொடுத்தோம். அத்தோடு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படலாம் என்கிற மறைமுகமான மிரட்டலையும் ஆதவன் விடுத்தார்.


அவர் நூலை முழுதாக படிக்காமலேயே ( இது அவரது எழுத்திலேயே உள்ளது ) அவதூறுகளை இட்டு நிரப்பத் தொடங்கினார். மேலும் ஆதவனது அவதூறுக்கு வக்காலத்து வாங்கும் முகமாக தமுஎகச தொண்டர்களும் களத்தில் இறங்கினார்கள். அப்படி அவர்கள் இறங்கியதானது, நான் சின்னத்திரைத் தொடர்களில் மானம் இல்லாமல், கேவலமாகச் சம்பாதிக்கிறேன் என்ற அரிய கருத்தை வழங்கும் வரை சென்றது.


சம்பந்தப்பட்ட ஆதவன் ஒரு எழுதாளாராக இதில் பேசியதைவிடவும், தமுஎகச மாநிலக் குழுவில் ஒரு தலைவராக அவரை தமுஎகச தொண்டர்கள் முன்வைத்து பேசியிருக்கிறார்கள்  என்பதற்கு, அவர்கள் முகநூலில் எதிர்வினையாற்றிய விதமே சாட்சி சொன்னது. அதற்கான ஆதாரங்கள் தேவையெனில் அதையும் சேர்த்து அனுப்புகிறேன். சம்பந்தப்பட்ட விழா குறித்த அழைப்பிதழில் விருதுகொடுப்பதோடு எஸ்.வி,ஆருடன் கலந்துரையாடல் என்று போட்டிருந்தார்கள். அதை நம்பியே நானும் பேசினேன். (ஆனால் அது கலந்துரையாடல் இல்லை. மேடையில் அவர் அமர்ந்திருக்க, கீழிருந்து கேள்வி கேட்டு, மேலிருந்து அவர் பதில் சொல்லும் வகையிலானதாக அமைதிருந்தது)  கலந்துரையாடலின்! முதல் கேள்வி தமுஎகசவின் மாவட்டக் குழுவில் இருக்கும் மோகன் குமாரமங்கலம் என்பவரால் கேட்கப்பட்டது. அவர் கேட்ட கேள்வி  “ரங்கநாயகம்மா நூல் குறித்து இரு வேறு பார்வைகள் நிலவுகிறதே அது குறித்து உங்களது கருத்து என்ன ?” இதுதான் அவரது கேள்வி. அதற்கு பதில் அளிக்கும் விதமாக ராஜதுரை தான் நினைத்தையெல்லாம் பேசினார்.


ரங்கநாயகம்மா குறித்து அவர் பேசியதன் சுருக்கத்தை அளவு கருதி இங்கு சுருக்கித் தருகிறேன் .

அவர் பேசியதாவது; “ரங்கநாயகம்மாவின் நூலை தெலுங்கில் யாருமே கண்டுகொள்ளவில்லை, எவருமே பெரிதாக எடுத்துக்கொள்ளாத நூல் அது,  அந்த நூலை சத்யமூர்த்தி போன்றவர்களே மறுத்துவிட்டார்கள், நக்சல் பாரிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை, ரங்கநாயகம்மா போன்றோரை நாங்கள் குகைமார்க்சியர் என அழைப்போம், அம்பேத்கர் நூல்களை முழுதாகத் தொகுக்கவில்லை, மார்க்சின் நூல்களையும் முழுதாகத் தொகுக்கவில்லை, அம்பேத்கர் கூறியதான மார்க்சியத் தத்துவம் பன்றிகளின் தத்துவம் என்பதற்கு மாவோ காலத்தில் வரலாறு இருக்கிறது” என்று உளறி முடித்தார். நடந்தது இதுவே. இதில் தங்களுக்கு விளக்கங்கள் தேவைப்படுமாயின், சந்தேகங்கள் இருப்பின் கூட்டத்தை கூட்டிய சம்பந்தப்பட்ட தமுஎகசவிடம் நீங்கள் அவர் என்ன பேசினார் என்று பதில் கேட்டுப் பெறலாம்.


கேள்விக்கு பதில் சொல்கிறேன் எனத் தொடங்கி, அவர் பேசிய அனைத்தும் உளறல்களே. அவரது உளறல்களில் எனக்கு பல கேள்விகள் எழுந்தது. தெலுங்கில் யாருமே ஒரு நூலைக் கண்டுகொள்ளாவிட்டாலோ, சத்யமூர்த்தி போன்றோர் பதில் சொல்லிவிட்டாலோ நக்சல்பாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலோ ஒரு நூலின் பெறுமதி இல்லை என்றாகிவிடுமா, இல்லை, இவர்களைக் கேட்டுத்தான் சம்பந்தப்பட்ட விசயங்களை, ஆய்வுகளை எழுத வேண்டுமா? என்ற கேள்வி முதல் கொண்டு, அம்பேத்கரையும் தொகுக்கவில்லை, மார்க்சையும் தொகுக்கவில்லை என்ற பதிலின் மூலம் ராஜதுரை என்ன சொல்லுகிறார் என்று எனக்கும் விளங்கவில்லை, அங்கிருந்தவர்களுக்கும் விளங்கவில்லை. ஒருவேளை தொகுக்கப்படாத அரைகுறை நூல்களை வைத்துத்தான், இத்தனை காலத்தை மார்க்சின் பெயரால் ஓட்டினோமோ என்கிற சந்தேகம் மட்டும் வந்தது. மேலும் இதை அடியொட்டி எனக்குப் பல கேள்விகள் எழுந்தன.
அக்கேள்விகளை பேசும் முகமாக நான் மேடை ஏறப்போனதும், ஒருங்கிணைப்பாளரான ஆதவன் பதறி நிலைகுலைந்து வேகமாக வந்து ( இதில் மிகைக் கூற்று எதுவும் இல்லை. எஸ்.வி.ஆருடன் மேடையில் ஆதவன் அம்ர்ந்திருந்தாலும், கிழிருந்து நான் எத்தனை முறை தண்ணி குடித்தேன். எப்படி நடந்தேன் கழுத்தை எப்படிச் சாய்த்து வைத்திருந்தேன் என தான் கவனித்ததாக முகநூலில் எழுதியிருக்கிறார். அவரது அடிப்பொடிகளில் ஒருவர் நான் என்ன வகையான உடை உடுத்தியிருந்தேன் என்று கூட சிலாகித்து எழுதியிருக்கிறார். மேடையில் அமர்ந்திருக்கும் ஒருவர் என் குறித்து இத்தனை எழுதியிருக்கிறார் என்றால், அவரது ஒட்டுமொத்த கவனமும் என் மேல்தான் இருந்திருக்க வேண்டும். அப்படி கவனம் குவிகிறதென்றால் அதற்கான அச்ச உணர்ச்சியை எஸ்.வி.ஆரின் உளறல்களே காரணமாக இருந்திருக்க வேண்டும்...இல்லையா)  என்ன பேசப் போகிறீர்கள் என்று கேட்டார்.  நான் உங்களைக் கேட்டுத்தான் பேச வேண்டுமா என்றேன். என்ன விசயம் சொல்லுங்கள் என்று அழுத்தம் கொடுத்தார். நான் உங்களிடம் சொல்ல முடியாது ராஜதுரையிடம் தான் கேட்க வேண்டும், அவருடன்தானே கலந்துரையாடல் என்று அழுத்தமாகச் சொன்னேன். உடனே வேகமாக ஓடிப் போய்  மைக்கைப் பிடித்த ஆதவன் இது எஸ்.வி,ஆருக்கு விருது வழங்கும் மேடை, இதை ரங்கநாயகம்மா நூல் மேடையாக யாரும் மாற்ற வேண்டாம் என்ற எச்சரிக்கைக் குறிப்பை எனக்குத் தெரிவிக்கும் விதமாகச் சொன்னார். இதுகுறித்து எந்த எச்சரிக்கையும் பார்வையாளர்களுக்கு சொல்ல வில்லை. இதை இதை கேட்கலாம் என்ற குறிப்புகள் எதும் வழங்கப்படவில்லை. ஆனால் நான் பேசுவேன் என்றதும் பதறி நிலைகுலைந்து எச்சரிக்கை விடப்பட்டது.)


உண்மையில், கேட்ட கேள்விக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல், கிட்டத்த 30, 40 நிமிடங்கள்  ரங்கநாயகம்மா நூல் குறித்து பேசுகிறேன் என இஷ்டத்துக்குப் உளறி, அதை ரங்கநாயகம்மா மேடையாக மாற்றியது ராஜதுரைதான். அதுகுறித்து கேள்வி கேட்கப் போன எனக்கு எச்சரிக்கைக் குறிப்பு! இருப்பினும் அக்குறிப்பை மதித்து மேடையேறிய நான் ராஜதுரையின் பங்களிப்புகள் குறித்து எனது புரிதலை வைத்துவிட்டு அவரை மார்க்சிய அறிஞர் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது, அந்நியமாதல், இருத்தலியம் சார்த்தர் என அவர் ஒரு தலைமுறை சீரழியத் துணை போனவர் எனச் சொன்னேன். (மேடையில் நான் என்ன பேசினேன் என்பதற்கு காணொளி ஆதாரம் எனது முக நூலில் உள்ளது) சொல்லி முடித்ததும் பதற்றத்துக்குள்ளான ராஜதுரை (உண்மையில் அவர் பதற்றப்படவே செய்தார். நேரில் கண்டதன் மூலமாகத்தான் இதைச் சொல்கிறேன் ) வேகமாக மைக்கைப் பிடித்து முதலில் பேசியது,   “என்னை நான் மார்க்சிய அறிஞர் எனச் சொல்லவில்லை தமுஎகச தான் அப்படிச் சொன்னது” என்று  கூறினார். (இந்தச் சொல்லுக்கு அரங்கு நிறைந்த கைதட்டல் பரிசாகக் கிடைத்தது. இதன் உளவியல் குறித்தும், இதனடிப்படையில் அங்கிருந்த தமுஎகச தோழர்களின் வாசக குணம் எப்படி அமைந்திருக்கிறது என்பது குறித்தும் ஒரு நூறு பக்கம் தனியே எழுதலாம்) அப்பொழுதே அவர் கூட்டத்தை என்ன மனநிலைக்குத் திருப்புகிறார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். தொடர்ந்து  “வசுமித்ர போன்றவர்கள் என்னை மார்க்சிஸ்ட் இல்லை என அவதூறு செய்யலாம்...அவரின் வயதென்ன...” என்றெல்லாம் பேசத் தொடங்கினார். உண்மையில் நான் மதித்த ராஜதுரையா அப்படிப் பேசுவது என்ற அதிர்ச்சியே என் மனதை முதலில் தாக்கியது.


ஒரு புத்தகம் குறித்து தன் கருத்தைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லத் தெரியாத ராஜதுரையா இவர்! நான் மார்க்சிய அறிஞர் இல்லை என்று சொன்னதற்கு அவர்  “நான் மார்க்சிஸ்ட் இல்லை என இவர் சொல்லலாம் ” எனத் திரித்தது உட்பட எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகள் ஏராளம்.

மேடையில் ஒரு நபர் தன்னை மார்க்சிய அறிஞர் இல்லையென்று சொன்னால், அது எப்படி என வினாத் தொடுக்க முடியாது, அதற்கான விளக்கங்களையோ, பதில்களையோ சொல்லமுடியாது, தன்னை முன்னிலைப்படுத்தி நிறுவும் ஒரு நபரையா இத்தனை வருட காலம் படித்து வந்தோம் என்ற உணர்வை எனக்கு தந்தது. எல்லாவற்றிற்கு மேலும்  “நீங்கள் தேர்வு செய்த நபரை இவன் அசிங்கப்படுத்துகிறான் நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்களே” என்ற உளவியல் தூண்டுதலைத்தான் மறைமுகமாக அவர் கூட்டத்தை நோக்கி வீசினார்.


வீசிய வேகம் வேலையும் செய்தது.  அவர் உளறிய பின் அந்த உளறல்கள் குறித்துக் கேள்வி கேட்க மேடையை நோக்கித் திரும்பியதும், தமுஎகச தொண்டர்கள் சூழ்ந்தனர். அங்கிருந்த எஸ்.ஏ.பெருமாள் என்பவர் ஒரு தெரு நாயை விரட்டுவது போல்  “அதான் பதில் சொல்லியாச்சுல போ போ போப்பா”  என்று ஆரம்பித்தார். அதற்கு நான்  “என்னங்க என்னமோ நாய் மாதிரி விரட்டுறீங்க” என்று இரண்டு எட்டுக்கள் முன்னே வைத்ததும் சற்று பின் வாங்கி  “போப்பா போப்பா” என்றார் உடனே மோகன் குமாரமங்கலம், சிவாஜி போன்ற தோழர்கள் என்னை இழுத்து வெளியே கொண்டு போய் விட்டனர்.


அரங்கில் இருந்த  தமுஎகச மாநிலச் செயலாளர் சு.வெங்கடேசன், மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் மார்க்சிய அமைதி! காத்தனர். மேலும் மார்க்சிய அறிஞருக்கே! உரிய மௌனத்தை ராஜதுரை சிறப்பாக வெளிப்படுத்தினார். இதுவரை அவர்கள் பேசி வந்த  கருத்துச் சுதந்திரத்தின் கடைவாய் நகைப்பை நான் அன்று முழுதாக உணர்ந்தேன்.


 அதற்கு மேல் அங்கு தமுஎகச தொண்டர்கள் என்ற பெயரில் எழுத்தாளர்களும், ரசிகர்களும், விசிலடிச்சான் குஞ்சுகளும்(ரஜினி கமல்ஹாசனுக்கு மட்டுமல்ல, புரட்சிகரம் என்ற பெயரில் எஸ்.வி.ராஜதுரைக்கும் அப்படிப்பட்டோர் உண்டு)  ராஜதுரைக்கு பாதபூஜையே செய்யத் தொடங்கினர்.  பாதபூஜை எனச் சொல்லும் போது உங்களுக்கு எரிச்சல் வரலாம் தோழர்களே என்ன செய்வது. சகித்துக்கொள்ளத்தான் வேண்டும். தமுஎகசவின் மாநிலச் செயலாளர் சு.வெங்கடேசன் மேடையில்  “எஸ்.வி.ஆரை மார்க்சிய அறிஞர் எனச் சொன்னது தவறு அவரை மார்க்சியப் பேரறிஞர் எனச் சொல்லியிருக்க வேண்டும்” என்று சொன்னாராம். அதுகுறித்து தமுஎகச தொண்டர் ஒருவர் கூறியது,  “சு.வெங்கடேசன் அப்படிச் சொல்லியது கூடியிருந்த கூட்டத்தை உற்சாகப்படுத்தவாம்.” எனக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. அரங்குக்கு வெளியே தமுஎகச தொண்டர்கள் நடந்த விதம் அதை விட மோசம். எங்க அமைப்பு யாருக்கு வேணா விருது கொடுப்போம் என்று தொடங்கி இஷ்டத்துக்கு பேசியது. (நான் விருது குறித்து எந்த வினாவையும் தொடுக்கவில்லை. மார்க்சிய அறிஞராக அவரின் பங்களிப்புகள் எவை என்பதுதான் என் கேள்வி)அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது அவர்களில் எவரும் எஸ்விஆரைப் படித்தது இல்லை என்று.

நிற்க


இதுதான் அங்கு நடந்தது. ஒரு சிறிய கூட்டம் போட்டாலே, அதை பொதுவெளியில் புரட்சிகர அனுபவமாக அனைத்து தளங்களிலும் விளக்கி எழுதும் தோழர்கள், சம்பந்தப்பட்டக் கூட்டம் குறித்து விரிவாக எதையும் முன்வைக்கவில்லை. போனோம் வந்தோம் என்ற பாணியில் பதிவை வைத்து அமைதி காத்தது. தேனியிலிருந்து ஒரு வாரத்திற்குப் பின் சென்னை வந்த நான் அதுகுறித்து எழுதியதும், மறுபடியும் வசைகளை முன்னெடுத்தது.

ஆனால் இன்றுவரை எஸ்.வி.ராஜதுரை ஒரு அறிஞராக மார்க்சியத்துக்குச் செய்த பங்களிப்புகள் எவை என்ற எனது கேள்விக்குப் பதிலே வரவில்லை. இக்கேள்வியை நான் தமுஎகசவுக்கு வைத்தும் பதில் இல்லை. பாரதிபுத்தகாலயம் என் கேள்விக்கு பதில் சொல்லாமல் என்னை முடக்கியதோடு, கேள்வி கேட்பது அத்துமீறல் எனச் சொல்லி, அதன் முகநூல் பக்கத்தில் நான் நுழைய தடை விதித்தது. இதுகுறித்தும் அறிவுசார் சமூகம் தன் வாயை இறுக மூடிக்கொண்டது.


நாங்கள் மார்க்சிய அறிஞர் என பட்டம் கொடுக்கவில்லை என்ற வியாக்கியானங்கள் தூள் பறந்தது. அப்படி நாங்கள் சொல்லவில்லை என மழுப்பியது. ஆதரத்தோடு எடுத்துப் போடவும் வசைகளை அள்ளித் தெளித்தது. இதையெல்லாம் விட மிக மோசமாய், புதிய புத்தகம் பேசுது இதழ் வாழ்த்துகிறோம் என்ற பெயரில், விருது வாங்கியவர்களின் பெயர்கள், புத்தகங்களின் பெயர்களைக் குழப்பி அடித்துப் போட்டிருந்தார்கள்.


இதற்கிடையே, இப்பொழுது தங்களது இடது இதழின் தலையங்கத்தில், ஒரு தகவலாக அதை நீங்கள் போட்டிருந்தது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. கருத்துச் சுதந்திரம் குறித்து உங்களது அக்கறையும் கவனமும் மதிப்பளிக்கக் கூடியது. அதே சமயம். ஒரே ஒரு புத்தகத்தை மொழிபெயர்த்தன் மூலம் நாங்கள் ஆதிக்கச் சாதியாவதும், நான் கேவலமான வேலை செய்பவனாகவும் மாறிய அற்புதங்கள் குறித்து எனக்கு இன்னும் ஆச்சரியம் நீங்கவில்லை. 


மேலும், தோழர் துரைஅரசனுக்கு நான் முகம் தெரியாதவனும் அல்ல. கூட்டம் குறித்த செய்திகள் தேவையிருப்பின் என்னை நேரடியாகத் தொடர்பு கொண்டு கேட்டிருக்கலாம். கேட்கவில்லை. ஆனால் அதே சமயம் எஸ்.வி.ஆரை மார்க்சிய அறிஞர் என நீங்களும் அழுத்தம் திருத்தமாக கூறவில்லை. இது, எனது கேள்வியை உங்களுக்குள்ளும் சில சந்தேகங்களை எழுப்பியிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.. (அதே சமயம் “கோவை ஞானி அவர்கள் குறிப்பிட்டது போல் மார்க்சியத்தில் அவரளவுக்கு உயரத்தை எட்டியவர்கள் தமிழகத்தில் யாரும் இல்லை என்றே குறிப்பிட வேண்டும். அவ்வகையில் தமுஎகசவின் தேர்வு பொருத்தமானது என்றே “இடது” கருதுகிறது.” என்று உங்கள் கருத்தை கூறியுள்ளீர்கள். (தமுஎகசவின் மாநிலப் பொறுப்பில் இருக்கும் ஆதவன் சிபிஎம் கட்சியின் பொலிட் பீரோவில் பார்ப்பனர்கள் அதிகம் உள்ளது குறித்தும் அதில் தனக்குக் கேள்விகள் இருப்பதாகவும் சொல்கிறார். அக்கட்சியின் வெகுஜன அமைப்பில் இருப்பவரே சொல்லிவிட்டார் அதனால் வேறு அத்தாட்சி தேவையில்லை. எனவே சிபிஎம் கட்சி பார்ப்பனக் கட்சிதான் என முடிவுக்கே வரலாம்..இல்லையா?.)


எஸ்.வி.ஆர் ஒரு மனித உரிமை போராளி என்ற குறுவட்டை இடது வெளியிட்டிருப்பதால், ராஜதுரை குறித்து உங்களுக்கு பல்வேறு அபிப்ராயங்கள் இருக்கலாம். சாய்வுகள் இருக்கலாம்.  இது என் சந்தேகமே. இருப்பினும் இது நியாயமான சந்தேகந்தான்.


செம்மலரில் எஸ்.வி ஆர் ஒரு திரிபுவாதி என எழுத இடம் கொடுத்தவர்கள், இப்பொழுது அவர் மார்க்சிய அறிஞர்தான் என விளக்கம் ஏதும் கொடுக்காமல் மல்லுக்கு நிற்கிறார்கள். நீங்கள் அவருக்கு தனி படமே எடுத்துள்ளீர்கள். அதை நான் மதிக்கும் வேளையிலும் சந்தேகம் வருவது நியாயந்தான் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அதற்கு மேலும் ராஜதுரை மார்க்சிய அறிஞரா என கேள்வி எழுப்பப்பட்டது தவறு, அது மிக  மோசமான கருத்து, விவாதிக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் உடையது  என நீங்கள் கருதியிருக்கும் பட்சத்தில், ராஜதுரை அறிஞராக மார்க்சியத்துக்கு அளித்த பங்களிப்புகளைச் சுட்டிக்காட்டுவதன் மூலமே அதை நிறுவமுடியும், ஆனால், நீங்களும் அவர் மார்க்சிய ஈடுபாட்டில் ஐயம் கொள்ளமுடியாது. அறிவுப் பங்களிப்புகள் செய்தவர், கோவை ஞானியே அவரது உயரத்தைச் சொல்லிவிட்டார் என்ற கருத்தையே முன்வைத்து நகர்கிறீர்கள். ஆனால் இடையிலுள்ள ஒரு வார்த்தைதான் என் சந்தேகத்தை ஆழமாக ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது. 

அது “எஸ்.வி.ஆரின் சில கருத்துக்கள் வாதப் பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டாலும்” அப்படி எந்த வாதம் பிரச்சினைகளாக உள்ளது என்பதையும் நீங்கள் விளக்க வேண்டும். அந்த சில கருத்துக்கள் மார்க்சியத்துக்கு வலு சேர்ப்பவையா, மார்க்சியத்தை வேறு திசைக்கு நகர்த்துபவையா என நீங்கள் விளக்க வேண்டும். உங்கள் குறிப்புகளில் உள்ள சுட்டல்களுக்குப் பொருந்தி, மார்க்சிய அறிஞராக துடித்துக்கொண்டிருக்கும் நபர்கள், அறிவுசார் சொத்தை அடைய விரும்புபவர்கள், அதன் மூலம் தங்களது அடையாளப் பிரச்சினையை, இருத்தல் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளத் துடிப்பவர்கள்  எண்ணற்றோர் என்பது நீங்கள் அறியாததல்ல. 


தோழர்களே, உங்களது தலையங்கத்துக்கு எதிர்வினையாக எனது கருத்தையும் சில கேள்விகளையும் முன்வைக்கிறேன். கோவை ஞானி எஸ்.வி,.ஆர் குறித்துச் சொல்லியுள்ள கருத்து அவரது கருத்து மட்டுமே. கோவை ஞானி சொல்லிவிட்டதானலேயே எஸ்.வி.ஆரை மார்க்சிய அறிஞர் என இடது கருதலாம். அது அதனுடைய கருத்து. ஆனால் அதை வைத்து அவரை மார்க்சிய அறிஞர் என்று என்னால் அளவிடமுடியாது.


அப்படி அமைய வேண்டும் என்றால் எஸ்.வி.ஆர் ஒரு அறிஞராக இத்தனை வருடங்கள் மார்க்சியத்திற்கும் தத்துவத்திற்கும் அளித்த பங்களிப்புகள், கொடை என்ன. இதற்கான விளக்கங்களை அளிக்க வேண்டும். உதாரணத்திற்கு சமீபத்திய எஸ்.வி ஆரின் மொழிபெயர்ப்பு நூலான சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் வரலாறும் மரபும் என்ற நூலில் தனது முன்னுரையில் எஸ்.வி.ஆர் மார்ஸெல்லோ முட்டோவை இளம் மார்க்சிய அறிஞர் என்கிறார், அருண் பட்நாயக்கை மார்க்சிய அறிஞர் என்கிறார். ஆனால் வால்ட்டர் பெஞ்சமினை மார்க்சிய சிந்தனையாளர் என்றே வகைப்படுத்துகிறார். எனவே யாரை மார்க்சிய அறிஞராக முன்மொழியமுடியும் என்கிற தேர்வும் அவருக்கிருக்கிறது.


மார்க்சிய அறிஞர் யாரென என்னைக் கேட்கும் பட்சத்தில், ராஜதுரை  ‘குகை மார்க்சியர்’ எனச் சுட்டிய தோழர் ரங்கநாயகம்மாவை உதாரணம் காட்டுவேன். மார்க்சிய அறிஞராக அவர் செய்த பங்களிப்புகளாக கீழ்க்கண்ட பங்களிப்பைச் சுட்டிக்காட்டுகிறேன்.


1  For the solution of the ‘caste’ question, Buddha is not enough, Ambedkar is not enough either, Marx is a must. [Pages: 400. Paperback. 1/8th demmy size. Rs. 80.]

2  House Work and Outside Work. [Pages: 104. Paperback.1/8th demmy size. Rs. 30.]

3  An Introduction to Marx’s ‘Capital’ (in 3 volumes). [Pages: 1972. Hardbound. 1/8th demmy size. Rs. 360.]

4.  Caste and Class: A Marxist Viewpoint. [Paperback. 1/8th demmy size. Rs. 60.]

இவைகளிலிருந்து நான் யாரை மார்க்சிய அறிஞர் என்ற பதத்தின் கீழ் அடையாளப்படுத்துவேன் என்பதை தாங்கள் அறிவீர்கள். இதில் ஒருவேளை உங்களுக்கு மாற்றுக் கருத்து இருப்பின், மார்க்சிய அறிஞர் என்ற பட்டத்திற்கு யார் பொருந்துவார், இல்லை அப்பதத்தின் பெறுமதிகள் என்ன என்று நீங்கள் எனக்குச் சுட்டினால் மேற்குறித்து நாம் விவாதிக்கலாம்.


மார்க்சிய அறிஞரான! ராஜதுரை ஒரு நூலை ( சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு…..) விமர்சித்த முறையை வைத்துப் பார்த்தால், அவர் வெறுமனே அறிஞர் என்று அழைப்பதற்குக் கூட தகுதியற்றவர் என்பதே என் கருத்து. விமர்சனங்களில் நட்புச் சோரம் போவதோ, தெரிந்தவர் அறிந்தவர் என்ற முகதாட்சண்யங்களைத் தாங்களும், விரும்ப மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.


ராஜதுரையின் அளவுகோலின்படி, ஒரு நூலை யாரும் கண்டுகொள்ளாததானாலேயே அதைப் பொருட்படுத்தத் தேவையில்லை, என்ற வாதம் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. இந்தக் கூற்றை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் அங்கு வந்திருந்த தமுஎகச தோழர்களில் நூற்றுக்கு 99 சதமானோர் ராஜதுரை அவர்களின் நூலைப் படித்திருக்கவே வாய்ப்பில்லை. இதை உறுதியாக என்னால் கூறமுடியும். தேனி தமுஎகச பொறுப்பாளர்கள் கூட எஸ்.வி.ஆரைப் படித்தது இல்லை என்பதை அவர்கள் பேச்சில் உணர முடிந்தது. 

நிலைமை இப்படியிருக்க, ராஜதுரை ரங்கநாயகம்மாவின் நூல் கண்டுகொள்ளப்படவில்லை என்பதை ஏதும் அறியாத ஒரு கூட்டத்தில் விமர்சனமாக முன்வைக்கிறார்.  இதுதான் ஒரு மார்க்சிய அறிஞர்! நூலை அளவிடும் முறையா? ஒரு தர்க்கத்திற்காக இந்தக் கேள்வியை எதிர்கொண்டு அதிகம் விற்ற நூல்தான் கண்டுகொள்ளப்பட்டிருக்கிறது என்று எடுத்துக்கொள்ள முடியுமா? 


முடியுமெனின்  ஒரு விவாதத்திற்காக, தெலுங்கில் ரங்கநாயகம்மாவின் சாதியப் பிரச்சினை...நூல் தெலுங்கில் 11 பதிப்புகளைக் கண்டிருக்கிறது. ஆனால்  ராஜதுரையின் நூல் இரண்டாம் பதிப்பு வருவதற்கே இருபது வருடங்கள் ஆகிறது! தமிழில் ரங்கநாயகம்மா நூல் நான்கு மாத காலங்களில் மூன்று பதிப்புகளைக் கண்டிருக்கிறது. முதல் பதிப்பில் 500 பிரதிகள், இரண்டாம் பதிப்பில் 1000 பிரதிகள், மூன்றாவது பதிப்பில் 2000 பிரதிகள் போட்டு அதுவும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. உண்மையில் இதுவா ஒரு நூலை மதிப்பிடும் அளவுகோல்.


இரண்டாவது, கண்டுகொள்ளப்படாத அந்த நூலை சத்யமூர்த்தி போன்றோர் விமர்சித்துவிட்டார்கள்(கண்டுகொள்ளப்படாத நூலை முதலில் ஏன் சத்யமூர்த்தி விமர்சிக்க வேண்டும், நூல் எழுதவேண்டும்!) என்று சொல்வதன் மூலம்  என்ன சொல்ல வருகிறார் ராஜதுரை. சத்யமூர்த்தி போன்றவர்கள் மார்க்ஸ் தேவையில்லை என்று சொன்னால், உடனே ராஜதுரை அவரே விமர்சித்துவிட்டார் என்று சொல்லி மார்க்ஸைப் புறக்கணியுங்கள் என்று சொல்வாரா? சத்யமூர்த்தியே  விமர்சித்து விட்டார் என்பதன் மூலம் ராஜதுரைக்கு சத்தியமூர்த்தி தத்துவ வழிகாட்டி போலவும், அவரே விமர்சித்ததால் அந்த நூல் ஒன்றும் பெரிய விசயமாகப் படவில்லை என்பது போலவும் ஒரு தொனியை முன்வைத்து நகர்வதன் அர்த்தம்  என்ன இதற்குப் பெயர்தான் மார்க்சிய அறிஞரின்  வாதமா? இப்படி அவருக்கு உகந்தவர்கள் யாரேனும் விமர்சித்துவிட்டால் அந்த நூலைப் படிக்கவேண்டியதில்லையா?


மூன்றாவது களப்பணி செய்யவேண்டும்  “சும்மா கம்யூட்டர் முன்னால் தட்டிக்கொண்டிருந்தால் போதாது அவர் ஒரு குகை மார்க்சியர்” என்று உளறுவதன் மூலம் ரங்கநாயகம்மா கம்யூட்டர் முன்னால் வேலையில்லாமல் உட்கார்ந்து கொண்டு ஏதோ தட்டிக்கொண்டிருக்கிறார் என்கிற சித்திரத்தை அங்கு வந்திருந்த தோழர்களுக்கு அவர் உணர்த்த விரும்பிய விதம் மிகுந்த மோசமான ஒன்றென இங்கு நான் சுட்டிக்காட்டுகிறேன்.


மார்க்சிய அறிஞராக அவர் அம்பேத்கரையாவது படித்திருக்கிறாரா என்றால், அதுவும் எனக்கு சந்தேகமாகத்தான் தோன்றுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ராஜதுரை படித்த அம்பேத்கரை அவரது வார்த்தைகளிலேயே இங்கு முன்வைக்கிறேன்.


 “புத்தரா கார்ல் மார்க்ஸா என்னும் சொற்பொழிவில் மட்டுமின்றி, தனது இறுதி நாட்களில் எழுதி முடித்த  ‘புத்தரும் அவர் தம்மமும்’ நூலிலும் கூட, புத்தரையும் மார்க்ஸையும் இணைக்கும் மகத்தான முயற்சியைச் செய்திருப்பதைக் காணலாம்.” என ராஜதுரை எழுதியிருக்கிறார்.


அவர் குறிப்பிட்ட அந்த கட்டுரையில், புத்தரும் அவர் தம்மமும் நூலில் அம்பேத்கர் அப்பணியைச் செய்திருக்கிறாரா என்று பாருங்கள். புத்தரை மார்க்ஸையும் இணைக்கும் மகத்தான முயற்சியை அம்பேத்கர் எந்த நூலில் எந்தக் கட்டுரையில் கூறினார் என்பதை நீங்களே படித்துப் பார்த்துக் கூறுங்கள்.

இடது பத்திரிக்கைக்கு எனது கேள்விகள்.

1.எஸ்.வி.ஆர்  ஒரு அறிஞராக மார்க்சியத்துக்குச்  செய்த பங்களிப்புகள் என்ன?

2.மார்க்சிய அறிஞர் என்ற வரையறைக்கு இடது இதழ் வைத்திருக்கும் அளவுகோல் என்ன?

3.மொழிபெயர்ப்புகளே மார்க்சியத்துக்கு அறிஞராக மாறும் தன்மையைக் கொண்டதாகிவிடுமா?

4. ஞானி சொல்லிவிட்டார் என்றால் அதை ஒரு ஆவணமாக எடுத்துக் கொண்டு,   அந்த பட்டத்தின் கீழ் இடது ஆசிரியர் குழு அவரை மார்க்சிய அறிஞராக கருதுகிறதா?

சிறுகுறிப்பு; எஸ்.வி. ராஜதுரை அவர்களின் மார்க்சிய ஈடுபாட்டை நானறிவேன். அவரது பணிகளையும் நான் மதிக்கிறேன். அதே சமயம் அவரை மார்க்சிய அறிஞர் எனச் சொல்வது மார்க்சிய அறிஞர்களை கொச்சைப்படுத்த வாய்ப்பளிக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறேன். இன்னும் சிறிது நாட்கள் சென்றால் கோவை ஞானி, எஸ்.என்.நாகராசன், அ.மார்க்ஸ், எஸ்.ஏ.பெருமாள் ( இவரை மார்க்சிய அறிஞர் என அவரது கட்சியே சொல்கிறது, அதோடு இவர் கேரளாவில் பிறந்திருந்தால்   ‘மாஷே’ என்றும், பெருமாள் மாஸ்டர் எனவும் அழைக்கப்படுவார் என தமிழ்ச்செல்வனே சொல்லிவிட்டார். இந்த மாஷே கேமரா ரீடிங் பற்றி எழுதிய தத்துவ முத்துக்களையும் நீங்கள் அவரது நூல்களில் காணலாம். எல்லாம் தமிழக மார்க்சியர்களின் தலையெழுத்து!)  இவர்களும் மார்க்சிய அறிஞர்களாகிவிடுவார்கள்.


இப்படிப்பட்ட மார்க்சிய அறிஞர்கள், முகநூலில் தோழர் ரங்கநாயகம்மாவுக்குச் சூட்டிய பட்டங்கள், மற்றும் சில அறிவார்ந்த விமர்சனங்களில் சிலவற்றை ஒரு பார்வைக்காக கீழே வைக்கிறேன். அது நிலவி வரும் விமர்சன அறிவுச் சூழலை, உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உணர்த்தும் வல்லமை கொண்டவையாக இருக்கும் என நம்புகிறேன்.

.ரங்கநாயகம்மாவின் நூல் அம்பேத்கருக்கு செறுப்பு மாலை  போட்டிருக்கிறது.

.ரங்கநாயகம்மாவின் நூல் நரகல்.

.ரங்கநாயகம்மா ஒரு மார்க்சியப் பொறுக்கி.

.செறுப்பால் அடிப்போம்.

.வன்கொடுமை சட்டத்தின் மூலமாக மிரட்டல்.

.ஆதிக்க சாதி.

.என்.ஜி.ஓ.

.புத்தகம் மூலம் நிறைய பணத்தை ஆட்டையப் போட்டுள்ளார்கள்.

.டெல்டும்டே தலித் காவலன்னு கம்பு சுத்தினார்.

.இந்த மொழிபெயர்ப்பு இப்பொழுது ஏன் வரவேண்டும்.

.மொழிபெயர்ப்பைத் தவிர்த்திருக்கலாம்.

.மார்க்ஸ் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறார்.

.பரிதாபத்திற்குரிய மார்க்ஸ்.

.மார்க்ஸ் தேவையில்லை, மார்க்ஸ்க்குப் பின்னாடி வந்த அத்தனை பேரும் தேவை.

.ரங்கநாயகம்மா ஒரு காலம்னிஸ்ட்.

.ரங்கநாயகம்மாவுக்கு மார்க்சியம் தெரியாது.

.எலும்புக்கு பட்டுப்புடவை கட்டிவிட்டாற்போல் இருக்கிறது.

.காழ்ப்புணர்ச்சி கொண்ட எழுத்துக்கள்.

.அபத்தமான நூல்.

.மார்க்ஸியத்தோட சாரம்சத்தை மார்க்ஸ்க்கு முன்னாடியே புத்தர் சொல்லிட்டார்.

.கள்ள மௌனம் காக்கிறார்கள்.

.முட்டாள்தனமாய் எழுதப்பட்ட புத்தகம்.

.ரங்கநாயகம்மா ஒரு பூனை.

.மொழிபெயர்க்கத் தகுதி இல்லாத புத்தகம்.

.தத்துவப் பரதேசிகள்.

.மண்டை சூம்பிப்போய் கண்டபடி உளறுபவர்கள்.

.ரங்கநாயகம்மா ஒரு குகை மார்க்சியர். அந்த நூலை யாருமே பொருட்படுத்தவில்லை.

.தேர்ட் ரைட் பாலிமிக்ஸ்.

.கம்யுனிஸ்ட் என்றதும் வரலாற்று பொருள்முதல்வாதம், இயங்கியல் பொருள்முதல்வாதம் என்று சொல்லி, 'வாழைப்பழத்தை விளக்கெண்ணையில் தோய்த்து' எழுதுவார்களே அப்படியொரு பழைய கபாலி எழுத்து இது.

.முற்றிலும் காலாவதியான நூல்.

.ரங்கநாயகம்மா நூலைப் படித்தால் ரத்தம் கக்கி சாவான்.

.ரங்கநாயகம்மா யாருக்கோ வப்பாட்டி.

தோழர்களே... மார்க்சியத்துக்கு தமிழகத்தில் பல அறிஞர்கள் தேவைப்படும் சூழல் இங்கு நிலவுகிறது அதை நாம் வரவேற்போம். ஆனால் அதற்காக, மார்க்சியத்துக்கு அறிஞராக எந்தப் பங்களிப்பையும் செய்யாது, தன் மனம் போன போக்கில் அந்நியமாதல், இருத்தலியம், சார்த்தரியம், வைணவ மார்க்சியம், மேலை மார்க்சியம், கீழை மார்க்சியம், மண்ணுக்கேற்ற மார்க்சியம், தேசத்துக்கு ஏற்ற மார்க்சியம், நாட்டுக்கேத்த மார்க்சியம், தெருவுக்கேற்ற மார்க்சியம், பின்நவீனத்துவ மார்க்சியம், என்று வகைபிரிப்பவர்களை எல்லாம் மார்க்சிய அறிஞர் என்றால் அது மார்க்சியத்துக்கே கேட்டை உண்டாக்கும் என்பதை நினைவு படுத்துகிறேன்.

நன்றி
வசுமித்ர

மேற்கொண்டு எனது விமர்சனங்களை அறிய http://makalneya.blogspot.in/ வலைப் பூவை பார்க்கவும்.



11- 26 -2016 அன்று இக்கடிதத்தை இடது பத்திரிக்கைக்கு அனுப்பினேன்.

Jun 30, 2017 அன்று, விமர்சனத்தை வெளியிட்டீர்களா என்று தோழர் கணகுறிஞ்சிக்கு பதில் கேட்டிருந்தேன். பதில் வரவில்லை. பின் இடது இதழைக் கண்டதும் எனது விமர்சனம் வெளிவராதது கண்டு தோழர் ஓடை பொ.துரையரசனை செல்லில் அழைத்து, கடிதத்தை வெளியிட விருப்பமில்லையா எனக் கேட்டதற்கு, அந்த நூலுக்கு ( சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை!)ச் விமர்சனக் கூட்டம் நடத்தி அதன் பின் வரும் விமர்சனங்களோடு எனது விமர்சனத்தையும் இணைத்து வெளியிடுவதாகச் சொன்னார். கூட்டம் நடந்தபாடில்லை, அதற்கு மேலாக நான் இடது தலையங்கம் குறித்துதான் என் கேள்வியை கடிதத்தின் வாயிலாக வைத்தேன். கடிதம் வராமலேயே போகும் வாய்ப்பு இருப்பதால் இங்கு பொதுவெளியில் முன்வைக்கிறேன்.


பின்குறிப்பு;

இந்து கலாச்சாரக் காவலர்களுக்கு சற்றும் சளைக்காத புரட்சிகர வசைகளை எழுதிய. தமுஎகச தோழர்கள், மார்க்சிய அறிஞர்கள், நவீன பௌத்த பிக்குணிகள், தலித்திய அம்பேத்கரிய அறிஞர்கள் குறித்து நான் சொல்வதற்கு எதுவுமே இல்லை. ஆனால் ரங்கநாயகம்மா புத்தகத்திற்குப் பின் இவர்கள் அடைந்த பதட்டங்கள், அச்ச உணர்ச்சிகளின் உளவியல் குறித்து தனியே எழுத வேண்டும் என்கிற ஆவல் உள்ளது.



“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...