Monday, April 26, 2021

வேட்டுவம் நூறு- நூல் விமர்சனம்- வசுமித்ர 

 

பாட்டுக்களின் தாய்,நமது விதை முழுவதின் தாய்,

ஆரம்பத்தில் நம்மைப் பெற்றெடுத்தாள். 

அவள் எல்லா இன மனிதர்களின், 

எல்லாக் குலங்களின் தாய். 

அவள் இடியின்,நதிகளின், 

மரங்களின்,தானியத்தின் தாய்,

அவள் மட்டுமே. நமக்குத் தாய்

அவள் மட்டுமே. 

எல்லாவற்றின் தாய்,

அவள் மட்டுமே.

 

-கொலம்பியாவின் 

கயாபா இந்தியர்களின் பாடல்

 

 

மௌனன் யாத்ரிகா தனது கவிதைகளின் முன்னுரையில் வேட்டை குறித்தான கவிதைகள் எழுத முடிவு செய்ததும், அதுவரை வேட்டை சம்பந்தமாக வந்திருந்த ஒலி, ஒளி, மற்றும் புத்தகங்கள் எதையும் படித்துவிடக் கூடாதென்ற மனநிலையில் இருந்ததைச் சொல்லியிருக்கிறார். காரணமாக அவருக்கான வேட்டை குறித்த அனுபவங்களே போதுமானதாக இருந்ததாகச் சொல்கிறார். குறிப்பாக சங்க இலக்கியத்தைத் தொட்டுப் பார்க்கவே கூடாது என்று நினைத்ததாக சொல்லியிருக்கிறார். அதே சமயம் அவரது கவிதைக்கான மைய முனையாக “இந்தக் கவிதைகளை எந்த நாட்டில் எந்த நிலத்தில் எந்த மொழியில், எந்த மனிதர்கள், எந்தப் பின்புலத்தில் படித்தாலும் அவர்களுக்கு அவர்களுடைய தொல் நினைவுகள் கிளர்ந்தெழ வேண்டும் என்று நினைத்தேன். இதுவொரு கனியன் பூங்குன்றனின் சிந்தனை” என்றும் கூறியிருக்கிறார். 

 

முரணாக வேட்டைச் சமூகத்தின் நிலையைக் குறிக்க “ஆதி மனிதனின் முதல் உணர்ச்சியால் விளைந்த முதல் தொழிலை எழுதுகிறோம் என்னும் உணர்வு நிலை ஒருபக்கமும், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கிய வடிவத்தைக் கையாள்கிறோம் என்னும் அறிவுநிலை மறுபக்கமும் எனக்கு முன் சவால்களாக நின்றன” என்று குறிப்பிடுகையில் வேட்டையை ஒரு தொழிலாக மட்டுமே மௌனன் யாத்ரிகா கவனத்தில் கொள்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். 

 

வேட்டைச் சமூகத்தின் முதல் கட்டம் உயிர் வாழ்வதற்காக இருந்திருக்கும். அது தொழிலாக மாறுவதன் பின்னணி குறித்து அவரோ அவரது கவிதைகளோ பேசவில்லை. ஆனால் வேட்டையை தொழிலோடுதான் அவர் சம்பந்தப்படுத்துகிறார். வேட்டை சார்ந்த அவரது அனுபவங்களே போதும் என்று சொல்லியவர் இது எந்த நாட்டுக்கும் பொருந்தும் அவர்களது தொல் நினைவுகள் கிளர்ந்தெழ வேண்டும் என்று நினைப்பது முரணான சிந்தனை மட்டுமல்ல. தவறான மனநிலையும் கூட. 

 

தானெழுதியதே தொல் உணர்வு அதற்கு அவரது நினைவுகள் மட்டுமே போதுமென்பது, பிற வேட்டைச் சமூகங்களின் வழமைகள், பழக்க வழக்கங்கள் குறித்த வாசிப்பின்மை, இதெல்லாம் அவர் தனது தகுதியாகக் கருதுவது அவரது அறியாமை என்பதோடு, அதற்கு கனியன் பூங்குன்றனை ஏன் அழைத்துவருகிறார் என்பதையும் நாம் கேள்விகளாக வைக்கலாம். அதே சமயம் “ தமிழின் ஆகச்சிறந்த திணைப்பகுப்புகளில் நெய்தல் மட்டுமே குறிப்பாகக் கடல் மட்டுமே இந்தக் கவிதைகளில் விடுபட்டுள்ளது. மற்ற எல்லா திணைப்பகுதியிலும் இந்தக் கவிதைகள் பொருந்தும் என கருதுவதாக அவர் கூறுவதற்குக் காரணம் நெய்தல் சமூகம் பற்றியோ அதன் வேட்டைக் குணங்கள் பற்றியோ அவர் கிஞ்சித்தும் வாசித்தோ, அல்லது விவாதித்தோ அறியாத ஒன்று. அவர் கவிதைகளை எழுதும்போது சங்க இலக்கியங்களை வேட்டை குறித்த நூல்களை திரைப்படங்களை பார்க்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்படி ஒரு நூலை எழுதும்போது அதற்கு திட்டமிட்ட ஒரு புகழுரையை, அதாவது எவரும் சொல்லாததை, எனது கவிதைகள் எவருடைய தொடர்ச்சியுமில்லைமுழுக்க முழுக்க எனது வேட்டுவ நினைவுகள் என்பதைத்தான் மௌனன் யாத்ரிகா அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார். இன்னும் உச்சாடனமாக “வேட்டுவம் நூறு எழுதப்பட்ட அந்த நூறு நாட்களும் தொல் பழங்குடி வேட்டைச் சமூகக் காலத்திற்கே நான் போய்விட்டதாக பலரும் சொன்னார்கள். “நீங்கள் எந்தப் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்? என்று என்னை அழைத்துக் கேட்டவர்களும் கூட உண்டு. உண்மையில் எனக்கும் கூட அந்த எண்ணம் நாளடைவில் உருவானது” என்று சொல்கிறார். கேள்வி கேட்டவர்களின் அறியாமையைச் சொல்வதா, அல்லது கவிதை எழுதியவரின் கால பொருத்தமற்ற கவிதைகளைச் சொல்லுவதா என்ற கேள்வி இங்கு  எழுவதை தவிர்க்க முடியவில்லை. மௌனன் தனது கவிதைகளை தொல்பழங்குடி வேட்டை சமூகம் என்று பிறர் கூறுவதை ஏற்றுக்கொள்வதை கவனிக்க வேண்டும். கவிதைகள் அப்படி இருக்கிறதா?

 

தொகுப்பின் முன்கூறலாக புத்தரது வார்த்தைகளை இட்டிருக்கிறார். முரண் இங்கிருந்தே தொடங்குகிறது. புத்தருக்கும் வேட்டைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மைத்ரியோடு வழங்குபவர். இறைச்சி குறித்த அவரது மூன்று கருத்தாக்கங்கள் சமத்காரமானவை. புத்தருக்கும் வேட்டைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. புத்தர் வேட்டைக்குச் செல்வதை மறுத்ததாக அண்ணல் அம்பேத்கரும் எழுதியிருக்கிறார். அதே சமயம் புத்தர் காடு தனித்ததோர் உயிரி என்று கொல்லாமை குறித்துக் கூறியிருப்பதைகாட்டில் இருக்கும் உயிர்களை எப்படியெல்லாம் வேட்டையாட வேண்டும் என்ற தனது மனநிலையை மௌனன் யாத்ரிகா கவிதையில் வழங்கியிருக்கிறார். புத்தருக்குச் சம்பந்தமற்ற பாடுபொருளைக் கொண்ட ஒரு கவிதைத் தொகுதியில் புத்தரின் வார்த்தைகளை வைப்பதற்குக் காரணம் என்ன‘சங்க இலக்கியங்களைத் தொட்டுக்கூடப் பார்க்கக் கூடாதுஎன்று நினைத்த மௌனன் யாத்ரிகா தனது கவிதைகளின் ஆயத்த ஆயுதமாக புத்தரது வார்த்தைகளை வரலாற்று உணர்ச்சியின்று எடுத்தாள்வதும், ஒநாய் குலச்சினத்தை காட்டுவதும், கலிங்கத்துப்பரணி,நற்றிணை, புறநானூறு, மலைபடுகடாம் போன்றவற்றிலிருந்தும் வரிகளைத் தேர்ந்தெடுத்து முன்வைப்பதும் ஏன்? தனது தொகுதிக்கு ஒரு வரலாற்றுச் சித்திரத்தை வழங்கவா?

 

முதல் கவிதையிலேயே முரண்கள் தென்படத் தொடங்குகின்றன. வேட்டைச் சமூகத்தின் அக்கால வாழ்க்கை முறைகள்பாடுகள் குறித்து உணர்ந்து கொள்ள முடியாமல் இன்றைய கனவானின் மனநிலையில் வேட்டையை ஒரு கொண்டாடமாககொலை வெறியாட்டமாக கருதியிருக்கிறார். கவிச்சையாகப் பேசுவதைக் கூட ஒரு தகுதியாகவும் களிகொள்ளும் செயலாகவும் கருதும் அவரது கவிமனம்!!! அதற்கான பின்புலத்தைப் பேசுவதில்லை. கவிதையில் காலக் குழப்பம் நிறைந்திருக்கிறது. அவர் எந்த வேட்டைச் சமூகத்தைப் பின்னணியாக் கொள்கிறார் என்று பார்த்தால். அவர் தனக்கு நேர்ந்த வேட்டை அனுபவமே போதுமென்கிறார். இதிலிருந்து நாகரீக சமூகத்தில் இன்னும் தன்னை இணைத்துக் கொள்ளாத தற்கால வேட்டைச் சமூகம் குறித்துப் பேசுகிறார் என்று எடுத்துக்கொண்டால் அதிலும் முரண்களே அகப்படுகிறது. இறுதிக்கவிதைகளில் காட்டையும் ஆற்றையும் அழிக்கும் ஜேசிபிக்களின் வருகை சொல்லப்படுகிறது. துரதிருஷ்டவசமாக 24 மணி நேர வேட்டையாடியாக அபத்தமாக அந்த எந்திரத்தையும் விலங்குடனே ஒப்பிடுகிறார். அதே சமயம் சைவ உணவை இழிவாகப் பார்க்கும் மனநிலையும் இருக்கிறது. வேட்டைச் சமூகம் எல்லா நாளும் அசைவ உணவை மட்டுமே உண்டுவந்தன என்கிற மனநிலை கொஞ்சம் ஆயாசத்தைத் தரக்கூடியது. வரலாற்றுப் புரிதல் இல்லாதது. வேட்டைச் சமூகம் அழிந்ததன் பின்னணி என்ன? அதன் பிறகான வரலாற்று மாற்றங்கள் என்ன என்பது போன்ற கேள்விகள் மௌனன் யாத்ரிகாவுக்குத் தோன்றவே இல்லை. 

 

காடுகளில் அவர் வேட்டையாடிய விலங்காக கவிதைகளில் அதிகமும் ஓடியபடியே இருப்பது காட்டுப்பன்றிதான். பிற்பாடு உடும்பு, காடை, முயல்மீன்களில் விரால்,கெளுத்தி,கெண்டை, குரவை,நத்தை என நாமறிந்த பெயர்கள் மட்டுமே. மௌனன் யாத்ரிகாவின் கவிதைகளில் ஏகதேசமாக வேட்டையாடப்படும் எந்த  விலங்குக்கும் பெயர்களே இல்லை. அடையாளங்களாகச் சுட்டப்படுபவையும் பன்றிகள் மட்டுமே. மேற்குறித்த நாமறிந்த விலங்குகள் அன்றி அவர் வேட்டையாடியது பெயர் தெரியாத, அல்லது அவரே அறியாத பெயர்களைக் கொண்ட விலங்குகளே. அவரது கானக அறிவு குறை பட்ட ஒன்றென இதிலிருந்தே அறியலாம். 

 

விலங்குகளின் குணங்களோ, அவற்றின் அறிவோ பெயரோடு எங்கும் குறிக்கப்படாததற்கு வேட்டை குறித்த அவரது அறியாமையின் விளைவே. அதனால்தான் பொதுவாக விலங்கு, விலங்கு என்று கூறித் தப்பித்துக்கொள்கிறார். அவர் வேட்டுவம் நூறில் அதிகமும் ஆடியது பன்றி வேட்டைதான். அவரே அறியாமல் அது அந்நூலின் அட்டைப்படத்திலேயே உள்ளது.

 

வேட்டை நாயின் இயல்புகளை ஆங்காங்கு அவதனித்திருக்கிறார். அதே சமயம் மிக மோசமாக வேட்டை நாயின் “....முகத்தில் மந்திரித்துவிடு/இரையைக் குலைநடுங்க வைக்கும் குரலால் காடு அதிரட்டும்/- என்கிறார். மொசப் பிடிக்கிற நாயை மூஞ்சப் பார்த்தாலே தெரியும் என்பது ஆதிவேட்டையாடியின் குரல் அல்லவா. வேட்டை நாய்வேட்டைக்குச் செல்கையில் காடதிர சத்தமிடுமா என்பதை கவிஞர்தான் சொல்லவேண்டும். நானறிந்து வேட்டை நாய்கள் வேட்டையாடச் செல்லும் மனிதர்களின் மௌனத்தை விட அழுத்தமான மௌனத்தைக் கொண்டது. அதனுள்ளிருக்கும் ஆதிமிருகத்தின் அசைவின்மை அது. அங்கு அதன் குரலாக அசைவதும் உயிராக அசைவதும் திரும்புவதும் அதன் செவிகள் மட்டுமே. அந்தரத்தில் துழாவிப் பாயும் அதன் கால்தடங்கள் அதன் அடுத்த கட்டம்தான். காடதிர -குலை நடுங்க ஒரு வேட்டை நாய் கத்தினாலோ ஊளையிட்டாலோ அது அடுத்தநாள் தெருவில் குரைத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்நாயின் கத்தலில் ஓடிய இரையைக் கண்டு கடுங்கோபப் பசியோடு வீட்டுக்கு வரும் வேடன்  அந்நாய்க்கு பசியைத்தான் உணவாகப் போடுவான். அல்லது அம்பின் வெம்மையை நாயின் மீது பாய்ச்சலாம். 

 

மௌனன் யாத்ரிகா தனக்குத் தெரிந்த பன்றியைக் குறித்தும் உடும்புமற்றும் அவர் மீன்பிடித்தது குறித்தும் உள்ள கவிதைகள் மேலதிக விளக்கங்களோடும் ஏனைய 90% சதமான கவிதைகள் எந்த அடையாளமற்றும் இருப்பதற்குக் காரணமும் இதுவே. வேட்டை குறித்து எழுத வேண்டும் என்கிற கவிமனம் வேட்டையாடிகள் குறித்த அறியாமையை தன்னுணர்வாகக் கைக்கொண்டுவிட்டது. விளைவாகவெறுமனே வார்த்தைகளின் செய்நேர்த்தியாக எஞ்சி கவிதையில் விலங்கு என்ற பொதுப் பெயரோடு ஓடுகிறது, அலைகிறது தவிக்கிறது. அதைத்தான் தானறிந்த முறையில் கவிதையில் இருக்கும் வேட்டையாடி குத்திக் கொல்கிறார். வேட்டை குறித்து வேட்டையாடிகளிடம் அவர் கற்றிருக்கலாம், உரையாடியிருக்கலாம். செய்யவில்லை. இலக்கிய நூல்களைப் படிப்பதும் அபச்சாரம். விளைவு வெறுமனே சொற்களின் முன் மண்டியிட்டு வார்த்தைகளை இறைத்திருக்கிறார். அதன் காரணமாக சில சொற்கள் கனிந்து இறங்கியுள்ளன. அதற்காக மௌனன் யாத்ரிகாவை நாம் பாராட்டலாம்.

 

“விலங்கின் உடலைத் தீயில் வாட்டும்போது/எலும்பைத் தீண்டி விடாதே/ அதில்தான் காட்டின் வரலாறு அழியாமல் இருக்கும்” என்று கூறும் மௌனன் யாத்ரிகா வேறொரு இடத்தில் “எலும்பைக் கூட மிச்சம் வைக்காமல்/ மென்று துப்புகிறோமே ஏனென்று புரிகிறதா?/ என்று முரண்படச் சொல்கிறார். எந்த விலங்கின் எலும்பை செரிக்க முடியாது, உண்ணத்தகாதது என்று கூறியிருக்க வேண்டுமெனில் அந்த விலங்கின் பெயர் அங்கு அறியப்பட்டிருக்க வேண்டும். அவரோ பொதுவாக விலங்கு என்று சொல்லிச் செல்வதால் வரும் முரண்கள் இவை.

 

மௌனன் யாத்ரிகா ஒரு ஆணாக மட்டும் நின்று வேட்டையாடியதில் பெண்கள் அனைவரும் ஆண்களின் வேட்டைஉணவை சமைப்பதற்காக மட்டுமே படைக்கப்பட்ட விலங்குகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். வேட்டையாடுதல் என்பது ஆணின் சாகசச் செயலாக மட்டும் பார்க்கப்படுவது ஆணாதிக்க மனநிலையின் வெளிப்பாடும், வரலாறு குறித்த அறிதலினிமையும்போதாமையுமே ஆகும். வரலாற்று அடிப்படையோடு பார்த்தோமானால் “பெண் என்பவள் ‘வேட்டைத் தொழிலில் புரிந்த ஆணின் துணைவி’யாக இருந்த பாத்திரத்தை மட்டுமே வகித்தாள் என்றகுகையினுள் எரியும் நெருப்புக்கு அருகில் இருந்த மங்கலான, பணிவான நிலையிலிருந்த ஒரு பிறவி மட்டுமேயாகும் என்ற கூற்று உண்மைக்குப் புறம்பானது....கிறிஸ்து பிறப்பதற்கு (கி.மு) 5,00,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்துஉலகின் தொடக்க காலத்தில் சூரிய வெளிச்சம் பாய்ந்த அருவி அரித்த ஏதோ ஒரு மலைச் சந்தில் ஆணுக்கு அருகில் பெண் முதல் முதலில் சரிசமமாக நின்ற காலத்திலிருந்து இருவரும் அறிவுள்ள மனிதர்களாவதற்கு முன்னால் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன”* என்பதை நாம் அறியலாம். வரலாறும், ஆய்வுகளும் இப்படி இருக்க மௌனன் யாத்ரிகா முற்றாக தன் ஆண்நினைவைப் பின் தொடர்கிறார். வேட்டையறிவு கொண்ட சமூகத்தை அவர் அறிந்திருந்தால் வேட்டைக்கான விலங்கு குறித்த பெயர்களை அதன் வித்தியாசங்களை அவர் எழுதியிருக்க வேண்டும். செய்யவில்லை. ஆனால் மோசமான ஆணாதிக்கத்தை கவிதையின் கருப்பொருளாக உட்கொள்கிறது.

 

“....ம்...சேலையைத் தொடைக்கு ஏற்று/ அம்மியை அணைத்துப் பிடி/ மிளகும் மல்லியும் நீ வறுக்கும் போது/ஊரின் மூக்கில் புரையேற வேண்டும்.../” என்றும் இன்னொரு கவிதையில் “.....சூட்டைத் தணிக்கும் கறிக்கு/ மிளகைக் கூடுதலாக அரைக்க வேண்டும்/ நம் கிழத்திகளுக்கு இன்று இடுப்பொடியப் போகிறது.../” என்றும் அழுத்தமாகச் சொல்லிச் செல்கிறது. இது ஞாயிற்றுக்கிழமை ஓய்வில் கறியை வாங்கி சமையலறையில் வீசிவிட்டு காரம் தூக்கலாக வை என்று கூறி மதுபோத்தலைத் திறக்கும் நகர்ப்புற கனவானைத்தான் நமக்கு ஞாபகம் ஊட்டுகிறது. இங்கு நகர்புறத்தானுக்கும் வேட்டையாடிக்கும் இந்த வித்தியாசமும் இல்லை. மௌனன் யாத்ரிகாவின் பழங்குடி மனம் ஆணாதிக்கத்தில்தான் ஒன்றுபடுகிறது. மேலதிகமாக 24 மணி நேரமும் வேட்டையாடி ஒரு வேட்டை மனநிலையிலேயே இருப்பது அபத்தமான கூற்று. கவிதைகளில் ஓரிடு இடங்களில் பாடச் சொல்லுகிற வேட்டையாடி, பெண்கள் என்று வந்ததும் ஆணாதிக்க வேட்டையாடுகிறான். “..நீரில் ஊறிய சோறும் சுட்ட கறியும் உண்டுக் களித்துவிட்டுத்/ தன் கிழத்தியின் நாக்கு ருசியை/அசை போட்டுக் கொண்டே வருபவனே../ என்று விவரிப்பதில் பெண்கள் கறிப்பன்றிகளாக காட்சியளிப்பது அதிர்ச்சி ஊட்டுகிறது. அதற்கும் மேலாக வேட்டையாடி நீரில் ஊறிய சோற்றையும் சுட்ட கறியையும் உண்டுபெண்ணையும் உண்டுவிட்டு வயிறும் - உடலும் (மனதல்ல) பெருக்க அசைந்து வருபவனிடம் மறுபடியும் முயங்கி களைத்த விலங்கொன்று அருகில் இருக்கிறதென்று நினைப்பதாகச் சொல்கிறார். சதா வில்லும் கையுமாக பழந்திரைப்படங்கள் சித்தரிக்கும் வேட்டையாடியைத்தான் இங்கு நாம் காணமுடிகிறது. சமத்காரமாக இதில் “காட்டுயிர்களின் காமம் போற்றுதல் வேடர்க்கு அறம்” என்பவர் கிழத்தியை சுட்டகறிக்கு இணையாகச் சுட்டுகிறார்.

 

மேற்சுட்டிய கவிதைகளில் புணர்ச்சிக்கான சித்திரமொன்றும் காணப்படுவதை நாம் உணரமுடியும். கவிதையில் ஆணாதிக்கத்தைப் படைக்க முடியுமெனில் அக்கவிதைக்கான ஓவியத்திலும் கவிஞரின் கவிதைக்கேற்ப ஆணாதிக்கத் தடயத்தை வரைந்து கொடுத்திருக்கிறார் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன். கவிதைத் தொகுதியின் பக்கம் 97 இல் ஒரு பெண் அம்மியை தனதிரு தொடைகளால் அணைத்துப் பிடித்து குழவியை பெருத்த ஆண்குறி போல் தழுவும் ஓவியம் காணப்படுகிறது.

 

வேட்டையாடிகளின் வாழ்க்கை வேட்டையாடுவதற்காகவே படைக்கப்பட்டதென்ற கற்பனைதான் கவிதை முழுக்க இருக்கிறது. வேட்டையாடிகளின் வாழ்க்கை கவிதையில் இரத்தமும் சதையுமாக காணப்படாமல் விதிக்கப்பட்ட வாழ்வை வாழ்ந்து கொண்டாட்டமாகக் கடப்பதாகவே இருக்கிறது. ஒரு கவிஞர் இதையெல்லாம் அறிந்துதான் கவிதைகளை எழுத வேண்டுமா, அவை அவரது  உள் மனதில் வேர் பிடித்து வரக்கூடாதா என்று கேட்டால் அப்படி வரும் ஆணாதிக்கச் செயல்களையும் நாம் எடுத்துக்காட்டத்தான் வேண்டும். எதையும் படிக்காமலேயே உள்ளுணர்ச்சியில் செயல்பட்ட கவிதைகள் என்று மௌனன் யாத்ரிகா சொல்வது பிழையான ஒன்று. அவர் இதற்கு முன் படித்தறிந்த நூல்களும், பார்த்த திரைப்படங்களும் அதற்கு சாட்சி சொல்லாதா? அல்லது அவற்றை முழுமுற்றாக தூக்கி எறிந்து விட்டு ஒரு பெரும் மறதிக்குள் சென்று சாட்சிகளை அழித்துவிட்டுத்தான் இத்தகைய கவிதைகளை எழுதினாரா? வாய்ப்புகள் இல்லை. 

 

பொதுவாக தமிழ்ச்சூழலில் பல கவிஞர்களும், புனைவெழுதிகளும் ஓடித் தப்பித்துக்கொள்ள இத்தகைய மனநிலையையே காரணம் காட்டுகிறார்கள். “தனது உணர்ச்சிகளுக்கும் எண்ணங்களுக்குமான வடிகாலும் வெளிப்பாடும்தான் தனது கலைப்படைப்பே தவிர, அதற்கு மேல் அதில் ஏதும் இல்லை என ஒரு கலைஞர் கூறலாம். அப்படியானால் அவர் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.“இந்தக் கலைப்படைப்பை உருவாக்குவதற்கு வேறு நோக்கம் இல்லை என்றால், உங்களது படைப்பில் மற்றவர்கள் ஏன்எதற்காக ஆர்வமும் அக்கறையும் கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்.”** என்பதையும் நாம் கேட்டேயாக வேண்டும். வேட்டையாடிகளும் வேட்டை உணவுக்கான ஆதார விசயமா? அல்லது தொழிலா? தொழிலெனில் அவர்கள் வேட்டையாடியதை விற்றிருக்க வேண்டும். அதுசம்பந்தமான பதிவுகளும் கிடையாது. விளைவு- உணவுக்காக வேட்டையா, அல்லது ருசிக்கான வேட்டையா என்றால் மௌனன் யாத்ரிகாவின் வேட்டையாடி நாவின் ருசிக்காகவே வேட்டையாடுகிறார். குடல்களுக்காக வேட்டையல்ல, நாக்கின் சுவைக்காகவே விலங்குகள் கவிதைகள் முழுக்க வேட்டையாடப்படுகின்றன. காட்டைச் சொத்தாக கருதும் மனநிலையில்தான் ஏலே பங்காளி..ஏலே பங்காளி என காட்டுயிர்களைக் கொன்று பங்கு பிரிக்க கவிதை முழுக்க அழைத்துக் கொண்டே இருக்கிறார்.  கவிதையின் ஓரிடத்தில் “...இந்தக் காட்டைக் கேட்டல்கூட/ உன் பேருக்கு எழுதிக் கொடுத்துவிடுவேன்/” என்றும் இருக்கிறது. உயிர் ஆதாரமாகக் கருத வேண்டியதை சொத்தாக மாற்றிவிடுகிறான் அவரது வேட்டையாடி.

 

ஓவியர் திண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் ஓவியங்களில் இருக்கும் காத்திரமும்-வெம்மையும் கவிதைகளுக்குள் இறங்கவே இல்லை. 

 

முடிவாகச் சொல்ல வேண்டுமானால் ‘வேட்டுவம் நூறு’ வெறுமனே பன்றி வேட்டையாகச் சுருங்கிப் போனதோடு, காட்டை ஒரு பெரும் கறிக்கடையாய் மாற்றி வைத்திருக்கிறார் மௌனன் யாத்ரிகா. 

 

இறுதியாக எத்தனை முறை எடுத்தாண்டாலும் இன்னும் தன் கவிதையின் சாரத்தையும் காலத்தையும் இழக்காத சச்சிதானந்தனின் கவிதைதான் ஒரு வாசகனாக எனது உடலதிர-உளமதிர ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

 

 

நினைவில் காடுள்ள மிருகத்தை 

எளிதாகப் பழக்க முடியாது.

அதன் தோலில் 

காட்டுச் சதுப்பு நிலங்களின் குளிர்ச்சி.

அதன் மயிர்க்கால்களில் 

காட்டுப்பூக்களின் உக்கிரவாசனை.

அதன் கண்மணிகளில்

பாறைகளில் வழுக்கிவிழும் 

காட்டுச் சூரியன்

 

அதன் வாயில் 

காட்டாறுகள் கர்ஜிக்கின்றன.

அதன் நாவில் 

காட்டுத் தேன் எரிகின்றது.

 

அதன் செவிகளில் 

அடவிகளின் மேகங்கள் முழங்குகின்றன. 

அதன் இரத்தத்தில் 

காட்டானைகள் பிளிறுகின்றன.

அதன் இதயத்தில் 

காட்டு நிலாக்கள் பூக்கின்றன

 

அதன் சிந்தனைகள் 

காட்டுப் பாதைகளில் 

குதித்தோடுகின்றன.

 

நினைவில் காடுள்ள மிருகத்தை 

எளிதாகப் பழக்க முடியாது.

 

என் நினைவில் 

காடுகள் இருக்கின்றன.***

 

-சச்சிதானந்தன்

 

 

ஓநாய்கள் விஷேசமான திறனை வளர்த்துக் கொண்டிருக்கின்றன. ஒரு ஒநாய் பகல் வெளிச்சத்தில் தனித்திருக்கும் ஒரு மான் மீது தன் கவனத்தைக் குவிக்கும். ஆனால் இரவு கவிழும்வரை எதுவுமே செய்யாது. அப்போது மான் காட்டிற்கு மறைவாக வளர்ந்த புற்களுக்களுக்கிடையே இடம் தேடிப் படுத்து உறங்கும். அதுவும் கூடத் தாக்குதலுக்கு உகந்த நேரம் இல்லை. ஏனென்றால் மான் தூங்கிக் கொண்டிருந்தாலும்கூட அதன் மூக்கும் காதுகளும் உஷாராகவே இருக்கும். அபாயத்தின் முதல் அறிகுறி தோன்றியவுடனேயே துள்ளி எழுந்து ஓடிவிடும். ஓநாயால் அதைப் பிடிக்க முடியாது. அதனால் ஓநாய் இரவு முழுவதும் அருகிலேயே படுத்திருந்து காத்திருக்கும். சூரிய உதயத்தின் போது சிறுநீர்ப்பை முழுவதுமாக நிறைந்திருக்க மான் விழித்தெழும். அப்போது ஓநாய் அதன் மீது பாயத் தயராகும். ஒரு மானால் ஓடிக்கொண்டிருக்கும்போது சிறுநீர் கழிக்க முடியாது. ஆக அது அதிக தூரம் போவதற்கு முன்பே சிறுநீர் முட்டி வரத்தொடங்கியதும் அதன் பின்னங்கால்களில் சதைப்பிடிப்பு ஏற்பட்டு மான் அப்படியே நின்றுவிடும். ஒரு மான் காற்றைப் போல் விரைந்தோடும் என்றாலும் எல்லா நேரமும் அப்படி முடியாது. தனித்திருக்கும் ஒன்றை எப்போது வீழ்த்துவது என்பதை ஞானமிக்க முதிய ஓநாய்கள் நன்கு அறியும். புத்திசாலி மான்கள் மட்டுமே தூக்கத்தின் இதத்தைத் துறந்து இரவில் விழித்து சிறுநீர் கழிக்கும்.

 

-ஜியாங் ரோங்.ஓநாய் குலச்சின்னம்.

 

வாசியுங்கள் மௌனன் யாத்ரிகா. குறையொன்றுமில்லை.

 

 

 

குறிப்புகள்:

 

*உலக வரலாற்றில் பெண்கள்-ரோஸாலிண்ட் மைல்ஸ்-தமிழில் வி.ராதாகிருஷ்ணன்நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட்,சென்னை,2018.

 

**இருத்தலியமும் மார்க்சியமும்எஸ்.வி.இராஜதுரை,விடியல் பதிப்பகம்,கோவை,2011

 

***ஆலிலையும் நெற்கதிரும்’ – சச்சிதானந்தன்- தேர்ந்தெடுத்த கவிதைகள் -சாகித்ய அகாதெமிசென்னை,2016.

 

**** ஓநாய் குலச் சின்னம்-ஜியாங் ரோங்தமிழில்-சி.மோகன்,அதிர்வு,2012

 

 

 

வேட்டுவம் நூறு

மௌனன் யாத்ரிகா

 

வெளியீடு:லாடம்

பக்கங்கள்:144

விலை:200

 

 

விமர்சனத்தை வெளியிட்ட மணல் வீடு இதழுக்கும் ஹரிகிருஷ்ணனுக்கும் நன்றி. 

 

மணல் வீடு இதழ் 41- மார்ச்-20121

Monday, September 23, 2019

அம்பேத்கரும் அவரது தம்மமும் - முன்னுரையாகச் சில சொற்கள் - எஸ்.பாலச்சந்திரன்.


                                

       இந்தியா முழுவதிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தலித் மக்களின் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள காலம் இது. ஆதிக்கசாதியினரின் வெறித்தனமான கூச்சல்களுக்கு மத்தியில்தலித் மக்களின் கதறல்கள் காற்றோடு கரைந்து போய்க்கொண்டிருக்கின்றன. தலித் மக்கள் அனைவரையும் அவர்களின் ஆதரவு சக்திகளையும் ஜனநாயகரீதியாக ஓரணியாகத் திரட்டி ஒரு மாபெரும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டியமார்க்சியத் தத்துவத்தையே தமது அடித்தளமாகக் கொண்டுள்ளஇடதுசாரிக் கட்சிகள்  தங்கள் குறிக்கோளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று விட்டன என்றும் கூற முடியாத நிலை. அதற்கான காரணங்கள் அகத்திலும் புறத்திலுமாகப் பல இருக்கலாம். இருப்பினும்சாதியப் படிநிலைகளை அமைத்துஅதன் மீது காலூன்றி நின்றுகொண்டிருக்கின்றபண்பாட்டு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்தியச் சமூகத்தில் இடதுசாரி இயக்கங்கள் நடத்தி வருகின்ற போராட்டம் சாதிய அமைப்பு முறையையே அடியோடு தகர்த்தெறிவதற்கான போராட்டம் ஆகும். சாதிய வன்முறைகளுக்கும் கொடுமைகளுக்கும் எதிரான போராட்டம் சாதியையே ஒழிக்க வேண்டும் என்பதற்கான போராட்டமாகத்தான் இருக்க முடியும் என்ற புரிதல் மார்க்சிய இயக்கங்களுக்கு உண்டு.

சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு இதே காலத்தில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களது பங்களிப்புகள் மகத்தானவை என்பதிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இருபதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் இந்தியா முழுவதிலும் பிற்படுத்தப்பட்டதாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களிடம் சாதிய ஒடுக்குமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர் செய்த சாதனை மிகப்பெரியது. தலித் மக்களுக்கென்றே இயக்கங்களைத் தொடங்கியவரும் அவர்தான்.

அதே நேரத்தில் சாதி அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டுஅவரவரது சாதி அடையாளத்தைச் சார்ந்து அமைப்புகளை உருவாக்கிதமது அமைப்பின் நலன்களுக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக மட்டுமே சாதிய வன்முறைகளுக்கெதிரான போராட்டத்தைக் கருதிச் செயல்படுவதும் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாதி ஒழிப்பை இலட்சியமாகக் கொள்ளாமல்தமது சாதி அடையாளத்தையே முழுமுதலானதாகக் கருதி வருகின்றஒட்டுமொத்த சமூகத்தில் சாதியின் முக்கியத்துவத்தைத் தகர்க்கின்ற பார்வையை வகுத்துக் கொள்ளாமல்சொந்த சாதிக்கான ஆதாயங்களை - பல நேரங்களில் இவை சொந்த ஆதாயங்களாகவும் சீரழிந்துவிடுகின்றன-மட்டுமே முன்னிலைப் படுத்துகின்றஅடையாள அரசியல் பேசுகின்ற இயக்கங்கள்/ அமைப்புகள் நாடெங்கிலும் அதிகரித்து வருகின்றன.

உலக அளவிலும்நாடு முழுவதிலும் நாள்தோறும் உருவாகிவரும் புதுப்புதுப் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கின்ற இடதுசாரி இயக்கங்களோ நாட்டின் மாறி வரும் புதிய சூழ்நிலையில் வைத்து சாதிப் பிரச்சினையை முதன்மை முக்கியத்துவம் வழங்கி அணுகாமல்அப்பிரச்சினையின் தீவிரத்தையும் அவசரத் தன்மையையும் குறைத்து மதிப்பிட்டு வருகின்றனசாதி ஒடுக்குமுறைகளை சமூக – பொருளாதார- பண்பாட்டுப் பிரச்சினையாகக் கருதி ஆய்வு செய்வதில் போதாமைகள் நிலவுகின்ற காரணத்தால்பல்வேறு சமூகப் பிரச்சினைகளைப் போல் சாதிப்பிரச்சினையையும் மிகவும் பொதுப்படையான பிரச்சினையாகக் கருதிஅதற்குத் தீர்வு காண முயல்கின்றன.

தலித் மக்களுக்கான சமநீதிபண்பாட்டு சமத்துவமிக்க சமுதாயம் ஆகியவற்றை அமைப்பதற்கு  இவ்விரு போக்குகளுமே உதவப்போவதில்லை. தலித் அமைப்புகளும் இடதுசாரி இயக்கங்களும் ஓர் ஒருங்கிணைந்த பார்வையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டிய தருணம் இது. இதனைப் பெரும்பாலான இடதுசாரி இயக்கத் தோழர்கள் புரிந்து கொண்டுள்ளனர். இடதுசாரி இயக்கங்கள் முன்னெடுக்கின்றபொருளாதாரரீதியானவை அல்லாத பெரும்பாலான போராட்டங்கள் மட்டுமின்றிபொருளாதாரப் போராட்டங்களில் கணிசமானவையும்கூட தலித் மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டங்களாக இருப்பதற்குக் காரணம் இதுதான். 

அம்பேத்கரின் படைப்புகளைத் தமிழில் கொண்டுவருவதற்கான முயற்சியிலிருந்துசாதி மறுப்பு இலக்கியங்களை- அவை தலித் சமூகப்பிரிவைச் சேர்ந்த எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருந்தாலும்தலித் அல்லாதவர்களால் எழுதப்பட்டிருந்தாலும்-வெளியிடுவது வரையில் இடதுசாரி எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதற்குக் காரணம் இதுதான்.

உலகமயமாக்கலின் உயர்தொழில்நுட்ப வளர்ச்சிசாதிய சமூகத்தின் அடித்தளத்தில் கீறல்களை ஏற்படுத்துவதற்குப் பதிலாக,உலகமயமாக்கலின் ஏவல் பணி செய்யும் இந்துப் பாசிசத்தையே வலுப்படுத்தியுள்ளது என்றும்இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்த இந்துப்பாசிசத்தின் கருத்தியல் உள்ளடக்கமாக பார்ப்பனியமும். பொருளாதார உள்ளடக்கமாக உலகமயமாக்கலும் விளங்குகின்றன என்றும்மேலும் உலகமயமாக்கலானது வினோதமான விதத்தில்ஏற்கனவே இங்கு நன்றாக வேரூன்றியுள்ள நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளுக்கு உரமிடுவதாக அமைந்துள்ளது என்றும்உலகில் வேறெந்த நாட்டிலும் இடம்பெற்றிராத தீண்டாமை” என்னும் கொடிய வழக்கம் ஜனநாயகத்திற்கு எதிரானது மட்டுமின்றிமனிதகுலம் இதுவரை கண்டவற்றிலேயே மிகவும் கொடுமையான,மிகவும் மனிதத்தன்மையற்றமிகவும் அருவருப்பான வழக்கமாகும் என்றும் உரக்கச் சொல்லிக்கொண்டிருப்பவர்கள் இடதுசாரிச் சிந்தனையாளர்களே. 

ஆனால் ஒட்டுமொத்த சமூக விடுதலையிலிருந்து தலித் மக்களின் விடுதலை-சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வெற்றி-பிரிக்கமுடியாதது என்பதைப் புரிந்துகொள்ளாத தலித் அறிவுஜீவிகளின் தலைமையிலான சில தலித் இயக்கங்கள் தங்கள் அடையாள அரசியலுக்கு இடதுசாரிகளால் இடைஞ்சல்கள் ஏற்படக்கூடும் என்று கருதிஇடதுசாரி இயக்கங்களின் செயல்பாடுகளைக் குறைகூறுவதில் தொடங்கிகம்யூனிஸ்ட் இயக்க எதிர்ப்புமார்க்சிய எதிர்ப்பு என அதனை விரிவுபடுத்திக்கொண்டுமார்க்சியர்களின் மீதும்மார்க்சியக் கருத்தியலின் அடிப்படையிலான இயக்கங்களின் மீதும் மிக மோசமான அவதூறுகளைப் பொழிவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அம்பேத்கரின் எழுத்துகளையும் வாழ்க்கைப் பணிகளையும் அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டு முன்வைக்கப்படும் அம்பேத்கரியம் என்னும் கருத்தியலின் பிரதிநிதிகளாகவும் ஆய்வறிஞர்களாகவும் வலம் வருவோரின் பங்கு இதில் குறைத்து மதிப்படத்தக்கதல்ல. அம்பேத்கரை முன்வைத்துஅவரது சாதி மறுப்பு அரசியலை முன்வைத்துஇவர்கள் நிறுவுவதற்கு விரும்புவதெல்லாம்சாதி அடையாளத்தை மையமாகக் கொண்டஇன்னும் துல்லியமாகச் சொல்வதெனில்தலித் அடையாளத்தை மையமாகக் கொண்டசாதியத்தை நிரந்தரமாக அழிப்பதற்கும் சாதியற்ற சமூகத்தை உருவாக்குவதற்கும் எதிரான அரசியலை முன்வைக்கின்ற அடையாள அரசியலைத்தான்அவ் அடையாள அரசியலின் வழியாக தலித் மக்களின் வாழ்வுரிமைகளுக்குப் போராடுவதைக் காட்டிலும் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதே இதன் நோக்கம்.

அம்பேத்கரை ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தமக்களின் மகத்தான தலைவர் என்பதற்கும் மேலாககடவுளைப் போல் வழிபடுகின்றவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அவர் ஒரு மனிதப் பிறவிதான் என்று நம்ப விரும்பாதவர்கள் இவர்கள்சமூகத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அம்பேத்கரிடமே தீர்வு இருக்கிறது என்று நம்பவைப்பதற்கு இவர்கள் மேற்கொள்ளும் முயற்சி அளப்பரியது. பொதுவாகதனது வாழ்நாளின் பெரும்பகுதி முழுவதிலும் பகுத்தறிவுவாதியாக வாழ முயற்சி செய்த அம்பேத்கர்தனது வாழ்வின் இறுதி ஆண்டுகளில்இந்து மதத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்து பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்டது ஒரு சறுக்கல்தான் என்று இவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மாறாகஅதை நியாயப்படுத்துவதற்கு முயற்சி செய்வார்கள். மேலும்தலித் மக்களுக்கு விடுதலையைத் தேடித் தரப்போவது தனது பௌத்தமே என்று அம்பேத்கர் கூறியபோதிலும் அவர்தொடக்க காலப் பௌத்தத்தை-அதன் பகுத்தறிவுப்பூர்வமான உள்ளடக்கத்தைக் கருதி-ஏற்றுக்கொண்டவரல்லமாறாகபிற்காலத்தில் பெருமளவுக்குப் பகுத்தறிவு அடிப்படைகளைக் கைவிட்டு வெறும் மூடநம்பிக்கைகளின் புகலிடமாக மாறிப்போன மகாயான’ பௌத்தத்தையே ஏற்றுக்கொண்டிருந்தார் என்று சொன்னால் அதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மாறாக, “மகாயான” பௌத்தம் கூறுகின்றசர்வ வல்லமை படைத்த போதிசத்துவராகவே அம்பேத்கரை மாற்றி, “திருவுருவ” உருவாக்கத்தில் ஈடுபடுவார்கள். இத்திருவுருவ வழிபாட்டை யார் எதிர்த்தாலும்விமர்சித்தாலும்அவர்களை தலித் மக்களின் விரோதிகள்” என்றும், “ஆதிக்கச் சாதி வெறியர்கள்” என்றும் முத்திரை குத்துவார்கள். அம்பேத்கருக்கு எதிரான எந்தவொரு விமர்சனத்தையும் இங்கு முன்வைப்பவர்களுக்கு இங்கு நேருவது இதுதான். எங்கே தன்னைச் சாதி ஆதிக்கவாதி (அல்லது ஆதிக்க சாதி வெறி பிடித்தவர்) என்று சொல்லிவிடுவார்களோ என்று அஞ்சியே நிறையப்பேர் இங்கு மௌனமாகி விடுகிறார்கள். இந்த மௌனம் விட்டுச்செல்கின்ற இடைவெளியில்தான் அடையாள அரசியல் பேசும் அம்பேத்கரியமும்வர்க்கப்போராட்டத்தை நீக்கி பன்மைக் கட்டமைப்புகளை முன்வைக்கும் பின்நவீனத்துவமும்தற்கால சமூகத்தில் நிலவும் சகல பிரச்சினைகளுக்கும் காரணம் காலனிய ஆட்சிக் காலமே என்று பேசும் பின் காலனியமும்வகுப்புவாதச் சிந்தனையும்  ஒன்று கலக்கின்றன. இடதுசாரிக் கட்சிகளுக்குள்ளும் வெளியிலும் நிகழ்வது அநேகமாக இதுதான். மார்க்ஸை விமர்சித்துவிட்டு நீங்கள் மார்க்சியக் கட்சிகளில் தொடர்ந்து நீடிக்க முடியும்ஆனால் அம்பேத்கரை விமர்சித்துவிட்டு நீடிக்கமுடியாது. இந்த சமயத்தில் அம்பேத்கர் மீதானவிமர்சனங்களற்ற புகழுரைகளின் உரத்த கூச்சல் விண்ணை முட்டுகிறது. தலித் மக்களின் விடுதலைக்கு இது சற்றும் பயன்படாது என்ற போதிலும்அம்பேத்கரின் பௌத்த மத மாற்றத்தையும் அவரது மத நம்பிக்கைகளையும் விமர்சனமேதுமின்றிப் பரப்புவதும்அதை “ அம்பேத்கரிய பௌத்த அடையாள மீட்டுருவாக்கம்” என்று போற்றிப் புகழ்வதும்தங்கள் அடையாள அரசியலை முன்னெடுப்பதற்கான முக்கியமான கருவிகளில் ஒன்றாக அவரது மத நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொள்வதும் இன்றைய தலித் விடுதலை அரசியலின் நிகழ்ச்சிநிரலில் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொண்டுவிட்டன. முழு தலித் சமூகத்தையும் தங்களுக்கு இணக்கமாகக் கொண்டுவருவதற்கும்பாட்டாளிவர்க்க இயக்கத்துடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாதவாறு அவர்களைத் தடுப்பதற்கும் ஆளும் வர்க்கங்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்குஇத்தகைய தலித் அறிவிஜீவிகளின் செயல்பாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் துணைபுரிகின்றன. தலித்  மக்களில் பெரும் எண்ணிக்கையினர்  சமஸ்கிருதமயமாக்கப்படுவதையும் பாசிச இந்துத்துவக் கொடியின்கீழ்க் கொண்டுவரப்படுவதையும்உலகமயமாக்கல் கொள்கையை ஏற்றுக்கொள்ள வைக்கப்படுவதையும்தன்னார்வ அமைப்புகளாலும் ஆக்ஸ்ஃபாம்போர்டு ஃபவுண்டேஷன் போன்ற அறக்கட்டளைகளாலும் தலித் அமைப்புக்களுக்கு ஏகாதிபத்திய நிதி கையளிக்கப்படுவதன் மூலம்   இவ்வகை அமைப்புகளில் பணியாற்றும் தலித் மக்கள் அதிருப்தியாளர்களாக”, “செயலற்றவர்களாக” வைத்திருக்கப் படுவதையும் இந்த தலித் அறிவுஜீவிகள் கண்டுகொள்வதில்லை. மார்க்சிய இயக்கங்களிலிருந்தும் அவ்வியக்கங்கள் மேற்கொள்கிற புரட்சிகரமான போராட்டங்களிலிருந்தும் அம் மக்களை விலக்கி நிறுத்துவதில் மட்டுமே அவர்கள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.

இந்த நிலையை மாற்றுவதற்குப் பெருமுயற்சி தேவை. உரையாடல்களின் மூலம் பொதுவான உணர்வு நிலையையும் நிலைப்பாடுகளையும் வகுத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கைக்கு இடமிருப்பதாக நம்பிய நாட்களெல்லாம் கடந்து போய்விட்டது போல் தோன்றுகிறது- ரங்கநாயகம்மா அவர்கள் தெலுங்குமொழியில் எழுதிஆங்கிலம் வழியாகத் தமிழில் கொற்றவை அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு:புத்தர் போதாது!அம்பேத்கரும் போதாது!மார்க்ஸ் அவசியத்தேவை” என்ற நூலுக்கு தமிழ்நாட்டு தலித் அறிவுஜீவிகள் காட்டியசொல்லுந் தரமற்ற எதிர்வினையும்,அதைத் தொடர்ந்து மார்க்சியத்திற்கும் தலித்தியத்திற்கும் இடையிலான சாதியும் வர்க்கமும்’ குறித்த ஆக்கப்பூர்வமான விவாதத்தை முன்னெடுக்கும் வகையில் கொற்றவை அவர்களால் தொகுத்து வெளியிடப்பெற்ற சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்:தொடரும் விவாதம்என்ற நூலுக்கு எந்த எதிர்வினையும் காட்டாமல் அதே தலித் அறிவுஜீவிகள் இன்றுவரை கடைப்பிடித்துவரும் மௌனமும் இந்த நம்பிக்கையின் முடிவை உணர்த்துகின்றன. இந்த நிலையில்,(பகத்சிங்கின் மொழியில் கூறுவதெனில்) கேளாத செவிகளைக் கேட்க வைப்பதற்குஒரேயொரு வழிமுறை மட்டும்தான் மிச்சமிருக்கிறது. எப்படியாவது உண்மையை உரக்கப் பேசி,அச்செவிகளில் விழவைப்பதுதான் அது. அப்படி உரக்கப் பேசும் ஒவ்வொரு சொல்லும் வெடிகுண்டுச் சப்தமாய் கேளாத செவிகளைக்கிழித்து உட்புக வேண்டும். கேள்விக்கணைகளாகப் பாய்ந்து செல்கின்ற ஒவ்வொரு சொல்லும்கேட்போரின் இதயத்தைக் கிழித்து அங்கே உண்மையைப் பதிக்க வேண்டும். இந்த நோக்கத்துடன் தோழர் வசுமித்ர அவர்கள் மேற்கொண்ட கடும் உழைப்பின் விளைபயனே இந்நூல்.

பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் ஆய்வுக் குழப்பங்களைவாசகர்களின் மனங்களை மாற்றவேண்டும் என்ற நோக்கில் அவர்களைக் குறைத்து மதிப்பிட்டு அவர் எழுதி வைத்திருக்கும் பகுத்தறிவுக்குப் புறம்பான கருத்துகளைஅதன் பின்னணியில் இருந்ததலித் மக்களுக்கான விடுதலையை மட்டுமே பற்றிச் சிந்தித்ததன் விளைபயனாக எழுந்தவகுப்புவாதக் கண்ணோட்டத்தின் தர்க்கரீதியான முடிவாகத் தன்னுணர்வுடனோதன்னுணர்வின்றியோ அவர் வந்தடைந்த அடையாள அரசியலைவசுமித்ர தனது கூர்மையான அரசியல் பார்வையுடனும் தர்க்க வாதங்களுடனும் விமர்சிக்கின்றார். அவ்விமர்சனங்கள் வசுமித்ர மார்க்சிய அரசியல் சார்பையும் விமர்சனக் கூர்மையையும் கொண்டிருப்பதால் மட்டுமின்றிஉண்மை என்னும் உரைகல்லில் சோதித்துப் பார்த்து முன்வைக்கப்பட்டவையாகவும் இருப்பதால்நூல் நெடுகிலும் அவரது வாதங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டேயிருக்கின்றன. அதே நேரத்தில்சமூக மாற்றங்களில்,சாதிய சமூக அமைப்பைத் தகர்ப்பதில் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளையும் சரியாக மதிப்பிடுகிறார் வசுமித்ர. பொதுவாக அம்பேத்கரின் தத்துவசமயப் பார்வையிலிருக்கும் சிக்கல்களை விமர்சிப்பதே இந்நூலின் நோக்கம் என்றபோதிலும் விவாத முறைகளும்தரவுகளை முன்வைக்கும் விதமும்ஆய்வு முடிவுகளுக்கு வந்து சேரும் பாங்கும் காய்தல் உவத்தலின்றி” நடுநிலையுடன் திகழ்வதைக் காணமுடியும். மொத்தமாகதமிழகத்தில் அம்பேத்கரைக் கடவுளின் திருவுருவாகக் காண்பவர்களில் பலரையும் அம்பேத்கர் மீதான வசுமித்ர-வின் ஆய்வு-விமர்சன முடிவுகள் சங்கடப்படுத்தக் கூடுமெனில்அதற்குக் காரணம் அவர்களது அடையாள அரசியல் சார்பும் ஆய்வு அடிப்படையற்ற முன்முடிவுகளும்தான் என்பதில் சந்தேகமில்லை. உண்மையான தலித் விடுதலையிலும்பகுத்தறிவின்மைக்கு எதிரான போராட்டத்திலும்,  சமத்துவமும் சமநீதியும் நிலைபெறுகின்ற சோஷலிச சமூகத்தை நிறுவுவதற்கான போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்ற அனைவருக்கும்தமிழகச் சூழலில் யார் எவர் என்று அடையாளம் காட்டுகின்ற நோக்கில் இந்நூலுக்கு முன்னோட்டம்” ஒன்றையும் வசுமித்ர வழங்கியுள்ளார். இதுஅடையாள அரசியலோடு-அதாவது தலித் இயக்கங்களோடு-தொடர்புடையவர்களின் சார்பு நிலைகளை மட்டும் சுட்டுக்காட்டுவதோடு நின்றுவிடவில்லை: ஆயிரம் பக்கங்களுக்கு நீளக்கூடிய இத்தகைய நூலை அவர் எழுதுவதற்கான ஆய்வு அடிப்படைகளையும் அறிமுகப்படுத்துகிறது.

பாபாசாகேப் அம்பேத்கரின் தத்துவ,சமயக் கண்ணோட்டங்களை விமர்சிப்பற்காக மட்டும்தான் வசுமித்ர இந்த நூலை எழுதியுள்ளாராஇல்லைமதத்தின் அடிப்படையைக் கொண்டு கட்டியெழுப்பப்படும் அரசியல்விடுதலைக்கு வழி வகுக்காது;மாறாக அடையாளத்திற்குள் சிறைபட்டுச் சின்னாபின்னமாகிவிடும் என்று சொல்வதற்காகவும்தான். அது மட்டுமாஇல்லை. சாதியை ஒழிப்பதும்அடையாளங்களை நிராகரிப்பதும்பாட்டாளிவர்க்க உலகக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலான புரட்சிகரச் செயல்பாட்டின் மூலமே சாத்தியப்படும்;அதற்கு எத்தகைய பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்அதுகுறித்துத் தலைசிறந்த மார்க்சிய அறிஞர்களும் ஜனநாயகச் சிந்தனையாளர்களும் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றெல்லாம்  எடுத்துச் சொல்வதற்காகவும் தான்.

ஏறத்தாழ ஆயிரம் பக்கங்களில் எழுதப்பட்டாலும் இறுதிவரை சுவைகுன்றாமல் வாசகர்களை நடத்திச் செல்லும் ஆற்றுவெள்ளம் போன்ற நடை! அம்பேத்கரை புறவயமான,  வரலாற்றுப் பொருள் முதல் வாதப் பார்வையோடு அணுகி விமர்சிக்கின்ற முதல் தமிழ் நூல் இது. சொல் புதிது பொருள் புதிது” என சோதிமிக்க” நவ உரைநடை நூலைத் தமிழுக்கு அளித்துள்ள தோழர் வசுமித்ர அவர்களை அன்புடன் வாழ்த்துகிறேன்.Monday, April 22, 2019

பத்திரிக்கையாளர்கள் அமைதியாக இருக்கும் நாட்டில் ராணுவம் புன்னகையுடன் நுழைகிறது


அப்படித்தான் இருக்கிறது
பத்திரிக்கையாளர்கள் 
அமைதியாக 
இருக்கும்போது 
நாடு 
தன் நிர்வாணத்தை 
அமைதி நிரம்பிய 
எள்ளலுடன் ஒருமுறை கவனித்துக்கொள்கிறது

உண்மையில்
பத்திரிக்கையாளர்கள்
நாட்டின்
குடிமக்களுக்கு
உள்ளது உள்ளபடி 
மிக நேர்த்தியாக இல்லாவிடினும்
அசிங்கமாகவாவது 
குடிமக்களுக்குக் காட்டிக்கொடுக்கவேண்டும்
மாறாய்
அவர்கள் விளம்பரம் செய்கிறார்கள்

விளம்பரம்
மக்களை
அவர்கள்
விரும்பவியலாதவாறு
வெறுக்க வெறுக்க
வன்புணர்ச்சி செய்கிறது

காகிதங்களிலோ
பத்திரிக்கையாளர்கள்
வசந்தங்களை இசைத்துக்கொண்டிருக்கின்றனர்

அறியமுடியாத துப்பாக்கிகளின் வர்ணனையை
ஆட்சியாளர்கள்
செய்திகளில் ஒளிபரப்புகிறார்கள்

ஆண்களின் இறுகிய பிருஷ்டமும்
பெண்களின்
தேர்ந்தெடுக்கப்பட்ட
நளினமான சதையும்
குடிமக்களுக்குக் காட்டப்படுகையில்
அரசியல்வாதிகள்
அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றனர்

பத்திரிக்கையாளர்கள் மௌனமாக இருக்கும் நாடு உருப்படப்போவதில்லை

ஆம்
மக்கள்
நிர்வாணத்தை எப்பொழுதும்
கொண்டாடிக் கொண்டிருக்கப்போவதில்லை

நிர்வாணம் என்பது அரசின் தத்துவார்த்தச் சொல்
அம்மணம்
இது 
மக்களின்
சொல்லாக இருக்கிறது

நிர்வாணமாக இருப்பதென்பது
அரசியல்வாதிகளுக்கு உகந்ததாக இருக்கையில்
அம்மணத்தை மக்கள் வெறுக்கிறார்கள்

குழந்தைகள் அம்மணத்தை கேலி செய்கிறது
நடிகைகளின் நிர்வாணங்கள்
நிர்வாணத்தில் நாகரீகம் செலுத்தப்படுகையில்
அம்மணத்தில் பசி தன் விகாரத்தைக் காண்பிக்கிறது

மக்கள்
அமைதியாய் இருக்கின்றனர்
சொல்லமுடியாத
வார்த்தைகளை
திறக்க முடியா உதடுகளால் கடித்து மென்றபடி
அம்மணக் குருதி 
கசியும் வரை

மக்கள்
எப்பொழுதும் இப்படியே இருக்கப்போவதில்லை
கசியும் குருதியில்
ஆட்சியாளர்களுக்கான வெடிகுண்டின்
கந்தகவாசனையை அறிந்து கொண்டிருக்கிறான் 
கவிஞன்

அவன் நாசி எப்பொழுதும் மக்களையே நோக்கியிருக்கவேண்டும்
இப்படியாகத்தான் கவிஞன் தன்னை உற்பத்தி செய்கிறான்
இறந்து விடாமல்

பத்திரிக்கையாளர்களுக்கு
தகவல்கள் இருக்கிறது
செய்திகள் இருக்கிறது

உண்மையில் அழும்
குமுறும்
நெஞ்சில் அடித்துக் கதறும்
பத்திரிக்கையாளனே நாட்டுக்குத் தேவை
பத்திரிக்கைகள் பொய் சொல்லுகையில்
பத்திரிக்கையாளன் தலை குனிகிறான்
வரலாறு மிகுந்த வன்மத்துடன் அவனை நகர்ந்து செல்கிறது

பத்திரிக்கைகளுக்கு தெரியாத பத்திரிக்கையாளன்
அல்லது கவிஞனுக்குத் தெரியும்

உண்மையில்
பசித்த மக்கள்
உணவை உற்பத்தி செய்வதை விட வெடிகுண்டுகளை
உற்பத்தி செய்யவே விரும்புவார்கள்
பசி 
வெடிகுண்டுகளின் புன்னகையைத் தயாரித்துவிடுகிறது

மக்கள்
புன்னகை செய்யும்பொழுது

அரசு மௌனமாகிறது.

வேட்டுவம் நூறு- நூல் விமர்சனம்- வசுமித்ர

    பாட்டுக்களின் தாய் , நமது விதை முழுவதின் தாய் , ஆரம்பத்தில் நம்மைப் பெற்றெடுத்தாள்.  அவள் எல்லா இன மனிதர்களின்,  எல்லாக் குலங்களின் தாய்...