Friday, October 4, 2013

ஒரு தேர்ந்த கதை சொல்லியான மிஷ்கினுக்கு முத்தங்களுடன்....


ஆபாசம் என்னும் வளர்ப்பு நாய்க் குட்டிக்கு குரைக்கத் தெரியாது.

ஓநாய்களை வளர்ப்பவனைப் பற்றிய குறிப்புகளை எழுதிக்கொண்டிருக்கிறான்
நாய்குட்டிகளை
எப்படி வளர்ப்பதெனத் தெரியாதவன்
குழந்தைகளைக் கண்காணிக்காதீர்கள்
பெரியவர்களே
நாம் எதிர்பாராத தருணத்தில்
வளர்ந்து
அவர்கள் நம்மை தண்டிக்கக்கூடும்

அமைதியை
மௌனமான ஆபாசமாகச் செய்தால்
அல்லது
செய்யும் பட்சத்தில்
ஓநாய்களும்
நாய்களும் உறுமுவதை நிறுத்திவிடுகின்றன

முத்தங்களை அதற்கேயுரிய உச்சரிப்போடு
ஓநாய்கள் ஒருபோதும் வழங்குவதில்லை
கடைவாய் கிழிய ஒரு முத்தம்
குருதி உடலில் பட்டுத் தெறிக்க வேண்டும்

ஓநாய்களை வளர்ப்புப் பிராணியாக்குவது
நாய்களை நடைபயிற்சிக்கு கூட்டிச்செல்வதைப்போல
நம் சின்னச்சிறு குழந்தைகளை
கொஞ்சுவது போல் அல்ல
கொஞ்சிய குழந்தைகளை
அவை கொன்று தின்னக்கூடும்
மனைவியை எச்சிலொழுக பார்க்க முடியும்

ஒநாய் வளர்ப்பு மிகுந்த கேள்விகளைத் தருவது
இவ்வளவு சிரமத்துக்கிடையிலும்
ஓநாய் வளர்ப்பவன் மௌனமாக இருக்கிறான்

ஓநாய்கள்
பேசும்
சில சமயம் நாம் அந்தரங்கமாக இருக்கும் போது
மென்குரலில் விசிலடிக்கும்
தவிர்க்கமுடியாமல்
நம் உடலில் ஊர்ந்து போகும் பெண்ணை
ஓநாயால் கண்டுபிடித்துவிடமுடியும்

ஓநாய்
பெண் ஓநாயின் வாசனை கண்டுவிட்டால்
வாலை ஆகாயத்திற்கு உயர்த்தும்
நாம் அப்போது சிறு சப்தமும் எழுப்பாது இருக்கவேண்டும்
சிறு வார்த்தைக் கசிவுகூட
பெண் ஓநாயின் சித்திரத்தை அழித்துவிடக்கூடும்
நாம் பெண் ஓநாயாக மாற
வளர்ப்பு ஓநாய்க்கு சம்மதிக்கக்கூடாது

ஓநாய்கள் பொதுவாக
நல்லவைகள்
ஆனால் வீட்டு நாய்களைப் போலல்ல
இட்டதை உண்டு
சொன்ன இடத்தில் மலங்கழிக்க
ஓநாய் வீட்டுப் பிராணியல்ல

நகங்களை ஊன்றி நிற்கையில்
நாம் கற்கால மனிதனாய் மாறும் சந்தர்ப்பங்களை
ஓநாய் நமக்கு
வழங்கிவிடும் சாத்தியங்கள் உண்டு

எல்லா ஒநாய்களும் திட்டமிடுபவை அல்ல
சில
அல்லது தவிர்க்கமுடியாத கணங்களில்
திட்டமிடும்
ஓநாய்கள் உண்டு

ஒநாய்க்கு
நிச்சயமாகத் தெரியாது தான் தொடங்கியதிலிருந்து
அம்மணமாகத்தான் இருக்கிறோம் என்று

இறுதியாக
ஓநாய்க்கு
கர்த்தரையோ
ஏவாளையோ
மரத்தையோ
அது தரும் ஆப்பிள்க்கனியையோ முற்றிலும்
சர்வ நிச்சயமாகத் தெரியாது
அறிவு என்ற ஒன்றை வளர்ப்பாளன் புகுத்தும் போது
ஓநாய்கள் மௌனம் காக்கும்
வளர்ப்பாளன் வெற்றிபெறும்போது அவனருகே வாலாட்டி நிற்பது
ஓநாயல்ல
வெற்று நாய்
வெறும்நாய்
வளர்ப்புநாய்

வளர்ப்பாளன் அம்மணமாக இருக்கும்போது
வெறுமனே குரைக்க மட்டுமே செய்யும்
நாய்.
அம்மணத்தை வளர்ப்பாளன் பருகும்போது
வெறுமனே பார்வையாளனாய் இருக்கும்
நாய்

ஓநாய்களுக்கு பார்க்கும் தன்மைகள் கிடையாது
திட்டங்கள்
பின்
முன்னங்காலை பூமியதிர ஓங்கி ஒரு ஊன்று ஊன்றி
ஒரே பாய்ச்சல்
ஓநாயை
நீங்கள் கடைவாயில் வழியும் குருதியோடு காணலாம்

ஆடாத
வளர்ப்பாளனுக்கு ஆட்டாத
சொன்னால் ஆட்டப்படாத
கட்டளைகளால் ஆட்டுவிக்கமுடியாத
வால்கள் எல்லாம்
ஓநாய்களுக்குப் பின்னால் இருக்கும்

ஓநாய்.

(உங்களுக்கும் உங்கள் தன்னம்பிக்கைக்கும் என்னால் வழங்க முடிந்த அன்பு இவ்வளவே...)


Thursday, October 3, 2013

குற்றமும் தண்டனையும் – ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.
பதுங்கி
பின்
முன்னேறும் ஒரு குற்றத்திற்கு
நீங்கள் பெயரிட்டு அடையாளம் வைக்கிறீர்கள்
அடையாளமென உங்கள் பெயர் முன்னே நகர்கிறது

நகங்களை மண்ணில் ஆழமாகப் பாய்ச்சி
ஒரு சதைத் துணுக்கை கவ்வுகையில்
பற்களில் வழிகிறது செவ்வண்ணத் துரோகம்
நிலையான
கனவுகளுக்காக
நாற்காலியொன்றை நகர்த்தும் கைகளில்
நீங்கள் திணிக்கும்
ஒற்றை ஆயுதம்
வாழ்வை அதன் பூரணத்துவத்துடன் நகர்த்துகிறது
இன்னும் நிலையாக
கொண்டு செல்லாத சொல்லாக
செய்ய முடியாத குற்றங்களாக.அந்த ஓநாய் நீங்கள்தான் மிஷ்கின், ஒநாயின் நிழல்தான் இளையராஜா. மனிதனின் அற்ப குணங்களை உள்ளுணர்ச்சியால் தள்ளி, எறியமுடியும் என்பதுடன் அதைக் கடந்தும் தீரவேண்டியிருக்கிறது என்கிற உங்களது நம்பிக்கை வியக்க வைக்கிறது. கடந்து போகும் நிகழ்வுகளில் நீங்கள் கண்டெடுத்த குற்றத்தையும் தானே அடையும் தண்டனையும், உங்களைத் தேர்வு செய்து கொள்ள உங்களை அற்புதமாக வழிநடத்தியிருக்கிறது. குற்றமும் தண்டனையும் நாவலை மிகக் கவனமாகப் படிக்க உங்களது இந்த படைப்பு எனக்கு உதவியிருக்கிறது. மிக்க நன்றி மிஷ்கின். உங்களுக்கு என் வணக்கம். முடிந்தால் திரைக்கதையை நாவல் வடிவமாக முன் வையுங்கள். இலக்கியத்திற்கும் அது தன் பங்களிப்பை வழங்கட்டும்.

இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...