Saturday, November 26, 2016

துப்பாக்கிச் சொல்.பிடலின் துப்பாக்கி
அஜிதாவின் துப்பாக்கி
பிரபாகரனின் துப்பாக்கி
தமிழ்
மலையாளம்
கியூபா
மக்கள்

கேரள காவல்துறைக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சம்பந்தமில்லை
புத்தனுக்கும் ராஜபக்‌ஷேவுக்கும் சம்பந்தமில்லை
அமெரிக்காவுக்கும் இயேசுவுக்கும் சம்பந்தமில்லை

நல்லது அப்படியே ஆகட்டும்
அதிகாரம் துப்பாக்கியால் வடிவமைக்கப்படும்போது
அதிகாரத்துக்கெதிராய் புல்லட்டுகளும் வடிவமைக்கப்படுகிறது

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டுத்தான் அரசு கொலை செய்கிறது
விமர்சனங்களை முன்வைத்துத்தான் நாம் தத்துவம் படிக்கிறோம்
குறுக்கும் மறுக்குமான வாதங்களில்
ஒரு குண்டுக்கு பலியாவதென்பது மரணத்தின் முகத்தில் காறி உமிழ்வதுதான்

அரசு என்று உச்சரிக்கும் போது
நாக்குழறுகிறது
அது எந்த வகையான அரசு என்ற விவாதத்தில்
எத்தனை சவப்பெட்டிகளுக்கு நாம் ஆணிகளைத் தயார் செய்யப் போகிறோம்
எண்ணிக்கைகள் இங்கு முக்கியம்

மாவோயிஸ்ட்கள் பலியாவதும்
போலிஸ்காரர்கள் வீரமரணம் அடைவதற்குப் பின்னுள்ள
அர்த்தங்கள் என்ன
என் அகராதியில்
பலி என்றது களப்பலியாகவும்
வீரமரணம் என்பது சம்பளத்துக்கு சாவதுமாகிறது


அத்தனை துப்பாக்கிகளுக்குள்ளும்
காண முடியாத குழந்தைகளும் மக்களும் இருக்கிறார்கள்
தோழர்களே உறங்குங்கள்
பாழாயப் போன போலிசாரின் துப்பாக்கிப் பின் வேறு என்னதான் இருக்கமுடியும்
துப்பாக்கியைப் பிடித்திருப்பவனுக்கு அரசு சம்பளம் தருகிறது
உங்களுக்கு ஒரு பிடி வாய்க்கரிசி
கேரளாவை ஆளும் கட்சிக்கு என் பலிச்சோறு.


Wednesday, November 16, 2016

மோதி பார்…..( dare to bang )எனது கருத்துச் சுதந்திரமுள்ள 
இந்த நாட்டைக் கைவிடுகிறேன்
கருத்துச் சுதந்திரமுள்ள ஒரு நாடு அப்பாவித்தனமானது
முட்டாள்த்தனமான ஒரு கருத்தை அறிவிப்பாகச் செய்வதில்
அது சர்வ தேசங்களோடு மோதி பார்க்கிறது


மோதி பார்க்காதே
எனது இந்த நாட்டை
எனது இந்த என்ற வார்த்தையோடு மோதி பார்க்கிறேன்
அசட்டுத்தனமாக இருக்கிறது

சில்லறைக் காசுகளுக்கு
மோதி பார்
சுதந்திரத்திற்கும்
மோதி பார்
உண்மையில் சில்லறை காசுகளுக்கு
மோதி பார்க்க வேண்டும் என்று சொல்லும் நாட்டில் வாழ்வதற்கு
கொடுத்துவைத்திருக்கவேண்டும்
அதா நீ
என நீங்கள் என்னைக் கேள்வி கேட்கக் கூடாது


என் நாடு
ஆதாரங்களுடைய நாடு
நான் அதற்கு ஆதாரம் வைத்திருக்கிறேன்
எல்லாவற்றுக்கும் தலைவன் அரசனே என மனு குறிப்பிடுகிறார்
மேலும் நில மகளின் காதலன் அவனென்றும் கூறுகிறார்
கல்வெட்டுக்களைத் தோண்டியெடுக்கும் போது
தேசவராதீப என்ற சொல்லால் குறிப்பிடப்படுவது
அவன்
நாட்டினால் சுயவரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்றும் ஆகிறது
வாழ்க சுயவதைகள்

ஆனால்
மோதி பார்க்க வேண்டும்
இத்தகைய நாட்டை

இத்தகைய மக்களை
நவத்துவாரங்கள் கொண்ட பிண்டங்களென 
நாளும் மோதியுணர்கிறான்
என நாம் பொருள்கொள்ளவேண்டும்

மோதி பார்க்க வேண்டும்
பார்க்க வேண்டும் மோதி

சில்லறைகளோடு யுத்தம் புரிந்து
எனது தாத்தாவும்
எனது குழந்தையும்
மரணத்தை மோதுவை
மோதி பார்க்க வேண்டும்
மரணத்தோடு மோதுவதற்கு
மல்யுத்தம் சிறந்த வழி
நாம் மல்லர்களாக மோதி பார்க்க வேண்டும்
மோதி பார்க்க வேண்டும்

இப்படி மோதி வாழும் ஒரு நாட்டில்
தந்தையும் தாத்தாவும்
தாயும் பாட்டியும்
பேரன்களும் பேத்திகளும் வரிசையில் நின்று உயிர் துறக்கலாம்
விதிக்கப்பட்டிருக்கிறார்கள்
மோதி வாழும் நாட்டில்
நாம் என்ன செய்ய முடியும்.

Wednesday, October 19, 2016

சி.பி.ஐ.(எம்) குறித்து மார்க்சிய தீர்க்க்க்க்க்க்கதரிசி அ.மார்க்ஸ்....
மேற்கு வங்க சி.பி.எம் குண்டர்கள் வன்புணர்ச்சி செய்ததை சி.பி.எம்.மின் மார்க்சிய தீர்க்கதரிசி! அ.மார்க்ஸ் அம்பலப்படுத்தியதை முன்பு பார்த்தோம். இப்பொழுது அவர்கள் செய்யும் 'பிற' வேலைகளை மார்க்சிய அறிஞராக! மாறி அம்பலப்படுத்துவதைப் பார்க்கலாம்.
“மேற்குவங்கத்தில் ஏதேனும் ஒரு காவல் நிலையம் அல்லது அரசு அலுவலகத்திற்கு சென்றால் அங்கே அந்த அதிகாரியை மட்டுமல்ல உள்ளூர் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். எந்த அரசு நலத்திட்டங்களையும் அவர்களே பொறுப்பேற்றுச் செயல்படுத்துவர். லஞ்சம், ஊழல்,கட்டப்பஞ்சாயத்து,வன்முறை போலிசுடன் சேர்ந்து எதிர்க் கட்சியினரைத் தாக்குதல் என நாம் கற்பனை செய்ய இயலாத அளவிற்குக் காடையர்களாக(‘ஹெர்மெட்’) அங்கு சி.பி.எம்.தொ(கு)ண்டர்கள் உலவுகின்றனர்."

"அவர்களது மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ.யில் இருந்தால்தான் படித்து முடித்தபின் வேலை வாங்கமுடியும். சிங்கூர்ப் பிரச்சினையின் போது மேற்குவங்க எஸ்.எஃப்.ஐ. தலைவர், “மக்களுக்கு இழப்பு இழப்பு என்கிறீர்களே, டாட்டாவுக்கு ஏற்படுள்ள இழப்பு பற்றி யாராவது கவலைப்படுகிறீர்களா?” எனக் கேட்டதை சுமித்சர்கார் இரண்டாண்டுகளுக்கு முன்னர் சென்னை எம்.ஐ.டி.எஸ் நிறுவனத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கூறியது இங்கு நினைவிற்குரியது."


"மேற்குவங்க அரசு மேற்கொண்டதாகச் சொல்லப்படும் நலத்திட்டங்கள் பெரும்பாலும் சி.பி.எம். தொண்டர்களையே சென்றடைந்தது. வெறும் 1500 ரூபாய் கட்சி ஊதியம் பெறும் முழுநேர ஊழியர்கள் வேறு வகைகளில் சம்பாதித்துச் சொகுசாக வாழ்ந்ததை சுதித் சர்க்கார்,சைபால் விஷ்ணு உட்படப் பலரும் குறிப்பிடுகின்றனர். கடும் வறுமை, சோறும் குடிநீரும்கூட இல்லாத சூழல்- இவற்றிற்கு மத்தியில் பவிசுடன் நிமிர்ந்து நிற்கும் பளபளப்பான கட்சி அலுவலங்களும் ஊழியர்களின் வீடுகளும் அந்தச் சூழலுக்குப் பொருந்தாத ஆபாசத்துடன் துருத்தி நின்றன."

"மக்களுக்கும் சி.பி.எம். ஊழியர்களுக்கும் இடைவெளி மிகுந்ததை மாவோயிஸ்டுகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். லால்கர் பகுதியில் அனுஷ்பாண்டே என்கிற சி.பி.எம்.ஊழியரின் வீடு சமீபத்தில் மக்கள் திரளால் தாக்கி நொறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சி.பி.எம்.கட்சி இதழான ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ இது குறித்த செய்தியைத்தான் வெளியிட முடிந்ததே தவிர, அந்த வீட்டின் படத்தை வெளியிடவில்லை.”"

“ இன்னொரு பக்கம் புத்ததேவ் பட்டாச்சார்யா டெல்லிக்கு காவடி எடுத்தார். படைகளை அனுப்ப வேண்டும் என்றார். கள்ளப் புன்னகையுடன் வேடிக்கை பார்த்து வந்த மன்மோகன் - சோனியா-கும்பல் இரு நிபந்தனைகளுடன் படைகளை அனுப்பியது. மாவோயிஸ்ட் கட்சியை மேற்கு வங்கத்தில் தடைசெய்ய வேண்டும் என்பது ஒன்று. மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை வெறுமனே மத்திய அரசின் இராணுவ நடவடிக்கையாக அன்றி மத்திய - மாநில அரசுகளின் இராணுவ போலிஸ் கூட்டு நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும் என்பது மற்றது.”


-       அ.மார்க்ஸ்.

மேலும் "பெண்கள், பள்ளிப் பிள்ளைகள், ஆசிரியர்கள் எல்லோரும் தாக்கப்பட்டனர். சாட்டை அடிக்கும் பாலியல் சீண்டல்களுக்கும் உள்ளாயினர்" என்பதை தீர்க்கதரிசனமாக உரைத்தவரை மார்க்சிய அறிஞர்!, மார்க்சிய தீர்க்கதரிசி என சிபிஎம், மற்றும் தமுஎகச சிராஜுதீன் சொல்லுவதை ஆட்சேபிக்கமுடியாது. கூடிய விரைவில் இதை SFI  ம் இதைச் சொல்லுமென ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

பொய்களுக்குத்தான் முழக்கங்கள் தேவை. உண்மை முனங்கினாலே போதும்

    0.உங்களப் பற்றிய அறிமுகம். மற்றும் படைப்புகள் ? ஊர்- போடிநாயக்கனூர். அம்மா வீரலட்சுமி ,  அம்மாச்சி செல்லம்மாள் இருவரும் கூலித்தொழிலாளிகள...