Sunday, February 8, 2015

கொஞ்சம் மனது வைய்யுங்கள் தோழர் ஃப்ராய்ட்!

இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த கவிதை.

நான் ஒரு நீண்ட துப்பாக்கியை கனவு கண்டேன்
நிச்சயமாக அது பாலியல் கனவு அல்ல மிஸ்டர் ஃப்ராய்ட்!
ராட்சத இயந்திரங்களால் குடைந்தெடுக்கப்பட்ட
மலைகளின் கொடுந்துளைகள் குறித்த கனவையும்கூட
என் மறையுறுப்போடு நீங்கள் தொடர்பு படுத்தக்கூடும்
தயவுசெய்து
உங்கள் கண்ணாடியை துடைத்துக் கொள்ளுங்கள் டாக்டர் ஃப்ராய்ட்!
என்னிடமிருப்பதிலேயே
பெரும்பிரச்சனைக்குரிய உறுப்பென்றால் அது
எனது இரைப்பைதான்
அரசு எங்களுக்கு பிரமாண்டக் கனவுகளை தந்திருக்கிறதுதான்
அதில் ஒரு துண்டைக்கூட உப்பிட்டு தின்ன இயலாது
தாழ்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்
உங்களால் புரிந்துகொள்ள இயலாது ஆய்வாளர் ஃப்ராய்ட்!
நாங்கள் வயிற்றால்கூட கனவு கண்டிருக்கிறோம்
நான் சாமான்யை
எனக்கு குழந்தைகள் இருக்கின்றன
உங்களிடம் சிறு உதவி வேண்டும் நண்பர் ஃப்ராய்ட்
ஓர் எளிய  நீதிக்காக 
சட்டத்திற்கு கேட்காதவாறு
ஐந்து தோட்டாக்களை நான்பயன்படுத்திவிட்டேன்
நீங்கள் மனதுவைத்தால்
தடயங்களேதுமின்றி
அதை ஒரு கனவாக மாற்றிவிடலாம்.
வெய்யில்

Monday, February 2, 2015

தாண்டவராயன் கதை - பா.வெங்கடேசன்.

தமிழ் புனைவு வெளியில் மொழியின் அர்த்தங்களை, அதன் குறுக்கு வெட்டுத்  தோற்றங்களை, கற்பனையின் யாதார்த்தத்தை, மொழியின் வாழ்நிலத்தில் சொற்களை விதைத்த நாவல் தாண்டவராயன் கதை என்பதே என் வாசக எண்ணம். இதை மீறி ஒரு கதை கூறலும் அதன் காத்திரமும் இன்று வரை தமிழ் புனைவில் சாத்தியமாகாத ஒன்று. அப்புனைவைக் கடக்க வேண்டுமெனில் அதுவும் நூலாசிரியனான பா. வெங்கடேசனாகவே இருக்க வேண்டும். ( இது உண்மையில் அவருக்கு அவராலேயே இடப்பட்ட சவாலாகத்தான் இருக்கவேண்டும்) இதை ஒரு வாசகனாக துணிந்து கூறுகிறேன். இலக்கியத்தை ஒரு துறையாகக் கொண்டு, புனைவை அதன் இன்னொரு கூறாகக் கொண்டு வாசித்தால் தமிழ் புனைவு வெளியில்  தாண்டவராயன் கதை பயணித்த தூரமும் நிகழ்த்திய பாய்ச்சலும் அசாத்தியமானது. அதன் மொழிச்செழுமை ஈடு செய்ய முடியாதது.

டிஸ்கவரிச் சேனல்களில் ஒளியாக உலாவும் மிருகத்தின் கனபரிமாணங்களை வார்த்தைப்படுத்தியும், பழம் பெரும் கதையாடல்களின் கனவை அத்தல் குத்தலாக வெட்டியும்,  பன்மொழி திரைப்படங்களின் சப் டைட்டில் வசனங்களைத் திருடியும்,  தங்களது வரிகளைக் மாற்றுவாக்கம் செய்து.. அதை தன் விரலால் எழுதிப் பார்த்ததினாலேயே.. தன்னை வியப்பதோடு மட்டுமில்லாது கண்டுபிடித்தேன் எனக் கூச்சலிட்டுக்கொண்டே, திருடிய வரிகளை, விளம்பரப்பட பாணியில் கத்தலும் கதறலுமாய் முன் வைத்தும், வார்த்தைகளுக்கு நிறமற்ற சாயத்தைப் பூசி, அதை தங்கள் காமாலைக் கண்களால் கண்டு களித்து, வெற்று அலங்காரம் ஊட்டி எழுதி வரும் எண்ணற்ற தமிழ் எழுத்தாளர்களுக்கு மத்தியில், விஞ்ஞானத்தின் ஒரு  கருவியான,  ஒரு புகைப்படக் கருவி, தன் வல்லமையால் தன்னை வைத்திருக்கும் ஒரு மனிதனை ஓவியனாய் மாற்றும் வித்தையிலிருந்து தொடங்கி,   ஆதாமும் ஏவாளும் தின்று முடித்த ஆப்பிளின் எச்சில் விதைகளிலிருந்து கிளர்ந்து எழும் சாப வனத்தின் வாயிலாக ஒரு கதை சொல்லி தனது நாவலைக் கட்டமைத்து,  மொழியின் எண்ணற்ற சாத்தியங்களை வழங்கியிருக்கிறான் பா. வெங்கடேசன்.

இலக்கியத்திற்கென வழங்கும் பரிசுகளில் ஒரு இறுதி முடிச்சு நோபல் பரிசுதானென்றால் அதைத் தாண்டவராயன் கதைக்கு வழங்கலாம்.

நேரம் இருப்பின், நாவல் மொழியின் வரைபடங்களை இன்னும் விரிவாக எழுதுவேன்.அம்பேத்கரும் அவரது தம்மமும் - முன்னுரையாகச் சில சொற்கள் - எஸ்.பாலச்சந்திரன்.

                                        இந்தியா முழுவதிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தலித் மக்களின் மீதான வன்முறைக...