Wednesday, February 24, 2016

சிறுமி நேயாஅப்பா
நான் உங்களைக் கொலை செய்யப் போகிறேன்
சரி மகளே
முத்தம் தா

இல்லையப்பா… குருதி கசிய
சரி மகளே
முத்தம் தா

அப்பா உங்கள் உடலைச் சிதைத்து
சரி மகளே
முத்தம் தா

அப்பா…
அப்பா…
நிஜமாகவே….

சரி மகளே 
முத்தம் தா

அப்பா
இந்த விளையாட்டுப் பிடிக்கவில்லை
வேறுவிளையாட்டுச் சொல்லித்தாருங்கள்

சரி மகளே
முத்தம் தா.


Sunday, February 14, 2016

ஒரு காதல் கவிதை எழுத முடியாத விரல்களை என்ன செய்யலாம்......


என்ன செய்யலாம்
கவிஞனை
ஆற்றாமையை
ஒப்பற்ற துரோகத்தை
துரோகத்தில் ஊறித்ததும்பும் புன்னகையை
கனவுகளின் வாய்க்காலை
நஞ்சூறி விரியும் வெண்சிறகை
எடைகூடிய சொற்களைச் சுமக்கும்
கனத்த இதயத்தை

கண்ணீரின் வெதுவெதுப்பை
இயலாமையின் சாறை
கைவிடப்பட்டவனின்
இறுதிச்சடங்கை

கவிஞன்
வானமும் வெளியும்
சூன்யமும் இல்லாத
அகதி
தலைச்சிறந்த அயோக்கியன்
அனாதை

வழியிழந்த
பேதமறியா விரல்களால்
நாளும் எழுதிச்செல்கிறான்

பறவைகளே நிதானமாயிருங்கள்
வயல்வெளிகளில்
சொற்களை விதைக்கிறார்கள்

ஒரு பிரிவை எழுத விரும்பாத விரல்களை என்ன செய்யலாம்
அறிவீர்கள்
நண்பர்களே பிரிவின் உப்பும்
தகிக்கும் காழ்ப்பும்
பிரிவின் எரிப்பும்
சொல்லின் முடிவும்
இறுகி
உடைக்க முடியா உன்மத்தமடைகிறது

புணர்ச்சியில் வெம்பிச்சரியும் உடல்கள் கவிஞனுடையதில்லை
களைப்பு அவன் வரிகளைத் தீண்டுவதில்லை
விடை பெற்ற முத்தங்களை
முத்தகங்களீந்த வரியுதடுகளை
கனைக்கும் குதிரைகளின் கால் குளம்புகளை
கவிஞன் சொற்களாக்குகிறான்

ஒரு கூர் நுனித் தனத்தை
முரசென அறிவிக்கும்
கவிஞனின் கரத்தை
எப்படித் துண்டிக்கலாம்
வார்த்தைகளை இழந்த மௌனத்தை
உதட்டில் பீய்ச்சியடிப்பவனை
குருதியை யாசகம் கேட்பவனை
மண்டையோடுகளை காய்ந்த உதடுகளால்
அரவணைத்து முத்தமிடுபவனை
கவிஞனை
என்ன செய்யலாம்
விரல்களை
கரத்தை
கவிஞனை
கவிதையை

அவன் விரும்பாத நிதானத்தை
நிதானத்தின் பதட்டத்தை
என்ன செய்யலாம்
என்ன செய்யலாம்
ஒரு கவிஞனின் பிணத்தின் முன் சிறுநீர் பெய்யலாம்
அல்லது
பதிலுக்கு அவனது கவிதையை வாசிக்கலாம்
கவிதையை முடிக்கும் போது
பெய்யும் சிறுநீரை நிறுத்திவிட்டு
கண்களில் வரவழைக்கலாம்
கனங்கூடிய உப்பை.


Wednesday, February 3, 2016

காமத்துறைவனின் கடுஞ்சொல் கேளீர்...நிச்சலனம் கிழித்தயிருள் மேவ
பித்துப்பிதிருடைத்துத் உடல்கதவைச் சிதறடித்துத்
திறக்கும் பெருந்தாழ்ப்பாள்
கொன்றழித்து புதிருறங்கும் மயிர் வனம்
சித்தம்தனை சிதறவிடும் பைத்தியக் கிளிக் கூச்சல்
கண்களைக்கீறி வளரும் பயிர்விளைச்சல்
முப்போகம் விளைவிக்கும் முதற்சொல்
விரல்களை துளையிடும் ஊதல்
ஊழிச்சொல்
விதைத்த செந்நெல்
நகவிழிசிவந்து
செங்குருதிபாயும் பெரியாழின் கூர் நரம்பு
மிரளும் கண்பாவை
சுவேதன ஒளிப்பரவல்

கைக்கும் வியர்வையில்
துவர்த்தல் வாடை
கிளர்ந்தெழும் காழ்த்தல்
திரளும் தித்தித்தல்
கறுகும் கார்த்தல்
இறுதியில் கசியும்
சதைத் துவர்த்தல்

சங்கதனைப் புதைக்கும் வெண்சுடலை
சூதனின் இறுதிச்சொல்
முட்டும் முடிவுறா தசாங்கம்
நித்திலக் குழியூரும் வெண்நஞ்சு
தாவரயோனிமீதேரும் பசலைக்கொடி
பச்சிளம் சிசு
பெருங்களிற்றுவட்டமேங்கும்
எரியின் வட்டம்
புகைச்சுருள் விசனம்
நாடோடி துயிலும் ஆலத்தின் வேர்
இறுகும் கண்ணின் கைப்பு
யாளியுறங்கும் நிசித்தாலாட்டு
பேய்களைக்கொன்று குலவையிடும்
உயிர்ச் சொல்
தாமிரபரணி
ததாகயோனி
சிற்றெழில் உறையும் வதனம்

சொல்
அஃது பெரும்பிழை
உயிர்
இதுவும் அது

நீலகேசி
தாம்பூலவல்லி
சக்கரவாளக்கோட்டம்

கடவுள் மறுத்த சொல்
காமம் பெருந்தீனி
தெறிக்கும் மூளைச் சிதறல்
நிணமொழுகும் கனா
நான்
நீ
தலைகீழ் யோனி
விழி அவி.

ஆகச்சிறந்த புணர்ச்சியை
நிறைவேற்ற வேண்டுமாயின்
காளியைத்தான் புணர வேண்டும்
அவளுக்குத்தான்
ஆயிரம்
கைகள்....

சம்போ மகா தேவா
சம போகம்
அஃதே

சம்போகம்.....


இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...