Saturday, December 19, 2015

அரசியல் நோக்கும் – உளவியல் நோக்கும்உளவியலில் வர்க்கப் பார்வை சாத்தியமா, சாத்தியம் என்றால் அதன் நோக்கம் எதன் பாற்பட்டது, எந்த வர்க்கத்திற்காக உளவியல் காரணப்படுத்தப்படுகிறது என்ற வினாக்களுடன் தொடங்கிய வாசிப்பில் ஒரு பகுதியும் அதன் சுட்டலும். சாதியம் பற்றி கூறுகையில், தலித்தியம் ஒரு நோய்க்குறி, பிராமணியம் எனும் நோய் போனால் தலித்தியம் மறையும் என்று தி.கு.ரவிச்சந்திரன் கூறுகிறார். அதோடு சாதியம் என்பது மேலோட்டமான சமூக உணர்வல்ல; உள்ளார்ந்த உணர்வெழுச்சி. முழுமையாக இதை ஒழிக்க சமூக மாற்றம் பயன் தராது. மன மாற்றமே பயந்தரும் என்பது என் நம்பிக்கை. அவ்வளவு எளிதில்  ‘சாதிய மனம்’ மாறாது காரணம் இது ஒரு மனநோய். உளச்சிக்கல். அறிவுப்புலங்களில் கூட சாதிய உணர்வு மேலோங்கி இருப்பதைப் பார்க்கும்போது, இந்து சமூகத்தில் அறிவை விட சாதிய உணர்வுக்கு வலிமை மிகுதி எனப் புலனாகிறது என்று முன்னுரையில் கூறுகிறார். இதோடு செட்டியார் பல்கலைக்கழகம், வன்னியர் பல்கலைக் கழகம் என்று அடையாளப்படுத்திக் காட்டும் ஆசிரியர் மேற்கண்ட விவாதத்தை தலித் இறையியல் எனும் கருத்தரங்கில் முன்வைத்ததாக கூறுகிறார்.

இதை ஒரு விவாதத்திற்குரிய கருத்தாக எடுத்துக்கொள்கிறேன். சாதி மனநோய் என்றால், ஒரு குறிப்பிட்ட சாதி கூட்டமாக இருக்கையில் அது கூட்டு மனநோயாக மாறுமா. மனநோயடைந்தவர்கள் எல்லைகளை தார்மீகங்களை தன் சாதிக்கான வரலாற்றை எழுதுவார்களா. கூட்டுச் சிந்தனை என்பது மனநோயாளார்களுக்கு எப்படி சாத்தியம் என்ற கேள்விகள் எனக்கு எழுகிறது. அதே போல் மனமாற்றம் என்றால் எந்த சாதியின் மனமாற்றம் என்றும் விரிவாக விவாதிக்க இந்நூல் நமக்கு வாய்ப்பளிக்கிறது.

தீண்டாமை நனவிலி நூலில் …

“ஜிம்மர்(zimmer) எனும் சமஸ்கிருதப் பேராசிரியர்,1930-ல்யூங்கிடம் ரமணமரிஷியைப் பார்க்கத் திருவண்ணாமை சென்று வரக் கூறினார்.1938ல் கல்கத்தா பல்கலைக் கழக 25 ஆமாண்டு விழா சிறப்பு அழைப்பாளாராக ஆங்கிலேய அரசு அழைக்க யூங் வந்தார். அதே காலகட்டத்தில் சென்னை வந்தார். ஆனால்,ரமணரை சந்திக்க விரும்பாமல் சென்று விட்டார் . காரணம் அச்சம். (Clarke1994:8)

 தாம் சார்ந்த கிருத்துவப் பிடியை விட்டுவிடுவோமோ என்கிற அச்சமாகவும் இருக்கலாம். ஆனால், யுங் வேறு காரணம் கூறுகிறார்: பிறர் மூலம் எனது சுயத்தை உணரவிரும்பவில்லை. பின்னர் ஓரிடத்தில் ரமணர் பற்றிக் கூறும்போது வெள்ளைத்தாளில் இருக்கும் வெள்ளைப் புள்ளி என்றார்(clerke1994:63).

உண்மையான ஆன்மீகம் பற்றிய கவித்துவமான வாசகம் இது. இந்தப் படிமத்தை சற்று நீங்கள் சிந்த்தித்துப் பாருங்கள். ஜீவாத்மா பரமாத்மா உறவு புலப்படும்.”………………

நூலே கரகம் முக்கோல் மனையே
ஆயுங் காலை அந்தணர்க்கு உரிய ( தொல் ;1570)

படையுங் கொடியும் குடையும் முரசும்
நடை நவில் புரவியும் களிறும் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவு கோள் செங்கோல் அரசர்க்கு உரிய
( தொல்:1571)

வணிகன் பெறுமே வாணிய வாழ்க்கை( தொல்;1571)

வேளாண் மாந்தருக்கு உழுதூண் அல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி( தொல் 1581)

அக்காலத்தில் இந்தியா முழுவதும் வர்ணப்பகுபாடு விரவி இருப்பதைக் காணமுடிகிறது. ஓதும் பிராமணனுக்கு வாய் முக்கியம். அதே போல் போரிடும் சத்திரியனுக்கு தோள் வலிமையும்  வைசியனுக்கு அமர வேண்டிய தொடையும் சூத்திரனுக்கு உழைக்கக் கால்களும் முக்கியம் அதனால்தான் பிரம்மாவின் ( புருஷா) வாய் தோள் தொடை கால் வழி முறையே பிராமணன், வைசியன், சூத்திரன் தோன்றுவதாக  இயைபுபடுத்தப்படுகின்றனர்.”  தி.கு.ரவிச்சந்திரன்.

இந்நூல் உலக அளவில் நிலவிய –நிலவும் தீண்டாமைக்கும் இந்திய சமூகத்தில் நீடித்து வரும் தீண்டாமைக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்குகிறது என்ற பதிப்பகக் குறிப்புடன் வந்திருக்கிறது.  இந்திய சமூகத்தின் உளவியலில் பதிந்துள்ள தீண்டாமை, சாதியப் பாகுபாடு கருத்துக்களை சிக்மண்ட் பிராய்ட், லக்கான், யூங் போன்ற உளவியல் அறிஞர்களின் கருத்துக்களைக் கொண்டு நூலாசியர் தி.கு.ரவிச்சந்திரன் விளக்கியதற்கும், அரசியல் பொருளாதார அடிப்படையில் மதத்தைக் கண்ணுறும் பால கோபாலுக்கும், யேன் மிர்தாலுக்கும், சமுக அரசியலை கலாச்சார ரீதியாக மீள் கண்டுபிடிப்பாக முன் வைத்து விவாதிக்கும்  டி.ஆர் நாகராஜுக்கும் உள்ள பாரதூரமான வித்தியாசங்கள், ஆய்வின் நோக்கங்கள்,  நோக்கத்திற்கான காரணங்களில் உள்ள வேறுபாடுகள்  ஆச்சரியத்தை உண்டு பண்ணுகின்றன,

நான் படித்த வரையில் பெரும்பகுதி உளவியல் கூறுகள்,  உளவியலாளர்களின் அனுமாங்களாகவே எஞ்சுகின்றன. உதாரணத்திற்கு

“யூங் தமது உளமருத்துவத்தின் போது நோயாளியின் ஜாதகம் பார்த்து மருத்துவம் செய்து வந்தார். அவரின் மகள் ஒருத்தி சோதிடர் என்பது கூடுதல் செய்தி என ஆசிரியர் குறிப்பிடுகிறார். மேலும் பிரய்டும் லக்கானும் பொருள் முதல்வாதிகளாவர். அவர்களைப் போல் யூங் ஒருபக்கம் பொருள் முதல்வாதியாக இருந்தாலும் ( அறிவியல் முறை மனதை ஏற்பதால்) இன்னொரு பக்கம் கருத்து முதல்வாதியாக( ஆன்மா கருத்தாக்கத்தை ஏற்பதால்) விளங்குகிறார். இது இந்தியத் தத்துவத்தின் தாக்கம் அவர் மீது ஏற்பட்டதன் விளைவு, எனவே இந்திய தத்துவ ஞானத்தைப் புரிந்து கொள்ளாமல் யூங்கியத்தை தீண்டாமையில் பொருத்துப் பார்க்கவோ அல்லது புரிந்து கொள்ளவோ முடியாதென்கிறார்.” -

உளவியலிலும் அது எந்த வர்க்கத்துக்கான உளவியல் என்ற கேள்விகளுடன் தொடங்க வேண்டும் என்பதே என் விருப்பமாயிருக்கிறது. சோதிடம், விதி, ஊழ் கோட்பாடுகள் நடைமுறையில் இன்றும் எண்ணற்றோருக்கு உளவியலாய்த்தான் பயன்படுகிறது எனச் சொல்வேன். அவர்களுக்குத் தேவையானதை இம்மூன்றும் சுட்டுகிறது. கண்ணுக்கெதிரே தான் அண்ணாந்து பார்க்கும் அளவுக்குக் கட்டிடத்தைக் கட்டும் ஒரு தொழிலாளி, சம்பளத்திற்காக உழைத்து அந்த சம்பளத்தை தன்னைப் போல் ஒரு மனிதன் தருவதையும், தான் சேற்றில் நின்றுகொண்டிருக்கும் போது, சம்பளம் தந்த மனிதன் உயர்ந்த காரில் செல்லும் போதும் அவன் மனதில் தோன்றுவது என்ன. அவர் பிறப்பிற்கு, அவரது பிறந்த நேரம்தான் காரணம், அல்லது தன் விதி என்கிற மனநிலையா. இதுதான் அந்த சாமான்யனின் போராட்டக் குணத்தை  தடுக்கிறதா. இதில் சாதகமான அம்சமாக, எல்லாம் என் விதி, நான் என்ன செய்யமுடியும் என்ற வார்த்தைகள் அவனை வன்முறையைக் கைக்கொள்ளாமல் தடுக்கிறதா. இதற்குள் எத்தனை உளவியல் அடுக்குகள் ஒளிந்திருக்கின்றன. ஒருவேளை பிரச்சினைகளுக்கான காரண காரியங்களை மறைத்து, அனுகூலங்களை அனுபவிப்போர் சாமான்ய மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கான ஏற்பாடுகளா இக்கோட்பாடுகள். விவாதிக்க எண்ணற்ற விசயங்கள் இருக்கிறது.


பின்நவீனத்துவவாதிகள் பின்நவீனத்துவத்தை வைத்து சாதியை, மதத்தை, கூறுபோடவில்லை. பின்நவீனத்துவம் ஒடுக்கப்பட்ட சாதிக்கு ஆதரவான கருத்தாக முன்வைக்கப்பட்டதோடு, கலகம், விளிம்பு என்ற சொற்களால் முன்னெடுக்கப்பட்டது. பின்நவீனத்துவம் தவிர அனைத்துமே ( குறிப்பாக மார்க்சியத்தை ) பெருங்கதையாடல் என்று சொன்னவர்களுக்கு, பின்நவீனத்துவமும், அதிகம் பேரைப் பற்றினால், அமைப்பானால், அதுவும் பெருங்கதையாடலாகும் என்ற சாத்தியத்தை விளக்கவில்லை. ஆனால் தி.கு ரவிச்சந்திரன் நூலில் நான் மதிக்கும் அம்சமாக உளவியலை முன் வைத்து,  சாதியை, சாதி சார் சமூகத்தைக் கூறு போட்டுப் பார்ப்பத்தைத்தான் கூறுவேன். எந்த ஒரு தத்துவமும் தாம் சார்ந்த நிலத்தில் என்ன வித விளைச்சலைத் தரும் என்று அறிந்து ஆய்வுசெய்பவர்களே மாற்றத்திற்கான சரியான விதைகளைத் தூவுகிறவர்கள் என்று நான் நம்புகிறேன்.

அதே சமயம் இந்து தருமத்தை பாலகோபல் விளக்கும் முகமாக
“ஆதிகாலத்தில் மனிதனுக்கு எத்தனையோ மூட நம்பிக்கைகள் இருந்தன. நம்பில் உயிர் இருப்பதைப் போலவே நதிகளில் மரங்களில் காற்றில் அசையும் அனைத்து இயற்கையிலும் உயிர்கள் இருக்கும் என நினைத்தான். கங்கதை தாய், அக்கினி பகவான், இதர கடவுளர்கள் இவ்வாறு பிறந்தவர்களே.”

இப்படிக் கூறியதுமே, இயற்கையை வணங்கியவர்கள் இந்தியர்கள், தமிழர்கள். என்று வாஞ்சையுடன் பேசி அது இந்து மதமே இயற்கையைத் தெய்வமாக் கொண்டது என்ற வியாக்கியானங்கள் வரும் என்று எண்ணியே, அடுத்த வரியில் பாலகோபால் –

அப்போதைக்கு மதம் இருக்க வில்லை. அறியாமையில் பிறந்த மூட நம்பிக்கைகள் மட்டுமே இருந்தன.. மூடநம்பிக்கைகள் தாமக்வே சுரண்டலுக்கு சாதனாமகப் பயன்படப் போவதில்லை. உதாரணமாக ஆதிவாசிகளில் எத்தனையோ சில்லறைக் கடவுள்களின் பால் நம்பிக்கைகள் இருக்கும். ஆனால், ஆதிவாசிகள் சமூகத்தில் சுரண்டலுக்கு இடமில்லை. இந்த சிறுதெய்வங்களை ஒரே ஒரு படைப்பு கர்த்தாவிற்கு(பரபிரம்மா, யெஹோவா, அல்லா) உட்படுத்தி, பாவ புண்ணியங்கள் சொர்க்க நரகங்கள், கர்ம மறுபிறவிகள்  போன்ற சிந்தாந்தங்களை இணைத்து ஒரு உலகக் கண்ணோடத்தை வடிவமைக்கும் போதுதான் ‘மதம்’ பிறக்கிறது. மூட நம்பிக்கைகள் ஆதிகாலத்திலிருந்தே இருக்கும். ஆனால், மதம் வர்க்க சமுதாயத்தில் மட்டுமே தோன்றுகிறது. நிலப்பிரபுத்துவ அமைப்பில் அதன் பண்பு முற்றுமான முழுமையையும், தெளிவையும் அடைகிறது. தோற்றத்தில் வெவ்வேறான மதங்களில் எத்தனையோ வேற்றுமைகள் இருக்கும். பௌத்தம், இஸ்லாம் போன்ற மதங்களில் தோற்றத்தில் சற்று முற்போக்கு பண்பைக் காணமுடியும். ஆனால் காலப்போக்கில் அவனை அனைத்தும் அவற்றின் பண்பை தமது வரலாற்றுப் பாத்திரமான சுரண்டல் கருத்தியலுக்கு ஏற்ற வகையில் மாற்றிக்கொள்ளும்.
என விரிக்கிறார்.

பாலகோபாலின் நூல், அரசியலின் உளவியலை வர்க்க நோக்கில் அவிழ்த்துக்காட்டுகிறது.

எந்த அரசுக்கானாலும் ஒரு கருத்தியல் தேவை. அரசுக்கு கருத்தியலே தேவையற்றதாகும் நாளில் உண்மையில் அரசே தேவையற்றதாகிவிடும். மிகுந்த முற்போக்கான பண்புகொண்ட அரசு விஞ்ஞான சித்தாதங்களை யதார்த்தமான லட்சியங்களை தனது கருத்தியலாக தேர்வு செய்யும். ஆனால் சுரண்டல் அமைப்புக்களின் கருத்தியலில் மயக்கமே பிரதானமான அம்சமாக இருப்பதைத் தவிர்க்க முடியாது.அநியாயமான அரசை நிலைநிறுத்த மயக்கமான சித்தாந்தம் தேவை. அந்த சித்தாந்தத்தின் பால் மக்களிடையே விசுவாசத்தை ஏற்படுத்துவது தேவை. அமைப்பு எவ்வளவு  அந்நியமானதாக இருக்குமோ அந்தளவு வலுவான மயக்கம் தேவையாகிறது. காந்தியிசம் ஷோஷலிசம் மயக்கும் கருத்தியலாக பணியாற்றமுடியும். 40 ஆண்டுகளாக நமது நாட்டில் பணியாற்றிக்கொண்டிருக்கின்றன. ஆனால் , இவை மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றிய கருத்துக்களாக இல்லை. ஆதலால், இவற்றைக் கொள்கையாக அறிவித்த அமைப்பு எதாவதொரு மட்டத்திற்கு  அகிம்சையையும், சமரசத்தையும் சமத்துவத்தையும் நடைமுறைப்படுத்தாமல் தவிர்க்கமுடியாது. ஆகையால் சமூக நெருக்கடி அதிகரித்து நிலைமை கைமீறினால் இவற்றைக் கைவிட்டு மதத்தை நாடவேண்டி வரும். அந்தப் பரிணாமத்தை இன்று நாம் கண்முன் உணர்கிறோம்’

சிறுகுறிப்பாக;
தி.கு.ரவிச்சந்திரன் பௌத்தம் அனாத்மா வாதம் என்பதற்கு  ‘ஆன்மா இல்லை’ எனும் பொருளில் அல்ல. ஆன்மா அழிவில்லாதது என்று கூறி அதை நிரந்தரமாக்கியத்தைத்தான் புத்தர் மறுத்தார். ஆன்மாவுக்கும் அழிவுண்டு. அப்படிப்பட்ட பண்பு ஆன்மாவுக்கு இருந்தால் மட்டுமே முக்தி சாத்தியம் எனும் பொருளில் அனாத்மாவாதத்தை புத்தர் முன்வைத்தார். சட்டோ பாத்தியாயா, லஷ்மணன் ஆகியோர் இதையே உணர்த்துகின்றனர் என்று கூறியுள்ளார். ஆனால் சட்டோபாத்யாயாவின் நூல், ஆசிரியரின் நோக்கீடுகள் நூற் பட்டியலில் இல்லை.

ஆசிரியர் கி.லஷ்மணன் அவர்களின் நூலாகிய இந்திய தத்துவ ஞான நூலில்
……..இந்திய தத்துவ ஆராய்ச்சியில் ஏற்பட்ட விரிவனைத்தையும் ஒருவிதத்தில் நான்கு விசயங்களுள் அடக்கலாம். அவ துக்கம், துக்க நிவாரணம், துக்க உற்பத்தி, துக்க நிவாரண மார்க்கம் என்பனவாகும். கூர்ந்து நோக்கினால் பகவத் கீதையிலே கூறப்படும் முக்கிய விஷயங்களும் இந்த நான்கனுள்ளும் அடங்குவது புலனாகும். இந்த நான்கையும் பற்றியே பௌத்த மதமும் பேசுகின்றது. ஆனால் பகவத் கிதை காலத்தால் புத்தருக்கு முற்பட்டது என்பதை இங்கு குறிப்பிடல் வேண்டும் என துணிந்து கூறுகிறார்.

இது பிழையாய் இருக்கவே வாய்ப்பதிகம். இதே போல் நேருவும் குறிப்பிடுகிறார். ஆனால் டி டி கோசாம்பி பகவத் கீதையின் 55-72 வரையிலான சுலோகங்கள் பௌத்தக் கோட்பாடுகள் பற்றிய அறிதலின்றி இயற்றப்பட்டிருக்கமுடியாது என்று கூறுவதோடு 72-மற்றும் அந்தாம் அத்தியாயம் 25 கூறும் பிரும்ம நிவாரணம் என்பது பௌத்தம் கூறிய கரும வினையிலிருந்து விடுபடல் என்பதே.மேலும் கீதை கி.பி.300 ஆம் ஆண்டுக்கு பிற்பட்டது என்கிறார்.

அதே போல் ‘பௌத்த துறவிகளின் சுதந்திரம் என்பது இனக்குழுச் சமுகத்தில் இருந்த சுதந்திர மனிதனின் சுதந்திரந்தான் என்று கூறும் யேன் மிர்தால், வாழ்க்கையே துயரமானது என்னும் மாபெரும் உண்மை அனைவரையும் உள்ளடக்கிய உண்மையல்ல என்பதில்தான் இதன்( பௌத்தத்தின்) தோல்விக்கான காரணம் ’ எனக் கூறுவதையும் ஆராயலாம்.

இத்தோடு பிரபஞ்ச அன்பு எனும் கருத்தாக்கம் குறித்து,
“எழுபது வயதான மிக அபூர்வமான  பெண்மணி ஒருவர் என் அண்டை வீட்டில் குடியிருந்தார். நடைபாதையில் எறும்புகளுக்காகத் தினமும் சக்கரை உணவாக வைத்துக் கொண்டிருப்பார்.அவர் அவ்வளவு அன்பு பாராட்டக் கூடியவர். நான் அவரைப்பற்றி ஒரு கட்டுரை கூட எழுதியுள்ளேன். ஆனாலும் தீண்டப்படாதவரை அவர் வீட்டின் வெளிமுற்றத்தில் கூட அனுமதிக்கமாட்டார். அதுவும் அவர் பார்ப்பன பெண்மணியாக இருந்தததால், தீண்டப்படாதவர் குடிக்கத் தண்ணீர் தரமாட்டார். ஒருமுறை நான் அவரிடம்’ “நீங்கள் எறும்புகளிடத்தில் இவ்வளவு அன்பு காட்டுகிறீர்கள்.ஆனால், தீண்டப்படாதவர்கள் மீது வெளிப்படையாக கொடூரமாக நடந்து கொள்ளவில்லை என்றாலும், எப்படி இத்தகைய இடைவெளீயை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். “ என்ன நடந்தாலும் மனிதன் பிழைத்துக்கொள்வார்கள். ஆனால் எறும்புகள்?” என்பதுதான் அவருடைய பதிலாக இருந்தது.”

பிரபஞ்ச அன்பு பற்றிய இந்தக் கருத்தாக்கம் குறித்து டி.ஆர்.நாகராஜ் கூறும் விசயங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். இந்தப் பதிலைச் சொல்லும் போது அவர் தனது இந்து மதம் கூறிய அவருக்கு புகட்டிய அவருக்கு தான் செய்வது குற்றமில்லை என்ற அளவுக்கு மனநிம்மதியைத் தரும் பதிலாக அப்பெண்மணிக்கு இருக்கிறது என்பதை உணரவேண்டும். மட்டுமல்லாது
இந்த பிரபஞ்ச அன்பு என்ற கருத்தமைவு, மனிதர்களைப் பொருத்தமட்டில் மிகவும் செய்நேர்த்தியுடன் ஒரு வகையான அக்கறையற்ற தன்மையாக மாறியுள்ளது. என்றும் கூறுகிறார்.
மதம் தரும் அன்பு எத்தகையது என்பதன் உளவியலையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

உதவிய நூல்கள்
கருத்தாயுதம்- பாலகோபால்
தமிழில்.க.மாதவ்.
தீண்டாமை நனவிலி- சாதிய உளப்பகுப்பாய்வு- தி.கு.ரவிச்சந்திரன்.
இந்தியத் தத்துவ ஞானம்- கி.லஷ்மணன்.
இந்திய வரலாற்றில் பகவத் கீதை- பிரேம்நாத் பசாஸ்
தமிழில்;கே சுப்பிரமணியன்.
தீப்பற்றிய பாதங்கள்- டி.ஆர். நாகராஜ்
தமிழில்; ராமாநுஜம்.
இந்தியா காலத்தை எதிர்நோக்கி- யேன்மிர்தால்
தமிழில்; வெ.கோவிந்தசாமி.

ஒவியம்;
Babu at Rene Block
Gallery, New York, 1974
By Atul Dodiya
Watercolour on paper
1998

இவ்வோவியம் எண்ணற்ற அரசியல் பார்வைகளை எனக்கு வழங்கியது.வேட்டுவம் நூறு- நூல் விமர்சனம்- வசுமித்ர

    பாட்டுக்களின் தாய் , நமது விதை முழுவதின் தாய் , ஆரம்பத்தில் நம்மைப் பெற்றெடுத்தாள்.  அவள் எல்லா இன மனிதர்களின்,  எல்லாக் குலங்களின் தாய்...