Showing posts with label உயிர்மை.மனுஷ்யபுத்திரன். Show all posts
Showing posts with label உயிர்மை.மனுஷ்யபுத்திரன். Show all posts

Thursday, September 6, 2012

காலச்சுவட்டின் இடது கால் பெருவிரலை மனுஷ்ய புத்திரன் என்பவர் கடித்தார் ………..



 சின்ன விசயங்களின் கடவுள் என்ற நூலை முன்வைத்து....



2000 வருட( இந்தக் காலக்கணக்கில் எனக்கு சந்தேகம் என்றும் உள்ளது) தமிழ் வரலாற்றில் ஒரு நூலை மொழிபெயர்ப்பதில் அடித்துப் பிடித்துக்கொண்டு ஆவலாதி பொங்க பதிப்பகங்கள் போட்டி போட்டு வெளியிடுவது உண்மையிலேயே மிகுந்த வரவேற்புக்குரியது. நான் இதில் மிகுந்த உவகையடைகிறேன். எழுத்தாளர்களின் பயன் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருவது குறித்து ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், இப்புத்தக அடிதடி குறித்த காலச்சுவடு கண்ணன் அளித்த விளக்கங்கள் மிகுந்த உத்வேகத்தை எனக்களித்தது.

காரணம் எனது சுயநலமே.  நான் எழுதிக்கொண்டிருக்கும் நாவலா கவிதையா கதையா என வகைப்படுத்த முடியாத தோற்றத்தில் வரும் எனது வார்த்தைகளைத் தொகுத்து வெளியிட இதே போல் பதிப்பாளர்கள் சண்டையிட்டால் நான் ஜென்ம சாப்ல்யம் அடைவேன். அவர்கள் நூலை வெளியிடக்கூடத் தேவையில்லை. சண்டையிட்டு அதை பதிவிட்டால் போதும். நிம்மதி.

கவிஞர் சுகுமாரனுக்கு மனுஷ்ய புத்திரன் என்பவர் முகப்புத்தக வாயிலாக  ஒரு கூற்றை பதிவிட்டிருப்பதாக காலச்சுவடு கண்ணன் இம்மாத காலச்சுவட்டில் ( செப் 2012) எழுதியிருக்கிறார். வாசகம் கீழ்க்கண்டவாறு.. “ கவிஞர்கள் எப்போதும் எதற்காகவும் உண்மையை விட்டுக்கொடுக்காதவர்கள் இல்லையா ?” என்று மனுஷ்ய புத்திரன் என்பவர் கேட்டிருக்கிறார்.

இவர் உயிர்மை என்ற பத்திரிக்கையும் அதன் பின் உயிர்மை பதிப்பகமும் தொடங்கியிருக்கிறார். சமீப வருடங்களாக தனது சொத்தான உயிர்மை பத்திரிக்கையில் இவர் கவிதைகள் எழுதிவருவதாகச் சொல்லுவதோடு அதை தனது பத்திரிக்கையிலேயே மனத்துணிவோடு வெளியிட்டு வருகிறார். அதோடுமட்டுமில்லாது அதைத் தொகுப்பாக வெளியிடும் அவரது தன்னப்பிக்கை மன உறுதி என்னை மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தும் ஒன்று.

இங்கு இப்பொழுது எனக்கு கேள்வியாக எழுவது ஒன்றே ஒன்றுதான். கவிஞர் சுகுமாரன் கவிஞர்தான். அதனால் உண்மையைப் பேச வேண்டும். ஆம கவிஞர்கள் எப்போதும் எதற்காகவும் உண்மையை விட்டுக்கொடுக்காதவர்களே. இந்த மனுஷ்யபுத்திரன் என்பவரும் ஒரு காலத்தில் கவிஞராக அறிமுகமானவரே. அதனால் எதற்காகவும் உண்மையை விட்டுக்கொடுக்காமல் தனது பதிப்பகத்தில் எந்தெந்தக் கவிஞர்களிடம் காசு வாங்கிக்கொண்டு புத்தகம் போட்டேன் எனச் சொன்னால் ஒரு வாசகனாக மகிழ்வேன்….

இந்தக் காசுக்கு 300 காப்பிகள் போடுவேன் இந்தக் காசுக்கு 500 காப்பிகள் போடுவேன் அதோடு புத்தகத்தை எழுதியவரே இத்தனை காப்பிகள் வாங்கிச் செல்லவேண்டும் என்கிற  ஷரத்தையும் இணைத்தால் பெரு மகிழ்வு கொள்வேன். ஏனெனில் இங்கு கவிப்பட்டாளங்கள் தங்கள் துவக்குகளை தூக்கிக் கொண்டு சுஜாதா புத்தகம் போட்டாங்கள்ல அந்தப் பதிப்பகத்துல என் புக்கு வந்திருக்கு, ஜெயமோகன் புத்தகம் போட்டாங்கள்ல அந்தப் பதிப்பகத்துல என் கவிதபுக்கு வந்துருக்கு நானும் கவிஞராக்கும் என தோள் உயர்த்தி, மூக்கு விடைத்து  பிற எழுத்தாளர்களின் தோளில் ஏறி பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். இதில் சம்பந்தப்பட்ட கவிஞர்களைப் பார்த்து, மதிப்பிற்குறிய கவிப்பெருந்தகைகளே அவர்கள் எழுதினார்கள் புத்தகம் போட்டார்கள். நீங்கள் என்ன செய்தீர்கள் என்ற கேள்வியைக் கேட்டால் சம்பந்தப்பட்ட புத்தகம் போட்ட கவிஞர்கள் செவியில் ஏராளாமான ஊமத்தம் பூக்கள் மலர்வதோடு அதை வாசகக் காதுகளிலும் சுற்றிவிடுகிறார்கள்.

புத்தகம் போட்டு அதை கழுதைப் பொதியெனச் சுமந்து நண்பர்களுக்கு இலவசமாய் வழங்கும் அவர்களது   வள்ளல் குணம் வியக்கத்தக்கது.  இது  எந்த விதத்திலும் அவர்களது தயாள குணத்தை பாதிக்கவில்லை என்பதையும் இங்கு பெருமையோடு நினைவுபடுத்துகிறேன்.

காசு கொடுத்தால் அட்டை முதல் அட்டை வரை தரமான புத்தகங்களை அச்சிட்டுத் தருகிறோம் என்ற விளம்பரத்தில் ஒரு துணை நிறுவனத்தையும் இந்த மனுஷ்யபுத்திரன் என்பவர் நடத்திவருகிறார். அதில் புத்தகங்கள் வெளிவந்திருந்தால் சம்பந்தப்பட்ட   கவிஞருக்கு வார்த்தைகளைவிட வண்ணத்தில், அட்டைப்பட ஓவியங்களில், அதன் செய் நேர்த்திகளில் எவ்வளவு தேர்வு…என்னே ரசனை  என விதந்தோதலாம். ஆனால் உயிர்மையில் புத்தகம் போட்டு,  கொடுத்த காசுக்காக பின்னட்டையில் நாலுவரிகளைக் கூவுவதை என்ன வென்று சொல்வது.

சிறுகுறிப்பு;

காலச்சுவடு காசு வாங்கிக்கொண்டு புத்தகம் போட்டாதாக ஒரு தகவல் கூட வாசகானான என் காதுகளை எட்டவில்லை… இருந்தால் உரையாடலாம்…ஏனெனில்  கவிஞர்கள் எப்போதும் எதற்காகவும் உண்மையை விட்டுக்கொடுக்காதவர்கள் இல்லையா ?” வாழ்க வளமுடன்( இதை பிரபலமாக்கியது வேதத்திரி மகரிஷி)


பெருங்குறிப்பு; இதை மனுஷ்ய புத்திரன் என்பவர்தான் சொல்லவேண்டும் என்பதில்லை. சம்பந்தப்பட்ட புத்தகம் போட்ட கவிஞர்களே சொல்லலாம். ஏனெனில் கவிஞர்கள் எப்போதும் எதற்காகவும் உண்மையை விட்டுக்கொடுக்காதவர்கள் இல்லையா…. ‘கதவைத் திற காற்று வரட்டும்….” ( இதை கவிதையில் எழுதியவர் சுந்தரராமசாமி, பிரபலப்படுத்தியவர் சுவாமி நித்யானந்தா என்பவர்.




காசுகொடுத்தா மனுஷ்யபுத்திரன் புத்தகம் போடுவார்.... மச்சான் நீ போடேன்...நீ போடேன் என்று உயிர்மைக்கு கவிஞர் பிடிக்கும் வேலையைச் செய்யும் ஒரு எழுத்தாளரையும், அவரைக் கண்டால் மனம் வருத்தப்படும் ஒரு நண்பரையும் நான் அறிவேன்.

இந்தக் குறிப்பு எனக்கு நானே சொல்லிக்கொள்வதற்காக…


வாழ்த்துக்களுடன்….
வசுமித்ர.

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...