Friday, March 20, 2015

புத்தகம் பேசுது ஆசிரியர் குழுவிற்கும், கீரனூர் ஜாகிர்ராஜாவுக்கும்…..

பாட்டியின் குரல்வளையைக் காப்பாற்றி வைத்திருக்கிறேன்… மற்றும்… கலைஞனை நம்புவதும் கலைஞனை நோக்கி நகர்வதும்தான் மனிதகுல மீட்சிக்கான ஒரேவழி…
என்ற உரையாடலை முன்வைத்து….

பேட்டி எடுப்பதற்கு முன்னமே பேட்டியாளர் கீரனூர் ஜாகிர்ராஜாவுக்கு கோணங்கியின் குடும்ப வம்ச சரித்திரமே தெரிந்திருக்கிறது. அண்ணன்கள் யதார்த்தவாதிகளாக இருக்க, கீ.ஜா.ராவுக்கு கோணங்கி மட்டும் மேஜியசியனாகத் தெரிகிறார். காரணம் பத்து பன்னெண்டு வருசத்துக்கு முன்னால் யதார்த்த பாணி வகையிலான கதை எழுதுதலை விட்டு விட்டு முன்கூடிய திட்டமிடப்பட்ட எழுத்து நடையில் எழுதிப் பழகிக்கொண்டிருக்கும் கோணங்கி அவரை புரியாமல் திகைக்க விட்டுவிட்டு அரபுக் கம்பளத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டு அந்தரத்தில் பறக்கத் தொடங்கினார். ( பறத்தல் என்பதே அந்தரத்தில் நிகழும் செயல்தான். இதில் பறந்தார் என்றாலே போதுமானது. ஆனால் எழுத்தில் மித்தும் (myth)தொன்மையும் கைகூடாதே. அதனால்தான் அந்தரத்தில் பறந்தார்.)

இங்கிருந்து தொடங்கும் உளறல்கள் முழுக்க முழுக்க ஒட்டு மொத்த உரையாடலையும் குந்தாங்கூறாக கொண்டு போய், கம்பளத்தில் பறக்கும் வித்தை கைகொடுக்காமல் நடுவீதியில் பொத்தென்று போட்டிருக்கின்றது.

அன்பானவர்களே… இப்பேட்டியை முழுமையாய் படித்ததும் என்னுள் வந்த முதல் உணர்வு பரிதாபம்தான். அதுவும் அந்தோ பரிதாபம் என்ற உணர்ச்சி மட்டுமே.

கோணங்கிக்கு கோட்டும் சூட்டும் மாட்டி கண்ணில் ஒரு கருப்புக் கண்ணாடியும் போட்டுவிட்டு.. கையில் ஒரு குஜாலிக்கா டொம்ப்ளேரடா பிஸ்டலையும் கொடுத்து, அவரை இடதும் வலதும்.. இல்லையில்லை…  குறுக்கும் மறுக்கும் குந்தாங்கூராக நடக்க வைத்து…. அதோ வர்றார் அய்யாப்பா.. இதோ வர்றார் அய்யாப்பா என சீடகோடிகள் நெக்குருக பாடினால் எப்படி இருக்கும்… அப்படித்தான் இருக்கிறது ஒட்டுமொத்த பேட்டியும்.

பேட்டியாளர் தன் முன்னுரையை தானே எழுதினாரா இல்லை அதையும் கோணங்கியிடம் உரையாடி எழுதினாரா என சிறிய சந்தேகம் வருகிறது.  தமிழ்ச் சூழலில் சிலர் பழைய கோணங்கி புதிய கோணங்கி என்றெல்லாம் பிரித்துப் பார்த்தார்கள், புரிகிறது புரியவில்லை என உழுதும் பார்த்தார்கள்; ஆனால் கோணங்கி அசரவில்லையே அவர்பாட்டுக்கு எழுதிக்கிட்டே இருந்தாரு என்கிற தொனியில் அவர் வைக்கும் பில்டப்ஷாட்டானது,  கோணங்கி ஒரு மாமமனித இலக்கிய கர்த்தா என்பதாக நீள்கிறது.  அதாவது முந்தைய கோணங்கி பிந்தைய கோணங்கி எனப் பிரித்துப் பார்க்கும் அளவுக்கு இலக்கிய உலகத்தில் பங்காற்றியிருக்கிறார்.

நல்லது அப்படி பிரித்துப் பேசிய ஒரு எழுத்தாளன், அல்லது வாசகன் பெயரையாவது தயவு செய்து சுட்டுங்கள்.  பொத்தாம் பொதுவாக முன் வைக்க வேண்டாம். அதே சமயம் புரிகிறது புரியவில்லை என வாசகம் நகர்கிறது. எனக்குத் தெரிந்து கோணங்கியின் எழுத்துக்கள் புரிகிறது புரியவில்லை இவ்விரண்டிற்கும் அப்பால்.. அதை படிக்கவே தேவையில்லை என்ற விமர்சனமும் தெளிவாக இருக்கிறது. படிப்பதற்கும் எழுதுவதற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. நோக்கமே இல்லாமல் எழுதுபவருக்கு எதற்கு…  புரிந்து படித்தவர்… புரியாமல் விட்டவர் கதையெல்லாம்.

ஜாகிர் தனது முன்னுரையின் நான்காம் பாராவிலேயே தனது கேள்விக்கு அவர் சொல்லும் பதிலை நண்பர்கள் அருள்கூர்ந்து கவனிக்குமாறு (சாமி சரணம் சாமி சரணம்) வேண்டிக்கொண்டிருக்கிறார்.  அந்தப் பதிலைப் படித்ததும் சரண கோஷ்டிகளுக்கு நிச்சயம் ரத்தக் கண்ணீர் வருவது உறுதி. அந்தப் பதிலிருந்துதான் ஜாகிருக்கு கோணங்கி எப்பொழுதும் ஒரு இடதுசாரிக் கலைஞனாகவே இருந்து வந்திருக்கிறார் என்பதில் அவருக்கு துளியும் ஐயமில்லாமல் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.  

கோணங்கி தன்னை இடதுசாரிக் கலைஞன் என எங்கு சொன்னார் என்று எனக்கு நினைவில்லை. தத்துவங்கள் அனைத்தும் குப்பை; கலைதான் ஒசத்தி என்பவர் அவர். இடதுசாரி என்பதற்கு தத்துவம் வேண்டும் அல்லது குறைந்தபட்சம் முற்போக்கான சிந்தனையாவது வேண்டும். அவர் சொன்ன பதிலின்படி சிறுதெய்வங்கள்… ஆச்சா… போச்சா…. வழியில் நாம் செல்ல வேண்டுமென்றால் ஒரு கேள்வி நம் தொன்மமல்லாத கால்களைப் பிடித்து இழுக்கிறது: சில பல…. குறு சிறு தெய்வங்களுக்கு அந்தந்த சாதிக்காரர்கள்தான் பொங்கல் கிடாய் வெட்ட முடியும். சாதியை இன்னும் கொஞ்சம் இறுகக் கட்டியபடி பல குறுங்குழு தெய்வங்கள் இருக்கிறது. இப்போது நாம் எந்த சாதி குறு சிறு தெய்வங்களைத் தொழுவது?

அதெல்லாம் போகட்டும்… எந்தப்படைப்பையும் சமயப்படுத்தாமல் இந்துவத்துக்குள் மாட்டிவிடாமல் இருப்பதற்கு பிணந்தின்னும் தனது தெய்வங்களே சிலவேளை அவர் கதைகளை எழுதிவிடுவதாக அவர் சொல்லியிருக்கிறார். அது எந்த சிறு தெய்வம்? கலைஞனுக்கு இந்து முஸ்லீம், கிருத்தவ, யூத சமண, ஜைன, ஞனநமன வேறுபாடெல்லாம் உண்டா… மகாபாரதம் கலை இல்லையா? அது வேத கலாச்சாரத்தைத் தூக்கிப் பிடிக்கிறது என்பதனால் அதை குப்பைக் கூடையில் போட்டு விடலாமா…. இல்லை கம்பராமாயணத்தை எரித்துவிடலாமே என தத்துவத்தின் முன்னால் கேள்வி கேட்கும் வகைசார்ந்த கலைஞன் கோணங்கியிடம்… சிறுதெய்வம் மட்டுந்தான் கலைஞனுக்குரியதா… என்னங்க இது.. ஏங்க..இப்டியாங்க உளறுவாரு நீங்களும் கேட்டுட்டு வருவீங்க…ம்….

கேள்வி ஒன்று

அவர் எப்பொழுதும் தான் ஒரு இடது சாரி கலைஞன்தான்  என எங்கு எப்பொழுது யாரிடம் சொல்லியிருக்கிறார்?

அடுத்து கோணங்கியின் பால்யகாலத்தை உங்களது பேட்டியில் முழுமையாக தரிசிக்க முடியும்.. (சாமி சரணம்! சாமி சரணம்!.... என்ன ஜாகிர் இது.... தரிசனம்... உச்சாடனம்.. பிரவாஹம்... ம்..புத்தக ஆலயம்.. என்ன மொழி இது?.. இதுதான் இடது சாரி கலைஞனை ஒரு இடது சாரிப் பத்திரிக்கையாளன் பேட்டி எடுக்கும் முறையா? நீங்கள் மட்டுந்தானா இல்லை கோணங்கியை பேட்டியெடுக்கலாம் என கெவுளி சொல்லி ஆசிரியர் குழுவும் சேர்த்துத்தானா..)

நேர்காணலுக்கு கோணங்கி தெரிவு செய்த இடம் அபூர்வமானது என பேட்டியாளர் விதந்தோதியிருக்கிறார்.. அதாவது முன் பாராவில் கோணங்கிக்கு அவருடைய பால்ய காலம் கரிசக்காட்டு வெயிலாகவும், வறண்ட மண்புழுதியாகவும் எப்போதாவது தோன்றி மறையும் மழைக்காலத்து ஓடைகளாவும் வண்டிப்பாதைகளாக பிரவாஹித்ததும்( சாமி சரணம்… சாமி சரணம்) மாய் இருக்க,

 நேர்காணலுக்கு கோணங்கியால் அபூர்வமான இடமாக ( திட்டமிட்டு) தேர்ந்தெடுக்கப்பட்ட சமணக்குடி மணல் மகுடி… நாடகம்…. எட்டு மணி நேரம் இடை நில்லாமல்….. பூரணத்தன்மைகளுடன்….( சாமி சரணம்..சாமி சரணம்) வரி மாறாமல்…… காகங்களின் ஓயாத கரைதல்களினூடே……(பட்சி ஜாதிகள் எம் பகவானை தொழுதபடியே) பேட்டியை பதிவு செய்ததாய் சொல்லியிருக்கிறார்…

கோணங்கி அவ்வறையின் ஜன்னலை ஒட்டி அமர்ந்து சமண மலையைப் பார்த்துக்கொண்டே பழைய ஞாபகங்களை மீட்டி மீட்டிப் பேசிய பாணி கவிதைக்கு நிகரானது என்று நான் சொன்னால், அவர் உடனே “ இல்லை ஜாகிர்… நீ அதை மாற்றிச் சொல்.. அது தெம்மாங்கு…எங்கோ தொலைவில் எந்த மைக்கும் முன் ஜோடனைகளும் இல்லாமல் எவனோ பாடிச்செல்வது……” என்று திருத்துவார்.

இதுதான் இடது சாரி கலைஞனை ஒரு இடது சாரி பத்திரிக்கை இடதுத்தனமாய் கேள்வி எழுப்ப காசு பணமெல்லாம் கொடுத்து பேட்டி எடுக்க அனுப்பிய சரித்திர பீடிகை. பேட்டி எடுத்த அந்த அற்புத நாளை இனி நான் திரும்பப் பெறுவதற்கு இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை என ஜாகிர் எம்பெருமானைக் கண்ட ஆண்டாளாய் உருகியிருக்கிறார்.

பதறாதீர்கள் ஜாகிர் ராஜா தொலைபேசியில அழைத்தால் சந்திப்பை உடனே உறுதி செய்துவிடலாம். பேட்டியாளாராகிய நீங்கள் கோணங்கி முன்னால்

“மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என்
கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும்
கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே”

திருவாசகம்- (திருச்சதகம்- மாணிக்க வாசகர் அருளியது
மெய் உணர்தல்.
திருப்பெருந்துறையில் அருளியது
கட்டளைக் கலித்துறை)

என இறைஞ்சுவது அப்பட்டமாகத் தெரிகிறது. பேட்டியாளார் என்ற பதத்திற்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு….

\\ கோணங்கி அவ்வறையின் ஜன்னலை ஒட்டி அமர்ந்து சமண மலையைப் பார்த்துக்கொண்டே பழைய ஞாபகங்களை மீட்டி மீட்டிப் பேசிய பாணி கவிதைக்கு நிகரானது என்று நான் சொன்னால், அவர் உடனே “ இல்லை ஜாகிர்… நீ அதை மாற்றிச் சொல்.. அது தெம்மாங்கு…எங்கோ தொலைவில் எந்த மைக்கும் முன் ஜோடனைகளும் இல்லாமல் எவனோ பாடிச்செல்வது……” என்று திருத்துவார்.\\

எந்த திட்டமிடுதலும் இல்லாமலா பரங்குன்றம்.. முத்துப்பட்டி.. மண்கால் துற்வி அந்தை ராவதனைப் பார்த்த குறுக்குப்பாறை கணவாய், கீழ்க்குயில்குடி… என அலைந்து திரிந்தீர்கள்? எந்த ஜோடனையும் இல்லாமால் என்றால் மைக்கும் இல்லாமல் ரிக்கார்டரும் இல்லாமல் வரிக்கு வரி மாறாமல்…  எட்டு மணி நேர உரையாடலையும்.. காக்கை கரைதலிகளினூடே உங்க ஞாபக சக்தியை மட்டும் துணைக்கு வைத்தா  எழுதினீர்கள்.. ஆச்சரியம்… அப்படித்தான் என்றால் இதுதான் பேட்டியாளரே ஒர்ஜினல் ஜோடனை.

இதில் தெம்மாங்கு எதற்கு அய்யா…ம்….

கிரவுன் சைஸ் புத்தகத்தில் பேட்டியாளரது முன்னுரையை முக்கால் வாசி மட்டுமே இப்பொழுது கேள்விகளாய் வைத்திருக்கிறேன்..

இனி முழுவதுமாகத் தொடர்கிறேன்…

சந்தேகம் ; ஒன்று

பேட்டி ஆரம்பிக்கும் முன் மலையெல்லாம் சுற்றி வந்தோம்… இந்த உரையாடல்… இத்யாதி இத்யாதி…… வர்த்தமான குகையான செட்டிப்புடவில் வைத்து மிக நீண்ட நண்பகலில் நடந்த குளிர்கால உரையாடல்..

இந்தாப் பாராவை நீங்கள் எழுதினீர்களா இல்லை கோணங்கி எழுதினாரா?…

தொடர்கிறேன்.
வசுமித்ர


தொடர்புடைய சுட்டிகள்:

http://makalneya.blogspot.in/2015/02/blog-post_19.html 

http://makalneya.blogspot.in/2011/07/blog-post.html 
வேட்டுவம் நூறு- நூல் விமர்சனம்- வசுமித்ர

    பாட்டுக்களின் தாய் , நமது விதை முழுவதின் தாய் , ஆரம்பத்தில் நம்மைப் பெற்றெடுத்தாள்.  அவள் எல்லா இன மனிதர்களின்,  எல்லாக் குலங்களின் தாய்...