Thursday, April 18, 2013

பரிணாமம்: ஒரு எதிர்க்கவிதை - சச்சிதானந்தன்






முதன்முறையாக அவன் என்னெதிரில் வந்தபோது
அவனது பையில் இருந்தன
திலகரின் கீதை உரை,
காந்தியின் ‘சத்தியசோதனைகள்’,
1.வைக்கத்திலிருந்து ஒரு பாட்டுப்புத்தகம்
2.திருநாவாயிலிருந்து கொஞ்சம் மணல்
ரத்தக்கறை படிந்த ஒரு கதர் வேட்டி.

இரண்டாம் முறையாக அவன் என்னெதிரில் வந்த போது
அவனது பையில் இருந்தன:
‘கம்யூனிஸ்ட் அறிக்கையின்’ ஓரணா பதிப்பு,
3. ஏ.கே.ஜியின் சுயசரிதை,
*ஓஞ்சியத்திலிருந்து ஒரு பாட்டுப்புத்தகம்,
*வயலாரிலிருந்து ஓர் எறி ஈட்டி,
ரத்தக்கறை படிந்த ஒரு காக்கிக் கால் சட்டை.

மூன்றாம் முறையாக அவன் என்னெதிரில் வந்த போது
அவனது பையில் இருந்தன:
மாவோவின் சிவப்புப் புத்தகம்
குவேராவின் பொலிவிய நாட்குறிப்பு,
*ஸ்ரீகாகுளத்திலிருந்து ஒரு பாட்டுப்புத்தகம்,
போஜ்பூரிலிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி,
ரத்தக்கறை படிந்த ஒரு தலைமறைவு வேடம்.

நேற்று அவன் என்னெதிரில் வந்த போது
அவனது பையில் இருந்தன
கோல்வாக்கரின் சிந்தனைத் தொகுப்பு;
ஹிட்லரின் மெய்ன் காம்ஃப்,
ஒரு ஸ்ரீ சக்கர பூஜை முறை,
அயோத்தியில் உயர்த்திய ஒரு திரிசூலம்
ரத்தக்கறை படிந்த ஒரு காவி உடை.


மொழியாக்கம் -; நிர்மால்யா

1இந்திய விடுதலைக்காகக் காந்தியின் தலைமையில் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்ற இடங்களில் ஒன்று
1.கேரளத்தில் ஓடும் ‘பாரத புழ’நதிக்கரையில் உள்ள இந்த இடம், கேரள மக்களின் புனித இடமாகக் கருதப்படுகிறது.
3.இடதுசாரிகளால் ஏ.கே.ஜி என்று அழைக்கபடும் ஏ.கே.கோபாலன். முதன்முறையாக பாராளூமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடது சாரி உறுப்பினர்களில் முக்கியமானவர்.
*கம்யூனிஸ்டுகளின் போராட்ட முக்கியத்துவம் வாய்ந்த கேரள ஊர்கள்.

Sunday, March 31, 2013

எனது குரல்களை





எனது குரல்களை
நான் கண்டுகொள்கிறேன்
உடலுரசிய பூனைகளின் வால்களை கனவில் காண்கிறேன்
மௌனத்தை குரல்களால் அனுபவிக்கும்போது
வெற்றிடத்தில்
சொட்டி
ஒலிக்கிறது வலி

எல்லாவற்றையும்
அறிய முயற்சிக்கும் பிடிவாதத்தில்
மழை பெய்யட்டும்

காகிதங்களை எரிக்கிறேன்
எழுத்துகள் புகைந்து சித்திரத்தை வரைந்து விட்டுப் போகிறது

நடுத்தெருவில் கண்டெடுத்த புல்லாங்குழலின்
மத்திம துளையில்
நாடோடி தன் யாசகக் குரலை
விட்டுச் சென்றுள்ளான்

பியானோக்கள் தங்கள் கட்டைகளென
என் வீட்டை அதிர்வுறச்செய்கிறது
நடுங்குதலில்
துடித்தெழும்புகிறது
பெரும் இசை

எல்லாவற்றையும் குரல்களாக்க
அந்தகன் முயல்கிறான்
தன் குரலை பிரதியெடுப்பவனை நாளும் ஓயாது தேடுகிறான்
தன் குரலை பார்க்க முடியதெனினும்

செவிகளால் ஒரு உரசல்
அல்லது
ஒரு சிறிய புணர்ச்சி
இவ்வளவே

அந்தகனுக்கு அவன் குரலை ஒலித்துக்காட்டுவது
அந்தகனால்தான்
முடியும்
முடியவேண்டுமென நான் நம்புகிறேன்

அந்தகனுக்கு நெருக்கமாக
அவனுக்கு உறவாக
குரல் மட்டுமே இருக்கிறது
அந்தகனது  குரலை பிரித்தெடுக்கும் அந்தகன் அறிவான்
அது
மாபெரும் சவால்
கொலை
நிகழ்த்திக்காட்ட இயலாத குழந்தையின் தற்கொலை

அந்தகனின் குரலைத் திருடத் தயாராயிருக்கும்
இசைக்குறிப்பை
எழுதும் விரல்களை நான் அறிவேன்
அவை அந்தகர்களின் கடவுளர்களுடையது

கடவுளும் அந்தகனாய் இருக்கும்போது
சித்திரம் நிறங்களால் கலங்கி விடுகிறது

கடவுள் அந்தகன்

காட்சிகளால் அந்தகனின் குரலை அனுபவிக்கமுடியாது
அந்தகனை பார்வையுள்ளவர்களால் சபிக்க
ஆசிர்வதிக்க
மன்னிக்கமுடியாது

அவன் அந்தகன்
இருளின் நிறத்தை ஓயாது புணர்ந்து சலிப்பவன்

புணர்ச்சி
விழியுள்ளோருக்கு வெறும் சித்திரம்
ஒப்பிட்டுக் கொள்ளும் சதையின் கனபரிமாணங்கள்
பெயர்கள்
உதற முடியா ஈரம்
விரல்களைக் குழப்பும் வெறும் பிசுபிசுப்பு

அந்தகனுக்கு
புணர்ச்சி குரலில் தோன்றி
குரலில் முடியும் இசைக்குறிப்பு

அவன் இசைஞன்
கண்கள்
உள்ளவர்கள்
செவிகளை இழப்பாளர்களாக


அந்தகனுக்கு இரண்டு குரல்கள்
இருக்கும் பட்சத்தில் மானுடச்செவிகள்
இருள்பூச வேண்டுமென  நான் நம்புகிறேன்

அந்தகனின் குரலை இசைக்க
நாடோடி தெருவில் இறங்குகிறான்

ஒரு பெண் தானமிடுகிறாள் குரலை
தெருவின் சித்திரம் இவ்வாறாக நிறைவுபெருகிறது

ஒரு குரல்
தனித்து ஒலிக்கிறது

Wednesday, March 6, 2013

சே கெவாரா புத்தகப் பதிப்புரிமை சம்பந்தமாக..







            பெறுநர் ; 
           ஓஷன் பதிப்பகம், ஆஸ்திரேலியா



நாங்கள் இந்தியாவில் உள்ள சென்னை நகரம் மற்றும் தமிழகத்தின் இதர பகுதியைச் சேர்ந்த குடி உரிமை செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், இடது சாரி பதிப்பகத்தார் குழு. சமீபத்தில் வலது-சாரி நாளிதழான தினமணியின் வாரமலரில் ஒரு விளம்பரத்தைக் கண்டு (மார்ச் 3- 2013) அதிர்ச்சியடைந்தோம். சென்னையைச் சேர்ந்த பழமைவாய்ந்த தமிழ் பதிப்பகமான “கண்ணதாசன் பதிப்பகம்” அவ்விளம்பரத்தை பிரசுரித்திருந்தது. பின்வரும் படைப்புகளின் மொழிபெயர்ப்புக்கு அது காப்புரிமை கோருகிறது:


1. மோட்டார் சைக்கிள் டைரிகள், சே கெவாரா

2. சே: ஒரு நினைவுக் குறிப்பு, ஃபிடல் காஸ்த்ரோ

3. பொலிவியன் டைரிகள், சே கெவாரா

அந்த பதிப்பகத்தாருக்கு சே வின் ஆளுமையோ, அவர் எவற்றுக்காக குரல் எழுப்பினார், துணிந்து நின்றார் என்பது பற்றியோ அல்லது சேவைப் பற்றியோ கூட தெரியாது. மேற்சொன்ன புத்தகங்களை சே எழுதினார் என்பது மட்டுமே அவர்கள் சொல்வது! இதுதவிர, அந்த விளம்பரத்தில் சே கெவாரா ‘கொரில்லா’ போர் முறையை பிரபலமாக்கியவர் என்று இருக்கிறது. ‘அழுக்குகளை உண்டு வறுமைச் சேற்றில் உழலும் கரப்பான் பூச்சிகளே கம்யூனிஸ்டுகள்’ என்று எழுதிய பிரபல பாடலாசிரியர் கண்ணதாசனின் பெயரால் அப்பதிப்பகம் அழைக்கப்படுகிறது என்பதை இங்கு குறிப்பிடுவதில் தவறில்லை.

மேலும் சில புத்தகங்களுக்கும் (அந்த புத்தகங்கள் பற்றியும் குறிப்பிடவில்லை, ஒப்பந்தமும் வெளியிடப்படவில்லை) உங்களிடமிருந்து மொழிபெயர்ப்பு உரிமை பெற்றிருப்பதாக அந்த விளம்பரம் அறிவிக்கிறது, அதுமட்டுமல்லாமல் சே கெவாராவின் அனைத்து புகைப்படங்களுக்கும் அவர்களுக்கே காப்புரிமை இருப்பதாகவும், அந்த புரட்சிகர தியாகியை பற்றி தொலைக்காட்சி தொடர் எடுக்கும் உரிமை இருப்பதாகவும் அது குறிப்பிடுகிறது.

சே கெவாராவின் படைப்புகளை மொழிபெயர்க்கும், வெளியிடும் உரிமை மேற்சொன்ன பதிப்பகத்திற்கு மட்டுமே உண்டு எனவும், வேறு எவரேனும் அதை பதிப்பித்தால் 1957 இந்திய காப்புரிமை சட்டத்தின் கீழும், (திருத்தப்பட்டதன்படி) இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் 1800 (திருத்தப்பட்டது) இன் கீழ் தண்டனைக்குறிய குற்றமாகவும் வழக்கு தொடரப்பட்டு, நஷ்டஈடு கோரப்படும் என்று அது அறிவிக்கிறது. இதில் ஆத்திரமூட்டும் விசயம் என்னவென்றால், அந்த பதிப்பகத்தைத் தவிர வேறு எவரும் சே கெவாராவின் புகைப்படங்களை பயன்படுத்தக் கூடாது எனும் அறிவிப்பு.

இந்தியாவிலும், மற்ற உலக நாடுகளிலும் காப்புரிமைச் சட்டம் எவ்வாறு இயங்குகிறது எனும் அறிவு சிறிது கூட அந்த பதிப்பகத்தாருக்கு இல்லை. குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டம் இரண்டுக்குமிடையேயான வேறுபாடு அவருக்குத் தெரியவில்லை (இந்த இரண்டு வேறுபட்ட சட்டங்களைக் குறிக்க அவர் பயன்படுத்தும் சொற்கள் அவரின் அறியாமையை உணர்த்துகிறது).

மற்றொருபுறத்தில், சட்டத்தின் மூலமாக பல தனிநபர், மற்றும் இடதுசாரிச் சார்புடைய சிறிய பதிப்பகங்களை ஒடுக்கும் ஒரு முயற்சியாகவேத் தெரிகிறது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சே வின் நினைவுகளையும், அவரது கியூப புரட்சியையும் எண்ணற்ற மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், பிரசுரங்களாகவும், டி-ஷர்ட்டுகள், பந்தனாக்கள், புகைப்படங்கள் என்று வெளியிட்டு, இணையத்தில் இருக்கும் காட்சிகளைக் கொண்டு வீட்டுத் தயாரிப்பு குறும்படங்களாகவும் எடுத்து சே வின் நினைவுகளையும், அவரது கியூப புரட்சியையும் உயிர்ப்போடு வைத்திருந்த கூட்டம் அது.

சமீபத்தில், ஒரு இளம் பதிப்பகத்தார், பொலிவியன் டைரியின் முன் பதிப்பை மறுபதிப்பு செய்தார். அதை மொழி பெயர்த்த பெண்மணி இந்தோ-கியூப மக்கள் நண்பர்கள் கழகத்தின் உறுப்பினர். அந்த பதிப்பகத்தாருக்கு கண்ணதாசன் பதிப்பகம் சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாக சட்ட அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது.

கீழ்வரும் காரணங்களுக்காக நாங்கள் இந்த கடிதம் எழுதுகிறோம்:
நாங்கள் உங்கள் இணையதளத்தைப் படித்தோம் (ஆங்கிலம் மற்றும் ஸ்பானிய மொழியில்). உங்கள் படைப்புகளின் பட்டியலில் பல கியூப படைப்புகள், குறிப்பாக சே கெவாராவின்படைப்புகள் மற்றும் லத்தீன் அமெரிக்கவின் இதர பகுதிகளைச் சார்ந்த கவிதைகள், கலை மற்றும் புனைவு படைப்புகள் அடங்கியுள்ளது. ஒரு பரம-வலதுசாரி தமிழ் பதிப்பகம் ஒன்று சே வின் படைப்புகளுக்காக உங்களோடு ஒப்பந்தம் செய்துள்ளது என்பது பொருந்தாமல் உள்ளது.
சர்வதேச இடது-சாரிகளின் காட்சிக் குறியீடாக உள்ள சே (தமிழ் நாட்டில் அவர் வெறும் இடது சாரிகளால் மட்டும் ஆராதிக்கப்படுவதில்லை, சாதி மறுப்பு இயக்க இளைஞர்களாலும் குறிப்பாக ‘தீண்டாமை சாதியைச்’ சேர்ந்த எண்ணற்ற இளைஞர்களாலும் ஆராதிக்கப்படுகிறார்) ஒரு குறிப்பிட்ட தனி நபர் / தனி பதிப்பகம் ஒன்றின் தனிச் சொத்தாக மாறுகிறார் என்பது எங்களுக்கு குழப்பமாக உள்ளது. சேவின் அம்சங்களை ஒரு குறிப்பிட்ட தருணத்திற்கு, இடத்திற்கு, நிகழ்விற்கு இணைக்கப்பார்க்கும் முட்டாள்தனமான ஒரு முயற்சியை அடையாளப்படுத்திய செவொல்யூஷன் எனும் திரைப்படத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறோம்.
“அரசியல் மற்றும் வரலாற்றின் உலகப் பார்வையை, குறிப்பாக லத்தின் அமெரிக்கா பற்றிய பார்வையை வழங்கும் தனிச்சிறப்பு மிக்க புத்தகங்களை வெளியிடும் ஒரு தனிநபர் பதிப்பகம். அமைதி மற்றும் நியாயம் நிறைந்த உலகம் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் நபர்களின் கற்பனையைக் கைபற்றும் வகையில் புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று உங்களைப் பற்றி உங்கள் இணையதளம் குறிப்பிடுகிறது. அவ்வாறு இருக்க, இதற்கு நேரெதிரான கொள்கைகளும், நடைமுறைகளையும் கொண்டு ஒரு பதிப்பகத்திற்கு எவ்வாறு அனுமதியளித்தீர்கள்?
சே எதற்காக போராடினார், எதற்காக தன்னையே தியாகம் செய்தார் என்று ஏதுமறியாமல், இலாபம் மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஒரு பதிப்பகம் உரிமை கொண்டாடும் வகையிலான ஒரு ‘காப்புரிமையை’ கொடுக்கக்கூடிய முறையல்ல சே பற்றிய உரிமை. சர்வதேசம் எனும் உணர்வோடு அத்தனை தாராளமாக, கனிவுள்ளத்தோடு செயல்பட்ட சேவின் எழுத்துக்கள் இப்படி சுருக்கப்படுவது சரியல்ல என்று நாங்கள் கருதுகிறோம்.

உண்மையில் நீங்கள் கண்ணதாசன் பதிப்பகத்தோடு ஒப்பந்தமிட்டிருந்தீர்களேயானால், சே கெவாராவின் படைப்புகள், அவரது புகைப்படப் பயன்பாடு மற்றும் காட்சிப் பதிவு பயன்பாட்டு உரிமை ஆகியவற்றை அவர்கள் பயன்படுத்தும் உரிமையை தயவு செய்து மறுபரிசீலனை செய்யுங்கள். அவர்களுக்கு இடது-சாரி அரசியல் மீதோ, லத்தீன் அமெரிக்கா மீதோ ஏன் பரந்த முற்போக்கு சிந்தனைகள் மீதோ எந்த நாட்டமும் இல்லை. இளைஞர்கள் மற்றும் புதிய தலைமுறை இளைய புரட்சியாளர்கள் மத்தியில் சேவுக்கு இருக்கும் ஆராதனையைக் கண்டு அவர்கள் ‘பணம் ’ பண்ண எண்ணுகிறார்கள் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.



உங்களிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறோம்.



பெயர்                                                  பணி                                 முகவரி மின் முகவரி



இந்த கடிதத்தின் ஆங்கில மூலம் இந்த சுட்டியில் உள்ளது. ஆதரவு தெரிவிக்க விரும்புபவர்கள் அதை அப்படியே பிரதி எடுத்து

Rachel Kirby - rights@oceanbooks.comஎனும் மின் முகவரிக்கு கடிதம் அனுப்பவும் 







To 
Ocean Books, Australia

We are a group of writers, civil rights activists and left-leaning publishers from the city of Chennai and other parts of TamilNadu, India. We were shocked to find an advertisement that appeared recently in the weekly pull-out of a right-leaning Tamil daily, Dinamani (March 3, 2013). The advertisement has been taken out by a conservative Tamil publishing house, “Kannadasan Pathippagam’ based in Chennai, and relates to the sole right it claims to have obtained from you for translating the following works:

1. Motorcycle Diaries by Che Guevera

2. Che: A Memoir by Fidel Castro

3. Bolivian Diaries by Che Guevera

The publisher clearly has no idea of what Che stood for or what work by and about him are likely to contain. For one, they claim that all three books listed above are written by Che! Besides, the advertisement in its brief note on Che Guevara claims that he was an exponent of ‘gorilla’ warfare (sic). It would not be out of place to mention here that the publishing house has been named after a popular song-writer and poet, Kannadasan who famously remarked that ‘communists are cockroaches that live off the dirt and muck of poverty’.

The advertisement also claims that the above publishing house has entered into an agreement with you in respect of many other books (neither the books nor the content of the agreement are specified) and has obtained copyright for the use of all the photographs of Che Guevera and also the right to make TV serials about that great revolutionary martyr.

The advertisement says that since the above publishing house alone has the right to translate into Tamil and publish the works of Che Guevera, civil and criminal proceedings will be instituted against all others who publish them under the Indian Copy Right Act of 1957 (as amended) and Indian Penal Code 1800-As amended) with claims for compensation of the loss etc., sustained by it. What is most outrageous in the advertisement is the warning it issues against using of any of the photographs of Che Guevera by any one apart from this publishing house.

The publisher clearly has no idea of how copyright laws work across the world and in India, the difference between the Criminal Procedure Code and the Penal Code in this country (the Tamil terms he employs to refer to these two distinctive Codes indicate how lax he is in invoking the law).

On the other hand, we see this recourse to the language of the law as a means of intimidating many independent, left-leaning small presses, which, for the last thirty years and more have kept the memory of Che and the Cuban revolution alive through any number of translations, essays, broadsheets, t-shirts, Bandanas, photographs, home-made documentaries, pieced together from footage that is available on the Internet. Recently, a young publisher who has re-published in December 2012 an earlier Tamil translation of Bolivian Diary by a well-known woman writer (who is also a leading member of Indo-Cuban Peoples’ Friendship Association) has been threatened with legal action by the publishing house in question.

We have taken the liberty to write to you on the following grounds:



· We went through your website (English and Spanish) and saw that your list includes a number of works from Cuba, especially on Che Guevara, in addition to poetry, art and fiction from other parts of Latin America. It seemed extremely odd that an arch-right wing Tamil publisher should have entered into a contract with you to publish Che’s works.

· We also are perplexed that Che, a visual icon of the international left (in TamilNadu he is adored by not just the Left but also thousands of young persons from the anti-caste movements, particularly those from the so called ‘untouchable castes’) is being considered the sole property of individual publishers/individuals – you have no doubt seen the movie, Chevolution which in fact establishes the folly of trying to fix Che’s visage to a particular moment, place or event.

· Your website says that you are “ an independent publisher with a unique list of books offering a radical global vision of politics and history, focusing particularly on Latin America. Our books are designed to capture the imagination of those who believe that a world of peace and justice is possible, and who are actively working toward creating such a world”.Then how come you have allowed a publisher in TamilNadu whose publishing interests are diametrically opposed to both these principles and their practitioners ?

· We do hope that Che is not ‘copyrighted’ in a fashion that allows a Publisher who has no idea of the ideals for which Che fought and martyred himself but is only driven by the profit motive and that his writings are available to the wide world at large, a world that his internationalist spirit embraced so generously and with much warmth.

If you have actually entered into a contract with Kannadasan Publishing house, please reconsider allowing them the right to publish Che Guevara’s works and using his photographic and video graphic representations: they have no interest in left politics, Latin American or anything even faintly progressive. They are in all probability trying to ‘cash’ in on the persistent popularity of Che, amongst newer and younger generations of activists.

We look forward to hearing from you.



Name                                      Profession                                                        Address and email

People who wish to support our cause and protest against this act pls send the above letter to



To:

Rachel Kirby - rights@oceanbooks.com

Tuesday, March 5, 2013

சே குவேரா விற்பனைக்கு.. இங்கு அணுகவும்.





சே குவேராவின் புத்தக உரிமை மூவரிடம் இருக்கிறது.

1.  அலைடா மார்ச்( சேவின் வாழ்நாள் தோழி).

2 . சே ஸ்டடி செண்டர்.

3. ஓசியன் பிரஸ்.

இவர்களிடம் மட்டுமே  இதுவரை சே புத்தக உரிமைகள் இருந்து வருகிறது. இந்த நிலையில் காந்தி கண்ணதாசன் அவர்கள்  சே குவேராவின் எழுத்துக்கள் புகைப்படங்கள் உட்பட அனைத்திற்கும் தமிழில் வெளியிடுவதற்கான உரிமையாளாராக அறிவித்திருக்கிறார். மேற்கண்ட விளம்பரம் அதை உறுதியும் செய்திருக்கிறது. உலகறிந்த புரட்சியாளனின் எழுத்துக்களும், அவரது உருவப்படமும் இப்படித் தனி நபர்ச் சொத்தாய் மாறுவது மிகவும் வருந்தத்தக்கது. நம் காலத்து அவலமும் கூட.


எனக்குத் தெரிந்து இதுவரை சே குவேராவின் புத்தகங்களை பதிப்பித்த எண்ணற்ற பதிப்பகங்கள் அதை மலிவு விலையில் வைத்தே விற்கிறது. அதோடு நில்லாது, ஏதேனும் ஒரு இடதுசாரி இயக்கத்தோடு தொடர்பில் உள்ள பதிப்பகங்கள், மற்றும் இடதுசாரிச் சிந்தனை கொண்ட எழுத்தாளர்களாலேயே மொழிபெயர்க்கப்பட்டும் வந்திருக்கிறது ( கிழக்கு  உயிர்மை பதிப்பகங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம். உண்மையில் அது ஒரு அவலம், அவலம் மட்டுமே)

சே குவேரா இன்று நல்ல விற்பனையாகிற உருவம், மற்றும் எழுத்து என்ற அளவில் அவர் உருவம் தாங்கிய ஆடைகளை அணிந்தும் வருகிறார்கள்.

கண்ணதாசன் பதிப்பகம், பதிப்பக உரிமை சார்ந்து அவர்கள் வெளியிடுவது அவர்களின் சட்டப்படியான நடவடிக்கை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேபோல்  அவரது புத்தகங்களை மிகக் குறைந்த விலையில் வெளியிட்டு, நல்ல மொழிபெயர்ப்போடு தந்தால் தாராளமாக வரவேற்கலாம். ஆனால் எடுத்த எடுப்பிலேயே சே வின் படங்கள் எழுத்துக்கள் அனைத்தும் எங்களுக்கே உரிமை என்ற சொத்துப் பத்திரத்தோடும், எச்சரிக்கை அறிவிப்பை முன் வைத்து வருவது என்பது சேவின் புத்தகங்களை வியாபார நோக்கத்தோடு அணுகுவதாகவே எனக்குப் படுகிறது.

என்ன செய்யப் போகிறோம், அல்லது என்ன செய்ய வேண்டும். இது விசயமாக தோழர் அலைடா மார்ச் அவர்களையும், மற்றும் சே ஸ்டடி செண்டர், ஓசியன் புக்ஸ் நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு தோழர்கள் ஏதேனும் செய்யலாம் என நினைக்கிறேன். தோழர்கள் ஒன்று கூடினால் மட்டுமே இது சாத்தியம். 

பதிப்பக உரிமையின், பதிப்பக காப்புரிமைச் சட்டத்தின் கீழ் சே குவேரா ஒரு விற்பனைப் பொருளாகத் தெரியலாம் ஆனால் தோழர்களே சே நமக்கு அப்படிப்பட்டவரா என்ன….


சிறுகுறிப்பு; சேவின் புகைப்படத்தை நீங்கள் உடையில் அணிந்தால், அல்லது கண்ணாதாசன் பதிப்பக அனுமதியின்றி, அவரது படம் உங்களது வீட்டில் இருந்தால்  அது கடும் தண்டனைக்குரிய குற்றம்.  யாருக்கேனும் பரிசளித்தா, ல் நீங்கள் கைது செய்யப்படலாம்.



............
..........
மேலும் 
ச்சே வைக் கொல்வது எளிதல்ல
அவனைக் கொல்வதற்குமுன் வரலாற்றைக் 
கொலை செய்யவேண்டும்
தத்துவத்தைக் கொலை செய்ய வேண்டும்
..........
.........






Thursday, September 6, 2012

காலச்சுவட்டின் இடது கால் பெருவிரலை மனுஷ்ய புத்திரன் என்பவர் கடித்தார் ………..



 சின்ன விசயங்களின் கடவுள் என்ற நூலை முன்வைத்து....



2000 வருட( இந்தக் காலக்கணக்கில் எனக்கு சந்தேகம் என்றும் உள்ளது) தமிழ் வரலாற்றில் ஒரு நூலை மொழிபெயர்ப்பதில் அடித்துப் பிடித்துக்கொண்டு ஆவலாதி பொங்க பதிப்பகங்கள் போட்டி போட்டு வெளியிடுவது உண்மையிலேயே மிகுந்த வரவேற்புக்குரியது. நான் இதில் மிகுந்த உவகையடைகிறேன். எழுத்தாளர்களின் பயன் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருவது குறித்து ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், இப்புத்தக அடிதடி குறித்த காலச்சுவடு கண்ணன் அளித்த விளக்கங்கள் மிகுந்த உத்வேகத்தை எனக்களித்தது.

காரணம் எனது சுயநலமே.  நான் எழுதிக்கொண்டிருக்கும் நாவலா கவிதையா கதையா என வகைப்படுத்த முடியாத தோற்றத்தில் வரும் எனது வார்த்தைகளைத் தொகுத்து வெளியிட இதே போல் பதிப்பாளர்கள் சண்டையிட்டால் நான் ஜென்ம சாப்ல்யம் அடைவேன். அவர்கள் நூலை வெளியிடக்கூடத் தேவையில்லை. சண்டையிட்டு அதை பதிவிட்டால் போதும். நிம்மதி.

கவிஞர் சுகுமாரனுக்கு மனுஷ்ய புத்திரன் என்பவர் முகப்புத்தக வாயிலாக  ஒரு கூற்றை பதிவிட்டிருப்பதாக காலச்சுவடு கண்ணன் இம்மாத காலச்சுவட்டில் ( செப் 2012) எழுதியிருக்கிறார். வாசகம் கீழ்க்கண்டவாறு.. “ கவிஞர்கள் எப்போதும் எதற்காகவும் உண்மையை விட்டுக்கொடுக்காதவர்கள் இல்லையா ?” என்று மனுஷ்ய புத்திரன் என்பவர் கேட்டிருக்கிறார்.

இவர் உயிர்மை என்ற பத்திரிக்கையும் அதன் பின் உயிர்மை பதிப்பகமும் தொடங்கியிருக்கிறார். சமீப வருடங்களாக தனது சொத்தான உயிர்மை பத்திரிக்கையில் இவர் கவிதைகள் எழுதிவருவதாகச் சொல்லுவதோடு அதை தனது பத்திரிக்கையிலேயே மனத்துணிவோடு வெளியிட்டு வருகிறார். அதோடுமட்டுமில்லாது அதைத் தொகுப்பாக வெளியிடும் அவரது தன்னப்பிக்கை மன உறுதி என்னை மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தும் ஒன்று.

இங்கு இப்பொழுது எனக்கு கேள்வியாக எழுவது ஒன்றே ஒன்றுதான். கவிஞர் சுகுமாரன் கவிஞர்தான். அதனால் உண்மையைப் பேச வேண்டும். ஆம கவிஞர்கள் எப்போதும் எதற்காகவும் உண்மையை விட்டுக்கொடுக்காதவர்களே. இந்த மனுஷ்யபுத்திரன் என்பவரும் ஒரு காலத்தில் கவிஞராக அறிமுகமானவரே. அதனால் எதற்காகவும் உண்மையை விட்டுக்கொடுக்காமல் தனது பதிப்பகத்தில் எந்தெந்தக் கவிஞர்களிடம் காசு வாங்கிக்கொண்டு புத்தகம் போட்டேன் எனச் சொன்னால் ஒரு வாசகனாக மகிழ்வேன்….

இந்தக் காசுக்கு 300 காப்பிகள் போடுவேன் இந்தக் காசுக்கு 500 காப்பிகள் போடுவேன் அதோடு புத்தகத்தை எழுதியவரே இத்தனை காப்பிகள் வாங்கிச் செல்லவேண்டும் என்கிற  ஷரத்தையும் இணைத்தால் பெரு மகிழ்வு கொள்வேன். ஏனெனில் இங்கு கவிப்பட்டாளங்கள் தங்கள் துவக்குகளை தூக்கிக் கொண்டு சுஜாதா புத்தகம் போட்டாங்கள்ல அந்தப் பதிப்பகத்துல என் புக்கு வந்திருக்கு, ஜெயமோகன் புத்தகம் போட்டாங்கள்ல அந்தப் பதிப்பகத்துல என் கவிதபுக்கு வந்துருக்கு நானும் கவிஞராக்கும் என தோள் உயர்த்தி, மூக்கு விடைத்து  பிற எழுத்தாளர்களின் தோளில் ஏறி பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். இதில் சம்பந்தப்பட்ட கவிஞர்களைப் பார்த்து, மதிப்பிற்குறிய கவிப்பெருந்தகைகளே அவர்கள் எழுதினார்கள் புத்தகம் போட்டார்கள். நீங்கள் என்ன செய்தீர்கள் என்ற கேள்வியைக் கேட்டால் சம்பந்தப்பட்ட புத்தகம் போட்ட கவிஞர்கள் செவியில் ஏராளாமான ஊமத்தம் பூக்கள் மலர்வதோடு அதை வாசகக் காதுகளிலும் சுற்றிவிடுகிறார்கள்.

புத்தகம் போட்டு அதை கழுதைப் பொதியெனச் சுமந்து நண்பர்களுக்கு இலவசமாய் வழங்கும் அவர்களது   வள்ளல் குணம் வியக்கத்தக்கது.  இது  எந்த விதத்திலும் அவர்களது தயாள குணத்தை பாதிக்கவில்லை என்பதையும் இங்கு பெருமையோடு நினைவுபடுத்துகிறேன்.

காசு கொடுத்தால் அட்டை முதல் அட்டை வரை தரமான புத்தகங்களை அச்சிட்டுத் தருகிறோம் என்ற விளம்பரத்தில் ஒரு துணை நிறுவனத்தையும் இந்த மனுஷ்யபுத்திரன் என்பவர் நடத்திவருகிறார். அதில் புத்தகங்கள் வெளிவந்திருந்தால் சம்பந்தப்பட்ட   கவிஞருக்கு வார்த்தைகளைவிட வண்ணத்தில், அட்டைப்பட ஓவியங்களில், அதன் செய் நேர்த்திகளில் எவ்வளவு தேர்வு…என்னே ரசனை  என விதந்தோதலாம். ஆனால் உயிர்மையில் புத்தகம் போட்டு,  கொடுத்த காசுக்காக பின்னட்டையில் நாலுவரிகளைக் கூவுவதை என்ன வென்று சொல்வது.

சிறுகுறிப்பு;

காலச்சுவடு காசு வாங்கிக்கொண்டு புத்தகம் போட்டாதாக ஒரு தகவல் கூட வாசகானான என் காதுகளை எட்டவில்லை… இருந்தால் உரையாடலாம்…ஏனெனில்  கவிஞர்கள் எப்போதும் எதற்காகவும் உண்மையை விட்டுக்கொடுக்காதவர்கள் இல்லையா ?” வாழ்க வளமுடன்( இதை பிரபலமாக்கியது வேதத்திரி மகரிஷி)


பெருங்குறிப்பு; இதை மனுஷ்ய புத்திரன் என்பவர்தான் சொல்லவேண்டும் என்பதில்லை. சம்பந்தப்பட்ட புத்தகம் போட்ட கவிஞர்களே சொல்லலாம். ஏனெனில் கவிஞர்கள் எப்போதும் எதற்காகவும் உண்மையை விட்டுக்கொடுக்காதவர்கள் இல்லையா…. ‘கதவைத் திற காற்று வரட்டும்….” ( இதை கவிதையில் எழுதியவர் சுந்தரராமசாமி, பிரபலப்படுத்தியவர் சுவாமி நித்யானந்தா என்பவர்.




காசுகொடுத்தா மனுஷ்யபுத்திரன் புத்தகம் போடுவார்.... மச்சான் நீ போடேன்...நீ போடேன் என்று உயிர்மைக்கு கவிஞர் பிடிக்கும் வேலையைச் செய்யும் ஒரு எழுத்தாளரையும், அவரைக் கண்டால் மனம் வருத்தப்படும் ஒரு நண்பரையும் நான் அறிவேன்.

இந்தக் குறிப்பு எனக்கு நானே சொல்லிக்கொள்வதற்காக…


வாழ்த்துக்களுடன்….
வசுமித்ர.

Monday, July 9, 2012

நூறு நாற்காலிகளும்....ஒரு ஜெயமோகனும்.


அறிஞர் ஜெயமோகன் அவர்கள் பண்டிதர் அயோத்திதாசரைப் பற்றி மூலச்சிந்தனையாளர் இவர்தான் என் தலித் உலகுக்கே எடுத்துக்காட்டிய உத்தமப் பெருமான் ஆவார். ஒருவர் தலித்தாக இல்லாவிடினும் உள்ளுக்குள் கொதிப்பேறி நாட்பட்ட அறமானது எரிமலைக் குழம்பெனத் தகிக்கும் எனில் அவர் அறம் பற்றியும் எவர் பற்றியும் போதிக்கும் முகமாக எழுதலாம். எழுத்து வெளியீடாக இதை வே.அலெக்ஸ் பதிப்பித்திருக்கிறார். பதிப்புரையில் இதுவரை அயோத்திதாசரை தமிழ்ச் சமூகத்தில் இதுவரை யாரும் காணாதபோது, அவரை ஒரு மூலச் சிந்தனையாளராக, மிகவும் அறமான தன் மானத்துடன் தனக்கேயுரிய பரபரப்புடம் ஜெயமோகன் கண்டுபிடித்து அவரை மூலச் சிந்தனையாளர் என, தலித் மக்களுக்கே அறிவுறுத்தியபோது அரங்கம் கவனமாக செவிமடுத்து உரையை குறிப்பெடுத்து அவ்வுரையை வரலாற்றாக்கும் வேலையைச் செய்தது. இவ்வுரையை கேட்கமட்டும்,

( அயோத்திதாசரின் உரையை அல்ல ) கேட்கவென சென்னை விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி கரூர் ஈரோடு என தேனி வரை அறிஞர் பெருமக்கள் வந்துள்ளனர்.

பதிப்பாசிரியர் இந்த உலகப்புகழ் உத்தமச் சிறுகதையை தனது கணிப்பொறியில் தரவிரக்கம் செய்து படித்தபொழுது அவருக்கு ஆழ்ந்த அதிர்ச்சியும் மனவேதனையும் மற்றும் உலுக்கிப் போடுதலும் நிகழ்ந்துள்ளது. உலுக்கிப் போட்டதன் விளைவாக தனது சில நண்பர்களுக்காக பரிந்துரை செய்யும்போது அவர்கள் படித்துக்கொண்டிருக்கும்போதே பொலபொலவென கண்ணீர் சிந்தியிருக்கிறார்கள். அதிலும் ஒரு வாசகர் ஜெயமோகனது கதையை படிக்க மாட்டேன் என வீராப்பாக இருந்ததாகவும் பதிப்பாசிரியர் சொல்லி அதை படித்ததும் ரியலி வெரி ஷாக்கிங் என்றதாகவும் பதிந்துள்ளார்.

ஒரு வாசகனாக எனக்கு நூலைப் படித்ததும் பெரிய பெரிய அதிர்ச்சியெல்லாம் வந்தது. சொல்லப்போனால் சில பல ஆண்டுகளுக்கு முன்னால் எனது பழைய வாசிப்பில் கதைகளை, கதைகளாய், கதைகளாய் மட்டும் படித்து இப்படி எனக்கு வந்த ஷாக்கீங், கண்ணீர், மற்றும் மனச் சோர்வு இவைகளை, உண்மைகளை அறிய நேர்ந்தபோது மிகவும் ஷாக்கிங்காக வெட்கம் வந்தது.

அயோத்திதாசர் எழுத்துக்களில். அம்பேத்கரின் எழுத்துக்களில் தெரியாத இந்த ஷாக்கிங், கண்ணீர், உலுக்கிப் போடுதல் மற்றும் தவிர்க்கமுடியாத அதிர்ச்சிகளையெல்லாம் ஜெயமோகன் தனது சிறுகதையில் ஷாக்கிங்க் நிறைந்த பல திருப்புமுனைகளோடு தந்துள்ளார். இடையிடையே மடங்கள் பற்றியும் அறத்தின் தீராத வேட்கையுணர்வு, மின்னும் கண்கள், ஆழமான சோர்வு என்ற பதங்கள் காந்திய அறிதலாய் முன்வைக்கப் படுகிறது.

அறம் என்பது அறிஞர் ஜெயமோகனின் வழிமுறைகளில் தனிமனிதன் சார்ந்ததே. நூல் முழுக்க ஒரு தலித்தின் தனிமனித அறத்தைப் பேச மற்ற ஆளும் மனிதர்களின் மன அறங்களைப் பேசியுள்ளார். அறம் என்றால் மனிதர்களுக்குப் பொது அதில் ஒடுக்கப்பட்ட சாதியை நிர்ணயிக்கும் அந்த மனிதனின் அறம் என்ன வாக இருக்கும் எனக் கேட்டுக்கொண்டேன். கதையின் இடையே வரும் அம்மா கேரக்டரானது ஆசிரியருக்கு தனது சொந்த உளவியல் சிக்கல் நிறைந்த தனது அன்னையின் மரணத்தையே இக்கதையிலும் கிளறியிருக்கிறது. இதை எனக்குத் தெரிந்து இந்த நூலில்தான் வெளிச்சமாக எழுதியிருக்கிறார். நூல் பற்றி அதிகமாகவோ குறைவாகவோ சொல்ல ஒன்றுமில்லை.

நூறு நாற்காலிகள் ஒரு அதியற்புத கண்ணீர் கதை. வரிகளில் துக்கம் வேண்டுவோர் மிகவும் நிதானமாக எழுத்து எழுத்தாய் படித்தால். கண்ணீர் வர கட்டாயம் உத்திரவாதம். படித்துவிட்டு. விஷ்ணுபுர மடத்தில் இணைந்தால் மோட்சம்.

இவைகள் என் வாசிப்பின் தளுதளுப்பு நிறைந்த கண்ணீர் கேள்விகள். தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம்.

1 இதைப் பதிப்பித்த வே. அலெக்ஸ். அயோத்திதாசரவர்களின் எழுத்துக்களைப் படிக்கும்போது இந்த ஷாக்கிங் வகையறா உணர்ச்சிகளை அடைந்ததாக எங்கும் பதிந்திருக்கிறாரா எனத் தெரியவில்லை.

2 அம்பேத்கரின் எழுத்துக்களைப் படிக்கும் போது பதிப்பாசிரியருக்கும் மற்ற நண்பர்களுக்கும் கண்ணீர் வந்ததா.

3 ஆசிரியர் அறவுணர்வாளர் ஜெயமோகன் அம்பேத்கரின் மீதான அவதூறுகளை அறச்சீற்றத்தோடு வைத்த போது எனக்குக் கண்ணீர் வந்தது, பதிப்பாசிரியருக்கு வந்ததா.....

4. அயோத்திதாசர் பற்றி அம்பேத்கர் எங்காவது பேசியிருக்கிறாரா...?

எல்லா நாற்கலிகளிலும் என் இருப்பே என ஜெயமோகன் நிரூபித்த இடமாக இந்த கதையை அவர் அறிவித்திருக்கிறார். நூலட்டையில் ஒரு கலெக்டரின் உண்மைக்கதை எனப் போடப்பட்டுள்ளது. அந்த உண்மையான கலெக்டர் தனது வாதைகளை குமுறல்களாய் வைக்க அதை ஆசிரியர் அறத்துளியாக கண்ணீராகப் பெருக்குகிறார்.

சிறுகுறிப்பு; இன்றைய காந்தி என்கிற அவரது அறநூலை காந்தியின் அறத்தை படித்து அன்றெல்லாம் உக்கிப்போய் கண்ணீர் துளிகளைச் சிந்திக்கொண்டே இருந்தேன். அந்த நள்ளிரவில் என் நண்பனுக்கு தாங்கமுடியாத அழுகையோடு போன் செய்து அவன் என் அழுகை கேட்டதும், மிகுந்த விகசிப்பும் விசும்பலுமாய் காந்தி என்றேன்...கெட்டவார்த்தையில் திட்டி படுக்கச் சொன்னான்.

கதையை எழுதும் நான் வேறு என எப்பொழுதுமே சொல்லிக்கொள்வேன். என்னுடைய கருத்துலகிற்குக் கட்டுப்பட்டு என் எழுத்து நிகழ்வதில்லை. அது பிறிதொரு வாழ்க்கைக்குள் நான் சென்று மீள்வதுதான்.அதன் பின் அக்கதைகளுக்கு நானும் ஒரு வாசகன். இந்தக் கதையின் கருத்துக்களுக்கு அல்லது உணர்ச்சிகளுக்கு நான் பொறுப்பல்ல, கதையை ஒருபோதும் என்குரலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அது ஒரு துண்டு வாழ்க்கை. என் வழியாக அது மொழியாகியது.இது ஜெயமோகன் எழுதிய குறிப்பு. இதில் ஒளிந்துள்ள் அயோக்கியத்தனங்களையும் கண்ணீரோடு வாசித்த நான் அவரது அடுத்த பாராவில் சிரிக்கத் தொடங்கினேன். அவருக்கான ஒரு நாயனத்தை ஊத எத்தனை துளைகள். எத்தனை விரல்கள். பிரம்மம் ஒக்கடே..பரபிரம்மம் ஒக்கட்டே....

துணைக்குறிப்பு; நூலில் ஒட்டுமொத்த அரசியலையும் மேற்கண்ட வரிகளே எனக்கு உணர்த்தியது. ஒட்டுமொத்த நூலுமே, தன் பெயரை மட்டுமே குறிக்க, உதவும் வரிகளை, எழுத்தாக முன் வைத்த ஜெயமோகனது அறக்குப்பை. நூலை வாசித்து முடித்ததும் எனக்கு சிறுநீர் முட்டியது. நூலை வாசித்து கண்ணீர் மல்கிய பெருமக்கள் எனது விமர்சனத்தையும் மேற்கண்ட வரிகள் வழியாகவே அணுகலாம்.

Sunday, June 24, 2012

பின் தொடரும் ஜெயமோகனின் குரல்...






விடியலின் வலிமை அது வெளியிட்ட முக்கியமான மொழியாக்கங்கள்தான் . தேபிபிரசாத் சட்டோபாத்யாயவின் இந்திய தத்துவ மரபில் நிலைத்திருப்பவையும் அழிந்தவையும்முதல் சமீபத்தில் வந்த டிராட்ஸ்கியின் வாழ்க்கை வரலாறு வரையிலான ஆக்கங்களால் விடியல் தமிழ்ச்சிந்தனை மரபில் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நிலைத்திருக்கும்.அதற்காகவே நீங்கள் பெருமைகொள்ளவேண்டும். இதை விடியலின் நூல்களை எல்லாம் வாங்கிய வாசகனாக நான் சொல்லலாமில்லையா? ”
- ஜெயமோகன்


ஜெயமோகன் உங்களின் நினைவுப்பிழை எந்தளவுக்கு முட்டாள்த்தனமானது என்பதை என் நினைவில் இருந்து சொல்கிறேன். உங்களது காரியக் கிறுக்கிற்கு உதவி செய்யும் முட்டாள்தனங்களையும், வக்ரத்தின் அடிப்பூச்சுக்களையும் தொடர்ச்சியாக அறிந்த எனக்கு எந்த நினைவுப் பிழையும் கிடையாது.

உங்களது விஷ்ணுபுரம் எனும் நூலை குறைந்தபட்சம் 7 முறை வாசித்தவன் நான். ஒரு மிகப்பெரிய உழைப்பை சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது என்ற என் நினைவு எனக்கு 22 களிலேயே வயதிலேயே இருந்தது. இப்பொழுது எனக்கு 33 வயது. அன்பரே உங்களைச் சந்தித்த போது விடைத்த காதுடன் எனக்கு உளுந்தவடை உபசரிப்புடன் தேநீரும் அளித்து மூன்று நாள் என்னுடன் தங்கி உரையாடுவோமா எனக் கேட்டவர் நீங்கள். உங்களை சென்னை நோக்கி தொலைக்காட்சி தொடருக்கு வசனம் எழுதுவீர்களா எனக் கேட்டதும் நான்தான். இன்று நீங்கள் நிற்கும் இடம் உங்கள் உழைப்பினால் மட்டுமென்றால் நேரிடையாகக் கேட்கிறேன். அதற்குள் சதிகளே இல்லையா. டால்ஸ்டாயும் தஸ்தாயெவ்ஸ்கியும் தூய யேசுகள் தேவ குமாரர்கள் என அரிப்பெடுத்து வசனங்களை நூல்களாக எழுதி வரும் நீங்கள், அவர்கள் அறம் என  எதைக் கூறுகிறார்கள் என ஒரு முறையாவது யோசித்ததுண்டா...


உங்களை தூக்கிச் சுமந்த தமிழினி வசந்தகுமாரிடம் நீங்கள் விடியல் பற்றிக் கேட்டிருந்தால் அவர் சொல்லிய்டிருப்பாரே. அறிவு கெட்டுப் போனதோடு நாறி, இந்த்துவத்துப் புழுக்களை நிரப்பிக் கொண்டு அலையும் உமது மூளையில், நினைவு என்பது சார்பும், காசும் உள்ளவரை தானே அய்யா. இதற்கு நாஞ்சில் நாடனும்  வேறு வேலை பார்த்துக் கொடுக்கிறார்.


நிற்க. விஷ்ணுபுரத்தை களவாட நீங்கள் ஒட்டுமொத்தமாக தமிழில் பயன்படுத்திய நூலின் தலைப்பையே தப்பும் தவறுமாக சொல்லியிருக்கிறீர்கள். அதன் தலைப்பு இதுதான். இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும். அந்த நூலை விடியல் பதிப்பிக்கவில்லை. பதிப்பித்தது சென்னை புக்ஸ். பொ.வேல்சாமி தான் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் கரிச்சான் குஞ்சுவின் கண்ணுக்கு ஆயிரம் ரூபாய் வைத்தியம் செய்து மொழியாக்கம் செய்து பதிப்பிக்கப் பட்ட நூல் அது. எல்லாவற்றையும் மறக்கும் உமக்கு எத்தனை ஞாபகப் பிழை என தெளிவாக நீங்கள் சொல்லலாம். மேலும் உங்களது ஞாபகப் பிழை விடியல் சிவாவின் எத்தனை வருட உழைப்பை கேலி செய்கிறது தெரியுமா உங்களுக்கு. தான் திருடி பிறறையும் நம்பமாட்டான் என்பதற்கு நீங்கள் முழு உதாரணம்.


உங்களைத் தாங்கி நிற்கும் தமிழினி வசந்தகுமார், மற்றும் நுண்மான் நுழைபுல நாஞ்சில் நாடன், இப்பொழுது குப்பைகளை மறுபதிப்பு செய்யும் கிழக்குப் பதிப்பக உரிமையாளர்கள்....உங்களுக்கு இவ்விசயத்தில் நண்பர்களாக இல்லாமல் இடது சாரியாக அவர் பதில் எழுத வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன்.

அதோடு தமிழினியின் வலிமை, இளமை, குறைந்தபட்ச நேர்மை, இன்னும் பல மைகளையும், பின் உயிர்மைகளையும், கிழக்குப் பதிப்பகத்தின் வலிமைகளையும் கவிதா பதிப்பகத்தின் பணமை....... நாம் பேசலாம்.


நீங்கள் சொன்னபடி விடியல் பதிப்பகம் வெளியிட்ட நூல்களுக்காக சிவா பெருமிதப்படவேண்டும்,  இது உண்மைதான். சிவா வேறு விடியல் வேறல்ல. ஆனால் நீங்கள் பெருமைப்பட பொள்ளாச்சி மகாலிங்கத்தின் பாதங்களும் இன்னும் எண்ணற்ற நாற்றமெடுத்த வார்த்தைகளும் உள்ளது. இதை உங்களை வாசித்த ஒரு வாசகனாகத்தான் எழுதுகிறேன். ஒரு வாசகனாக அதை எழுத உங்களுக்கு உரிமை இருப்பது போல் தமிழினியையும் உயிர்மையையும் கிழக்கையும் ஒரு வாசகனாக கேள்வி கேட்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது.


வாசகனாக
வசுமித்ர


சிறு குறிப்பு;  விடியலில் வெளிவந்த மொழியாக்கங்கள் தாண்டி அது வெளியிட்ட உள்ளூர் படைப்பாளிகளின் ஆக்கங்கள் குறித்து நான் பேசுவதற்காக காத்திருக்கிறேன். அதைவிட இன்னும் விரிவாக. உள்ளூர் படைப்பாளிகளுக்கு சொறிந்து கொடுக்கும் பதிப்பகங்கள் குறித்தும் நாம் பேசலாம் ஜெயமோகன்.

Wednesday, June 20, 2012

தேவதேவ....






மலம் தின்ன வைத்தல் 

கட்டு மீறத் துணிந்தவனை
இழுத்து வந்து உதைத்து, துடிக்கத் துடிக்கப்
பழுக்கக் காய்ச்சிய இறும்பினால் சூடு போட்டு
அவன் அலறலை
மீசையில் கைபோட்டு ரசித்தபடி
மீண்டும் அவனைக் குனியவைத்து
பிடரியில் மிதித்து அழுத்தி
மலம் தின்னச் செய்து
ஊரெல்லாம் பார்த்திருக்க
வெறிகொண்டாடி மகிழ்ந்தது
வேறு யாருமல்ல...
நான்தான்.....

இவ்வேளை, வருந்தி வருந்தி
இக்கவிதையை எழுதிக்கொண்டிருக்கும் நான்,
ஒரு தலித் அல்ல;
பார்ப்பானும் அல்ல;
ஒரு கவிஞன், இன்றைய பிரபஞ்சத்தின்
அதி சுரணை மிக்க ஒரே மனிதன். சமயங்களில்
தன்னைக் கடவுளெனச் சொல்லிக்கொள்ளும்
விசித்திரப் பிராணி


உச்சபட்ச வன்முறை பீரிடும் இந்த வெளிப்பாடு,
பெருந்துக்கமும் சுயமதிப்பும்
நீதியின்பாற் தீராத வேட்கையுமாய்த் தகித்தபடி
உலகின் ஒளியாய்ச் சுடர்பவர்களுக்காக அல்ல;
விடுதலைச் சிறுத்தைகளுக்காக அல்ல;
பகுத்தறிவுச் சிம்மங்களுக்காகவும் அல்ல;
தங்கள் வாழ்க்கைப் பாணியால்
சாதி - மத - சாமி - மல அக்னிக்குத்
தவறாது நெய் வார்த்துக் கொண்டிருப்பவர்களுக்காக,
மலம் தின்றுகொண்டிருக்கும் பார்ப்பனீயம்
தம் முகத்தைத் தானே பார்த்துக்கொள்ளுவதற்காக.
இரத்தம் செத்த சோனிகளும்
தோல் மரத்துப்போன பேமானிகளும்
மானம் மரியாதை வெட்கம் சூடு மற்றும்
சுரணை பெறுவதற்காக!


- தேவதேவன்

வணக்கம் கவி தேவதேவ....

நீண்டகாலம் கழித்து ஒரு சிறு வெஞ்சினம் பொங்க உங்களது கவிதைகளின் தொகுதியை மின்சாரமற்ற பகலில், அறை வெட்கையில் எனது இருதயத்தின் சளி ஓசையை கேட்கும் மௌனத்தில் வாசித்தேன்.


அன்ப...
மேற்கண்ட உமது கவிதையில் ஓடும் வஞ்சிக்கப்பட்ட மனத்தின் ஆற்றாமையை, பின்னுரை என்ற பேரில் " அமைதி என்பது மரணத் தறுவாயோ? வாழ்வின் தலைவாசலோ?” என்ற தலைப்பில் ( நவீனத்துக்குப் பின் கவிதை என்பதன் சுருக்கப்பட்ட வடிவம்) உலுத்துப் போன மனச்சான்றுடன் ஜெயமோகன் எழுதியிருக்கும் வக்ர மகிழ்ச்சியையும் கண்டேன். காலம் பெருந்தச்சனின் இயலாமையில் வைரமுருகி...இற்றுப்போயிருக்கிறது.


அன்ப....தேவ தேவ...

ஜெயமோகனுக்கு தங்களிடம் சொல்ல ஏதேனும் ஒரு சொல்லிருந்தால் சொல்லிவிடுங்களேன். கவி அமைதி, பீதியின் இறகல்லவா....அலைக்கழிப்பு, சித்தம் தடுமாறுதல்...இவைகளோடு, மனக்கசப்பும். கவிதையில் கொப்பளிக்கும் அறாத நீதியுணர்வைத்தான் வேதம் எனும் மலத்துணியில் நாளும் முக்கி, ஆட்காட்டி விரலுக்கும் கட்டைவிரலுக்குமிடையே அழுத்தி நசுக்கிக் கசக்கி, சூடான அதன் மணத்தை, நாசியில் ஏற்றி, அறிதல் என்றும் ஞானம் என்றும் தரிசனம் என்றும்,.... என்றும் வற்றாத தமிழால் குலை தள்ளி வருகிறார்.


எம் கவிஞ...

எல்லாவற்றையும் மறைக்க கோவணத்தில் துணி இல்லை இல்லவா...நாஞ்சில் நாடன் தன் கோவணத்தை விஷ்ணுபுரப் பட்டுத்தண்ணியில் அல்லவா சுற்றி மறைக்கிறார். பிருஷ்டத்தில் பொறித்திருக்கும் சாதியை எப்படி பொற்பட்டு நூலால் மறைக்க முடியும். எல்லாவற்றையும் பேச வைக்கும் மது பற்றிப் பேசியவர், அதி போதையில் இன்னும் நீ இந்துத்துவப் பசு...( இங்கு பன்றி என்பது உச்சபட்ச அழகு, அதனால் தவிர்த்திருக்கிறேன்) எனச்சொல்ல எது தடுக்கிறது. நீங்களும் பன்றி பற்றி எழுதியுள்ளீர்கள்தானே....


எம் அன்ப...

சொல்லக் கூடாத வார்த்தைகளை, எழுதிப் படிக்கையில் என்ன சுகம் கிட்டப் பெறுகிறது.

உம் நண்பர் நகுலன் சொல்லியிருக்கிறார்.


173.

அவன் உன்னுடன் இசைவதற்கு
அறிகுறியாக " ஆமாம் "
என்று தலையை
ஆட்டிக்கொண்டிருக்கும்போதே
உன்னைப் பார்த்துக்கொள்கிறேன்"
என்று உள்ளே
உறுமிக்கொண்டிருப்பான்.

174.

அவன்
எவர்களை ஒரு உத்தேசத்திற்காக
மதிக்கிறானோ
அந்த உத்தேசம் நிறைவேறியபின்
அவன் அவர்களை
அவமதிப்பான்
இதற்கு அவன் கொடுத்திருக்கும்
அர்த்தம்: ஆத்ம சுதந்திரம்.


175

அவன் அதிகமாகப் பேசமாட்டான்
ஏனென்றால்
தான் பேசினால் எங்கேயாவது
அகப்பட்டுக் கொண்டுவிட்டாலோ
என்ற
எச்சரிக்கையான வாழ்வு.

176

அவனைப் பற்றி
நாலுந்தெரிந்தவர்
சொல்வது; அவன் நல்லவன்;
ஆனால் அவனிடம் போகாமல் இருப்பது
நமக்கு நல்லது!

177

போகட்டும்”
என்னவானாலும்
நாலுபேர்
அவன் பேரைச் சொல்லுவார்கள்
பிறகு இருக்கவே
இருக்கிறது;
நாற்பது வெள்ளிக்காசு.


- நகுலன் தங்களிடம் மேற்குறித்த வரிகள் பற்றி பேசியதுண்டா, ஒரு வேளை கைப்பிரதியிலேயே கண்டு தாங்கள் புன்னகைத்திருக்கவும் கூடும்.


அன்ப....
தங்களது கவிதைகள் எனக்கு சில சமயம் வழிகாட்டி, சில சமயம் துலாக்கோல்,
சில சமயம் கவிதை...


ஆனாலும்..... நான் உங்கள்
ப்ரியத்துக்குரியவர்கள் பட்டியலில் இணைவதற்கு
சற்று யோசனையாகத்தான் இருக்கிறது...
" தேவதேவன்"
என் ஆள்
என்ற குரல், ஜெயமோகனின் ராம நாம தொண்டையின் அடிவயிற்றிலிருந்து வருகிறது.
ஏதேனும் நீதி சொல்லி ஒரு சிற்றம்பை எய்யமுடியுமா...வாலியின் குரலய்யா இது.


நான் நலம்
உங்கள் நலத்துக்கு உங்களையே பிரார்த்திக்கிறேன்...
சந்திக்கும் தருணத்தில் ஏதேனும் ஒன்று காலை இடறினாலும் என் பெயர் சுமக்கும் உடலை உங்கள் முன் காட்டிவிட்டுச் செல்வேன்.


சிறு நண்பன்....
வசுமித்ர...




“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...