Saturday, February 19, 2011

இளவரசிக்கும் அடிமைக்குமான இவ்வுரையாடலில் எவ்வார்த்தையில் துளிர்விட்டது காதல்.




இளவரசிக்கும் அடிமைக்குமான இவ்வுரையாடலில் எவ்வார்த்தையில் துளிர்விட்டது காதல்

காலம் இருளாயிருக்கிறது அடிமையே.
ஆம் இளவரசியே
இருள் வாசனையாகவும் இருகிறது.
அடிமையே நான் அறிந்து உனக்கு வாசனைப் புலன்கள் அடைத்து விட்டதாகவே எண்ணினேன்.

ஆம் இளவரசி. உங்கள் வலிமை பொருந்திய நா, அடிமையின் முன் எப்பொழுதும் சற்றும் சஞ்சலமில்லாது, உண்மையை உரைப்பதாகவே இருக்கிறது. இளவரசி தன் புருவத்தை உயர்த்தத்தொடங்கினாள்.
அடிமை தோள்களைத் தளரச்செய்து இயல்பாய் குனிந்து இளவரசியே நான் நிற்கலாமா. இளவரசி தனங்களை குழைத்து ம்என்றாள்.

அடிமை மண்டியிட்டபடி இளவரசி... சொற்களை சைகையால் இசைத்து, அதன் அர்த்தங்களை இறுக வைக்கும் தங்களது இரு புருவங்களில் இடது புற புருவத்தை இறக்குவீர்களானால் நான் உங்கள் முன் பயமற்றுப் பேசமுடியும். பேசு அடிமையே. முதலில் இளவரசியின் முகம் பார்த்து பேச நினைத்தவன் பின் பார்வையை பூமிக்கு இறக்கி.. நான் உங்கள் நாவில் விளையும் நிமிர்ந்த சொல்லுக்கு எப்பொழுதும் தலைவணங்குபவன். என் கண்கள் எப்பொழுதும் அடிமைக்குண்டான துயருடனே இருப்பதை தாங்கள் அறீவீர்கள். அடிமையின் முன் மட்டுமல்ல பேரரசர்களின் வாளின் முன்னும் உங்கள் குணங்கள் மணம் வீசத் தயங்கியதேயில்லை. உங்கள் அலங்காரங்கள் எப்பொழுதும் உங்களுக்கானதாகவே இருக்கிறது. எவர் பொருட்டும் நாணாத சொல்லுக்கு மட்டுமே உங்கள் இதழ் திறக்கிறது.

இளவரசி அடிமையின் பாதவிரல்களைப் பார்ப்பது தனக்கிழுக்கு என நினைத்தவாறு, எனக்குப் புரிகிறது அடிமையே நீ வலியறிந்தவன். கண்களை உள்ளுக்கிழுத்தபடி அடிமை சொல்லத்தொடங்கினான்.

மன்னித்துவிடுங்கள் இளவரசி நான் அடிமை என்று எப்பொழுது எண்ணத் தொடங்கினேனோ, அப்பொழுதே என்னை நான் தனிமைக்கு பருக கொடுத்தேன். தனிமை, அகண்ட வாய்களையும் பெரும் கூரான அம்பெனச் சுழலும் நாவையும் கொண்டது. அதன் பற்கள் கனவுகளையும், கனவு காணும் விழிகளையும் கசக்கிச் சாறு பிழியும் தன்மையும் கொண்டது.

ஆம் இளவரசியே... அஃது, உள்ளது உள்ளபடி முதலில் என் விழிகளைத்தான் காவு கொண்டது. அது வலிதரும் விதத்தில்தான் என்னை வந்தணுகுமென ஏமாந்து என் உடலில் வலிமையேற்றி, எதிர்க்கும் துணிவோடு காத்திருந்தேன். முட்டாள் என்று என்னை எனக்கு அது மிகவும் வன்முறையோடு அடையாளப்படுத்தியது. அடிமையின் சொற்களை தற்சமயம் கேட்கும் நிலையிலிருந்த இளவரசி, அவன் உடலைப் பாராது, வனமெங்கும் பச்சை இலைகளை வரைந்து வைத்திருக்கும் வனத்தைப் பார்வைக்கு வைத்தபடி ஏன் அடிமையே எப்படி அதை அனுபவித்தாய் என தன் வார்த்தையை முடிக்கையில்,
தற்சமயம் கேட்கும் அடிமை தன் தலையை வானம் பார்த்து குவித்தபடி தொடங்கினான்.

இளவரசியே... ஒரு அடிமை அறிந்ததை விட இளவரசி நீங்களும் உங்கள் புலன்களும் அனுபவித்தவை ஏராளம். ஓர் அடிமை சொல்லி தாங்களுக்கு தெரிய வேண்டியது ஒன்றுமில்லை. இருந்தாலும் இவ்வடிமையின் சொற்களுக்கு அமைதி காக்கும் உங்கள் பேரன்பில் விளையும், நெற்கதிரொத்த அன்புக்கு நானும் என் வார்த்தைகளும் இருப்பதில் ஆனந்தமடைகிறேன். கேளுங்கள் இளவரசியே மன்னித்து விடுங்கள். கேளுங்கள் என அகம்பாவத்தோடு சொல்லியது தவறுதான். கேளுங்கள் என நான் சொன்ன என் அகம்பாவத்தை மன்னித்து விடுங்கள் சொல்கிறேன் எனத்தொடங்கி சொல்லியிருக்க வேண்டும்.

நிறுத்திக்கொள் அடிமையே.. உன் பணிவான சொற்களை. உன் உடம்பில் பாயும் குருதியின் வெளிச்சம் என் நிழலால்தான் என்பதை நீ எனக்கு ஞாபக மூட்டவேண்டியதில்லை. கொடுப்பவளுக்குத் தெரியும், உள்ளங்கையில் ஒளிந்திருக்கும் பொருளின் இறுக்கம்.

நன்றி இளவரசியே உங்கள் இதழால் என்னை மன்னித்ததற்கு. நான் தனிமையை எனக்கு என் உடலுக்கு, என் வாக்கிற்கு அறிமுகப்படுத்தியபோது, அது கொடுங்காட்டின் ஒற்றை உடல் கொண்ட சர்ப்பமாக வழிந்து நெளிந்து கொண்டிருந்தது. அதன் கூரிய பற்கள் எப்பொழுது பதியுமோவென என் தசைகள் புணர்ச்சிக்குத் தயாராவது போல் நடுக்கத்துடனே, அல்லது எதிர்பார்த்தபடி தசையை தின்னுமோ என்கிற அச்சம் தவிர வேறெதுவுமில்லை. ஆனாலும் தனிமை எனக்கு உற்ற துணையாகத்தான் இருந்திருக்கவேண்டும்.

இளவரசி கரும் விழிகளால் அடிமையின் உடலை ஒருமுறை வெறுப்பும் கசப்பும் நிரம்பித்துள்ளும் பார்வையால் நோட்டமிடுவதையும், உணர்ந்த அடிமை, தனிமைதான் இப்பொழுது தன்னை கவ்வியிழுக்கிறதென உணர்ந்து தசைகளை இறுக்கிக்கொண்டபடி இளவரசி அருகில் பயமின்றி தனிமை தன்னுடலில் எப்படி பயமின்றி ஆட்சிசெய்யமுடியும் என்ற குழப்பத்தோடு நிமிர்ந்தவன் விழிகளை மறைத்துக்கொண்டிருந்தது, இளவரசியின் கரும்நிற பாவைகள்.

திடுக்கிட்டபடி கால்கள் உதற இளவரசி... என்ற சொல்லுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் தத்தளிப்பும் பயமும் ஒருசேர ஆட்டிவைக்கும் அவனுடலை திருப்தியோடு விழிகளால் விழுங்கியவாறு, தான் அவன் பயத்தை உண்டு வாழ்வதை அவனுக்கு காட்டிக்கொடுக்கக்கூடாதென்ற சிறு விதியுடன் ஏன் அடிமையே உரையாடலில் எடுத்துக்காட்டென நீ சொன்ன புணர்ச்சி என்கிற வார்த்தையை எப்படி அச்சத்துக்கு நிறையான சொல்லாக முன்வைத்தாய், அது வெறும் வார்த்தைதானா,  அல்லது அனுபவத்தின் சதையறிந்த சொல்லா, இல்லை என்னுடலை அவ்வார்த்தையின் முன் வைக்கும் உன் விருப்பமாம். என்றாள்.

தயங்கி தன்னுடலை தானே அறுவெறுப்போடும், தானே அப்பார்வையை தன்னுடலுக்கு தன் விருப்பமின்றித் தருவதால் கூசிச்சுருங்கும் நரம்புகளையும் அகத்தால் பார்த்தபடி மனதின் பற்களால் தான் கூறிய வார்த்தை, இளவரசியின் ஆளுமை உடலில், திமிந்த தசையின் நுண்ணிய துவாரத்தில் சொறுகிவிட்டது. இப்பொழுது வந்து வீழ்ந்தது, துவாரத்தில் சொறுகிய வார்த்தையின் வழி கசியும் சிறு நிணத்துளியே, எனபதுடன் தான் காவு கொள்ளப்படுவோம் என்ற உறுதியான சிந்தனையுடன் கெண்டைக்கால்களை இறுக்கமாக்கி மரணத்தின் முன் ஒன்றும் செய்ய இயலாது, காலம் தோறும் முயன்று அதன்முன் தோல்வியை வைத்துவிட்டுப்போன தன் மூதாதையரை நினைத்து, ஒரு துளிக் கண்ணீர் சிந்தினால் கூட இளவரசியின் முன் அடிமை உணர்ச்சியைக் காட்டக்கூடாது என்ற அடிமையின் அகராதி மனதில் விரிந்து, காற்றில் படபடத்தலைய கன்னங்களால் காற்றை உள்ளுக்கிழுத்து. அடிமை பிதற்றத் தொடங்கினான்.

இளவரசி... ஒரு அடிமை தன்னைக் கொல்லுங்கள் என்றோ, அல்லது தண்டியுங்கள் என்றோ ஆள்வோருக்கு வேண்டுகோள்களாகவோ விருப்பமாகவோ, அல்லது தன்னிச்சையாகக் கூடக் கூறக் கூடாதென்பதையும், நீங்கள் உங்கள் தகுதியையும் தாண்டி எளிய ஜீவன் என்ற கருணையோடு பார்க்கும் என்னுடலும் மனமும் அறியும் தேவி. நான் பிழை செய்தது உங்கள் அன்பின் பார்வையில் எப்படி என்னுடல் மீறி விழுந்து பதிந்தது என்பதையறியா என் அகத்தை சுட்டுப்பொசுக்குங்கள் உடலை காகங்களுக்கு உங்கள் தேச எல்லை தாண்டி கொண்டு செல்லச் செய்து கொத்தி உண்ணவிடுங்கள். வார்த்தைகளை மேலும் மேலும் இறைப்பதால் தன் சாவினால் கூட இளவரசியை திருப்தி செய்யாமல் போய்விடக்கூடும் என்ற பதைபதைப்பில் தன் நாவைத் தின்ன வரும் வார்த்தைகளை பற்களால் அரைத்து விழுங்கியபடி அமைதியாகி கண்கள் தாழ தரையைப் பார்த்தபடி நின்றான் அடிமை.

No comments:

Post a Comment

இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...