Friday, March 11, 2011

தலித் தாய் - மாத்தூரி நாகேஷ் பாபு.



எந்தவொரு அரசு மருத்துவமனையின்
சவக்கிடங்கின் முன்னாலும்
நீங்கள் ஒரு கண்ணீர்க் குளத்தைப் பார்க்கலாம்
அதுதான் என் அம்மா
எந்தவொரு இடுகாட்டிலும்
தனிமையில் நிற்கும் ஒரு பாறையை
நீங்கள் பார்க்கலாம்
அதுதான் என் அம்மா
சமாதி கட்டுவதற்குக் கூடத் தகுதியற்று
ஒரு புதை குழிமேல் எழுந்து நிற்கும்
ஒரு பாறை
அதுதான் என் அம்மா
என் அம்மாவின் பெயர் யசோதா அல்ல
கௌசல்யாவும் அல்ல
பசியால் நான் வீறிட்டழுதபோது
என்னைக் கையில் எடுத்து
நிலாவை வேடிக்கை காட்டி
வெள்ளித் தட்டில் சோறு ஊட்டியதில்லை
என் அம்மா
நுஜ்டியைக் கேட்டு
அடம் பிடித்தபோது
அவள் என்னை அதட்டினாள்
பிஸ்கெட்டுக்களைக்கூட
எனக்கு ஊட்டியதில்லை என் அம்மா
அவள் கண்களில் என்றுமே
ஒளியைப் பார்க்கமுடியாது
சொல்லுங்கள்
இப்படிப்பட்ட அம்மாவைப் பற்றி
நான் என்ன எழுதமுடியும்?
எல்லோரும் அம்மாவைப் பற்றி
கவிதை எழுதுகிறார்கள் என்றால்
அவர்கள் அம்மாக்கள்
ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
என் அம்மாவைப் பற்றிச் சொல்ல
என்ன இருக்கிறது
‘ஏய்,’  ‘ஓய்’ என்பதைத்தவிர
அவளுக்கு வேறு பெயர்கள் இல்லை
‘தேவடியா’ என்று
அழைக்கப்பட்டதைத் தவிர
வேறு எந்தப் பட்டங்களும் அவளுக்கில்லை
ஒரு பிடிச் சோற்றுக்காக
வாழ்நாள் முழுக்கவும் கவலைப்பட்டு
நம்பிக்கையிழந்த பைத்தியக்காரி அவள்
இப்படிப்பட்ட ஒரு அம்மாவைப்பாட
வார்த்தைகளும், மரபுகளும்
ஒத்துழைக்கும் என்றா
நீங்கள் நினைக்கிறீர்கள்?
எல்லோருடைய அம்மாக்களும்
ஆனந்தமாக உறங்கிக்கொண்டிருந்தபோது
என் அம்மாவோ
அறுவடையின் போது கற்பழிக்கப்பட்டாள்
பணக்கார அம்மாக்கள்
சிறந்த தாய்மார்கள் என்ற விருதுகளை
பெற்றுக் கொண்டிருந்தபோது
ஒருவாய் தண்ணீர் குடித்ததற்காக
அபராதம் செலுத்திக்கொண்டிருந்தாள்
என் அம்மா
மற்றவர்களின் அம்மாக்கள்
தலைவர்களாகி ஆண்டு கொண்டிருந்தபோது
என் அம்மாவோ
அரசாங்க அலுவலகங்களின் முன்னால்
தர்ணா செய்துகொண்டிருந்தாள்
அம்மா என்றவுடன் யாருக்கும்
நினைவு வருவது
பால் ஊட்டும் ஒரு உருவம் அல்லது
தாலாட்டு
ஆனால் அம்மா என்றதும்
என் நினைவுக்கு வருவது
கோழி கூவுவதிலிருந்து
இரவில் அப்பா தொடும் வரை
களை எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு உருவம்
அல்லது மண் சுமந்து கொண்டிருக்கும் ஒரு உருவம்
என் முரட்டு அம்மாவுக்கு
தான் ஒரு பெண் என்பது கூட தெரியாது
நான் என்ன எழுத வேண்டுமென்று
நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
என் அம்மா எனக்காக
ஒரு தாலாட்டைக் கூடப் பாடியதில்லை
பசியோடு போய்விட்டது அவள் குரல்
அவள் என்னைத் தட்டி
தூங்கவைத்தது கூட இல்லை
அவள் கைகள்
உழவுக்கருவிகளாக மாறி நாளாயிற்று
அம்மாவின் சுண்டு விரலைப் பிடித்தபடி
மற்ற குழந்தைகள் சென்று கொண்டிருந்தபோது
நானோ
என்
அம்மாவின் அடி வயிற்றில்
சுருண்டு கிடந்தேன் அய்யா !
நடமாடும் தெய்வங்களாக
மற்ற குழந்தைகள் தங்கள் அம்மாக்களை
புகழ்ந்துகொண்டிருந்தபோது
பள்ளிக் கட்டணம் கட்ட முடியவில்லை
என்பதற்காக கோபத்தில்
என் அம்மாவின் மேல் எரிந்து விழுந்தேன்
தங்கள் பணக்கார அம்மாக்களுக்கு
தலைவலி என்றாலே துடிக்கும்
மற்ற குழந்தைகள் நடுவில்
என் நோயாளி அம்மா
ஏன் இன்னும் சாகவில்லை என்று
கருவிக்கொண்டிருந்தேன் நான்
அய்யா என்ன சொல்வது இதை !
மழையில் நனைந்த நான்
துவட்டிக் கொள்ள
என் அம்மாவின் முந்தானையை
பிடித்து இழுத்தபோது
வெளிறிய கந்தல் துணி
என்னைப் பார்த்துச் சிரித்தது

வறண்ட தொண்டையுடன்
தாகத்தில் என் அம்மாவின் மார்புகளை
என் உதடுகளால் தொட்டபோது
அவளது விலா எலும்புகள்
என்னைக் குத்தின
சக மனிதர்களையே விலங்குகளாகப் பார்க்கும்
விலங்குகளைப் பெற்றெடுத்த
இலட்சக்கணக்கான அம்மாக்களுக்கு நடுவே
மனிதத் தன்மையோடு இருந்த
என் அம்மாவைப் பற்றிப் பேச
இந்தக் கவிதையின் மொழி போதாது அய்யா !


புதிய கையெழுத்து : தற்காலத் தெலுங்குக் கவிதைகள்.
ஆங்கிலம் வழி தமிழில் : வெ.கோவிந்த சாமி.
விடியல் பதிப்பகம். 



2 comments:

  1. மிகச் சிறந்த கவிதையையும்
    அந்த கவிதைத் தொகுதியின்
    விலாசத்தையும் அளித்தமைக்கும் மிக்க நன்றி
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஏதோ குற்ற உணர்வு தொடர்கிறது அம்மாவின் மடியில் சொகுசாய் சாய்ந்து தாலாட்டு கேட்டதற்காக.

    ReplyDelete

இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...