Monday, October 3, 2016

மார்க்சிய அவமதிப்பும், தமுஎகசவும், அடிப்பொடிகளும்...






“தன்னெஞ்சறிவது பொய்யற்க”

 தமுஎகச தேனியில் வைத்து எஸ் வி ராஜதுரை அவர்களுக்கு வாழ்நாள் சாதானையாளர் விருதை வழங்கியது. ராஜதுரைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவதோ (முதியோர் விருது *) இன்னும் பல விருதுகளை வழங்குவதோ அவர்களது அமைப்பின் விருப்பம். அதில் தலையிட யாருக்கும் எந்த உரிமையும் இல்லை, என அவர்கள் சொல்வதற்கு உரிமையும் இருக்கிறது. அதே சமயம் அவரை மார்க்சிய அறிஞர் என்ற பதத்தின் கீழ் அவரை அடையாளப்படுத்துவது ஏன் என்ற கேள்வியை முன் வைக்க நமக்கு கடமையும் இருக்கிறது.

வாழ்நாள் சாதானையாளர் விருது வழங்கிய தமுஎகச தோழர்கள் மேடையில் அவரை மார்க்சிய அறிஞர் என்றே அனைவரும் அழைத்தனர். அழைப்பிதழிலும் அவ்வாற்றே குறிப்பிட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்புக்கு மார்க்சியம் தெரிய வேண்டும் என்கிற நிபந்தனையில்லை. அது மார்க்சியத்தை எந்த நிலையில் வைத்து அணுகுகிறது என்பதே என் சந்தேகம், அந்த சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது சம்பந்தப்பட்ட அந்த விழா.

காலையில் தமுஎகசவின் மாநிலச் செயலாளர் சு.வெங்கடேசனிடம் ராஜதுரையை எந்த அடிப்படையில் மார்க்சிய அறிஞர் எனச் சொல்லுகிறீர்கள் என்பதோடு இன்னும் சில கேள்விகளையும் முன் வைத்தேன். அவர் “நான் full form இல்” வந்திருப்பதாகச் சொன்னதோடு, “உங்கள் கேள்விகளை முன்வைக்கலாம் கொஞ்சம் நிதானமாகக் கேளுங்கள்” என்றார். நானும் சரி என்றேன். அதற்கு முன் தோழர்கள் பலரிடமும் இக்கேள்விகளை வைத்தேன். பதிலாக கிடைத்தது அதிர்ச்சியும் பதட்டமுமே. விழா தொடங்கி தமுஎகச தனது வாசிப்பில் சிறந்த நூல்கள் எனப் பரிசளித்து எழுத்தாளர்களை முன்மொழிந்தது. அது முன்மொழிந்த அனைத்து நூல்களிலும் எனக்கு கருத்து மாறுபாடு உள்ளதெனினும் அது குறித்துப் பேச அந்த மேடையில் ஏதுமில்லை. பொதுவாக தமுஎகச விருதென்பது எழுத்தாளர் என்ற குறிப்பை முன்வைப்பதை விட வளரும் எழுத்தாளர்கள், அறிமுக எழுத்தாளர்கள் என்ற அடைப்பிலேயே தனது முடிவை வழங்கும். அதன் தேர்வாளர்களும் சுட்டல்களும் அப்படி. அது குறித்துச் சொல்ல ஏதுமில்லை.

விழாவில் ராஜதுரைக்கு பரிசாக ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. அதை அவர் மார்க்சிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு வழங்கிவிடுவதாகச் சொல்லி அமர்ந்தார். கலந்துரையாடல் ஆரம்பித்தது. ஆனால், எஸ்.வி. ஆர் மேடையிலேயே அமர்ந்திருந்தார். கலந்துரையாடலை ஒருங்கிணைப்பவராக ஆதவன் தீட்சண்யாவும் அவருடன் அமர்ந்திருந்தார். மேடையில் ஒருவரை அமரவைத்து கீழிருந்து கேள்விகளை முன்வைப்பதற்கு பெயர் கலந்துரையாடல் என்றானது! முதல் கேள்வியை மோகன் குமாரமங்கலம் எழுப்பினார். அவரது கேள்வி.. “சமீபத்தில் வெளிவந்த ரங்கநாயகம்மாவின் நூல் இரு வேறு பார்வைகளை வழங்கிவருகிறது உங்கள் கருத்தென்ன” எனக் கேட்டார். நான் கவனிக்கத் தொடங்கினேன். கவனிக்கத் தொடங்கிய அடுத்த கணம் ராஜதுரை பதில் இதோ என உளரத் தொடங்கினார். (இது மிகைப்படுத்தல் அல்ல. அவரது பதிலை ஒளிப்பதிவு செய்திருந்தால் அதை வைத்தே வாசகர்கள் உணரமுடியும்).

முதலில் ரங்கநாயகம்மாவின் நூலை தெலுங்கில் யாருமே கண்டுகொள்ளவில்லை என்றார். பின் அந்த நூலை சத்யமூர்த்தி போன்றோர் மறுத்துவிட்டார்கள் என்றார். நக்சல் பாரிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார். ரங்கநாயகம்மா போன்றோரை குகைமார்க்சியர் என அழைப்பதாகச் சொன்னார், பின் அம்பேத்கர் நூல்களை முழுதாகத் தொகுக்கவில்லை என்றார். மார்க்சின் நூல்களையும் முழுதாகத் தொகுக்கவில்லை என்றார். எந்த முழு முடிவுக்கும் வரமுடியவில்லை என்றார் இப்படி பல முடிவுகளை முடிவில்லாமல் உளறினார்!

அவரது புரிதலை விளக்குமுகமாக எனக்குப் பல கேள்விகள் முன்னெழுந்தன. முதலில் ஒரு நூலை கண்டுகொள்ளாததானாலேயே அதைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்கிற அவரது விளக்கம் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. இந்தக் கூற்றை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் அங்கு வந்திருந்த தமுஎகச தோழர்களில் நூற்றுக்கு 99 சதமானோர் ராஜதுரை அவர்களின் நூலைப் படித்திருக்கவே வாய்ப்பில்லை. இதை உறுதியாக கூறமுடியும். வந்திருந்த தோழர்கள் பலருக்கு நம்ம சேர்ந்திருக்கிற அமைப்பு யாருக்கோ பரிசு கொடுக்குதாம்ல.. என்ற உணர்ச்சியே மேலோங்கியிருந்தது. அது தவிர வேறு எதும் இல்லை. தேனி தமுஎகச பொறுப்பாளர்கள் கூட எஸ்.வி.ஆரைப் படித்தது இல்லை என்பதை அவர்கள் பேச்சில் உணர முடிந்தது. அப்படியிருக்க, ராஜதுரை ரங்கநாயகம்மாவின் நூல் கண்டுகொள்ளப்படவில்லை என்று மிக நிச்சயமாகச் சொன்னார். ஒரு தர்க்கத்திற்காக இந்தக் கேள்வியை எதிர்கொண்டு அதிகம் விற்ற நூல்தான் கண்டுகொள்ளப்பட்டிருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா என்று நகர்ந்தால் அதுவும் பிழை. இருப்பினும் ஒரு சுட்டலாக இங்கு நான் சொல்ல வருவது, ...ஆம்..தெலுங்கில் ரங்கநாயகம்மாவின் சாதியப் பிரச்சினை...நூல் 11 பதிப்புகளைக் கண்டிருக்கிறது. ராஜதுரையின் நூல் இரண்டாம் பதிப்பு வருவதற்கே இருபது வருடங்கள் ஆகிறது! தமிழில் ரங்கநாயகம்மா நூல் நான்கு மாத காலங்களில் மூன்று பதிப்புகளைக் கண்டிருக்கிறது. முதல் பதிப்பில் 500 பிரதிகள், இரண்டாம் பதிப்பில் 1000 பிரதிகள், மூன்றாவது பதிப்பில் 2000 பிரதிகள் போட்டு அதுவும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதுவா ஒரு நூலை மதிப்பிடும் அளவுகோல்.

இங்கு ராஜதுரைக்கு நான் வைக்கும் கேள்வி ஒரு நூல் அதிகம் விற்றால் அதுதான் நல்ல நூல் என்றால் முதலாளித்துவ குப்பைகளையும், அவற்றின் சந்தைகளையும் நீங்கள் பொருட்படுத்துகிறார்களா?

இரண்டாவது, கண்டுகொள்ளப்படாத அந்த நூலை சத்யமூர்த்தி போன்றோர் விமர்சித்துவிட்டார்கள் என்று சொல்வதன் மூலம்  என்ன சொல்ல வருகிறீர்கள் அவர் விமர்சித்து விட்டார் என்பதன் மூலம் சத்யமூர்த்தி ஏதோ தத்துவ தளகர்த்தர் போலவும், அவரே விமர்சித்ததால் அந்த நூல் ஒன்றும் பெரியவிசயமாகப் படவில்லை என்பது போலவும் ஒரு தொனியை முன்வைத்திருக்கிறீர்களே இதற்கு என்ன அர்த்தம். இதற்குப் பெயர் விமர்சனமா?

கண்டுகொள்ளப்படாத  ரங்கநாயகம்மாவின் நூலை விமர்சிக்கிறேன் என சத்யமூர்த்தி விமர்சித்து அதற்கு ரங்கநாயகமா பதில் கொடுத்த விபரங்கள் எதும் தாங்கள் அறியாதாதா ராஜதுரை அவர்களே? சத்யமூர்த்தி நக்சல்பாரி இயக்கத்திலிருந்து பகுஜன் சமாஜ் கட்சிக்குப் போனது, பின் அம்பேத்கர் ஒரு சூரியன் எனப் புத்தகம் போட்டு மார்க்சையும் இணைத்துப் பேசியது குறித்தெல்லாம் ரங்கநாயகம்மா தன் பார்வையை முன்வைத்து எழுதிய விமர்சனங்களை நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள் என்று உறுதியாகச் சொல்லமுடியும். மேலும் ராஜதுரை சொன்ன ரஷ்யாவில் கார்ல் மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுதிய அம்பது தொகுதிகள் மட்டுந்தான் தொகுக்கப்பட்டிருக்கிறது, என்று மார்செலோ முஸ்ட்டோவை முன்வைத்து   சொல்லி வருகிறார் என்று எனக்குப் புரிகிறது. ஆனால் அதே மார்செலோ முஸ்ட்டேவின் பார்வையில் ரங்கநாயகம்மாவோ, அவரது துணைவரான பாபுஜியோ குகை மார்க்சியரா எனக் கேட்டுச் சொல்லுங்கள். ஏனென்றால், மார்க்சின் ‘கிரண்ட்ரிஷே’ நூலுக்கு ஒரு திறனாய்வு எழுத முஸ்ட்டோ பாபுஜியை கேட்டிருந்த விஷயம், உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மூன்றாவது, களப்பணி செய்யவேண்டும். சும்மா கம்யூட்டர் முன்னால் தட்டிக்கொண்டிருந்தால் போதாது என்று உளறுவதன் மூலம் ரங்கநாயகம்மா கம்யூட்டர் முன்னால் வேலையில்லாமல் உட்கார்ந்து கொண்டு தட்டிக்கொண்டிருக்கிறார் என்கிற சித்திரத்தை அங்கு வந்திருந்த தோழர்களுக்கு நீங்கள் உணர்த்த விரும்பிய விதம் மிகுந்த ஆபாசமான ஒன்றென இங்கு சுட்டிக்காட்டுகிறேன். ரங்கநாயகம்மாவின் கட்சி சார்ந்த பணிகளையும், எழுத்துப் பணியையும் கொச்சைப்படுத்த உங்களுக்குக் கிடைத்த மேடை தமுஎகச மேடைதானா? என்ன செய்வது! சீவிச் சிங்காரித்து எஸ்.வி.ஆரை மார்க்சிய அறிஞர் என்று சொன்ன கொடுமைக்காக அவர் எதைப் பேசினாலும் அதைச் சப்பைக் கட்டு கட்டுவதைத் தவிர அங்கிருந்த முதுபெரும் தோழர்களுக்கு வேறு என்ன பணி காத்துக்கிடக்கிறது.

இத்தகைய உளறல்களை அவர் மேடையில் வைத்துக்கொண்டிருந்தபோதே நான் மனதில் தொகுத்துக் கொண்டிருந்த போது ராஜதுரை, அம்பேத்கர் தன் இதழகளில் மார்க்ஸின் எந்தெந்த நூல்களை மொழிபெயர்த்து வெளியிட்டார் என்று மேற்கொண்டும் உளரத் தொடங்கினார். அந்த பேச்சு முழுவதும் அம்பேத்கர் ஒரு சோசலிஸ்ட் என்று சொல்வதற்கான சாட்சியங்களை கேட்பவர்களுக்குத்  தரும் என நம்பினார். ஆனால் அம்பேத்கரின் மார்க்சியம் குறித்த புரிதல்களாக தான் நம்பியைதைப் பேசுகிறேன் பேர்வழியென, அம்பேத்கர் கம்யூனிசத்தைப் பன்றித் தத்துவம் எனச் சொன்னதற்கு மாவோவையெல்லாம் துணைக்கு அழைத்து உட்கார்ந்தார்.

மோகன் குமாரமங்கலம் கேட்ட அந்தக் கேள்விக்கு பத்து நிமிடங்களுக்கு மிகாமல் உளறி ஓய்ந்தார் ராஜதுரை. நடப்பது கலந்துரைடாயல்! என நம்பி நான் என் கேள்விகளை முன் வைக்க மேடை நோக்கி நகர்ந்தேன். உடனே, ஆதவன் தீட்சண்யா ஒருங்கிணைப்பாளர் என்ற தோற்றத்தை விடுத்து பாடிகாட் முனிஸ்வரராக முன்னே வந்தார். என்ன கேள்வி கேட்கப் போகிறீர்கள் என்று கேட்டார். ( அதற்கு முன்னே கலந்துரையாடலுக்கு என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்று  அங்கு குறிப்புத் தரவில்லை) அதை அவரிடமே கேட்கிறேன் என்றேன். உடனே என்ன கேள்வின்னு சொல்லுங்க என்று மேடையிலிருந்தே கேட்டார். என் மனதில் தோன்றிய முதல் கேள்வி மசால் போண்டா எப்படிச் செய்யணும் என்பதே! பதில் சொல்ல விரும்பி ராஜதுரை இருப்பதைக் கூட மறந்து என்ன கேள்வி என்னிடம் சொல் என்று மிரட்டுபவரை எப்படி ஒருங்கிணைப்பாளராகக் கருதமுடியும் (ஆனால் இதையே நான் செய்திருந்தால், ஆதிக்க சாதி, தலித் ஒடுக்குமுறை, வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாயும் என்று முகநூலில் இந்நேரம் அலப்பறை செய்திருப்பார்!) அதனால்தான் அவரை பாடி காட் முனீஸ்வரன் என்றேன்.

இறுதியாக ஆதவனிடம் உங்களிடம் என் கேள்வியை வைத்தால்தான் அவரிடம் பேசமுடியுமா என்றேன். உடனே வேகமாக மைக் முன் நகர்ந்து நடப்பது எஸ்விஆருடன் கலந்துரையாடல்! எனவே இதை ரங்கநாயகம்மா நூலின் விமர்சன மேடையாக மாற்ற வேண்டாம் என்றார். ஒரு சிறிய கேள்விக்கு பதில் சொல்லுகிறேன் பாருங்கள் என ராஜதுரை அதை ஏற்கனவே ரங்கநாயகம்மாவின் நூல் குறித்த மேடையாக மாற்றியது குறித்து எந்தப் புரிதலும் இல்லாமல், ஜனநாயகமும் இல்லாமல் பங்கேற்பளர்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்.

நான் மேடையேறி முதலில் சொன்னது- இதுதான் பேசவேண்டும் என்ற சிறிய எச்சரிக்கை எனக்கு விடப்பட்டிருக்கிறது! அது குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்திவிட்டு, அடுத்ததாக ராஜதுரையின் மீதான என் காதலைச் சொல்லிவிட்டு, அவருக்கு என் கவிதை நூலொன்றை சமர்ப்பணம் செய்தவன் நான் அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு - அவரை ஒரு பெரியாரிஸ்ட்டாக, மக்கள் நலப்பணியாளாராக, நினைவு தெரிந்த நாள் முதலாய் மதவாதத்தை எதிர்ப்பவராக நான் மதிக்கிறேன். அதே சமயம் மார்க்சிய அறிஞர் என்ற பதம் அவருக்கு சற்றும் பொருந்தாது. அந்நியமாதல், பிராங்க்பர்ட் மார்க்சியம், இருத்தலியம் சார்த்தர் என ஒரு தலை முறை இளைஞர்களை மார்க்சியத்தின் பெயரால் சீரழித்தவர் எனச்சொல்லி மேடையை விட்டு கீழிறங்கினேன்.

அடுத்த கட்டமாக ராஜதுரை அவர்கள் இதை தனிப்பட்ட தாக்குதல் எனச் சொல்லி தன் பேச்சைத் தொடங்கி, அதை அவதூறு என்ற வகையில் சுட்டிக்காட்டிப் பேச ஆரம்பித்து, கூட்டத்தை தன் நலனுக்குகந்த வழியில் திருப்பினார். உணர்ச்சியை மட்டுமே மையமாக வைத்து இயங்கும் கலந்துரையாடாலாக அதை முன்னிருத்தினார். அதற்கு அவர் சொன்ன வார்த்தைகளே காரணம். அவர் சொன்னது, “என்னை நான் மார்க்சிய அறிஞர் எனச் சொல்லவில்லை, தமுஎகச தான் அப்படிச் சொல்லுகிறது” எனச் சொன்னார்! உடனே கைதட்டல்கள் அரங்கை நிறைத்தது. எனக்கோ அங்கு வந்தது பரிதாப உணர்ச்சிதான். என்னை மார்க்சிய அறிஞர்னு நான் சொல்லலை, தமுஎகச சொல்லுது என்று சொல்வதன் மூலம் இது தமுஎகச பதில் சொல்ல வேண்டிய கேள்வி, என தமுஎகசவை பல்வேறு வாக்கியங்களில்  உணர்ச்சிமயமாகத் தூண்டிவிட்டார்.  (என் கட்சிக்காரர்கள் யாரேனும் வன்முறையில் இறங்கக்கூடாது என்று அரசியல்வாதிகள் சொல்வது போல் வன்முறைக்கான முஸ்தீபும் அங்கு நடந்தது )!  

ஆம், இறுதியில் ராஜதுரை "என்னை மார்க்சிஸ்ட் இல்லை என சொல்வது அவதூறு" என்றார். நான் அவரை மார்க்சிஸ்ட் இல்லை எனச் சொல்லவில்லை, “மார்க்சிய அறிஞர்” இல்லையென்றுதான் சொன்னேன். அவர் கொடுத்த பதில் உளறல்களுக்கு மீண்டும் பதில் கொடுக்கும் முகமாக நான் மறுபடியும் மேடையை நோக்கி நகர்ந்த போது பிரச்சினை தொடங்கியது. என்னைச் சுற்றிய தமுஎகச உறுப்பினர்கள் என்னை வெளியே போகுமாறு ‘அன்புடன்’ இழுத்தனர்.

எரிச்சலும் கோபமும் உற்ற நான் என் கையை இழுத்தவர்களின் முகங்களைப் பார்த்தேன். பிடித்திருந்த அனைவரும் தெரிந்த முகம். பார்வையிலோ என்ன வசு இது என்கிற உரிமையான நட்பழைப்பு, புரிஞ்சுக்கங்க என்ற அன்பின் வேண்டுதல்! அமைதியாக, “என்னங்க இது பேசக் கூடாதா” என்று மறுபடி கேட்டபோது, அங்கு கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்த, ஒரு ஓங்குதாங்கான பெரியவர் “போ போ அதான் பதில் சொல்லியாச்சுல” என ஒரு தெரு நாயை விரட்டுவது போல் கையை வீசிக்காண்பித்து விரட்டினார்.  “என்ன விரட்டுறீங்களா” என்றதும் அது அது என பம்மினார். ( அவர் எஸ். ஏ . பெருமாள் என்று அறிந்தேன். மிகவும் நகைச்சுவை உணர்வுக்கு ஆளானேன் என்பதை சொல்லவும் தேவையில்லை) நான் தோழர்கள் இழுப்புக்கு வெளியே சென்றுவிட்டேன். இத்தனை நடந்துகொண்டிருக்கும் போது அங்கு இருந்த தமிழ்ச்செல்வன், சு.வெங்கடேசன், தி.சு. நடராசன், ராஜதுரை ஆகிய அனைவரும் அமைதிகாத்தனர்.

இறுதியாக அங்கு மேற்கொண்டு என்ன உரையாடல் நடந்தது என முழுமையாக அறிய முடியவில்லை. வெளியே வந்ததும் அதுவரை சிரித்துப் பேசிக்கொண்டிருந்த ஒரு தோழரிடம் “என்ன தோழர் இது” என்றதும் நான்  தமுஎகசவின் போர்வாளாக்கும் என்ற விஸ்வருப்பத்தை எடுத்தார். அடுத்தகட்டம் உடன் இருந்த கருப்புக் கண்ணாடி போட்ட ஒருவர் தன்னை ரௌடி போலவே தொடை தட்டிக் கொந்தளித்து.. “வா போ” என்ற மரியாதை மிக்க தொனிகளில் பேசியதோடு, “எங்க மேடையில பேச நீ யாரு” என்பது போன்ற அரிய சொற்களை முன்வைத்தனர். மார்க்சியம் குறித்து எந்த ஒரு பிரதியையும் வாசித்திராத அவர்களின் ஜட அறிவை உணர்ந்து நான் வெளியே இருந்த கட்சித் தோழர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். “சரிங்க, மார்க்சிய அறிஞராக அவர் செஞ்ச பங்களிப்பைச் சொல்லுங்க” என்றேன். உடனே “அதை எதுக்கு உங்ககிட்டச் சொல்லணும்” என்றார். இது எங்க அமைப்பு என்றார் கருப்புக் கண்ணாடி. ராஜதுரையின் எந்த நூலையும் சம்பந்தப்பட்ட இருவரும் படித்திருக்கமாட்டார்கள் என்பதயும் உணர்ந்தேன். அதற்கு அவர்களது பதிலே சாட்சி. நகைச்சுவை உணர்வு எனக்கு மேலோங்க நான் உள்ளுக்குள் சிரித்த நாளாக அது அமைந்தது. சம்பந்தப்பட்ட இவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியை, தமுஎகசவைப் பயன்படுத்தி தங்களை வளர்த்துக்கொண்டவர்கள் என்பதையும் தாண்டி சொல்வதற்கு  எதுவும் இல்லை.

கூட்டம் முடிந்ததும் அனைவரும் வெளியே வந்தனர். ராஜதுரை வந்தார். “வணக்கம் எஸ்.வி.ஆர்” என்றேன். மகிழ்வுடன் கட்டிப்பிடித்து முத்தமிட்டார். இருவரும் பல விசயங்கள் குறித்துப் பேசினோம். எனது உடன்பாடின்மையைச் சொன்னேன் அவரும் சொன்னார். பிரிந்தாயிற்று.

கூட்டத்தில் அதற்குப் பிறகு என்ன நடந்தது எனக் கேட்டேன். “மனநோயாளிகள்தான் இப்படிப் பேசுவார்கள்” என்று ஆதவன் தீட்சண்யா மனநிலை தவறாமல் பல ‘தத்துவ முத்துகளை’ இறைக்க,  அரங்கிலிருந்த தமுஎகசப் போராளிகள் கைதட்டி வாழ்த்தை வழங்கியதாக சொன்னார். சு.வெங்கடேசன், ராஜதுரை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மொழிபெயர்த்ததன் மூலம் மார்க்சிய அறிஞர் இல்லை,  மார்க்சிய பேரரறிஞர்! என்று சொன்னதாக தகவல். இது குறித்து எனக்கு ஆச்சரியமில்லை. மேலும் ஆதவனை நோக்கி தமிழ்ச்செல்வன், “பேசுனதையே எதுக்குப் பேசிக்கிட்டு வேற பேசுப்பா” என்று சொன்னதாகவும் தகவல்.

கூட்டம் முடிந்து தமிழ்செல்வனிடம் பேசினேன். தி.சு.நடராசனிடமும் பேசினேன். திசு நடராசன் என்னிடம், “எதுக்கு பிராங்க்பட் மார்க்சியரையெல்லாம் மார்க்சிய அறிஞர்னு சொல்லுறீங்க” என தான் கேட்டதாகச் சொன்னார். அதோடு மற்ற தோழர்களிடமும் பேசினேன்.

ஆனால் இறுதியாக அனைவரின் உள்ளத்திலிருந்து வந்த விமர்சனம் ஒன்றே ஒன்றுதான். பாவம் வயசானவருப்பா அவரை மதிச்சு கூட்டி வந்திருக்கோம், நீ இப்டிப் பேசுனா எப்டி என்பதுதான். நானும் அவரும் கூட்டிவந்த மேடையில அதைப் பத்திப் பேசாம எதுக்கு உளறணும் என்பதையே முன்வைத்தேன். இதுதான் தமுஎகசவின் உடனான என் ஒருநாள்கூத்து.


கேட்கவேண்டிய கேள்விகளை கேட்க நினைத்து அங்கு எதையும் முன்வைக்க முடியாத காரணத்தால் இங்கு முன் வைக்கிறேன்.

1.   எஸ்.வி.ஆர். மார்க்சிய அறிஞராக மார்க்சியத்துக்குச் செய்த பங்களிப்பு என்ன?

2.   மார்க்சிய அறிஞர் என்ற வரையறைக்கு தமுஎகச வைத்திருக்கும் அளவுகோல் என்ன?


3.   தமுஎகசவின் மாநில துணைத்தலைவர்களில் ஒருவரான ஆதவன் தீட்சண்யா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோவில் பார்ப்பனர்கள் அதிகமும் இருப்பது குறித்து தனக்கு கேள்வி இருப்பதாக ஊடகத்தில் சொல்லியுள்ளார். இதுகுறித்து தமுஎகசவின், மார்க்சிஸ்ட் கட்சியின் பதில் என்ன.

4.   ரங்கநாயகம்மாவின் நூல் குறித்த அவதூறுகளை பத்து நிமிடங்கள் உளற எஸ்விஆருக்கு அனுமதி உண்டெனில், நூல் குறித்து உண்மை விவரங்களைக் கூற அனுமதியில்லையா.


5.   கலந்துரையாடல் என்றால் அனைவரும் சரிசமமாக அமர்ந்து விவாதிப்பதா? இல்லை மேடையில் அமர்ந்து கேள்விக்குப் பதில் சொல்லுவதா?

6.   தமுஎகசவின் கருத்துச் சுதந்திரமும், அதன் அறிவுச் சூழலும் ஏன் இத்தகைய கடும் நெருக்கடியில் இருக்கிறது?


சிறுகுறிப்பு:
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மொழிபெயர்த்ததன் மூலம் எஸ்.வி.ஆரை சு.வெங்கடேசன் மார்க்சிய அறிஞர் என்றால் அவரது புரிதல் குறித்தும் தமுஎகசவின் தத்துவ புரிதல் குறித்தும், தரம் குறித்தும் எனக்கு கேள்விகள் எழுகிறது.





No comments:

Post a Comment

இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...