Friday, March 18, 2016

வாழ்நாள் தோழி கொற்றவைக்கு…


         
          இனி நீங்கள் சாதி குறித்து, மார்க்சிய அரசியலை முன்வைத்து, எதை எழுதினாலும் அதில் உள்ள கருத்தை மறுத்து, நீங்கள் உயர்சாதி என்ற வார்த்தையை வைத்து கவனம் கொள்ளப் படுவீர்கள். ஆனால் அது குறித்து எனக்குக் கிஞ்சித்தும் கவலையில்லை. தலித் சாதியில் பிறந்ததனாலேயே தங்களைப் போராளிகளாகக் காட்டிக்கொள்ளும் காலம் இதுவாக உணர்கிறேன். நாள்தோறும் முக நூலைத் திறக்கும் பொழுதும் பல லட்சம் சேகுவேராக்கள், பெரியார்கள், அம்பேத்கர்கள் புதிது புதிதாக முளைத்துக்கொண்டே இருக்கிறார்கள். தலித் அரசியலில் இவர்களின் பங்கு லைக் போடுவதும். கருத்தியலாளர்களை நான்கு வரிகளில்  ஆதிக்கசாதி என்ற சொல்லை முன்வைத்து, அந்த அடையாளத்தின் மூலம் தான் சாதியற்றவர் என்று தங்களை முற்போக்காளாராய், தங்கள் இடத்தை நிலை நிறுத்திக்கொள்வது தவிர வேறெந்தக் காரணமும் அதற்கு இல்லை. நான் எந்த சாதி என்று தெரியாமலேயே தலித் அடையாள அரசியலை விமர்சித்த காரணத்தினாலேயே, பலமுறை ஆதிக்க சாதி என்று சொல்லி தங்களை தலித் போராளிகள் என்று புனிதப்படுத்திக் கொண்டதை நானறிவேன். அவர்கள் அம்மக்களுக்குரிய நலன்களைச் சுரண்டி அடைந்த பலன்களையும் அறிவேன்.

இப்பொழுது,  சமூகம் பிறப்பால் எனக்களித்த சாதி அடையாளத்தைச் சொல்கிறேன்.

இயற்பெயர்; வடிவேல் முருகன்
புனைப் பெயர்; வசுபாரதி, வசுமித்ர
சாதி. ஆப்ப நாடு கொண்டையன் கோட்டை மறவர்
அரசு சான்றிதழின் படி; மறவர்.( பழங்குடி மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிலிருந்து இப்பொழுது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என அடையாளம் கொடுக்கப்பட்டுள்ளது.)

இதுவே எனக்கு சமூகம் வழங்கிய அடையாளம். ஆனால் அந்த அடையாளத்தை வைத்து, இதுநாள்வரையில் என் சாதி சார்ந்த எந்த அனுகூலத்தையும் நான் அடைந்ததேயில்லை. இழப்புகள் எண்ணற்றவை. சொத்து பத்து என எதுவும் எனக்கு இல்லை. இப்பொழுது இருப்பது, நான் என் சொந்த உழைப்பில் வாங்கியது. (என் காதல் வரை முழுக்க என் உழைப்புதான். அடுத்தவர் மூலம் எந்தக் காயையும் நகர்த்தியதில்லை. மறைமுக சேதிகள் இல்லை.)

அப்பன் சம்பாத்தியத்தாலோ அக்காள், அண்ணன், உறவுகள் சம்பாத்தியத்தாலோ, சாதி சார் சங்கங்கள் அனுசரணையினாலோ, என் வயிற்றை வளர்த்ததில்லை. என் வாழ்நாள் தோழியான நீங்களும் இதுவரை என் சம்பாத்தியத்தில் சாப்பிட்டதில்லை. உழைத்துச் சாப்பிட வேண்டும் என்கிற இந்த யுகத்தின் பிரதிநிதிகள் நாம்.

 19 வயதில் ஓடத்தொடங்கிய நான், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தேனி மாவட்டத்தின் அறிவிக்கப்படாத முழு நேர ஊழியனாக, மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட தொடர்பாளாராக, கோயமுத்தூரில் கட்டிட வேலை செய்யும் சித்தாளாக, ஸ்பின்னிங் மில் வேலையாளாக, திருப்பூரில் ஹோட்டலில் வேலை செய்தவனாக, பனியன் கம்பெனியில் கண்காணிப்பாளனாக, கயலான் கடையில் எடுபிடியாக, இன்னும் பல வேலை செய்திருக்கின்றேன். இன்று சின்னத் திரையில் திரைக்கதை வசனம் எழுதுபவனாக இருக்கிறேன் அவ்வளவே. இந்தப் பயணத்தில், நான் கண்ட தலைவர்களையும், கேடுகெட்டப் பிழைப்பாளர்களையும், தலித் என்றால் என்னவென்றே தெரியாத தலித் முதலாளிகளையும், எந்த அறிக்கையும் படிக்காமல் தலித் மக்களுக்கு உயிரையும் விடத் தெரிந்த தலித்துகளையும் நான் அறிவேன்.

என் தந்தைக்கு இரண்டு தாரங்கள். மூத்த தாரத்தின் மகனாகிய நான் இப்பொழுதுவரை என் தந்தையை அப்பா என்றழைத்ததில்லை. அவர் உழைப்பால் நான் வாய்க்கரிசி அளவுக்குக் கூட கஞ்சி குடித்ததில்லை. என்னை வளர்த்தது என் அம்மாவும், அம்மாவின் அம்மாவும் மட்டுமே. இப்பொழுது இருக்கும் எனதறிவின்படி என் தந்தையிடம் எனக்கு உறவோ பகையோ எதுவும் இல்லை.

இன்னும் குறிப்பாக, நமக்கு  நல்லது செய்பவர்கள் கெட்டது செய்பவர்கள் என ஒரு பட்டியலைப் போட்டால், கெட்டது செய்பவர்கள் சொந்த சாதிக்காரர்களாகத்தான் இருக்கும் என்பது என் புரிதல். இது இப்பொழுது தலித்துக்கள் என்று சொல்லும் போலி தலித்துகளால் நடந்து கொண்டிருப்பதுதான் பெரும் வருத்தம் .

எனது சாதி, முக்குலத்தோரில் ஒருவராகத்தான் என்னை அடையாளம் காட்டும். நான் மறுக்கவே மறுத்தாலும் அப்படித்தான் அடையாளப்படுவேன். அடையாளப்படுத்தப்படுவேன்.  அதற்கு நான் பொறுப்பாக முடியாது. அதை நான் மறுப்பதன் மூலமாக அது என்னை விட்டுவிடப் போவதும் இல்லை. ஆனால் என் கருத்தியல், மற்றும் செயல்பாடுகள் வழியாக நான் அறியப்படுவேன் என்பதை நன்கு அறிவேன்.

தலித்திய விமர்சனங்களில் ஏதேனும் ஒன்றைச் சொன்னால் நான் அதிகம் எதிர்கொண்டது நீங்க எந்த சாதி தோழர். இதைக் கேட்டவர்கள் ஆதிக்க சாதியினர் அல்ல. அவர்களின் அச்ச உணர்வை நான் மதிக்கிறேன். ஆதிக்க சாதி தன் சாதிக்குத் துரோகம் செய்ய வாய்ப்பிருக்கிறது என்பதை அவர்கள் வரலாறு அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது. அது நியாயமான அச்சந்தான். அதே சமயம், நானும் தலித் சாதிதான், எனச் சொல்லி தலித்துகளைச் சுரண்டுபவர்களையும் அவர்கள் அனுமதிக்கக் கூடாது என்பது என் வேண்டுகோள். அவ்வளவே.  இதில் நம்ம சாதிக்காரன் என்ற பதம் அவர்களுக்குள் தற்பொழுது உலா வருவதும் நான் அறிந்ததே. சொந்த சாதிக்கு துரோகம் செய்வது இப்பொழுது இந்த போலித் தலித்துகள்தான்.

முகநூலில் தலித் ஆதரவு பேசுவதென்பது ஒரு பேஷனாக மாறிவிட்டது. முதலில் நாத்திகம் பேசினால் அறிவாளி என்ற சுயசார் பட்டம் கிடைத்தது. பின்னர் கம்யூனிஸ்ட்களை விமர்ச்சித்தால் அறிவாளி, இப்பொழுது தலித் ஆதரவு என்ற வார்த்தை அவர்களுக்கு அந்த இனிப்பை வழங்கியிருக்கிறது. அவ்வளவே.

பள்ளியில் படிக்க வந்த தலித் பெண்பிள்ளைகளை  ஆபாச படங்கள் எடுத்து, ஹோட்டலுக்கு அழைத்து ஒருவர் மாற்றி ஒருவராக வல்லாங்கு செய்து அதையும் படம் பிடித்து ரசித்த ஒரு தலித்தான் நம்மை சாதியாளர்கள் எனச் சொல்லி தப்பித்தது. இதையும் அருகிலிருந்து பார்த்திருக்கிறீர்கள். கவலை கொள்ள வேண்டாம்.

இங்கு நான் சொல்வது ஒன்றுதான். தங்களை சாதி தாண்டி முற்போக்குப் போராளிகளாய்க் காட்டும் நபர்கள், தாங்கள் அறியப்படும் சாதியின் பெயரைக் குறிப்பிட்டு, அச்சாதியால் அவர்கள் அடைந்த நலன்கள் இழப்புகள். மற்றும் ஏன் சொந்த சாதியை வெறுக்கிறார்கள், அதன் காரணமென்ன என விரிவாகப் பேசியும், சாதி குறித்தும் எழுதினால் அவர்களது அவதானிப்புகளை அறியலாம். அதே போல் முகநூலில் தலித்தியம் பேசுபவர்களும், தலித்தாய்ப் பிறந்தவர்களும் அவர்கள் அடைந்த அனுகூலங்கள், அந்த அனுகூலத்தினால், சக தலித்துகளுக்கு அவர்கள் செய்த நன்மைகள் இவற்றைச் சொன்னால் சாதி சார்ந்த உரையாடல்கள், உண்மையின் அகத்திலிருந்து தொடங்கும்.

ஊரில் சாதிச்சங்கத்துக்கு தலைக்கட்டு வரி செலுத்துபவர்கள்தான், இங்கு முன்னணிப் போராளிகளாக இருக்கிறார்கள். தங்கள் உளுத்துப் போன படைப்புக்களை தலித் இலக்கியம், நானும் தலித்தான் எனச் சொல்லும் போலி தலித்துகள் இருக்கிறார்கள். குறிப்பாக பெண்ணியம் பற்றி பெண்கள்தான் பேச வேண்டும் என்ற வாதத்தைப் போல், தலித்தைப் பற்றித் தலித்துகள்தான் பேசவேண்டும் என்கிற தூய தலித் இலக்கிய ஆசான்களும் இங்கு உள்ளனர்.

பொத்தாம் பொதுவாக கவுண்டர் வன்னியர் நாயக்கர் தேவர் செட்டியார் என இன்னும் இருக்கும் அத்தனை சாதிக்காரர்களையும், சாதியின் பெயரால் நடக்கும் படுகொலைகளை முன்வைத்து, அவர்கள் அனைவருக்குமே சாதி புத்தி, குத்திக் கொல்பவர்கள் எனச் சொல்லுவதில் எனக்கு உடன்பாடில்லை. அதே சமயம் அச்சாதியில் உள்ளவர்கள் அதைக் குறித்துப் பேச வேண்டும் அதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம். மேலும் அச்சாதிகளில் சாதி மறுப்புத் திருமணங்கள் செய்த அனைவருமே வெட்டிக்கொலை செய்யப்படுவதில்லை.

தலித் என்ற பெயரால் இன்று அம்பேத்கர் ரசிகர் மன்றங்கள், அடையாள அரசியல்கள், எல்லாம் நீக்கமற நிறைந்து கிடக்கிறது. அவர்கள் தங்களை தலித் போராளிகள் எனச் சொல்லுவது, அதிலுள்ள கொடுமைகளுக்காக அல்ல தங்களின் அறிவுப்பகட்டுகளுக்காக அடையாள அரசியலுக்காக என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

பார்ப்பன புத்தி எனச் சொல்லுபவர்கள்தான் பறை பள்ளு புத்தியில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறார்கள். பார்ப்பன புத்தி என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டால் மற்ற சாதி புத்திகளையும் அவர்கள் ஏற்கிறார்கள் என்றே அர்த்தம். சாதி உளவியல் குறித்தும் நீங்கள் அறியாதவரல்ல. ஆனால் நீங்கள் கவனிக்காமல் செய்த இந்த பிழைக்காக வாழ்நாள் முழுதும் நீங்கள் விலைகொடுக்கப் போகிறீர்கள் என்பதை நானறிவேன். ஆனால் அந்த வாழ்நாள் விலையானது நிச்சயம் ஆதிக்கம் செலுத்தும் சாதிக்கு ஆதரவாக இருக்காது என்பதை நானறிவேன்.

இனி நான் ஏதேனும் தலித்கள் குறித்த கூட்டத்திற்கு செல்ல வேண்டுமாயின், அங்கு பேசும் சூழல் வருமாயின்,  நான் என் சாதியை தாழ்மையுடன் சொல்லியே உரையாடுவேன். அப்படியே,  அங்கு உரையாடுபவர்களும் தங்கள் சாதிப்பெயர்களைச் சொல்லி பேசலாம். அங்கு அவர்கள் பேசுவதை வைத்து அவர்கள் ஆதிக்க சாதியா, தலித் சாதியா…இல்லை தூய தலித் சாதியா.. போலி தலித்தா, இல்லை அடையாள அரசியலா, அதில் ஒளிந்திருப்பது என்ன  என அவர்கள் அவர்களின் பேச்சால், செயலால் அறியப்படட்டும். முகநூலில் நீங்கள் கவனக்குறைவாய்ச் செய்த ஒரு பிழைக்காக, வெற்றிகரமான சாதியாளாராக நீங்கள் இதுவரை செய்த அனைத்துச் செயல்களும் பின்னுக்குத் தள்ளப்படும் என்பது எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. இங்கு இதுதான் விதி. இங்கு தலித்தாக பிறந்த ஒரே காரணத்தினால் ஐந்தாரு பியர்களைக் குடித்துவிட்டுப் பேச முடியும். அதையும் தான் தலித் என்பதில் நிலைகொண்டுள்ள பெருமையுடனேயே செய்ய முடியும்.

என்னை வெட்டியவரும் நான் தேவன்டா…. என்று சொல்லித்தான் வெட்டினார். அதில் நான் செய்த முதல் விசயம் வன்முறை என்றே என்னவென்று தெரியாத உங்களுக்கு அச்சம்பவத்தின் மூலமாக வன்முறையை அறிமுகப்படுத்தியது. இரண்டாவது எனது காயங்களுக்கு மருந்தாக, இலக்கிய வாதிகள் பேசிய... அடுத்தவன் மனைவியை இழுத்து வந்து வெட்டுப்பட்டவன், ஒயின் ஷாப்பில் குத்திவிட்டார்களாம் என்று தொடங்கி, நீங்கள் பிள்ளையை விட்டு புகழ்தேடி வந்த அவதூறுகள் வரை பெற்றது. அப்பொழுதும் உங்களைக் குற்றம் சாட்டுபவர்களின் வாய்களில் மௌனம் கனத்த பூட்டெனத் தொங்கியது. அவர்களின் விழாக்களில் சம்பந்தப்பட்ட இந்த போலி தலித் போராளிகள் நல்லுடை அணிந்து, இரவில் மதுவருந்திப் புன்னகையோடு  காட்சியளித்தார்கள். நடப்பின் பெயரால் சுட்டியதற்குக் கூட அது வேற தளம் இது வேற தளம் என்று தங்களை அர்த்தப்படுத்திக்கொண்டனர்.  இன்னும் அதன் மூலம் அவர்கள் முன் வைத்துக்கொண்டிருக்கும் வியாக்கியானங்கள் ஏராளம். இதையும் நாம் சேர்ந்தே கண்டுகளித்தோம்.

தமிழ்கூறும் நல்லுலகில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவன் குடித்தால் குடிகாரன், தலித் குடித்தால் கலகக்குடி. இப்படியாக இலக்கியத்தில் முன் வைக்கப்பட்டு அதிகார அரசியலைக் கேள்விக் கேட்கத் தொடங்கி அது இன்று அதே அடையாள அரசியலில் வேர்கொண்டாகிவிட்டது.

என் அறைக்கு வா, என் வட்டத்துக்கு வா, என் செட்டில் சேர்,  குடிக்கலாம் கவிதை பாடலாம் நீ நம்மாளா மாறு, என அழைத்து ஆண் பெண் நண்பர்களின் கூட்டுக் குடிமடம் நடத்தி, கூட்டிக்கொடுத்து அதையும் தலித் கணக்கில் சேர்க்கும் அபத்த போராளிகளையும் நாம் அறிவோம். கூட்டுக்குடியைப் போட்டோ எடுத்து நட்பு வளர்ப்பவர்கள், இதைச் சொல்பவர்கள் வேறும் யாரும் அல்ல. இலக்கிய மேடைகளில் முற்போக்காளர்களாக, சாதி கடந்தவர்களாக, தலித்தாக தங்களைக் காட்டிக்கொள்பவர்கள்தான்.  நாம் பேச வேண்டியதும் மன்னிப்புக்  கேட்கவேண்டியதும் இந்த போலி தலித்துகளிடம் அல்ல. இவர்கள் உண்மையில் தலித்துகளே அல்ல.

இறுதிக்குறிப்பாக;

தலித் ஆவணங்களைப் பேசாது, அறிஞர்களை முன்வைக்காது, இங்கு தமிழில் அதிகமும் சீரழிந்தது தலித் இலக்கியம்தான். தலித் அரசியல் என்ற வார்த்தையின் வீரியத்தை நீர்த்துப் போகச் செய்ததும் பெரும்பாலான இலக்கியவாதிகள்தான். புனைவு அது தன் வேலையைத் தானே செய்யும். அபுனைவின் தேவை அதிகரிக்கும் இடம் என்ன, பெரும்பாலான தலித் கதையாடல்கள் ஏன் சுயசரிதைக் குறிப்பாக இருக்கின்றன, தலித் பெண்ணிய கவிதைகளாகக் கருதப்படுபவைகள் எப்படி உடலை முன்வைத்து பேசும் காரணியாய் மாறியதோடு அல்லாமல் அது ஏன் தீவிர சந்தைக் கவனம் கொள்கிறது என்பதையும் நாம் உரையாடியிருக்கிறோம். இன்னும் அழுத்திச் சொல்லுவதாக இருந்தால் வாழ்க்கைக்கும் படைப்புக்கும் சம்பந்தமில்லை என்பதோடு கலையை கலைக்காகவே என்ற இலக்கியவாதிகள் இன்று சாதி சாதிக்காகவே என்பதில் எவ்வளவு கவனமாக இருக்கிறார்கள் என்பது வரை உரையாடி  இருக்கிறோம்.இதில் இந்த போலி தலித்துகள் இன்னும் ஆபத்தானவர்கள் என்பதே என் எண்ணம்.

கலைஞர்களின் படைப்படைப் பாருங்கள் என்று சொன்னவர்கள்தான் நமது அந்தரங்க வாழ்க்கையைப் பேசினார்கள். ஆனால் நமக்கோ அந்தரங்கங்கள் இல்லை. பெண் என்ற காரணத்திற்காய் நீங்கள் வார்த்தைகளால் தாக்கப்பட்டிருக்கிறீர்கள், மார்க்சியம் பேசியதால் பெண்ணியவாதி என்று உங்கள் கருத்து சுருக்கப்பட்டிருக்கிறது. அப்படிச் செய்தவர்களின் பின்னால் ஊக்கக் காரணியாய் இருந்தது நீங்கள் பேசிய அரசியலோ கருத்தோ இல்லை. இவள் யார் இதைச் சொல்ல என்கிற அகந்தையும், நேற்று வந்தவள் என்கிற பத்தாம் பசலித்தனமும், எங்கள் அமைப்பில் சேருங்கள் இல்லையென்றால் நீங்கள் மார்க்சியர் இல்லை என்றே அர்த்தப்படும் மிரட்டல்கள்தான். உண்மை அறியும் குழு விசாரணைக்குக் கூட கன்னத்தில் ரூஜ் தடவி லிப்ஸ்டிக் போட்டு ஜிகு ஜிகுவென வந்த போலி தலித் போராளியையும் நீங்கள் களத்தில் கண்டிருக்கிறீர்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக தலித் அரசியல் என்னவென்றே தெரியாமல், அம்பேத்கரை படைப்பிலக்கியத்தின் வாயிலாகவும், அரசியலாளனாகவும் அறியாது, தன் பிறந்த சாதியின் பெயரை மட்டும் நம்பி,  அதன் ஒடுக்கப்பட்ட விதங்களை முன்வைக்காது அடையாள அரசியலை மட்டும் முன் வைத்து நானும் தலித்துத்தான் நானும் போராளித்தான் எனக் கூவுகிறவர்கள் குறித்து இனி நான் தொடர்ந்து எழுதுவேன். அவர்களை நான் அறிவேன். கிடைக்கின்ற எல்லா மேடையிலும் தன்னை பறையன், பறைச்சி, தாழ்த்தப்பட்டவள், ஒதுக்கப்பட்டவன் என்று மேடையேறிக் குரல் கொடுத்ததன் மூலம் அவர்கள் பகட்டான லாப நோக்கங்களை மட்டுமே பங்கிட்டு உண்ணுகின்றனர். ஆனால் அந்த நலன்கள் உண்மையில் எவருக்குச் சேர வேண்டிய நலன் என்று அறியாது அவர்கள் முதுகிலேயே அமர்ந்து, தலித் மேல் தானும் ஒரு தலித் எனச் சொல்லி சவாரி செய்வதைத்தான் என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

  “போலி தலித்துக்கள் என்பவர்களைக் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இப்பொழுது தூய தலித்துக்கள் சிலர் கிளம்பியிருக்கிறார்கள். இவர்கள்தான் தலித் அரசியலை, தலித் ‘சாதி’ அரசியலாக மாற்றப் போகிறவர்கள். அதிலும் ஒடுக்கப்பட்ட சாதிகளில் எது அங்கு ஆதிக்க சாதியோ, அது மட்டுமே மிஞ்சப் போகும் அபாயமும் இருக்கிறது.  நாளை அதுவும் ஆதிக்க சாதியாகி சாதி ஆணவத்தால் கொலை செய்யும் நாள் தொலைவில் இல்லை. செய்தும் இருக்கிறது.”  அம்பேத்கரே சொன்னது போல் பார்ப்பனியம் தலித்துகளிடமும் இருக்கத்தான் செய்கிறது. பிறப்பின் அடிப்படையில் இவர்கள் பார்ப்பனியத்தைக் கேள்வி கேட்பது, தங்களது பிறப்பின் அடிப்படையிலானாதாக இருக்கும் போது இதை தலித் பார்ப்பனியம் என்பதோடு கூடுதலாக இவர்களை போலி தலித்துகள் என்றே என்னால் அழைக்க முடியும். தலித்தாக பிறந்துவிட்டால் போதும் அவர் புரட்சியாளர்.

எனக்குத் தெரிந்து முதலாளித்துவ, உலகமயமாக்கலில் காசில்லாதவன்தான் ஆகப்பெரிய தலித்.

நீங்கள் மீண்டு வருவீர்கள் என்று நம்புகிறேன். நாம் விவாதித்தவைகளை உரையாடியவற்றை எழுத என் இருகைகளால் முடியாது என்பதை ஞாபக மூட்டுகிறேன். காத்திருப்பேன்.

என் வாழ்நாள் தோழியும்,
அறிவுத்துணையுமான உங்களுக்கு
என் காதலும் முத்தங்களும்

வசுமித்ர.

Wednesday, February 24, 2016

சிறுமி நேயா



அப்பா
நான் உங்களைக் கொலை செய்யப் போகிறேன்
சரி மகளே
முத்தம் தா

இல்லையப்பா… குருதி கசிய
சரி மகளே
முத்தம் தா

அப்பா உங்கள் உடலைச் சிதைத்து
சரி மகளே
முத்தம் தா

அப்பா…
அப்பா…
நிஜமாகவே….

சரி மகளே 
முத்தம் தா

அப்பா
இந்த விளையாட்டுப் பிடிக்கவில்லை
வேறுவிளையாட்டுச் சொல்லித்தாருங்கள்

சரி மகளே
முத்தம் தா.


Sunday, February 14, 2016

ஒரு காதல் கவிதை எழுத முடியாத விரல்களை என்ன செய்யலாம்......


என்ன செய்யலாம்
கவிஞனை
ஆற்றாமையை
ஒப்பற்ற துரோகத்தை
துரோகத்தில் ஊறித்ததும்பும் புன்னகையை
கனவுகளின் வாய்க்காலை
நஞ்சூறி விரியும் வெண்சிறகை
எடைகூடிய சொற்களைச் சுமக்கும்
கனத்த இதயத்தை

கண்ணீரின் வெதுவெதுப்பை
இயலாமையின் சாறை
கைவிடப்பட்டவனின்
இறுதிச்சடங்கை

கவிஞன்
வானமும் வெளியும்
சூன்யமும் இல்லாத
அகதி
தலைச்சிறந்த அயோக்கியன்
அனாதை

வழியிழந்த
பேதமறியா விரல்களால்
நாளும் எழுதிச்செல்கிறான்

பறவைகளே நிதானமாயிருங்கள்
வயல்வெளிகளில்
சொற்களை விதைக்கிறார்கள்

ஒரு பிரிவை எழுத விரும்பாத விரல்களை என்ன செய்யலாம்
அறிவீர்கள்
நண்பர்களே பிரிவின் உப்பும்
தகிக்கும் காழ்ப்பும்
பிரிவின் எரிப்பும்
சொல்லின் முடிவும்
இறுகி
உடைக்க முடியா உன்மத்தமடைகிறது

புணர்ச்சியில் வெம்பிச்சரியும் உடல்கள் கவிஞனுடையதில்லை
களைப்பு அவன் வரிகளைத் தீண்டுவதில்லை
விடை பெற்ற முத்தங்களை
முத்தகங்களீந்த வரியுதடுகளை
கனைக்கும் குதிரைகளின் கால் குளம்புகளை
கவிஞன் சொற்களாக்குகிறான்

ஒரு கூர் நுனித் தனத்தை
முரசென அறிவிக்கும்
கவிஞனின் கரத்தை
எப்படித் துண்டிக்கலாம்
வார்த்தைகளை இழந்த மௌனத்தை
உதட்டில் பீய்ச்சியடிப்பவனை
குருதியை யாசகம் கேட்பவனை
மண்டையோடுகளை காய்ந்த உதடுகளால்
அரவணைத்து முத்தமிடுபவனை
கவிஞனை
என்ன செய்யலாம்
விரல்களை
கரத்தை
கவிஞனை
கவிதையை

அவன் விரும்பாத நிதானத்தை
நிதானத்தின் பதட்டத்தை
என்ன செய்யலாம்
என்ன செய்யலாம்
ஒரு கவிஞனின் பிணத்தின் முன் சிறுநீர் பெய்யலாம்
அல்லது
பதிலுக்கு அவனது கவிதையை வாசிக்கலாம்
கவிதையை முடிக்கும் போது
பெய்யும் சிறுநீரை நிறுத்திவிட்டு
கண்களில் வரவழைக்கலாம்
கனங்கூடிய உப்பை.


Wednesday, February 3, 2016

காமத்துறைவனின் கடுஞ்சொல் கேளீர்...







நிச்சலனம் கிழித்தயிருள் மேவ
பித்துப்பிதிருடைத்துத் உடல்கதவைச் சிதறடித்துத்
திறக்கும் பெருந்தாழ்ப்பாள்
கொன்றழித்து புதிருறங்கும் மயிர் வனம்
சித்தம்தனை சிதறவிடும் பைத்தியக் கிளிக் கூச்சல்
கண்களைக்கீறி வளரும் பயிர்விளைச்சல்
முப்போகம் விளைவிக்கும் முதற்சொல்
விரல்களை துளையிடும் ஊதல்
ஊழிச்சொல்
விதைத்த செந்நெல்
நகவிழிசிவந்து
செங்குருதிபாயும் பெரியாழின் கூர் நரம்பு
மிரளும் கண்பாவை
சுவேதன ஒளிப்பரவல்

கைக்கும் வியர்வையில்
துவர்த்தல் வாடை
கிளர்ந்தெழும் காழ்த்தல்
திரளும் தித்தித்தல்
கறுகும் கார்த்தல்
இறுதியில் கசியும்
சதைத் துவர்த்தல்

சங்கதனைப் புதைக்கும் வெண்சுடலை
சூதனின் இறுதிச்சொல்
முட்டும் முடிவுறா தசாங்கம்
நித்திலக் குழியூரும் வெண்நஞ்சு
தாவரயோனிமீதேரும் பசலைக்கொடி
பச்சிளம் சிசு
பெருங்களிற்றுவட்டமேங்கும்
எரியின் வட்டம்
புகைச்சுருள் விசனம்
நாடோடி துயிலும் ஆலத்தின் வேர்
இறுகும் கண்ணின் கைப்பு
யாளியுறங்கும் நிசித்தாலாட்டு
பேய்களைக்கொன்று குலவையிடும்
உயிர்ச் சொல்
தாமிரபரணி
ததாகயோனி
சிற்றெழில் உறையும் வதனம்

சொல்
அஃது பெரும்பிழை
உயிர்
இதுவும் அது

நீலகேசி
தாம்பூலவல்லி
சக்கரவாளக்கோட்டம்

கடவுள் மறுத்த சொல்
காமம் பெருந்தீனி
தெறிக்கும் மூளைச் சிதறல்
நிணமொழுகும் கனா
நான்
நீ
தலைகீழ் யோனி
விழி அவி.

ஆகச்சிறந்த புணர்ச்சியை
நிறைவேற்ற வேண்டுமாயின்
காளியைத்தான் புணர வேண்டும்
அவளுக்குத்தான்
ஆயிரம்
கைகள்....

சம்போ மகா தேவா
சம போகம்
அஃதே

சம்போகம்.....


Friday, January 1, 2016

ஆம்ரபாலி…






·      நடனம். திசைகளைப் புணரும் ஆவேசம்.       கைகளில்  முத்திரைகள்      காற்றைக் கிழித்துக்     கலைக்கிறது.  ஆம்ரா உனது தாபங்களை உடலின்   எந்தப்        பகுதியில் சேகரம் செய்கிறாய் கண்ணே…

· ததாகரே உதடுகள் பற்றிய பிரக்ஞை எனக்கெதுவுமில்லை.


1.  கனவு கண்டுகொண்டிருந்தேன். இரண்டு கரும்பாதங்கள் பசிய மிருகம் போல் எனைச் சுற்றி சுழன்றதை.  கண்கள் அசைவுகளை வீசிக்கொண்டிருந்தன.  மெல்ல என்னுடல் சிறகானது.  வசீகரிக்கும் இசை எதுவுமின்றி மண்ணில் பாதங்களால் இசையொன்றை எழுப்பிக்கொண்டிருந்தாள்.

2.கரகரத்த மணலோசை என் செவிகளில் கூரிய நகங்களாய் மனதாபத்தைப் பேசிக்கொண்டிருந்தது.  பச்சை நிறத்தோடு பிட்சுகளின் கண்கள் மௌனமாய் நடனத்தை விழியசைவின்றி மொய்த்துக்கொண்டிருந்தது.  கப்பறையை எவர் கரமும் ஆழப்பற்றவில்லை. தண்ணீரில் பிதப்பதைப் போல் அசைந்துகொண்டிருந்தது.

3.  ஆம்ரா….இவள் என்ன செய்துகொண்டிருக்கிறாள். தன்னுடலை நடனமென பிச்சையிடுகிறாளா என்ன… இதை எந்தக் கப்பறையில் நான் வாங்க வேண்டும்…விழிகளே திறக்கப்பட்ட கப்பறைத்தானோ… நான் வேண்டி வந்ததும் இதுதானா,

4.    என் விழிகளில் தாவரப்பசுமை குடியேறிக் கொண்டிருக்கிறது.  இனி அது மிருக வாசனை பழக ஆரம்பிக்கும்.  செவிகளை விடைத்தபடி அது என் மடியில் அமர தருணம் பார்த்தலைகிறது.  அதன் வளர்ந்த காதுகள் என் விரல்களின் ஸ்பரிசத்தை உணர அலைபாய்ந்து துடிக்கும் வெம்மை எனக்குப் புரிகிறது.

5.    ஆம்ரபாலி…. எத்தனை அற்புதமான பெயர்

6.    சாம்பல் படிந்த பாதங்களோடு உன் முன்னே அமர்ந்திருப்பவனின் தற்பொழுதய பெயர் புத்தன்.  நடுங்கும் உதடுங்களால் இப்பெயரை உச்சரிக்கும் முகத்தில் தெரியும் பரவசத்தில் நான் குளிர்காய்ந்திருக்கிறேன்.  ஆனால் பெரும் மரமொன்று சாய்வதையொத்து என்னுள் எதுவோ தயங்கிச் சரிகிறது.

7.  நடனம், அந்தரத்தில் காலுயர்த்தி முடிந்தது.  என் சுவாசத்தின் மத்தியில் இளஞ்சூடாய் வழிவது… குருதியா… இல்லையே… குருதி மணத்தையொத்து வேறெதுவோ… மணக்கிறதே… அது ஆம்ராவின் வியர்வைத் துளி. 

8.   நடனத்தை தன்னுடலிலிருந்து பிரித்தவள் திரவத்தை சாட்சியாக்கி தன்னை பிழிந்தெடுத்திருக்கிறாள்.

9.   நடனம் முடிந்துவிட்டதா என்ற பெரும் கேள்வி அனைவரின் கண்களையும், அதன் புலன்களையும் கேள்விக்குள்ளாக்கியிருப்பதை உணர்ந்தேன்.  பிட்சுகளின் அமைதி என் காதை செவிடாக்கியது. துணுக்குற்று நிமிர்கிறேன்.  என்னை நானே கேள்வி கேட்கும் தருணங்களில் பதிலுக்காய், அதன் கூரிய சொற்களுக்காய் கண்களை நிலைகுத்த விட்டிருக்கிறேன்.  இனி சீடர்கள் நடனத்தின் தர்மம் என்னவெனக் கேட்கும்போது என் தனிமை கேட்பாரற்று சூறையாடப்படும். 


10. ஆம்ரா பாதத்தருகே அமர்ந்தாள். ஆனந்தன் பார்வையை நிமிர்த்த ஆம்ராவின் நடனத்தோழிகள் விருந்து மண்டபம் தயாராய் இருக்கிறது ஆனந்தரே என்க ஆனந்தர் சோதரர்களே நிதானமாய்ச் செல்லலாம் என்க காலுக்குக் கீழிருந்த மணற்பிரதேசம் இளம் வெயில் கூச வெளியே தெரிந்தது.

11. ஆனந்தன் அமைதியாய் நின்றிருந்தான்.

12. வேண்டாத தனிமையை எல்லாரும் கையளித்துச் சென்ற பின், ஆனந்தன் நிழலையும்., என் முன்னால் இருக்கும் ஆம்ப்ராவின் குனிந்த தலையையும் கண்டேன்.

13. பெருங்காட்டின் நடுவே யானைகள் நடந்து சென்ற ஒற்றைத் தடம் போல உன் வகிடு எவ்வளவு நேராகப் பிரிந்து செல்கிறது ஆம்ரா..

14.  ஆம்ரா நிமிரவேயில்லை. புன்னகையுடன் கேட்டேன். சொல் ஆம்ரா கருப்பை பற்றிய உனது சந்தேகங்களை…என்க ஆம்ரா திகைப்பது அவளது உடல் அசைவில் தெரிந்தது. நல்லது. எதுவோ இங்கு நடக்கப் போகிறது அல்லது சிதையப் போகிறது

15.  இருப்பினும் கண்களைத் தாழ்த்தியபடி கேட்டேன். சொல் ஆம்ரா கருப்பையின் லட்சியங்கள் குறித்த தர்மம் அறியாதவள்தானே நீ…

16. ஆம்ரா மெதுவாய் அழைத்தாள் சித்தார்த்தரே… குருதி சட்டென உள்ளங்கைக்கு ஏற ஆனந்தன் பதட்டமடைந்தான். அவனுக்கு மிக அணுக்கமான புன்னகயோடு சொன்னாள். ஓடும் குருதியில் வாள் இன்னும் மிதக்கிறதா…நான் சொன்னேன் ஆனந்தா நீ காத்திரு. மௌனமாய் என் கண்களைப் பார்த்தவன் நகர்ந்து சென்றான்.

17. மிகமெதுவாய் தலையை உயர்த்தியவள் புன்னகைத்தாள்.


18.மௌனம் கொள் சித்தார்த்தனே….இது கேள்…ஆத்மாவின் அடிவயிற்றுக்கேவலை பசியென உணர்ந்து கப்பர்றையை உடல் முன் நீட்டாதே…கேள் இதை.

19. இந்திரிய வாசத்தால் கருப்பை பூரிப்படைவதில்லை

20. கருப்பையை நிழல் தீண்டுவதில்லை

21. கருப்பைக்கு ஸ்பரிசம் கிடையாது.

22. கருப்பைக்கு விழிகள் உண்டு.

23. கருப்பையை வார்த்தைகளால் நிறைக்க முடியாது

24. எவர் வருகை வேண்டியும் கருப்பை காத்திருப்பதில்லை.

25.  கருப்பை பற்றிய புரிதல்களை கருப்பை அறிவதில்லை.

26.  கருப்பை பற்றிய உன் வார்த்தைகல் உண்மையல்ல, அது கருப்பை பற்றிய உன் கற்பனை.

27. இறுதியாக கருப்பைப் பற்றிப் பேச உனக்குத் தகுதியில்லை ஏனெனில் உனக்குக் கருப்பை இல்லை.

28. ஆம்ராவின் நாவில் அசையும் சொற்களை கவனித்தபடியே மனம் அலைந்து கொண்டிருந்தது. தகிக்கும் பதில்களை சதா காலமும் என் சொற்கள் கண்டலைந்தபடியே வந்திருக்கின்றன.  இம்முறை பதில் சொல்ல மட்டுமல்ல… என் மௌனமும் பொருளற்றுப் போனது, ஆம்ராவின் நாவு சிவந்த குருவாளென வெட்டவெளியை சாட்சியாய் வைத்து எனதறியாமையைக் கிழிக்கிறது. நடந்தே தீரவேண்டும்.

29.  ஆம்ரா தரையை அறைந்து ஓங்கி உறுமினாள். மாயா….

30. எனதுடலைக் குரூரமாய் வதைக்க நினைக்கிறாள் ஆம்ரா. அவள் விழிகளை கரும் பாவைகள் நிறைத்தபடியே இருந்தது. எனக்கோ விழிகளில் செவிகள் பூக்கத் தொடங்கிறது. இனி என் அத்தனை புலன்களின் தனிமையையும், ஆம்ரா வார்த்தைகளால் விதைத்து. அர்த்தங்களை அறுவடை செய்வாள்.


நன்றி’ 
கொம்பு
இதழ்-4

Wednesday, December 16, 2015

அல்குல்



அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ?
அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல்.
(அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள்.

கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம்.

புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு.
புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள்.

அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள்.

பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang..vol 2)

Cu V e the என்பதன் பொருள் ஏற்கனவே இருக்கும் அகழியில் தோண்டப்படும் மற்ருமொரு பள்ளம். இச்சொற்கள் கூதிக்கு ஒலி உறவும், பொருள் உறவும் உடையன, அல்குலைத் தாண்டி ழ்ழப்படும் யோனியைக் குறிப்பதாம் அது.

அல்குலுக்கு எகிப்திய மொழி கா-ட் kat. ஆங்கிலத்தில் கன்ட், ஜெர்மன் குண்டே டச்சுக்குண்டே பழம் பிரசியன் குண்டே, பழம் நார்ஸ் குண்டே எகிப்திய சொல்லுக்கு அம்மா பெண் பெண் உறுப்பு என்று பல பொருள். இந்த ka-t, cunt ஆகி இருக்கலாம்.

ஜெர்மன் மற்றும் வட அய்ரோப்பிய மொழிகளில் வழங்கும் குண்டே, குண்டா ஆகியவை புண்டை என்னும் சொல்லாக இருக்கலாம்.. அதைவிடவும் அதற்கு இன்னும் நெருக்கமான மேலைச் சொல் தற்கால ஆங்கிலத்தின் புடெண்டா( pundenta) பன்மை புடெண்டம்.
( pudendum)

இந்தச் சொற்கள் பொதுவாய் அல்குலைக் குறிப்பன என்றாலும் அதை வெளிப்படுத்துவதில் தனித்தனிப்பொருள் தருவன.

அல்குல் இது புலவர் கையாள்வது.

கூதி யோனி – vegina இவை அல்குலின் ஆழத்தை விளக்குவதாம். அதற்கு உறை என்றும் பெயர். யோனியும் வெஜைனாவும் yoni- vegina) ஒலி உறவுடையன.

இப்படி 58 பக்கங்களில் நீள்கிறது ஆராய்ச்சி.
படிக்க;  
அல்குல்-  தமிழ்நாடன். காவ்யா பதிப்பகம்.
அதற்கு கி.ரா. ஒரு முன்னுரையும் வழங்கியிருக்கிறார்.
சிற்றுரையில் நடிகன் எஸ் .எம் ராஜா. அப்புத்தகத்தை என் இல்லத்தார் படிக்கச் செய்வேன், தேவைப்படும் எனில் விளக்குவேன்.  என்று நேர்மையாகவும்  பதிந்துள்ளார்.

கொற்றவையின் கட்டுரை குறித்து வந்த விமர்சனங்களில் எனக்கு சில எனக்கு உயர் முற்போக்கு அறிவைத் தந்தன. முற்போக்குப் பெண்ணியம் என்பதில் தொடங்கி புண்டைப் பெண்ணியம் வரை அது நீண்டது. வாழ்த்துக்கள். இப்படித்தான் பல பெண்ணியங்கள் உள்ளது. ஆனால் சகலரும் சொன்னது குடும்பப் பெண்கள் அவர்களை எப்படி இழுக்கலாம் என்று,,

இந்த இடத்தில்தான் குடும்ப ஆண்கள், தங்கள் கொடியை ஏற்றியிருக்கிறார்கள். முற்போக்குப் பெண்ணியத்தில் குடும்ப ஆண்கள் என்ற சொல் நான் கேட்டறியாதது. இதுவரை படித்தறியாது. ஒரு வேளை ஆணாதிக்கத்தில் குடும்ப ஆணாதிக்கமும் சேர்த்தியா எனத் தெரியவில்லை அறிந்தோர் விளக்கவும்.

நீ பேசினால் உன் குடும்பத்தை இழுப்பதா என்ற கேள்விகள் அதிகமும் புழங்கின. மிக்க மகிழ்ச்சி. தனது மகன் குறித்தும் அவரின் இசை கடவுளால் அனுகிரக்கிக்கப் பட்டது நினைத்தே பார்க்கமுடியாது என சான்றோன் எனக் கேட்ட தந்தையாய் அனிருத்தின் தந்தை புளங்காங்கிதம் அடைந்திருந்தார். அவரை இப்பாடலைக் கேட்பாரா என்று கேட்டால் அது குடும்ப ஆணை இழுப்பதாகுமா என்று தெரியவில்லை.

எனக்கு மறுபடியும் சிக்கல் வரும் சொல்லாக இந்தக் குடும்ப பெண்கள் பதம். ஏன் குடும்ப ஆண்களை இழுத்தது தவறா எனத் தெரியவில்லை.

குடும்பப் பெண்கள் என்றால் என்ன.. ?
1 சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தில் உள்ள பெண்கள்.

2 ஆணாதிக்க சமூகத்தில், அனைத்து கேடுகளையும் வீட்டுக்கு வெளியே விதைத்து விட்டு வீட்டுக்குள் குடும்ப ஆணாய் வரும் அவனுக்கு புருஷ சிருட்ஷை செய்வதா…இல்லை, நவீனத்தில் புருஷன் காலணிகளைத் துடைத்து புள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பி இன்முகத்தோடு டாட்டா காட்டி கதவோரம் நின்று கணவனைப் பார்த்து சிரித்து வழியனுப்பி வைப்பதா..இல்லை அவனின் சொத்துடைமயா… ஆணாதிக்கப் பார்வையில் நல்லொழுக்கமான பெண்கள் என்ற அர்த்தமும் சேர்ந்தே வருகிறது. இதையும் முற்போக்கு குடும்ப ஆண்கள் உணரத்தலைப்படலாம்.

குடும்பப் பெண்ணாக இல்லாமல் தனியாக இருக்கும் தனிப்பெண்களை அழைக்க என்ன பதம். அறிஞர்கள் உதவுவார்களா.

இச்சமயத்தில் சிறுகூற்றாக,

புண்டைக்கு வரலாறு, அறிவியல், புவியியல் மட்டுமல்ல இதிகாசமே உள்ளது. என்ன பிரச்சினை என்றால் அனைத்தும் ஆண்கள் எழுதியது. அதனால் அப்படித்தான் இருக்கும்.

அதேசமயம் ஆண்களின் வசை சொல்லான புண்டை என்ற ஒரு சொல், ஒட்டு மொத்தமாய் ஒரு பெண்ணின் முழு உடலையே முன் வைப்பதோடு, சம்பந்தப்பட்ட உறுப்பில்தான் இனவாதம் மதவாதம் மொழி வாதம் என எந்த வாதமாக இருந்தாலும் பெண்களுக்கு எதிராய் யுகங்கள் தோறும், யுத்தங்கள் தோறும் ஆண்கள் அவ்வுறுப்பில் கத்தியைச் சொறுகுவதும், துவக்குகளைச் சொறுகுவதும், மின்சாரம் பாய்ச்சுவதாகவும் இருக்கிறார்கள் என்ன செய்ய.  

இப்பொழுது அதை துணிந்து, அதன் இளி தொனி மாறாமல் அப்படியே இருவர் பாடுவதை எதிர்ப்பதை விடவும், புண்டை என நீ எப்படிச் சொல்லலாம் என்ற கேள்விகளே நீண்டது. இடக்கரடக்கலும், வித்தியாசப்படுத்தலின் அரசியலும், பெண்ணியமும், வர்க்க அரசியலும் தெரியாது, கருத்துச் சொல்லியாய் இருப்பதும், தன் குறி ஒன்றே பிரதானம் என்ற நினைப்பே போதுமானது என நினைத்து தட்டத்துச் செய்பவர்களுக்கு நான் என்ன சொல்ல.

உதாரணமாக

டி ஆர் எழுதிய பாடலான….

ங்கொப்பன் மவனே
ங்கொப்பன் மகனே
டண்டணக்க
என்ற பாடலை 

புண்டை மவனே
புண்டை மவனே
-       எனப் பாடினால் அசிங்கமும் ஆபாசமுமாகத்தான் இருக்கும்.

கவிதைகளில் புண்டை எனக் குறிக்கப்பெறாமல் போன காரணம், அது வசவுச் சொல்லாக மாறியதானாலேயே தவிர. குறிக்கக் கூடாதென்பதற்காக அல்ல. இடக்கரடக்கல். (மலத்தை நெருப்பென்று கரந்தழைக்கும் பழக்கம் பார்ப்பனர்களிடத்தில் உண்டு. பீயை பீ என்று கூறாது மலம் என்ற பொதுவழக்கும் உண்டு.)

இன்னும் ஈழத்தில் எத்தனையோ கவிதைகள் போருக்கு எதிராய் துவக்குக்கு எதிராய் நீண்டிருக்கின்றன. கவிஞர் வைரமுத்து கூட தினந்தந்தியில் யோனிக்கு மானக்குழி என பெயர் ஒன்றை இட்டு எழுதியிருந்தார்.

இடம் பொருள் ஏவல்,  இத்தோடு தொனியையும் சேர்த்து அறியாத அறிஞர் பெருமக்கள் தமிழ் கூறும் நல்லுலகில் முற்போக்கு நிலைய வித்துவான்களாய் இருப்பது நான் அறியாததொன்றல்ல..

யோனி, ஆனந்ததம், அல்குல், திதலையகம், மாண்வரியகம் என இலக்கியமும், சங்கப்பாடல்களும் சொல்வது, அதன் தொனியில் பெண்ணை நோக்கிய நேரடி வசைக்கான அர்த்தத்தை சேர்காததானாலேயே. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அல்குல் யோனி இவ்விரண்டும் வசைச்சொல்லாக உருமாறியிருந்தால் அதை எழுத மாட்டார்கள்.

( இன்னும் சில விலக்கமாய் தமிழில் நிர்வாணத்துக்கு சொல்லே கிடையாது. அப்படியென்றால் தமிழில் யாரும் அம்மணமாக இருந்ததில்லையா என்ற ஆய்வும் தேவையே.)

இடக்கரடக்கலுக்கு
எடுத்துக்காட்டாக;

தாயாகப் போகிறவளே
உன் யோனியைப் பிளப்பேன்
உன் யோனியை விரிப்பேன்
தாயையும் சேயையும் பிரிப்பேன்
சூல் பையிலிருந்து குழந்தையைத் தனியே தனிப்படுத்துவேன்
சூல்பை கீழிறங்கட்டும்

-       இது அதர்வ வேதத்தில் வருகிற மகப்பேற்றின் போது வரும் பாட்டு.
இதை யோனி என்று மொழி பெயர்த்தவர்..நேரடியாக

தாயாகப் போகிறவளே
உன் புண்டையைப் பிளப்பேன்
உன் புண்டையை விரிப்பேன்

என்ற ரீதியில் மொழி பெயர்த்தால் தொனியும் அர்த்தமும் இணைந்து தரும் விளக்கம் என்னவென வியாக்யானிகள் பொருத்திப் பார்க்கலாம். மடல் வாழைத் துடை இருக்க என்று எழுதிய வாலி சமூகத்தில் கவிஞராகவும், எப்படி.. எப்படி.. சமைஞ்சது எப்படி.. என்று எழுதியபோது ஆணாதிக்க வக்ரப் பேர்வழியாகவும் மாறியது இந்த இடம் பொருள் ஏவல் சாந்த புரிதல்களினாலேயே.

இப்படி இழுத்து வைத்து இலக்கியம், எழுதுமுறை, கூறு முறை என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் நிறுத்தி வைத்து அவ்வுறுப்பைச் சுட்டினால் அவர்களை சவுக்கால்தான் அடிக்க வேண்டுமென்றால் தமிழ் கூறும் நல்லுலகில் சங்கப் புலவர்கள் தொடங்கி பிட்டுக்கு வாங்கிய அடியோடு இறையனார் இன்னும் பல கோடுகள் தாங்கி வரிப்புலியாய்த் திரிதல் வேண்டும்.

மற்றபடி குடும்ப பெண்கள் என்று சொல்லி கட்டுரையின் பொருளை இரண்டிரண்டு வரியாக பிரித்தெடுத்தால் தொனியும் அர்த்தமும் மாறத்தான் செய்யும். குழந்தைகளுக்கு அதைச் சொல்லிக்கொடுக்காதீர்கள் இதைச் சொல்லிக்கொடுக்காதீர்கள் என்று நானறிந்து அறிவுரை மழைகளை குழந்தை செல்வங்களுக்கு வாரி வழங்கிக்கொண்டிருக்கும் குடும்ப ஆண்கள், என் மகள் அப்படிப் பேசினால் என் மகன் இப்படிப் பேசினான் அய்யோ அழகு எனக் கொஞ்சும் குடும்பப் பெண்கள்… உங்கள் மகன் இப்படி அறுவெறுப்பாக பேசுகிறானே என்ன செய்ய என்று கேட்பது ஒரு சமூகக் குற்றம். அழகாக பேசுகிறானே என்றபோது உங்கள் தாய் தந்தையர்க்கான முகம் குமிழ் பூத்து நெக்கு விடும்போது உன் மகன் இப்படியா என சுட்டிக் காட்டினால் குடும்பப் பெண்கள் கருத்துரிமை.

இத்தனைக்கும் சுட்டிக்காட்டப்பட்ட அப்பெண்கள் உங்கள் குழந்தைகள் போல் எத்தனையோ குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கூடம் வைத்து நடத்துபவர்கள்.


சம்பந்தப்பட்ட அனிருத் சிம்பு இவர்களின் பாடல்களை கலைஞர்களாக இருக்கும் அவர்கள் வீட்டுப் பெண்கள் இதை எப்படி புரிந்து கொள்வார்கள் செயலாற்றப் போகிறார்கள் என்று கொற்றவை கேட்டதுமே குடும்ப ஆண்கள் கொந்தளிப்பது மிகச்சரியாக இருக்கிறது. புண்டைப் பெண்ணியம், பொம்பளை என்ற ரீதியில். மகிழ்ச்சி. நிற்க.

உங்கள் மழலைகள் தூங்கும் நேரம் தவிர அவர்களை வளர்ப்பது சமூகம். வீட்டுக்கு வெளியே விட்டுவிட்டுப் போனால் சாலை மதில் சுவர்களில் தொங்கும் போஸ்ட்டர்களிலிருந்து அவர்களுக்கு சமுகம் கற்றுத்தரும் சித்திரங்கள் ஏராளம். வாழ்க தமிழ்ச் சமூகம். என் மகன் இசையமைத்து ஹிட்டான பாடல் என அவர்கள் பள்ளி விழாக்களில் ஆடச் சொல்லி உறுப்பின் பெயர் தெரியாது உங்கள் செல்ல மகள் இடுப்பை அசைத்து ஆடும் போது என்ன செய்வீர்கள். பள்ளியைக் குற்றம் சாட்டுவீர்களா. அல்லது படித்தவரைக் குற்றம் சாட்டுவீர்களா.

சிறு விளக்கம்.

சிம்புவுக்குப் பதிலாக அவர் குடும்ப ஆணான டி ஆர் முதலில் களத்தில் இறங்கி மைந்தனைக் காப்பாற்ற துடித்திருக்கிறார்.

மேலும் சிம்பு டி ஆர் அனிருத் அவரது குடும்பப் பெண்களுக்காகப் பேசிய குடும்ப ஆண்களை மதிக்கிறேன். இனியாவது அவர்கள் பொதுவெளியில் எப்படி  செயல்படுகிறார்கள் என்று பார்க்க ஆவலாக உள்ளேன்.

காதலியின் சுண்டு விரல் போட்டோ போட்டு இன்னைக்கு இவகூட, அடுத்த நாள் இன்னொரு பெண்ணின் நகத்தைப் போட்டு இன்று இரவு இவளோடு என்று குலாவும் போதும்..எனக்கு ஒருத்தி கிடைச்சிட்டா என்பதும், அதற்கு விருப்பக் குறிகளை அள்ளி வழங்கியதோடு, அடே நண்பா நானு நானு,… என நாக்கைத் தொங்கப் போடுவதும், அக்குடும்ப ஆண்கள் அக்காதலிகளின் புகைப்படங்களைக் கூடப் போட துணிவில்லாது இருப்பதும் கூட புண்டை ஆராய்ச்சிக்கு இடமளிக்கக் கூடும் என்ற பயத்தாலேயா.. அவ்வகை மாதிரிகளான குடும்ப ஆண்களையும் மதிக்கிறேன்

தங்கள் தோழிகளின் தோளில் சாய்ந்து தோழி எனக் கூடச் சொல்ல வராது அக்கா என்று பாத்திரவார்ப்பை மாற்றுவது, அதே சமயம் இன்னொருவரின் அக்காவை அடியே உன்னை லவ் பண்றேண்டி எனச் சொல்லுவதும் குடும்ப ஆண்களின் வழக்கம்தான்.

மீச்சிறு குறிப்பு.

1 இரு ஆண்கள் புண்டையைப் பற்றி பாடியது இருக்கட்டும். ஒரு பெண் அதை எப்படி எழுதலாம் என்ற கேள்வியை மறைத்துக்கொண்டு குடும்பப் பெண்கள் குடும்பப் பெண்கள் என்று குடும்ப ஆண்கள் கூவியது மகிழ்ச்சியைத் தந்தது. ஏனெனில் முகநூலில் குடும்பமில்லாமல்தான் குடும்பப் பெண்களை அவர்கள் வாழ்த்துவதும் வரவேற்பதும்.

2 கோவன் நேரடியாக முதலமைச்சர் ஜெயலலிதாவை உத்தமி உல்லாசி என்று பாடி, படம் போட்டுக் காட்டியதையும் மகிழ்வுடன் கேட்டு, புரட்சி வாயை இழுத்து மூடி, பேசாமல் அமைதி காத்த முற்போக்கு குடும்ப ஆண்களுக்கும் முற்போக்கு பெண்ணிய குடும்பப் பெண்களுக்கும் என் அன்பு. புரட்சியாளர்கள் பேசினால் அது சாலத்தகும்.கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே.

ம.க.இ.க கோவன் பிரச்சினையில் உளவியலாய் நான் கற்ற கூறுகள் நான்கு.

1 அப்பாடலின் பாடபேதத்தை எதிர்த்தால் வீட்டுக்கு வந்து சம்பந்தப்பட்ட அமைப்பினர் பேசக் கூடும்.

2 அவர்கள் நேரடியாக உங்கள் குடும்பப் பெண்களை பெயர் சொல்லி சந்திக்குக் இழுக்கக் கூடும்.

3 முற்போக்கு புரட்சிகர முகமூடிகள் கிழிந்து தொங்கும்.

4 மெய்நிகர் உலகத்தில் நீங்கள் சக ஆண்களுக்கு, அல்லது சக பெண்களுக்கு விட்ட தூதுக்களை கணிணி அறிவோடு பிறாய்ந்து உங்கள் இல்லத்தில் வீசக் கூடும்.

இவ்வளவே.

இதில் நனிகூர் அறிவுடையோர் கூறும் கூற்றாகச் சொன்னது அவர்களாவது ஒரு தடவை சொன்னான் இந்தம்மா எத்தனை தடவை சொல்லுது… இணையத்தின் கொற்றவையின் புழங்கு வெளி சிறிது. அவர் எழுதிய எதிர்வினை எத்தனை பேரை அண்டப் போகிறது. ஆண்சொல்லாடலில் கரைக்கப்பட்ட சிறு பெருங்காயம் அது.

முகப் புத்தகத்தில் உங்கள் நாலு வயசுக் குழந்தை இயங்கத் தொடங்கி அவர் கொற்றவையை அறிந்திருந்தால் இது குற்றமே.  கணிணியே காணாத மக்களையும் அவர் தம் குழந்தைகளையும் சிம்பு அனிருத் வகையறாக்கள் அண்டும் விதம் அவர்களின் திரைத் துறை ஒலிப்பெருக்கிகள் அவர்கள் இல்லத்தில் ஒலிக்கும்போது முக நூலோ அல்லது வாட்ஸ் அப்போ அறியாத அக்குழந்தைகள் எழுந்து பாடி ஆடினால் என்ன செய்வீர்கள். விளக்குங்கள் தகைமையுள்ளோரே.

ஒரு பாடலின் இயங்கு வெளி குறித்து சிற்றறிவும், ஊடக விளம்பர மோகத்தின் பாய்ச்சலும் அறியாத உங்களை எண்ணி பெருமிதம் அடைகிறேன்.

4 அனிருத்தின் தந்தையும் குடும்ப ஆணாகவும் உள்ள ராகவேந்தர் தன் மைந்தனின் இசை குறித்தும் கடவுள் கடாஷத்தைக் குறித்தும் முன்னொரு சமயம் விதந்தோதிய சுட்டி.



வாழ்த்துக்கள்.
 வசுமித்ர

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...