Friday, June 14, 2013

இளவரசிக்கும் சாத்தானுக்குமான இவ்வுரையாடலில் எவ்வார்த்தையில் துளிர்விட்டது நட்பு.





வரலாற்று ரீதியாக நியாயப்படுத்த முடியுமானால், வரலாற்றுரீதியாக அர்த்தப்படுத்திக்கொள்ள முடியுமானால், எந்த ஒரு படுகொலையையும் நம்மால் மன்னித்துவிடமுடிகிறது.
-       ழான் போத்ரியா

அடையாளப்படுத்திக்கொள்ள நிணத்தையிளக்கி கடுஞ்செவியால் மூச்சுவிடும் பிராணிகள் வாழும் அக்கொற்றத்தில் ஒற்றர்களின் வருகை எப்பொழுதும் தெருநாயின் நீர்நாவையொத்த அலைச்சலையே கொண்டிருந்தது. காரணமில்லாவிடினும்… நிழலை பரபரக்கும் விழிகளால் வேவு பார்க்கும் அது, இயலாமையின் பச்சைப் புள்ளிகளோடு ரகசியத்தின் பற்களை அரைத்தபடியே காத்திருக்கிறது. காத்திருப்போ இமைச் சோரலைக் கொடுக்கிறது. செந்நிறம்கூடிய ஓநாய்கள் சதுப்பு வெளிகளைத் தாண்டி பெருங்கூவலை எழுப்பி சதுக்க மைதானத்தைச் சுற்றி வளைக்கின்றன. நிலமெங்கும் பழுப்பு நிற வால்கள் சூரிய வெளியில் வானை நோக்கி மின்னித் தொலைகிறது. இவ்வசனமோ தன் முடிவிடத்தை எப்பொழுதும் மறுத்தபடியே தன் பயணயெல்லையைத் தொடங்குகிறது. பறவைகள் எண்திசைகளை உன்னிப்பாக கவனித்தபடி காற்றுக்கு எதிராய் தங்களது வெண்ணலகுகளை உயர்த்திக்கொண்டிருந்தன. இறகுகள் நடுங்க ஒவ்வொரு பறவையும் தங்களுக்குள் நீள் அலகுகளையசைத்து தீவிரமாய் வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தன. மண்சூழ்ந்த கடலிலோ தாமிரமச்சங்கள் செங்குத்தாக தலைகீழாக இறங்கிக்கொண்டும், செதிள்களெங்கும் பழுப்பு நிறக்கரியை பூசியபடி கரைக்கு ஏறி வரத் துடித்துக்கொண்டிருந்தன. தற்சாவைக் கண்காணித்தபடி தருணமோ காத்துக்கொண்டிருந்தது. இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொற்றத்துக் குடிகளை கனவிலும், நிதானமில்லா நடையை நடக்கவைத்து ஏதிலிகளாய் உருமாற்றி, கொடும்பசியும்….பசி கொண்ட நாவில் துளியேந்தும் கனவும், கனவில் வரும் விசித்திர உருக்களினால் பயம் பீடிக்க.. பீடிக்க.. உடலுதறி, கைகளை தனக்கெதிராக வானேந்தி, இமைகளில் வெகுளியையும், வெகுளி தரும் நம்பிக்கையால் உவகையும், உவகையளித்த வார்த்தைகளால் வேண்டிக்கொண்டும், வேண்டுதலோ சிறகை விரித்துப் பறக்கும் நினைப்பை அலைக்கழுத்தபடி, அவர்களை சதா இழுத்துச் சென்றது, கடல் மண்ணை மிதித்த பாதங்கள், இறுகிய நில மண்ணை மிதிக்கக் கூசித் தயங்கின. உறக்கமற்ற விழிகளால் உடலெங்கும் பிணச்சூடு பரவி கண்கள் ரத்தப்பழங்களென ஜொலிக்க, தகிக்கும் வெப்பம் தலையெங்கும் கருமை நரையாகி, வெண்ணிறம் பூத்து உள்ளங்கால்களிலும் உள்ளங்கைகளிலும் அரக்குநிற வியர்வை அரும்பியபடி மண்ணையே பார்த்துக்கொண்டிருந்தனர். அலைச்சலால் எவர் கண்ணும் நிதானமில்லாமல் பூத்துக்கொண்டேயிருந்தன.

இளவரசியோ கொற்றமெங்கும் ஒலித்த பயப்பேரிகையை மகரயாழின் நடுநரம்பதிர்வெனக் கேட்டுக்கொண்டிருந்தாள். கண்காணிப்புக் கோபுரங்களுக்கு அன்னம் கொண்டு செல்லும் குதிரை வண்டிகள் இந்த இரண்டு நாட்களில் தன் எண்ணிக்கையை இருமடங்காக்கிக் கூட்டிக்கொண்டிருந்தன. நகருள்ளே வருவோர் தங்களது நிழலையும் சந்தேகித்து மிதிப்பதோடு, அம்மண்ணைக் பெருவிரலால் கிளறிவிட்டே அரண்மணைக்குள் வரவேண்டுமென சேவகர்களுக்கு அரசு உத்தரவிட்டிருந்தது. பிணங்களை மண்கிளறி இடும் காடும், மண்ணுதறி சுடும் காடும் செங்கழுகுகளின் ஆரவாரத்தில் மறைந்துகொண்டேயிருந்தது. இக்காடுகளுக்காக புதிய கொற்றத்தையே நிர்மாணிக்க வேண்டுமென ஒரு கிழப்பிணம் வாய் உளரச் சொல்லி வெட்டியானின் இரும்புத் தடிகளால் அறுபடா தன் பற்கள் சிதறப் படுத்தது. இளவரசி  உருப்பளிங்காடியை உற்று நோக்கி புன்னகையை புருவத்தால் உயர்த்தினாள். தேகத்தை இலகுவாக மாற்றிக்கொண்டாள். தன் இருப்பை வெகு அதிகாரத்தோடு இருத்தினாள். ஏதிலிகள் தங்களேக்கேயுரிய, கனவில் காணும் தன் தேக வரைபடத்தில் அவர்கள் எந்த இடத்தை முதலில் தகர்ப்பார்கள் என்ற எண்ணமே அவளை முழு இளவரசியாய் உணரச்செய்தது. தனது செய்திகளைக் கொண்டு செல்லும் துணையிழந்த புறாக்கள் மூலம் ஏதிலிகளுக்கு தனது நீர்வண்ணச் சாயத்தையும் முன்னமே இணைத்து அனுப்பியிருந்தாள். பரவசத்தாலும் இடங்கண்ட துடிப்பாலும் ஏதிலிகளின் விழிகள், பித்து சூழ அலையட்டும் என்பதே அவள் எண்ணமாக இருந்தது.

நான்கு நாட்களாக கொற்றத்தின் தேக்கு நிறக்கதவுகள் சாத்தப்பட்டே கிடந்தன. நள்ளிரவை நோக்கி மண்ணிறம் படிந்த பாம்புகள் நகரைச் சுற்றி காவலுக்கு இருந்தன. குடிகளோ அன்னமின்றி பசித்த வாய்களோடு வெறுமையை கடைவாய்ப் பற்களில் மென்றபடி ஒரு பெரிய கனவுக்காக காத்திருந்தவர்களைப் போல அலைந்துகொண்டிருந்தனர். கடல் தன் கரிப்பைக் கூட்டிக்கொண்டேயிருந்தது. ஏதேனும் ஒரு தூது வடிவில் செய்தி வரும் என ஏதிலிகள் காத்திருந்தார்கள். இரண்டாயிர வருடங்களாய் சுருண்டிருந்த மொழிச்சுருள் தன் லிபிகளை நீவி, விரல்களை வரைந்து வைத்தோடில்லாமல், கெண்டைக்கால்களை இறுக்கி பின்னங்கால் சதையிறுக குதிகாலால் நிலத்தை அறைந்து எழுந்தது. அர்த்தங்களை துவராடையென கழுத்து வழியே இறுக்கி மிக மெதுவாய் குகை விட்டு பசித்த வனப்புலி போல கடற்கொற்றத்தை எட்டிப் பார்த்தது. வரிகள் கொண்டது புலியென ஆதித்தாய் சொல்லிவிட்டுப் போன தனது ஏடுகளை பாறைக்கற்களால் கட்டி மிகுந்த வெறுப்போடு வானம் நோக்கி எறிந்தது. கடல் சப்தங்களையும் இரைச்சல்களையும் முகல்களையும் வெளியேற்றி, கற்களையும் உள்வாங்கிக்கொண்டது. கடலின் இறுகிய முகத்தில் இறுதியாய் காறி உமிழ்ந்துவிட்டு திரிதிரியாய்ப் பிரிந்த சடையை இழுத்துக் கட்டி, தன் சாவையே நல்லூழாகக் கொண்ட சாத்தன், தன்னை சாத்தான் என்று தனக்குத் தானேன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கரையொதுங்கி கொற்றக்குடி வெப்பத்தால் சிவந்திருந்த மூங்கிலொன்றைப் பிடுங்கித் துளையிட்டு பெருமூச்சை இழுத்து ஊதியபடி அரண்மனை நோக்கி நடக்கத்தொடங்கியது. எண்ணற்ற காவலர்கள் காவல் காக்கும் பொக்கிஷ அறைதான் இளவரசியின் பள்ளியறையென அரச வகுப்பில் கல்வி கற்ற கரணத்தியல்வோரும், கூர்ச்செவிப் பெருந்தகைகளான கருமவதிகாரரும்  சொல்லிச் சொல்லி, மக்களுக்கு அது ஒரு கல்லறையென்றே நினைவில் பதிந்திருந்தது. கண்களைக் கட்டியபடி உணவுண்ணுங்கள் என்ற வார்த்தையை முன் வைத்து செங்கோல் தன்  கனவுகளை உண்ணத்தந்தபோது மக்கள் ஊமைப் பெருமூச்சை எழுப்பியபடியே காத்தும் இருந்தனர்ஏதிலிகளின் உடலில் ஓடுவது குருதியல்ல என்றும் கொற்றத்தின் ஆணைகளும் சொல்லற்ற அர்த்தங்களுமே என்ற கருங்கல்வெட்டைத் தாங்கியவாறு நகரசதுக்கத்தில் நின்றிருந்தது அங்காடிப்பூதம். ஏதிலிகளுக்கு தலைவன் என்று அறிவிக்காத ஒருவன் கல்வெட்டின் அடிக்குறிப்பில் தனது இடவிலாவில் எலும்பொன்றை உருவியெடுத்து சிறு உளியெனச் செதுக்கி, வரலாற்றாசிரியர்கள் ஆள்வோரின் ஆசனவாய்களை நோக்கிக் காத்திருக்கும் சதையற்ற குதப்பன்றிகள் என்று செதுக்கி வைக்க, நாற்சதுக்கமே புரவிக்குளம்பால் இரைக்கப்பட்டன. அரசக் கல்வெட்டைத் தொட்டவனின் கரங்கள் இன்னும் இருபத்திநாலு மணித்தியாலங்களுள் சதுக்கப்பூதத்தின் இளி புன்னகைக்கு  முன் வைக்கப்படாவிட்டால், நகரத்தில் உலாவித்திரியும் ஏதிலிகள் தங்களுக்குப் பிரியமான உறுப்பை இழப்பார்கள் என்ற கட்டளை கொற்ற முரசால் அதிர்ந்து ஒலித்தது.

கைவிடப்பட்ட அம்முரசோ சமாதானம் என விழியிழந்த புறாவைக் கொண்டு வந்தவனின் முதுக்குத் தோலாய் இருந்தது. இருபத்தியிரண்டு மணிகளிலேயே கல்வெட்டின் முன் ஒரு மர வட்டிலில் இரு கரங்கள் மூடியபடி சதுக்கத்தில் காத்திருந்தன. அரசிக்குச் சேதிப் போக, அரசன் மகிழ, இளவரசி நேரில் காணவேண்டுமெனத் துடித்தாள். அரசன் அரசியை நோக்க அரசியோ இளவரசியைப் பார்த்து  பரிவாரங்களை இணைத்துக்கொள், அரசு தனிமையின் எதிரி அதை எப்பொழுதும் மறக்காதே எனப் புத்தி புகட்ட, இளவரசி நேரே சதுக்கத்திற்கு வந்தாள். மூடிய கைகளைப் பார்த்தாள். ம்… என்க ஏதிலியொருவன் தானே சென்று எடுத்துத் தர இளவரசி கரங்களைப் பிரியென்க ஏதிலி பெருங்கூச்சத்தோடு வெட்டப்பட்ட கரங்களை பிரிக்க உள்ளே உப்பால் தடவப்பட்டு செந்நிற நா ஒன்று இருக்க, திகைத்த இளவரசி மரத்தட்டை இடது காலில் உதைத்தாள். நா தரையில் விழுந்து பெருங்கடல் மீனெனத் துள்ளியது. வேடிக்கை பார்த்த சிறுமி செம்மீனென துள்ளி எடுத்து சதுக்கத்தின் அருகில் கொந்தளிப்போடு ஓடிக்கொண்டிருந்த கால்வாயில் விட்டாள். நா தன்  தாகம் அடங்க பயணித்தது

மொழி தன் நாவை இருமடங்காக்கியதோடு பிளவையும் அர்த்தமாக்கியது. அது தன் கன்னிமையை காலங்கலாமாய் காத்து வந்த கூடு விட்டு உடலெங்கும் சாண்டொழுக…பின் சாண்டடங்கி தூமையொழுக கொற்றத்தின் தேக்கு மர வாயிலை நறுமணத்தால் தட்டியது. வெளியே காவல் காக்கும் வீரர்கள் என அழைக்கப்பட்ட அவர்கள் சில நாட்கள் கதவை அடைத்து உள்புறமாகவே காத்திருந்தனர். நிமித்திகன்   அரச நிழல் பதிந்த லட்சினை இன்றி எவரும், அரண்மணை வாயிலைத் தாண்டி நடமாடக்கூடாதென விதி ஒன்றைச் சேர்ந்திருந்தான்நறுமணமாகி செந்சாந்துக் குழைசல் போல் வாசம் வீசி பின் பிணநாற்றம் வரும் திசையுணர்ந்து காவலர்கள் கதவின் சாவித் துளை வழியே நிதானமாய் பார்த்திருந்தனர். இந்த நிதானம் என்னும் தந்திர மிருகம் அவர்கள் அரசவை முதியவனின் நாவைத் தாக்கி  காலமும் எண்ணூறாயிற்று. சிங்கத்தின் நகங்களின் மீதேறி சிங்கத்தின் கடைவாயைப் புசிக்கும் சிற்றெலியின் சாய வண்ணச் சித்திரத்தை அரண்மனை தனது தர்க்க வாயிலில் தொங்கவிட்டிருந்தது. அவ்வோவியமோ தனது செந்நிறமிழந்து வெண்ணிறமேறியிருந்தது. நாட்பட்ட உப்புக் காற்றில் அது தன் சாரத்தை இழக்கும் என முன்னமே கண்டு சொன்ன அயலகத் தூதனுக்கு நூற்றியெட்டுப் ஆடகப்பொற்காசுகளைத் தானமாகக் கொடுத்து மேலும் சொல் என்றார் அரசர். உள்ளூர் ஓவியர்கள் வரலாற்றை வரையமுடியாது, அத்தோடு வரலாற்றை வரைய சம்பந்தப்பட்ட மண்ணில் உதித்த விரல்கள் தடுமாற்றமும் சார்பும் கொண்டதாகயிருக்கும் என அவன் சொன்ன சேதி கேட்டதிலிருந்து அரசன் தனது விழிகளை மூடவேயில்லை. இடது தோள் நரம்பும் அவரை மீறி அடித்துக்கொண்டிருந்தது. பின், தூதனொருவன் வீசிய வலையில் மாட்டிய ஓவியனை இழுத்து வந்திருந்த நிமித்திகன் சொல் என்றான். சொல்ல வந்திருந்த தூதனோ உள்ளூர் மண்ணைக் கண்டு எள்ளலான சிரிப்பில் இது கருமை, அதோடு சூன்யத்தில் திக்குத் தெரியாமல் உதிக்கும் எண்திசைப் பாழ், இது பிரதிபலிப்பைக் கடத்தாது, கடத்தவும் உதவாது என்றதும், அரசன் மிகுந்த குரூரத்தோடு ஓவியனைப் பார்த்துக்கொண்டிருக்க, சூழல் உணர்ந்து ஓவியன் தன் வாயைத் திறந்து காற்றை உள்ளிழுத்துவிட்டு…சரி… இதற்கு செந்நிறம் பத்தாது, அடர்த்தியேறிய சிவப்பே உத்தமம் என்றான். அரசன் நிமித்திகன் தூவன் மூவரும்  ஆறுவிழிகளைச் சுழற்றியசைக்க, குழப்பத்தைப் புரிந்துகொண்ட  ஓவியன் வண்ணத் தீற்றல் பற்றி எங்களையாளும் மலை மன்னன் கவலைகொள்வதேயில்லை. எங்கள் நாட்டில் சிறைக்கைதிகளின் குருதியில்தான் சுவர்கள் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. உயிர்ப்புள்ளதும், உயிரசைவால் பாயும் தன்மையும், வேகத்திற்கு ஏற்ப விரைந்தோடும் தன்மையும் அதற்கு ஒருங்கேயிருப்பதால் ஓவியம் உயிருள்ளதெனப் பொருள்படுமென்றான். அதுவரை அமைதியாய் இருந்த இளவரசி வண்ணச்சிற்றாடை தன் வடுவில்லாக் கெண்டைக் கால்களை தீயுரசாய் உரச ஆணை என்றாள். சபை எண்ணற்ற ஓலங்களுக்கு அக்கணமே திறவுகோலாயிருந்தது. தேக்குச் சிறைக்கதவுகள் நல்யாமம், முனிகளிணையும் உத்தம நேரம் மூன்று மணிக்குத் திறக்கப்பட்டது. எலும்புக்கூடுகளை வாரிப் போனது குதிரை வண்டிகள். கடல் தன் பிசுபிசுப்பின் அளவை கூட்டிக்கொண்டிருந்தது. மீன்கள் தங்கள் வாய் திறந்து கடலுப்பைத் தின்னமுடியாது விழிகள் வெளுக்க அலைவதாய் வயதான மீனவன் தெருவிலே சொல்லிச் சென்றான். நாவாய்கள் காற்றிலேறித் திமிற நினைத்தும், அலையானது மதயானை மத்தகம் போல் முன்நிற்க கடல் உள்வாங்க மறுத்தது. அரசனுக்குச் சேதி போக அரசனோ அரசியோடு கூடிய உடலியக்கத்தை பாதியில் நிறுத்திவிட்டு  வெளியே வந்தான். இளவரசி நான் கவிதை சொல்லட்டுமா தந்தையே என்ற சொல்லை முடிக்கும் முன், தூதுவன் நிமித்திகனை நோக்க நிமித்திகன் வானத்தை நோக்கினான். நெடுங்கதவு திறக்க கதவருகே காத்திருந்த நாற்றம் உடலாகி நகங்களை போர்வைக்குள் உள்ளிழுத்துக்கொண்டு உள்ளே நுழைகையில் சீழொகும் செவிகளும் பொந்து கண்களையுங்கொண்ட பொதுவிட சபை நிறைந்திருந்தது. சிறுமணியொலிக்க, ஆமணக்கு எண்ணெய்யால் எரிந்துகொண்டிருக்கும் நற்தீபங்களை நாற்புறமும் காட்டிய நிமித்திகன் இளவரசி நேற்றிரவு கனவில் கண்ட வண்ணத்தின் எதிர்காலத்தை எவர் உரைக்கிறீர்கள் எனக்கேட்டான். சபை சாவமைதி கொள்ள, தாள ஒலி குறைய சாத்தான் மிக மெதுவாய் எழுந்ததுஇளவரசி மூடிய முக்காடு கண்டு ஆச்சரியமில்லாது உங்கள் வதனத்தைப் பார்க்க வேண்டும் என்றாள், சாத்தான் அசைவற்ற நிழலால் முகம் மறைத்தபடிகனவைக் காட்டுவதில்லை இளவரசி என்ற ஒற்றைக் குரல் முக்காட்டிலிருந்து கசிந்தது.

சிற்பியெனும் ஆணவத்தால், சிலை சூடேறித் தணிந்துக் குளிரும் முன்னே அவசரத்தில் கண்திறந்த சிற்பியொருவன், தண்டனையில் தச்சனாகி வெறுப்போடு பிணஞ்சாய்வதெற்கெனச் செய்த கருந்தேக்கு ஆசனத்தில் அமர்ந்திருந்த இளவரசி சப்தமெழ இருக்கையைத் தள்ளி விட்டு மெதுவாய் இடது காலைக் கீழே வைத்தாள். பல்லிகல் இடது சுவரைத் துளைத்துச் செல்வது கண்ட நிமித்திகன் அன்னையே…எனப் பதற இளவரசி அக்குரலுக்குரிய முகத்தைப் பார்க்க வேண்டும் முக்காட்டை நீக்கச் சொல் நிமித்திகா, குரலும், ஆண் பெண் பேடி என எத்தன்மையும் உணர்த்துவதாயில்லை என ஆணையிட, குரல் முக்கோணச் சுவர் கொண்ட அவ்வறையை அதிரடித்ததுநிமித்திகன் தன் கோலால் முகமூடியை விலக்க இரண்டாயிர வருட புழுக்கள் உள்ளே கரும்பாசி நிறத்தில் பச்சை சுவாலையாய் நெளிந்து கொண்டிருந்தது. நிமித்திகன் உருக்கண்ட குரூரத்தில் அய்யோ என கோலை விட கோலில் கட்டியிருந்த சீன மணிகள் சிதறி தூண்களெங்கும் பட்டுத் தெறிக்க, அறுந்து தொங்கும் இசை கண்ட இளவரசி நீ மந்திரக்காரனா என எள்ளலை வைத்துக் கேட்க மொழி தன் நகைப்பை விழிகளாக்கிவிட்டு, மிகுந்த விசாலமான எண்ணத்தைக் கொண்ட சிறுமிருகம் போல இளி நகையைச் சிந்திவிட்டு கேள் இளவரசி… என்னை மந்திரம் என்றும் ஒலியென்றும் பிரித்தவர்கள் காரணத்தைக் கடலுக்கு அப்பால் உள்ள நிலத்தில் தொலைத்துவிட்டு, தைத் தொலைத்த துயராலேயே கடலுக்குள் புகுந்து இன்றோடு இரண்டாயிர வருடங்கள் முடிவுக்கு வருகிறதுஅவர்கள் தொலைந்து போன நிலத்தை எண்ணி கருத்த நாசியால் நாளும் விடும் நிணப்பெருமூச்சே அலைகள் என கொற்றத்தின் நில வரலாறு சொல்லியிருக்கும். குடிபெயர்ந்தவர்களது முகல்களை சாப்பறையில் ஒலித்துப் பார். காடேகும் விலங்குகள், ஒலியின் உருக்கண்டு மயங்கித் திரிவதை சகுனங்கள் சொல்லும். சற்று முன் சிந்திய உனது புன்னகைகள் நவரசங்களை கொண்ட ஒரு எளிய சலனம். எனக்கானது அவ்வகையில் பிரிக்கப்படவில்லை, உடலெங்கும் புன்னகையின் மாறுபட்ட தசைச் சுளிவுகளை நான் பிரிபடாது வழங்கமுடியும். இது கேள் இளவரசி… கரும்புயல் அடிக்கும், மண்சரியும், தடங்களை அழிக்க காற்று மேலெழும்பும். கவனம் கொள்… மொழி தன் அங்கசைவுகளை ஒரு போதும் நம்பியதில்லை. அங்கத்தைச் செதுக்கும் விரல்களை அவை கொண்டிருப்பது சபிக்கும் நகங்களை வளர்த்துக் காட்டவே. இளவரசி காற்றில் உந்திய தன் புன்னகையை இறக்கி இருக்கையில் அமரச்செய்தவாறு நீலநிறத்திற்கென இருக்கும் மென்மையான தன்மையுடைய தனது கீழுதடைஅடிக்கடி நாவால் நக்கிச் சுவைத்த கதுப்புகள் மறைய பேசத்தொடங்கினாள். நட்பினால் சாத்தியப்படாதது எதுவுமில்லை  சாத்தானே.. இப்பொழுது கூறிய ஒரு சொல்லை அர்த்தங்களை குழைத்து வீரியத்தை ஒலியாக்கி  மந்திரமாக்கினால் போதும், வாழ்நாள் முழுக்க நீ என் அடிமை.

குளிந்த காற்றை உள்ளிழுத்து ஒரு நீண்ட பெருமூச்சோடு சாத்தான் மிகச்சாதரணமாகச் சொல்லியது…. நட்பு. அதீத அர்த்தச் சேர்மானத்தில் கொதித்து நுரையேறிய பச்சைச் சொல் அல்லவா நட்பு. அன்பு தன் ஆவியைப் பரத்தி அழைக்கிறது. பெருமணல் வட்டத்தில் எரிபரலைத் திணித்து தன்னைத் தானே விரும்பி ஏற்கும் ஏதிலிகள் தளும்பேறிய விழிகளால் வெறுத்து நோக்கி நிணம் பொசுங்கிய இடதுகரத்தால் வெறுத்தொதுக்கிய. இப்புவிக்குள் முளைத்த அவித்த சூடேறிய கிழங்கல்லவா அது. திகைத்த இளவரசியின் முன் ஒரு அடி முன்னே வர உரத்த குரலில் சாத்தான் தன் குரலை உயர்த்தியது. திகைப்பையடக்கு இளவரசி…இழிசொல்லின் கணம் நான்கென உனக்கு உணர்த்த எனது கடுஞ்சொல் இவுளியாய் கடைவாயில் வழிந்தபடியே இருக்கிறது. அதுவும் இளவரசியின் நட்பு. அதிகாரத்தை முகமாய் மாற்றிய இளவரசியே, என் முன்னால் ஏதிலிக்குரிய லிபிகளை இறக்கிவைக்காதே, வார்த்தைகளின் பளு என்பது உன் அகராதியில் கனம் என்றும் இன்னப் பிற அழுத்தங்கூடிய வாதைககளால் விளக்கப்பட்டிருக்கும். என் தொகை வேறு, உன் நீதியை என் முன் வீசியெறியாதே, மூளைக்கதுப்பில் வரியுள்ளோர்க்கு உமது சொற்கள் ஆணையாய்த் தெரியலாம், நான் வசைகளின் சொத்து. பெறுவதும் தருவதும் மாறி, ஈட்டலும் வகுத்தலும் பிறழ்ந்து நாவாய்களோடு தூரதேசத்து அம்பைச் செதுக்கியபடி வரும் எண்கால் பறவை உன் தேசத்தைக் குறிவைத்து இன்றோடு வருடங்கள் ஆயிற்று நான்குகுறித்து வைத்துக்கொள் விலங்கு துயிலும் இடமின்றி உம் தேசத்து மண் வெளிறிவிட்டது. பறவைகள் சிறகுகளால் படபடத்து இசைப்பது சி றுபறையொலியென நகரைச் சுற்றி வருகிறது. கள்ளருந்தாக் குடிகள் நள்ளிரவில் வெளிறிய வாய்களோடு, கருப்பு நிற அன்னம் தங்கள் இல்லக் கதவுகளை துளி நட்சத்திரங்களென துளை செய்வதாய்ச் சொல்லி, வயிற்றைக் கிழித்து நனைத்த குருதியால் எழுதி அனுப்பிய புகார்களை உம் தலைமைக் கணக்கன் விரல் வலி கொள்ள கிழித்த சேதி உன் ஊமைச் செவிகளை அறையவேயில்லை.

நிமித்தங்களோ சூல் கொண்டு பெருவயிற்றைத் தூக்கியலைகிறது. வெடிக்கும் கணத்தை அக்கணம் காணவேகூடாதென முதலில் நகர் நீங்கியது யாரெனச் சொல்ல எனக்கு உன் அனுமதி தேவையில்லை. கேள் இது சாத்தானின் அரைவட்ட நாக்கு பிளவிட்டுச் சொல்லும் நகர்நீங்கு படலத்தின் நடந்த சேதி. இந்நகரை வெறுத்தொதுக்கி இடதுகாலால் கொற்றம் நீங்கியோர் கதைச்சுருக்கம் இது. முதலில் கொற்றப்பெருமை காக்கும் விண்ணமரர், விண்ணமரர் நீங்க அவ்வெற்றிடத்தில் இருக்கமுடியாதென்றலறி, அமரரற்ற தெருக்களில் விரிந்த சடையோடும் புலம்பிய வாயோடும், பித்தேறியலைந்த கொடுஞ்சித்தர், சித்தர் பாதம் அரைபடா மண் எதற்குமதவாது என விழிசிவந்த கணசுரர், அசுரவேள்வியின் தீக்கணியில் இமைதுடிக்க, இசையில்லா வாழ்வெதற்கென நகம்கிழித்தத் துடியை கல்லறைக்காடுகளில் வீசியெறிந்த இசைக்கின்னரர், இசை, பொழுதை உண்ணும் வாய்களையுடையது, அசைச்சொற்கள் இல்லா நகர் நகரும் செங்கிணறென உரைத்து உதடுகளை அறுத்தெறிந்ததோடு காலடி மண்ணையும் உதிர்த்துவிட்டுக் கிளம்பிய கிம்புருடர்இயக்கம் நின்ற சாவமைதியில் காந்தர்வரும், இயக்கத்தை மறுத்தழித்து அழிவை உண்ணும் இயக்கரும் விஞ்சையரும் முறையே நகர்விட்டேகினர். பின் ஆணைகள் தங்களது அகண்ட வாய்களால் விழுங்கும் நாட்பட்ட பிணங்களைக் களிகூர்ந்துண்ணும் இறக்கை கொள் வெண்ராக்கதரும், அசதிமறந்தக் குறளைப்பூதரும், இன்னபிற திக்கையாண்டுவந்த பைசாசங்களும், நிலம்பாவா உன்மத்தத்தை குறிசொல்லி விளக்கும் அந்தரரரும், கோள்களை கரமுயர்த்தி மண்ணுக்கிழுத்து சப்தத்தால் உண்டு மகிழும் செம்முனியும், தோளில் திசைகாட்டும் பாம்பணிந்த உரகரரும்இறுதியில் மண்ணை ருசித்துணரும் போகரும், போயின பின் பூமியரும், திசையொழித்து கருஞ்சிறகை வீசி பறந்த சேதிகள் உனக்கு வரவும் இல்லை, உமது நீள் செவி உணரவும் இல்லை. இறுதியாக.. உமது  கடவுளின் கரத்தில் துயிலும் செங்கோலின் வழியே பிதுங்கி வரும் வாதைகளும் இங்கில்லை.

அறைக்கதவிற்குப் பின்னே அரசர் தன் கடுஞ்செவியை ஒப்படைத்திருப்பதை கண்டுணர்ந்த சாத்தான் உரத்த குரலில் சாவித்துளைகள் திறப்பதற்கு, கன்னமொட்டிய செவிகளை மூடுவதற்கல்லவென்க நிழல் சட்டென நீங்கியது. புன்னகை பூத்த சாத்தான் ஆம் இங்குமட்டுமல்ல மண்ணைக் கிழித்து வானேகிய அம்புகளைப் பயிரிடும் அரண்மனைகள் அனைத்துமே சதிச்சொற்களால் ஆன தளபூமிவார்த்தைக்கூட்டங்களை வைத்து வனைந்த மண்குடம். கனவுகளோ யானைப்பாதங்கள். ஓர் நாள் வால்சுழற்றி சுக்கு நூறாக்கும். இளவரசி கூறினாள், நகங்களில் வரைந்து வைத்திருக்கும் செம்பூக்களென நின் தைரியம் வீரம் இரண்டையும் யான் மெச்சுகிறோம் என்றாள். சாத்தான் முகத்தை மீறி வரும் சிறுகரும்புழுவை நசுக்கி எறிந்துவிட்டு வார்த்தைகளைக் குழப்பாதே அதற்கு அர்த்தங்கள் என்று ஒன்று இல்லவே இல்லை. தருணங்களே வார்த்தைகளை தனதாக்குகின்றன. ஒரு சொல்லையும் உச்சரிக்காத உனக்கு இப்பீடத்தை வழங்கிய தூதுவனை வரச்சொல் நான் பேச வேண்டும். இளவரசி பித்தேறிய விழிகளோடு தூதுவனே எனக் கத்த கதவின் இடுக்கு வழியே  வந்தான் அவன்தூதுவனே  நீ எந்த நிலம். திகைத்த தூதுவன் இளவரசியை நோக்க இளவரசி பதிலிறு என்க தூதுவன் தூது செல்பவனுக்கு பாதத்துக்குக் கீழிருப்பது எப்பொழுதும் அவன் நிலம்தான் என்றான். முட்டாள்.. நிலம் என்பது உடல். உனக்கு சொந்தமாக இருக்கும் உடல்கள் எத்தனை ஒற்றன், ஒற்றனின் குல தெய்வமாகிய கோழை, கோழை உமிழும் குணத்தை நேர்செய்ய சகுனத்தைக் குறைசொல்லும் நிமித்திகன், நிமித்திகம் போய்ச் சேராவிடத்தில் உதிக்கும் புறம் சொல்லி, விளைவை அனுபவிக்கும் துரோகி, தூரகத்தை மறைக்க சாட்சியை சபையிழுக்கும் காட்டிக்கொடுப்பவன்… இத்தனை பாவங்கள் உணக்குண்டு…இல்லையா…உடல் திகைத்த தூதுவன் இளவரசியை நடுக்கமுற்றுக் கவனிக்க சாத்தானோ கடுங்குரல் எழுப்பி இயற்கையிலேயே நீ நாடோடியாக இருந்திருந்தால் உன்னை வரவேற்றிருப்பேன், நாடோடிகளுக்கு கால்களும் சொந்தமில்லை. நீயோ தூதுவன். தூதுவஞானம் என்பது நிலத்தைச் சபிப்பதில்தான், தூதுவனுக்கு நிலமென்பது வெற்று இருப்பு. வரைபடச் சித்திரம், சித்திரத்தை இழுத்து முடிக்கும் முற்றுப்புள்ளி. புள்ளியிழுத்துச் சோர்ந்த உனது அயர்ச்சியைத் தீர்மானிக்கும் அலைச்சல் இன்னொரு நிலத்தை  பிடுங்குவதற்கு உதவி செய்யும்.. இல்லையா, சொல்… உன் மூத்தோரின் நிழல் படிந்த ஆலயம் ஏதேனும் இருக்கிறதா…என்க இளவரசி கடுங்கோபத்துடன் எம் தூதுவனை எக்களித்த உன் தசைகளை அரிந்தெடுக்க ஆணையிடப் போகிறேன் என்றாள்சாத்தான் இளவரசியை நிதானமாகப் பார்த்து… இளவரசி   நம்பிக்கையின் மதிலில் வலது கால் பெருவிரலால் ஏறி நின்று, வெண்ணிறகை விரித்துப் பேசுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறாய் என்க, இளவரசி… இருந்துவிட்டுப் போகட்டும் சொற்கள் உனக்கு நம்பிக்கை, தண்டனை என்கிற இரு பதங்களை உனது மூளையில் திணித்திருக்கிறது. அர்த்தக்கூறை இழந்த மூளைப் பதியனில் நான் நட்ட மரம் கிளைத்து வேர்விட்டு, நீ கூறிய அதே இரண்டாயிர வருடங்களாயிற்று என்பதை மறுபடியும் நினைவு படுத்துகிறேன்.. என்றவள் இனி நீ என் அடிமை. என்னைக் கணிப்பதற்குரிய அதிகாரத்தை நீயே எடுத்துக்கொண்டதால் உனக்கு இந்த தண்டனையை இடுகிறேன்சாத்தான்… ஆம் ஏதிலிகளுக்கும், சாமான்யர்களுக்கும் நட்பு கிடைப்பதில்லை. அது மேலும் பொருட்படுத்தக்கூடிய ஒன்றல்ல, பதாகையில் அமர்த்திய கருணை பொருந்திய, கனிவான, பற்களை தாடையிறுகக் கடிக்காத முதிர்ந்த ஒளிபொருந்திய  சொற்களே  யான் பேச முடிந்த ஒன்று.

சாத்தான் மிகுந்த அமைதியோடு.. இப்படியாக உன் தருணங்களை ஒளியிழந்த வேளையில் நீயே விளக்கிக் கொள்ளும்போது அதற்கு நான் பொறுப்பேற்கமுடியாது. அறிந்து கொள் இளவரசி, நட்பு ஏதிலிகளுக்கு வாய்க்காத ஒன்றென நீ உரத்துக்கூறியதை நான் பகிர்ந்து கொள்கிறேன். குருதிச்சூடு நெஞ்சை நிறைக்கும் பெருமூச்சில் பலியின் மனம்குறைகள்தான் மேன்மைகளை விகிதாச்சாரப்படி அளக்கும் தராசு எனவும், நடத்தைகள் அதன் போக்குகளைத் தீர்மானிக்கும் அசைவெனவும் கொள்கிறேன் நான். உன்னதங்களை பலிபீடத்திற்கு கொண்டு செல்லும் காலத்தை நானே உண்டு பண்ணினேன். காரணம் அக்காலத்தை அகாலமாக்கவே நான் பிறந்துள்ளேன். நியாயங்கள் எப்பொழுதும் ஏதிலிகளுக்கு தன் இதயத்தைக் காட்டுவதில்லை, ஆனால் அது இளவரசிகளான உன் போன்றோரின் அதிகாரத்திற்கு தன் புட்டத்தை நெகிழ்த்திவைப்பதோடு வெட்கமில்லாமல் விரித்துக்காட்டி, அதில் புனுகுப்பூனையின் மணம்வீச குதிரைரோமங்கொண்ட வெற்றிச் சாமரத்தால் பெருத்து வீசுவதோடு கைகளை உரக்கவும் தட்டுகிறது. அதிகாரம் குரூரத்தால் நிரம்பிய குளம்,ஆனால் வற்றும். நட்பின் பெயரால் அந்தரங்கமும் இல்லாது போன புவியில்தான் என் கால்கள் பாவுகொள்கிறதுநினைவில் கொள் இது சாத்தானின் சொற்கள். எனதான ஓவியக்குறிப்பைப் பொறுத்தவரையில் சாமான்யர்களை வரைவதற்கும், இளவரசிகளை வரைவதற்கும் வண்ணங்களை எப்போதும் அது பேதம் பிரிப்பதில்லை. சுருங்கச்சொன்னால் மரணத்தின் கெண்டைக்கால்களில் கசிந்தோடும் கரிய நிழலே யாவருக்கும். வேறுபாடுகளை விதிக்கும் பட்சத்தில் நான் துர்சொப்பனங்களினால் அல்லலுற்று, ஈருடலைப் புணர்ந்து, நசநசப்பை விழிகளில் இறக்கி, அவமானத்தை ஆயுதமாய் ஏந்தி, அன்றாடம் நீ தொழும் கடவுளாகும் சாபத்தை அடைவேன். என்னளவில் அந்தரங்கம் நிரம்பியுள்ளவன், அம்மணமற்றவன். இவையே என் வரையிலான விதிகள். எல்லாவற்றையும் நீதி என்ற சொல்லுக்குப் பதிலாய் இடும்போது கொடுஞ்சூழ்,  தன் ஆகப்பெரிய கரங்களில் திசைக்கொன்றாய் ஆயுதத்தை ஏந்தி விடுகிறது. ஏதிலிகளின் அந்தரங்கத்தை மதிக்காத இளவரசிகள், தங்களது அந்தரங்கத்தை வானளவ போற்றுகிறார்கள். அந்தரங்கமோ அவர்களைப்பொருத்த மட்டில், உன்னதமானவர்களின் படுக்கையறையாக நீண்டு கிடக்கும் பலிபீடங்களில், கள்ளத்தனமாகக் கசியும் இசைக்குறிப்பு அவ்வளவே. இளவரசிகள் எப்பொழுதும் மௌனமாக இருக்கின்றனர். கொற்றப் புரோகிதர்களோ தாபம் மேலிட மண்டியிட்டு வார்த்தைப் பிச்சைகளை நெடும்பாலையென வரியற்ற  கபால ஓட்டில் கோருகின்றனர். அறநிலைப் பொருளுணர்ந்தோர், மறநிலைப்பொருளுணர்ந்தோர் அவற்றை தத்துவச்சூத்திரங்களென அவர்கள் அறிவிக்கப்படக் காரணமாய் இருப்பது, உன் குதிரைத்தோலிலான பாதணியில் வெறிபடர்ந்து முத்தமிட்டுச் சூடேறிய கந்தக  உதடுகளை தங்கள் நாக்குக்கு வெளியே வைத்திருப்பதனால்தான். நாவில் கசியும் ஈரத்தை எச்சிலெனவோ, குருதியெனவோ ஓலையில் கீறலாம். ஞாபகத்தில் வைத்துக்கொள்.. இடும் காட்டின் கிளர்ந்த மண் மணத்தையும், சுடும் காட்டின் புகைச் சாரத்தையும் வானிலிருந்தே நுகரும் கருத்த அலகை இறக்கித் திருப்பும் பிணக்காக்கைகளும் உண்ணமறுத்து, ஆகாயத்தை அரைவட்டச் சுழற்றலோடு மேலெழும்பிப் பறக்கிறது.  முடிவற்ற ஆகாயத்திற்குக் கீழ் மிதக்கிறது சாரமற்ற பிணங்கள். ஏதிலிகள் தங்கள் காலுக்குக் கீழ் காண்பதெல்லாம் பதுங்குகுழிகளும், பாதங்களைச் சிதறடிக்கும் பளிங்கு நிற வெடிகளையும்தான். அவர்கள் இருண்ட கண்களால்  வரும் தங்கள் கனவுகளில் விரியும் நிலத்தையே நீங்கள் முதலில்  கைப்பற்றுகிறீர்கள். கையகல கனவுக்காக ஒட்டுமொத்த உடலையும் குருதியிழக்கச் செய்து உங்களின் விழிகளுக்கு பரிமாறுகிறீர்கள். ஆணைகளுடன் பேசவரும் உன்னுடன் உரையாட எனக்கு என் ஆதி மொழி தேவையில்லை. மேலும் செங்கோலுடன் ஏதிலி எப்பொழுதும் உரையாடமுடியாது. புரோகிதர்களோ தேசகுதத்தை மந்திராலோசனைகளால் நக்கிச்சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தகச்சொற்புணர்ச்சி. யோசித்துக்கொள், உனது உன்னத மொழிகளை அப்படி அழைக்க நீ விரும்பும் அந்த கணத்தை. காவியங்களை உருவாக்குவதன் மூலம் கொற்றம் தனது கற்பனையில் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. குடிகளை ஏதிலிகளாய் மாற்றிய செங்கோலின் நிகண்டசூத்திரங்கள் அவர்களுக்குத் தேவையேயில்லை. அவைகள்தான் குடிகளை இம்மண்ணை விட்டுப் பிரித்த முதல் பாதணிகள், பித்தவிரிவோடிய காலுக்குக் கீழ், தான் கனவு கண்ட நிலமும், கண்ணுக்கெட்டிய தூரத்தில்  தன் இரை திரியும் நிகழ்வே அவர்களுடையது. அதுவே அவர்கள்நீங்கள் விதைத்ததாய் சொல்லி நீட்டிய காவியங்கள், வன்முறையின் இந்திரியத்தைக் ஏதிலிகளின் முகத்தில் கடுஞ்சொல் தெறிக்க உமிழ்கிறது. நீதி என்ற சொல்லை நீங்கள் நிதானமாய் உச்சரிக்கையில் உங்கள் வாய்க்குள் தூங்கும் நாக்கு சுய இன்பம் செய்கிறது. நிலப்பெருஞ்சோறென ஏதிலிகள் கண்டுணர்ந்த மண்ணைப் பிரித்து ஏதிலிகளை உருவாக்கி அவர்களுக்கென இருந்த தாய்ச் சொற்களை அவித்துண்ணும் கடைவாய்களை காவியங்கள், இதிகாசங்கள் என அழைக்கையில் அது எப்பொருளை ஈனத்தரும். இளவரசன்கள், இளவரசிகளிடம் மட்டுமே தேச நட்பு தனது குழியோடிய பொந்துகண்களினால் கூரிய ஒளியை சுடர்விட்டெரியச்செய்யும். அவர்களுக்கு யாசகம் கேட்டறியாத துருப்பிடித்த நா, மேன்மையான வார்த்தைகளை மட்டுமே கேட்கும் சீழொழுகும் செவி, இரும்பாலான இதயம், தங்கத்தாலான குறி. இவைகள் மட்டுமே வளம் பொருந்திய சொத்து. இது இளவரசியின் எழுதப்படாத கொற்றக் குறிப்புகள். இளவரசியைப் பொருத்தமட்டில், நட்பில், பொருள் பரிவர்த்தனைகள் கிடையாது. ஒரு சல்லி நாணயம் கூட அவள் இரக்கவும், ஈட்டவும், வகுக்கவும் கூடாது. உனது அவையில் வீற்றிருக்கும் பிணங்களை நீ கொற்றத்தோர் எனச் சொல்லுகிறாய். அவர்களோ பேரங்களாலும் பேரத்தின் சொப்பனமான காட்டிக்கொடுத்தலினாலும் சுற்றிவளைக்கப்பட்டு நஞ்சூட்டிய நாவுகளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். கொற்றத்தில் செங்கோலுடைய ஆகிருதிகள், சிற்றசர்கள், மற்றும் தான் அணுக விரும்பாத ஏதிலிகள் கொண்ட தலைவியே, வனச்சொல்லும், ஆதியெச்சத்திறப்பும் உள்ளோரை இளவரசி தன் ஊழணிந்த மென்கரத்தால் ஆசிர்வதிப்பதேயில்லை. ஒழுக்கம் மட்டுமே அவளுக்கு விரிந்த  சிறகுகள். வைகளையே இராஜ்ஜியம் கைகளை நீட்டி யாசிக்கும் நிலவரைபடங்களை கீறிச்செல்லும் உங்களது எழுத்தாணிகள் ஏன் மண்ணிற்கு நிறத்தை ஏற்றவேயில்லை. நீலத்தைத் தாண்டி பிதுங்கும் விழிகளால் நியமிக்கப்பட்ட ஓவியன் செங்கழுகென எப்பிரதேசத்தை இவ்வளவு கவனமாக மயிற்பீலியால் வரைகிறான்மனவோட்டத்தில் தாவும் வனப்புரவியின் கால்களோடு யானைவீரன் தன் அகண்ட பாதங்களால் எவர் நிலத்தை இவ்வளவு வெறுப்போடு கடக்கிறான். அவன் கைகளில் நின் கொற்றம் திணித்த ஆயுதங்கள் ஏதிலிகளின் சுனைமிகுநாவை அறுத்தெறிவதோடு, அவர்களின் கைகளை ஏன் அவ்வளவு குரூரமாகப் பார்க்கின்றன, கைகள் மிருகங்கள் இளவரசி…கைகள் மிருகங்களேதான். அவைகள் கனவுகளைச் செய்து பார்க்க எந்நேரமும் தயராயிருப்பவை. கொற்றத்தின் முன் உரையாற்ற, நாவைத் திறந்து வருபவன் கைகளைக் கட்டிக்கொள்ள வேண்டுமென ஏன் அரசாணை செய்கிறீர்கள்ஏதிலியானச் சாமானியனை, தனது ருசியறியா நாவை மறைத்துப் பேசச்சொல்லும்  ரகசியம் என்ன.. கைகளும் நாவுக்கும் இருக்கும் ஒற்றுமை உங்கள் கொற்றக்குடியைக் குலுக்கிப் பலுக்கி  ரசவாதம் செய்து உடைத்தெறியக்கூடும்.. அதுதானே.

நகர்க் கதவு திறக்க இறுதியாய் வெளியேறிய குயவனின் குரல் அரண்மனை மாடத்தை இரண்டாகப் பிளந்தது. கேட்போர் செவியில் மரணமந்திரங்கள் போலொலிக்கும் தன்மையோடு அது தன்னிசையை அமைத்துக்கொண்டது தான் விரும்பியேதான் என்பதற்கு அக்குரலில் கசிந்த இருளே சாட்சி.கேளூங்கள் கொற்றோரே. குயச்சொல் நீர்கழிந்த மண்சொல். எம் பாதங்கள் பித்தைச் சூடி திமிறி எழுகின்றது. இது எம் தன்மையல்ல. காலங்காலமாய் வரைந்து வனைந்த இம்மண் சுடுகாட்டுச் சூட்டை தன் உதிரமார்பில் ஏற்றிவிட்டது. இனியென் குய விரல்களால் சொற்களை இறுகப் பற்றமுடியாதென்றவன் சிதறும் விரல்களை தர்க்கசபை நோக்கி வீசியெறிந்தான்.  மொன்னைக்கையிலிருந்து வடிந்து வீழ்ந்தது வாள். ஒப்பாரி.. காற்றை கிழித்து அரண்மனைச் சுவரை களிமண்ணாக்கியது. குயமொழி கொடுவாளென சுயத்தைக் கக்கியது…

ஏ…கொற்றமே…. கருணையெனுஞ் சொல்லால் எம்மொழியிறைத்து, வலுத்த அலகால் கொத்தியுண்ணும் சுடுகாட்டுக் காடையே,கொற்றக்குற்றமே… அந்தக விரலால் நான் வனைந்த இம்மண்குவளையில் ஊற்றிய சொல்லை கொற்றப்புரவி இடக்காலால் எட்டியுதைத்து தரைசிந்திய என் சொல்லே… கொற்றப்பித்தே… நின் ஏழேழ் தலைமுறைக்கும் இடு சோறில்லாது நாசமாக….

சாத்தான் நாவை உள்ளேயிறுக்கி கேள் அம்மையே.. இது குயச்சொல். சொல் கொற்றமேறிக் கிழித்தது வானை….

நிரைகவர தேரேறிச் சூடும் வெட்சியும், நிரைமீட்ட உடலதிர மார்பணியும் கரந்தையும் பகைவருடலைப் பிளந்த நிணநாற்றம் போகவரும் வஞ்சியும், எதிர்ந்தே அறையும் காஞ்சியும் எயில் காத்து குடிகள் துயில் காக்கும் நொச்சியும், பகையில் உடைக்கும் உழிஞையும் அதிரப்பொருந்தும் தும்பையும் இறுதியில் ஏழுலகை ஆளும் வாகையும் இனிப் பூக்காது எம் நிலத்தில் குடியழியக் கூத்தாடும் உன் கொற்றக் கால்கள் மண்புதையும்  மண்புதைய வனமழியும் வனமிழந்த தேசத்தில் கழுகுகள் வட்டமிடும், வட்டமிடும் கால்களில்  ஒளிந்திருக்கும் காலனுக்கு பூத்திருந்த மலரணைத்தும் போய்ச் சேரும் அறவெறி இது குரலை இழுத்து முடித்து நீலம் பூத்த கண்களால் வானையும் மண்ணையும் சேர்த்திணைக்கும் கொற்றத்தின் உரு கண்டு கத்தினான் குயவன் இத்தேசம்…இக்கொற்றம்…சுற்றம் சூழ அழியும்…அழிந்து கருகட்டும்..கருகட்டுமென….

நில மண்ணை இறுதியாய் அறைந்து கடல்நீரில் கைகழுவி நீங்கினான் தன் நிலம் விட்டு.

முதற் சொல்  குறுகெனப் பறந்து கிளிச்சிறையால் வேய்ந்த அரசவைக் கொடியைச் சாய்த்தது. கொடிசாய, ஒன்பது முழம் தந்தம் நேர் நீளவும், பதிமூன்று முழச்சுற்றுப் பெருத்தும், தீயுமிழுங்கண்ணால் திக்கை வெறித்து நோக்கியபடி அப்பெருமிருகம் தரையடங்கி படுத்துச் செத்தது. அறைச்சுவர்கள் வெம்மையில் விரிசலடைவதையும், விரிசலின் வழியே கடற்காற்று மேன்மைகளை மட்டுமே கண்ட தனதுதடுகளில் கரிப்பதையும் உணர்ந்த இளவரசி அடுத்த கணமே ஒழுங்கு செய்யப்பட்ட புருவங்களுக்குக் கீழே இமைக்கதுப்பில்  உப்புப் பரியத்தொடங்குவதையும் கவனித்தாள். அந்தரங்கச் செவ்வடுவில் நகங்கங்கருகும் மணம் தீயத்தொடங்க, தன்னுணர்வற்று அவன் நிற்பதையும் உணர்ந்து, இளவரசி நீ…நீ என குரல் கிழியக் கத்த….சாத்தான் தன்னை அறிமுகப்படுத்த. இளவரசி தனது லச்சினைகளை இழக்கத்தொடங்கினாள். சாத்தானோ பாறையுதட்டைப் பிளந்தவாறு. முற்றும் இதுவே முதற்சொல். கடலின் கதை கேளெனச் சொல்லி கவியின் மொழி லிபியாய் இருக்க ஓவியன் தன் லிபியை கோடாக நீட்டி தட்டானைப் போல் தட்டி இழுக்கிறான். நீளும் முற்றுப்புள்ளிகள். கற்பனைகளும், மறதிகளும் பிதற்றல்களும் மட்டுமே சொந்தமாய் இருக்கிற ஒரு குடியனின் காதல், காமம், கேலி, இவை எதுவுமே ஆதாரமாகக் கொள்ளப்படப் போவதில்லை. நகங்களற்ற வெள்ளை நிறப்பூனைகள் உலவும் சித்திரமென எனது மொழியைப் பழித்துத் திரிந்தவர்கள் மூதாதையர்கள். கல்வெட்டுகளனைத்தும் கல்லறைச் சுவர்களின் லிபிகளால் அளக்கப்பட்ட நாட்டில் ஊமைகளின் துயரகீதத்தை வாசித்த இசைஞனின் நாவையல்லவா உனது முன்னோர்கள் வெட்டியெறிந்தார்கள்ஆணைகளை ஊர் முழுக்க பறைசாற்றுவதன் மூலம் உன் அகம் குளிரலாம். ஆனால்  மனத்தின் அடியாழத்தில் புகழ் எனும் சர்ப்பம் வாய் திறந்து விழுங்கவும், ஆறாத வாதையாய் தன் குளிரமுடியா பகுதியில் அது தீராது பற்றியெரிந்து கொண்டிருப்பதையும் நான் அறிவேன். இது கேள்.. புழுதியறையும்  இத்தேசமேங்கும் இருப்பது, இரண்டாயிரமாண்டு காலத்துக்கும் மேலான சாமான்யர்களின் ஆண் பெண் மனதகன்ற சித்திரங்கள் மட்டுமே. சிறு சதைத் துணுக்கு உன் காலை இடறி, நீ கொட்டிக் கவிழ்த்த நிறங்களை அரச ஓவியம் என்று நீ சொன்னால் உன் இளவரசர்கள் நம்புவார்கள்உடல் எல்லாவற்றையும் குரூரமாக ஏமாற்றும் ஆயுதம். வன்முறையின் உறைவிடம்இளவரசிகளும், இளவரசர்களுக்கும் கொளுத்த சதைகளையுடைய அந்தப்புரம் உண்டு, சாமன்யர்களுக்கோ தன் உடலைத் தானே தின்ன மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. ஏதிலிகளோ அரசின் கீழ் தங்களது சுயத்தை அறிய வெளிகள் இல்லை. கொற்றத்தின் தன்மைகளுக்கும்  ஆணைகளுக்கும்   இடையில் ஊறிய  புலம்பல்களை காரியசித்தியென்று சொல்லலாம். ராஜ்ஜியத்தின் இளிவாய்  பாவனை ஏதிலிகளுக்கு கொடுங்கத்தி இளவரசி. கடும்நிறைகாமத்திடம் கெஞ்சி காரியம் சாதிக்கமுடியாது. கட்டளை, உடலை இருகூராக்கும் முன் முடிவுகள் இவைகளை களத்தில் வைப்பதே கணத்தில் நிகழும் சாத்தியங்கள். உண்மையில் கொற்றம் தன் பரப்பை ஈனித்தள்ளுவதோடு  குடிகள் ஈனுவதை கட்டுக்குள் கொண்டுவருகிறது. எண்ணிக்கைகளை குடிகள் எனச் சொல்லும் தேசவாய்களுக்கு இதயத்தசை கிடையாது, உனதான ராஜ்ஜியம்  தன் பத்தினித்தனத்தை உடையவிழ்த்துக் காண்பிக்கிறது. யுகத்தையும் காலத்தையும் தின்னக் காத்திருக்கும் வயிறு காற்றடைத்து நாளும் துயில்கிறதுவறுமை தின்ற  உறுப்பாக வயிறு மட்டுமே இருக்கிறது. காலம் குடல்களைப் போல் சுருண்டிருக்கிறது. தத்துவ மலத்தைக் கழிந்து வைக்கும் உனது அரசவைக் குருக்களுக்கு வெண்குதம் மட்டுமே உண்டு எனில் அது மிகையில்லை இளவரசி. சொல்லிமுடிக்கும் தறுவாயில் அரண்மனை வாயிலை இழுத்துத் திறந்தபடி  அலறலிசையென ஒரு குரல் மண்டபத்தை அடைத்து எதிரொலித்தது. தலைவிரி கோலம் கொண்டு கொடுநிறைசூலி எழுந்து நின்றாள்…மரணஓலம் இது மங்கலமோ…என வெறிவாயால் குரல் உடைத்துக் கதறினாள்…

கேளுங்கள் இதை என் குடிக்குழந்தைகள் மண்ருசியை உண்ணாது காலுதைத்துக் கதறுகின்றன. மண்ணில் வன்மம் குடியேறுவதாய் ஆதித் தாய் தன் சிகையை அறுத்தெறிந்து முண்டிதமாகியிருக்கிறாள். எவர் கண்ணிலும் படாது அவள் மலையேறி இன்றோடு மூன்று நாட்களாயிற்று… அய்யோ நிமித்தங்களே.. கொற்றம் அழிக்கும் சூசகங்கள் எங்கே…. அய்யோ...பற்றியெறிகிறதே செங்குருதி..செவ்வரளிப் பூப்போலே…அய்யோ

குரல் அலறலலிலேயே  ஓய்ந்தது.இளவரசி தன் சிகையுதிர்வதை உணர்ந்தாள். கேள் இளவரசி குற்றத்தின் லிபி, நேர்மையை மிகுந்த அந்தரங்கத்தோடு பேசும்போது நீதி என்ற வெறும் சொல் தனது புரையோடிய கண்களை இடதும் வலதும் ஆட்டுகிறது. கொற்றம் தரும் சொற்கள் நீதியெனில் நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான் அழிவின் நீதி, உடல் பிளக்கும் அம்மணம். ஆம்… நீதி, நேர்மை, வாய்மை, அதன் இறுதியில், மௌனம் கொண்ட வாய்களுக்கு, அதிகார இரும்பினால் பூட்டுப் போடும்போது, சாவிகளைக் நின் அரச கோமாளிகள் ஒளித்து வைக்கிறார்கள்." ஏதிலிகள் குரல் எழுப்பும் போது அறுந்து தொங்கும் தேசயெல்லைகளை அதன்  சித்திரங்களின் நிறங்களை மாற்ற  அறிஞர்கள் தங்களது இற்றுப் போன வார்த்தைகளால் பட்டை தீட்டுகிறார்கள். ஏதிலிகளின் இலக்கணம் இதுவல்ல. ஏதிலித்தனம் என்பது கொற்றமெனும் சொல்லுக்கு எதிர்ச்சொல். உரையாடல் அறுந்து விழும் ஓசையோடு கதவை அறைந்து திறந்த சிறுதூதன் பதட்டத்தில் மண்டியிடுதலைக்கூட மறந்து, குரலுடைய கொற்றம் கடல் கொண்டுருக்கிறதெனச் சொல்லஇளவரசி, ஒளிந்து கேட்கும் அரசன் தூதுவன் மூவரையும் ஒரு சேரப்பார்த்த சாத்தான் கேளடி இளவரசி… ஏதிலிகளுக்கு இதே தூதுவன், நாளை இந்நிலத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லா உருக்கொண்ட பேய் லிபிகளை வரைந்த ஒருவனால் ஆளப்படுகிறதெனச் சொல்வான்.. நெருப்பைக் கக்கும் கந்தகமிருகங்கள் வனத்தில் உலாவ முடியாது. அதற்கு நகரங்களே சாம்பல்வனம். அரசநெடுங்கதவு உடைந்து சிதறட்டும் எனச் சொல்லிப் போக நிமித்திகன் தூரதேசத்து குறுவாளால் இளவரசியின்  குரல்வளையை அரியத் தொடங்கினான். அறுத்த சேதியை உரக்கச் சொல்ல தூதுவன் கடலுக்கு வர, நாவாய்கள் இரு கைநீட்டி அழைத்துக்கொண்டிருந்தன. நிலத்திற்கும் கடலுக்கும் இருக்கும் பகையும் தாபமும் செந்நிறத்தால் புன்னகைத்துத் திரும்பினஅன்றிலிருந்து தூரதேசத்து நாரைகள் வெண்மை குத்திய பனியோடு கொற்றத்தைக் கடந்து கொண்டிருக்கின்றன. ஒற்றர்கள் வாழும் தேசத்தில் சந்தேகம் அதன் நிழலை மண்ணெங்கும் பரப்பி விடுகிறது. ஒற்றனின் அதிகாரம் உண்மையில் சந்தேத்தின்பாற்பட்டது. ஒற்றன் பிரதியெடுத்தலிலும், பிறரைப் போல வஞ்சனையோடு நிறத்தை மாற்றிக்கொள்ளவுமாக, பெருத்த பச்சோந்தியாக அலைகிறான். வண்ணங்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் ஒற்றனுக்கென கருவிகள் தேச வரைபடம் தாண்டி பயணிக்கின்றன. ஒற்றன் கொற்றம் தேடி அலையும் காட்சியே அக்கொற்றத்தின் இருள் சூழ் வரலாறாகியது. சேதி வரும் எனக் காத்திருக்கும் கண்களில் ஏதிலிக்குருதி அதன் பின் பாயவேயில்லையெனச் சொன்ன வழிப்போக்கனின் கண்களில் பனிநாரைகள் ச்சம் போட்டுச் செல்வதை அக்கொற்றம் தனது மண்நிறக் கண்களால் கண்டுகொண்டேயிருக்கிறது. காத்திருக்கலாம்..என்று திமிறும் சங்கப்பாடலொன்று அப்பொழுதுதான் உதிரத்தொடங்கியது தன் தந்த நிற லிபியை கடல்திசை நோக்கி நீட்டியவாறு.



கல்குதிரை
பனிக்கால இதழ்- 2113


No comments:

Post a Comment

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...