Thursday, May 31, 2012

பேரரசனின் ஒற்றை வயலின்......





அவன்
தனது தொலைதூர கிராமத்திலிருந்து
உலகைப் பார்த்தான்
உலகம்
எண்ணற்ற செவிகளைக்
கொண்டதாயிருந்தது

செவிகளே
கதைகளையும்
வரலாறுகளையும்
புரட்சிகளையும்
வாங்கிக்கொண்டிருந்தன....



காதுகளைப் புல்லரிக்கச் செய்யும்
ஆயுதம்
இதுவெனக் கொண்டான்
பணிவென்பதை
இசையென
கண்டுகொண்ட உலகத்தைக்
கண்டு புன்னகைத்தான்

உண்மையில்
இவ்வுலக உருண்டையில்
இல்லாத கடவுள் இதுவரை தான் காட்டத
உள்ளங்கையில்
பதுக்கி வைத்திருந்த
இசையை
மிக
எளிதான
புன்னகையுடன் பிடுங்கினான்

கடவுளர்களும்
மேதைகளென அழைக்கப்பட்டவர்களும்
அவன் காலடியை
நோக்கி ஊர்ந்து நகரும்போது

அவனது வயலின்
ஒரு முறை அதிர்ந்தடங்கும்


குரல்களை
நாணேற்றி
புல்லாங்குழலின் வழியாக
அவன் வீசியெறியும்போதெல்லாம்
எண்ணற்ற செவிகள் திறந்து கொள்ள
எண்ணற்ற கண்கள் மூடிக்கொள்ளும்

வசந்தத்தை
முரசில்
அறிவிப்பதே அவனது
தனிமையென்றானது

இப்பேரரசன்
இப்பொழுது
அமைதியில் இருக்கிறான்

கேட்கும்
செவிகளில்
மழையடித்து காலம் ஆயிற்று

ஆயினும்
என்ன
இன்னும்
சில செவிகள்
பழைய மழையில் நனைந்த
ஈரத்தோடு சிலிர்த்துக்கொண்டேதான்
இருக்கிறது

Saturday, May 26, 2012

வலசைப் பறவை - ரவிக்குமார்





க்வான் தாஓ  - ஷேங் 
( Guan Daosheng)12621319)

மணந்த காதல்

நீயும் நானும்
அளவற்ற காதலை வைத்திருந்தோம்
அது தீயைப் போல எரிந்துகொண்டிருந்தது
கொஞ்சம் களிமண்ணை எடுத்து
உன் உருவத்தையும்
என் உருவத்தையும்
அதில் சுட்டோம்
இச்சைகூடிய கணம் ஒன்றில்
அந்த உருவங்களை உடைத்து நொறுக்கினோம்
நீரைச் சேர்த்துப் பிசைந்தோம்
மீண்டும் வனைந்தோம்
உன் உருவம் ஒன்றை
என் உருவம் ஒன்றை.
இப்போது
நான் இருக்கிறேன் உன் களிமண்ணில்
நீ இருக்கிறாய் என் களிமண்ணில்
பகிர்ந்துகொள்வோம்
வாழ்வில் ஒரே போர்வையை
சாவில் ஒரே சவப்பெட்டியை.

........................................................................................





மாயா ஏஞ்சலூ   ( Maya Angelou) 
1928



நினைவு கூர்தல்


என்னைப் பற்றி நினைக்கும்போது
செத்துப்போகும் அளவுக்கு நான் சிரிக்கிறேன்
எனது வாழ்க்கையே ஒரு  “ ஜோக் ” தான்
ஒரு நடனத்தை  நடந்து காண்பிப்பது போல
ஒரு பாடலை பேசிக் காண்பிப்பது போல
நான் மூர்ச்சையாகும்வரை சிரிக்கிறேன்
என்னைப் பற்றி எண்ணிப்பார்க்கும்போது

இந்த உலகத்தில் வாழ்ந்த அறுபது ஆண்டுகள்
நான் வேலை பார்த்த வீட்டில்
குழந்தை கூட  என்னை  ‘ வாடி போடி’ என்றுதான்
பேசும்
‘சொல்லுங்கள் அம்மா’ என்றுதான் நான்
கேட்கவேண்டும்
பணிவில் பெருமை
உணர்ச்சிகள் தெரியக்கூடாது
நான் வயிறு வலிக்கும்வரை சிரிக்கிறேன்
என்னைப் பற்றி எண்ணிப்பார்க்கும் போது

என் மக்கள் சொல்வதைக் கேட்டு நான்
செத்துப்போகும் அளவுக்கு சிரித்திருக்கிறேன்
அவர்களின் கதைகள் பொய்களைப் போல் இருக்கும்
அவர்கள் பழங்களை விளைவித்தார்களாம் ஆனால்
தோலைத்தான் சாப்பிடுவார்களாம்
நான் கண்ணீர் வரும்வரை சிரிப்பேன்
என் மக்களைப்பற்றி நினைக்கும் போது.

.



வலசைப் பறவை
மொழிபெயர்ப்புக் கவிதைகள்
தமிழில்- ரவிக்குமார்.
மணற்கேணி  பதிப்பகம்.





Friday, May 25, 2012

சொல்ல முடியாத குரல்களின் நிர்வாணத்தை சொல்லக் கூசும்போது....






இயலாமையின் வழி கசியும்
நிர்பந்தங்களை
அடையாளம் காட்ட வரிகள் உதவுவதேயில்லை


சொற்களை வாடகைக்கெடுக்கையில்
அர்த்தங்கள் நுரை தள்ள மூர்ச்சிப்பதை
தவிர்க்க முடிதில்லை

நீண்ட நாட்களாயிற்று
ஒரு வசை எழுதி

புரி
கிறது

துக்கம்
ஊற்றிக்கொடுத்த
என் விரல்களையும்
கூட்டிக்கொடுத்த சொற்களையும்
நினைத்துக் கொள்கிறேன்

எத்தனையோ மார்புகள்
எத்தனையோ காம்புகள்
ஒன்றும்
என்னுடையதில்லை
என்னுடைதில்லை

எனக்கு தேசமும் இல்லை
சொற்களும் இல்லை
ஊற்றிக்கொடுத்த குவளைகள்
காலிப் பனிக்கட்டியால் நிரம்புகின்றன


ஆபாசமென்னவெனில்
திருடுவதற்கு
சொற்களும்
விளங்கமுடியா சிடுக்குடைய
அறங்களும்  இருக்கிறது

புட்டத்தை நேர்த்தியாக காண்பிக்கும்
குரலை மொழிபெயர்த்தவனுக்கு
சொந்தக் குரலில் சொல்ல
எதுவுமே இல்லை

நண்பனே இது நான்தானென்ன
சொல்ல
நிழலும் இல்லை

இது
நான்
தான்

வயதுக்குவராத சிறுமியை
சடங்கின்
மூலம் புணர்வதும்
குதத்தில்
தூரதேசத்து
பனிக்கத்தியைச் சொறுகுவதும்
எப்படியென்பதுதான்
எனது நீண்டநாள் பாடத் திட்டம்
முதலில் ஒரு குதத்தைக் கண்டுபிடித்திருந்தேன்


கொளுத்த
எனதுடலில்
பதியும் விரல்கள் எனக்கானதில்லையென்பதை
நானறிவேன்

சிறுமிகளின் கனவுகளில்
பூதங்கள் வருவதைத் தவிர்க்க இயலாது


பூதங்கள் ஓநாயென
சிறுமிகளுடலை நக்கிப் புணர்வதை

என்னால் மன்னிக்க இயலாது
எனக்கு மகள்கள் இருக்கிறார்கள்


கள்ளத்தனம் நிரம்பிய காகிதங்களில்
எப்பொழுதும்
பெண்களை ஒளித்து வைத்தவனில்லை
சொல்லக் கூசுகிறதெனக்கு

வரிகளும் இல்லை
வார்த்தைகளும்
சொற்களும் இல்லை

தட்டச்சு இயந்திரத்தின் வழியே
வழியும் 
கள்ள இந்திரியத்தைக் கசியவிடுகிறேன்
ஊறித் திளைக்கும்
வெற்றுப் புளுக்களை
சிசுக்களெனப் பெயரிட்டு...


வக்கிரத்தணிக்கையில்*
வந்துதிக்கும் சொற்கள் குறுகென
பறக்கும்


எனதருமை
ரோஷன்பெஃல்ட்.... 



* நோய்க்கூறுடைய சுயமோகம், வக்கிரம் ஆகிய இரண்டிலும்
சுயத்தின் 
சர்வவல்லமையுடைய 
அழிப்பு அம்சங்கள் புனிதப்படுகின்றன.

- ரோஷன்பெஃல்ட்.





உலக மகா கவிதை.




சுந்தரராமசாமியுடன் ரசவடை சாப்பிட்டேன்
நகுலன் வெற்றிலை போட்டார்- உடன் நான் சீவல் போட்டேன்
பிரமிள் ஜிப்பா போட்டார்-நான்
ஜிப்பாவைக் கழட்டிப் போட்டேன்
இனி போட்டவர்கள்
போடுகிறவர்கள்
இரண்டையும் கழித்து நான் கவிதை
போட்டேன்

( தயிர்வடை பா.....ர்செல்....) 


அது
காலங்கடந்து வீசத் தொடங்கியது
நாற்றம் என்றும்
நறுமணம் என்றும்
எங்
கோமணம் என்றே சொல்லலாம்

கவிதையை யார் போட்டால் என்ன

வான்கா காதை அறுத்தால் உன்னதம்
பக்கத்துவீட்டு 
கவிதாவை
அரைக்கண்ணில் காதலித்து
முழு முகத்தோடு பார்க்காது
கையைக் கிழித்த 
சுப்பிரமணி
சென்டிமெண்டல் இடியட்

சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்
செய்யுறதைச் செஞ்சிடுங்க
நல்லதுனா கேட்டுக்கங்க
கெட்டதுனா விட்டுடுங்க *


 கடைசி நான்கு வரிகள் பட்டுக்கோட்டையினுடையது..

வசுமித்ர - வுக்கு 
வசுமித்ர
(வேறு வழியில்லாமல்) 

Thursday, May 24, 2012

குளியலறை விதானத்தில் தொங்கும் தூக்குக் கயிறும்… சிறுமி நேயாவின் நெடுநல்வாடையும்....





                       1
அப்பா
நான் உங்களைக் கொலை செய்யப்போகிறேன்
சரி மகளே
முத்தம் தா

இல்லையப்பா... குருதி கசிய
சரி மகளே
முத்தம் தா

அப்பா...
உங்கள் உடலைச் சிதைத்து
சரி மகளே
முத்தம் தா

அப்பா...
அப்பா...
நிஜமாகவே...

சரி மகளே
முத்தம் தா

அப்பா
இந்த விளையாட்டு பிடிக்கவில்லை
வேறு விளையாட்டு சொல்லித் தாருங்கள்

சரி மகளே
முத்தம் தா.
   


                2



சபிப்பது பற்றிய
ஞானத்தைக் கற்றுக்கொள்கிறேனே அப்பா
அடம் பிடிக்கிறாள் நேயா

விழிகள் குமைய
அனுப்பிவைத்தேன் அவளை
என் முகத்தில் அறையுங்கள்
அவளை...
அவளை...
சாத்தானுக்கு அறிமுகம் செய்தேன்

நகங்களை நீட்டாதே
விழிகளின் நிறம் மாற்று
அவள் சிறுமி

அறிவுரைகளை
வேண்டுகோளாய்க் கொட்டி
வீடு திரும்பினேன் கண்ணீர்த் துணையுடன்

விரல்கள் உலரும் முன்
வீட்டுக்கு வந்தாள் சிறுமி நேயா குதித்தபடி
சாத்தான் நிழல்போல் பின்னால் நின்றான்

வழியனுப்ப வந்ததாகவும்
அவள் சிறுமியென்றும் சொல்லி அகன்றான்

பிறிதொரு நாள்
அலுவல் வேலையாய்ச் சாலையைக் குறுக்காகக் கடக்கையில்

நடை வீதியில் நின்று
சாத்தான் அனைவருக்காகவும்
ஆசீர்வதித்துக்கொண்டிருந்தான்.
  


                   3


துரோகம், மயக்கும் விழிகளுடன் வருகைபுரிகிறது
தனிமையில் பற்றியெரியும் என் அறையை நோட்டமிடுகிறது

நளினமான உடலசையக் கதவைத் தட்டுகிறது
திறந்த கதவின் வழியே வசந்தம் பீறிட்டு வீச
மயங்கிச் சரியும் துரோகத்தை அணைத்துக்கொள்கிறாள்
சிறுமி

அறைக்குள் நுழையும்
நான்
விசித்திர சப்தம் கேட்கிறேன்

ஒரு
குடம்
தண்ணீர் ஊற்றி
ஒரு
வனம் பூத்ததே...

என் விரல்கள் உதற
செவிக்குள் தாவரம் பூக்க

துரோகத்தைப்
புல்லாங்குழலாக்கி
என்
உதட்டில் பொருத்துகிறாள்
நேயா.


                  4


மீன்களை மயக்கி
நித்திரை கொள்ளச் செய்யும்
குளமொன்றிற்கு
முத்தம் தருகிறாள்
மகள் நேயா...

குளம்
கடலாக
திமிங்கிலங்கள்
விழித்தெழுகின்றன.


                  5


அறை அதிர
சுண்டுவிரலால் கதவு தட்டும் சப்தம்
முழு மௌனம் கொண்டு
தாழ் நீக்குகிறேன்

சூரியனின் ஒரு துண்டை வாயில் கடித்தபடி
ஒளித் திவலை வழிய அவன்
நண்பன் மற்றும் வீரியமிக்க எதிரி

வழியும் நீரைப் புறங்கையால் துடைத்தபடி
கால்களை நிதானித்து மாற்றி
எங்கே உன் சிறுமி
பார்க்க வேண்டும் அவளை

கனவுகள் குழம்ப
தரையில் அமர்கிறேன்

என் விழிகள் பார்த்தவனின் கைத்தொலைபேசி ஒலிக்க
சாவகாசமாய் கையில் எடுத்து
பதில் வாங்கக் காதில் பொருத்துகிறான்

எங்கே போனாய்
நான் உன் அறையில்...

சிறுமியின் குரல்
அறையை நிறைக்க
மயங்கிச் சாய்கிறான்

அவனுக்கு
சிறுமியென்றே அவளை விவரித்திருந்தேன்

சொல்லியிருக்க வேண்டும்
அவளுக்கு விலாப்புறம் இரண்டு சிறகுகள்
மற்றும்....


Wednesday, May 23, 2012

கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும்.



சில வரிகள்


பிரியத்துகுரிய தத்துவவாதிகளே
பிரியத்துக்குரிய
முற்போக்கு சமூகவியலாளர்களே
பிரியத்துகுரிய
சமூக உளவியலாளர்களே
ரெம்பவுந்தான் சிரமப்பட்டு
‘அந்நியமாதலை’ ச் சுற்றி
புணர்ந்து கொண்டு திரியாதீர்கள்
இங்கே எக்கச்சக்கமாக
எம்ம்பிப் புணர்ந்து கொண்டிருப்பது
 ‘ அந்நிய நாடு’

தலைவலிகள் பற்றி


கம்யூனிஸ்டாக இருப்பதென்பது ஒரு அழகான
அனுபவம்
அது பல்வேறு தலைவலிகளை விளைவித்தாலும் கூட

பிரச்சினை என்னவென்றால்

கம்யூனிசத் தலைவலியென்பது வரலாற்று ரீதியானது
தலைவலி மாத்திரைகளால் தீருவதல்ல இது
சொர்க்கம்
பூமியில்
நிஜமாவதால் மட்டுமே தீர்க்கப்படக் கூடியது


முதலாளித்துவத்தின் கீழ் நம் தலைவலிகள்
நம்மைக் கிழித்துப் போடும்
புரட்சிக்கான போராட்டத்தில்
நம் தலை
தாமதித்த ஒரு செயல்படும் வெடிகுண்டு

சோஷலிசக் கால கட்டத்தில்
தலைவலிகள் பற்றி
நாம் முன்கூட்டியே திட்டமிட்டாலுங்கூட
அதைக் குறைத்துவிடமுடியாது
நேர் மாறாகவே பெருகும்

கம்யூனிசம்
பிறவற்றோடு ஒப்பிடும்போது
ஆஸ்பிரின் மாத்திரை மாதிரி
சூரியனின் அளவான ஆஸ்பிரின் மாத்திரை.




கவிதை

வார்த்தைகளால் மட்டும் ஆனதல்ல கவிதை என
நீ அறிந்து கொள்ள உதவியதற்கு
கவிதையே
என்னை மன்னித்துவிடு.

கடைசி உயிலும்
கடைசி வாக்குமூலமும்


லத்தின் அமெரிக்கக் கவிதைகள்
மொழிபெயர்ப்பு
யமுனா ராஜேந்திரன்
உயிர்மை பதிப்பகம்
விலை 100.