Sunday, December 20, 2015

இலக்கியமும், அடையாள அரசியலும், தரகர்களும்: ஒரு இலக்கிய வரைபடம் - வாசக வழிகாட்டி.“உலகமயமாக்கலும், விஞ்ஞானமும், அன்றாடம் நாம் உண்ணும் உணவையே மாற்றியிருக்கும் போது இலக்கியத்தை மாற்றியிருக்காதா. மாற்றியிருக்கிறது. 
ஆம். நாம் விரும்பாத வகையில். 
உலகமயமாக்கல் எவருக்குச் சேவகம் செய்ய தோன்றியதோ 
அவர்களுக்கு.”

கடந்த 15 வருட கால இலக்கியமும், இலக்கியவாதிகளும் ஒரு புதிய வகையினத்தைக் தமிழுக்குத் தந்திருக்கிறார்கள். அதுதான் இலக்கியத் தரகர்கள். இவர்கள் தன்னெழுச்சியாக உருவாகினார்களா, தமிழில் அவர்களுக்குத் தேவை இருக்கிறதா, அந்தத் தேவையை ஏற்படுத்தியவர்கள் யார்? உண்மையில் இலக்கியத்தரகர்களின் நோக்கம் என்ன? இவர்கள் தங்களை முன்னிறுத்துக்கொள்ள வேண்டிய அவசியங்கள் என்ன?  இதெல்லாம் நமது கேள்விகள்.

இக்கேள்விகளுக்கான விடையை தற்காலத்திலோ, தற்கால இலக்கியப் போக்கிலோ, நாம் கண்டடைய முடியாது. தமிழில் நவீன இலக்கியம் என்ற சொல்லை முன்னிருத்தியது யார். அவர்கள் எதனை அடிப்படையாகக் கொண்டு இதை முன்னிருத்தினார்கள் என்ற அடைப்படைக் காரணிகளைக் கொண்டு அதை நாம் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். இதற்கு காரணமானவர்கள், முந்தைய எழுத்தாளர்களும் விமர்சகர்களும்தான். இது உங்களுக்கு இரட்டை முரணாய்த் தோன்றாலாம். காரணம் இல்லாமல் காரியம் நடப்பதற்கில்லை. முதலில் நாம் கேட்க வேண்டிய கேள்வி இதுதான். இந்த இலக்கியத் தரகர்களுக்கான தேவை என்ன…? எது அவர்களை இலக்கியத் தரகர்களாக்கியது.?  அவர்கள் எப்படி, யாருக்குத் தரகர் வேலை பார்க்கிறார்கள் என்பதோடு இதை இயக்கமாக தமிழில் கொண்டு செல்வோரையும் நாம் சேர்ந்தே காணலாம்.

முதலில், தமிழில் நவீன எழுத்தியக்கத்தை விமர்சனப் பூர்வமாக எழுதிய விமர்சகர்களிடம் இருந்து தொடங்கலாம். கலைகலைக்காகவே, கலை சமூகத்திற்காகவே என்ற பிரிவு, கிளைவிட்ட போக்கிற்கு காரணம் என்ன? மற்ற நாடுகளில் கலை கலைக்காகவே என்பது ஒரு இலக்கியப் போக்காக புரிந்து கொள்ளப்பட்டதின் காரணமும், இங்கு வேறுவிதமாக செயலாற்ற வேண்டிய காரணமும் என்ன? மற்ற நாடுகளில் சாதி இல்லை. இங்கு சாதி உண்டு. அதனால்தான் கலை கலைக்காகவே என்று சொன்னவர்கள் இங்கு அதிகமும் பார்ப்பனர்களாக இருந்தார்கள். அவர்கள்தான் முதலில் நாவல் கதை கட்டுரை எழுதவும், அதை தமிழ் உலகத்துக்கு கற்பித்ததாகவும், பெருமை பாடிக்கொண்டிருந்தார்கள்.  

காரணம், கலை என்பது சரஸ்வதி. அவள் குடியிருப்பது பார்ப்பனர்களின் நாக்கிலும் விரல்களிலும்தான். எனவே அட்சர கடாட்சத்தை இன்னும் ஏகப்பட்ட படைப்பிலக்கிய ஷேமத்தை அவளுக்கு உரிமையாக்கியிருக்கிறாள். இதன் காரணத்தினாலேயே இலக்கியத்தை அவர்கள் போத மனம், பித்து நிலை. அது தானாக பிறப்பிலேயே இருக்க வேண்டும். உள்ளேயே உறவாட வேண்டும். உள்ளுணர்வு, ஆழ்மனம் என்ற ரீதியில் இங்கு கலை கலைக்காகவே என்ற பிரகடனம் முன் வைக்கப் பட்டது. அப்படி பிரகடனப்படுத்தியவர்களுக்கு இலக்கியத்தில் அடிமைச் சேவகமும் நடந்திருக்கிறது.

கலை கலைக்காகவே என்று சொல்வதன் மூலம் ஒரு எழுத்தாளன் இழப்பதற்கு எதுவும் இல்லை என்றாகிறது. கலைஞன் காலத்தின் கண்ணாடி என்றால், உடைந்த கண்ணாடியில் கலைஞன் எப்படி பிரதிபலிப்பான் என்ற கோட்பாட்டுப் புரிதலும் இங்கு விவாதங்களை உருவாக்கியதுண்டு. ஆனால் இந்தக் கலை கலைக்காகவே என்கிற வாதத்தை மட்டும் வசதியாக எடுத்துக்கொண்டு வியாக்கியனம் செய்தவர்கள், இசங்களை முன் வைத்தவர்கள் இப்பொழுது எந்த வகையாக இலக்கியத்தை எழுதிக்கொண்டிருக்கிறார்கள், எந்த இலக்கியத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். இதுவும் கேள்விகளாக நம் முன் எஞ்சி நிற்பவையே.

விஞ்ஞானமும், உலகமயமாக்கலும்  தமிழில் ஹைபிரீட் எழுத்தாளர்களை அதிகம் படைத்திருக்கிறது. அவ்வகையான எழுத்தாளர்கள் தாங்கள் அறிந்தோ அறியாமலோ யாருக்குச் சேவை செய்துகொண்டிருக்கின்றனர் என்பதை நாம் பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் தமிழ் இலக்கியத்தைப் பொருத்தவரை, கூகுளும், முகநூலும் ஆற்றிய பங்கை யாராலும் மறுக்கமுடியாது. சாம்பார் வைப்பது எப்படி என்பதிலிருந்து ஆர்.டி.எக்ஸ் செய்வது எப்படி என்ற அளவிற்கு அது பாடத்திட்டங்களை வீட்டுக்கே கொண்டு வந்து சேர்க்கிறது. முகநூல் வந்த பிறகுதான் தமிழில் காணமல் போன எழுத்தாளர்கள் என்ற ஒரு இனம் இருப்பதே தெரிய வந்தது. அவர்கள் எதனடிப்படையில் காணாமல் போனார்கள் என்பதற்கும் விளக்கம் தந்தது. முதல் காரணம் அவர்கள் முகநூல் இல்லாதபோது எழுதிக் குவித்தவர்கள். இரண்டாவது சரியான பதிப்பகங்களை நாடியவர்கள். முறையான விளம்பரதாரர்கள் இல்லாதவர்கள். இதைக் கடந்து சம்பந்தப்பட்ட எழுத்தாளரோ அல்லது இலக்கியவாதியோ உயிருடன் இருக்கிறாரா இல்லையா என முதலில் தெரிவிப்பதும் முக நூல்தான்.  அத்தோடு நவீனத் தமிழ் இலக்கியத்தில் சர்வதேச எழுத்தாளர்கள் பேட்டி கொடுப்பதும், புன்னகைக்கும் போட்டோக்களுடன் காட்சியளிப்பதும், அவர்தம் கதைகளை எந்த முகாந்திரமும், அடிப்படையும் இன்றி சிறுபத்திரிக்கைகள் முன்வைக்ககவும், மொழிபெயர்க்கவுமாக இக்கருவிகள் உதவியிருக்கிறது.

ஆனால் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் நவீன இலக்கியத்தில் என்ன நடந்தது. கூகுளுக்குப் பதில் நூல் நிலையங்கள். அதிலும் கொஞ்சம் வசதியோ, வாய்ப்போ இருப்பவர்களுக்குத்  தனியார் நூலகங்கள் துணைபுரிந்தன. பிரச்சினை இங்கிருந்தான் ஆரம்பித்தது. படித்து விவாதிக்க வேண்டிய கருத்துக்களை, தத்துவங்களை, சமூக மாற்றங்களை வெறும் மேற்கோள்களாக வெட்டி ஒட்ட ஆரம்பித்து வைத்தது பேராசிரியர்கள்தான்.  இன்றைய கூகுள் தேடலுக்கு குறிச்சொற்கள் (கீ வேர்ட்ஸ்) என்றால் பேராசிரியர்களுக்கு மேற்கோள்கள். மேற்கோள்களை மட்டும் துண்டித்து எடுக்கத் தொடங்கினர்.  

முதல் தவறாக, அவர்கள் அதிகமும் முன் வைத்தது இசங்கள் சம்பந்தப்பட்ட அவர்களது அரைகுறை ஆய்வுகளையே. அவற்றின் வரவால்தான் தமிழ் சமூக இயக்கத்தை மாற்றுப்பார்வையில் புரிந்துகொள்ள முடியும் என நினைத்தார்கள். நல்லதுதான். இந்தியச் சமூகத்தை பீடித்திருக்கும் கொடிய ஆவியான சாதியை எதைக்கொண்டாவது துரத்த வேண்டும் என்ற அவர்களின் எண்ணம் போற்றத்தக்கது.  ஆனால் அவர்களின் எண்ணம் தவறான திசையில் வழிமாறியது.

சமூக ஆய்வுகளை எந்தத் தளத்தில் வைத்துப் புரிந்து கொள்வது என்ற ஆய்வுக் கருவியை தேடியவர்கள், ஆய்வுக்கருவியின் மீது மோகம் கொண்டு, அதையே அடிப்படையாய் அதிகமும் ரொமாண்டிச எண்ணத்தோடு முன்வைத்தார்கள்.

இரண்டாவது தாங்கள் அறிவு ஜீவிகள் என்ற எண்ணம், மூன்றாவது வாசிப்பு சுவாராசியம். இவ்வகையான சிக்கலில் தலையும் இல்லாமல் வாழும் இல்லாமல் இசங்களை முன்வைத்தார்கள். அரசியலிலும், பொருளாதரத்திலும், சாதியமைப்புகளின் வளர்ச்சிகளும் நிறைந்த கொந்தளிப்பான காலகட்டத்தில் இவர்கள் செய்த இந்தச் செயலானது புதிய சிந்தனையை தேடிச் சென்ற ஒரு தலைமுறையை அப்படியே தேங்கச் செய்தது. கிளிப்பிள்ளைகள் போல் அவர்கள் சொன்ன இசங்களை மேற்கோள்களை இன்னும் அரைகுறையாக உள்வாங்கி வெளிவிட்டது.  புதிய புதிய தத்துவங்களை தமிழக அரசியல் பொருளாதார சிக்கலைத் தீர்க்க, அது குறித்து ஆராயப் போனவர்கள் செய்த மாற்றம் என்னவென்றால்,  இசங்கள் குறித்த ஆய்வுகளில் மேற்கோள்களை வெட்டி ஒட்டி விளக்கியதும்,  அப்படி வெட்டி ஒட்டியதை சம்பந்தப்பட்ட தத்துவ ஆசிரியர்கள் அப்படித்தான் சொல்லியிருக்கிறார்கள் என்று ஒரு தலைமுறையையே நம்ப வைத்ததும்தான்.  இதில் அதிகமும் பயன்பட்டது ரொமாண்டிசசம்தான். இந்த ரொமாண்டிசமும், புரிதலில் அறிவு சார் நெருக்கடியும் தொடர்ந்து அவர்களை அவ்விதமே இயங்க வைத்தது. இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் மார்க்சியத் தத்துவ நூல்களை நம்பிக்கையாகப் படித்து விவாதித்து (அப்புத்தங்களின் விலையும், அதை அடைவதற்கான வழியும் அப்பொழுது யாருக்கும் திறந்தே கிடந்தது.) வந்தவர்கள், ரஷ்ய உடைவுக்குப் பின்  ‘மார்க்சியமே தவறு’ அதைப் படித்து என்னாகப் போகிறது என்று முடிவுக்கு வந்து, பல வேலைகளைச் செய்தார்கள். பண்பாட்டு ரீதியான விமர்சனங்களை மொழிச் சுவராஸ்யத்திற்காகவும், புதிதாக இருக்கிறது என்ற எண்ணத்திற்காகவும் தேடிய இவர்களின் கைகளில்   சிக்கியதுதான், பின் நவீனத்துவமும் இன்ன பிற இசங்களும்.

பின்நவீனத்துவம், அமைப்பியல், இருத்தலியல் என இசங்கள் மூலமாக தேடிய அவர்களின் தேடல்கள் அனைத்தும் தமிழில் மேற்கோள்களாய்த்தான் முன் வைக்கப்பட்டது. சாதியைப் புரிந்து கொள்ள பின்நவீனத்துவம் உதவுகிறது, மனிதத் தனிமையைப் புரிந்துகொள்ள அந்நியமாதல் உதவுகிறது, அமைப்பின் வன்முறையைப் புரிந்துகொள்ள அமைப்பியல் வாதம் உதவுகிறது என பேராசிரியர்கள் வெகு கவனமாக மேற்கோள்களை சுரண்டத் தொடங்கினர். விளைவு, சம்பந்தப்பட்ட இசங்கள் குறித்து என்னவென்றே தெரியாத ஒரு புதிய தலைமுறை உருவாகியது.

சமூக விமர்சனங்கள் என்ற பேரில் தமிழ் சமூகத்தை, சாதியை இந்திந்த இசங்கள்தான் சரியாகப் பேசுகிறது. அந்த இசத்தைப் படித்தால் புரிந்து கொள்ளலாம் என மேற்கோள்களை வாதங்களாக, சமத்காரமாக வைத்து விமர்சித்து வந்தார்கள். இதில், பேராசிரியர்களுக்குள் இந்த இசத்தை முதலில் படித்தவன் (மேற்கோள் எடுத்ததன் மூலம்) நான்தான், இல்லையில்லை இந்த இசத்தை தமிழுக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தியவன் நான் மட்டுமே என்று சச்சரவுகளும் நடந்ததுண்டு. இதில் அதிகமும் அடிபட்டது பின்நவீனத்துவம் மட்டும்தான்  சாதிப் படிநிலைகளை, வன்முறையை, அதிகாரத்தின் நுண் அதிகாரத்தை விளங்கிக்கொள்ள முடியும். அனைத்து லோக சர்வ பிரச்சினைக்கும் பின்நவீனத்தை அணுகுங்கள், அதற்கு நாங்கள் மட்டுமே பொறுப்பு என அடுத்த தலைமுறை ஒன்று மேலெழுந்தது. அதனைப் பின்பற்றி வந்த பல எழுத்தாளர்கள் பின்நவீனத்துவத்தை பேராசிரியர்களின் மேற்கோள்கள் மூலமாகவே படித்தவர்கள். அது அவர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு நிர்வாண மோட்சத்தை வழங்கியதைப் போல உணர்ந்து, இட்லியும் பின் நவீனத்துவமும், பரோட்டாவின் வடிவவியல், தமிழ் வெள்ளாள பின்நவீனத்துவம், பின்னவீனத்துவப் புரிதலில் கள்ளர், செட்டியார் என்று தொடங்கியது.

பின்நவீனத்துவம் ஆளும் வர்க்கத்திற்கு எதிராய், அதிகாரத்திற்கு எதிராய், அமைப்புக்கு எதிராய் போராட்டக் குணம் கொண்டது எனப் பேசினார்கள். லும்பன் கலாச்சாரம், உதிரிகளின் தத்துவம் என வார்த்தைகளை வைத்து, அவர்கள் எதைச் செய்தார்களோ அதற்கு எதிராகவே அவர்களது பின்நவீனத்துவமானது மிகச் சிறப்பாக தன் வேலையைக் காட்டியது. குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர் தங்கள் வரலாற்றை, அதன் புரிதலை, ஆய்வை, அதன் போராட்டக் குணத்தை விளக்கி தலித் மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்ட ஒரு நூல் வந்ததும், ஆதிக்கச் சாதிகளும் அவ்வகையான நூல்களை எழுதி சந்தைக்குக் கொண்டு வந்தன. பின்நவீன வாசிப்பில் இரண்டும் ஒன்றே என விவாதிக்க இடமும் தந்தது.

இனி எங்கும் எதிலும் இருமைகள் கிடையாது, இனி எல்லாமே பண்மைகள் எனச் சொல்லி பின்நவீன விளக்கம் கொடுத்ததால், அத்தனை ஆபாசங்களும் வெளிவந்தன. உண்மையில் பின் நவீனத்துவம் மொழியை சமூகத்தை எந்த தளத்தில் வைத்து ஆராய்கிறது, அதன் அடிப்படை என்ன, அது எந்த வர்க்கம் சார்ந்த பார்வையைக் கொண்டுள்ளது என்ற கேள்விகளும், புரிதலும்  இல்லாமல் இங்கு முன்வைக்கப் பட்டது. அழுத்தமாகச் சொல்லாவேண்டுமானால் ‘வர்க்கப் பார்வையே பெருங்கதையாடல்’ எனச் சொன்னது.  சம்பந்தமே இல்லாமல் உடல் அரசியல்,  பெண்ணுடல் தளங்கள், வெட்டுப்பட்ட பூர்வீகத்தின் ஒட்டுவால், ஒடுக்கப்பட்ட உடல்கள், மூடி மறைக்கப்பட்ட பாலியல், எல்லாம் வெளியே தெரிய வேண்டும். ஆதிக்கச் சாதி எதைச் செய்கிறதோ அதையே நீயும் செய், எல்லாம் வெளிப்படை வெளிப்படை என்று சொல்லி ஒட்டுமொத்தமாக பின்நவீனத்தை வெளியாக்கம் செய்தார்கள். நிலைமை தலைகீழானது.

தமிழில் இசங்களின் வருகைக்கு முன் எந்தப் படைப்பும் எந்தப் படைப்பாளியும் இசத்தை முன் வைத்து இங்கு உரையாட வரவில்லை. கா.நா.சு, வெங்கட் சுவாமிநாதன், அதற்கடுத்து சுந்தரராமசாமி,  வகையிலான விமர்சனங்களில் அதிகமும் ரசனை சார்ந்த விமர்சனமும் குழு மனப்பான்மையுமே விமர்சனமாக இருந்தது. இன்னும் குறிப்பாகச் சொன்னால் கலை கலைக்காகவே எனச் சொன்ன பார்ப்பன சைவ வெள்ளாள விமர்சனமாக சாதி சார்ந்து இயங்கியது. படைப்பாளியும் விமர்சகனும் மாறி மாறி இயங்கியது இந்த புரிதலின் வெளியில்தான்.

இதற்கு எதிராக அமைப்பு ரீதியாய், தத்துவப் பின்புலத்தை அடியொற்றி நடந்த விமர்சகர்களும் விமர்சன இயக்கங்களும் உண்டு. ஆனால் அவர்கள் இடதுசாரிகள், முற்போக்காளர்கள் என்ற காரணத்தினாலேயே ஒதுக்கப்பட்டும், ஒட்டுமொத்த மார்க்சியமே இலக்கியத்திற்கு எதிரி என்றும் வசைபாடப்பட்டார்கள். வர்க்கப் பார்வையை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு சமூகத்தை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது, வர்க்கம் என்பதெல்லாம் பெருங்கதையாடல் என்றவர்கள் அதற்கு பதீலீடாக எந்த மாற்றக் காரணியையும் முன் வைக்காமல் இசங்களில் தலை நுழைத்து நுண் அரசியல், மீச்சிறு அலகுகள் நிறுவன எதிர்ப்பு, அமைப்பு எதிர்ப்பு என மேற்கோள்களை வைத்தார்கள். இன்னும் அலை ஓய்ந்தபாடில்லை. கலை வேறு மக்கள் வேறு, கலைக்கு மக்களைப் பேச வேண்டிய தேவை இல்லை. அது விருப்பினால் எதுவும் பேசும் என்ற ரீதியிலான விவாதங்களும் நடந்தது உண்டு. நடந்து கொண்டிருக்கிறது.

சுருங்கச் சொன்னால் தமிழில் சிந்தனைப் பள்ளிகளும் எழுத்தாளர்களுக்கு வாய்க்கவில்லை. ஒரு வாதத்திற்காக தமிழ் சிந்தனைப்பள்ளி, இலக்கியப்பள்ளி என எடுத்துக்கொண்டால் இங்கு சுந்தர ராமசாமியின் சிந்தனைப் பள்ளியில் வந்தவர்கள் ஜெயமோகன் தொடங்கி மனுஷ்யபுத்திரன் லஷ்மிமணிவண்ணன், சங்கரராமசுப்பிரமணியன் வகையறாக்கள், அ. மார்க்ஸ் சிந்தனைப்பள்ளியை முன் வைத்து இயங்கியவர்கள் என்று பார்த்தால் சோபா சக்தி, ஒரு கால கட்டம் வரை வளர்மதி இன்ன பிறர். இதில் பலர் சேர விலக காரணங்கள், விவாதங்கள் இருந்திருக்கிறது. இதற்குப் பின் தமிழ்ச் சிந்தனைப்பள்ளி என்ற போலித்தோற்றத்தையும் இழந்து, மடமாய் மாறிய மடப்பள்ளி என்று பார்த்தால் அது கோணங்கி மடப் பள்ளி. நாகார்ஜுனனும் எஸ் சண்முகமும் இம்மடத்தின் தலைவர்களாக வீற்றிருக்கிறார்கள்.   

அதே சமயம் இதற்கு மாற்றாக நா. வானமாமலை சிந்தனைப்பள்ளியை எடுத்துக்கொண்டால், தோதாத்ரி தொடங்கி ஆ. சிவ சுப்பிரமணியன், முத்துமோகன், பக்தவச்சல பாரதி, க. பஞ்சாங்கம் என்று பட்டியல் நீளும்.

இதற்கடுத்து தனித்தனி விமர்சகர்களாக குறிப்பிட்டால் எஸ் என். நாகராசன் இடதுசாரிக் கருத்தியலை மேலை மார்க்சியம் கீழை மார்க்சியம் எனப் பிரித்து கடைசியில் வைணவதுக்குச் சென்று சேர்ந்து மார்க்சியத்தில் அன்பில்லை என இந்துத்துவ சிமிழில் அடங்கினார்.  கோவை ஞானி தலித்தியத்திற்கு தத்துவப் பின்புலம் இல்லை என்று கூறி இந்து மெய்யியலில் எல்லாம் உள்ளது எனக்க்கூறி தமிழ்த் தேசியத்தை விதந்தோதினார். சோதிப்பிரகாசம், ஜெயமோகனால் “சிரிக்கத் தெரிந்த மார்க்சியர்” எனப் பட்டம் சூட்டப்பட்டு தான் எழுதிய ஆய்வுகளுக்கு எதிராக ஜெயமோகனது இந்து தத்துவ தரிசன நூலுக்கு முன்னுரை கொடுத்தார். இவ்வகையில் பலரும் பல முரண்களை முன்வைத்தார்கள்.

இவர்கள் தவிர, அமைப்பு விதியை ஏற்றுக்கொண்ட, எழுத்தாளர்களுக்கென பொறுப்பை கற்றுக்கொடுத்து அவர்களை வழி நடத்துகிற இந்தியக் கம்யூனிஸ்க் கட்சிகளுக்கான இலக்கிய அமைப்புகளான தமிழ்நாடு முற்போக்க்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், மற்றும் கலை இலக்கிய பெருமன்றம் போன்ற அமைப்புகளும் இருக்கின்றன.

மேற்சுட்டிய அமைப்பு சாராது இசங்கள் சார்ந்து எழுதிய அனைவருக்கும் ஒரு ஒற்றுமை என்னவெனில் மார்க்சியத்தைத் தமிழ்ச் சூழலில் வைத்து இது கலாச்சார ரீதியாக “ஒத்துவராது” என்று பண்பாட்டு விமர்சன அடிப்படையை வைத்து மட்டுமே முடிவுக்கு வந்தவர்கள். அரசியல் பொருளாதரம் குறித்து பெரும்பகுதியாக, ஒப்பீட்டளவில் எதையும் முன்வைத்ததில்லை. பின்நவீனத்துவம், பன்மைகள், உடைத்தல்கள், இவைகள்தான் மாற்றுச் சிந்தனை எனச் சொல்லியவர்கள், மனிதனுக்கு மதம் முக்கியம், அன்பு முக்கியம், என தங்கள் நோக்கில் இந்து தத்துவ இயலை முன்வைத்தும் தமிழ்த் தேசியத்தை முன் வைத்தும் நகர்ந்து கொண்டார்கள்.

நிலைமை இப்படியிருக்க பின்நவீனம், அமைப்பியல் என இசங்களை முன் வைத்து தத்துவத்தையும் கதை, கவிதை நாவல்களையும் முதலில் விமர்சிக்கத் தொடங்கியது பேராசிரியர்கள்தான். முதலில் இசங்களைத் ‘தத்துவம்’ என்று அழைக்க முடியுமா எனத் தெரியவில்லை. தமிழில் இன்று வரை இது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இயல் என்று சொல்லலாமா என்பது வாதத்திற்குரியது. ஒரு வாசகத் தெளிவுக்காகவும் நடப்பில் புழங்குவதாக உள்ள ‘இசம்’ என்பதையே இங்கு முன் வைத்து தொடர்கிறேன்…

பேராசிரியர்களே இசங்கள் ரீதியான விமர்சனங்களை அடிப்படையாக வைத்துப் பேசியதன் வாயிலாக தமிழில் ஆங்காங்கு இலக்கியப் பதட்டம் அரங்கேறியது உண்டு.  இந்த இசங்களின் பெயர்களைக் கண்டு பதறிய எழுத்தாளர்கள் ஆங்காங்கு இது தேவையா எனப் புலம்பியதோடு எப்படி எதிர்கொள்வது எனத் தவித்து எதிர்வினையாற்றியதும் உண்டு. உதாரணத்திற்கு சுந்தரராமசாமி. “எனக்கெதற்கு அந்த இசம், இந்த இசம், தக்காளி ரசம் போதும்!” என்று சொல்லுமளவுக்கு இசக் காய்ச்சல் அவரை வாட்டியெடுத்தது. இப்படியாக எழுத்துலகில் ஆளுமையான சுந்தர ராமசாமியையே இவ்விசங்கள் புலம்ப வைத்த போது, இன்று புதிதாக எழுத வருபவர்களின் கதியை கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஆனால் அச்சூழலில் இப்படி ஏதேனும் இசங்களின் பெயர்களை சம்பந்தம் சம்பந்தமில்லாமல் துப்பி வைத்தால்தான் பரபரப்புக் கிடைக்குமென (அப்பொழுது எழுத்தாளர்களுக்கு பேராசிரியர்களின் மீதிருந்த புரிதலானது,  பேராசிரியர்கள் தங்கள் படைப்புகளைப் படிப்பார்கள், தங்கள் மாணவர்களிடம் சொல்லுவார்கள், கல்விசார் வட்டங்களில் தாங்கள் படைப்பாளி என்கிற அந்தஸ்தை அடையலாம் தனது எழுத்து நிறையப் பேரைச் சென்றடையும் என்ற மூட நம்பிக்கை இருந்தது)  எழுத்தாளர்கள் சிலரும் இசங்களை உளறத் தொடங்கினர்.  பேராசியர்கள் பாடத்திட்டத்தின் கீழ் உளறினார்கள் என்றால் அதைப்படித்த படைப்பாளிகளும், சீடர்களும் சம்பந்தமே இல்லாமல் உளறினார்கள். தமிழ் நல்லுலகம் சிந்திக்கத் தெரியாமல் அறிவு நெருக்கடிக்கும் அடையாள நெருக்கடிக்கும் தள்ளப்பட்டது. படைப்பை எழுதுவதா, இல்லை இசத்திற்கு எழுதுவதா என்ற குழப்பத்தின் நடுவே, எதை எதையோ எழுதி வைக்கும் நிலைக்கும் ஆளானார்கள். இதிலிருந்து வந்த தற்போதைய இலக்கிய தலைமுறையானது கூகுள் மற்றும் முகநூல் வழியாக எல்லா இசங்களையும் முன்வைக்கிறது.  இதற்கு, தத்துவம் விளக்கம், கோட்பாட்டுப் புரிதல் எனப் பெயரிட்டு முன்னவர்கள் காட்டிய பூச்சாண்டித்தனமான பின்நவீனத்து விளக்கங்களே காரணம்.

தமிழில் நவீனத்துவவாதிகளாய் இருந்த பேராசிரிய ஆளுமைகளின், வளர்ச்சியையும் சரிவையும் பார்த்தோமானால் இது நன்கு புரியும். பின்நவீனத்துவம் மற்றும் இன்னபிற இசங்கள் என்று குரலை உயர்த்தியவர்களான அ.மார்க்ஸ், ரவிக்குமார், தமிழவன், ரமேஷ் பிரேம். க.பூரணச்சந்திரன். நாகார்ஜுனன் எஸ்.சண்முகம் (இதில் பேராசிரியர்களாக இருப்பவர்கள் அ.மார்க்ஸ், தமிழவன், க. பூரணச்சந்திரன், பிரேம்) இவர்கள் உச்சரித்த பின்நவீனத்துவம் தமிழில் எப்படி வினையாற்றியது என்பதற்கு ஒரே எடுத்துக்காட்டு:  இவர்கள், சம்பந்தப்பட்ட இச நூல்களை, அதை அறிமுகப்படுத்திய சார்த்தர், தெரிதா, ஃபூக்கோ, ரோலன் பார்த், தெல்யூஸ் கத்தாரி எனத் தொடங்கி எவரையும் தத்துவ நோக்கில் தமிழுக்கு முறையான அறிமுகம் செய்ததில்லை என்பதோடு, மிக முக்கியமாக சம்பந்தப்பட்ட இவர்களின் எந்த நூலையும் தமிழில் மொழிபெயர்த்ததில்லை.

சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளாக இசங்களைச் சொல்லி தமிழ் சமூகத்தை, விளிம்பு நிலை, அதிகாரம், தர்க்கம் எனப் பேசிய இவர்கள் இதைச் செய்யாயதற்குக் காரணம் என்ன? மிகவும் தன்மையுடன் சொல்லுவதென்றால். இவர்கள், இந்தியச் சூழலில் பின் நவீனத்தையோ பிற இசங்களையோ எப்படிப் பொறுத்திக்கொள்வது, எந்த அமைப்பின் கீழ் பொருத்திக்கொள்வது எவ்வகையான போராட்டங்களுக்கு இவ்வகை இசங்கள் பயன்படும் எனத் தெரியாத இவர்களது அறியாமைதான் காரணம். இன்னும் தன்மையாகச் சொல்லவேண்டுமனால் மூலநூல்களை முழுதாகப் படித்து உள்வாங்கிய பேராசிரியர்கள் எத்தனை பேர் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

பின்நவீனத்துவ பிரச்சாரகர்களாய் இருந்த அ.மார்க்ஸ் பெண்டகன் தாக்குதலுக்குப் பிறகு மனித உரிமையளாராய்,‘காந்தியும் சமூக சனாதனிகளும்’ எழுதியது நடந்தது. நானும் சற்றே ஏறக்குறைய பின்நவீனவாதிதான் என்ற நாகார்ஜுனன், நக்சல்பாரி மாநாட்டிற்கு வாழ்த்துப்பா பாடினார்.  தமிழில் எந்த இசத்துக்கும் அத்தாரிடி நான் மட்டுமே என்ற தமிழவன்,  “அண்ணா நாமம் வாழ்க!” என்றார்.  பிரேம், காந்தியைக் கடந்த காந்தியம் எழுதினார். சம்பந்தப்பட்ட பின்நவீனத்துவவாதிகளின் பின்நவீனத்துவம் இப்பொழுது எந்த தளத்தில் எங்கு உரையாடுகிறது? இவர்களின் பின்நவீனத்துவம் எங்கு சென்றது? காலாற வந்த இடந்திற்கே சென்று விட்டதா? இக்கேள்விகளுக்கு விடைகள் எங்கு யாரிடம் இருக்கிறது? இதற்கிடையே பின்நவீனத்துவம் பற்றி மற்றவர்கள் சொன்னதெல்லாம் உளறல், நான் மட்டுமே அறிந்தேன் என்ற ஜெயமோகன் தான் தனி வழியில் பின்நவீனத்தைப் படித்ததாகவும் அது இந்து நூல்களில்தான் செழுமையாக உள்ளது எனவும் முடித்தார்.

இத்தகைய மூத்த ஆளுமைகளிடம் இருந்துதான் இப்பொழுது இயங்கி வரும் இளைய தலைமுறை உதித்திருக்கிறது. அது மறுபடியும் இசக் காய்ச்சலையும், காலனி அடிமை மனநிலையையும், இந்துத்துவ நோக்கையும் சுமந்து தோன்றியிருப்பதோடு, அவர்களைப் பின்பற்றி… இசங்களைப் பேசியவர்களின் பெயர் விளம்பர பரபரப்பை தானும் அடைய இளைய தலைமுறை, கூகுளின் வாயிலாக வெறும் மேற்கோள்களை எடுத்தாண்டும், பல சமயங்களில் உளறியும் தனது வேலையை செம்மையாக செய்துகொண்டிருக்கிறது.

இசங்கள் குறித்து பேராசிரியராய் அல்லாது, ஒரு எழுத்தாளனாய் அவர்களுக்கு ஒரு அறிமுக குறிப்பேட்டைத் தன்னளவில் எம்.ஜி.சுரேஷ் முன் வைத்தார். ஆனால் அவை எந்தளவுக்கு மேற்கண்ட ஆசிரியர்களை விளங்க உதவும் எனத் தெரியவில்லை. மறுபடியும் அழுத்தம் கொடுத்துச் சொல்லவேண்டுமென்றால், இதுவரை தமிழில் ரோலன்பார்த்தோ, தெரிதாவோ,  சார்த்தரோ நேரடியாக அவர்களது இசங்களை முன்வைத்த நூல் சார்ந்து மொழியாக்கம் செய்யப்பட்டதில்லை.  சார்த்தரின் படைப்புகளாக தமிழில் எனக்குத் தெரிய வெளிவந்திருப்பது. ‘சொற்கள்’, தோழமைப் பதிப்பக வெளியீடு. அதற்கு முன் க்ரியா பதிப்பகத்தின் மூலமாக வந்த ‘மீளமுடியுமா’. இவ்வளவே.

மூலத்தை மொழியாக்கம் செய்யாமல், மூலத்தைப் படித்து தாங்கள் புரிந்துகொண்டதாக பக்கம் பக்கமாய் பேராசிரியர்களும் விமர்சகர்களும் எழுதியது ஏன்? என்ன காரணத்தினால்? அவை தமிழில் மொழியாக்கம் செய்ய முடியாத அளவுக்கு சிக்கல்களானவையா? அல்லது உள் அரசியலா? அல்லது அது தேவையில்லாத ஒன்றா? கேள்விகள் நீண்டு கொண்டே போகும்.  ஆனால் இன்று எழுத வந்த நவீன படைப்பாளிகள் இவர்களின் மேற்கோள்களை இடாத இடமே இல்லை. சுவாராசியம் கருதியோ, அவர்களுக்குப் புரிந்த ஒரு விசயத்தை எளிதாக அர்த்தப்படுத்திக்கொள்ளவோ அவரற்றை மேற்கோள்களாய் இடுகிறார்கள். இன்னும் சிலர் இந்த வகையான இசங்களைத் தவிர்த்து ஒரு அறிவு சார் விளம்பரத்திற்காகவும் மேற்கோள்களைப் பயன்படுத்துகிறார்கள். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல.  நிற்க.

இதனூடாக இத்தனை இசங்களும் பிரான்சிலேயே முளைவிடக் காரணம் என்ன? பிரான்ஸ் மட்டுமே சிந்தனையாளர்களின் தொட்டிலாக இருந்ததா? அதற்கான அரசியல், மற்றும் சூழமைவுக் காரணங்கள் என்ன? சுதந்திரத்தின் தொட்டில் எனச் சொல்லிவிட்டால் போதுமா? இந்தியாவின் பார்ப்பனிய சிந்தனையை வேறு திசைக்கே மாற்றிய இந்தியத் தத்துவ ஆசிரியர்களான புத்தரோ. தர்மகீர்த்தியோ, குமரில பட்டரோ, பதஞ்சலியோ, ஏன் இன்னும் பேசப்படவில்லை? மிக முக்கியமாக கோசம்பியையோ, தேவி பிரசாத் சடோபாத்யாய்வையோ, ராகுல சாங்கிருத்தியாயனையோ கூட தங்கள் வாசகர்களுக்கு இவர்கள் சொன்னதில்லையே ஏன்?  எல்லாவற்றிற்கும் மேலாக இத்தனை இசங்களை தந்த பிரான்ஸ் பெருந்தகைமைகள் இந்தியச் சிந்தனைப் புலத்தைக் கடன் வாங்கவில்லையா? இவர்களின் நிறை என்ன, குறை என்ன என விளக்கமுடியாதா?

இதில் அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு “தலித் அரசியல்” என்ற புத்தகமாக 2009ல் எதிர் வெளியீடாக வெளிவந்தது. அந்நூலின் முன்னுரையில் அ.மார்க்ஸ் “……………..மாற்றுக்கல்வி குறித்த பாவ்லோ ஃப்ரெய்ரேயின் அணுகல் முறை, மாற்று மருத்துவம், மைய நீரோட்ட மருத்துவத்தின் அரசியல், குடும்ப நிறுவனத்தின் வன்முறை, சாதியத்தின் தோற்றம், வளர்ச்சி செயல்பாடு ஆகியன குறித்த கட்டுரைகளைத் தொடர்ந்து நிறப்பிரிகை வெளியிட்டது. அப்படியான ஒரு மாற்று அரசியலாகவே நாங்கள் தலித் அரசியலையும் நினைத்தோம், எதிர்பார்த்தோம். அந்த அடிப்படையில் தலித் அரசியலை ரொம்பவும் romanticise பண்ணினோம். அது மிகவும் தவறு என இப்போது விளங்குகிறது. இதை நான் ஏதோ தலித் இயங்கங்களைக் குறை சொல்லும் நோக்கிலிருந்து சொல்வதாக நினைக்கவேண்டாம். உண்மையில் எதார்த்தத்தை மறந்து நாங்கள் ரொம்பவும் புத்தகப் புழுக்களாகச் சிந்தித்தோம். தலித் அரசியல் எந்த வகையிலும் மாற்று அரசியலாக மாறாமல் மைய நீரோட்ட அரசியலின் ஓரங்கமாக மாறியதை இப்போது என்னால் விளங்கிக்கொள்ளமுடிகிறது.

ஒரு மாற்று அரசியலாக உருப்பெறாத போதும் அதுனூடாக சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். குறிப்பாக தலித் மக்களின் மத்தியில் ஒரு தன்னம்பிக்கை இன்று உருப்பெற்றுள்ளது. குடந்தையில் நான் ஒவ்வொரு முறை பேருந்தை விட்டு இறங்கும் போதும் அங்கே புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் குடந்தை அரசன் என்கிற விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் உள்ளூர்த் தலைவரின் பேனரைத் தேடிப் பார்ப்பேன். இதுகாறும் அத்தகைய பெரும்பேனர்களில் குடந்தை நகரத் திமுக தலைவர்கள் மட்டுமே சிரித்துக்கொண்டு இருப்பதைப் பார்த்திருக்கிறேன். இவை அவற்றிற்கு சமமாக இல்லாத போதும் குறிப்பிடத்தக்க அளவிற்கு நமது தோழர்களின் படங்களை அங்கே பார்க்கும் போது மனதில் ஒரு மகிழ்ச்சிக் கீற்று தென்படும்.” என எழுதியிருக்கிறார்.

ஆக இவர்கள் நிறப்பிரிகையில் முன்வைத்த அத்தனை மாற்று அரசியலும் பேனர் வைப்பதில் கொண்டு போய் விட்டிருக்கிறது. `இதோடு இல்லாமல் 2010ல் புலம் வெளியீடாக வந்த ”பின்நவீன நிலை இலக்கியம் அரசியல் தேசியம்” என்ற நூலின் முன்னுரையில் விட்ட இடத்திலேயே மார்க்ஸ் மறுபடியும் பின்நவீனப் புரிதலைத் தொடங்கி எழுதியிருக்கிறார். அதில் அவர் “சுசிதாரு அவர்கள் ஒரு உரையாடலின் போது என்னிடம் மிகுந்த வியப்போடு“எங்கள் மாநிலத்தில் (ஆந்திரம்) வலது சாய்வுடையவர்கள்தான் போஸ்ட் மார்டனிசத்தைப் பயன்படுத்துகின்றனர். நீங்கள் இதனை இடது சார்பாகாவும், தலித்திய பெண்ணிய நோக்கிலும் பயன்படுத்தும் பாங்கு என்னை மிகவும் வசீகரிக்கிறது என்று சொன்னது குறிப்பிடத்தக்கது” என மார்க்ஸ் மறுபடியும் பின்நவீனத்துவ பன்மைத்துவவாதியாய் எழுதுகிறார்.  ஆண்டுதோறும் மாற்றங்களைப் பின்நவீனத்துவ பன்மைத்துவம் எவ்வளவு அழகாக பறை சாற்றுகிறது பாருங்கள்.

வெறுமனே மேற்கோள்களினால் மட்டுமே நூற்களை எழுதிய பேராசிரியர்களில் பூரணச்சந்திரன், ரவிக்குமார் இருவர் மட்டும் இன்று விதிவிலக்கு. பூரணச்சந்திரன் இசங்களின் வாயிலாக ஒரு பிரதியை எப்படி அணுக வேண்டும் என வாசகனுக்குக் கற்றுத் தரும் பிரதிகளை எழுதி அது இப்பொழுது வெளி வந்து கொண்டிருக்கிறது. (இதிலும் குறிப்பாக பூரணச்சந்திரனின் தேர்வு, இசங்கள் குறித்த புதிர்களையும் அணுகுமுறையையும் ஒரு ஆசிரியராக முன்வைக்க, ஆசிரியத்தனம், எழுத்தாள வன்முறை என்று சொன்னவர்கள் எல்லாம் கற்க வரும் இளைஞனை சம உரையாடல் என்ற பேரில் குழப்பி விட்டதுதான் அதிகம்.) பின்நவீனத்துவவாதியாய் இருந்த ரவிக்குமார் இப்பொழுது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் பொறுப்பாளாராக இருக்கிறார். அவரது தேர்வும் மொழிபெயர்ப்பும் தமிழ் வாசகருக்குப் பொறுப்புணர்த்தலையும் அதன் அவசியத்தையும் இன்றும் உணர்த்திக்கொண்டிருக்கிறது.

பேராசிரியர்கள் தவிர்த்து சம்பந்தப்பட்ட இசங்களை வைத்து இலக்கியத்தை தொங்கிப் பிடித்துக்கொண்டிருந்த விமர்சகர்கள் படைப்பாளர்கள் என்று பார்த்தால் நாகார்ஜுனன், சண்முகம்.  கோணங்கி. இம் முக்கூட்டானது தமிழ் சிற்றிதழ் என்ற வகையில் இசங்களின் குழப்பத்தை தங்கள் போக்கிற்கு பேசி எழுதி தங்களை முன்வைக்கும் விளம்பரத்தைச் செய்தார்கள். உதாரணத்திற்கு, கத்தரிக்காய் செடியை முட்டைச் செடி என துணிந்து மொழிபெயர்த்தவர் நாகார்ஜுனன். இன்றும்கூட கல்குதிரை, முழுக்க முழுக்க காலனிய அடிமைத்தனத்தை சுமந்து நகராமல் இருக்கிறது. கல்குதிரையின் மார்க்குவெஸ் சிறப்பிதழை மார்க்குவெஸ்க்கு கட்டிய சமாதி என ஒரு முறை ரவிக்குமார் எழுதியிருந்தார். இன்னும் அதற்கு எந்தப் பதிலும் வரவில்லை. சண்முகம் முன்மொழியும் அயலக எழுத்தார்கள்தான் தமிழில் உலக எழுத்தாளர்களாக இருக்கிறார்கள். அத்தோடு கல்குதிரையின் வாயிலாக இவரது கால்தாங்கிகள்தான்  தமிழ் நவீன இலக்கியவாதிகளென அறிவிக்கவும் செய்கிறார்கள்.


இதுதவிர இன்னொரு பேராசிரியரான ராஜ்கௌதமன் பின்நவீனத்துவத்தின் வழி தலித் பண்பாடு என்று தன் பங்குக்கு அதைப் போராட்டாக் குணமாக முன் வைத்திருந்தார். இதற்கிடையே அறம் அதிகாரம் எனும் நூலை 1997ல் விடியல் பதிப்பகம் வாயிலாக வெளியிட்டார். நூலின் நோக்கமாக, “தலித்திய அறிவுச் சொல்லாடலை கட்டுகின்ற முயற்சிகளில் ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதிக்க அறிவுச் சொல்லாடலை எதிர்கொண்டு அதன் அடக்குமுறையை வெளிப்படுத்தி அதைனைக் கடந்து போகும் முயற்சி இது” எனக் குறிப்பிட்டார். அதேநூல் பத்தாண்டுகளுக்குப் பின் 2008ல் “தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும்” என்ற பெயரில் வெளிவந்தது. இதையும் விடியல் பதிப்பகமே வெளிக்கொணர்ந்தது.

இப்புதிய விரிவாக்கப்பட்ட பதிப்பில் மாற்றம் செய்வதற்கான காரணங்களில் ஒன்றாக ராஜ்கௌதமன் கூறுவதாவது “கடந்த பத்தாண்டுகளில் எனக்குள்ளும் வெளியிலும் நிகழ்ந்த மாற்றங்களைக் கணக்கில் எடுத்து, சமகாலத்துக்கு ஏற்றவாறு முற்றிலும் மீண்டும் எழுதுவது எனத் தீர்மானித்து இந்நூல் “தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்” என்ற பெயரில் வந்துள்ளதாக எழுதினார். ஆனால் அம்முன்னுரையிலேயே அவருக்குள் நிகழ்ந்த பத்தாண்டுகால மாற்றத்தை அவர் வார்த்தைகளிலேயே சொல்லியிருக்கிறார். அவை, “முந்தையப் பதிப்பில் (அறம் அதிகாரம்) ‘பார்ப்பனர்’ என்ற தொன்மை வாய்ந்த தமிழ்ச் சொல்லைப் பயனப்டுத்தியதை வசைச்சொல்லாக ஒரு பகுதியினர், (பார்ப்பனர்களன்றி வேறு யாராக இருக்க முடியும்) தவறாகப் புரிந்து கொண்டதால் ‘பிராமணர்’  (அதாவது அவர்கள் பிரம்மனின் புத்திரர்கள்தான் வேறென்னெ)  என்ற வடசொல்லே இந்நூலில் கையாளப்படுகிறது. படிக்க வைப்பதுதான் நோக்கம்” என்று கூறியிருக்கிறார். எத்தனை பெரிய கேலிக்கூத்தான சொற்கள் இவைகள்? இதற்கிடையே “பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும்” என்ற நூலில் முதல் கட்டுரையாக “சங்க காலத்தில் பாலியல் குறித்த அறக்கவலை” எனும் முதற் கட்டுரையை மிஷெல் ஃபுக்கோ வழியில் எழுதியிருக்கிறார். தமிழ்ச் சூழலில் இத்தகைய ஆளுமைகள் போய்ச் சேரும் இடம் மிகுந்த கவலையளிப்பதாகவே உள்ளது. (அடைப்புக்குறிக்குள் உள்ளவை கட்டுரையாளருடையவை)   

எஸ்.வி. ராஜதுரை அவர்கள் ஒருகாலத்தில் அந்நியமாதல், இருத்தலியல் என தன் பங்கிற்கு தத்துவங்களை இடதுசாரிப் பின்புலத்தில் வைக்கிறேன், விவாதத்திற்கு மாற்றத்திற்கு புரிதலுக்கு உதவும் என்று தன் வேலைகளைச் செய்தார். இறுதியாக அவரது சமீபத்திய புத்தகமான “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை – தமிழாக்கமும் அறிமுகவுரையும் விளக்கக் குறிப்புகளும்” என்ற நூலை அவர் சமர்ப்பணமும் நன்றிகளும் உரைத்தது, ஒட்டுமொத்த கம்யூனிஸ இயக்கத்தையே இன்றளவுக்கும் கேலி செய்து வரும் நபர்களிடம்தான். ஏன் இந்தப் போக்கு நிகழ்ந்தது? எல்லாவற்றையும் விட அறிவுஜீவிகளான இவர்கள் சம்பந்தப்பட்ட இசங்களின் மேஜைகளிலெல்லாம் வைத்து அறுவைச் சிகிச்சை செய்யப் பழகியது மார்க்சியத்தைத்தான். தமிழ் இலக்கியத்தில் எவரும், இந்த நூல், இந்த இசம் சார்ந்தது என காய்தல் உவத்தலின்றி ஆயவில்லை. ஆனால் அதை அவர்களே, நூலின் முன்னுரையிலோ பின்னுரையிலோ மிக பணிவாக நான் அறிந்தது கொஞ்சம் என்ற அளவில்தான் இத்தனை இசக் குழப்பங்களையும் வைத்தார்கள். ஆனால் நூலில் அதற்கான அத்தாரிட்டியே நாங்கள்தான் என குரல் உயரும்.
மேலும் இந்த இசச் சண்டையில் மிகக் கொடூரமாக நடந்த இன்னொன்று, நாங்கள்தான் இந்த இசங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தி அதனடிப்படையில் நாவல்களை எழுதினோம் என்று கூச்சலும் கூப்பாடும் தர்க்கமும் காகிதங்களைக் கிழித்தது.

உதாரணங்களாக:

தமிழவன் பற்றி அவரது குழுக்கள் பற்றி அ. மார்க்ஸ் :  

சம்பாதிப்பது, குடும்பம் நடத்துவது, கட்டுரைகள் எழுதுவது தவிர வேறு என்ன முக்கியமான பணியைத் தமிழவன், நாகார்ஜுனர் மற்றும் சிவசு, சண்முகம் போன்ற அவர்களது வழித்தோன்றல்கள் செய்து வந்துள்ளனர் எனக் கவனித்துப் பார்த்தால் ஒரு உண்மை விளங்கும். அது அமைப்பியல், பின் அமைப்பியல், பின்நவீனத்துவம், மேஜிக் ரியலிசம், பாலிம்செஸ்ட் எழுத்து முறைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தி தமிழைப் பரிபாலித்தவர்கள் தாங்கள்தான் என்பதை நிறுவுவதற்கான முயற்சிதான் அவர்களின் முக்கியமான பணி. வழித்தோன்றல்களை விட்டு தாம் நடத்துகிற பத்திரிக்கைகளில் கட்டுரைகளையும், தாம் எழுதுகிற நூல்களுக்கு முன்னுரையையும் எழுதச்சொல்லுதல், அவர்களுக்கென இவர்களே தாயாரித்து வைத்துள்ள கிரீடங்களை எடுத்துச் சூட்ட, மற்றவர்களை கன்னா பின்னாவென்று திட்டுதல் முதலியவை இதற்கென இவர்கள் மேற்கொண்டுள்ள செயற்பாடுகள். சமீபத்தில் இதற்கெனவே – அதாவது சுயபுராணம் பாடுவதற்கும், கிரீடம் சூட்டாதவர்களை வசைபாடுவதற்கும் ஒரு சிற்றிதழையும் (வித்யாசம்) தொடங்கியுள்ளனர்.


………….தமிழவன் குழிவினரின்’ வித்யாசமான நடவடிக்கைகளைப் பார்க்கும்போது எனக்கு கோயமுத்தூர் பார்த்தசாரதியின் நினைவுதான் வருகிறது. ‘இந்து’ பத்திரிக்கையில் பார்த்தசாரதியின் பெயரை நீங்கள் அடிக்கடி பார்த்திருக்கலாம். “முதன் முதலில்” செய்தவர் என்கிற பெயரை எடுப்பதற்காகவும், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்காகவும் அவர்  ஆயிரம் பாம்புகள் அல்லது தேள்களுடன் கண்ணாடி அறைக்குள் ஒரு மாதம் வாழ்வார்.பின்புறமாகவே நடந்து செல்வார். ஒருமாதம் தொடர்ந்து கையைத் தட்டிக்கொண்டே இருப்பார். பிளேடுகளை விழுங்குவார். இலக்கிய உலகில் பார்த்தசாரதி நுழைய முடியாதபடி செய்துவிட்டார்கள் தமிழவன் குழுவினர்.

ரவிக்குமார் :
மார்க்சியம் என்றால் என்னவென்றே அறியாத வெங்கட்சாமினாதனால் மார்க்சிஸ்ட் ஆக்கப்பட்ட தமிழவனிடம் மார்க்சியம் கொஞ்சகாலம் பாடாய்ப் பட்டது. தற்போது பின்நவீனத்துவம் மாட்டிக்கொண்டிருக்கிறது. ‘இதுதாண்டா போஸ்ட் மார்டனிசம்’ என்று அவரும் அவரது சகாக்களும் புகுந்து விளையாடுகிறார்கள். ஒரு பெயரையும்விடாமல் மென்று துப்புகிறார்கள். மேஜிக்கல் ரியலிஸமா, பாலிம்செஸ்ட் ஹிஸ்டரியா, மெட்டாஃபிக்‌ஷனா எல்லாவற்றுக்கும் தமிழவன்தான் முதல் ஆள் என்று கைதட்டுவதற்காகவே ஒரு கூட்டம் புத்தகம் போட்டு வளர்க்கப் பார்க்கிறது.


ரமேஷ் பிரேம்:
சாருநிவேதிதாவின் பின்நவீனத்துவ ஆய்வின்படி எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன், திண்டுக்கள் i. லியோனி போன்றவர்களே பின்நவீனத்துவ பெருங்கலைஞர்களாவர். மற்றோரெல்லாம் தொலைபேசிச் சம்போகம்  கொள்ள மட்டுமே சபிக்கப்பட்ட சிறு பத்திரிக்கையாளர்கள்.

சாருநிவேதிதா: உங்கள் எழுத்தை பின்நவினத்துவ காவியம் என்கிறீர்கள். காவியம் என்பது பின்நவீனத்துவத்திற்கே எதிரானது. காவியம் என்பதை பின்நவீனத்துவம் grand narrative என்கிறது. ஆக நீங்கள் சொல்லுவது சுயமுரண். இதை விளக்க வேண்டும்.

பிரேம் ரமேஷ்: காவியம் என்பதுதான் பின்நவீனத்துவற்கு எதிரானது. ஆனால் பின்நவீனத்துவ காவியம்? நவீனத்திற்கு எதிரானது.


நோயல் ஜோஜப் இருதயராஜ்: நீட்சே, பார்த், ஃபூகோவை கடவுளின் ஆசிரியனின், மெய்ப்பொருளியலின், யதார்த்தவாதத்தின், பிரக்- உள்ளொளியின், இலக்கியத்தின் மரணங்களை மாறி மாறி அறிவித்த வெட்டியான்களாக மட்டும் நினைத்துக்கொண்டு சௌண்டியமும் சாஸ்த்ரியமும் இணைநிகழ்வுகளாகச் செய்ய முயலும் நாகார்ஜுன லிங்கோத்பவர் தன் லிங்கத்தைப் பற்றிக்கொள்ளும் விமர்சனத்திற்கு மட்டும் மார்க்கண்டேயே வரம் வழங்குகிறார். தமிழ் விமர்சனம் பற்றிய நாகார்ஜுனிய வம்சாவளியியல் இதுதான்.

இப்படி போகிறது கதை.  இடையில் இவர்களை நம்பி மண்டை வீங்கிய ஒரு தலைமுறை காணாமல் போனது. இது குறித்து தனி நூலே எழுதலாம்.

மேற்படிப் பேராசிரியர்கள் தங்களது புத்தார்வக் கோளாறுகளினால், மாற்றுச் சிந்தனை என்ற பெயரில் அரசியல் சமூக வாயில்களை இசங்களால் செய்த கட்டைக்களைக் கொண்டு அடைத்ததோடு, அமைப்பே வன்முறை என்பதில் கொண்டு போய் முடித்தார்கள். இலக்கியத்தில் கல்குதிரை சம்பந்தமில்லாத பெயர்களில் எல்லாம் புது புது எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைத்தது.  அவையனைத்தும் எந்த நோக்கமும் இல்லாமல் வெறும் மொழிக்காரணிக்காகவும், பெயரில் உள்ள கவர்ச்சி, எழுத்தாளனின் மீதுள்ள பிம்பம் இவற்றிற்காகவே மொழிபெயர்க்கும் ஒரு புதிய தலைமுறையே உருவாக்கியது. இதில் கோணங்கி, தான் எழுதுவதைப் போலத்தான் மிலரோட் பாவிச், மார்க்குவெஸ் எலியட் போன்றோர்கள் எழுதுகிறார்கள் என்ற ஒரு தோற்றதையே தமிழில் உருவாக்கினார். என்ன செய்வது? பாவிச் தமிழுக்கு வரவில்லை. இப்பொழுதுதான் காலச்சுவடு வழியாக மார்க்குவெஸ் வந்திருக்கிறார். எலியட்டின் பாழ்நிலம் தமிழில் வந்தது குறித்து எந்தப் பேச்சும் எழவில்லை. அது கிணற்றில் போட்ட கல்.  ஆக  கோணங்கி தன் பங்கிற்கு இலக்கிய இரும்புக்குண்டை கல்குதிரையின் காலில் கட்டித் தொங்க விட்டார்.

ஜெயமோகனோ இந்துத்துவப் பின்னணியில் கடவுளும் மதமும் சடங்கும் இருப்பது போலத்தான். கம்யூனிஸ் கட்சியில், சங்கங்களிலும் சடங்குகள் செயல்படுகிறது. அமைப்பென்றாலே பிந்தொடர்ந்து வழி நடக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கும், “கோயில்களில் பக்தர்கள் - கட்சியில் தோழர்கள்” என்றவர் மிகச் சரியாக குரு சீடப் பரம்பரையை முன் வைத்து கால் மேல் கால் போட்டு, தனது விஷ்ணுபுர பஜனை மடத்தை அமைத்தார். சரியான நேரத்தில், சரியான பஜனைப் பாட்டு, தன் புராணம், விழாக்கள்தோறும் பங்கேற்பாளர்களுக்குப் பட்டுச் சட்டையும் பட்டு வேஷ்டியும் ஒட்டுக் கோவணமும் அணிவதெல்லாம் ஆத்ம அனுபவம், தூய அறிதல் என்றார். படைப்பின் வழியாக தன்னைப் படைப்பாளர் எனச் சொல்லி, கதைகளில் பெறாத கவனத்தை, இந்துத்துவ அரசியலை முன் வைத்து, கருத்துச் சொல்லியாய் மாறி, கண்டபடி பேசத் தொடங்கினார். படித்தவர்கள், ஏன் உளறுகிறீர்? எங்கு ஆதாரம்? எனக் கேட்டால், “நான் எழுத்தாளன் தரப்பு” எனச் சொல்வதும், கேட்டவர்கள் அமைதியாய் இருந்தால் மக்கள் தரப்பு என புதுத்தரப்பொன்றை சொல்லி உளறுவார். மிக முக்கியமாக உடற்குறையை முன்வைத்து எழுதும் பார்ப்பனிய விமர்சனத்தைத் தமிழில் விரிவாகத் தொடங்கியது இவர்தான். அவர் அழகாயில்லை, இவர் அழகாக இருக்கிறார் அதனால் இவர் படைப்பு ஒளிவீசுகிறது. இவன் ஊனன், அதனால் இப்படித்தான் சிந்திப்பார் எனச் சகட்டுமேனிக்குச் சொல்லியவர் கடைசியில் அருந்ததிராயை குருவி மண்டை எனச் சொல்லும் அளவிற்கு அவரது இந்துத்துவ  நாக்கு நீண்டது.

இதனிடையே எழுதுவதற்கான நாவலுக்கான களமோ, கதைக்களமோ அமையாவிட்டால் தன் வீட்டு லேப்ரடார் நாய் சிந்தித்துக் கதை சொல்லியது, வாக்கிங் போனோம், நான் என் வீட்டில் காய்கறி வெட்டினேன் என்றெல்லாம் தங்கள் சுய அரிப்பை எழுத்துக்களாக வாசகர்கள் முன் புத்தகமாக வைத்துத் தந்தார்கள். இந்தளவில் சாரு நிவேதிதாவும், ஜெயமோகனும் தமிழுக்கு சுய அரிப்பு முனோடிகளாகத் திகழ்கிறார்கள்.

இனி இந்த எழுத்து முறையையும் பின்பற்றி ஒரு தலைமுறை வரலாம். அச்சத்தோடுதான் பார்க்க வேண்டியிருக்கிறது. இதில் மேலுமொரு குரூரம் “எழுத்து… தவம்… ஞானம்…” என ஒரு புறம் கூவி மறுபுறத்தில்  “எழுதுதல் யாவர்க்கும் அறியவாம் எளிதாம் தேவர்க்கு” என ஓதி, எழுதுவதற்கு தேவர்கள் ஆசி பரிபூரணமாகக் கவிய வேண்டும் எனச் சொல்லும் ஜெயமோகன் எழுதுவது எப்படி என வகுப்பாசிரியராகவும் மாறி, விநோதக் கூத்தாடி நிலையை எடுப்பதும் உண்டு. ஜெயகாந்தன் பேசியதை அப்படியே மண்டையில் இருத்தினேன். எதையும் அப்படியே அச்சுப் பிறழாமல் எத்தனை வருடங்கள் கழித்து வேண்டுமானாலும் ஒப்பிப்பேன் என்பவர் வரலாற்றை இந்துத்துவம் செய்கிறேன் என ஆரம்பித்து திரிபுகளையும், தன் இந்து மன போதங்களையும் இறக்கி வைப்பார். தகவல் பிழைகளையும், அவதூறுகளையும் சுட்டிக் காட்டி விமர்சகர்கள் எழுதினால், நான் வரலாற்று ஆசிரியன் அல்ல எழுத்தாளன் என பழையபடி தன் கலை நாற்காலியில் பிருஷ்டம் அழுந்த இறுக்கிக்கொண்டு அமர்வார்.

தமிழ்ச் சூழலில் வாசகர்களை கடைத்தரம் கெட்ட ரசிகர்களாய், சிறு பூசாரிகளாய், தொழுபவர்களாய், அய்யனே, ஆண்டையே எனக் கூவி அவர்களை விசிலடிச்சான் குஞ்சுகளாய் மாற்றிய பெருமை தமிழ்ச் சூழலில் ஜெயமோகனையும் சாரு நிவேதிதாவையுமே சாரும்.  நித்ய சைதன்ய யதியைப் பற்றிப் பேசும் போது காலைச் சூரியனை அவர் தாடி வாங்கி, ஒளி மின்ன வெளிவிட்டது என எழுதுபவர் இடதுசாரி தத்துவ ஆசியர்களை இடுப்புக் கீழ் பார்ப்பது ஏன்? எது பார்க்க வைத்தது? இந்திய தரிசனங்களே இந்து மத தரிசனங்களாய்… அனைத்தையும் பூஜைப் பொருட்களாக்கி வழி பட வைத்தது எது? எல்லாம் இந்து மயம். ஜெகத் குரு புலம்பல்கள். இப்பொழுது ஜெயமோகன் ஒரு இளைய தலைமுறைக்கே ஜெகத் குருவாக, கார்ப்பரேட் குருவாக மாறியிருக்கிறார். அவர் தரும் பஜனை மட விருதை புன்னகையுடன் வாங்கிய நாஞ்சில்நாடன் அவர்கள், தொ. பரமசிவன் சங்க இலக்கியத்தில் தென்னை இருந்ததில்லை என சொல்ல, தமிழ்க் காய்ச்சலோடு காத்திரமாக உடனே எதிர் கட்டுரை எழுதினார். ஜெயமோகனின் இந்துத் தொன்னையில் பாயாசம் அருந்துவதை இலக்கியம் எனச்சொல்லும் நாஞ்சிலார் அவர்களே…  ஜெயமோகனின் எழுத்துக்களில் வரலாற்றுத் திரிபுகளோ, தத்துவ திரிபுகளே இல்லையா? அடியும் முடியும் அறிந்த ஒரே ஆசான் அவர்தானா?  நாஞ்சில்நாடன் தான் சொல்ல வேண்டும்.  ஜெயமோகனின் இந்துத்துவ உளவியல் கூறுகளை எடுத்து எழுத ஆரம்பித்தால் ஒரு தனிப்புத்தகமே எழுத நேரும். விரிவஞ்சி நிறுத்துகிறேன்.

பற்றாக் குறைக்குத் தன் பங்கிற்கு சாரு நிவேதிதா, நித்யானந்தாவின் காலில் கீழ் அமர்ந்து சாங்கிய, பிதுக்கிய இன்ன பிற யோகங்களைக் கற்றதாகக் கூறி, அவர்கள் உளறியதையெல்லாம் தத்துவம் விஞ்ஞானம் என உளறி பலனடைந்தார். இதில் ஜெயமோகன் இந்துத்துவ நோக்கில் எழுத்துலகை முன்வைத்தார், சாருநிவேதிதாவோ, தமிழ் இலக்கியத்தை பின்நவீன வெளிச்சத்தில் விளக்குகிறேன் பேர் வழியெனப் புகுந்து  பின்நவீனத்துவம் என்பதே எல்லாம் ஆண் பெண் குறியில்தான் அடக்கம், விரலில் புணர்வது, கம்பியைச் சொறுகுவது, கடப்பாரையால் உழுவது என ஆண் பெண் உறுப்பை முடிந்தவரைக்கும் சின்னாப் பின்னாப் படுத்தினார். இவரின் உறுப்பு அரசியல் முழுக்க முழுக்க அவர் மன விகாரமின்றி வேறென்ன? இவரைப் பின் தொடர்ந்து தனது மன விகாரங்களை வெளிச்சம் போட, உழைத்தே பார்த்திராத ஒரு கூட்டம் தேடியலைகிறது. (எந்த வேலைக்கும் போகாமல், பரம்பரைச் சொத்து, அல்லது மூத்தவர்கள் சம்பாதியத்தில் உடல் வளர்ப்பது என்ற முடிவோடு ஆரம்பித்து அத்தனையும் செய்து வருகிறது.) இதுதான் பின்நவீனத்துவமா எனக் கேட்டால், ஏன் உங்களுக்கு எல்லாம் பாலுறுப்பு இல்லையா என்கிற சமத்காரமான பதில் வரும். எல்லோருக்கும்தான் இருக்கிறது. எடுத்து ஆட்டிக்கொண்டும், குலுக்கிக்கொண்டும் உங்கள் வீட்டின் முன் திரியலாமா என்று கேட்டால் பேச்சு மூச்சிருக்காது. இன்னும் குறிப்பாக பிராய்ட், யூங், லக்கானை இந்தளவுக்கு தமிழில் அம்மணமாக விட்ட உறுப்பு உளவியலாளர் சாரு நிவேதிதாவை விட்டால் வேறு யாரும் இல்லை. இவரும் எந்த நூலையும் மொழிபெயர்த்ததில்லை. பின்நவீனத்துவ நூல்களிலிருந்து மட்டுமல்ல வேதங்களிலிருந்தும் எடுத்தாள்கிறார். ஜெயமோகனக்கு நித்ய சைதன்ய யதி, இவருக்கு நித்தியானந்தா போட்டி போட்டுக்கொண்டு புகைப்படங்களைப் போட்டு எழுதிய இவர்கள் இருவரும் இப்பொழுது தெளிவாகப் போய் சேர்ந்திருப்பது. மோடி மடம். நிற்க.

இவர்களை ஞானிகளாய் முன்னிறுத்த ஒரு பதிப்பகம். அதற்கு வெளியிட்டாளர் மனுஷ்ய புத்திரன். சுஜாதாவை முன்வைத்து ஒரு பதிப்பகம் தொடங்கினால் எப்படி இருக்கும் என்பதற்கு இதுதான் ஆதாரம்.  இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போது அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதிகாரப் பூர்வமாய் இணைந்திருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. பார்க்கலாம், பின்நவீனத்துவத்தை பாலுறுப்பில் வைத்துத் தந்தவர், அதை சம்பந்தப்பட்ட அரசியல் தலைமைக்கு எப்படி என்ன விதம் கற்றுத்தரப்போகிறாரோ.  மக்கள் அரசியலில் ஒரு உறுப்பாய் சேர்ந்த பின்னர், அவர் வைக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் என்ன விதத்திலெல்லாம் விளைவுகள் வரும் என அவருக்குத் தெரியும்.

சமூகத்தளத்திலும் இலக்கியத்தளங்களிலும் இசங்கள் புகுந்து சீரழிக்கப்பட்ட நவீன எழுத்துலகம் இன்றுவரை காலனிய அடிமைத்தனத்தில்தான் எழுத்தாளரை முன் வைக்கிறது. ஒரு நவீன எழுத்தாளனை நானறிந்து தமிழ் எழுத்தாளன் ஒருவனைப் போல் எழுதுகிறார் என எந்த எழுத்தாளனும் மனம் திறந்து சொன்னதில்லை. முகம் தெரியாத ஒரு எழுத்தாளனை எந்த மூத்த ஆளுமையும் ஒப்பீட்டளவில் பேசியதும் இல்லை. ஊர் பேர் இன்னார் எனத் தெரிந்து கொண்டுதான் பேசியதும் எழுதியதும்.  இதில் அவர்தான் சென்னை ஃபூக்கோ, இவர்தான் கோவில்பட்டி தெரிதா, இவர்தான் மதுரை லியோதர்த், இவர்தான் திருநெல்வேலி ரோலன் பார்த்,  இவர்தான் முட்டுச் சந்து சார்த்தர் அவர் இந்நாட்டுக் கோசாம்பி, அதோ அவர் தென்னாட்டு சட்டோபாத்யாயா என தானறியாத, தான் படித்திராத ஆசிரியர் பெயர்களை வைத்து உரையாடல்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதுதான் நவீன எழுத்துலகம்.

இன்று இன்னும் சீரழிவாக பெயரும், பின்புலமும் தெரியாமல், ஏதேனும் ஒரு குறிச்சொல்லைத் தட்டி கூகுளில் தேடி எந்த முகாந்திரமும் இல்லாமல் மொழிபெயர்த்து அந்த எழுத்தாளரை நான்தான் கண்டுபிடித்தேன் என்ற சுயதம்பட்டத்தில் ஒரு தலைமுறை தன்னையே தொலைத்துக் கொண்டிருக்கிறது. இதில் ஒரே விதிவிலக்காக நான் அறிந்த வரை ஒரு வெளிநாட்டு எழுத்தாளரை தமிழ் எழுத்தாளர்களுக்கு இணையாக வைத்துப் பேசியது, மொழிபெயர்ப்பாளரும் அறிஞருமான எஸ்.பாலச்சந்திரன் மட்டுமே. யுவான் ருல்போவின் எழுத்துக்களைப் பற்றிச் சொல்லும் போது, “பூமணியின் படைப்புலகமும், ஜி.நாகராஜனின் பன்முகத்தன்மையான கதை சொல்லலும், அசோகமித்திரனின் படைப்புகளில் நாம் காணும் வடிவ நேர்த்தியும் ஒன்றாக இணைந்தால், ருல்போவின் படைப்புக்களுக்கு அருகில் வைத்துப் பார்த்துக்கொள்ளும்படியான படைப்புகள் ஒருவேளை உருவாகலாம்.” என எழுதியிருந்தார்.

காலனிய அடிமைகளையும், இசங்களின் பெயர்களையும், சொல்லுவதன் மூலம் ஏதோ, தாங்கள் ஒரு நாவலை, சிறுகதையை கவிதையை எழுதியதாகவும் நம்பிக்கொண்டு தங்களை உருவாக்கிய மூத்த ஆளுமைகளைப் பின்பற்றி அம்மணமாக ஓடியேனும் விளம்பரப்படுத்திக்கொண்டு தங்களது சரக்குகளை விற்கும் எழுத்தாளர்களும் கொண்ட நாம் என்ன செய்ய முடியும்? எப்படி படைக்க முடியும்?

நவீன எழுத்தை தமிழுக்கு அறிமுகம் செய்து அதைப் பிரபலப்படுத்திய ஆளுமைகளின் நிலைமை இப்படி இருக்கையில் இப்பொழுது தேர்ந்த தொழில்நுட்பத்துடனும். குயூக்தியும், விளம்பர மோகமும் கொண்டு,  வெட்டி ஒட்டத் தெரிந்த, ஒட்டியதை, மறைக்கத் தெரிந்த இளம் தலைமுறை கூகுள் கருவி மூலமும் முக நூல் வழியாகவும். தன் வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறது

பொறுப்பான முறையில் நவீனத்தையும், மாற்றங்களையும், தத்துவங்களையும் கற்பிக்க வேண்டியர்கள் வித்தைகாட்டிகள் என்ற தங்களது பதத்தை ஒளித்து வைத்து, அறிவுஜீவி என்ற பட்டத்தின் திரை மறைப்பில் அமர்ந்திருந்தார்கள். தொழில்நுட்பம் கை வரப்பெற்ற இளைய தலைமுறை அவ்விமர்சகர்களின் இடத்தை, அவர்கள் அமர்ந்திருந்த படைப்பாளி என்ற முத்திரை பதிக்கப்பட்ட நாற்காலியை மிக மோசமாக எட்டி உதைக்கிறது.

இப்பொழுது அறிவு ஜீவியாவதற்கு ஒரு நவீன வாசகருக்குத் தேவை கீ வேர்ட்ஸ் மட்டுமே. அதாவது குறிச் சொற்கள். கொஞ்சம் ஆங்கிலப் புரிதல். உதாரணத்திற்கு உலக எழுத்தாளர்கள், லத்தின் அமெரிக்க எழுத்தாளர்கள் என கூகுளில் தட்டினால் அது உங்களை அழைத்துச் செல்லும். இப்படியே உங்களுக்கு தோன்றிய குறிச் சொல்லை தட்டி அதில் உள்ள பட்டியலில் நாலைந்து பெயர்களை எடுத்துப் போட்டு அவர்கள் முழுமையாக என்ன சொல்ல வருகிறார்கள், அவர்களில் ஆதரக் கருத்தியல் எது என்று எதுவும் தேவைப்பட்டமல், சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளில் நாலைந்து வரிகளை எழுதிப் போட்டால் நீங்கள் உலக இலக்கியவாதி. தமிழ் நவீன எழுத்து முயற்சியை முற்றிலும் தடை படுத்தியது இந்த குறிச்சொற்கள்தான்.

இன்று இணையத்தால் எங்கு என்ன நடக்கிறது என்பதை ஒரு நொடியில் அறிந்து கொள்ளும் வசதி கிடைத்திருக்கிறது. அதை வைத்து இதில் எவ்வளவோ விசயங்களை, நடப்பில் உள்ள அறிவுசார் தத்துவ, சமூக, இலக்கியம் சார்ந்த விவாதங்களை மேலெழுப்பிக் கொண்டு செல்லலாம். மாறாக மூத்த ஆளுமைகள் போட்டு வைத்த பாதையையும் அவர்கள் அடைந்த அரைகுறை வெளிச்சப் பின்புலத்திலும்தான் இளைய தலைமுறையும் முன்னேறுகிறது. ஒட்டுமொத்தமாக பார்க்க வேண்டுமெனில் இவ்விளம் தலைமுறக்கு,  அடுத்த தலைமுறைக்கு காத்திரமான விவாதப் பண்பைக் கடத்த வேண்டுமென்பதோ, தமிழில் நவீன எழுத்து முறையை அறிமுகம் செய்து வைப்பதோ, பக்கத்து நாடுகளின் பிரச்சினைகளை, ஓரளவுக்கேனும் இலக்கியத்துறையில் என்ன நடக்கிறதென்றோ தெரியப்படுத்தும் நோக்கமின்றி, முழுக்க முழுக்க தன்னை முன்னிறுத்துவது மட்டுமே இலக்கியப்பணியாக மாறியிருக்கிறது. இன்று இவ்வகை இலக்கியவாதிகள் விளம்பர வெளிச்சத்தில் எதையும் செய்யத் தயாராக இருக்கின்றனர்.

அமைப்பையும், தத்துவத்தையும், போராட்டங்களையும் கேலி செய்து கலை கலைக்காகவே என்ற பலர் இப்பொழுது தங்கள் வெளிச்சப் புலத்தை அதிகரிக்க, ஒடுக்கப்படும் மக்களுக்கான போராட்டங்களைக் குறிவைத்து அதில் தன்னையும் இணைத்துக்கொள்கின்றனர். தனி அரங்குகளில், ஒன்று கூடலில் மதுப்போத்தலை சத்தமாகத் திறந்து இலக்கியத்திற்கும் அரசியலுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அமைப்பு கூடவே கூடாது என்றவர்கள், பொதுவெளியில் முற்போக்காளார்களாவும், சாதி கடந்தவர்களாவும், போலி தலித்தாகவும், போலி சமூகக் கடமை கொண்டவராகவும் தன்னை நிறுவிக்கொள்கிறார்கள். உண்மையில் இவ்வமைப்புகள் எதற்காகப் போராடுகின்றவனோ அதற்கெதிராக தனி நபர் கூட்டங்களை நடத்திக்கொண்டு இலக்கியம் இலக்கியம் எனக் கூவுகிறவர்கள்தான் அரங்குக்கு வருகையில் முற்போக்குவாதியாக மாறுகிறார்கள். குறிப்பாக இலக்கியக் கூட்டங்களில் போராளிகளாக தங்களை முன் வைக்கும் இவர்கள் தலித் அரங்குகளிலோ, தலித் விமர்சன அரங்குகளிலோ, இயக்கங்களிலோ எதிலும் கலந்து கொள்வதில்லை. ஆனால் தலித் ஆதரவாளர் என்ற பெயரில் தன்னை முன்னிறுத்துவதால் கிடைக்கும் அங்கீகாரத்தை விரும்பிச் சுவைக்கின்றனர்.

இன்று முகநூலில் இவ்வகையான இலக்கியவாதிகள், தலித் ஆதரவுக் கருத்துக்கு விருப்பக்குறி இடுவதன் மூலமே தங்களைத் தலித் போராளிகளாவும், குடிப்பதன் மூலம் தாங்கள் சிந்தனையாளர்கள் என்பதையும் முன் வைக்கிறார்கள். இது களப்பணி செய்யும் தோழர்களையும், தலித் போராட்டத்தையும் ஒரே நேரத்தில் அவமதிப்பதாக உள்ளது. தலித் என்றாலே அசிங்கமாப் பேசுவார்கள் நாகரீகம் தெரியாதவர்கள் என்ற பொதுப்புத்தியை முன் வைப்பது, குடிப்பதன் மூலம் ஆதிக்கச் சாதி குடிக் கருத்தியலை எதிர்க்கிறோம் என்பது. ஆனால் தமிழகத்தில் எந்த தலித் விடுதலைக் கட்சிகளும் அவர்களது அறிக்கையில் குடியையோ, ஆபாசமாகப் பேசுவதையோ இயக்கச் செயல்பாடாக அறிவித்ததில்லை. இதை முன்னால் அறிவித்தது, ராஜ் கௌதமனும், அ,மார்ஸ்க் மட்டுமே. அவர்கள் அதற்கான இசத்தை முன் வைத்து விளக்கியதை இவர்கள் பின்புலமாக வைத்துக்கொண்டு கலகக்காரர்களாக தங்களை வெளிப்படுத்திக்கொள்கின்றனர். தலித் போராளியாகவும், முற்போக்கு ஆதரவாளராகவும் காட்சிப் படுத்திக்கொள்கின்றனர். காரணம் அந்த வெளிச்சத்தில் ரகசியமாக தங்களின் படைப்புகளை விற்கவும், முற்போக்காளர் பட்டத்தை தங்கள் பெயர் முன் நிறுத்தவுமே. இது ஒரே நேரத்தில் இலக்கியத்தையும் சமூக வெளிகளையும் இன்னும் மோசமாகக் கேலி செய்தபடி நகர்கிறது.

படைப்பிலக்கியத்தைப் பொறுத்தமட்டில் எல்லாவற்றிலும் இருக்கும் மாபெரும் ஒற்றுமையும் சாபக்கேடும் என்னவென்றால். பாலியல். பச்சைப் பாலியல். எந்த சமூகப் பொறுப்புணர்ச்சியும் சாராத பாலியல் எழுத்துக்கள். இவர்களுக்குத் தேவையெல்லாம் பாலியல் சார்ந்து ஒரு சினிமா, அல்லது தடை செய்யப்பட்ட உறவைக் கொஞ்சிக் கூத்தாடும் ஒரு படைப்பு. இவைகளே.  உதாரணத்திற்கு குறியை அறுத்தான், அன்னையைக் காமுற்றான். தங்கையைப் புணர்ந்தான் அம்மாவைப் புணர்ந்தான், தந்தையைப் புணர்ந்தாள், சித்தி மகள் மீது காமம், அம்மாவையும் மகளையும் புணர்ந்தான் என்ற வகைமைகளையும், காரணமே இல்லாத குறியறுப்புகளையும் செய்து தங்கள் பாத்திரங்களை அம்மணமாக அரைகுறையாக அலையவிட்டு அதற்கு இச முலாமையும் பூசினார்கள். ஏதோ தமிழ் உலகமே நிர்வாணமாய் அலைவதோடு, சம்பந்தப்பட்ட உறுப்பைக் கையில் பிடித்து ஆட்டியபடியும், குத்தியபடியும் இருப்பதாய் பிரகடனம் செய்தார்கள். தங்களது தறிகெட்ட தற்குறி மனதிற்கு எதெல்லாம் வாகாய் அமைந்ததோ, தத்துவ விளக்கம் கொடுக்கப்பட்டதோ அதுவே இலக்கியம். இவ்வகை இலக்கியவாதிகள் தங்கள் எழுத்துக்களின்வழியே, இலக்கியத்தின் பேரால் காலம் சென்ற பார்ப்பனிய எழுத்தாளர்களும், இசத்தை மேற்கோள்களாய் தொகுத்து வழங்கியவர்களின் குரலையும்தான் பிரதிபலித்துவருகிறார்கள்.

இது எந்த அளவிற்கு இலக்கியவாதிகளின் மனதை கட்டமைத்திருக்கிறது என்றால், புதிதாக கண்டறியப்பட்ட மனநோய்க்கு மருத்துவத்துறை ஒரு பெயரை வைத்ததும், அப்பெயர் கவர்ச்சியாய் இருந்தால் அந்நோய் தனக்கு இருக்கிறது என்று சொல்லிக் கொண்டாடும் புதிய தலைமுறையே இப்பொழுது கிளம்பி வந்திருக்கிறது.  இதில்தான் போலி லெஸ்பியன்ஸ், போலி ஹோமே செக்ஸ்வல்ஸ்.  போலி பலர்பால் புணச்சியாளர், என்றெல்லாம் சொல்லி கவர்ச்சி காட்டுதல் நடந்து வருகிறது. ஒட்டுமொத்தமாய் இடுப்புக் கீழிருக்கும் உறுப்பை சிதைப்பதே சிதைவாக்கம் என்பதும் அதுதான் பின்நவீனத்துவம் என்றும் ஒரு கூட்டமே முகநூலில் தமிழ் எழுத்துலகை படைத்து வருகிறது.

குறைந்தபட்சம் ஆதவனின் என் பெயர் ராமசேஷன், கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானிடம், எம். வி. வெங்கட் ராமின் காதுகள், இந் நாவல்களில் ஒரு பாராவைக்கூட எழுத முடியாமல்தான் தன் வாழ்நாளையே இவர்கள் வீணாக்குகிறார்கள். குறைந்தபட்சம் தமிழின் அசாத்தியங்கள் இந்த நாவல்கள்.  குறிப்பாக சாருநிவேதிதா இதில் உள்ள ஏதேனும் ஒரு பாராவையாவது எழுதி எழுதிப் பழகவேண்டும்.

நாங்கள் கலைஞர்கள், எங்களால் எதையும் தியாகம் செய்யமுடியாது, நாங்கள் எதற்கும் கட்டுப்பட்டவர்கள் கிடையாது, நாங்கள் விரும்பியதைத்தான் எழுதுவோம். ஒரு கலைஞனைச் சட்டையைப் பிடித்து இதை எழுது என யாரும் சொல்ல முடியாது. கலைஞனுக்கு அமைப்பில்லை, அரசியல் இல்லை, அவர்கள் சர்வரோக நிவாரணிகள் என கலைஞர்களுக்கு ஒரு நவீன வேதமே ஓதினார்கள். ஆனால் அடையாள நெருக்கடியும், தன்னை முன்னிருத்தும் அரசியலும், அதனால் தான் அடையும் அற்ப விளம்பரமும் அவர்களை மிக வேகமாக தங்களை முற்போக்கு வாதியாகவும்,  முற்போக்காளானாகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்க வேண்டிவர்களாகவும் காட்ட வேண்டிவைத்தது.

இலக்கியத்திற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என குரல் உயர்த்தும் இவர்கள், தலித் இலக்கியத்தை (ஒரு குறிப்புக்காக) அதன் போராட்டக் குணத்தை எப்படி மதிக்கிறார்கள்? தலித் இலக்கியத்திற்கும் கலைக்கும் கவிதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிவிப்பார்களா? பின்நவீனத்துவம் எல்லாவற்றையும், எல்லா அமைப்புக்களையும் எல்லாவிதமான நிறுவனங்களையும் அழித்தொழிக்கிறது என்பவர்கள் தலித் அமைப்பை, அதன் முன்னெடுப்புகளை, அதன் போராட்டங்களை எப்படி பார்க்கிறார்கள்? வேதங்களைப் பின்நவீன ஒளியில் வாசித்து, அது பழங்குடிப் பாடல். காவியச் செழுமை, அது வெறும் மொழி, குறிப்பான், குறியீடு அதற்கும் மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, எனச் சொல்லுவார்களா? இல்லை, ஒடுக்கப்பட்ட ஒருவரின் படைப்பை எடுத்து இது முழுக்க முழுக்க சாதியைப் பற்றிப் பேசுகிறது எனவே இது சாதி இலக்கியம். இந்தியாவில் சாதி என்பது பெருங்கதையாடல். இதை பின்நவீனத்துவம் தகர்த்துவிடும் எனச் சொல்லுவார்களா? இசங்கள் பேசிய காலங்களிலிருந்து இன்றுவரை, இதுதான் பின்நவீன நாவல், இது அமைப்பியல் வாத நாவல், இது இருத்தலியக் கட்டுரை, இருத்தலிய கவிதை என எதுவும் வந்ததில்லை. பின்நவீனக் காவியம் என ரமேஷ் பிரேம் அவர்களது படைப்பைச் சொல்லிக்கொண்டார்கள். க்யூபிசநாவல் என எம் ஜி. சுரேஷ் தான் எழுதிய நாவலை அழைத்துக்கொண்டார். ஜெயமோகமும் புதுக்காப்பியம் என தன் எழுத்தையே சொன்னார். விமர்சகர்களும் வாசகர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தார்கள்.

எனக்குத் தெரிந்து பின்நவீனத்துவம் பேசிய எந்த நபரும் இதைச் செய்ய முடியாது. அப்படி கட்டவிழ்க்கிறேன் புனிதத்தை பின் நவீன ஒளியில் வாசிக்கிறேன் என இந்து தத்துவங்களை வாசிப்பார்களா? முடியாது. அப்படி மீறிச்  செய்தால்.  அவர்களின் முற்போக்கு வேடங்கள் என்னாவது. நடக்கும் சாதி, பாசிச ஆதிக்கப் போக்கிற்கு துணை போனதாகிவிடும். எனவே அடக்கி வாசித்து,  தங்கள் முற்போக்கு நடிப்பின் முன், ஆபாசத்தை இலக்கியமாக தன்னை ஒரு கலகக்காரர்களாக முன் வைப்பதே அவர்களின் கடமை. இதில் உண்மையில் தலில் இலக்கியத்தில், அதன் செழுமையை முன்வைத்து இயங்கும் ஒரு தலித் படைப்பாளரை விட தாங்கள்தான் முன்னணி இலக்கியத் தலித் என்று குரல் எழுப்பி அதையும்  வியாபாரம் செய்கிறார்கள்.

இவ்வகை இலக்கியவாதிகள், தங்கள் வசதிக்கேற்ப ‘எப்பொழுது எது முற்போக்கோ’ அதுதான் தங்களின் போக்கு என்று அறிவித்துக்கொள்கிறார்கள்.  இதற்கிடையில் இணை முரணாக, அறிவு ஜீவிப் பட்டம் கிடைக்கும், பேசினால் சொகுசாக இருக்கும் என்று விமர்சனப் போக்கைக் கையிலெடுத்து விமர்சிப்பது மார்க்சியத்தை. மார்க்சியம் என்பது அரசியல், அதற்கும் கலைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, மார்க்சியர்கள் கலை விரோதிகள். இதுவே இவர்களது விமர்சனப் பார்வையின் மையங்கள். மார்க்சையும் தெரியாது, அம்பேத்காரையும் தெரியாது, இலக்கியமும் தெரியாத இவர்கள்தான் நவீன எழுத்துலகவாதிகள்.  இதற்கு சிறந்த உதாரணம், மூத்த ஆளுமை கோணங்கி. அவர் தொடர்ந்து சொல்லி வருவது. அரசியல் கலைக்கு எதிரி. கலையை அரசியல் ஒழித்துவிடும். கலைதான் எல்லாமும்.

ஒரு விவாததிற்காக கலைக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றே வைத்துக்கொள்வோம்.  சரி உங்கள் படைப்புகளில் கலை எங்கே இருக்கிறது? நீங்கள் கலைஞரா என்று கேள்வி கேட்டால் பதில் சூன்யத்தில்தான் முடியும். தலித் இலக்கிய வகைமையை இலக்கியம் அல்ல அது கலைக்கு எதிரி என்று சொல்வார்களா? முடியாது. மார்க்சியத்தை எதிர்த்தால் அறிவுஜீவிப்பட்டம். ஒரே குதிரையில் இரட்டைச் சவாரி.  இதுதான் இப்பொழுது இவர்களது முறைமை.

அரசியலில் இசகங்களை முன்வைத்து குழப்பத்தை விளைவித்து ஒரு தலைமுறைப் போராட்டத்தை பின்னடத்திய பேராசிரியர்களும், இலக்கியத்தில் தமிழை நவீனமாக்கியது தாங்கள்தான் எனச் சொல்லிய பேர் கெட்டப் பின்நவீனவாதிகளும், குறி, முலை, குடி, அவுத்தெறி அனைத்தையும், கதவைத் திற காமம் வரட்டும் எனப் பேசிய சாரு வகையறாக்கள் ஒருபுறம், ஓம் சாந்தி ஓம் எல்லாம் ஜெயமயம் எனச் சொல்லி குழுவை அமைத்துக்கொண்டு கூட்டம் போடும் ஜெயமோகனையும் பின்னிணைத்துக்கொண்டே தோன்றிய தலைமுறைதான் நாம் காணப் போகும் அடுத்த வகையான இலக்கியத் தரகர்கள். மேற்கண்ட வகை மாதிரிகளிலிருந்து தொடங்கி, இந்த இலக்கியத் தரகர்கள் தங்களை நிரூபிக்கும் அவஸ்தையுடன் நாளும் வாழும் வாழ்க்கை மிகவும் ஆயாசமளிக்கக் கூடியது. 

அமைப்புக்கு எதிராகப் பேசுகிறோம், அமைப்பே வன்முறை என்று மூத்த ஆளுமைகள் சொன்னதில் இருந்து அத்தனையும் திசை மாறியிருக்கிறது. அமைப்பதென்பதே வன்முறை.  இலக்கியம் அமைப்பல்ல, அது தனி மாதிரி என கூவியவர்கள்தான் இன்று தங்களுக்கென ஒரு கூட்டத்தை அடைய தனித் தனிக் குழுக்களை, அமைப்புகளை உருவாக்கி செயல்படுகிறார்கள். குழுவாகவும் அமைப்பாகவும் செயல்படமுடியாமல், பேசுவதற்கு விசயமும் கற்றுக்கொள்ளும் முயற்சியும் இல்லாமல், அதே சமயம் தன் குரு வழிகாட்டி இவர்தான் எனச் சொல்லவும் முடியாமல், சம்பந்தப்பட்ட ஆளுமைகளால் கண்டுகொள்ளாப் படாத வேதனையுமே இந்தப் புதிய இலக்கியத்தரகர்களைத் தோற்றுவித்தது. மேற்சொன்ன இலக்கிய புலம்பிகளுக்கு இத்தரகர்கள்தான் இப்பொழுது புகலிடம்.

இந்த இலக்கியத்தரகர்களின் வாழ்நாள் செயல்திட்டம், உருவாகும் காரணிகள், மற்றும் அவர்களின் மனநிலைதான் என்ன ?

இலக்கியத்தரகர் முதலில் கவிஞராக இருந்து, தன் வரையில் நாலைந்து கவிதை எழுதி அது போதிய சந்தைக் கவனம் பெறாமல் தோல்வியுற்ற மனநிலையில், எழுத்து ஒரு சாதனை. எழுத்தாளருக்கு எதையும் சொல்ல தகுதியிருக்கிறது என்ற வார்தைகளில் மயங்கி, எழுதமுடியாமல் எழுதி, எதையும் நிரூபிக்க முடியாத ஆவலாதியில் தவிப்பதோடு உறுப்பின் பெயர்களுக்கு ஆண் பால், பெண் பால், பலவின் பால் என பெயரிட்டு எழுதும் வகைமாதிரிகளை, முன்னிலைப்படுத்தி இலக்கியத்தரகர்களாக தங்களை இருத்திக்கொள்கிறார்கள். இதன் மூலம் இலக்கியத்தரகர்கள் அடையும் உச்சம் (orgasm) எண்ணற்றவைகள்.

சொந்த செலவில் கவிதைப் புத்தகம் என்ற ஒன்றைப் போட்டு (இவர்களது சொந்த உழைப்பில் பெறப்பட்ட வருமானத்தில் அல்ல. அப்பா அம்மா, அல்லது மனைவி, பரம்பரைச் சொத்து, அல்லது வீட்டை வாடகைக்கு விடுதல், தானறிந்த நண்பர்களிடம் பிலிம் காட்டி பைசாக்களை ஈதல்) முட்டி மோதி நான்கைந்து கவிஞர்களிடன் முன்னுரை வாங்குவார்கள். முன்னுரை தரும் கவிஞர்களுக்கு இவர்கள் என்ன வகையில் கவிதையை முன்வைக்கிறார்கள்; எழுதுகிறார்கள் என்ற எந்த முகாந்திரம்  இன்றி “தன்னையும் நம்பி வந்திருக்கிறானே” என ஏதோ போகட்டும் இவரும் கவிஞர்தான் என எழுதிக்கொடுத்திருப்பார். அல்லது புதிதாக எழுத வருபவர்களை “ஏன் காயப்படுத்த வேண்டும்” என ஆற்றுப்படுத்துவார். இதில் இன்னொரு வகை “நாளைக்கு நமக்குப் பயன்படுவான்” என்ற ரீதிகளில் முன்னுரை வரும். இதன் பின்னால் கவிஞர், விடுதியில் அறை போடுதல், குடி, வெற்றிலை பாக்கு வசியங்களையும் ஏற்பாடு செய்து தருதல் இத்யாதிகள் நடக்கும்.

முன்னுரையை வைத்து ஒரு ஆறுமாத காலம் அப்படி இப்படி என எழும்புதல், சிலும்புதல் நடக்கும். பின் அது கதைக்காகவில்லை என புதுத் தொகுதி ஒன்று எழுதி அதையும் இதே நோக்கத்தோடு செய்வார். ஆனால் அதற்குள் வெறும் முன்னுரைக்காகவே கவிதை எழுதுகிறவர் என முத்திரை விழுந்துவிடும். உடனே வேறு வகையான மாதிரிகளை முன்வைக்கத் தொடங்குவார். ஏதேனும் ஒரு பத்திரிக்கை ஆசிரியரை, பொது ஊடகத்தில் நவீன இலக்கியவாதியாய் அறியப்பட்டவரை, தானறிந்த நண்பர்கள், தான் செயல்படும் இடங்களிலெல்லாம் என் ஞானத்தகப்பன், அவரது உள்ளாடையை நான் தான் முதலில் துவைத்துக் கொடுத்தவன் என்ற செய்தியை, சம்பந்தப்பட்டவரின் உட்செவியை சென்றடையும் வரை கூவுவார்.

ஞானத்தகப்பனோ, இந்தக் காலத்தில் நவீன அடிமை வாகனம் எப்படியெல்லாம் இருக்கிறது என புல்லரித்து அவரது தலையை தடவிக்கொடுக்க, சம்பந்தப்பட்ட இலக்கியத் தரகர் மகிழ்ச்சி அடைவார். முதலில் உஷாராக இருந்த ஞானத்தகப்பன் தன்னையும் தன் படைப்பையும் முன் நிறுத்தி நியாயமாகக் கேள்விகளை முன் வைக்கும் நேர்மையான எதிரிகள் எண்ணிக்கை பெருகி வருவதைக் கண்டு, தனக்கு வாய்த்த இது போன்ற அடிமைகளையும் துரத்திவிட்டால் நமக்குத்தான் சிக்கல் என்ற உள்மனப் பதட்டமே இலக்கியத் தரகருக்கு ஒரு புத்தகத்தைப் போட்டுக் கொடுக்க வைக்கிறது. துரதிருஷ்டம் அதற்கும் சந்தையில் எந்த மதிப்பும் இல்லை.

அதன்பிறகு அவர் மிக முக்கியமான முடிவொன்றை எடுப்பார். ஏதேனும் ஒரு பெயரில் இலக்கிய அமைப்பை ஆரம்பிப்பார். தன்னைப் போல் எதையோ எழுதி, அதை பேசவும் ஆளில்லாமல், பாராட்டவும் ஆளில்லாமல் தனிமையில் கிடந்து அல்லல்படுவோரை முகநூல் மூலம் கண்டறிவார். பின் அவர்களுக்கு தனிப்பட்ட செய்திப்பெட்டியில் போய், நீங்கள்தான் முதன்மையான இலக்கியவாதி என செய்தியனுப்புவார். உங்களின் வரிகளில் புதிதான இது கண்டேன்… அது கண்டேன்… என சொல்லும்போது. தானும் ஒரு இலக்கியத் தரகராய் மாறப் போவது தெரியாது அவரும் தலையாட்டி தனக்கு அங்கிகாரம் கிடைப்பதில் மகிழ்ச்சி அடைய, நம் இலக்கியத் தரகர் மீன் மாட்டியது என்ற உற்சாகத்தில் ஒரு கூட்டம் போட்டுப் பேசலாமே என்பார்.

ஏற்கனவே சம்பந்தப்பட்ட படைப்பாளி, தான் எழுதியது எதுவுமே சரியில்லை. இது வரவில்லை. கற்றுக்கொண்டு எழுதலாம் என்றால் அதற்கும் ஆளில்லை, இது நம் பகுதியே இல்லை என்ற நினைப்பில் இருக்கும் போது, தனக்கும் ஒருவன் கூட்டம் கூட்டுகிறானே என்ற பெருமிதத்தில், வானம் நீலமாகத் தெரிவதும், மழை பொழிவதும் நட்சத்திரங்களில் தானும் ஒன்றாக மிதப்பது போலவும் குதூகலிப்பார். மீன் பிடித்த இலக்கியத் தரகருக்கு இதை விட ஆனந்தம். மிக நளினமாக இதே வகையிலான எழுதத் தெரியாது, ஏதோ எழுதுகிறோம் அல்லது பழகுகிறோம் என்று எழுதுபவர்களில் அங்கீகார வெறியில் முகநூலில் எழுதும் ஆட்கள் நாலைந்து பேரைத் தேடி கூட்டம் என்று ஒன்றை அறிவிப்பார். கூட்டம் முடிந்ததும், நோக்கம் நிறைவேறிய மகிழ்ச்சியில் இலக்கியத்தரகர் கண்கலங்க அனைவரையும் பார்த்து பணிவாக வணங்கி மைக்கைப் பிடித்து சட்டையை தன்னடக்கத்தோடு இழுத்துவிட்டு அறிவிப்பை தன்னடக்கமான குரலில் வெளிப்படுத்துவார்.

1 காணாமல் கிடந்த எழுத்தாளர்களை நான்தான் தமிழுக்கு அறிமுகம் செய்தேன்.
2 தமிழ் நாவலில் இவர் எழுதிய அளவுக்கு உள்மன ஆத்ம விகாரங்களை லத்தின் அமெரிக்காவின் குண்டோஸ் மண்டோஸ் எழுதியிருக்கிறார்.
3 இவர்களை ஏன் மூத்த இலக்கியவாதிகள் கண்டுகொள்ளவில்லை.
4 இத்தனை சிறிய வயதில் எத்தனை பெரிய அனுபவம்.
5 இவர்தான் இனி தமிழ் நவீன முன்னோடி.

இலக்கியத்தரகர் தன் உரையை முடித்ததும். இலக்கியத்தரகரால் கண்டுபிடிக்கப் பட்ட, என்னத்தையோ எழுதிகள் அடுத்தடுத்து ஒலிபெருக்கியைப் பிடித்து என்னைக் கண்டறிந்த மிகச் சிறந்த வாசகன், நுண் வாசகன், நண்பன், சகபடைப்பாளி மீது பொறாமையில்லாத கவிஞன், படைப்பாளன், நாவலாசிரியன், கவிஞன், பத்தி எழுத்தாளன், என்னே நான் செய்த பேறு, நீ நான் வேறா … என சகல கண்கலங்கல்கள் முடிந்ததும். இலக்கியத்தரகர் அடுத்து ஊதிப்பெருக்கும் கருவியாக அவர் பயன்படுத்தும் முகநூலை கையில் எடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை சரமாரியாக வெளியிடுவார். இது தொடர்ந்து, அடுத்தடுத்து அவரிடம் சிக்கும் இரைகளின் மூலமாக தான் ஒரு சிறந்த இலக்கியவாதி எனக் கர்ஜனை செய்வார். தொடர்ந்து வரும் கூட்டங்களில், தான் இலக்கியவாதிதான் என தன்னையே நம்பி தான் அழைத்தவரையே பகடி செய்வார். கரகோஷம் விண்ணைப் பிளக்க இழந்த எழுத்தாளப் புத்துயிர்ப்பு திரும்பி வரும். இலக்கியத்தரகர் இலக்கிய வானில் இப்பொழுது தானொரு நட்சத்திரமாக மின்னுவார்.

குறைந்தபட்ச காலம் இன்னும் குறிப்பாக ஓரிரு கூட்டங்களிலேயே இலக்கியத்தரகருக்கு முடிவு வந்துவிடும். அடுத்த கட்ட தொடக்கம்தான் அரசியல். இலக்கியத்தரகர் சமீபத்தில் பற்றி எரியும் எதேனும் ஒரு பிரச்சினையைப் பேச ஆட்களை அழைப்பார். சிலர் தன் கருத்தை எந்த மேடையானாலும் ஏறிச் சொல்லுவேன். கருத்து மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என நினைத்து பங்கேற்பர். ஆனால் அவர் மக்களுக்காகப் பேசுகிறாரா, இல்லை தனக்காகப் பேசுகிறாரா என அவரைக் கூட்டியிருக்கும் இலக்கியத்தரகரையும், அவர் கூட்டிய இரைகளுக்குமே வெளிச்சம். நாளாவட்டத்தில் இந்த இலக்கியத்தரகர், விமர்சன மேடை அமைத்துக்கொடுத்து சக படைப்பாளியைக் கண்டுபிடித்த தியாகியாகவும், அரசியல் விமர்சகராகவும் புன்னகையோடு சுற்றித் திரிவார். ஆனால் மறுபடியும் அடையாள நெருக்கடி தொடரும். தொடர்ந்து புதிய மீன்களை நோக்கி வலை  வீசுவார்.

இவ்வகை இலக்கியத்தரகர்கள் சம்பந்தப்பட்ட எந்தப் படைப்பையும் உள்நோக்கத்தோடும் தன் ரசனை சார்ந்தே அணுகுவதோடு முடித்துக்கொள்கிறார்கள். காமத்தைப் பற்றிய படைப்பாக இருந்தால். இந்தக் காலத்தில் ஆண் பெண் பாகுபாடு தேவையில்லை அனைத்தையும் பேச வேண்டிய காலம் இது என சூளுரைப்பதும், உறுப்பை அறுக்கும் படைப்பாக இருந்தால், தமிழில் புதிய எழுத்துமுறை என்றும், அரசியல் சார்ந்த, இனம் சார்ந்த எழுத்துக்கள் என்றால் பொங்கி வருகிறான் கவிஞன்… படைப்பாளி ஒடுக்குமுறையை ஒளிப்போம்… வேரறுப்போம்… என்றும் குரலை உயர்த்துவார்கள். இவ்வகையிலான தேர்ந்தெடுத்த வாக்கியங்களை பேசும் இவர்களுக்கு பொதுத்தளத்தில் இலக்கியவாதி, விமர்சகர் எனும் பெயர். ஆனால் தன்னளவில் இவர்கள் இலக்கியத்தரகர்கள்.

இவ்வகையான இலக்கியத்தரகர்களுக்கு முகநூல் ஒரு பெரிய சந்தைத் தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதை முழுக்க முழுக்கப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இவ்வகை இலக்கியத்தரகர்கள் இதுவரை பொருட்படுத்தும்படி எதையும் எழுத முடியாத ஆவேசத்தில் ஒட்டுண்ணி வாழ்க்கையை வாழவும் வாழத் தலைப்படுகின்றனர். ஆள்ச் சேர்ப்பு, பிரச்சாரங்கள், இவைகளே இலக்கியத்தரகர்களின் பணி. இவர்கள் சம்பந்தப்பட்ட இலக்கியத்தரகர்களுக்கு ஆள் பிடித்துக்கொடுக்கும் தரகர்களாகவும் இருக்கிறார்கள். தரகரால் வெளிச்சம் பெற்ற எழுத்தாளன் தரகருக்கு ஆட்களைப் பிடித்துக்கொடுக்க இலக்கியத்தரகரரின் பணி தொடர்ந்து செல்கிறது. இதில் இருவரும் சம அளவிலான உழைப்பை கைக்கொள்வர். இந்த அளவில் படைப்பாளியும் ஒரு இலக்கியத்தரகர்தான்.

சமீப காலங்களில் இவ்வகையான இலக்கியத்தரகர்கள் முன்னணி வரிசையில் உள்ள மாநிலமாக தமிழ்நாடு அமைந்திருக்கிறது. பக்கத்து மாநிலமான கேரளாவிலும் இவ்வகையான இலக்கிய தரகர்கள் உண்டு. விசாரித்துப் பார்த்தால் அது இங்கிருந்து போன தமிழ் இலக்கியத் தரகர்களினாலேயே சாத்தியமாகியிருக்கிறது. இலக்கியத் தரகருக்கு இறந்த காலம் எதிர்காலம் இரண்டும் இல்லை. எல்லாம் நிகழ்காலம் தான் வேறு மாநிலங்களில் இவ்வகையீனங்களை அறிய வழியில்லை.

கூட்டத்துக்கு ஆள் பிடித்து தன்னை ஒரு அமைப்பாகவும், தான் ஒரு தலைவனாகவும் இந்த இலக்கியத்தரகர்கள் அமர்ந்து புன்னகைத்துக்கொண்டிருக்கின்றனர். இத்தரகு வேலையில் செழுமை கூடிய இவர்கள் தாங்கள் சொல்பவர்கள்தான் எழுத்தாளர்கள் எனச் சொல்லும் தகுதியையும் வளர்த்துக்கொள்கிறார்கள். அந்த அளவுக்கு  ‘உழைக்கிறார்கள்’.  

இவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், உழைத்து ஒரு படைப்பை உருவாக்கும் இந்தத் தலைமுறைக்கு வாசகானான எனது எளிய வேண்டுகோள்கள் கீழ்கவருமாறு:

எழுத்தாளர்களாகிய நீங்கள் எந்த தலைமுறையப் பின் தொடரப் போகிறீர்கள். அதை முதலில் முன்னெடுத்து யோசியுங்கள், படைப்பாளியாக புதிதாக எழுத வருகிற இளைய தலைமுறையான நீங்கள்  இலக்கியத்தரகர்களிடமிருந்து உங்களைக் காத்துக்கொள்ளவேண்டும்.

தன்னை அழைத்துக் கூட்டத்தைக் கூட்டும் இலக்கிய அமைப்பு எது, அதன் குறிக்கோள் என்ன, இதுவரை நடந்த கூட்டங்களில் ஏதேனும் விமர்சனப் பதிவு நடந்திருக்கிறதா, அல்லது கிளப் மாதிரியான நடவடிக்கைகளை வைத்திருக்கிறதா, அடையாள நெருக்கடியில் தவிக்கிறதா, அது நூல்களையும் ஆசிரியர்களையும் படித்துவிட்டு அழைக்கிறதா, அல்லது அதை வைத்து தன்னை முன்னிருத்த ஆவலோடு இருக்கிறதா என அறிந்து செல்லவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக கூட்டத்தைக் கூட்டும் நபர் இலக்கியவாதியா, வாசகனா, படைப்பாளியா, இல்லை ஆள் பிடித்து தன்னை முன்னிருத்தும் இலக்கியத்தரகரா என அறிந்து செல்ல வேண்டும்.

1 உங்கள் நாவலை, கவிதையை, சிறுகதையை பேசுகிறோம் அதற்கு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்கிறோம் என்று அழைப்பு வந்தால் நிதானமாக நீங்கள் எந்த அமைப்பைச் சார்ந்தவர் என்று கேளுங்கள்.
2  எந்த தளத்தில் வைத்து என் நூலைப் பேசப் போகிறீர்கள் எனக் கேளுங்கள்.
3 நூலை விமர்சனம் செய்யும் படைப்பாளிகள் யார், யார், அவரின் தகுதி விமர்சகரா, அல்லது சிறுகதையாளரா, கவிஞரா, சமூக ஆர்வலரா எனக் கேளுங்கள்.
4 நூலைப் பேசுபவர் முழுமையாக உங்கள் நூலைப் படித்திருக்கிறாரா எனக் கேளுங்கள்.
5 மேடையில் உங்கள் நூலுக்கு சம்பந்தமில்லாத கருத்துக்களைக் கூறி அவர் தன்னை நிலை நாட்டுகிறாரா எனக் கவனியுங்கள். அப்படியென்றால் அந்த மேடையிலேயே அது குறித்த உங்களது விமர்சனங்களை வையுங்கள்.

உங்களை இலக்கியத்தரகர் அழைக்கிறாரா, அல்லது உண்மையிலேயே விமர்சகர்கள் உங்களை அழைக்கிறார்களா என சோதித்தறிய வேண்டிய நீங்கள் அதற்கு தகுதியுடையதாய் உங்கள் படைப்புகளை எழுதுங்கள். படைப்பை எழுதியதும் தான் எழுதியது என்ற படைப்பாள அகந்தை உங்களை அணுகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தமிழ் படைப்பிலக்கியத்தில் எடிட்டிங் என்ற ஒன்று இருக்கிறது எனத் தெரியாத ஒரு கூட்டம் இருக்கிறது. நீ எழுதினாலே இலக்கியம்தான் நடந்தால் கவிதைதான் எனச் சொல்லி அழைத்தால் ஏற்காதீர்கள். உங்களுக்கு முக்கியமாகப் படும் படைப்பாளி, அல்லது விமர்சகர்களிடம் கொடுங்கள். அதற்கு முன் அவர் ஏன் உங்களுக்கு முக்கியமாகப் படுகிறார், அவர் படைப்புகளின் கச்சிதத்தன்மை இருக்கிறதா, இருக்கிறது என்றால் எவ்வகையில் என நீங்களே சோதித்தறியுங்கள்.

இதற்கிடையே சம்பந்தப்பட்டப் படைப்புகளை வாசித்து, ஒரு வாசகன் காரண காரியத்தோடு அதன்மீது கேள்வி எழுப்பினால் அதை வாசக அதிகாரம் என்பார்கள். இதையெல்லாம் ஒரு வாசகன் எழுத்தாளனிடம் கேட்கக் கூடாது என்பார்கள். இவ் எழுத்தாள அதிகாரிகள், தங்கள் படைப்புகளை காரணமின்றி ஒருவர் புகழும்போது மட்டும் அமைதியாய் அமர்ந்திருக்கும் கேவல அதிகாரத்தையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

அடையாள நெருக்கடியில் தவித்து, தன் முகம், தன் பெயர் என அலைந்து திரிபவர்களையும், தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு கூட்டங்களுக்காக அலைந்து தவிக்கும் போராளிகளும், இலக்கியத்தரகர்களும் இருக்கும் ஒரு மேடையில் உங்களது படைப்புப் பேசப் படுகிறது என்றால். இலக்கியத்தரகர்களை விட்டுவிட்டு அப்படைப்பையே சந்தேகிக்க வேண்டியது என் போன்ற வாசகர்களின் கடமை.

இலக்கியத்தரகர் என்ற ஒரு வகைமையைப் படைத்து ஒரு சேர இரு தலைமுறைகளை காவு வாங்கிய மூத்த ஆளுமைகளை நினைத்துப் பார்க்கிறேன். மிக மகிழ்ச்சியாக நிறைவாக இருக்கிறது. தமிழ் வாழ்க.

பின்குறிப்பு ;
எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ், ரமேஷ் - பிரேம், ராஜ் கௌதமன், தமிழவன் -  இவர்களுடைய பின்நவீன நிலை நோக்குக்காக இவர்களை நான் விமர்சிக்க நேர்ந்தாலும், இவர்களது பாசிச எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு குறித்த பதிவுகளையும், புத்தகங்களையும், களப்பணிகளையும்  நான் எக்காலத்தும் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களை மதிக்கவே செய்கிறேன்.

இறுதியாக;
இலக்கியவாதிகளுக்கு அமைப்பு வேண்டும், அமைப்பு ஒன்றிருந்தால் அதற்கு நோக்கமும், காரணமும் வேண்டும் என்று வரையறுத்து செல்லும் இடதுசாரி இலக்கிய அமைப்புகள் ஒருபுறம் இருக்கிறது. அவ்மைப்பில் இயங்குபவர்கள் பொதுத்தளத்தில் படைப்புத் தளத்தில் எவ்வாறு இயங்குகிறார்கள் என்று காண்பதுடன், அமைப்பே வன்முறை எனச் சொல்லி நபரே குரு எனச் சொல்லும் சாருநிவேதிதா, ஜெயமோகன் கோணங்கி வகையறாக்கள் பொது வெளியில் இலக்கியத்தில் எப்படி இயங்குகிறார்கள் என்பதையும் ஒப்பிட்டுக்கொள்ளுங்கள். இருபக்கமும் வெளிவந்த படைப்புகளை முன்வைத்தும் உரையாடுங்கள்.

முடிவாக:
மேற்கத்திய ஆங்கிலப் படங்களைப் பார்த்து கதை, சிறுகதை, நாவல், கவிதை என அப்படியே ஒட்டுவேலையும், திரும்ப எழுதுவதுமாய் ஒரு திருட்டு எழுத்துத் தொழில் நடந்து வருகிறது.   அதிலும் முக்கியமாக பாலியல் வறட்சி குறிந்த சிந்தனையை அப்படியே தங்களின் எழுத்தாக முன் வைக்கும் ஒரு திருட்டுக் கும்பலும் இலக்கிய உலகில் வெறிபிடித்து அலைந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த கிட்டத்தட்டபத்து பதினைந்து “படைப்புகளை” இவ்வாறு எடுத்துச் சொல்ல முடியும்.

காலம் காலமாக அறிவையும், கற்பனையையும் திருடி, இலக்கிய பிழைப்பு செய்யும் கூட்டம் இருந்துதான் வருகிறது. திருட்டு படைப்புகள், கருத்துக்களின் ரகசியங்கள் வெளியாகி அவமானப்படுவதும் நடந்திருக்கிறது. எக்காலத்திலும் தீவிரமான வாசகர்கள் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து இலக்கியத்திருடர்கள் ஒரு நாளும் தப்ப முடியாது. படைப்பாளியை தனது நியாயக்கயிற்றில் தூக்கிலிட எதிர்கால வாசகன் புன்னகையோடு காத்திருக்கிறான். 

எச்சரிக்கை!


கொம்பு
இதழ் 4- செப்டம்பர் 2015- ல்
    வெளியானது.
படம்; fot. Stasys Eidrigevicius "15 palców"

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள்  (hit-or-miss reformer...