Thursday, December 29, 2011

.......... ஜெய மோகன் நீங்கள் மிகவும் நல்லவர்.
எதிர்க்கட்சிகளின் ஒரு மித்த வேண்டுகோளைப் புறக்கணித்து விட்டு சாவர்க்கரின் படத்தைப் பாராளுமன்றத்தில் திறந்து வைத்துள்ளார் குடியரசுத் தலைவர், மரியாதைக்குரிய அணு விஞ்ஞானி அப்துல்கலாம் அவர்கள். காந்தியைக் கொன்ற சதிக்கு தலைமை தாங்கிய இந்துத்துவத்தின் தந்தை சாவர்க்கருக்கு காந்திக்கு அருகில் பாராளுமன்ற மரியாதை இந்த வெட்கங் கெட்ட செயலுக்கு குடியரசுத் தலைவர் உடந்தை.*


1937- ல் இந்து மகா சபையின் அகமதாபாத் மாநாட்டிற்குத் தலைமை ஏற்று சாவர்க்கர் - பேசியபோது, “ நமது இந்திய தேசத்திற்கு முகமதியர்கள் மிகப்பெரிய ஆபத்தாக விளங்குவார்கள் என்று இந்துக்களை நான் எச்சரிக்கிறேன். இந்தியா ஒரு படித்தான ஒற்றைத் தேசமல்ல. இந்துக்கள் எனவும் முஸ்லீம்கள் எனவும் இரு இரு தேசங்கள் அதற்குள் உள்ளன” சாவர்க்கர்.*

டாக்டர் மூஞ்சே, சீரி சாவர்க்கர் போன்ற இந்துக்கள் வாளின் பலத்தையும் வன்முறைக் கோட்பாட்டையும் நம்புபவர்களாக இருக்கலாம். இந்து ஆதிக்கத்தின் கீழ் முஸல்மான்களை கீழ்ப்படுத்தி வைப்பதற்கு அவர்கள் எண்ணிடலாம். நான் அவர்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறேன்   காந்தி.*

ஜெயமோகன்....காந்தியைப் பற்றி உங்கள் கோமணம் உருக எழுதியது போதாதென்று இப்பொழுது  பசு நெய்யை நாக்கில் வழித்து சத்தியம் வேறு செய்துள்ளீர்கள். அ.மார்க்ஸ்,
அ. முத்துக்கிருஷ்ணன் இருவரும் பணம் பெற்று வேலை செய்கிறார்களென்று. அய்யா தாங்கள் யாரிடம் பணம் பெற்று எழுதுகிறீர்கள் நான் சொல்லப் போவதில்லை. திரைக்கு வசனம் எழுத நீங்கள் வருவதற்கு முன் தங்களை அறிந்தவன் நான். இப்பொழுது நாலு காசு சேர்ந்ததும் அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கிறீர்கள். சாரு எழுதிய வரிகளிலேயே நான் மிகவும் மதித்த வரிகள் அவர் உங்களை சரியாகக் கணித்தது மட்டுமே. உளறுவதற்கு ஒரு மடத்தை வட்டமெனத் தொடங்கினீர்கள். ஏன் கைக்காசு குறைகிறதா விழா எடுக்க. வேட்டி சட்டையுடன் உங்கள் விருதுகளை வாங்கும் ஒவ்வொரு எழுத்தாளனின் மீதும் எனக்கு ஒரு வாசகனாக மரியாதை குறைகிறது. போகிற போக்கைப் பார்த்தால். அ.மார்க்ஸிற்கும் விருது வழங்குவீர்கள். அந்த நாள் தொலைவில் இல்லை. பிறர் உங்களை ஏதேனும் ஒரு வரிகள் எழுதினாலே என்னை வசை பாடினார்கள் என்று பல பக்கங்களுக்கு முழக்கமிடுபவர் நீங்கள். ஆனால் நீங்கள் பிறர் குறித்து வைக்கும் ஆபாசங்கள் கேட்கச் சகியாதவை. நீங்கள் இதுவரை  உங்களைத் தவிர வேறு யாரையும் விட்டு வைத்ததில்லை. உங்களின் பெற்றோரின் மரணம் இன்னும் அவநம்பிகையின் பால் உங்களைத் தள்ளிக்கொண்டிருக்கிறது என்பதை உங்கள் எழுத்தின் ஒவ்வொரு வரியிலும் நான் உணர்கிறேன். நீங்கள் கருணை பற்றி அறம் பற்றிப் பேசும்போதெல்லாம் அது ஏன் எனக்குக் கிட்டவில்லை  என்ற சுய எரிச்சலையே முன் வைக்கிறீர்கள். இது குறித்து நான் விரிவாக எழுதியிருக்கிறேன். அவநம்பிக்கை மட்டுமே நீங்கள் கூறும் அறச்சக்கரத்தின் மையம். அதை நீங்கள் இந்துவத்துவத்தின் தேர்களுக்குப் பொருத்தவே நீங்கள் இன்னும் முயல்கிறீர்கள். உண்மையைச் சொன்னால் அங்கு உங்களை விட பழம் தின்று கொட்டை போட்ட எண்ணற்ற ஞானிகள்...நீங்கள் சொல்லும் அறக்குவியங்களான சடாதாரிகள் நிரம்ப உள்ளனர்.


இவ்வளவு கேவலமாக மனிதர்களை எப்படி உங்களால் எடை போட முடிகிறது. காரணம் உங்களின் அவ நம்பிக்கை.  பணம் பெற்று வேலை செய்கிறார்கள் என்று முதலில். அ.மார்க்ஸ்சை மட்டும் சாடி வந்தீர்கள். இப்பொழுது முத்துக் கிருஷ்ணனையும் சேர்த்திருக்கிறீர்கள். இரண்டு பேரும் சேர்ந்து வேலை செய்த குஜராத் கலவரக் குறிப்புகள் எனக்கு நினைவுக்கு வந்து போகிறது. அவர்கள் காசு வாங்கினால் மகிழ்ச்சிதான். அதே போல் கம்யூனிஸ்டுகள் உண்டியல் குலுக்கினால் அதையும் அந்நிய சதி என்பீர்கள். காசு எங்கு வாங்கினார்கள் என்று கேட்க, அல்லது நிரூபிக்கவாவது உங்கள் வாசக படை வட்டங்களை பயன்படுத்துங்கள். அவர்களும் எவ்வளவு காலந்தான் துதிகளையும் பஜனைகளையும் பாடுவது. 

பத்தாயிரம் பக்கங்கள் எழுதினாலும் டால்ஸ்டாய்...தஸ்யாயேவ்ஸ்கி...அறம்...தரிசனம் என நீங்கள் முக்கினாலும் உங்களை அறியமால் உங்கள் வாயில் வருவது நொண்டிநாய் என்றுதானே அய்யா...உங்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்கமுடியும். காந்தியம் பற்றி அவரின் தரிசனங்கள் பற்றி நீங்கள் எழுதிய வரலாற்றுக் குப்பைகளை..அதோடு உங்களது கற்பனையின் சீழை என்னவென்பது. கலாமுக்கு காந்தியைத் தெரியும் சாவர்க்கரைத் தெரியாது. ஆனால் கலாமை விட அவர் கையிலேந்தி வாசிக்கும் பகவத் கீதையைப் பற்றி சாவர்க்கருக்கும் உங்களுக்கும் நிறையத் தெரியும். ஒரு முறை பகவத் கீதையின் நிழலில்தான் எழுத வந்ததாகக் கூறீனீர்கள். நல்லது அய்யா.

அ.மார்க்ஸ், அ.முத்து கிருஷ்ணன் இவர்கள் வாங்கிய காசோடு, காந்தி அவர்கள் எவரிடம் காசு வாங்கினார் என்பதையும், சாவர்க்கர் யாரிடம் காசு வாங்கினார் என்பதையும் வரலாற்றைத் திரந்து இந்துத்துவ அற அரிப்பில்லாது ஒரு முறை  எழுதுங்கள்.


அப்துல்கலாமை ஞானி என்று அழைப்பது இஸ்லாம் பற்றி பேசத்தானா....அறிய முடிகிறது ஜெயமோகன். இந்து மத யாத்திரையில் அத்வானி வந்த ரதத்தை ஓட்டியவன் ஒரு முஸ்லீம். இதையும் அறிந்து கொள்ளுங்கள். அந்த பெயர் தெரியாதவனுக்கும்... கலாமுக்கும் வேறு வித்தியாசங்கள் இல்லை. உங்களுக்கும்.  நாளுக்கு நாள் வெறி கூடும் உங்களது இஸ்லாமிய வெறுப்பை அறியமுடிகிறது.
* மேற்கண்ட குறிப்புகள் அ.மார்க்ஸ் எழுதியவையே வருடம் ஏப். 2003
அப்போதிருந்தே அ.மார்க்ஸ் காசு வாங்கியிருந்தால்...இந்நேரம்........

Thursday, September 15, 2011

அம்பேத்கரியர்கள்: நெருக்கடியும் சவால்களும். - ஆனந்த் டெல்டும்டே
இந்திய அளவில், தலித் இயக்கம் பற்றின ஒரு சுயவிமர்சன நூல். வாசிக்கும்போது தமிழ்ச் சூழலில் இயங்கி வரும் தலித் இயக்கங்களின் மேல் சில கேள்விகளை முன்வைக்கிறது.அம்பேத்கரியர்கள் யார்?

அம்பேத்கரியர்,அம்பேத்கரியம் என்பன தலித் வெகு மக்களின் பொதுவான சொல்லாடலின் பகுதிகளாகியுள்ளன. வெகு மக்களிடையே புழக்கத்தில் உள்ள பதங்களைப் போல இவற்றுக்கும் துல்லியமான அர்த்தங்கள் இல்லை. கல்லூரிப் பேராசிரியர்களா வும், ஆராய்ச்சியாளர்களாகவும்(acadamics) இருக்கிறவர்கள் கூட துல்லியமான அர்த்தத்தில் இவற்றைப் பயன்படுத்தவில்லை. இப்பதங்களுக்கான அர்த்தத்தை வரையறுக்கச் சிலர் செய்த முயற்சியின் வெற்றி கேள்விக்குரியது. அவர்களது முயற்சியின் விளைவுகளுக்களுக்கும் அப்பதங்களை வெகுமக்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்களோ அதற்கும் தொடர்புப் பொருத்தம் ஏதுமில்லை. இந்தப் பதங்களை பயன்படுத்துபவர்களைக் கேள்வி கேட்டால் அவர்களிடமிருந்து வழக்கமாக வரும் உடனடிப் பதில் இதுதான்; காந்தியவாதி, லோகியவாதி என்பன போன்ற பதங்களுக்கும் வரையறுக்கப்பட்ட அர்த்தங்கள் இல்லை. அப்படியிருக்க அம்பேத்கரியர் என்பதற்கும் வரையறை என்ன என்று ஏன் வலியுறுத்த வேண்டும் ? தீங்கற்றவையாக ஒலிக்கும் இத்தகைய வாதங்கள் அம்பேத்கரிய தலித்துக்களின் நடைமுறைகள் குறித்த ஏராளமான தகவல்களை உள்ளடக்கியுள்ளன. இந்து மதம், இந்துப் பண்பாடு ஆகியன மேலாண்மை செலுத்தும் சமுதாயத்தில் நிலவுகின்ற அனைத்தையும் சந்தேகிக்க வேண்டிய தலித்துகள், அச்சமுதாயத்திலுள்ள ஒவ்வொன்றையும் முன்மாதிரியாகக் கொள்வது- நாங்கள் அதனை வித்தியாசமாகப் பயன்படுத்துகிறோம் என்று உரிமை பாராட்டிக்கொண்ட போதிலும் - விந்தையானது. பாலி மொழியில் உள்ள நீண்ட கதைப் பாடல்களை ஏன் பாடுகிறீர்கள் ? அர்த்தமில்லாத மதச் சடங்குளை ஏன் கடைப்பிடிக்கிறீர்கள்? பழைய சம்பிரதாயங்களை ஏன் இன்னும் வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டால், சட்டென்று அவர்கள் பதில் சொல்கிறார்கள்; 'இந்துக்களும்தான் அவற்றைச் செய்கிறார்கள்'. உண்மையில், அவர்களது நடத்தையைக் விமர்சனக்கண்ணோடு பார்த்தோமேயானால், அவர்களது பண்பாட்டு வாழ்க்கை முழுவதுமே என்ன செய்கிறார்களோ அதே பாணியில்தான் இருக்கின்றது. அவர்கள் உணர்வுப்பூர்வமாக இந்துக்களை விமர்சனம் செய்தாலும், உணர்வுபூர்வமற்ற வகையில் அவர்கள் ஒவ்வொரு விடயத்திலும் இந்துக்களையே பின்பற்றுகிறார்கள். தற்போதைய போலி அறிவுஜீவிப் போக்குகளான தலித் முதலாளியம், தலித் பூர்ஷ்வா வர்க்கம் முதலியவையும் கூட, தலித்துக்களையும், தலித் அல்லாதவர்களையும் உள்ளடக்கிய சமுதாயத்திலுள்ள முன்மாதிரிகளை நகல் செய்வதேயன்றி வேறு அல்ல. - பக் 6,7

இதோடு

அம்பேத்கரியர்கள் எதிர் கொள்ளும் நெருக்கடிகளாக

அடையாள நெருக்கடி
கருத்து நிலை நெருக்கடி
தலைமை நெருக்கடி
அரசியல் நெருக்கடி
அறவொழுக்க நெருக்கடி
அமைப்பு நெருக்கடி
வாழ்க்கை நெருக்கடி

என அவற்றை விளக்குவதோடு மேற்கண்ட நெருக்கடிகளுக்கான காரணத்தையும் சொல்கிறார்.

உதாரணமாக தலைமை நெருக்கடியில்

ஒவ்வொரு சமூகக் குழுவும் ஏராளமான பிரிவுகளாக பிளவுபட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனித் தலைமை உள்ளது. அம்பேத்கரியத் தலித்துக்களின் தலைமை என்பது அவப்பேறாக நிலப்பிரபுத்துவப் பண்பாட்டில் காணப்படும் முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதாவது, முதலில் ஒரு தலைவரை உருவாக்குவது,பின்னர் அவரைச் சுற்றி ஒரு குழு திரண்டு அந்தத் தலைவரை வலுப்படுத்துவது. மக்கள் குறிப்பிட்ட பிரச்சினைகளுக்காக கிளர்ச்சி செய்து ,ஒன்றாகத் திரண்டு ஒரு தலைமையை உருவாக்குவதன் மூலம் அம்பேத்கரிய தலித் இயக்கம் ஒரு உயிரோட்டமுள்ள வளர்ச்சியைப் பெறுவதில்லை. தலித்துகள் தலைமைகளை உருவாக்கும் முறை தலைவருக்கும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் ஓர் இடைவெளியை உருவாக்கி, தலைவருக்குப் பொருளாதார வசதிகளைத் தேவையாக்குகிறது. அந்த வசதி தலித்துக்களிடமிருந்து கிடைப்பது சுலபமல்ல. எனவே பல தலித் தலைவர்கள் தலித் அல்லாத செல்வந்தர்களின் ஆதரவை நாடுகின்றனர். எனவே இத்தகைய தலைவர்கள் தங்களுக்கு கொடையளிப்பவர்களுக்குக் கடமைப்பட்டவர்களாகவும் அவர்கள் சொல்வதின்படி நடக்க வேண்டியவர்களாகவும் உள்ளனர். நாம் இவ்வாறு சொல்வதனால் எல்லாத் தலைவர்களுமே இவ்வாறுதான் வளர்ச்சி பெற்றுள்ளனர் என்று பொருள் கொள்ளக் கூடாது: அவர்கள் எல்லோருமே தங்கள் அரசியல் வாழ்வை இப்படித் தலித் அல்லாதவர்களிடமிருந்து உதவி பெற்றுத்தான் தொடங்கவில்லை. ஆனால் அவர்களது வளர்ச்சியின் ஒரு கட்டத்தில், தலித் அல்லாதவர்களிடமிருந்து உதவி பெறுவது வேண்டாமா என்னும் தடுமாற்றத்திற்கு ஆளாகி, தங்களை நிலை நிறுத்திக்கொள்ளுவதற்காக தவிர்க்கமுடியாதபடி தலித் அல்லாதவர்களின் உதவியைப் பெறும் ஆசைக்குப் பலியாகி, எந்தக் குறிக்கோளுடன் தொடங்கினார்களோ அதிலிருந்து திசை விலகிச் சென்றுவிடுகிறார்கள். இது தலித் தலைவர்களிடம் சுயநலப் போக்கைத் தூண்டிவிட்டு,  சீரழிவு என்னும் நச்சுச் சூழலை ஏற்படுத்தி விடுகிறது. தற்போது தலித்துகள் சிக்கித் தவிக்கும் புதை சேற்றிலிருந்து அவர்களை மீட்பதற்கு மிகப் பெருந்தடையாக இருப்பவர்கள் இந்த சுயநலத் தலைவர்கள்தான். - பக்-26,27.

விவாதிக்கப்பட வேண்டிய நூல்.
'அம்பேத்கரியர்கள்: 
நெருக்கடியும்  சவால்களும்

ஆசிரியர்: ஆனந்த் டெல்டும்டே
தமிழில்: எஸ்.வி.ராஜ துரை
விடியல் பதிப்பகம்.

Wednesday, September 14, 2011

சென்னகரம்பட்டி கொலை வழக்கு.
" நீதி நம்பக்கம் இருக்கும்போது, நாம் எப்படித் தோற்போம் என்று எனக்குப் புரியவில்லை. இந்தப் போராட்டம் எனக்கு மிகுந்த உற்சாகம் ஊட்டுவதாக இருக்கிறது. இந்தப் போராட்டம் முழுமையாக உணர்வு பூர்வமானது. அதில் துளி அளவும் சுயநலம் இல்லை. ஏனெனில், நமது போராட்டம் சொத்துக்கானதோ, அதிகாரத்திற்கானதோ அன்று.நமது போராட்டம் விடுதலைக்கானது. இந்த சமூக அமைப்பினால் ஒடுக்கவும் சிதைக்கவும் பட்ட மனித மாண்பை மீட்டெடுப்பதற்கான போராட்டமே நம்முடையது. உங்களுக்கான எனது இறுதி அறிவுரை இதுவே; கற்பி,போராடு ஒன்றுசேர்"

அம்பேத்கர்.

சென்னகரம்பட்டி கொலை வழக்கினை அரசும் காவல்துறையும் நேர்மையான முறையில் கையாண்டிருக்குமானால் மேலவளவு கொலை நிகழ்ந்திருக்காது. சென்னகரம்பட்டிக்கும் மேலவளவுக்கும் இடையிலான தொலைவு ஒரு கிலோமீட்டர் தூரம்தான். சென்னகரம்பட்டி கொலை இரவு நேரத்தில் ஓடும்பேருந்தை நிறுத்தி நிகழ்த்தப்பட்டது. மேலவளவு கொலையோ, பட்டப்பகலில் ஓடும் பேருந்தை நிறுத்தி நிகழ்த்தப்பட்டது. சென்னகரம்பட்டி கொலை நிழந்த அதே சாலையில் கொலை நிகழ்ந்த இடத்திற்கு நூறு மீட்டர் தொலைவில் மூன்று ஆண்டுகள் இடைவெளியில் மேலவளவு கொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. சென்னகரம்பட்டி கொலையைச் செய்த அதே கள்ளர் இனத்தைச் சார்ந்தவர்களே மேலவளவு கொலையையும் செய்திருக்கிறார்கள். இரண்டு கொலைகளுமே இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் நிகழ்ந்திருக்கிறது. அரசின் மெத்தனப் போக்கையும் காவல்துறை, நீதித்துறை போன்றவற்றின் சாதியமனோபாவத்தை புரிந்து கொண்டும் சென்னகரம்பட்டி கொலையில் உற்சாகம் அடைந்த கள்ளர்கள் சென்னகரம்பட்டி கொலை நடந்த அதே முறையில் ( same plot) மேலவளவு கொலையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.

ஏறத்தாழ தலித் அமைப்புகள் தலித் கொலை நிகழ்வுகளையொட்டி கண்டன ஆர்ப்பாட்டங்களோடு நிறுத்திக்கொள்ளும் நிலையில், குறைந்தபட்ச நீதிக்கான எந்த உத்தரவாதமுமின்றி அரசின் கருணையிலேயே நடந்து நீர்த்துப் போய்விடுகின்றன.

( பக்கம் 5,6 )

அரசு தரப்பு சாட்சி எண் ; 10

பெயர்; டாக்டர்.லதா கணேசன்
/பெ: கணேசன்
கிராமம்: மேஜர்.மதுரை
சாதி: இந்து பிள்ளைமார்.
வயது:50 ஆண்டுகள்
நாள்: 28.3.2008

முதல்விசாரணை : அரசு தரப்பில்


நான் தற்போது மேலூரில் தனியார் மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறேன். 1992ம் ஆண்டு அரசு மருத்துவமனை மேலூரில் உதவி மருத்துவராக பணி புரிந்தேன். 6.7.92ம் தேதி பாண்டி கணேசன் என்பவர் காவலர் 566 என்பவர் கொடுத்த வேண்டுகோளை பெற்று அன்று காலை 10.30 மணிக்கு ஒரு ஆண் அம்மாவாசி என்பவரின் பிரேதத்தை சடலக்கூறாய்வு செய்தேன். மேற்படி மேலூர் காவல் நிலைய சம்பந்தப்பட்டது. மேற்படி பிரேதத்தில் ஒரு கருப்பு மச்சம் வலது மார்பகத்திற்கு கீழ் காணப்பட்டது. மற்றொரு மச்சம் தொப்புளுக்கு கீழ் காணப்பட்டது. மேற்படி இறந்து போன நபருக்கு வயது சுமார் 50 வயதிருக்கும். மேலூர் காவல் நிலைய குற்ற எண்.468/92 வழக்கு சம்பந்தப்பட்ட பிரேதம் மேற்படி ஆரோக்கியமான பிணம், கண்கள் திறந்திருந்தது. நாக்கு வாய்க்குள் இருந்தது.8,8/32 இருந்தது. முகவாய் இருக்கமாக இருந்தது. பிணவிறைப்பு தன்மை கைகால்களில் காணப்பட்டது. அவர் உடலில் கீழ்க்கண்ட வெளிக்காயங்கள் காணப்பட்டது.


1. 18செ.மீx6செ.மீx 6 செ.மீ அளவில் ஒரு வெட்டுக்காயம் கழுத்தின் முன்பகுதியில் காணப்பட்டது. அதில் கழுத்தின் சதைகள் மற்றும் மூச்சுக் குழாய் உணவு குழாய் வெட்டப்பட்டிருந்தது. செர்விகல் வெஷ்டிபுலா தைராய்டு கார்ட்டிலேஜ் - ம் வெளியே தெரிந்தது.

2. இடது கன்னத்தில் 10செ.மீ x 2செ.மீ x 2செ.மீ அளவில் வெட்டுக்காயம் காணப்பட்டது.


3. இடது பக்க பின் தலையில் டெம்பரல் ரிஜின் பகுதியில் ஒரு பெரிய வெட்டுக்காயம் இருந்தது. அது கபாலத்தின் அடிப்பாகம் வரையில் நீண்டிருந்தது. இடது காது வழியாக நீண்டிருந்தது.20x6x6 செ.மீ அளவில் காணப்பட்டது.

4. கழுத்தின் அடிப்பகுதியில் ஒரு வெட்டுக்காயம் 15 x 5 x5செ.மீ அளவில் காணப்பட்டது. அது இடது பக்க தாடை எலும்பு வரை நீண்டிருந்தது.

5. ஒரு வெட்டுக்காயம் 5x2x2 செ.மீ அளவில் பின்பக்கத்த்ஹில் (ஆர்சிபிட்டல்) காணப்பட்டது. அதே இடத்தில் மற்றொரு வெட்டுக்காயம் 3x2x1 செ.மீ அளவில் காணப்பட்டது. வஒரு வெட்டுக்காயம் பிராமன்ஷ் மேல் காணப்பட்டது. மற்றொன்று கீழ் காணப்பட்டது.


6. 5வது காயத்திற்கு கீழ் 6வது காயம் காணப்பட்டது.

7. சிதைந்த காயம் ஒன்று தோள்பட்டையிந் இன்புறம் இடது பக்க தோள்பட்டையில் காணப்பட்டது.3x2x1செ.மீ அளவில் இருந்தது.

8. மற்றொரு வெட்டுக்காயம் 6x4x2செ.மீ அளவில் வலது காதின் கீழ் காணப்பட்டது.

9. தோள்பட்டை மார்ஜினில் எலும்பு எல்லையில் 3x2x1செ.மீ அளவில் ஒரு சிதைந்த காயம் காணப்பட்டது.

10. வலது சுண்டு விரலில் நுனிப்பகுதி காணப்படவில்லை.


பிரேத உட்புற பரிசோதனை செய்தபோது

1. கேரோடிட் ஆர்ட்டிரேட் இரண்டு பக்கத்திலும் காணப்படவில்லை. அதன் கீழ் பகுதி வெட்டப்பட்டு வெளிப்புறமாக தெரிந்தது. செர்விகல் வெஷ்டிபுலா வெளியே தெரிந்தது.

2. தோரா க்க்ஷ் நுரையிரல் வெளிறி காணப்பட்டது. இருதயம் வெளிறி இருந்தது. இருதயத்திந் அறைகள் காலியாக இருந்தது.

3. வயிற்றில் சுமார் 200. மி.லி அளவில் சரியாக ஜீரணம் ஆகாத உணவு காணப்பட்டது. பகுதியாக ஜீரணித்த உணவு.

4. சிறுகுடல் காற்றில் உப்பி காணப்பட்டது. சிறு நீர் பையில் நீர் இல்லை. காலியாக இருந்தது.

5. லேரின்க்ஷ், கிலாட்டிஷ், ஒரு பகுதி காணப்படவில்லை.

6 தைராய்டு கார்ட்லிக்ஷ் இருந்தது. ஹைராய்டு எலும்பு காணவில்லை. கணையம் கல்லீரல் வெளிறி காணப்பட்டது.

7. இடது பக்க முன் மண்டை எலும்பு உடைந்து இருந்தது.டெம்பரல் எலும்பு. முன்பக்க மண்டை எலும்பு இடதுபக்கம் உடைந்து இருந்தது.மூளையில் எவ்வித காயமும் இல்லை.அது வெளிறி காணப்பட்டது.

மேற்படி நபர் அவருக்கு ஏற்பட்ட உயிர் காக்கும் உறுப்புக்களில் ஏற்பட்ட காயத்தினாலும், அதனல் ஏற்பட்ட ரத்தப்போக்கு மற்றும் அதிர்ச்சியினால் பிரேத பரிசோதனைக்கு முன் 10லிருந்து 11மணி நேரத்திற்கு முன்பாக இறந்திருக்கக் கூடும் என கருத்து தெரிவித்து பிரேத பரிசோதனை சான்று அ.சா..10 வழங்கினேன்.

( பக்கம் 117, 118)

நூல்: சென்னகரம்பட்டி கொலை வழ க்கு.
தொகுப்பு: பொ.இரத்தினம்( வழக்குரைஞர்)
விடியல் பதிப்பகம்
புத்தக வெளியீட்டகம்.
சாதி, தன் கருத்துக்களால் காவு வாங்கிய ஒரு உயிரின் பிரேதப் பரிசோதனை அறிக்கைதான் மேற்கண்டது. தலித்துக்கள் ஆதிக்க சாதியிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்வதோடு மட்டுமல்லாது அரசிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கும் என்ற நிலையில்தான் சாதியம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதை அரசே ஊதிப் பற்ற வைக்கும்போது, மேற்கண்ட பிரேதப் பரிசோதனை அறிக்கைகள்தான் இனி ஆளும் அரசின் சட்டப் புத்தகங்களாய் இருக்க முடியும்.


பரமக்குடி.........?Friday, August 26, 2011

மரண தண்டனை.
மனிதன் கண்டுபிடித்த கொலை ஆயுதங்களிலேயே மிகக் கொடூரமானதும் அற்பத்தனமானதும் அறுவெறுக்கத்தக்கதும் நீதியே. அதுவே சகமனிதனை அநீதி என்ற பதத்தால் சுட்ட விரும்புகிறது.  சக மனிதன் சக மனிதனுக்கு ஊறு விளைவிக்கும் போது, அவன் தனது மனநிலை, காலம்,பின் விளைவுகள் எதையும் தன் கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. அதுவே கொலையாக முடிகிறது. ஆனால் அரசு தனது அறப்புத்தகங்களிலிருந்து நீதிகளை வாரியிறைத்து முடிவு செய்கிறது மரண தண்டனை. மரணம் எப்பொழுதும் தண்டணை கிடையாது. அது வாழ்தலைப் போல ஒரு பேறு. ஆனால் அதை அரசே தனது செங்கோலினால் விநியோகிக்கும் போது, சட்டப்புத்தகங்களின் எண்கள் வழியாக ஒரு மனிதனின் கையில் திணிக்கும்போது,  தண்டனை என்கிற ஒரு சொல்லின் உச்சத்தை தொடுகிறது. அரசு தனது அதிகாரத்தின் மூலம் வழங்குவதால் அது ஒரு மனிதனுக்கு தண்டனைதான்.

பிறந்தவர்கள் சாகத்தான் வேண்டும் என்பதை விதியாகவோ, ஊழாகவோ, அல்லது அறிவியலாகவோ, கூட ஏற்றுக்கொள்ளட்டும். ஆனால் இதை ஒரு அரசு தன் சொற்களின் வழியாக, இது  நீதி,  இது அநீதி என்று பிரித்து வைத்து பேதம் பாராட்டுவதென்பது, மன்னிப்பு என்கிற ஒரு சொல்லை மதிப்பிழக்கச்செய்கிறது. மனிதன் கடவுளைக் கண்டுபிடித்ததன் மூலம் தனது ஆகப்பெரிய இருப்பை உறுதி செய்து கொண்டான்.

எல்லா தேசங்களிலும் கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் நிகழ்கின்றன. சம்பந்தப்பட்ட அமைப்புகள் அப்படுகொலைகளை தூய்மையாக்கல் என்று தான் அழைக்கின்றன. உண்மையில் ஒரு உயிர் என்பது இப்புவியில் நிகழும் எல்லாக் கருத்துகளையும் விட வலிமையான ஒன்று. முதலில் அவன் மனிதன். ஆனால் அரசு அவனை குடிமகன் என்கிரது சட்டங்கள் விதிகள் கோட்பாடுகள் இனம் மற்றும் மொழி என்ற பேதங்களை ஒரு தாய் குழந்தைக்கு சோற்றை ஊட்டுவது போல் அரசு தன் மக்களுக்கு நீதியை ஊட்டுகிறது. சில சமயம் குமட்டும் அளவுக்கு. அரசு மிகச்சரியாக பேதங்களைக் கற்பிக்கிறது. வர்க்கப்பகைமகைகள் இணக்கம் கானமுடியாதன் விளைவே அரசு என லெனின் சொல்வதை இக்கணத்தில் நினைத்துப் பார்க்கலாம்.

மனிதன் தான் கண்டுபிடித்த அனைத்திற்கும் தானே பொருப்பேற்றுக்கொள்ள வேண்டும். சுதந்திரத்தின் பெயரால் ஒரு மனிதன் உயிரை விடும்போது. அந்தத் தேவையை ஏற்படுத்திய இன்னொரு இனமும் செய்வது தற்கொலைதான். நான் நினைக்கிறேன்...இதுவரை நான் அறிந்திராத மனிதரின் கழுத்து இறுக்கப்படும்போது அவன் தான் மனிதனாய் பிறந்ததற்கு அவமானமுற்றிருக்கலாம். மூவரின்  உயிரை சட்டப்புத்தக எண்களோ அல்லது பிரிவுகளோ சிறிதும் புரிந்துகொள்ள முடியாது. அதை ஆழ்ந்து கற்ற மனிதன், தனது மூளையில் தான் கடவுளாகும் தருணத்திற்க்காகவே காத்திருக்கிறான். மரணத்தை தண்டனையாக்குவதன் மூலம் அவன் கடவுளாகிறான். கடவுள் தண்டனையளிக்கிறார்.

மனிதன் மகாத்மாவாகக் கூட இருந்தாலும் தனது வர்க்கச் சார்பு அல்லது இனச்சார்பு என்று வரும்போது தூக்கிலிடுவதை ஒரு வெறும் செயலாகவே மட்டும் பார்க்க முடிகிறது என்பதை காந்தியின் வழியாகவே இந்த காந்தியின் நாடு புரிந்துகொள்ள வேண்டும். 

போராடும் அமைப்புகளும் சில சமயம் பேதங்களின் பிடியில் தவிக்கும் அளவுக்கு, அரசு தனது நஞ்சை, மொழியின் இனத்தில் பெயரால் திணித்திருக்கிறது. அப்சல் என்கிற மனிதன் இப்படித்தான் பிரித்தாளப்பட்டான். இப்போது ஊடகங்கள் முன்வைக்கும் இப்பேதங்களை வரவேற்பது அரசுதான். தனிமனிதன் முன்னால் அரசு தன் கைகளை எப்பொழுதும் விரித்துக் காட்டியதில்லை. ஆனால், அது எதிர்பார்க்க முடியாத அளவுக்கு, ஆளும் கருத்தியலைக் கொண்ட ஆளும் வர்க்கத்தின் பிருஷ்டங்களைத் தேய்த்துக் கழுவுகிறது. இதை நான் துயரம் என்கிற அளவில் வகைப்படுத்த மாட்டேன். உண்மையில் அரசு செய்வது படுகொலை.

அரசானது ஒரு மனிதனுக்கு வழங்கப்படும் உச்சபட்ச தண்டணையே மரணம் என்று கருதுவதானது, சாமனியனும் அதைப் பின்பற்றலாம் என்ற உளவியலைத்தான் ஏற்படுத்துகிறது. தனிமனிதர்கள், இயக்கங்கள் இதையே பின் தொடர்கின்றன. கலைஞர்கள் தங்களது படைப்புகளில் வரும் ஆகச்சிறந்த பாத்திரங்களை மரணத்தின் மூலம்தான் முடிவுக்கு கொண்டுவருகிறார்கள். இப்பொழுது இருப்பது பாத்திரங்களல்ல நான்கு உயிர்கள்.


இந்திய அரசு தன்னை கடவுளின் இடத்தில்தான் வைத்துப் பார்க்கிறது. அங்கு பலிபீடங்கள் மட்டுமே இருக்கிறது. பலிகளுக்குத் தயாராக புதிய கருத்துக்களையும், அதற்கு வரிசையில் நிறுகும் உடல்களுக்கான கருத்தியல்களையும் தேவைகளையும் இந்த அரசே ஏற்படுத்துகிறது. உண்மையில் எரிக்க வேண்டியது  அரசு என்று ஆணையிட்டு வரும் அத்தனை சொற்களையும்தான். அரசு என்ற சொல்லை இக்கணத்தில் நான் இவ்வாறு உணர்கிறேன். அரசு உண்மையில் ஒரு பெரிய பைத்தியக்காரத்தனமான சொல்.

வந்தே மாதரம்.


  கடைசிக் காட்சி – திரை உயர்கிறது
  என் நாட்டு மக்களே !
  உங்கள் எல்லோரையும் நான் நேசித்தேன்
  வணக்கம், உஷாராக இருங்கள்.

  - ஜூலியஸ் பூசிக்.
  தூக்கு மேடைக் குறிப்பு.

- வசுமித்ர

Thursday, July 14, 2011

வாசகப் பதாகினி சூழ் பீதசாலம் கோணங்கி அவர்களுக்கு...….
தார்மீகத்தில் வழியும் உப்புக்கத்தியின் குதிர்வாடைக்குள்ளிருந்து பெருகும் புளித்த சொற்களின் ஏகாந்த சொற்குருகில் விளைந்த ததாக சொப்பனச் சொல்லொன்றுங்களுக்கு.....


மறுவாசிப்பென்னும் புலிக்குகைக்குள் நீண்டு நெடிய தன்மசாதனப் புதிரில் நெளியும் இக்கடிதத்தை தங்களின் மேலான தலைக்கு மேல் கேள்விக்குறி நீளும் தற்கோலமாய் வைத்தெழுதுகிறேனய்யா. அதாகப்பட்டது பிரேளிகை சுவாசத்திலிருந்து பிருத்துவி முளைத்துத் துயிலும் பிரேதகத்தை தாங்கள் மைபூசிய செவ்விழிநீரறியும் ஊரறியும் உற்றாரும் தானறியும் சேவற்கொண்டைப் பித்தில் குடிபுகுந்தலையும் பிலுக்கு. முனைஞர் கூடியிழுத்த தீச்சுடர் வெறியேறிய காந்த சொரூப நித்திலப் பைங்கிளியின் உன்மத்த ரேகைதனை இழுத்திழுத்து உறையும் பனிக்காட்டின் மலிர்நிறை. என் கவனங்கொள் குடிபுகுந்த கொல்விழிகள் கண்டது தாத்பரியத்தின் தூரிகை சமைத்த எழுத்துருக்களை.


அச்சிட்ட மை காயும் நம்பலோடு உறைந்த நதியை இழக்கும் செவ்வரளிப் பூச்சூடிய நங்கை கிளர்ந்து மூலாதாரப் பொதிகலைத்து நேர்கோட்டில் சுருண்டிருக்கும் சதை கிழியும் உருப்பெருக்கி சுவாதிஷ்டானமுணரும் காட்டுக்குருவியின் இறக்கை மடிப்பில் துயிலும் பெருங்கிழவன் நணுகராகி உறை மறுத்து மணிப்பூரகமறுத்து அந்தர வாடையில் சொக்கிய குமரியின் அநாகதம் தூண்டி தலைகீழ்க் குத்தென விரைந்தொழுகும் விசுக்தியாய் நிலைகொண்டு ஆக்ஞை பிரதிபலிக்கும் கிழவனொருவன் பெருமூச்சு கோடரியைத் தலைகீழ்ப் பாய்ச்சலால் விரைந்து மூச்சடைத்து முயக்கம்பெற்று பித்தேறி செஞ்சடை சிதற உடுக்கையில் ஒலிக்கும் சஹஸ்ரஹாரம். அதாகப்பட்ட எழுத்துருவை வெட்டிக் கட்டி மறுமையிட அஞ்சி சொம்பல் துலக்கம் பெற குளிரூட்டப்பட்ட அறைக்குள்ளிருந்து வெள்விழி குறுக்கி பீளை வடியும் தூக்கத்தை மென்று கடைவாய் இறுக்கி கொட்டாய்தனில் கொட்டாவி விட்டுறையும் நாட்கூறில் நாங்கூழ் பாய்ச்சி நாகக்கோளிரண்டில் இருசுடைவளைந்து சூழும் பரிவேடம் திளைத்த வான்மீன் கிளர்ந்தொழியும் பெருந்தூமகேது பாயும் நட்டவிசியில் மையழித்து தெருபைரவன் குரல்வளையிருக காகிதத்தை கிழிக்காது கணிணிப்பெருமூச்சேக்கத்துக்குத் தின்னக்கொடுத்த கட்டுரையிது. கதையிது.


வாசகன் தாமதச் சொல்லில் குடிபெயர்வான்.நெஞ்சில் இறங்கும் கூரான கத்தியிறக்கும் பணித் தட்டான்போல் ஒரு வார்த்தை. பதினாறு ஆட்டைக் குமரனும், சீர்பன்னீர் ஆட்டைக் குமரியுமாகி ஒத்த மரபினும் ஒத்த அன்பினும் கற்பக நல்மர நல்பயனாகிய இருட்டில் கண்டான் வாசகன் எழுத்தாளன் ஏடறிவித்தவன் ஏமாற்றுக்கார இலக்கியம் செய் வித்தையை.
இதுவும் அது:


பதுமகோமளை கண் விழித்தாள் பற்றியெறிந்தது காணீர் போர்ச்சூடமுரசின் பத்திருபதுபாகங்களெனச் சிறு தோல். கருங்கையெனும் சதைக்குமிழுடைய தாங்களது சோம்பல்த் திறவால் வந்தவினையிதுவெனக்குமுறியிருகப்பற்றியிழுத்தயிழுப்பிலொழுகாத்தவக்கோலச்சுதி.


கல்குதிரைஇரண்டாயிரத்திரண்டிலொழிந்த வேனிற்காலங்களிழதழில் தாங்கள் மையிட்ட அச்சில்தலைப்பிட்டு வந்ததொரு தலையங்கம் தலையங்கமான சிறுகதையான காப்பிய வரிகொள்ளாத கானுறை வேங்கைச்சிறுபுலி வரிகள். பெண் - இசை - பித்தமொழி என்ற தலைப்பு இரண்டாயிரத்தி ஏழில் மைகாத்து அதே கதை தலையங்கத்தை சிறுகதையல்லாத வடிவென வரிகள் மாற்றி கதை தன் சொல்லியை விரும்பமாட்டாள் என மாற்றி அச்சிட்டு வாசகத் தலையில் பத்திருபது மிளகாய் பச்சையாய் அரைத்தூற்றி வாசகவிழி சிவந்த கதை இதுவை விளங்குங்கள் பெரியோய்.


சிறுகுறிப்பு:


கல்குதிரை 2002
வேனிற்காலங்களின் இதழ்
பிரிவுத் தலைப்பு : பித்த கலாந்தம்
தலைப்பு : பெண் – இசை – பித்தமொழி


இப்பிரிவின் கீழ் வந்த அவரது எழுத்தைத் தலையங்கம் எனலாம்.


அதே அது


இருள்வமௌத்திகம் ( சிறுகதைகளும் குறுநாவலும்)
என்று பிரசுரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அதே தலையங்கம் “ கதை தன் சொல்லியை விரும்பமாட்டாள் ” என்ற தலைப்போட்டு சிறு வாக்கியங்களை எழுத்துக்களை மாற்றி வெளிவந்திருக்கிறது. இதை எப்படி வகைப்படுத்துவது எனத் தெரியவில்லை. இதுதான் மாந்த்ரீக எழுத்தா. வாசக பாவம் சும்மா விடாது.

Thursday, March 31, 2011

உணர்ச்சி வசப்படாதீர்கள் பாஸ்.......
“சிறுபிள்ளைத்தனமான புரிதல்அதீதவாசிப்புபடைப்பூக்கம்
தத்துவ ஞானம் திருகல்நடை, கறாரான அறிவுஜீவி, அகங்காரம், அகந்தை, விவாதம் தரும் அற்ப சுகத்துக்காக ஏங்குபவன்அறிவாளி,  உலகரட்சகன்,சுயமோகி, கிளர்ச்சியாளன்அ.மார்க்ஸ் வக்கீல்." பாஸ்...  இது என்னைப்பற்றிய உங்களது வரைபடம். 
( பட்டையக் கிளப்புறீங்க பாஸ்)”

வெகுளி, நெகிழ்ச்சியான உணர்வுகளைக் கொண்டவன், சம அன்பு செலுத்துபவன். இது நீங்கள் வரைந்த உங்களது குணச்சித்திரம்.

நல்லது பாஸ்....
இது சம்பந்தமாய் நான் எழுதும் கடிதத்திற்கு நீங்கள் பதிலளிக்கமாட்டீர்கள் என்ற உங்களது நம்பிக்கையை நானும் மதிக்கிறேன். சுய அகங்காரம், சுயமோகம் இவைகளை  நான் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். நல்லது. அதில் அவை தெரிவதாக சம்பந்தப்பட்ட நபர்கள் சொன்னால் விவாதிக்கலாம். அந்த சமபந்தப்பட்ட, உங்களுக்கும் எனக்குமான நண்பரை நீங்கள் இதற்கு பதில் எழுதாததன் மூலம் தவிர்க்கலாம்.

பாஸ்..எனது வலைப்பக்கத்தில் அதிகமும் நான் விவாதித்தது ஆதிரனிடம் மட்டுமே. அதில் நீங்கள், சுயமோகம், அகங்காரம் இவைகளைக் கண்டால் அதற்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். ஆம்..பாஸ் எனக்கும் ஆதிரனுக்குமான இலக்கியம் சம்பந்தமான, கொடூரப் பற்சக்கரங்களில் ஊற்றப்படும் மசகு எண்ணெய், எனது அகங்காரமும், சுயமோகமும்தான். அதை நான் ஊற்றாவிட்டால் பற்சக்கரம் கிறீச்சிட்டு நின்றுவிடும் பாஸ். இதை ஆதிரனும் அறிவார். நான் போனில் பேசும் எல்லைகளைத் தவிர்த்து பதிவு செய்வதும் அதனால்தான். எனது சுயமோகத்தை, அகங்காரத்தை அவர் விரும்பினால், பதிலுக்கு, அவரது சுயமோகமும், அகங்காரமும் வெடித்தால் நான் மகிழ்வேன். ஆனால் இவையன்றி எனக்கும் அவருக்குமான நட்பு சாத்தியப்படாது. அது மிக மோசமான ஓலத்துடன், எதிரெதிரே சுற்றி இயங்கும் சக்கரப்பொறி. ஒரே திசையில் சுற்றினால் இயக்கம் வெடித்துவிடும்.


மார்க்ஸ் ஒரு ஆளுமை என்று நான் குறிப்பிட்டதற்கு என்னை அவருக்கு வக்கீலாக ஆஜர் செய்த உங்களிடம் நான் அதற்கு கட்டணம் கேட்கப்போவதில்லை. அதே சமயம்  ப்ரியா தம்பிக்கு நீங்கள் வக்கீலாக மாறிவிட்டீர்கள் என்றும் சொல்லப்போவதில்லை. நல்லது. நான் வாசக நிலையைத் தாண்டி அ.மார்க்ஸ்க்கு வக்கீலாகும் புதிய பொறுப்பு வந்திருக்கிறது. அதை ஏற்பதா, தட்டிக்கழிப்பதா, அதன் பாரதூரமான விளைச்சல்கள் என்னவென்று யோசித்துச் சொல்வேன்.

பாஸ்...     
இந்தக் கிளர்ச்சி என்கிற வார்த்தைகளை நீங்களும் ப்ரியா தம்பியும் அடிக்கடி உபயோகிக்கிறீர்கள். அ.மார்க்ஸ்க்காக வாதாடுவதில் நான் கிளர்ச்சியடைவதாக நீங்களும், கவிதைகளில் வரும், யோனி முலை என்ற வார்த்தைகளில் கிளர்ச்சியடைவதாக ப்ரியா தம்பியும் சொல்கிறார். பாஸ்...எனக்கு இதை எப்படிப் புரிந்து கொள்வது, என்கிற கிளர்ச்சிக்கு நான் ஆளாக விரும்பவில்லை. எனவே, அதன் அர்த்தத்தை எப்படி புரிந்துகொள்வது என்று எனக்கு  வகுப்பெடுக்கவாவது தயவு செய்து நீங்கள் எனக்குப் பதில் எழுத வேண்டும். பொதுவாக இந்தக் கிளர்ச்சி என் வரையில் யாரும் என்னை என் விருப்பமில்லாமல் செய்யமுடியாத ஒன்றாகவே நான் நினைத்திருக்கிறேன். 

ப்ரியா தம்பி உங்களுக்கு எழுதிய கடிததத்தில் நீங்கள் அவரின் வார்த்தைகளை நெகிழ்ந்து விளக்கியது போல், எனது கேள்விகளையும், வார்த்தைகளையும் நீங்கள் நெகிழ்ச்சியான மனநிலையில் வாசித்திருக்கலாம். இது என் வேண்டுகோள்தான். ஆலோசனை அல்ல. ப்ரியா தம்பியின் நெகிழ்ச்சியான மனநிலை கொண்ட வார்த்தைகளை விளக்கி உரை செய்ததோடு,  நீங்கள் சொல்லியது போல், சம அன்பை செலுத்திய எனக்கு மட்டும் உரை செய்யவில்லை. என்ன செய்வது,  அதற்குள் என் எழுத்துக்களில் அகங்காரம், சுயமோகம் எல்லாம் வந்து குடியேறி விட்டது.

என் மேல் நான் கொண்ட சுய மோகம், நான் சொத்தென வைத்திருக்கும் அகங்காரம் எல்லாம் இழி குணங்களாக உங்களுக்குத் தெரிகிறது. இத்தகைய இழி குணங்களோடுதான் நான் மற்றவர்களையும் அணுகிறேன். உங்களுக்கு அது வேண்டாமென்று விலக்குவதோடு, இத்தகைய குணங்கொண்டவர்கள் உங்களோடு இல்லை எனவும், உத்தமர்கள், பற்றற்ற புத்தர்களை நீங்கள் நண்பர்களாக அடைந்திருக்கிறீர்கள், மனித மனத்தின் எந்த அழுக்கும் இல்லாத தூயவர்களை கண்டடைந்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் எழுதிய எளிய வரிகளின் மூலமான நான் அறிந்துகொள்கிறேன். ஆனால் நாளுக்கு நாள் அயோக்கியர்களை நான் சந்திக்கவேண்டியிருப்பதோடு, என் அயோக்கியத்தனத்தை அவர்களது அயோக்கியத்தனத்தோடு உரசியும் பார்த்துக்கொள்கிறேன். நல்ல முறையில் அது பயனளிக்கிறது.

பாஸ்....
உங்களுக்கு காலங்கடந்து தெரிந்த, எனது சுய அகங்காரம், சுய மோகம் இவைகள் எல்லாம், என்னைச் சந்தித்த சில நொடிகளிலேயே கண்டடைந்தவர்கள் எனக்கு முத்தங்களையும், அதற்கிணையான துரோகத்தையும் அள்ளி ஊதியிருக்கிறார்கள். பதிலுக்கு நானும் வழங்கியிருக்கிறேன். அவர்களை வெறுப்பது என்னால் ஆகமுடியாத காரியம். அவர்கள்தான் என்னைப் பொருத்த வரையில் எனக்கு எல்லாம்.


சிறுபிள்ளைத் தனமான புரிதல்வாசிப்பு, படைப்பூக்கம், தத்துவஞானம் திருகல் நடை, கறாரான அறிவுஜீவி, அகங்காரம், அகந்தை, விவாதம் தரும் அற்பசுகத்துக்காக ஏங்குபவன்,  அறிவாளி, உலகரட்சகன்சுயமோகி, கிளர்ச்சியாளன், இவர்களை கைகள் விரித்து வரவேற்கக் காத்திருக்கிறேன். பதிலுக்கு என்னிடமும் இவை போன்ற வஸ்துகள் நிறைய உள்ளனஅதற்கும் மேலாக நான் எழுதுகிறேன் என்பதையும், நான் அகங்காரத்தோடு சொல்லிக்கொள்கிறேன்.

 ப்ரியா தம்பியின் திறன் மிக்க எழுத்துக்களில் என்னென்ன காணக்கிடைக்கிறது என்பதை நீங்கள் நட்பு சார்ந்து எழுதிய உங்கள் வார்த்தைகளில், உங்கள் மனநிலையை, நடுநிலைமையை விளக்கி விட்டீர்கள். 

பாஸ்...
என் உறுப்பு சார்ந்த கவலைகளை நானே பார்த்துக்கொள்வதோடு, என் கிளர்ச்சிகள் குறித்து, ப்ரியா தம்பி பொது வெளியில் விவாதிக்கும் கவலையை அவருக்கு நான் எப்படி அளித்தேன் எனத் தெரியவில்லை.  அ.மார்க்ஸை இப்படி பேசியது ஏன் என்று நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் தரமுடியாது, என்பதோடு ஞாநியைக்கூடத்தான் கீற்று திட்டியது என்கிறீர்கள், அதற்கு நானும் பொங்கவில்லை என்று நேரடியாக   சுட்டிக்காட்டி அதை அடைப்புக்குறிக்குள் அடைக்கியிருக்கீர்கள். அடைப்புக்குறியை நீங்கள் தாரளமாக நீக்கலாம்.  ஞாநி  என்னைப்பொருத்தவரையில் ஆளுமை அல்ல. அப்படி இல்லாவிட்டாலும், ஞாநியை ஒரு பத்திரிக்கையாளனாக மதிப்பேன்.( என் தேர்வு இதுதான்) ஞாநி எத்தனையாவது பொண்ட்டாட்டி கட்டியபிறகு, அல்லது எத்தனையாவது பொண்ட்டாட்டி கட்டாத பிறகு  பாலியல் குறித்து எழுதினார் என்று கீற்றுவில் விவாதம் வந்திருந்தால், அந்தச் சுட்டியை எனக்கு இணைக்கலாம். இதற்கும் நீங்கள் பதில் தராததன் மூலமாக, நான் அச்சுட்டியை இழக்கலாம். தேடிப்பார்க்கிறேன், ஆனால் கூட்டுக் கலவி, அல்லக்கை, ரெண்டாவது பொண்டாட்டி என்ற குறிச் சொற்களின் மூலம்தான் தேடமுடியும். தேடுகிறேன்

கூறியது கூறல் என் தவறுதான். ஆனால் பதிலை தட்டிக்கழிக்கும்போது, தேவையில்லை எனும் போது, அதைச் சுட்டிக்காட்டலாம் அல்லவா. நான் கறாரான அறிவுஜீவி என்பது போல், அதே அளவுக்கு உணர்வுகளையும் கட்டுபடுத்துபவன்தான் பாஸ். எனக்கும் நான் தேர்ந்தெடுத்த, விரும்பிய உணர்வுகள் இருக்கிறது. எனக்குத்தான் உணர்வுகள் இருக்கிறதே என நான் பாட்டுக்கு அவிழ்த்துவிட்டால் அது தரும் சேதங்களை நான் அறிவேன். உதவிகள் செய்த நண்பர்களுக்கு நானும் உழைத்திருக்கிறேன் என்பதில் நுட்பம் ஏதுமில்லை. செய்தாருக்குச் செய் என்பது மட்டுமே.  நீங்கள் எனக்குச் செய்த உதவிகளை சொல்லமுடிகையில், நானும் சொல்லலாம்தானே, இல்லை எனக்கு அந்த உரிமை இல்லையா. இதற்கெல்லாமா பாஸ் உணர்ச்சிவசப்படுவது. 

பாரதியின் தந்தை. குடும்ப நண்பர் என்று மார்க்ஸை நெகிச்சியுடன் கூறியதை நான் நான் நக்கலடிப்பதாக கூறுகிறீர்கள். அதே பாரதியின் தந்தையை, குடும்ப நண்பரைத்தான் ப்ரியா தம்பி ரெண்டு பொண்ட்டாட்டிக்காரர் என்றார், மார்க்ஸ் பற்றிய உங்களது மதிப்பீடுகளை நண்பனாக கேட்டதற்கு ப்ரியா தம்பியை என்னுடன் உங்களது அன்பின் தராசுவில் நிறுத்திப்பார்த்தீர்கள். நான் வெறும் எடைக்கற்கள் அல்ல பாஸ். ஞாநியை அவதூறு செய்தபோது மார்க்ஸ் பேசினார், ஞாநி அ.மார்க்ஸ்சின் உழைப்புக்கு தலைவணங்குகிறேன் எனச்சொல்லியிருக்கிறார். அதற்கு முன்னால் அவர்கள் இருவருக்கும் பெரும் விவாதங்கள் நடந்துள்ளது. அதையெல்லாம் ஏன் அவர்கள் பொது வெளியில் வைக்க வேண்டும். அப்போது ஞாநி அ.மார்க்ஸ்க்கு வக்கில் இல்லை, அ.மார்க்ஸ் ஞாநிக்கு வக்கில் இல்லை. நான் வக்கீல். நான் கேட்ட எக்கேள்விக்கும் பதில் தராது நட்பு, புத்திசாலி என்ற அளவிலேயே உணர்ச்சி வசப்பட்டு பதில் கூறியதோடு, நட்பையும் துண்டிப்பதாக சொல்லியிருக்கிறீர்கள்.

பாஸ்...
நான் இதுவரை நண்பனின் தோழியை நாமும் மதிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது என்ற நிலையில்தான் அந்தக் கேள்வியை உங்களுக்கு எழுதினேன். இனி நான் உங்களுக்கு இது சம்பந்தமாய் எழுதப்போவதில்லை. என் கிளர்ச்சிகள் குறித்து, உறுப்பின் எழுச்சி குறித்து ஆராய்ச்சி செய்யும் ப்ரியா தம்பிக்கு என் ஆய்வுகளை நானும் சமர்ப்பிப்பேன். அதை நான் கண்காணிக்க, அதுகுறித்து  விரிவாக விளக்க எனக்கும் உரிமை உண்டு. அதை பதிவு செய்வதோடு, அதை இலக்கியமாக்கி, சர்ர்சைக்குரிய கட்டுரையாக்கி அவருக்கு எப்படி, எந்த தட்டில் வழங்குவது என்று எனக்குத் தெரியும். வாங்குவதற்கான கரங்களை அவர் தயார் செய்துகொள்ளட்டும். இனி என் பாலியல் விருப்பு வெறுப்புகளை விவாதிக்கத் தயார். 

ஆனால் பாஸ்...நீங்கள் எனக்குப் பதில் கூறாமல் குட்பை என்ற வார்த்தைகளின் மூலம் விடைகொடுத்திருக்கிறீர்கள், ஆனால் இது போன்ற விவாதத்தை கீற்றுவில் நடத்தி குட்பை சொன்னால், விடாது துரத்தி, காண்டம் கணக்குகளையும் சமர்ப்பிக்கச் சொல்லுமாறு பின்னூட்டங்களும், அதைத்தொடர்ந்து, வசைகளும் வரும்.

நான் கேட்டது உங்களுக்கு, என் வார்த்தைகளில் புரியாததோடு பல்வேறு அவலச் சுவைகளை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது என்பதை குட்பை, மற்றும் இதர வார்த்தைகளில் அறிகிறேன். நீங்கள் எனக்கு எளிதாக விளக்கியது போல் நானும் எழுதுகிறேன்.  ( எளிதாக எழுதுகிறேன் என்று நான் சொல்லுவது கூட அகந்தைக்கான வார்த்தைகளாய் மாறலாம், என்ன செய்ய)

  “ ஏன் பாஸ்....ப்ரியா தம்பி இப்டி நாம மதிக்கிற, அ.மார்க்ஸ்ச ரெண்டு பொண்டாட்டி வச்சதுக்குப் பிறகுதான் பலான சமாச்சாரமெல்லாம் எழுதுறாருன்னு, அவரு பிரண்டு சொல்றதா சொல்லுதே, நீங்க அத சுட்டிக்காட்டக்கூடாதா, நானும் உங்களுக்கு ஒரு பிரண்டு, என்னை அது அசிங்கசிங்கமா எனக்கு எதுல கில்மா வரும்னு எழுதுது, அதே மாதிரி சகப் படைப்பாளிங்களா நாம கருதுற ஷோபா சக்திய பொம்பளைப் பொறுக்கி, பொடணீல அடிவாங்குனான், லீனா விளம்பரப் பைத்தியம், போர்ட் போலியோன்னு எழுதுதே, நீங்க என் நண்பரா அத நாலு வார்த்தை கேட்கக்கூடாதா, என்ன பாஸ்...இது. ஒரே அசிங்கமாவுல்ல இருக்கு, இத எழுதவா நாம் இங்க வந்தோம்.....”

(இவ்வளவு, இவ்வளவுதான் பாஸ்.....இதற்குமேல் வேறொன்றுமில்லை.)


இதுக்குத்தான் பாஸ் நீங்கள் பதில் சொல்லாமல், புத்தக விழாவுக்குக் கூட்டிட்டுப்போனேன், நீயும் அதுவும் ஒண்ணு, இப்ப ரெண்டு பேரும், புத்திசாலியாகி சண்டை போடுறீங்க நானென்ன செய்யட்டும், எனக்கு ரெண்டு பேரும் ஒண்ணுதான்அ.மார்க்ஸ எனக்கு முன்னாலேயே தெரியும், போன்ல இதப்பத்தி கண்டிச்சேன்( என்ன பாஸ் கண்டித்தீர்கள், பதிவுசெய்தால்....மார்க்ஸ் மேல் நான் வைத்திருக்கும் அபிப்ராயத்தை பொருத்திப் பார்க்க வசதியாய் இருக்கும்), கீற்று மேடையிலேயே பேசுனேன்அப்புறம்....பேசுறதுக்கு எதுக்கு பதிவுப் புண்ணாக்கு, எனக்கு வேலைகள் இருக்கு, பிஸி, என்றெல்லாம் எழுதினீங்க...என்ன பாஸ்....இது....நான் பேசியது ப்ரியா தம்பியின் எழுத்துக்களை. நீங்கள் தட்டில்  நிறுத்தியது நட்பை.

கீற்று தனக்கு எதிராக ஒரு சொல் வந்தாலும் ங்கொய்யால,  ங்கொம்மால...என்ற சொல்லை நாக்கில் உச்சரித்துவிட்டுத்தான், எதையும் தட்டச்சு செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, விவாதம் தரும் அற்ப சுகத்துக்காக  எதையும் கொச்சைப்படுத்துபவன் நான், என்ற உங்களது வார்த்தைகளை நம்புகிறேன். ஆனால் அதிலுள்ள வித்தியாசங்கள்தான், என்னை அதை ஏற்கவிடாமல் தடுக்கிறது.

பாஸ்... 
எனது முகப்புத்தகத்திலோ, எனது வலைப்பக்கத்திலோ நான் விவாதம் தரும் அற்ப சுகத்துக்காக எங்கேயாவது எழுதியிருக்கிறேன் என்று விளக்கினால் நான் அதை சீர் படுத்துவேன். அது போன்ற விவாதங்கள் மனச்சிக்கல்களையும் மலச்சிக்கல்களையும் கொண்டு வந்து விட்டுவிடும் என்றும் நான் அறிவேன். அதே சமயம் திறன் மிக்க எழுத்தாளரான ப்ரியா தம்பியின் முகப்புத்தகம், மற்றும் கீற்றுவில் அவரது பங்களிப்புக்களை வாசியுங்கள், விவாதம் தரும் அற்ப சுகம் அல்ல பாஸ், அவை அற்புத சுகமளிக்கும் கூட்டங்கள். சரோஜா தேவிக்கு ஒரு வாசகர் வட்டம் இருக்கிறது என்றால் அது கீற்றுவின் எழுத்துகள் முன் தோற்று மண்டியிடும்.விவாதம் தரும் அற்புத, உச்ச சுகத்தில் ஸ்கலிதமானதுதான் வசுபாரதியாகிய நான், இன்னும் முலை, யோனி என்ற வார்த்தைகளை தாண்டமுடியாமல் இருக்கிறான் என்ற வார்த்தைகள்.

பாஸ்...
என் முகப்புத்தகத்தில் வலைப் பக்கத்தில் எனது புகைப்படங்கள் இல்லை. சுயமோகத்தை நான் உளவியலுக்கு உட்படுத்தினால், தலைச்சீவி பவுடர் போட்டு, நல்லுடைகள், நறுமணத்தைலங்கள் தேய்த்து உலாவ வேண்டிய அவசியம் எவருக்குமில்லையே. ஏன் பாஸ்....  இது,  சுயத்தின் மீது மோகம் கொள்ளாதவன் பிறவற்றின் மீதும் மோகம் கொள்ள முடியாது.

பாஸ்......என் படிப்பு என்னை சுய அகங்காரமென்னும் இடத்திற்கு கொண்டு வந்து விட்டது போல், உங்களது வாசிப்பு பிரியா தம்பியின் திறன்மிகு எழுத்துக்களை கண்டடைவதில் வந்து விட்டிருக்கிறது. நான் இதற்கு ஒன்றும் செய்யமுடியாது. {எடுத்துக்காட்டாக உங்களது பார்வையில் அவர் எழுதிய ஆதிவாசிகள் கட்டுரை.} என் எழுத்துக்கள் சுயமோக எழுத்துக்கள். பிரியா தம்பியின் எழுத்துக்கள் திறன் மிக்க எழுத்துக்கள். நன்றி பாஸ். தொடர்ந்து வாசியுங்கள். இதற்காக நீங்கள் என்னை வெறுத்து குட் பை சொல்லலாம், ஆனால் நான் சொல்லமாட்டேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக என்னைப்பொருத்தவரையில் நான் உங்களை நிறுத்தியிருப்பது எப்பொழுதும் வெறுக்கமுடியாத எல்லையில்தான். இன்னொன்றும் சொல்கிறேன், நீங்கள் என் மீது வைத்திருந்த நட்புக்கு குட்பை சொல்லலாம், நான் உங்கள் மீது வைத்திருக்கிற தந்தைமையை நீங்கள் விரும்பினாலும் அகற்றமுடியாது.

 “நானறிந்த எல்லைவரை எனை மிக அருமையாக சகித்துக்கொண்டு வந்த நண்பர் பாஸ்கர் சக்தியின் தந்தைமைக்கு என்னால் நன்றி கூற இயலாது. அது பொருளற்ற சொல்லாகிவிடும்.”

-  “...ஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளன.”

- வசுமித்ர.


Sunday, March 27, 2011

ஆதிரனுக்கு.... சில முடிவுறு சொற்கள்....

-->


ஆதிரன்.....இது நான் உங்களுக்கு வெயில் காலத்தில் எழுதும் கடிதம், தயவு செய்து குளிர்காலத்தில் படிக்காதீர்கள். வார்த்தைகள் அதற்கான வெளிகளை மாற்றிக்கொண்டு விடுவதோடு அர்த்தங்களையும் தீர்மானித்துவிடும். உங்களது வாசிப்பு முன் தங்கிவிட்டது என்பதை, கொற்றவையின் கவிதைகளோடு என் சமீப கவிதைகளை ஒப்பிட்டுப் பேசியதிலிருந்து தெரிகிறது.

என்னால் கொற்றவையின் கவிதைகளை தரம் பிரித்துப் படிக்கும் அளவுக்கு இப்பொழுதுள்ள நிறக்குருடு ஒத்துழைக்கிறது.முழுக்குருடாகும் நிலையை நான் வரவேற்கிறேன். கொற்றவை எனக்குக் கிடைத்த நல்ல மாணவி. கூடவே என்னை ஆதிக்கம் செய்யும் வல்லமையையும் ஒரு சேரப் பெற்றிருக்கிறார். நீங்கள் அவரைக் குறிப்பிடுவது, அல்லது ஒப்பிடுவது அவர் என்னருகில் இருக்கிறார் என்பதைத் தாண்டி வேறில்லை என்று நினைக்கிறேன். நல்லது அவராவது கவிதைகளை எழுதட்டும். எனக்கு விருப்பமான கவிதையை முழுமுற்றாக, அவர் எழுதி, அது என்னை சற்று எச்சரிக்கையடைவும், அதே கணத்தில் கொண்டாடவும் வைக்கும் போது, நான் என் கவிதைகளைக் குறித்து அவரிடம் விவாதிப்பேன்.

கவிஞரிடம் பேசும் போது கவனமாக இருக்கவேண்டுமில்லையா  ஆதிரன். கவிஞர்கள் தங்கள் கவிதைகளுக்கான ஆயுதத்தை தீட்டும் போது, ஆயுதத்தின் மறுபுறம் மற்ற கவிதைகளுக்கான விமர்சனத்தையும் தீட்டுகிறார்கள். கூரிய, பட்டை தீட்டப்பட்ட, வழிபடும், மற்றும் கொலைக்கருவியுமான ஆயுதம். பார்க்கலாம்.

ஆதிரன்…. இப்பொழுதுதான் வாசிப்பது எப்படி, நீதி என்றால் என்ன, படைப்புகளை எவ்வாறு புரிந்துகொள்வது, விளைவுகள் என்ன என்ற கேள்விகளெல்லாம் உங்களுக்கு வந்திருக்கிறது. நல்லது இதற்கு மருந்து பதில்கள் அல்ல, நல்ல புத்தகங்கள். அதையும் பட்டியிலிடு எனக் கேட்டு என் நாவல் வேலைகள், மற்றும் அவதூறுக்கான எதிர்வினைகள் செய்வது போன்ற வேலைகளைத் தள்ளிப்போட வைக்காதீர்கள்.

எனது ஆழ்ந்த விரிவான படிப்புகள் என்னை குறளியாக்குவதிலிருந்தும், மத, ஜாதிய வெறுப்புக்களை சுமக்கும் அடிமையாக மாற்றமலும் வைத்திருக்கிறது. இப்பொழுது இவ்வளவே. குறளி என்னவென நீங்கள் என்னைக் கேட்டால் நான் பதில் சொல்லமுடியாது திகைத்து விடுவேன்.

கா. மார்க்ஸ், அ.மார்க்ஸ் இவர்கள் எதிர்வினைகளைத்தாண்டி நிறைய எழுதியிருக்கிறார்கள் என்கிற தங்களின் கண்டுபிடிப்பை வியக்கிறேன். இவர்களைப் படித்தவர்கள் கிசுகிசுக்களை உற்பத்தி பண்ணும்போது நான் கிசுகிசுக்களை மறந்துவிட்டு அவர்கள் கூறும் கிசுகிசுக்களின் உளவியலை ஆராய்கிறேன்.

நான் நீதியையோ, நியாயத்தையோ எதிர்பார்த்து நாட்டாமைகளின் முன் நிற்பதில்லை. நீதி இது, உத்தமம் இது என்று இனம் பிரித்து, நெஞ்சுருதியோடு சொல்பவர்களிடத்தில்,  அப்படியென்றால்…என்ற கேள்வியை மட்டுமே வைக்கிறேன். என் வார்த்தைகள் உங்களுக்கான அகராதியில் எப்படித் தப்பி, ஒளிவு மறைவுகளுக்கான வேலையைச் செய்கின்ரன எனத் தெரியவில்லை. சூன்யம் வைத்தவரை விரைவில் நாமிருவரும் கண்டுபிடிக்கலாம். ஒரு சமயத்தில் விட்டு விடு என்கிறீர்கள், மறு சமயத்தில் ஏன் என விளக்கமும் கேட்கிறீர்கள். நான் கேட்டதையே நீங்களும் என்னிடம் கேட்கிறீர்கள். உங்கள் அகராதியில் நீதி, அறத்திற்கான பொருள்கோடல்களை விளக்கினால் அதையும் கற்றுக்கொள்கிறேன்.

இறுதியாக படைப்பாளிக்கு இது இது தேவையான் எழுத்து, இது தேவையில்லை என்கிற, உங்களது பாலர் பாட அட்டவணையில் இருக்கும் பட்டியலில் என் பெயர் எக்காலத்தும் இடம்பெறப்போவதில்லை. நீங்கள் நட்பின் பெயரால், அதைக் கொஞ்சி, முத்தமிட்டுத் திணித்தாலும் அது பட்டியலிலிருந்து துருத்திக்கொண்டு இருக்கும்.

என் வாசிப்பு எப்படி என் தேர்வோ, அதே போல் என் எழுத்தும் என் தேர்வே. இதுவரையில் நீங்கள் மதிக்கிற எழுத்தாளர்கள் வைக்கும் கட்டுரைகளையோ, விவாதங்களையோ நீங்கள் என்னிடத்தில் இவ்வளவு நம்பிக்கையுடன் விவாதித்ததில்லை. இப்பொழுது என் அவதூறுக்கான துறை சார்ந்த எழுத்து உங்களை உசுப்பி விட்டதோடு மட்டுமல்லாமல், கேள்விகளையும் கேட்க வைத்த, அதன் அதியசங்கண்டு வெட்கமடைகிறேன்.

தத்துவங்களையும் அறங்களையும் என் கவிதைகளில் நீங்கள் கண்டுபிடித்த தருணங்களில் நீங்கள் தத்துவம் எது அறம் எது என்று விசாரித்துக்கொள்ளுங்கள். மேற்கூறிய இரண்டையும் நான் கவிதைகளில் வைத்து உங்களை அலுப்படையச் செய்தது எனக்கு மிகுந்த கொந்தளிப்பான மகிழ்ச்சியைக் கன்னாபின்னாவெனத் தந்துகொண்டிருக்கிறது. நீங்கள் உருவமுடியா வரிகளைத் தரமுடியாமல் போன எழுத்து முறையை நான் யோசிப்பதோடு, ஏன் நம்மால்  உருவமுடியவில்லை என்பதையும் சந்தேகியுங்கள். ஆசிரியர்கள் இரண்டு வகை. ஒன்று மாணவன் கற்றறிந்த் ஆசிரியர்களை போட்டுத் தாக்கும் ஆசிரியன், இரண்டாவது மாணவ அறிவைப் போட்டுத்தாக்கும் ஆசிரியன். இந்த அடிமுறைகளை கவனத்தில் கொண்டால்  சொல் வர்மம், அறம் பாடுதல் போன்ற சித்திகள் கைகூடலாம். (சித்தப்பாக்களை மன்னிக்கலாம். சித்த – பாக்கள் இதைத்தான் கூறுகிறது.)


நீங்கள் சமீபத்தில்  அறம், தத்துவம் இவைகள் இல்லாததோடு, உங்களை சோர்வில்லாது, ஜிங்குச் சா…ஜிங்குச் சா…எனக் குதிக்க வைத்த, சமீபத்தில் வந்த கவிதை நூலை எனக்கு சிபாரிசு செய்தால், அவ்வாசிரியரிடம் உங்கள் வாசிப்பு மனத்தை மதித்து, உரையாடுவேன். (அவற்றை நான் வாசிக்காமல் இருந்திருக்கலாம். மிக முக்கிய வேண்டுகோள்,  தமிழில் நூலை சிபாரிசு செய்யுங்கள், சிலசமயம் மொழிபெயர்ப்புக்கு நான் அல்லாட வேண்டியதிருக்கிறது.)

நானும் எனக்காகவும், சில தவிர்க்கமுடியா தருணங்களில் மற்றவர்களுக்காகவும், மிகுந்த கட்டுப்பாடோடு இயங்கும் மனிதன்தான். அதை சற்று சுதந்திரமான வெட்கத்தோடு சொல்லிக்கொள்கிறேன். ஆனால், ஆதிரன்…. அடிக்கடி உங்களது வார்த்தைகளில் சோம்பலும், அயர்ச்சியும், எரிச்சலும் அடிக்கடி வந்து விழுகிறது. இது இயேசு பெருமான் கூறிய பற்கடிப்புகளுக்கு கொண்டு சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நான் செய்ய வேண்டிய வேலைகளுக்கு மத்தியில், இதை உங்களுக்காகச் சொல்கிறேன்.

புனைவை எழுதுவதிலிருந்து என்னால் தப்பிக்கமுடியாது என்று எனக்குத் தெரியும். மண்டைப்புளு சதா உருத்திக்கொண்டே இருக்கிறது. சிறுது காலம் சாக்கடையில் ஊறட்டும் என்று விட்டு வைத்துள்ளேன். ஆனால் அது சாக்கடை பற்றிய ஞானத்தை முழுமுற்றாக எனக்கு தரவேண்டும். இதுவே அதற்கு நான் விதித்த சட்டம். உண்மையில் இதிலிருந்தே ஆகப்பெரிய உளவியலைக் கற்கிறேன். நாவலை எழுத ஒரே சமயம் நான் புத்தனிடமும், பக்த கச்சனாவிடமும், சன்னாவிடமும், ஆம்ராவிடமும், சுத்தோதனனிடமும், அன்னை மாயாவிடமும் பேசி, வாதிடவேண்டியிருக்கிறது. நாவலை நான் எழுத இது மிகுந்த உத்வேகத்தை அழிக்கிறது. சக மனித உளவியலைக் கணக்கில் கொள்வதோடு, பிணங்களின் உளவியலையும் நான் கற்க வேண்டியிருக்கிறது. அதற்காக, பிணங்களின் அனுபவத்தை நான் உயிரோடு இருந்து அனுபவிக்க வேண்டிய கொடிய விதிமுறைகளும் அதில் அடங்கி இருக்கிறது. இதுவே நான் எனது எழுத்துகளுக்கான மூலப்பொருட்களைச் சேகரிக்கும் முறை, தாஸ்தாயெவ்ஸ்கியை ஆழ்ந்து கற்றவராக அறியப்பெற்ற, அறத்தை தன் குதத்திலிருந்து இந்துத்துவ குசுவாய் விடும் வல்லமை பொருந்திய ஜெயமோகன், ஏன் இன்னொரு மனிதனை நொண்டி நாய் என்று திட்டுகிறார். அதன் உளவியல் என்ன, என சக மனிதர்களின் எழுத்தை, வாசிப்பை நான் இனங்காண வேண்டியிருக்கிறது. இதை ஒரு முறை எழுதி, உங்களிடம் பேசுகையில் நீங்கள் தேவையற்ற வேலைகள் என்றீர்கள். ஆனால், துரதிருஷ்டம் அவதூறுகளுக்கான எதிர்வினைகளுக்கு  சட்டென எழுத்துக்களைத் தட்ட்ச்சு செய்துவிட்டீர்கள். உங்கள் விருப்பங்களையும் இதிலிருந்தே அறிகிறேன். (புனைவை எழுதுவதற்கான மனநிலையையே நான் உங்களுக்கு விளக்கச் சிரமப்படும் போது, புனைவை எப்படி விளக்கப்போகிறோம் என்ற அச்சமும் பிடித்தாட்டுகிறது.)

ஆதிரன்…. என் வாழ்வில், சென்னைக்கு நான் வந்தபிறகு நீங்கள் அறியாத பகுதிகள் எதுவும் சொற்பமே. என் எழுத்துக்களோடு எனக்கான குடும்பத்திற்கான கஞ்சியையும் நான் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. சாவு என்னை தன் மடியிலிருந்து இருமுறை தூக்கியெறிந்திருக்கிறது. சாவை நான் மன்னிக்கிறேன். என் வயது இப்பொழுது 31, விரைவில் 32 ஆகும் அதிசயம் நிகழப்போகிறது. (இது வருடத்துக்கொருமுறை தவறாது நிகழ்ந்து விடுவதோடு, ஆச்சரியமும், ஒவ்வொரு முறையும் அதே அளவு நீடிக்கிறது) ஆனால் வயதை ஞானத்தின் காலில் போட்டு மிதித்துவிட்டு,  எத்தனயோ ஆளுமைகள் 30 களிலேயே சாதித்திருக்கிறார்கள். கா. மார்க்ஸ் கம்யூனிஸ்டுக் கட்சிக்கானஅறிக்கையை எழுதும் போது 30 வயது.  அன்று இத்தகைய சூழலை அவருக்கு அழித்திருக்கும் நெருக்கடிகளை வாழ்த்துகிறேன். இளம் வயதிலேயே தன்னைத் தேர்ந்துகொள்ளும் வல்லமை வாய்த்த ஆளுமை அவன். நானோ இன்னும் என் மூளையில் சமூகம் ஏற்றிவைத்த வேண்டாத குப்பைகளை கழிப்பதற்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவன். எனக்கு வயதானதும் சொல்லியனுப்புகிறேன். என்ன செய்தாய் என்ற கேள்வியைத் தாண்டி, என்ன செய்யலாம் என்பதை, என் புத்தகங்களில் தாங்கள் படித்துவிட்டு வரலாம் என, இப்பொழுது உறுதியாகச் சொல்கிறேன். வாக்கு தவறினால் அதையும் மன்னிப்புக் கடிதத்தின் வாயிலாக தாண்டிச் செல்வேன்.

ஆதிரன்…அதிகாரத்தை எதிர்ப்பதற்கு நான் அடையாள அட்டைகள் வைத்துக்கொள்வதில்லை. அப்படி அதிகாரத்தை எதிர்க்கும் வழிமுறைகளை நான் கண்டு பிடித்து சொல்லும் பட்சத்தில், நீங்கள் அதில் முறைப்படி நீங்கள் சந்தா செலுத்தி உறுப்பினராகலாம். அது வரையில் நீங்கள் முயற்சி செய்யுங்கள். சோர்ந்துவிடவேண்டாம்.

உண்மையில் இது நான் தப்பிச்செல்வதற்காக அல்ல, கண்டுபிடிப்பதற்காக. ஒரு புனைவை எழுதவேண்டும் என்கிற என் ஆசையை மதித்து. இப்பொழுது அதை எழுதிக்கொண்டிருக்கிறேன். நீங்களும் புனைவை எழுது என்கிறீர்கள். ஆனால் ஆதிரன், ஒன்று நிச்சயம். அது நீங்கள் மனதில் வைத்திருக்கும் புனைவுகளின் கோட்பாட்டுச் சட்டகங்களுக்குள் அடங்காது. ஆனால் அதுவும் அவதூறுகளுக்கான எதிர்வினை போல், தேவையில்லாமல் உங்களுக்கு மாறலாம். திருப்தி என்பதும் தனி மனித குணமே. அதனால்தான், நீங்கள் விரும்பிய வகையில் அவதூறுக்கான இலக்கியத்தை நான் படைக்கமுடியாமல் போயிற்று. சில சமயம் பற்கள் மூளையின் ஆணையை இழந்து, நாக்கைக் கடித்து விடுகிறது. சிறு கசிவு. அளவு கூடிய எரிச்சல்.

 ஆதிரன்...உங்களுக்கும், பாஸ்கர் சக்திக்குமான, உங்கள் இருவரின் மனமும் கருதிக்கொண்டிருக்கும், படைப்பிலக்கியத்தை பற்றி விரிவாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் நீங்கள் எதிர்பார்க்கும் படைப்பிலக்கியத்தை என்னால் எழுத முடியாது.


எதையும் மறுத்து நான் எழுதியதில்லை. அப்படி ஒரு நோய் எனக்கிருந்தால் நான் கூடிய விரைவில் குணமடைவேன். ஆனால், கேள்விகளே மறுப்பு, ஆபத்து, கெட்டது என்று புரிந்துகொள்ளப்படுகிற போது, என் நோய் முற்றட்டும் என்று விட்டு விடுவேன்.ஆதிரன் உங்களுக்காக, ஒரே ஒரு பதிலில் இதனை நான்அழுத்தமாகக் கூறுகிறேன். தொடர்ந்து வாசியுங்கள் ஆதிரன். ஆசிரியனை நம்பாதீர்கள். அவன் நிறக்குருடு. மற்றும், நீதி, அறம், தத்துவங்கள் அவன் கண்டறியாத உடல்.