அன்னை பூமி, தாய் நாடு, தாய்மை, போன்ற கருத்தியல்களைச் சுமந்து வந்திருக்கும் இன்னுமொரு திரைப்படம் நந்தலாலா. காலங்காலமாய் பெண்ணின் மேல் ஆண்கள் தூக்கிவைத்த பெருஞ்சுமையென தாய்மையைத்தான் கருத வேண்டியிருக்கிறது. ஆண் பெண்ணை மதிக்கவேண்டுமானால் ஒன்று கற்போடு இருக்கவேண்டும் இல்லையெனில் தாய்மையோடு இருக்க வேண்டும். இயக்குனர் நிறைய படித்தவர் என்பதை நான் அறிவேன் அவரும் தன்னை இலக்கிய வாசகன் என சொல்லிக் கொள்ள எந்த இடத்திலும் தயங்கியதே இல்லை. அது குறித்து நான் பெருமைப் படுகிறேன்.
படத்தில் எந்த இடத்திலும் பெண்கள் காட்டப்படவேயில்லை. அவர்கள் காட்டப்படுவதெல்லாம் தாய்மையின் வாயிலாகத்தான், பெண்ணுக்கு தாய்மையைத் தவிர வேறு எந்த குணமும் அவர்களை உயரத்துக்கோ அல்லது வெளிச்சத்துக்கோ அவர்கள் விரும்பும் சுதந்திரத்திற்கோ அழைத்துச் செல்லப்போவதில்லை என்று மிக உறுதியாகக் காட்டப்படுகிறது.
படத்தில் கதைநாயகர்கள் இருவரும் அப்பா ஓடிப்போனதை ஒரு சிறு நகைச்சுவையாகக் கையாண்டு விடுகிறார்கள். இதன் மூலம் ஆண்கள் என்றாலே ஓடுகிறவர்கள், பொறுப்பு பற்றி அவர்கள் எதையும் கவலைப் படப் போவதில்லை, அப்படி படவேண்டிய அவசியமும் இந்த ஆண்மையச் சமூகத்தில் இல்லை என்று புரிகிறது. பெண்கள்தான் அதைக் கண்டுகொள்ளாது தனக்கு சமூகம் வழங்கியிருக்கும் தாய்மையை பெரும் படிமமாக விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தூக்கிச் சுமக்க வேண்டும்.
தாய்மையினால். அந்தக் கருத்தினால் ஆண்களுக்கு பெருத்த லாபம் உண்டு. அவன் சுதந்திரமாக எங்கும் திரியலாம், எதையும் செய்யலாம், பொருள் சம்பாதிக்கிறேன் என்ற பெயரில் சுதந்திரத்தின் முகத்தில் ஆழ முத்தமிடலாம்...ஆனால் பெண்ணுக்கு...இதில் எதுவும் கிடைக்கப் போவதில்லை.
பாஸ்கர் மணி அகியின் தாயைச் சந்திக்கும் இடத்தில் அவள் தன் சூழலை விளக்குகிறாள் அதை அமைதியாகவும், இயலாமையோடும், வெளியே நிற்கும் அவள் மகனின் முகத்தை எண்ணி மனதில் துக்கத்தோடும் கேட்கும் பாஸ்கர் மணி அவள் சொல்லி முடித்ததும் சட்டெனக் கன்னத்தில் அறைந்து விட்டு வெளியே செல்லுகிறான், வெளியே இருந்து உள்ளே ஓடி வரும் அகியை அணைத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டுச்செல்ல எத்தனிக்க அகி பிடியிலிருந்து மீறி சென்று வாசலில் ஒரு குழந்தை இருப்பது கண்டதும் தன் தாய் அவ்வீட்டில் இல்லை என்று முடிவு செய்கிறான்...பாஸ்கர் மணி தன் தாயைக் காட்டுகிறேன் வா என அழைத்துச் செல்கிறான். நிற்க அப்படி அகியின் தாய் என்ன சொன்னாள். பார்வையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்று காட்சி விளக்கப் படாமல் நகர்கிறது. நான் விளங்கிக்கொண்டது அவள் தன்னுடைய துயரவாழ்வைச் சொல்லியிருக்கிறாள். வேறொரு ஆணுடன் வாழநேர்ந்த சூழலைச் சொல்லியிருக்கிறாள். மணி அறைந்து விட்டு வெளியே வந்திருக்கிறான். இதில் நான் இன்னொன்றும் புரிந்துகொண்டேன் அவள் தன் இயலாமையை பாஸ்கர்மணி காலில் விழுவதன் மூலமும், கூனிக் கூறுகி கூசி நிற்பதன் மூலமும் விளக்கி விட்டாள். மணிக்கு அவள் செய்தது தவறென்று தெரிந்து அடிக்கிறான். வெளியேறுகிறான்...இதே மணிதான் தன் தகப்பன் பற்றின எந்தக் கேள்வியும் இல்லாது படம் முழுக்க வருகிறான். ஆண் செய்வதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு சுதந்திரம் உண்டு பெண்ணுக்கு ஒன்றே ஒன்றுதான் அது தாய்மைச் சுமை. அது மனநலம் பிறழ்ந்தவனுக்கும் மாறாமல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
படத்தில் இரண்டு ஊர்களுமே அன்னைவயல், தாய்வாசல் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அதிலும் தாய்மை. இதைச் சற்று அரசியலாக்கினால் அன்னை நாட்டைக் காப்பீர், தாய் நாட்டைக் காப்பீர் என்று அரசியல் வாதிகளின் வெற்று முழக்கம் புரியும். இந்த முழக்கம் நாட்டில் வாழும் ஆண்களை மட்டுமே நோக்கி எல்லாக்காலங்களிலும் விடப்பட்ட அறை கூவல். இவை பெண்களுக்கான வார்த்தை இல்லை, (பெண்களுக்கு ஆண்களை நோக்கி எழுப்ப எக்கசக்க முழக்கங்கள் உள்ளது) அன்னை நாட்டை இன்னொருவன் ஆளவிடுவது அன்னையை மற்றொருவன் புணர்வதற்குச் சமம். இதனால்தான் ஆணுக்கு அவன் அன்னையைப் பற்றி இழிவாக பேசினால் வெறியேறுகிறது. இதில் ஏற்படும் வெறி தானொரு தாய்ப்பாசத்தினால் ஆளப்பட்டவன் என்பதல்ல நான் ஒருத்தனுக்கு பிறந்தவன் என்ற ஆணாதிக்கக்கூற்றே. பெரும்பாலும் வசவுகள் தாயின் கற்பை மட்டுமே ஏசும் சொற்களாக உள்ளதையறிவோம், (உதாரணத்திற்கு தேவிடியாமகனே ) ஆண் தன்மீது கொண்ட நல்லொழுக்கத்தை ஆண்மையைக் காப்பாற்ற தாய்மை ஒரு கருவி மட்டுமே.
நாய் வளர்த்தவனுக்கு மட்டுமே விசுவாசம் காட்டும் அதன் நன்றி பொது குணமல்ல, அதன் அறம் நன்றியல்ல. தீ எத்தேசத்திலும் எந்த மூலையில் இட்டாலும் சுடும் அதன் தர்ம்ம் சுடுவது. அதுதான் அதன் பொது அறம் ஆனால் தாய்மை அப்படியல்ல, அவள் தன் குழந்தையை மட்டுமே விசுவாசமாக வளர்ப்பாள். இன்னொரு குழந்தையை அல்ல, எல்லோருக்கும் அவரவர் அம்மா மட்டுமே விசுவாசத்துக்குரியவர்கள், இல்லையென்றால் அம்மா வயதிலுள்ள நடுத்தரவயது பெண்மணியின் மேல் ஒரு ஆணால் காமப் பார்வை பார்க்கமுடியாது. இது ஒரு பொருளாதார உறவு. இதை அந்தளவில் புரிந்து கொண்டால் போதும்.( இளைஞர்கள் பார்க்கும் பெரும்பாலான பாலியல் படங்களில் அவர்களின் அன்னை வயதுள்ளவளைத்தான் அவன் ஆண்டி (aunty) என்ற பார்வையோடு பார்க்கிறான்) இதைத் தாய்மை என்றாக்கி தனக்குகந்தவாறு அதை உன்னதப்படுத்தி ஆண் எல்லாக் காலங்களிலும் தன் சுதந்திரத்தைத் தக்க வைத்துக்கொள்கிறான். பாஸ்கர் மணிக்குக் கூட அன்னை தன்னை பார்க்க வரவில்லை என்ற கோபம் மட்டுமே படத்தின் இறுதி வரை நீள்கிறது. தகப்பன் ஞாபகத்துக்கு வராத காரணம் தகப்பன்கள் எல்லாமே அப்படித்தான் என்ற பொதுபுத்தி அவனை கேள்விகேட்கத் தோன்றவிடாமல் செய்திருக்கிறது.
படம் முழுதும்ஆண்மையப்பார்வையிலேயே நகர்ந்திருக்கிறது. யாருக்கும் பெண்ணின் சுதந்திரம் குறித்தான கேள்விகள் தாய்மையைத்தாண்டி நகரவிடாது காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது . ஒரு காட்சியில் உயிரை, கற்பைக் காப்பாற்றும் பாஸ்கர்மணியிடம் ஒரு பெண் கேட்பது நீங்க என்ன ஜாதி...ஒரு வேளை இது நிஜமான நடந்த சம்பவமாகவே இருந்தாலும் அதை ஏன் அவ்வளவு அழுத்தமாகக் காட்சிப் படுத்த வேண்டும். பெண்ணும் ஜாதிய உணர்வால் தூண்டப்பட்டிருக்கிறாள் என்பதாலா, உண்மையில் அவள் கற்பழிக்கப்பட்டு அங்கேயே கொலை செய்யப்பட்டிருப்பாள் .காப்பாற்றியதற்கு சிறிய நன்றி கூட சொல்லமுடியாத அளவிற்கு ஜாதி அப்பெண்ணை ஆளாக்கியதை (அவளுடைய குழந்தை கதறிக்கொண்டிருக்கிறது. ஒடிப் போய் குழந்தையைத் தூக்கியவள் குழந்தையைக் கொஞ்சாமல் கேட்கும் கேள்வி தம்பி நீங்க எந்த ஜாதி)இயக்குனர் பதிவு செய்யும் நுணுக்கம் ஏன் ஆண்களின் பொறுப்பற்ற தனத்தை சிறு அளவிலும் பதிவு செய்யவில்லை. கேள்வி எழுப்பவில்லை.
எழுப்ப முடியாது, அப்படி எழுப்பினால் அவன் தான் செய்யும் இழிவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் அது தாய்மையை தூக்கிப் பிடிக்க முடியாததாக செய்து விடும், அகி அம்மா செய்தது நியாயம்தானே என்று கேட்க வைத்து விடும். பாஸ்கர்மணியின் சிறு வயது மனநிலை பற்றி படத்தில் சொல்லவில்லை. பாஸ்கர் மணி வளர்ந்து பெரியவனாகி என்ன செய்தானோ அதைத்தான் தாயும் அவன் சிறுவயதில் மனநலம் பிறழ்ந்தபோது செய்திருக்கிறாள், அதைத் தவறென கடைசி வரை நினைத்து அன்னையைக் கன்னத்தில் அறைவேன் என அன்னையைக் கடைசிக்கணம் காணும் வரை வைராக்கியத்தோடு இருக்கும் மணி அன்னை பைத்தியமாய் இருப்பது கண்டு அடைவது தாய்மைப் பாசத்தினால் அல்ல, மனச்சமாதானத்தினால்தான். பாஸ்கர் மணியும் அன்னையை மனநலம் பிறழ்ந்தோர் இல்லத்தில்தானே சேர்கிறான் இதைத்தவிர வேறு மாற்று அவனுக்கு என்ன இருக்கிறது. இதைத்தான் நான் ஆண்மையப் படம் என்கிறேன். ஆண் தன் தாய்க்கு ஏங்குவது படம், முழுக்க பல்வேறு பாத்திரங்களின் வழியாக அழுத்தம் திருத்தமாகச் சொல்லப்பட்டு பெண்ணுக்கான தாய்மையை என்னவாக இருக்கும் என்று எந்த இடத்திலும் காட்டாமல் செய்திருக்கிறார். அகியின் அம்மாவுக்கு இன்னொருத்தர் மூலமாக வந்த குழந்தையின் வாழ்வும் இதனால் பறிபோய்விடக்கூடாதே என்ற தாய்மை கூட தடுத்திருக்கிறலாம். பாஸ்கர் மணிக்கு தன் சக நாயகன் ஏமாற்றப்பட்டுவிட்டானே என்று கூட அறைந்திருக்கலாம். அகியின் அம்மா என்ன சொந்த சுகத்திற்காகவா அப்படிச் செய்தாள் புரியவில்லை. கன்னித்தாய்தான் கடவுளுக்கும் வேண்டியிருக்கிறது, மதத்திற்கும் வேண்டியிருக்கிறது, ஆணுக்கும் அதுதான் தேவைப்படுகிறது. கதை நாயகன் தன் அன்னை மனநலம் பிறழ்ந்து இருப்பது கண்டு அவளைத் தன் கையால் தூக்கி ஒரு இறங்கற்பா பாடத் தோதாக அண்ணன் மகள் தாயைக் கட்டி வைத்திருந்த சங்கிலியைக் கழற்றுகிறாள். பாஸ்கர் மணி பாடத்தொடங்குகிறான். நன்று. எல்லாப் பாத்திரங்களையும் விட பாஸ்கர் மணி தனது தாய் அபிமானத்தைப் பாடலின் மூலம் விளக்கி விடுகிறார். தாயை மன நலம் குன்றிய நிலையில் பார்த்த அவருக்கு மனம் தெளிந்து விடுகிறது. தாய் அப்படியே விடுதியில் சேர்க்கப்படுகிறாள். பின் விட்டுச் செல்வது தன் மகன் என்றோ அல்லது தன்னைக் கவனித்த ஒருவன் என்றோ அக்கறையுடன் அவனது கையைப் பிடிக்கும் தாயை பாஸ்கர் மணி யதார்த்தம் புரிந்து அங்கேயே ஊசி போடச்சொல்லி விட்டுச் செல்கிறான். பாஸ்கர் மணியின் அண்ணன் கதாப்பாத்திரம் யதார்த்தமற்றவர். அன்னைப் பாசத்தை என்ன செய்வதென்று காரணம் புரியாது கைபிசைந்து தன்னுடனேயே வைத்திருக்கிறார். கதை நாயகன் வந்து அன்னைப் பாசத்தை அழகாகப் பாடி முடித்து, இறுதியில் தான் அதுவரை மன நலம் குன்றியிருந்தவன் என்பதை உடல் மொழியின் மூலம் காட்டியவர் இப்பொழுது தெளிந்தவன் எனக் காட்டி பலூன் விற்கிறார். சிறுவனுக்கு ஓசியில் பலூன் தந்து விலை மாது பாத்திரத்தை அர்த்தங்கள் விளங்கா புன்னகையுடன் பார்த்து முதுகு காட்டிச் செல்கிறார்.
படம் முடிவடைகிறது.
சிறுவன் தன் தாயை இன்னொரு ஆணுடன், ஒரு குழந்தையுடன் கண்டதும் தன் தாய் தவறானவள் என்பதைப் புரிந்துகொள்கிறான் என்பதை அவன் காட்சியின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை கையில் வைத்திருந்த அன்னையின் புகைப்படத்தை வீசிவிடுகிறான். கன்னித்தாய் பட்டம் காற்றில் பறக்கிறது. வேகமாக ஓடி வந்து விலைமாது பாத்திரத்தை கன்னத்தில் மாற்றி மாறி முத்தம் கொடுக்கிறான்...அவன் எதிர்பார்த்த ஒழுக்கமான தாய், தன்னை வரவேற்கும் தாய் என்ற எதிர்பார்ப்புகளை அகியின் தாய் நொறுக்கிவிடுவதால் வரும் விளைவு இது. ஒரு சிறுவனுக்கும் ஆணாதிக்க்க் கூறுகளை பால்யத்திலேயே பதியவைத்து விடுவதை புரிந்துகொள்ள முடிகிறது
என்னால் இசை பற்றிப் பேசமுடியுமென்றால் அது இளையராஜாவைத் தவிர்த்து பேசமுடியாத காரியம். அவரின் ரசிகன் நான். ஆனால் இந்தப்பட்த்தில் அவர் செய்திருப்பது இசை அல்ல. வந்தேன் பேர்வழி போனேன் பேர்வழி. அவ்வளவே. அவர் இசையமைத்து முழுமனதுடன் நான் வெறுத்த இசையமைப்பாய் இப்படத்தையே காரணம் காட்டுவேன். (பரதன் இயக்கிய ஆவாரம் பூ திரைப்படத்தின் அறிமுகப்பாடலும் தளபதி பட்த்தின் கதை நாயகன் அம்மாவைப் பார்த்ததும் வரும் பின்னணி இசையையும் நினைத்து நானே என்னைத் தேற்றிக் கொண்டேன்)
இறுதியாக ஆணுக்குத் தேவை அன்னை, சகோதரி மனைவி தோழி இப்படிமங்களேதானே தவிர சுதந்திரமான பெண்ணல்ல. அப்படி இருக்கும் பட்சத்தில் அவனுக்கு பெண் உபயோகப்படப்போவதில்லை.
படமும் அன்னையைப் பற்றியானதல்ல, ஆண்தன்மையைப்பற்றியது.
ஒன்று கற்போடு இருக்கவேண்டும் இல்லையெனில் தாய்மையோடு இருக்க வேண்டும்//
ReplyDeleteஇல்லை இல்லை ! கற்போடும் இருக்க வேண்டும்; தாய்மையோடும் இருக்க வேண்டும்
ஆண்கள் பெண்ணை பார்க்கும் பார்வை மேல் உங்கள் ஓட்டு மொத்த வருத்தமும் பதிவில் தெரிகிறது.
ReplyDeleteviththiyaasamaana (paarvai)vimarsanam!!!!
ReplyDeleteஐயா,
ReplyDeleteவருத்தமா இருக்கிறது. மணிஜீ அவர்கள் எழுதிய விமர்சனத்துக்கு நான் இட்ட பின்னூட்டத்தை உங்களுக்கும் இடுகிறேன்:
வசுதேவனுக்கும் தேவகிக்கும் பிறந்தவன் கிருஷ்ணன், ஆனால் ‘நந்தலாலா’ என்றழைக்கப்படுகிறவன். குருதித் தொடர்பால் அல்ல; குணத்தால் ஆன செயல்பாட்டால் வருவது - ஆம், தாய்மை என்பது ஒரு குணம்.
“நீங்க என்ன சாதிண்ணே?” என்று அவனின் குருதிவழி கண்டுபிடிக்க வினவுகிறாள் சாதிச்சண்டையில் வற்கலவிக்கு ஆட்பட இருந்து அவனால் காப்பாற்றப் பட்டவள். அவன் சொல்கிறான், “மென்ட்டல்”.
தன் உயிரைப் பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கிய அத்தனை பேரும் - இயேசு உட்பட - “மென்ட்டல்” என்றே இனம் காணப்பட்டு இருக்கிறார்கள். பிறவியால் வருவதல்ல காருண்யம். தாய்பிள்ளைகள் என்று சொல்லிக்கொள்ள நாம் சாதி வழி அடையாள அடிதடிகளைத் தாண்டவேண்டும். ஊன்றுகோல் நொண்டி ஒருவனாற்கூட இத் தாய்மையை உணரமுடிகிறது. காட்சியைக் கண்ணேற்கும் நமக்கு வெட்கத்தால் விழிகலங்க வேண்டும்.
பள்ளி மாணவி, இளநீர்ப் பெரியவர், மோட்டார் பைக் மோட்டா மனிதர்கள், பெருவழிப் பரத்தை என்று எல்லாருக்குமே அவரவர் பாடு உண்டென்ற போதிலும் உரிய வேளையில் வெளிப்பட்டுத் தழுவும் தாய்மையும் உட்பொதிந்து இருக்கிறது. பீர் அடித்து, பிறரைக் கோட்டிகாட்டிக் கழியும் ஓர் உல்லாசப் பயணமே வாழ்க்கை என்று கொள்கை கற்பித்தவர்களுக்கு இது வெளிப்பட வாய்ப்பில்லை. கடத்தி, வியாபாரக் காசு பண்ணுகிறவர்களுக்கு அறவே இல்லை. தனக்குள் இன்றி ஒரு தூரத்துக் கட்டளையாய்த் தாய்மையை ஏற்றுச் செயல்படும் புதுமாப்பிள்ளைத் தனிமை விரும்பிகளுக்கு அது முழுமைப்பட வகையில்லை.
ReplyDeleteபைத்தியக் கூட்டத்தில் மகனை விடநேர்ந்ததில் தானும் பைத்தியமாகிப் போவதே தாய்மை என்று உரத்த போதிலும், கைவிடப் பட்டு, இன்னொன்று கிட்டிய அடைக்கல நிலையில், இல்லையென்று ஆனாலும் அந்தத் தாயையும் என்ன குறைசொல்ல? திரும்பு வழியில் எதிர்ப்பயணம் வந்து, பார்வை மாறி, முதல்மகனின் படிமக் கையிருப்பைப் பறத்திவிட்டுப் போகும் அவள்மீதும் இரக்கமே மிஞ்சுகிறது.
பனிகுடத்தில் நீந்திய களிப்பும், அது உடைந்து வெளிக்காற்று தீண்டி வரும் அழுகையும்.
புதிய பார்வை... அரிய விமர்சனம்...
ReplyDeleteமிகச் சிறந்த விமர்சனம்..
ReplyDeleteஅனைவரின் வருகைக்கும் எனது நன்றிகள். தாய்மை என்பது குணம் என்று கூறியுள்ளீர்கள். அது பெண்களின் பொதுக்குணமா அல்லது ஒருத்தருக்கொருத்தர் மாறுபடுமா. குருதித் தொடர்பல்ல ஆனால் ஜீனுக்கு அந்தத் தொடர்பு உள்ளதல்லவா. ராஜசுந்தரராஜன் தாய்மை எப்பொழுதும் ஆணுக்கு இருந்ததில்லை. அவன் பெண்கள் மீது கொள்வது பரிதாப உணர்வே. அகியின் அம்மா தன் சூழலை விளக்கியும் (அது வசனத்தில் இல்லை, விளக்கியிருக்கிறாள் என்பது அவள் உடல்மொழியின் மூலம் வெளிப்படுத்துகிறாள், பாஸ்கர் மணியின் காலில் விழுகிறாள்) பாஸ்கர் மணி அவளின் கன்னத்தில் அறைகிறான். இதே போல் ஸ்னிக்தா பாத்திரத்தை ஏன் அறையவில்லை. நண்பரே நன்கு உன்னிப்பாக கவனித்தால் படம் முழுக்க அகி அம்மா என்ற எதிர்பார்ப்பிலேயே கடத்தப்படுகிறது. பெண் தவறுகள் செய்யலாம், ஆனால் தாய்மை தவறு செய்யக்கூடாது என்று எதிர்பார்ப்பது ஆணின் தாய்மைக் குணமா அல்லது வித்தியாசப்படுத்திக் கொள்தலா...என்னைப் பொறுத்தவரையில் தாய்மை என்கிற ஒரு கருத்தியலை நீங்கள் குணமாகச் சித்தரிக்கிறீர்கள். அது அப்படியல்ல என்பதே என் கருத்து.
ReplyDeleteகுணம் என்றால் என்ன அதிலும் பிறவிக்குணம் என்று நான் எதைச் சொல்லுகிறோம் என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு.
சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் நித்தம் நடக்கும் நடையும் நடைப் பழக்கம்
நட்பும் தயையும் கொடையும் பிறவிக்குணம்
என்று ஒளவை சொல்லுகிறாள். பழக்கத்தால் எல்லாம் வரும் ஆனால் நட்பு தயை கொடை இவற்றை வேறுபடுத்திச் சொல்லுகிறாள். பிறவிக்குணமென்ற ஒன்றை நாம் தான் வேறுபடுத்திப் புரிந்து கொள்ள வேண்டுமென்று எண்ணுகிறேன்.
இன்னும் விரிவாக எழுதுகிறேன் ராஜசுந்தரராஜன்.நாய்குட்டி மனசு, பிரபாகரன், சென்ஷி. தமிழன் உங்களுக்கு என் அன்பு. ஆனால் மேற்கண்ட நான் எழுதிய விமர்சனம் பாராட்ட அல்ல, விவாதிக்க, நீங்கள் விவாதிப்பீர்களென்று நம்புகிறேன்.
ReplyDelete;(வந்தேன் பேர்வழி போனேன் பேர்வழி. அவ்வளவே);
ReplyDeleteதயவு செஞ்சி படத்த இன்னொரு தடவ பாருங்க சார். ராஜா சார பத்தி இவ்வளவு தட்டையான விமர்சனம் சரியில்ல.
நண்பர் இளையபாலு...எனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. படத்தை லட்சம் முறை பார்த்தாலும் என் கருத்து இதுதான். ஏனேன்றால் நானும் இளையராஜாவின் ரசிகன்தான். அதனால்தான் இதை உரத்த குரலில் பதிவு செய்கிறேன்.
ReplyDeleteவசுமித்ர,எத்தனை பெண் விடுதலை பேசினாலும் ,தாய்மை என்பது பாதுகாப்பு வுணர்வு.அந்த வுணர்வின் மீது கட்டமைக்கப்படும் வாழ்வு சீரானது.அதுவே அடிநாதம்.பெண் தன்னை தருவதையே விரும்புவாள்.அகியின் அம்மாவின் குற்ற வுணர்வு காரில் கடக்கும்போது நிழலாக அவள் முகத்தில்.பாஸ்கர் மணியின் அம்மாவின் இயலாமையே அவள் வுன்மத்தம்.இது காலம் காலமாக பெண்ணின் மீது வலிந்து சுமத்தப்பட்டது என்பது வாதமாயினும் ,பெண்ணின் படைப்பே வுணர்வு பூர்வமானது என்பதால் அவள் அதற்குள் இருக்கவே விரும்புவாள்.பெண் விரும்பியே சிலவற்றிகுள் இருக்கிறாள்.
ReplyDeleteநல்லது தோழமையே...தாய்மை என்பது யாருக்கு பாதுகாப்புணர்வு. அதில் யாருடைய வாழ்வு சீராகக் கட்டமைக்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக பெண் விரும்பியே சிலவற்றிற்குள் இருக்கிறாள் என்பது சரியான வாதமா...அப்படியென்றால் ஆணுக்கு அப்படி விரும்பி ஏற்கும் உணர்வுகள் என்ன. தாய்மையை விதந்தோதிய ஆண்கள் ஏன் தந்தைமையை வலியுறுத்த பெயரளவில் சுட்டிக்காட்டக் கூட மறுக்கிறார்கள். பெண்ணின் படைப்பு உணர்வுப்பூர்வமானது என்கிறீர்கள். அப்படியென்றால் ஆணின் படைப்பு...விளக்கவும்.
ReplyDeleteவருகை தந்தமைக்கு என் நன்றிகள்.
தாய்மை குழந்தைக்கு பாதுகாப்பு வுணர்வு.பெண் படைப்பிலேயே வுணர்வு பூர்வமாக படைக்கப்பட்டவள்.ஆண் யதார்த்தவாதி.இது பொதுவான சதவீதம்.மாறுபாடுகள் இருக்கலாம்.ஆண் வேலை,வெளியில் சமுதாயத்தை எதிர்கொள்வது எனவும்,தந்தைமையையும் சேர்த்து பேலன்ஸ் செய்பவள் பெண் என்றும் இருந்தது.காலம் மாறியதில் நிறைய மாறி வந்தாலும் ,எந்த பிரேமிலும் அடைக்க முடியா விஷயங்கள் இருக்கவே செய்கின்றன.
ReplyDeleteஒரு படைப்பு எனக்குத் தந்த பொருளைத்தான் உங்களுக்கும் தரவேண்டும் என்பதில்லை. அப்படி ஓர் absolute value பேரண்டத்தில் எங்கெப்பொழுதும் இல்லை. ஒருவருக்கே கூட ஒருநாள் சுவைக்கும் உணவு இன்னொருநாள் (எ.டு. காய்ச்சலாக இருக்கையில்) சுவைக்கும் என்பதில்லை. உங்களுடைய பார்வை வேறுபடக் கூடாது என்பதில்லை. ஆனால் அது கற்பிக்கும் காரணங்கள் எனக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது, அவ்வளவுதான். இன்னொருவருக்கு உகப்பாகலாம்.
ReplyDelete'நந்தலாலா'வை விட்டுவிடுங்கள். இதன் ஜப்பானிய மூலத்தையும் இப்படித்தான் பார்க்க நேருமா?
தாய்மை பெண்ணுக்கே உரியதானால், அதை ஈனுதல் என்னும் அளவுக்குச் சுருக்குகிறீர்கள். தாயில்லாக் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய அனைத்து உலக ஆண்களையும் மறுக்கிறீர்கள்.
ஓர் இரவுத் தூக்கத்தில் அவர்களை அடைப்புக்குறியிட்டு நகர்கிற மலைப்பாம்பு ஆணா? பெண்ணா? அது தாய்மை, அவ்வளவுதான். திரைமொழி குறியீடுகளால், திரைவெளிப் பங்கீட்டால், கோணங்களால், ஒளி நிழல் வண்ணங்களால், திசைநகர்வுகளால் ஆனது இல்லையா? அவர்கள் கையில் மெழுகுவிளக்கைத் தந்துவிட்டு இருளில் மூழ்கும் சிலையில் தாய்மையை இயேசுவுச் சுமத்துவதா அல்லது மேரிக்கா?
மேலும் இப்படம் கதைசார்ந்தது அன்று, கவிதை சார்ந்தது.
நண்பர் ஒருவர் உங்கள் பதிவுகளை வாசிக்கப் பரிந்துரைத்திருந்தார். என் வேலை நெருக்கடியில் இதுவரை அதை நான் செய்யவில்லை. வாசித்துப் பிறகு உங்கள் புரிதலுக்கான மொழியைக் கண்டுபிடிக்க முடிந்தால் திரும்ப வருகிறேன்.
நந்தலாலா பதிவுகளில் ஒரு வித்தியாசமான கோணம். அருமை வசுமித்ர.
ReplyDeleteதாய்மை கட்டமைப்பின் மன நிலைக்கூற்று பற்றிய டாக்டர் ஷாலினியின் உயிர் மொழி படிக்கிறீர்களா?
அப்பா ஓடிப்போயிட்டாரு என பரத்தை சொல்லும்போது 'அம்மாதான ஓடிப்போவா' என்ற பதில் எதோ தாய்மை கட்டமைப்பை மிதிப்பதாய் நினைத்தேன். இப்படி ஒரு கோணம் இருக்கிறதா அதில்?
அன்பு ராஜசுந்தரராஜன். அவரவர்க்கு கோணம் மாறுபடும் என்றால் ஆண்கள் தாய்மைமையை பற்றி ஏற்றி வைத்துப் பேசுவது என்ன கோணம். நீங்கள் சொன்னபடியே காய்ச்சல் வந்தவனுக்கு ருசி மாறும் அதே போல் இன்னொடரு காய்ச்சல் வந்தவனுக்கும் அதேபோல்தான் இருக்கவேண்டும் இல்லாவிடில் அது காய்ச்சலின் அறம் இல்ல, மற்றொருவனுக்கு இருப்பது வேறு நோய். நண்பரே பசி இயற்கை. பிரபஞ்சத்தில் அது நீங்கள் கூறிய absolute value பசி மட்டுமே. தாய்மை அது இயற்கையானால் ஏன் எல்லோரும் தன் அன்னை போல் அல்லது தன் பிள்ளை போல் மற்றவர்களைப் பார்ப்பதில்லை. எந்த தந்தைமை மோகன்ராஜை மகளே வயதுள்ள சிறுமியைக் கற்பழிக்க வைத்தது. படம் கவிதை சார்ந்தது என்றாலும் அது பெண்ணை தாய்மை நிலைக்கு சொந்தமானவளாகவே காட்டுகிறது என்பேன்.
ReplyDeleteநந்தலாலாவை மட்டுமல்ல அது என்ன மொழி திரைப்படமாய் இருந்தாலும் பெண்களை தவறான கொள்கையுடையவர்களாக அடிமைகளாக சித்தரித்தால் விமர்சிக்கலாம். நான் கிக்கிஜிரோ பார்க்கவில்லை, கதையைப் படித்தேன் அதில் தாய்மை பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. சிறுவனுக்கு அம்மா தேவை, அதே போல் திருடனுக்கும், அதில் தாலாட்டுப் பாடத்தானே இத்தனை நாள் காத்திருந்தேன்....என்ற பாடலும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக நந்தலாலாவில் தாயை மனநல விடுதியில் சேர்த்ததும் கதை நாயகன் தொழிலைப் பார்க்கச் செல்கிறான். மிகுந்த யதார்த்தம் அதை நான் வரவேற்கிறேன். அம்மா பாசம் பாடலோடு முடிகிறது. ஏனெனில் கதைநாயகன் பார்வையில்தான் படம் முழுக்க வைக்கப்பட்டிருக்கிறது. நான் கேட்கும் கேள்வி தனது சூழலைச் சொன்ன அகி அம்மாவை அறைந்த கை ஏன் அந்த ஸ்னிக்தா பாத்திரத்தை அறையவில்லை.
காரணம் ஒன்றுதான் விபச்சாரி என்று காட்டியதுமே அவள் ஆண்கள் பார்வையில் இறங்கிவிடுகிறாள். இன்னொன்று அவளை ஆணே மன்னிக்கிறான். ஆனால் அகி அம்மா ஏற்றிருப்பது தாய்மைப் பாத்திரம் ஆணின் பார்வையில் தாய்கள் எந்தத்தவறும் செய்யாத குழந்தையை மட்டுமே தியானித்துக் கொண்டிருக்கிற ஒரு உயிர் என்ற அடிப்படையான ஆணாதிக்க அளவுகோல்.உலகமெங்கும் பெண்களை ஆண்கள் மிகச்சரியான இடத்தில் பொருத்தி அவர்களை நம்ப வைத்த இடம்தான் தாய்மை. அதனால்தான் பெரியாருக்கு ஆவேசம் வந்தது. சிமோன் விரிவாக எழுதினார் அவருக்கு தாய்மை இல்லையா, இல்லை அது பற்றி அக்கறை இல்லையா நண்பரே சகமனிதன் சகமனிதனின் மீது காட்டும் எல்லா அன்பும் மதிக்கத் தக்கவையே, அதில் தாய்மையை மட்டும் மிக அழுத்தமாகச் செலுத்தி பெண்களுக்கு கடமையென்றல்லவா ஆகிவிட்டது. நந்தலாலா படம் அதை மீறாமல் செய்கிறது. தாயில்லா குழந்தைகளை அணைத்து வளர்க்கும் ஆண்களை நான் மதிக்கிறேன். அங்கும் வளர்ப்பது பெண்ணாகத்தான் இருக்கமுடியும் என்று அறிவேன். ஒருவேளை ஆண்கள் வளர்த்து அதை தந்தைமை என்று சொல்லி அதுவும் ஆண்களின் சிறப்பாகச் சொன்னால் அதுவும் வருத்த்த்திற்குரியதே.
ReplyDeleteநகரும் மலைப்பாம்புக்கு பசியெடுத்திருந்தால் கதை அங்கேயே முடிந்திருக்கும். அது கதைக்கு அவசியமல்ல அதனால்தான் இயக்குனர் அதை கருணையோடு காட்டியிருக்கிறார். அவ்வளவே.
அன்பு லதாமகன், உங்கள் வரவுக்கு நன்றி. நான் ஷாலினியைப் படித்ததில்லை. நமது திரைப்படங்களின் மொழி பெண்ணியப் பார்வையில் எப்பொழுதும் இருந்ததில்லை என்பேன். தொடந்து விவாதியுங்கள்.
ReplyDeleteஉங்கள் மனமொழி இன்னதென்று விளங்கிக்கொள்ள உங்கள் பழைய இடுகைகளையும் வாசித்து அறிய வேண்டும்.
ReplyDeleteபடத்தில் வரும் ஒரு குணவார்ப்பின் பார்வையை - அதுவும் பின்னால் மாறிவிட இருக்கும் பார்வையைப் பிடித்துத் தொங்குகிறீர்கள். "அம்மாதானே ஓடிப்போவாள்?" என்பதும் அகியின் அம்மாவை அறைவதும், தன்னைத் தன் அம்மா கைவிட்டுப் போய்விட்டாள் என்று வன்மம் கொண்டிருக்கும் ஒரு பைத்தியம். பெருவழிப் பரத்தை தனக்கென்று ஒரு மகன் இருந்து அவனைக் கைவிட்டவள் இல்லையே, அவளை ஏன் அறையவேண்டும்?
திரைமொழி என்று ஒன்று இருக்கிறது. ஒரு பத்தாயிரம் ஆங்கிலச் சொல்லாவது படித்தால்தான் ஆங்கிலம் புரியும் என்பது போல் திரைமொழிக்கும் ஒரு கட்டாயம் உண்டு. கவிதை மொழிக்கும் அப்படியே.
அழுதுகொண்டு நிற்கிற குழந்தையை விட்டுவிட்டு அதன் தாயைக் காப்பாற்ற ஓடுகிற காட்சியின் மறைபொருள் என்ன? திரும்புவழியில், பாஸ்கர்மணியும் அகியும் பயணிக்கிற வண்டி நம்மைவிட்டு விலகிச் செல்கையில் அகியின் அம்மா தன் பெண்குழந்தையோடு வரும் வண்டி நம்மை நோக்கி அணுகுவதென்ன?
நான் பெண்ணுக்கோ ஆணுக்கோ தாய்மையைச் சுமத்திக் காட்டவில்லை. அது ஒரு பொதுக் குணம் என்றேன். அதனால்தான் அதைப் பாம்புக்கும் பதுமைக்கும் கூடச் சூட்டினேன்.
நீங்கள் கொண்டுள்ள கொள்கையில் ஒரு கோளாறும் இல்லை. எனக்கும் அது உடன்பாடான கொள்கைதான். அதை உரத்துச் சொல்ல 'நந்தலாலா'வைச் சுருட்டி ஊதுகுழாய் ஆக்கிய உங்கள் கொள்கைப்பிடிப்பும் திறைமையும் பாராட்டப்பட வேண்டும் போலும். பைத்தியம் பாஸ்கர்மணி ஆனதைப்போல் இப்போதுதான் எனக்கும் சற்றுத் தெளிவு தோன்றுகிறது. நான் உங்களிடம் தோற்றுவிட்தை ஒப்புக்கொள்கிறேன். தொடர்ந்து எழுதும்படி வேண்டிக்கொள்கிறேன்.வாழ்க!
நானும் யோசித்தேன் ..
ReplyDeleteஅகி அம்மா சொன்ன காரணத்தை வெளியிட்டிருந்தால் இன்னும் விமர்சிக்கப்படலாம் என்றிருக்கலாம்..
ஆண்களுக்காக அவர்கள் திருப்திக்காக எடுக்கப்பட்ட இன்னொரு தாய்மைச்சுமையே...
இதே தான் மந்திர புன்னகையிலும்..
என் விமர்சனம் இங்கே.
http://punnagaithesam.blogspot.com/2010/11/blog-post_27.html
நன்பர்களே தாய்மை என்பது குணம், பாதுகாப்புணர்வு அது பெண்ணுக்கே உரியது என்பது இயற்கை என்பது போல் பேசுபவர்களிடம் எனக்கு சில கேள்விகள்: குழந்தைப் பெருவது என்பது ஒரு உயிரியல் செயல்பாடாக இருக்கிறது. ஆண் பெண் இருவரும் அதற்கு காரணமாய் இருக்கும்பொழுது பெண்ணுக்கு மட்டும் பேணும் பொறுப்புகளும், ஆண் வெளியில் சுதந்திரமாக சென்று பொருள் ஈட்டும் பொறுப்பும் எந்த உயிரியல் அடிப்படையில் பிரிக்கப்பட்டது? பிள்ளை பெறும் காலத்தில் அவள் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டிய அவசியத்தால் அந்தக் காலத்தில் மட்டும் தானே ஆண் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும். பின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாமல், பிள்ளையை வளர்ப்பதில் சரிபாதி கோட்பாடுகளை நிறுவாமல் பெண்ணுக்கு மட்டும் அக்கடமைகளை நிறுவியது யார்? குல வாழ்க்கை முறையில் இல்லாத இப் பாலியல் பிரிவினைக் கோட்பாடுகள் திடீரென்று யாரால் புகுத்தப்பட்டது? அதை பெண்ணும் உளப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அடிபணியும் விதத்தில் சாதி, சடங்கு, புராணம், இலக்கியம் என்று எல்லா இடத்திலும் நீட்டித்து அதை விதியாக மாற்றியது யார்? பெண்களா? இதையெல்லாம் படைத்தது ஆண்கள்தானே? தாய்மைக்கு இத்தனை கோட்பாடுகள் நிலவும் பொழுது, தந்தமைக்கு என்ன கோட்பாடுகள் உள்ளது?
ReplyDeleteபாலியல் தேவையை ஒழுங்குபடுத்தித் தருவதில் ஓர் அமைப்பாக குடும்பம் என்ற அமைப்பு தேவை என்பதைத் தாண்டி அவ்வமைப்பு முன்மொழிவது சுயநலம். என் குழந்தை, என் கணவன், என் குடும்பம் என் சொத்து அவ்வளவுதான். குடும்பம் எனும் அமைப்பு மூலம் தனிச்சொத்தை பெருக்கிக்கொள்ளவும் அதை சரியாக பாதுகாக்கவும் வாரிசுகள் தேவை, அவ்வாரிசுகளை பொறுப்போடு வளர்க்க ஓர் பணியாள் கடமையுணர்ச்சியோடு தேவை அந்தப் பணியாள் தானே முன்வந்து அதைச் செய்யவேண்டும். சொத்துக்களை பாதுகாக்கும் வாரிசுகளை செழிப்புடன் வளர்க்க இரத்த உறவு கொண்டவரே நம்பிக்கையானவர். அவ்வகையில் பெண் (பெற்றவள்) தானே இருக்கிறாள். அந்த அடிப்படையில் ஏற்றிவைக்கப்பட்டதே தாய்மை. உயிரியல் அடிப்படையில் பெண் பலகீனமானவள், உணர்ச்சிவசப்படுபவள் அதனால் தான் அவளை பாதுகாக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டோம் என்று சொல்பவர்கள் எல்லாம் ஆண்களே.
ReplyDeleteவித்தியாசமான பார்வை ..வாழ்த்துக்கள்..
ReplyDeleteஇந்த ஆணாதிக்கமுறைமை கட்டமைத்த தாய்மைச் சிந்தனையை அப்படியே தூக்கிப்பிடிக்கிறது நந்தலாலா. அதனால் தான் அப்பா ஒடிட்டார் என்று சர்வசாதாரணமாக சொல்லி சிரிக்கிறார்கள் கதை நாயகர்கள். அப்பாவின் மீது அவர்களுக்கு எந்த கோவமும், கேள்வியும் இல்லை. ஆம்பளன்னா அப்படித்தான்யா விட்டுட்டு ஓடுவான், பொம்பள குழந்தைக்காக வாழ்ந்துதான்யா ஆகனும் என்று உரக்கக் கூறுகிறார் இயக்குனர்.
ReplyDeleteநல்ல அலசல்.. நியாயமான புரிதல்...
ReplyDeleteபயணங்களும் எண்ணங்களும் நான் புன்னகைதேசம் படித்து விட்டு எழுதுகிறேன்.
ReplyDelete‘உங்கள் மனமொழி இன்னதென்று விளங்கிக்கொள்ள உங்கள் பழைய இடுகைகளையும் வாசித்து அறிய வேண்டும்.’
ReplyDeleteநன்றி நண்பரே... எனது பழைய இடுகைகளை வாசியுங்கள். அதே கணத்தில் நந்தலாலா இயக்குனர் இயக்கிய முந்தைய திரைப்படங்களில் வரும் இரண்டு குத்துப் பாடல்களையும் அவற்றின் பெண்ணிய குணவார்ப்பையும் எனக்கு விளக்குங்கள்.
“திரைமொழி என்று ஒன்று இருக்கிறது. ஒரு பத்தாயிரம் ஆங்கிலச் சொல்லாவது படித்தால்தான் ஆங்கிலம் புரியும் என்பது போல் திரைமொழிக்கும் ஒரு கட்டாயம் உண்டு. கவிதை மொழிக்கும் அப்படியே.”
நல்லது நண்பரே... திரைமொழி பற்றி கவிதையியல் பற்றி எனக்கு விளக்க இருக்கிறீர்கள், அதை வேறொரு தலைப்பில் விவாதிக்கலாம். நான் படத்தின் கருத்தியலைத்தான் விவாதித்தேன். வேண்டுமென்றால் கவிதை குறித்தும் திரை குறித்தும் விரிவாக விவாதிக்கலாம் எனக்குத் தெரியாததைக் கற்றுக்கொள்ள சித்தமாக இருக்கிறேன்.
தொடர்ச்சி....
ReplyDeleteநான் பெண்ணுக்கோ ஆணுக்கோ தாய்மையைச் சுமத்திக் காட்டவில்லை. அது ஒரு பொதுக் குணம் என்றேன். அதனால்தான் அதைப் பாம்புக்கும் பதுமைக்கும் கூடச் சூட்டினேன்.
அப்படியென்றால் தந்தைமை என்றால் என்ன விளக்குங்கள்.
’நீங்கள் கொண்டுள்ள கொள்கையில் ஒரு கோளாறும் இல்லை. எனக்கும் அது உடன்பாடான கொள்கைதான். அதை உரத்துச் சொல்ல 'நந்தலாலா'வைச் சுருட்டி ஊதுகுழாய் ஆக்கிய உங்கள் கொள்கைப்பிடிப்பும் திறைமையும் பாராட்டப்பட வேண்டும் போலும்’
மிக்க நன்றி எனது கொள்கையைக் கொண்டு வேறு எதை சுருட்டி ஊதுகுழலாக்கி ஊத வேண்டும் சொல்லுங்கள். இதற்கும் நான் தங்களின் துணையையே நாடுகிறேன்.
விவாதத்தில் கருத்து கூறுதலில் வெற்றி தோல்வி என்று கிடையாது. நாம் என்ன கற்றுக்கொண்டோம் எதைப் பார்க்க மறந்தோம், இல்லை மறுத்தோம், அதற்கப்பால் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம் என்பதில்தான் என் கவனம் செல்லும்.
தொடர்ந்து எழுதுகிறேன்.
நன்றி..
கிகுஜிரோ ஒரு ஆண்தன்மை (Masculine) கொண்ட படம் தான்.. கிட்டனோ'வின் படங்கள் எல்லாம் அப்படித் தான்.. ஆனால் அவர் எப்போதும் மனிதர்களை தீர்மானிப்பதில்லை (no judgement).. அது கலை ..அவர் ஒரு கலைஞன்..
ReplyDeleteநந்தலாலா ஒரு fake film.. மிஷ்க்கின் ஒரு fake artist..
பொதுவாக ஒரு சினிமா'வை அரசியல் பார்வையில் மட்டுமே பார்பதென்பது எனக்கு உவப்பாக இருந்ததில்லை.. அதன் அனுபவசாரமும் (film experience) வர வேண்டும் என்று நினைப்பேன்...இருப்பினும் உங்கள் கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் எனக்கு ஐயமில்லை..
கொற்றவை,குழந்தை பெறுவது வுயிரியல் செயல்பாடுதான் எனினும் கருவை பெற்றுக்கொள்ளும் பெண் அவள் வுடலில் ஏற்படும் பயாலஜிகல் மாற்றங்களால் அதை மனம் சார்ந்து சுமக்கிறாள்.வுடற்கூறு சம்மந்தப்பட்டது அது.
ReplyDeleteசுதந்திரம் என்பது ஆண் பெண்ணுக்கு தருவதில்லை என்றும் நீ என் சக மனுஷி என்றும் ,எல்லா பொறுப்புகளையும் பகிர்ந்து கொள்ளும் கணவருடன் என் வாழ்வு.பெண்கள் நசுக்கப்படும்போது ,'நான் அடிமைப்படமாட்டேன் என்ற தீ வுன்னுள் இருந்து எழ வேண்டும் ,அதை புரிந்து கொள்ளும் கணம் வுன்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது',என்று சொல்கிறேன்.
மனம் சார்ந்த விட்டுகொடுத்தல்தான் வாழ்க்கை.தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டது தாய்மை.
அன்பு வசு
ReplyDeleteநான் பாஸ்கர்சக்தி...உங்கள் ப்ளாக்கில் நுழையும்போதெல்லாம் சின்ன வயசில் பூதங்கள் இருக்கின்றதோ என்று நான் பயந்து பயந்து நுழைந்த என் தாத்தா வீட்டு சாமி ரூம்பு நினைவுக்கு வந்து மயிர்க்கூச்செறிகிறது...
உங்கள் பாம்பு பற்றிய கமெண்ட் வெடித்துச் சிரிக்க வைத்தது.(நகைச்சுவை மிக முக்கியம் அமைச்சரே!).....கருத்தளவில் எல்லாம் சரிதான் வசு. விலங்குகளில் கூட குட்டிகளை வயது வரும் வரை பேணும் பொறுப்பை பெண் இனமே ஏற்றுக்கொள்கிறது....குஞ்சுகளுக்காக பருந்திடம் போராடும் கோழியை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். சேவல் ஒரு போதும் அலட்டிக் கொண்டதேயில்லை...இனம் அழியக்கூடாதென்று இயற்கை ஏற்படுத்தி வைத்த ஏற்பாடு. மரபணுக்களிலேயே அது இருக்கிறது...நாம்தான் சிந்திக்கிற மனிதர்களாயிற்றே! கடவுளைப் படைத்து போலவே தாய்மையையும் படைத்து விட்டோம்..
பகுத்துப் பார்த்தால் அனைத்து உறவுகளும் பொருளியல் சார்ந்தவை என்கிற உண்மை மார்க்சியத்தை ராப் போசனமாக்க் கொண்ட உங்களுக்குத் தெரியாதா? அனைத்து உறவு சார்ந்த மேன்மைகளுமே கற்பிதம்தான் எனினும் அதனைக் கழித்துப் பார்த்தால் எஞ்சுவது வெறுமைதான்.
நகைச்சுவையாக ஒன்று தோன்றுகிறது. உங்கள் அம்மா தனத் தாய்மைப் பாத்திரத்தை செம்மையாக நிறைவேற்றத் தவறி இருந்தால் இதனையெல்லாம் எழுதி இருக்க மாட்டீர்கள்.. (தேனி மாவட்டத்தின் தாதாவாக நீங்கள் இருக்க மகேந்திரன் உங்களை என்கவுண்டரில் போட தேடிக்கொண்டிருப்பான் எப்பூடி?)
இந்த விமர்சனத்தையும் படித்தேன்.வித்தியாசமாக படத்தின் மறுபக்கத்தை காட்டுகிறது..படம் கருத்தியலுக்கு அப்பாற்பட்டு ஒரு நல்ல சினிமா இந்த நந்தலாலா....
ReplyDeleteவணக்கம் பாஸ், வருகைக்கு மகிழ்ச்சி. என் அன்பு. உங்கள் வருகையை நான் எதிர்பார்க்கவும் இல்லை.
ReplyDeleteபாஸ்...விலங்குகளில் தாய்மையுணர்வு பற்றி எழுதுயிருக்கிறீர்கள். ஆனால் பாஸ் பாம்புகள் தங்கள் குட்டிகளைத் தின்பதை, சில பூனைகள் தின்பதையும் நான் கண்டிருக்கிறேன். ஆனால் அவை எவையும் தாய்மை என்பதை ஒரு சட்டமாக கொள்வதில்லை.
பாஸ் என் அன்னை எனக்கு எல்லா சட்ட திட்டங்களையும் சொல்லித் தரவில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். அதையும் தாண்டி ஒரு மகனாக நான் தவறு செய்தால் அதற்காக எனக்கு வக்காலத்து வாங்குவார்.அதையும் தாய்மை எனச்சொல்லுவார், என்னால் பாதிக்கப்பட்டவருக்கு அவரின் தாய்மை உபயோகப்பாடது. எனக்குத் தெரிந்து என்னை குறிப்பிட்ட அளவில் காந்தியமும், நான் இன்று வரை கற்றுக்கொண்டிருக்கிற மார்க்சியம்தான் வழிநடத்துகிறது. என் தாயல்ல. என் தாய் எனக்கு மட்டும்தான் தாய், மற்றவர்களுக்கல்ல என்பதை நாம் அனைவரும் அறிவோம்.உலகமும் அப்படித்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. எல்லா உணர்வுகளும் பொருளாதாரத்தைச் சார்ந்தவை என்று மார்க்சியம் அறிவிக்குமாயின் அது வறட்டு மார்க்சியமாயிருக்கும். மார்க்ஸ் கல்லறையில் எங்கெல்ஸ் மார்க்ஸ் இறப்பைக் குறிப்பிடுகையில் ஜென்னி இறந்தவுடனேயே மார்க்ஸ் இறந்து விட்டார், அவர் ஒன்றரை ஆண்டுகாலம் நடைபிணமாகத்தான் வாழ்ந்துகொண்டிருந்தார் என்று சொல்லியிருக்கமாட்டார். பாஸ் எல்லா உறவுகளும், அன்பினால் கட்டப்பட்டவை என்றே நானும் கருதுகிறேன்..ஆனால் என் அன்பு இன்னொருவரை அடிமையாக்கினால் (அது அவர்களுக்கு எவ்வளவு பேறாய் இருந்துவிட்டுப் போகட்டுமே) அதனை எப்படிப் பொறுத்துக்கொள்ளமுடியும்.
பாஸ்... மார்க்சியத்தை அறத்தின் வழியில் பேசவேண்டுமென்றுதான் நானும் நினைக்கிறேன், இடது சாரிகளின் கட்சி, அமைப்பு, சுதந்திரம் அனைத்தும் பொதுத்தளத்தில் தடை செய்யப்படுமாயின் மகேந்திரன் என்னைப் போட்டுத்தள்ளுவார், அப்போது நான் தாதா அல்ல எனக்கு வேறு பெயர் அளிக்கப்படும். (இப்பூடி)
ungaludaiya paarvai migavum niyaayamaanathe.mishkin enna solla ninaiththaaro athai isai gnaniyum inainthu sollivittaar.athu ungal paarvaiyil ippadi irunthaal avarudaiya thavaru allllla.
ReplyDeleteஅருமையான பார்வை. ஒளித்து வைக்கப் பட்ட உண்மையை எடுத்துரைத்த விமர்சனம். நன்றி.
ReplyDeleteமிக மிக வித்தியாசமான பார்வை. அருமை.
ReplyDeleteilayaraja will not give a expected music,though if he repeating the same music which he gives or u resembles any old music of him in older days of raja sir music that is raja.,in this age pls any technician who cop up with the younger generations,the proverbs which u used against raja sir is how casual comment against legend.no good films will escape from raja sir,eg:kaasi,bharathi,pazhassiraja,paa,nankadavul,nandalaa,mayilu,azhagarusamy kuthirai,in future more, technicians main thing is to satisfy director of the film, music is like a water, when u pour in a tumler it will have a tumler shape,raja sir music is like that only,he creates music like water.it reacts whatever the audiences thinks,raja sir will not compose for good comments he will compose for the moods though the moods may be old or be very normal so is music derives to be normal, what a technician ,a good script a good director,goes to raja sir, this name no other technician had bagged that in india or in the world hatsoff raja sir,u r the default for the good scripts.rishal sai
ReplyDeleteபுலவன் புலிகேசி, butterfly surya உங்களுக்கு என் நன்றி. நந்தா ஆண்டாள் மகன் படத்தின் கருத்தியலைத்தான் நான் விமர்ச்சித்துள்ளேன், அதையும் தாண்டி நல்ல படம் என்றால் நான் எப்படிப் பார்ப்பது.
ReplyDeleteநன்றி.
ReplyDeleteஅன்பு rishal.... வணக்கம். ராஜாவின் இசையை நானும் நேசிக்கிறேன். நம்பி ஏமாந்தும் போயிருக்கிறேன். இயக்குனர் கேட்கும் மனநிலைக்கான இசையை மட்டும்தான் ராஜா தருகிறார் என்றால்...அவர் இசையமைத்த பல படங்களின் இயக்குனர்களைப் பாருங்கள் அவர்களெல்லாம் சொன்ன யோசனைக்காகவா ராஜா இசையமைத்தார்...இன்னும் சொல்லப்போனால் இயக்குனர்கள் அவரிடம் அதிகம் வைத்த வேண்டுகோள் ...கேட்டா அப்டியே உருகிப்போயிடணும்ங்க...என்ற ரீதியில்தான் இருக்கும். இதை நந்தலாலா இயக்குனரும் சொல்லியிருக்கலாம் நடந்தது என்ன, அவர் இசைக்கோலங்களை கேட்டவன் என்ற முறையில்தால் நான் பேசுகிறேன். மிக எளியதாகப் புரிந்துகொள்ள வேண்டுமாயின் வழக்கமாய் சாப்பிடும் உணவகத்தில் ஒரு மாஸ்ட்டர் மாறினாலே நாக்கு தவிக்கிறது. ராஜாவோ இசையின் அத்தனை சாத்தியப்பாடுகளையும் நம் செவியில் இறக்கி விட்டு இப்பொழுது இந்தாவென்று ஊசிப்போனதைக் கொடுத்தால்...எப்படித் தின்பது. இளையதலைமுறை பொறுப்பற்று விமர்சிக்கிறது என்று கூறியுள்ளீர்கள். உங்கள் பார்வையில் இளைய தலைமுறையை நீங்கள் எப்படி புரிந்து வைத்துள்ளீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஒரு வேளை இளையதலைமுறை தனக்கேயுரிய விடலைத்தனத்துடன் பொற்றுப்பற்றுப் பேசினாலும் அதில் உள்ள உண்மையை மறுக்கக் கூடாது அதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றே நினைக்கிறேன்.
நீங்கள் ராஜாவுக்காக பேசியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நான் இன்னும் அவர் இசைக்காக காத்திருக்கும் ரசிகனில் ஒருவன்தான்....
உங்கள் வருகைக்கு நன்றி rishal....
//கருத்தியலுக்கு அப்பாற்பட்டு ஒரு நல்ல சினிமா இந்த நந்தலாலா...// - எல்லா பாகங்களும் ஒன்று சேர்ந்ததுதான் உடம்பு (அலல்து மனிதன்) என் வாய் மட்டும் கெட்ட வார்த்தை பேசும் ஆனால் நான் நல்லவன் என்று சொல்வது போல் உள்ளது இது. கதை, கருத்தாக்கம், இசை, தொழிநுட்பம் இப்படி எல்லாம் கொண்ட ஒரு படைப்பத்தான் திரைப்படம் என்கிறோம். அதை முழுமையான பார்வையோடு தான் விமர்சிக்கமுடியும். வெறும் தொழில்நுட்பத்திற்காகவும், காட்சியமைப்பிற்காகவும் பாராட்டவேண்டுமென்றால் அதைப் படைப்பு, படம் என்று கூறாமல் Montage / Trailer / Advertisement for Techinical Aspects என்று அழைத்துக்கொள்ளலாம்.
ReplyDeleteஆணாதிக்க சிந்தனையுடன் எடுக்கப்படும் கதாநாயக தன்மையிலிருந்து (heroism) இப்படம் சிறிதும் மாறுபடவில்லை என்பதற்கு ஒற்றை காட்சி போதும், பாஸ்கர் மணியின் அண்ணன் பூட்டி வைத்த தாயை மீட்பது கதாநாயகன்.. அதை ஏன் அந்த அண்ணனே செய்து இருக்க முடியாது? The author is always unconscious in his text என்ற மேற்கோள் ஞாபகம் வருகிறது.
சிறந்த தொழில் நுட்பத்துடன் வித்தியாசமான முயற்சியில் தயாரிக்கப்பட்டது என்பதற்காக தங்கத்தில் அரிசி செய்துக்கொடுத்தால் சாப்பிடமுடியாது. அதனால் ஒரு பயனும் இல்லை..
முதன்முறை தங்கள் பதிவைப் படிக்கிறேன். கடைசி வரி வரையில் ஒரு பெண்தான் எழுதி இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஒவ்வெரு வார்த்தையிலும் பெண்ணியம். ஓர் ஆண் இப்படி ஒரு பதிவை எழுதியது வியப்பளித்தது. தங்கள் கருத்தை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் தங்கள் எழுத்து மிகவும் பிடித்திருந்தது.
ReplyDelete//ஆணுக்கு அவன் அன்னையைப் பற்றி இழிவாக பேசினால் வெறியேறுகிறது. இதில் ஏற்படும் வெறி தானொரு தாய்ப்பாசத்தினால் ஆளப்பட்டவன் என்பதல்ல நான் ஒருத்தனுக்கு பிறந்தவன் என்ற ஆணாதிக்கக்கூற்றே//. - உடன் படவில்லை எனினும் மிகவும் ரசித்தேன்
நேர்மையான பதிவு ...
ReplyDeleteகார்த்திக் உங்கள் வருகைக்கு நன்றி. கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் எழுத்து பிடித்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறீர்கள், நன்றி கார்த்திக் ஆனால் விமர்சனங்களை நாம் எப்பொழுதும் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்றே நினைக்கிறேன், ஒரு பிரச்சினையை எழுத்தில் அழகாக எழுதுவதன் மூலம் அதன் கருத்தியலை ரசிக்க வைக்கும் எழுத்துக்களும் இருக்கிறது. அங்குதான் நாம் மாற்று பார்வையைக் காணமுடியாமல் போவதற்கும் காரணமாய் இருக்கிறது. ஆணாதிக்கக் கூற்றைப் பற்றி நாம் விவாதிக்கலாம். நன்றி.
ReplyDeleteவணக்கம் பால்...விரிவாக விவாதித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். வருகைக்கு நன்றி.
ReplyDeleteஉண்மையில் எல்லா திரைப்படங்களுமே ஆணாதிக்கப் பார்வைதான்...ஆனால் முடிந்தது அவ்வளவுதான்...பெண்கள் திரைத்துறையில் வருவதற்கு ஊக்குவிக்கப்பட்டால்தான் அவர்கள் பார்வையில் படங்கள் வரும்...அவர்களும் கதாநாயகியாகத்தான் வர ஆசைப்படுகிறார்களே தவிர கடினமான 'இயக்குனர்' ஆவதற்கு நிறையப் பெண்கள் தயாராக இல்லை...
ReplyDeleteபுதிய பார்வை... அரிய விமர்சனம்...
ReplyDeleteஉங்கள் வலை பூவுக்குள் நுழைவது இதுவே முதல் முறை உண்மையில் ஒரு அருமையான பார்வை அந்த திரைப்படம் இந்த அளவுக்கு சமுக கண்ணோட்டங்களை அலச வைத்து எங்களுக்கும் பல பார்வைகளை கொடுக்க வைத்ததற்கு மிஷ்கினுக்கும் ஒரு நன்றி(உங்களுக்கும் தான் ). ஆம் பதிவை விட அந்த பதிவின் மறுமொழிகளுக்கு நீங்கள் தரும் விளக்கங்கள் மிக அருமை. நான் சமீபகாலமாக தான் பதிவுலகில் உலவி வருகிறேன். இது போன்ற நல்ல பகிர்வுகளால் பல தெளிவுகளை பெற முடிகிறது. ஆம் நம் வளர்ச்சியில் annaikku பெரும்பங்கு உண்டென்றாலும் அதையும் தாண்டி நாம் பயணிக்கும் தடங்கள் தான் நம்மை கட்டமைக்கின்றன உங்கள் அத்தனை கருத்துக்களோடும் நான் உடன்படுகின்றேன். இதை பேச்சோடு நிறுத்திவிடும் பலர் போல் அல்லாமல் வாழ்வில் செயலபடுத்த விரும்புகிறேன். நீங்கள் எப்படி?
ReplyDeleteநானும் அப்படித்தான். வருகைக்கு நன்றி
ReplyDeleteDear vasu,i have read your comments about illayaraja's score...the content of the score is in perfect synchronisation with the movie.the reason you are feeling like that is because..the volume of the score is not determined by the composer.when a scene is going on,the content of the score is being played,but the volume is determined by the sound editor and the director.the composer dont have any involvement.the trouble is that directors become so addicted to the melody in the score of raja that they decide to use it in full volume because it certainly enhances the mood and connects to the ordinary audience who does not know about world cinema.in tamilnadu 99% people are seeing cinema in a different way and not like you and apart from that music usage to tell a story has been prominent among tamil culture(thERU KOOTHU,VILLUPAATU).only a handful of people are seeing the movie for symbolism and other world cinema factors,For others they have gone used to a particular template.nandhalala is made for tamil audience and has been inspired by japanese movie.the score of kikujiro,if you notice the volume of the score is used correctly but in tamilnadu it will be used to tell a story that is why it is like that.moreever,tamil movie viewers have to make an empotional contact with the movie,i dont think that they can have emotional connections through visuals,for that raja's music is the only way,in fact thats always been the way. more ever,its good to see that you intepreted the movie based upon visuals,if you try to interpret the movie based on background score then you can say that the quality of the score and whether raja's score is worth enough...i hope you are catching the drift.The usage of score is very different in various countries.korean movies usage of score is to make the movie way to melodramatic.
ReplyDeletei dont believe the word " world cinema".tamilnadu also is in this world.people are talking as ifl movies are taken in an alien world.in all the countries crap movies are turned out every year,i dont know why everyone are complaining about tamil movies.
வணக்கம் hitherto...எனக்கு ஆங்கிலத்தில் படிக்கத் தெரியாது. எனது வாழ்நாள் துணை கொற்றவையின் உதவியால்தான் உங்கள் விமர்சனத்தை நான் புரிந்துகொள்ள முடிந்தது.
ReplyDeleteஎனக்கு இசை பற்றிய நுணுக்கங்கள் அவ்வளவாகத் தெரியாது. ஆனாலும் இசைக்கான தேவை என்ன,இசை பெரும்பாலும் யாருடைய தேவைக்காக பயன்படுகிறது, இசையின் அரசியல் என்னவென என ஓரளவுக்குத் தெரியும். தமிழ் மக்களின் இசை அறிவு விரிந்தது. அதேயளவு இங்கு இசையமைப்பாளருக்கும் தெரிந்திருக்கவேண்டும். ராஜாவை மீறி அவரது இசையை இயக்குனர் பெரிதாக தொந்தரவு செய்துவிடமுடியாது. வேண்டுமென்றால் மிஷ்கின் அவர்கள் ,தான் படித்ததாக சொல்லிவரும் ஜோர்ழ்ஜ் பத்தேயின் நாவல்கள் குறியீடுகளைச் சொல்லி ராஜாவைக் குழப்பி விட்டிருக்கலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக ராஜா பிறந்த பண்ணைப்புரத்துக்கும் எனது ஊருக்கும் ஒரு 16 கிலோமீட்டர்கள்தான் தூரம். பண்ணைப்புரத்தில் ராஜாவை இன்று வரை அங்குள்ளவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள், எப்படி பார்க்க வைக்கப்படுகிறார்கள் என்ற அரசியலும் தெரியும்.
ராஜாவை தோல்வியுற வைப்பதில் பார்ப்பனியம் இசையால் தோற்று, கடவுள் பெயரால் அவரை உள்ளே தின்று செரித்துக்கொண்டது. திருவண்ணாமலைக்கு அவர் செய்த உதவிகளில் ஒரு சிறு துளியையும் அவர் பண்ணைப்புரத்திற்குச் செய்தது கிடையாது. ஆனால் இசையின் மகத்துவங்களை அவர் கற்றுக்கொண்டது பண்ணைப் புரத்தில்தான்.
அவரது இசை தாண்டி அவரை விமர்சித்தாலும், எனக்கு இன்னமும் காதில் ஒலித்துக்கொண்டிருப்பது அவரது இசை மட்டுமே. அவரது இசைக்குப்பின்னான வெற்றிடத்தை அவரே நிரப்பவேண்டுமென என் காதுகளை அவருக்குத்தான் எப்பொழுதும் திறந்தே வைத்திருக்கிறேன்.
நான் ராஜாவின் இசைக்கு என்றென்றும் ரசிகன்., அந்த தரப்பிலிருந்தே சொல்கிறேன் நந்தலாலாவுக்கு அவர் மிக மோசமான ஒன்றையே செய்திருந்தார்.
நீங்கள் தமிழில் விமர்சனங்கள் வைத்தால் என்னால் இன்னும் விரிவாக எழுதமுடியும்.
ரொம்ப வித்தியாசமான பார்வை.
ReplyDeleteவசுமித்ரா...
ReplyDeleteநந்தலாலா கதை சொல்லுதலில் உள்ள புரிதலை விட அதன் மௌனங்களில் தான் கதை சொல்லப்படுகிறது. அகியின் பாட்டி அசைவற்று இருப்பதில் தொடங்கி படம் நீளவும் இந்த ஓட்டம் இருக்கிறது. படம் தாய்மை பற்றி பேசுகிறது என்ற உங்கள் புரிதலுக்கு நன்றி. ஆனால் படம் அது பற்றியே பேசவில்லை. படத்தில் தேவையற்ற காட்சிகள் இருக்கின்றன என குறை யுள்ளது. ஆனால் நிராரிக்க முடியாத படம். தளபதியின் அரசியலுக்கும் நந்தலாலாவின் அரசியலும் வேறு வேறு. அதன் இசையும் அப்படித்தான்
வணக்கம் atheethaa...
ReplyDeleteபடத்தின் கதை மௌனத்தில்தான் சொல்லப்படவேண்டுமெனில் இசையே தேவையில்லையே. படம் தாய்மையைப் பற்றிப் பேசுவதாக எனது புரிதல் இருக்கிறது. நல்லது. படம் வேறு எதைப்பற்றிப் பேசுகிறது என்று விளக்கவும்.
பாஸ்கர் மணி வரும் வரை அவரது தாய் சங்கிலியால் கால்கள் கட்டப்பட்டு, பின் வந்ததும், அவர் தன் தூக்க வசதியாய், ஒரு சிறுமி ஓடி வந்து பூட்டை அவிழ்த்ததும் “ தாலாட்டு கேட்க நானும்” என்று ராஜா படத்தொடங்குகிறார். இது தாய்மையில்லை எனில் வேறு என்னவிதமான உணர்வை உங்களுக்குத் தந்தது. இங்கும் மௌனத்திலேயே கதை சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்.
தளபதிக்கும் நந்தலாலாவுக்கும் ராஜாதான் இசையமைத்திருந்தார். நான் இசையைத்தான் ஒப்பிட்டிருந்தேன். அதையும் தாண்டி நீங்கள் கண்ட தளபதியின் அரசியல் மற்றும் நந்தலாலாவின் அரசியலை சற்று விரிவாக விளக்கினால் கற்றுக்கொள்ளத் தயாராய் இருக்கிறேன். படத்தை நான் நிராகரிக்கவில்லை. விமர்சித்திருக்கிறேன்.
பின்னூட்டத்திற்கு நன்றி. என் பெயர் வசுமித்ரா அல்ல. வசுமித்ர.
வணக்கம்.
Female rats given oxytocin antagonists after giving birth do not exhibit typical maternal behavior. By contrast, virgin female sheep show maternal behavior towards foreign lambs upon cerebrospinal fluid infusion of oxytocin, which they would not do otherwise. Thanks Wikipedia.
ReplyDeleteவணக்கம் Someone on the Road ....எனக்கு ஆங்கிலம் தெரியாது. இருந்தாலும் எனது துணையின் உதவியால் அறியப்பெற்றேன்.நண்பரே உயிரியலை வேதியலின் மூலமாகத் தீர்மானிப்பது எளிதே. அதே சமயம் ஒரு கருத்து லட்சக்கணக்கான மக்களைப் பற்றுகிற பொழுது அது பொருளாக மாறுகிறது என்கிற மார்க்ஸின் கூற்றையும் நாம் துணைக்கு அழைக்கவேண்டும். ஒரு வேதியல் காரணி அது உடலில் தங்கியிருக்கும் வரை செயல்படும், ஆனால் சில கருத்துகள் உடல் அழியும் வரை அழியாது. வேதியல் மாற்றத்தினால் சமூகம் எந்தளவுக்கு தன்னை, தன் கருத்தை தீர்மானித்துக்கொள்ளும் என்பது விவாதத்திற்குரியது.
ReplyDelete