Monday, January 16, 2012

மனுஷ்யபுத்திரன் வாசகர்கள் இருவரை முன் வைத்து.....அன்புடன்......
ரவிச்சந்திரன் ரமணிக்கும், காயத்ரி கார்த்திக் அவர்களுக்கும்....

மிகுந்த மனமகிழ்வுடன் எழுதும் கடிதம் இது. மனுஷ்யபுத்திரனுக்கு நீங்கள் வாசகர்களாக இருப்பதில் நான் மகிழ்கிறேன்,


ரவிச்சந்திரன் ரமணிக்கு....

மனுஷ்யபுத்திரன் மேல் நீங்கள் காட்டும் பாசம் என்னை நெகிழவைக்கிறது. ஆச்சாரியார் கூறிவிட்டால் மறுப்பேது என்ற உங்களது அனுபவம் வியக்கத்தக்கது.

அய்யா ஒரு சண்டையில் கண்ணுக்குத் தெரிந்ததைத்தான் கடிக்க முடியும் என்ற உங்கள் பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நடந்தது என்னவென்று தங்களுக்கு ஒரு சதம் கூடத் தெரியாது என்பதை நான் உறுதியாகவே கூறுகிறேன். ஏனெனில் மனுஷ்யபுத்திரனுக்கே அது தெரியாது. அதோடு தாங்கள் சண்டடையிடும்பொழுது கண்ணுக்குத் தெரியாத எந்த அந்தரங்கத்தை குறிவைத்து கடிப்பீர்கள். அல்லது எப்படி எங்கு கடிக்க வேண்டும் என்று விளக்கினால் எனக்கு உபயோகமாக இருக்கும். அது எனக்கும் மட்டுமல்ல தங்களது குழந்தைகளுக்கும், தங்களது உற்ற உறவுகளுக்கும் ஆகப்பெரிய உதவியாக இருக்கும். எனெனில் இந்தக் காலத்தில் கடிக்கக் கொடுப்பவர் வெறுமனே விரலை நீட்டிக் கடிக்கக் காண்பிப்பதில்லை.

உங்களது நக்கலில் ஒளிந்திருக்கும் கண்ணுக்கு முன் காட்டமுடியாத உறுப்புகள் எனக்கு மட்டுமல்ல தாங்களுக்கும், தங்களைச் சார்ந்தோருக்கும், இன்னும் மனுஷ்யபுத்திரனுக்கும், இன்னும் அவரை வாசிக்கும் அனைவருக்கும் இருக்கிறது. உடை உடுத்தி அதை மறைத்தாலும் உள்ளே உறங்கிக் கொண்டிருப்பதை அனைவரும் அறிவார்கள். இந்த சம்பவத்தோடு மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை நீங்கள் வாசிக்கும் மனநிலையை நான் இப்பொழுது வியக்கிறேன்.


காயத்ரி கார்த்திக் அவர்களுக்கு...


என்ன சொல்வதென்று தெரியவில்லை.
என்னை மனநோயாளி என்று அழைத்ததன் மூலம், உங்களை நீங்கள் சுய நினைவோடு உள்ள ஆத்மா என்று அறிவித்திருக்கிறீர்கள். மனநோயாளியாக ஒருவர் இல்லை எனும் பட்சத்தில் உங்களது சுயநினைவை எதில் பிரதியெடுப்பீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. மனுஷ்ய புத்திரனின் கவிதைகளை ஆழ்ந்த சுயநினைவோடு வாசிக்கும் தாங்கள், ஒரு தனிமனிதனை ஒருவர் குற்றம் சாட்டியதும் எந்த விபரமும் தெரியாமல் மனநோயாளிக்கு கவிதை எப்படி புரியும் என்ற கேள்விக்குறிகளோடு இணைத்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி. இதற்கு மனுஷ்ய புத்திரன் அமைதியோடு இருக்கிறார். அம்மா...மனநோயாளிகள் குறித்து மனுஷ்யபுத்திரனுக்கு நிறையத் தெரிந்திருக்கும் அதை அவரிடம் கேளுங்கள். எனெனில் அவர் எழுதிய முக்காலே மூணுவீசம் கவிதைகள் அந்த நிலையில்தால் எழுதியிருக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எடுத்துக்காட்டு :

" நான் இந்தக் கவிதைகளை எழுதிய காலத்தில் தீவிரமான உணர்ச்சிகளின் வேட்டை நாயாகச் செலுத்தப்பட்டதாகவே உணர்கிறேன். வேட்டையாடும் போது வேட்டை நாய்க்கு கருணை காட்டக் கூடாது.........

.......சொற்களின் வழியே நிகழ்த்திய இந்த ஓட்டம் மட்டுமே பைத்திய நிலையிலிருந்தும் தன்னைத்தானே அழித்துக்கொள்வதற்கான தீவிர விருப்பங்களிலிருந்தும் என்னைக் காப்பாற்றியது

தொடர்ந்து வாசிக்க......... அதீதத்தின் ருசி..பக்கம் 7

தோழி..... மேற்சொன்ன இவ்வார்த்தைகளை தட்டையாக பெயர்த்தால் மனுஷ்ய புத்திரன் ஒரு வேட்டை நாய். தற்கொலை செய்வதிலிருந்து தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ள கவிதைகள் எழுதி வருகிறார். உண்மையைச் சொன்னால், இதே காரணத்தை மேற்குலக கவிகள் வெவ்வேறு வார்த்தைகளில் எடுத்து வைத்துள்ளனர். ஆனால் எனக்குத் தெரிந்து சங்க இலக்கிய கவிகள் தற்கொலையிலிருந்து தப்பித்துக்கொள்ள எழுதியவை என்றும் எங்கும் சொல்லவில்லை. அவர்களுக்கு வாழ்தல் என்பது வேறு.


ஒரு மனநோயாளி என்பவன் தன்னளவில் காயம் பட்டவன் அல்ல, உங்களைப் போல், இன்னும் என்னைப்போல் சூழ்ந்திருக்கும் மனிதர்கள் அவன் மூளையில் திணித்த எண்ணற்ற கருத்துக்களின் விளைச்சல்தான் அது. ஒரு மனநோயாளியை சமூகத்திலிருந்து பிரிப்பது ஆபத்தானது. இன்னும் சொல்லப் போனால் பைத்தியக்காரர்கள் என்ற பதத்தைக் கண்டித்து மனநோயாளிகள் என்று அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதில் உளவியல் சார் பத்திரிக்கைகளுக்கு இணையாக சிறு பத்திரிக்கைகளுக்குண்டு.

மேலும், நாமே ஒருவனைக் குற்றவாளியாக்கிவிட்டு நீதிபதிகளின் சிம்மாசனத்தில் எளிதாக அமர்வது இன்னும் ஆபத்தானது. உங்களைப் போன்றவர்கள் மனுய புத்திரனை வாசிப்பது என்பது, ஒரு ஊனமனாவர் கவிதை எழுதுகிறார்..... தன்னம்பிக்கை ஊட்டி அவருக்கு ஆதரவுகாட்டுவோம் என்ற மனநிலையை மட்டுமே, முன் வைத்துவாசிக்கக் கூடியதோ என்று எனக்குத் தோன்றுகிறது. உங்கள் வார்த்தைகளின் உளவியல் இதையே எனக்குக் காட்டுகிறது. இந்த மனநோயாளியின் கவிதை வாசிப்பு வேறு தளத்தில் என்பதையும் விளக்க ஆசைப்படுகிறேன். மேற்கொண்டு அறிய, ஜெயமோகனின் கவிதை விமர்சனம் நிகழ்வில் நடந்தைவைகளை நீங்கள் மனுஷ்யபுத்திரனிடமே கேட்டுக்கொள்ளலாம்.

நானும் ஒரு குறைந்த அளவில் கவிதை எழுதுகிறவன்தான். ஆனால் தற்கொலையைச் சாந்தப்படுத்திக்கொள்ள அல்ல. நீங்கள் மனுஷ்ய புத்திரனிடம் இன்னும் தெளிவாகக் கேட்கலாம். அவரது தேர்வில் வெளிவந்த கவிதைப் புத்தகங்களில் இருக்கும், அனைத்து கவிதைகளும் தற்கொலையைச் சாந்தப்படுத்தத்தானாவென்று. மேலும் கவிஞரிடம் நேரடியாக உரையாடும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறீர்கள். அதற்கு முகப்புத்தகம் உதவியிருக்கிறது. முன்பு அப்படியில்லை. எல்லாமே கடிதங்களால் நிரம்பப்பெற்றிருக்கும். மேலும் கடிதம் எழுதுவது போல் மிகுந்த நுண்ணிப்பான மன கவனத்தை தட்டச்சு செய்கையில் உணரமுடியாது. வாசகர்கள் என்கிற சொற்றொடர்களோடு, கவிஞன் இன்னும் சேர்த்து வாசிக்க நிறைய இருக்கிறது என்றுணர்த்திய உங்கள் இருவருக்கும் என் அன்பு.Thursday, January 12, 2012

அன்புடன் மனுஷ்ய புத்திரனுக்கு......" இன்று புத்தக கண்காட்சியில் உயிர் எழுத்து ஸ்டாலில் வைத்து கவிஞர் சங்கர்ராமசுப்ரமணியனுக்கும் வசுமித்திரா என்பவருக்கும் தேவ தச்சன் கவிதைகளை முன் வைத்து பயங்கர அடிதடியாம். சங்கருக்கு ஃபோன் செய்து கேட்டேன். பரஸ்பரம் அடித்துக்கொண்டதில் கடைசியில் வசுமித்திரா தனது கட்டை விரலை கடித்துவிட்டதாகவும் டாக்டர் வீட்டில் ரத்தம்வடியும் விரலுடன் உட்கார்திருப்பதாகவும் தெரிவித்தார்(ன்). நல்லவேளை ’விரலோடு’ போயிற்று. இல்லாவிட்டால் என்னாவது என்று ஆறுதல் கூறினேன். தமிழுக்காக ரத்தம் சிந்துவது என்றுதான் நிற்குமோ தெரியவில்லை…"
மனுஷ்ய புத்திரன் 
வணக்கம் மனுஷ்ய புத்திரன். என் பெயர் வசுமித்ர....வசுமித்திரா அல்ல....அதிலும் சங்கர்ராம சுப்ரமணியன் என்ற கவிஞருக்கும் வசுமித்திரா என்பவருக்கும்....நல்லது இந்த என்பவர் என்ற வசுமித்ர உங்களது உயிர்மையில் கவிதைகள் எழுதியிருக்கிறார். என் நினைவுக்குத் தெரிந்து 2003ல் தொடங்கி 2011 டிசம்பர் வரை வந்த உயிர்மையில் இரண்டு பேருக்குத்தான் அதிக பக்கங்களில் கவிதை வெளிவந்திருக்கிறதென்று நினைக்கிறேன். ஒன்று வசுமித்ர, இன்னொன்று மனுஷ்யபுத்திரன்.

மேலும் உங்களது பதிப்புப் பரப்பில் நீங்கள் தொலைத்த விமர்சனக் கடிதங்களில் என்னுடைய கடிதமும் ஒன்று. அது நீங்கள் பதிப்பித்து ஜெயமோகன் எழுதிய சுந்தரராமசாமி நினைவின் நதியில் என்ற நூலுக்கானது அதோடு அந்த விவகாரத்தில் நீங்கள் எனக்கு இரு முறை போன் செய்து கடிதத்தை
எடிட் செய்யலாமா என்று கேட்டீர்கள் நானும் சம்மதித்தேன். ஆனால் உயிர்மையில் அந்தக் கடிதம் வரவேயில்லை. நல்லது. மறுநாள் நேரில் வந்து கேட்டதற்கு கடிதம் தொலைந்து விட்டது என்றீர்கள். அதோடு என் கவிதைகள் குறித்துப் படித்த கவிஞர் க்ருஷாங்கினி என்னையும் என் மகள் நேயாவையும் சந்திக்க விருப்பம் உள்ளதாக தங்களிடம் தெரிவித்ததாகச் சொன்னீர்கள். அப்பொழுது எனக்கு திருமணம் ஆகவில்லை. மகிழ்ச்சி. பழைய நினைவுகளை மறப்பது உடலுக்கும் சில சமயம் மனதுக்கும் நல்லதுதான். ( சாரு, ஜெ.மோ விசயங்கங்களில் உங்களுக்கு இது உதவக் கூடும்.) கடிதத்தை தொலைத்து விட்டேன் என்று நீங்கள் கூறியதும் உங்களது பதிப்பில் எனது கவிதைத் தொகுதி வர எனக்கு விருப்பமில்லை என்று சொன்னேன். உயிர்மையில் கவிதைத் தொகுதி அதும் 2004 களில் எவ்வளவு பெரிய விசயம். மகிழ்ச்சி. அந்த கவிதைத் தொகுதிதான் "ஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்கு காரணங்கள் உள்ளன”. அது கருப்புப் பிரதிகள் வெளியீடாக வந்தது.


என் பெயர் தெரியாதது போல் நடிக்கும் உங்களது வார்த்தைகள் என் மனதைக் கொள்ளை கொள்ளுகிறது. இதை மனுஷ்யபுத்திரன் என்பவர் எனக்குச் சொன்ன செய்தியாகவே எடுத்துக்கொள்கிறேன். இன்னும் உங்களுக்குத் தெரியாத கவிஞர்கள், மற்றும் எழுத்தாளர்கள் அங்கு இருந்தார்கள். அந்த என்பவர்கள் குறித்து நாமும் பேசலாம்.

மனுஷ்ய புத்திரன்....சங்கருக்கு நீங்கள் போன் செய்வதற்கு முன், இந்த அடிதடியில் உங்களுக்கு அக்கறை இருக்கும் பட்சத்தில் சில விசயங்களை நீங்கள், கவிஞரை தெரிந்தவர் என்பதற்காக, அல்லது ஒரு பதிப்பாளராக, மேலும் கடை போட்டிருப்பவராகக் கூட சம்பவ இடத்திற்கு சென்று நடந்தது என்ன என்று கேட்டிருக்கலாம். அதை விடுத்து கட்டப் பஞ்சாயத்தார் போல் தீர்ப்பு கூறுவது வருத்தமாக உள்ளது. சங்கர் எழுதிய கவிதைக்கு ம.... தோழர்கள் அவரது வீட்டுக்குச் சென்று விவாதித்தது குறித்து அறிவீர்கள் என்றே நம்புகிறேன். அதையே எனக்கு சங்கர ராம சுப்ரமணியன் செய்தார். கேட்டதற்கு முதலில் வன்முறையை பிரயோகித்தது சங்கர ராம சுப்ரமணியன். இப்பொழுது கடித்தேன் என்று அவர் அழுத்தந் திருத்தமாக கூறியிருக்கிறார். அவர் என்னை அடித்தார் நான் அவரை அடித்தேன் சண்டையில் அவரது விரல் என் முகத்தில் பட்டிருக்கலாம், பற்களில் பட்டிருக்கலாம். திரைக்கதை போல் சண்டையை அதுவும் எதிர்பாராத சண்டையை எழுதி வைத்து சண்டை போட முடியாதது தானே. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் குடித்திருந்தார் என்பதையும், அப்பொழுது மருத்துவமனையில் அவருக்கு என்ன சிகிச்சைகள் வழங்கினார் என்றும் அப்படியே கேட்டுச் சொல்லுங்கள். இது குறித்து நான் சுந்தர புத்தனிடமும், ஆசிரியர் அசோகனிடமும் பேசி விட்டேன்.


தமிழுக்காக ரத்தம் சிந்துவது, மற்றும் சிறுநீர் பெய்வது போன்ற வசனங்களை எழுதும் போது கொஞ்சம் யோசியுங்கள். டாக்டர் வீட்டில் ரத்தம் வடிய என்பதன் மூலம் சங்கர் ராமசுப்பிரமணியன் மேல் உள்ள உங்களது இரக்ககுணம் பொதுப் பார்வைக்கு வந்திருப்பது குறித்து நான் மனம் மகிழ்கிறேன். மேலும் சம்பந்தப்பட்ட இரக்கக் குணம் குறித்து நான் பெரு மகிழ்ச்சி அடைவதோடு, அது தன் தன்மையை இழக்காமல் இருக்க என் அன்பையும் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.இன்று புத்தகக் கண்காட்சிக்கு நான் வருவேன். மேலதிக தகவல்கள் தேவைப்படுமெனில் என்னைத் தாங்கள் தொடர்பு கொள்ளலாம். ஏனெனில் என் முகம் உங்களுக்கு நன்றாக ஞாபகம் இருக்கும் என்றே நம்புகிறேன். மேலும் நேற்று நீங்கள் விடியலில் வாங்கிய கோசாம்பியின் நூல் மற்றும் வன வாசி புத்தகங்களுக்கு நான் பில் போட்டதும், நூலை நீங்களும் உங்களுடன் வந்தவர் மறந்து சென்றதும், பின் சொல்லி அனுப்பியபோது கொடுத்ததும் நான்தான். முடிந்தால் இன்று பேசலாம்.


மேலும் உங்களது வரிகளுக்கு பின்னூட்டமாக கட்டை விரலைக் கடிக்கும் மனநோயாளி என்ற வார்த்தைகள் வருகின்றன. மிகவும் மகிழ்ச்சி. சங்கர் குடித்து சண்டையிட்டார் என்றதும் இது போன்றவர்கள் குடிகாரர்களை  ஒழித்துக் கட்ட வேண்டும்...குடிகாரர்களே இப்படித்தான்...என்ற தூய குணங்களையும் அவர்கள் பார்வைக்கு வைப்பார்கள். உங்களது அறத்தையும், அதன் எதிர்பார்ப்புகளையும்  நான் மதிக்கிறேன். வணக்கம். இந்த மனநோயாளி என்ற வார்த்தைகளோடு இனி வரப் போகும் வார்த்தைகளுக்காகவும் காத்திருக்கிறேன்.

Wednesday, January 4, 2012

கவிதை குறித்து.......வணக்கம் மணிகண்டன் ......
இங்குதான் எனக்கு பிரச்சினை ஆரம்பிக்கிறது. மணிகண்டன் கவிதை மட்டுமல்ல சிறுகதை, நாவல், செய்திகள் ஏன்.... முதல் குற்றத்தகவல் அறிக்கையும் (F.I.R). கூட கலைடாஸ்கோப்பாய் மாறும். விரைவாக சேரும், சேரவேண்டும் என்ற அவாவாவே படைப்பாளரை பதிப்பகம் நோக்கி இழுக்கிறது என்பது என்வரையில் ஏற்றுக்கொள்ளமுடியாத பதில். இங்கு ஆனந்தவிகடன் போன்ற பத்திரிக்கைகள் இன்னும் விரைவாகச் செல்கின்றன. அதில் கவிதையாளர் பங்கேற்கலாம்.
ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன் கலை கலைக்காகவே என்று சொன்ன மேற்கத்திய நாட்டு படைப்பாளிகளின் எண்ணவோட்டம் வேறு.  அவர்கள் தூய கலையைக் கூட சொல்லியிருக்கலாம். இங்கு தமிழ் நாட்டில் சொன்னது பார்ப்பனக் கோஷ்டிகளும் அதற்கு தலையாட்டிய அவர்களின் பஜனைக் கோஷ்டிகளும்தான்.


அவர்களுக்கு மாறாக கலை கலைக்காகவே என்று சொல்லும் தமிழ் எழுத்தாளர்களை நீங்கள் சுட்டிக் காட்டலாம். ப்ரெக்ட் ஒரு இடது சாரி அவன் கலையை அரசியலுக்கு அடிக்கும் ஆப்பாய்க் கூட இறக்கியிருக்கலாம். இங்கு தமிழில் கலை கலைக்காகவே என்றவர்கள் என்ன காரணத்திற்காகச் சொன்னார்கள் என்பதையும் விளக்குங்கள்.


வெளிநாடுகளில் படைப்பை எடிட் செய்யும் வழக்கம் இருக்கிறது. அப்பொழுது கலை கலைக்காகவேஎன்பதும் வாசக நோக்கத்திற்கும் உள்ள முரண்பாட்டையும் எப்படிப் புரிந்து கொள்ளுவீர்கள்.


எல்லாவற்றையும் விட கவிதையாளர் கவிதை எழுதுவதற்கு அடுத்தபடியாக, தாங்கள் கூறிய கவிஞர்களின் பீடம், பதிப்பக அடையாளத்திற்கு தவித்தல், விழுந்து புரளல்,  விரைவாக வாசகரை சென்றடைதல் போன்ற கலை தவிர்த்த கவலைகள் ஏன் படைப்பாளரை அச்சுறுத்த வேண்டும். அவர்களுக்கு எதற்கு அரசியல்.


கவிதை என்பது கலைடாஸ்கோப் என்றால்  அதை வெளியிட சம்பந்தப்பட்ட கவிஞர்கள் செய்யும் அரசியல், ஊளைகள், மற்றும் பஜனைப் பாடல்கள், மற்றும் எச்சில் வடித்தல்கள் எதில் சேர்த்தி.  என் வரையில் அது கவிதையென்னும் கலைடாஸ்கோப்பை சிதறச்செய்யும் ஒரு சிறிய மரச்சுத்தியல் அவ்வளவே. 

கவிதை பற்றி ஒருவர் புரிந்து கொள்வதற்கும் அதைவிமர்சிப்பதற்கும் வேறுபாடுகளும் மாறுபாடுகளும் இருக்கிறதென்றால். நான் சொன்னபடி 2002 ல் கவிதையென்றால்....நதி கண்ணாடி...கண்ணாடியல்லாத நதி, புத்தன்,புயலின் நுண் வெற்றிடம், தத்துவம், மீகாலத்தின் உருவாக்கம், invisible parofite, alternative unit of time…..என்றெல்லாம் உதிர்த்த கவிஞர் 2011 ஆண்டு இறுதியில் பாம்புக்கும் பம்ப்புக்கும் மாற்றம் பெற்றதுதான் கவிஞரின் வளர்ச்சியா.

இன்னும் ஒன்று.... நான் பிரெக்ட்- ன் கவிதைகள் மற்றும் அவர் குறித்தான விமர்சனக் கட்டுரைகள் பற்றி படித்திருக்கிறேன். ப்ரெவரின் கவிதைகள் குறித்துப் படித்திருக்கிறேன். இவர்கள் இப்படியெல்லாம் பயமுறுத்தவில்லையே. இங்குதான் அவர்கள் கலை கலைக்காவே என்பதற்கும் இங்குள்ளவர்கள் தங்கள் மேதமையோடு கலந்த பார்ப்பனிய அரிப்பை சொறிந்து இழுப்பதற்கும் உள்ள வேறுபாட்டை அறியமுடிகிறது.

வாசகர்... சம்பந்தப்பட்ட கவிஞரின் கவிதைகளை வாசிப்பதோடு, கவிஞரின் நுண்மான் நுழைபுலத்தையும் அவர் எழுதிய ஆண்டுகளின் கனத்தையும் சேர்த்து வைத்து வாசிக்க வேண்டும் என்று ஏன் படைப்பாளர்கள்  துன்புறுத்த வேண்டும்.  கலை கலைக்காவே சரி. விற்பனை மக்களுக்காவே. இல்லையா. விளக்குங்கள். 

2000 வருடத்திற்கு மேலாக தீண்டத்தகாத சமூகத்தை உருவாக்கி கல்வியறிவு மறுக்கப்பட்டு, சாதியின் பெயரால் ஒதுக்கிவைக்கப்பட்ட இந்தியாவில், தமிழகத்தில் கலை கலைக்காகவே என்பது பெரும் அபத்தமாகவே படுகிறது. அறுவெறுப்பாகவும் இருக்கிறது.

எனக்குத் தெரிந்து தமிழ் உரைநடையிலிருந்து கவிதை வரை தொடங்கி வைத்தது பார்ப்பன சாதியாக இருப்பதும், ஆளும் சாதியாக இருப்பதும், ஏன் மணிகண்டன். அவர்கள்தான் பிறவிப் படைப்பாளர்களா. அவர்களின் கலை எதற்காக.
உதாரணத்திற்காக

சுப்பிரமணிய பாரதி
மாதவையா
மௌனி
கு.பா.ரா.பிச்சமூர்த்தி
க.நா.சு தொடங்கி


இன்னும் சுந்தரராமசாமி ஆரம்பித்து பட்டியலைத் தொடரலாம்.

உங்கள் இணைப்பைப் படித்தேன். அதில் நான் கலை மக்களுக்காவே என்று சொன்னது போல் எழுதியுள்ளீர்கள். இன்னும் நான்  என் விவாதத்தை அந்த நோக்கில் தொடங்கவேயில்லை.
கலை கலைக்காகவே என மேற்கு சொல்வதற்கும் இங்கு சொல்வதற்கும் உள்ள வித்தியாசங்களைத்தான் இப்பொழுது  கேள்விக்கு வைக்கிறேன்.( பின் கலை என்றால் என்னவென்றிலிருந்து, அது யாருக்காக, அது தோன்றுவதற்கான தேவை என்ன என்பதிலிருந்து நாம் பேசுவதற்கு நிறைய இருக்கிறது) அங்கும் கருப்பர் இலக்கியம் என்ற தனிப் பிரிவு உண்டு மணிகண்டன். இங்கு கலை கலைக்காகவே என்ற குரல்கள், கலையைப் பேசினவா இல்லை பார்ப்பனியத்தின் தூய்மையை அதன் சாகசத்தை, புனிதத்தை பேசினவா என்று நீங்கள் கூறலாம்.

அப்படி கலை கலைக்காகவே என்று சொன்ன எழுத்தாளர்களை நீங்கள் சுட்டுவதன் மூலம் அவர்களின் படைப்புகள் எந்தளவுக்கு கலை கலைக்காகவே என்பதில் வெற்றியடைந்திருக்கிறது என்பதையும் அவர்கள் கலை கலைக்காகவே என்பதன் அவசியத்தை எந்தளவுக்கு உணர்த்தியிருக்கிறார்கள் என்றும் நாம் பேசலாம்.

தேவதச்சனை பிணம் என்று சொன்னதும் உங்களுக்கு கோபம் வந்ததற்கு எனது மகிழ்ச்சி. ஆனால் அத்தைகைய அர்த்தத்தில் நான் கூறவில்லை. நான் சொன்னது போஸ்ட் மார்டம் அறிக்கைகளை கவிதைகள் என்று சொன்னது. தேவதச்சனை நான் நேரடியாக பிணம் என்று சொல்லவில்லை. சொல்லமாட்டேன். நான் சொன்னது படைப்புகளை. அது மனுஷ்யபுத்திரன் சாகித்ய அகாதமியை செத்தவர்களுக்கு திதி என்று சொன்னதற்கு பதிலாகத்தான். என்னிடம் கேட்ட கேள்விகளோடு மனுஷ்யபுத்திரனுக்கும் உங்களுடைய வருத்தத்தை இணைப்பாய் இணைத்தால் மகிழ்வேன்.

தனிமனித சிக்கல்கள் பற்றி கூறியிருந்தீர்கள். சமூகத்தில் வாழாத எந்தத் தனிமனுதனுக்கும் இச்சமூகசம் சார்ந்த
(மனிதர்கள் சார்ந்த )சிக்கல்கள் வராது. எவரும் இங்கு தனிமனிதர் அல்ல என்பதே என் கருத்து. ஒரு மனிதன் சமூகத்தோடு உடன்படுவது அல்லது மறுப்பது, இல்லை இரண்டிற்கும் இடையில் காலூன்றி நிற்பது ( இதை பௌத்த மரபு சொல்லும் மத்திய நிலை என்று பொருள் புரிந்து கொள்ளலாம்) மட்டுமே இங்குள்ள அடிப்படைகள்.


மணிகண்டன் கவிதையைப் பொறுத்தவரையில் மட்டும் அல்ல எதைப் பொறுத்தவரையிலும் விளக்கம் கொடுக்கும் போது, அதை கொஞ்சம் பின்பற்றும் போதும், அல்லது ஏற்கும்போதும் அது சம்பந்தப்பட்ட படைப்பாளிக்கு உதவக் கூடும் என்பது என் நம்பிக்கை. சாதியில்லை என்று சொல்லிவிட்டு, ஒரு படைப்பாளி தனது படைப்புகளில் தனக்கே தெரியாமல் சாதி குறித்து எழுத வாய்ப்பிருக்கிறது. அப்படி எழுதி அதை வாசகன் சுட்டிக் காட்டினால். சம்பந்தப்பட்ட எழுத்தாளர் தனது படைப்புகளை நிறுத்திவிட்டு, தன்னை மீறி தன் படைப்பில்  ஏன் சாதி உள்ளுக்குள் வருகிறது? அதன் ஆதாரத் தேவை? என்ற தொனியில் கொஞ்சம் உள்நோக்கி, படைப்புகளை வைத்தால் அது அவருக்கும், அவரைப் போன்ற படைப்பாளிகளுக்கும், நம்மைப் போன்ற வாசகர்களுக்கும் உதவியாய் இருக்குமல்லவா. என் வரையில் இந்த உங்களது அனுபவத்தில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படவேண்டுமென்று விரும்புகிறேன்

பேசலாம் காத்திருக்கிறேன். மேலும் உங்கள் பக்கத்தில் நீங்கள் எழுதிய கலை பற்றின குறிப்புகள் அனைத்தும் உங்களது சுய தேடலை கவிதைகளின் வாயிலாக அமைவதாகவே காட்டுகிறது. கவிதையை ஒரு கருவியாக கைக்கொள்கிறீர்கள். நல்லது.  கருவி பற்றின தேவையையும், அதை தேர்வு செய்ய வேண்டிய அவசியத்தையும் விளக்கலாம். மேலும் மனநிம்மதி ஆசுவாசம் என்பவைகள் உங்களுக்கு மனிதர்களும் சூழலும் தந்ததாகவே இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கருவி வெறும் வார்த்தைகளையும், அர்த்தமற்ற சொற்களையும் இரைத்துவிடக் கூடும் அபாயமும் உள்ளது.  


பேசலாம்.

உதாரணத்திற்காக ஒரு சிறு குறிப்பு;


பள்ளு பறையெனுக்கெல்லாம் எப்படிடா கவிதை வரும் என கவிஞர் தய்.கந்தசாமியிடம், கவிஞர் விக்கிரமாதித்யன் கேட்டது கலை கலைக்காக என்ற அர்த்தத்திலா...இல்லை கலை மக்களுக்காக என்ற அர்த்தத்திலா....

என் வரையில் அதற்குப் பதிலாக தய்.கந்தசாமி எழுதியதை மக்கள் கவிதையோ...இல்லைக் கலைக் கவிதையோ அல்ல அதைக் கவிதை என்றே அழைப்பேன், கவிதைக்கு நிலம் சார்ந்த தொடர்புகளும் உண்டு.

ஜப்பானியப் படம் பார்த்துவிட்டு
சாராயம் குடித்த ஒரு முன்னிரவில்
போதையேற ஏற
கவிதையாய் இறங்கியது

சங்கரராம சுப்ரமணியனொன்று
ந.முத்துக்குமாரும்
வளர்மதி பார்க்க
நான் கவிதை சொல்ல சந்தேகம்
அந்த ஞானக் கிறுக்கனுக்கு
சேரிக்காரனுக் கெப்படி
சித்திக்கும் கவிதை
சந்தேகம் வந்தது
சாதித் திமிர்
நேரில் கேட்டதோ நேர்மை

அடே சடையா
அழுக்கு மடையா
ஓந்தாடியில எம்.....ல வக்க
தாலாட்டில் பிறந்து
ஒப்பாரியில் மறையும்
சேரிக்கு எவனடா ஞானகுரு?

ஆரிய யோனியில்
அழுக்குத் திரட்டி
அதை உன் மூளையில்
அழுத்தித் திணித்து

அப்படிப் பிறக்கும்
உன் கவிதை
அதைவிட அழகு
என் கழுதை.


பேசலாம் மணிகண்டன்.

Monday, January 2, 2012

மான அவமானமும் மனுஷ்ய புத்திரனும்.....சு.வெங்கடேசனின் காவல் கோட்டத்திற்கு சாகித்ய அகாதமி விருது வழங்கியது குறித்து பின்னட்டை எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் சற்று கனங்கூடிய வயிற்றெறிச்சலை காதின் வழியாகவும், இன்ன பிற துவாரங்களின் வழியாகவும் இலக்கிய பெருமூச்சாய் விட்டிருப்பதோடு, உழைப்புக்கேற்ற ஊதியம் என்று மார்க்சியம் பற்றியும் பேசியுள்ளார்.

அவருக்கு ஒரு வாசகனாக நான் சொல்லுவது இதுதான். அய்யா உங்களது பின்னட்டைக் குறிப்புகளை விடவும், அதை சற்று நீளமாக எழுதி கவிதை.... கவிதை என்று கொட்டை எழுத்தில் உயிர்மையில் போடுவதை விடவும் சு. வெங்கடேசன் அவ்வளவு மோசமாக காவல் கோட்டத்தை எழுதியதில்லை. வாசிக்க சந்தர்ப்பமும், நேரமும் வாய்த்தால் நாவலைப் படித்து விமர்சனம் செய்யுங்கள்.

அதோடு அதே உயிர்மையில் கட்டங்கட்டி தேவதச்சனுக்கு அமெரிக்காக்காரர்கள் விள்ள்ள்ள்....க்கு விருது வழங்கியிருக்கிறது என்று குதங் குளிர்ந்திருக்கிறீர்கள். அவரும் இலக்கிய மேப்பார்வையோடு படத்தில் காட்சியளிக்கிறார். எனக்குத் தெரிந்து அவர்கள் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டைத்தான் அப்பெயரில் அளிக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். நல்லது.

அறிவு நாணயம், மற்றும் அறிவுச் சில்லறைகளை தாங்கள் கல்லாக் கட்டும் உயிர்மையின் வாயிலாக நான் அறிய முடிகிறது. அதோடு பாம்புக்கு கால் முக்கியமோ தலை முக்கியமோ என்று தேவதச்சன் அவர்கள் எழுதித் தந்தால் அதையும் வாசிக்க தயாராயிருக்கிறேன். புதிய எழுத்தாளனை வரபேற்பதில் ஒரு சக இன்பம் கிடைக்கிறது. நாளை சோடை போனாலும் போனால் போகிறது என்று விட்டு விடலாம். ஆனால் காலஞ்சென்ற பிணங்களை ஊதிப் பெருத்த உடலோடு கவிஞன் என்று தூக்கிச் சுமக்க சற்று அதீத தைரியமும் வலிவும் வேண்டும்...நீங்கள் தூக்கிச் சுமந்த பிணங்களின் பிரிவைக் கண்ணீராகவும் வசையாகவும் இறக்கி வைக்க ஒவ்வொரு இதழையும் பயன்படுத்துகிறீர்கள். நல்லது ஒப்பாரியையும் இலக்கியத்தில் சேர்த்த பெருமை உங்களுடையது.

உக்களுக்கு ஒரு விருதை உருவாக்க இளம் தலைமுறையினருக்கு காலமாகலாம். வேண்டுமென்றால் சொல்லுங்கள் ஒரு, ஒரு ரூபாய்க்குரிய விருதை வழங்குகிறோம். ஆனால் அந்த ஒரு ரூபாய் சுஜாதா சாகும் தறுவாயில் உங்களுக்களித்த ஒரு ரூபாயை விட அறத்திலும் கனத்திலும்...இன்னும் காலத்தால் புளிப்பேறாத புத்துயிருப்பு தத்துவ தரிசனத்தோடு இருக்காது. அதற்கு வருந்துகிறோம்.


சிறு குறிப்பு;

பின்னட்டை எழுதும்போது இந்த அறம் தரிசனம் எல்லையற்ற கவித்துவம் இது போன்ற வார்த்தைகளைத் தவிருங்கள். அது ஒரு தொற்று நோய் போல உங்களை ஒட்டிக் கொண்டிருக்கிறது. அழுக்குத் தீரக் குளியுங்கள். அல்லது வாசியுங்கள். இதுதான் இப்பொழுதைய மருந்து. இலவச இணைப்பாய் நீங்கள் உங்களையே கவிஞன் என்று விதந்தோதிக் கொண்டு கையில் வெள்ளைக் குவளையோடும் நீயா நானா சோஃபாவிலும் அமர்ந்து நேர் கோணத்தில் இடது கையை சோஃபாவைத் தடவிய கோலத்தில் வெளிவந்த உங்களது புகைப் படம் தாங்கிய பின்னட்டைக் குறிப்புகளான இதற்கு முன்பும் இதற்குப் பின்பும் என்ற உள்ளட்டைக் குறிப்புகளை தயவு செய்து புரட்டி பத்தாம் பக்கம் உள்ளதை ஒரு முறை வாசியுங்கள். கவிஞர்கள் ஈரம் காயாமல் எழுதும் வித்தையை குறித்து எழுதியிருப்பீர்கள். வாழ்த்துக்கள்.  

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள்  (hit-or-miss reformer...