Monday, April 22, 2019

பத்திரிக்கையாளர்கள் அமைதியாக இருக்கும் நாட்டில் ராணுவம் புன்னகையுடன் நுழைகிறது






அப்படித்தான் இருக்கிறது
பத்திரிக்கையாளர்கள் 
அமைதியாக 
இருக்கும்போது 
நாடு 
தன் நிர்வாணத்தை 
அமைதி நிரம்பிய 
எள்ளலுடன் ஒருமுறை கவனித்துக்கொள்கிறது

உண்மையில்
பத்திரிக்கையாளர்கள்
நாட்டின்
குடிமக்களுக்கு
உள்ளது உள்ளபடி 
மிக நேர்த்தியாக இல்லாவிடினும்
அசிங்கமாகவாவது 
குடிமக்களுக்குக் காட்டிக்கொடுக்கவேண்டும்
மாறாய்
அவர்கள் விளம்பரம் செய்கிறார்கள்

விளம்பரம்
மக்களை
அவர்கள்
விரும்பவியலாதவாறு
வெறுக்க வெறுக்க
வன்புணர்ச்சி செய்கிறது

காகிதங்களிலோ
பத்திரிக்கையாளர்கள்
வசந்தங்களை இசைத்துக்கொண்டிருக்கின்றனர்

அறியமுடியாத துப்பாக்கிகளின் வர்ணனையை
ஆட்சியாளர்கள்
செய்திகளில் ஒளிபரப்புகிறார்கள்

ஆண்களின் இறுகிய பிருஷ்டமும்
பெண்களின்
தேர்ந்தெடுக்கப்பட்ட
நளினமான சதையும்
குடிமக்களுக்குக் காட்டப்படுகையில்
அரசியல்வாதிகள்
அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றனர்

பத்திரிக்கையாளர்கள் மௌனமாக இருக்கும் நாடு உருப்படப்போவதில்லை

ஆம்
மக்கள்
நிர்வாணத்தை எப்பொழுதும்
கொண்டாடிக் கொண்டிருக்கப்போவதில்லை

நிர்வாணம் என்பது அரசின் தத்துவார்த்தச் சொல்
அம்மணம்
இது 
மக்களின்
சொல்லாக இருக்கிறது

நிர்வாணமாக இருப்பதென்பது
அரசியல்வாதிகளுக்கு உகந்ததாக இருக்கையில்
அம்மணத்தை மக்கள் வெறுக்கிறார்கள்

குழந்தைகள் அம்மணத்தை கேலி செய்கிறது
நடிகைகளின் நிர்வாணங்கள்
நிர்வாணத்தில் நாகரீகம் செலுத்தப்படுகையில்
அம்மணத்தில் பசி தன் விகாரத்தைக் காண்பிக்கிறது

மக்கள்
அமைதியாய் இருக்கின்றனர்
சொல்லமுடியாத
வார்த்தைகளை
திறக்க முடியா உதடுகளால் கடித்து மென்றபடி
அம்மணக் குருதி 
கசியும் வரை

மக்கள்
எப்பொழுதும் இப்படியே இருக்கப்போவதில்லை
கசியும் குருதியில்
ஆட்சியாளர்களுக்கான வெடிகுண்டின்
கந்தகவாசனையை அறிந்து கொண்டிருக்கிறான் 
கவிஞன்

அவன் நாசி எப்பொழுதும் மக்களையே நோக்கியிருக்கவேண்டும்
இப்படியாகத்தான் கவிஞன் தன்னை உற்பத்தி செய்கிறான்
இறந்து விடாமல்

பத்திரிக்கையாளர்களுக்கு
தகவல்கள் இருக்கிறது
செய்திகள் இருக்கிறது

உண்மையில் அழும்
குமுறும்
நெஞ்சில் அடித்துக் கதறும்
பத்திரிக்கையாளனே நாட்டுக்குத் தேவை
பத்திரிக்கைகள் பொய் சொல்லுகையில்
பத்திரிக்கையாளன் தலை குனிகிறான்
வரலாறு மிகுந்த வன்மத்துடன் அவனை நகர்ந்து செல்கிறது

பத்திரிக்கைகளுக்கு தெரியாத பத்திரிக்கையாளன்
அல்லது கவிஞனுக்குத் தெரியும்

உண்மையில்
பசித்த மக்கள்
உணவை உற்பத்தி செய்வதை விட வெடிகுண்டுகளை
உற்பத்தி செய்யவே விரும்புவார்கள்
பசி 
வெடிகுண்டுகளின் புன்னகையைத் தயாரித்துவிடுகிறது

மக்கள்
புன்னகை செய்யும்பொழுது

அரசு மௌனமாகிறது.

Saturday, April 13, 2019

அம்பேத்கரும் அவரது தம்மமும்- நூல் மதிப்புரை.



                      



அம்பேத்கர் இந்துமதத்திலிருந்து விலகி பௌத்த மதத்தை தழுவினார். ‘பௌத்த மதத்திற்கு ஒரு பைபிள் தேவை’ என்று கூறிய அம்பேத்கர் ‘புத்தரும் அவரது தம்மமும்’என்ற நூலை  எழுதியுள்ளார். இது பரவலாக வாசிக்கப்பட்டு வருகிறது.

பல இலட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் அம்பேத்கர் கடவுளாகத் துதிக்கப் படுகிறார். இந்த நிலையில் வசுமித்ர எழுதியுள்ள நூல், அம்பேத்கர் குறித்து பல நியாயமான கேள்விகளை எழுப்புகிறது.
ஏற்கெனவே  ‘சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு : புத்தர் போதாது! அம்பேத்கர் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை!’ என்ற நூலை மொழிபெயர்த்தவர் கொற்றவை. அவருடைய வாழ்நாள் தோழனான வசுமித்ர இந்த நூலை எழுதியுள்ளார். அந்த நூலை வெளியிட்ட குறளி பதிப்பகம்தான் இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே வெளிவந்துள்ள ரங்கநாயகம்மாவின் நூலுக்கு வந்த எதிர் வினைகளின் தொடர்ச்சியாக  ‘அம்பேத்கரும் அவரது தம்மமும்’ என்ற இந்த நூல் வெளிவந்துள்ளது எனலாம்.

மிகக் கடுமையான உழைப்பின் விளைவாக இந்த 920 பக்க நூலை வசுமித்ர படைத்துள்ளார். கிட்டத்தட்ட  இருநூறுக்கும் மேற்பட்ட நூல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனஎனவே இது பெரிய நூலாகிவிட்டது .

 ‘என் ஆசான் காரல் மார்க்ஸ்’ என்று பெருமையாக நூலின் முதல் பக்கத்திலேயே குறிப்பிடுகிறார். தென்னாட்டு கோசாம்பி என்று அழைக்கப்படும் நா.வானமாமலைஎஸ்.தோதாதிரிவெ.கிருஷ்ணமூர்த்திதேவ.பேரின்பன் போன்ற மார்க்சிய அறிஞர்களை பெருமையாகச்  சொல்லுகிறார் வசுமித்ர. எனவே இந்த நூல் மார்க்சிய கண்டோட்டத்தில் அம்பேத்கரைப் பார்க்கிறது என்று நாம் விளங்கிக் கொள்ளலாம்.

‘அம்பேத்கர் மற்றும் அவருடைய புத்தர்பற்றி’ இந்த நூல் பேசுகிறது. ‘புத்தரை அழகுடையவராக ஆராதனை’ செய்கிறார் அம்பேத்கர். அவருடைய உயரம்அங்க லட்சணம்கம்பீரமான தோற்றம்உயரம் எல்லாமே வர்ணிக்கப்படுகிறது. புத்தரை கடவுளாக்கி விமர்சனம் செய்யும் அம்பேத்கரை இந்த நூல் சமரசமின்றி விமர்சனம் செய்கிறது. ‘வசுமித்ரவின் வார்த்தைகள் யோசிக்க வைக்கும் வார்த்தைகள்’ என்கிறார் இதற்கான முன்னுரை எழுதியுள்ள தி.சு.நடராசன்.

மொழிபெயர்ப்பாளரும்மார்க்சிய அறிஞருமான கோவை. எஸ்.பாலச்சந்திரன் இந்த நூலின் சாரத்தை ஓரிரு பக்கங்களில் சொல்லுகிறார். ‘வசுமித்ரவின் வாதங்கள் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கின்றன’ என்கிறார் எஸ்.பாலச்சந்திரன்.

தன் வாழ்வின் பெரும்பகுதி முழுவதிலும் பகுத்தறிவுவாதியாக வாழ முயற்சி செய்த அம்பேத்கர் பௌத்தமதத்தை ஏற்றுக் கொண்டது ஒரு சறுக்கல்தான் என்கிறது இந்த நூல். மேலும் தொடக்க கால பௌத்தத்தை அதன் பகுத்தறிவுப் பூர்வமான உள்ளடக்கத்தை அம்பேத்கர் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக மூட நம்பிக்கைகளின் புகலிடமாகிப்போன மகாயான பௌத்தத்தையே ஏற்றுக் கொண்டார் என்கிறது இந்நூல். ‘பாசிசத்தின் கருத்தியல் உள்ளடக்கமாக பார்ப்பனியமும்பொருளாதார உள்ளடக்கமாக உலகமயமாக்கலும் விளங்குகிற இந்தக் காலகட்டத்தில் தலீத் அறிவு ஜீவிகள் கம்யூனிச எதிர்ப்பில் ஈடுபட்டு அடையாள அரசியலை முன்னெடுக்கின்றனர். இப்படி அடையாள அரசியல் பேசுவோரும்தலீத் அறிவுஜீவிகளும் தலீத் மக்களில் பெரும் எண்ணிக்கையினரை சமஸ்கிருதமயமாக்கப்படுவதையும்அவர்களை உலகமயமாக்கல் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள வைப்பதையும் செய்கின்றனர்’ என்று மிகக் கவலையோடு சொல்லுகிறார் எஸ்.பாலச்சந்திரன்.

 ‘அம்பேத்கரின் ஒருநாள் வாழ்க்கையை நம்மால் இந்த நிலைமையில் வாழ்ந்து கடக்க முடியாது’ என்று சொல்லும் வசுமித்ர, நீண்ட தூரம் போராட்டத்தோடு பயணித்து இறுதியில் மனச்சோர்வோடு நிறுவனமயமான ஆன்மீக புத்தத்தின் பாதையில் அம்பேத்கர் முடிவடைந்ததை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அம்பேத்கரது பௌத்தத்தை (நவயானம் எனச் சொல்லப்படுவதை) ஆய்வு செய்து எனது விமர்சனங்களை முன் வைக்கிறேன் என்கிறார். கடவுளாக்கப்பட்ட புத்தரை ஏன் அம்பேத்கர் படைத்துள்ளார்அது குறித்தான ஆய்வும் முடிவுமே இந்த நூல். அம்பேத்கர் தனது  இறுதிக் காலத்தில்  ‘பௌத்த பிக்குகள்’ மனநிலையில் புத்தரை அணுகியிருக்கிறார். இது இளமைக்கால அம்பேத்கருக்கு முரணான சித்திரம் என்கிறார் வசுமித்ர.

உழைப்பு குறித்து எந்த எதார்த்தமான புரிதலும் இல்லாத ஒரு பௌத்தத்தைமனதை அடக்க உழைகாமத்தை அடக்க உழைபுலன்களை அடக்க உழை என்று தனி மனிதக்கருத்தியல் ரீதியான ஒழுக்கவாதத்தைவர்க்க கருத்தியலுக்கு இணையாக வைத்து பேசுவதன் மூலம் தவறு இழைக்கிறார் என்கிறார் வசுமித்ர.

அம்பேத்கருடைய எழுத்துக்கள் காலவரிசைப்படி தொகுக்கப்படவில்லை. இதனால் அவர் இறுதியாக சொன்ன கருத்து என்னவென்று நமக்குத் தெரியவில்லை. அவரது கருத்துக்களை இடம் மாற்றிவெட்டிப் போட்டு அரசியல் தன்மையற்ற மேற்கோள்களாக பயன்படுத்தப்படுகின்றன என்று சொல்லுகிறார் வசுமித்ர. அம்பேத்கரது மதமாற்றச் செயல்பாடுகள் அனைத்தும் மஹர் சாதியனரை ஒட்டியே நடந்திருக்கிறது  என்கிறார் நூலாசிரியர்.

‘அம்பேத்கர் மார்சை விமர்சித்து வந்தாலும் அவரை நெஞ்சில் சுமந்தார்’ என்று அருணன் சொல்லுவதெல்லாம் நழுவல்வாதமே என்கிறார்.மார்க்சை நிராகரித்து புத்தரை முன்மொழிந்த அம்பேத்கர் பற்றி  எஸ்.வி.ராஜதுரை,வ.கீதாஅ.மார்க்ஸ்ரவிக்குமார்பிரேம்முத்துமோகன்அருணன் என எவரும் ஆய்வுப்பூர்வமாக ஒரு கட்டுரையைக் கூட எழுதியதில்லை என்கிறார்.பௌத்தம் துக்க கோட்பாட்டை முன்வைத்து மக்களின் புரட்சிகர உணர்வை மேலெழும்ப விடாமல் பார்த்துக் கொண்டது என்கிறார் வசுமித்ர.

பௌத்தம் என்றுமே அரசர்களை எதிர்த்ததில்லை. அரச ஆதரவோடுதான் இருந்ததால்தான் அது படைவீரர்களை பிக்குகளாக சேர்த்துக் கொள்ளவில்லை. சுரண்டலுக்கு ஆதரவாக  இருந்ததால்தான் வணிகர்களின் ஆதரவு கிடைத்தது. இல்லையென்றால் ஆயிரக்கணக்கானவர் தங்கிப் படித்த நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு உணவு எப்படி கிடைத்தது என்கிறார். எனவே சுரண்டலை பாதுகாத்த பௌத்தத்தையும்சுரண்டலுக்கு எதிரான மார்க்சியத்தையும் ஒன்றாக பார்க்கவே முடியாது என்கிறார்.

நூலைப் பார்க்கையில் மலைப்பாக இருக்கிறது. ஆனால் படிக்க ஆரம்பித்தால் எளிதாக நகர்கிறது. என்னுரையில் தான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை 120 பக்கங்களில் சொல்லுகிறார். இதனை விவரிக்கும் விதமாக நூலின் எஞ்சிய பகுதிகள் அமைகின்றன. அம்பேத்கர் குறித்த தனது முடிவுகளை நிறுவுவதற்காக பல்வேறு அறிஞர்களை அவர்கள் அடையாள அரசியலை பேசினாலும் சரிமார்க்சிய அரசியலை பேசினாலும் சரி. அழைக்கிறார் வசுமித்ர.

 ‘இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிகள் அம்பேத்கரை எப்படி அணுகுவது என்பதில் அமைப்பு ரீதியாகதத்துவ ரீதியாக எந்தப் பொதுக் கருத்தையும் வைத்ததில்லை என்று குற்றம் சாட்டுகிறார். ‘அம்பேத்கரின் கம்யூனிச வெறுப்பும்இஸ்லாம் மதத்தின்பாலான விமர்சனங்களும் இந்துத்துவர்களுக்கு உவப்பான விஷயங்கள். ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் இஸ்லாத்துக்கோகிறிஸ்தவத்திற்கோ மாறுவார்களெனில் நாட்டுநலன் பெரிதும் பாதிக்கப்படும்’ என்று அம்பேத்கர் சொல்லுவதால்தான் இந்துத்துவவாதிகள் அம்பேத்கரை ஏற்றுக் கொள்கிறார்கள் என்கிறார். ‘அம்பேத்கரது பௌத்தத்திற்கு மாறியவர்களில் இதுவரையிலும் சாதியை ஒழித்ததற்கான சிறு தடயம் கூட கிடைக்கவில்லை’என்கிறார் வசுமித்ர.
அம்பேத்கர் நூலை மொழிபெயர்த்த கி.வீரமணி ‘அம்பேத்கர் ஏன் கம்யூனிசத்திதற்கு ஏற்கவில்லை?’ என்ற கேள்வியை விட்டுவிடுகிறார். அம்பேத்கர் எழுதியதாக சொல்லப்பட்ட நூலின் முன்னுரையை தான் மொழிபெயர்த்த நூலில் பெரியார்தாசன் விட்டுவிட்டார் என்று கூறுகிறார் வசுமித்ர.

கோசாம்பிராகுல சாங்கிருத்யாயன்தேவி பிரசாத் சட்டோபாத்யாயா வழியில் நின்று அம்பேத்கர் குறித்த சித்திரத்தை நமக்குத் தருகிறார்.

அம்பேத்கர் குறித்து இவர் உருவாக்கியுள்ள சித்திரம் உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். சங்கடமான கேள்விகள் எழலாம். ஆனாலும் இதுதான் அம்பேத்கரின் உருவம் என்று தன்னம்பிக்கையோடு வசுமித்ர வரையறை செய்கிறார்.
எப்படி இருந்தாலும் இவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமது அறிவுஜீவிகளுக்கு இருக்கிறது. இந்த நூல் பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இந்த நூல் வெற்றி பெற்றிருக்கிறது.


920பக்கம்/ரூ.890/டிசம்பர் 2018/ குறளி பதிப்பகம் சென்னை.
பீட்டர் துரைராஜ்.
நன்றி: காக்கைச் சிறகினிலே.

இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...