Saturday, September 13, 2014

விடியல் பதிப்பகத்தின் மோசடி.



விடியல் டிரஸ்ட், மற்றும் விடியல் பதிப்பகத்தின் மோசடி குறித்த ஓர் அறிவிப்பு.

வணக்கம்,

குறளி ஒரு சிற்றிதழாகத் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் அதை ஒரு பதிப்பகமாக முன்னெடுக்கும் வேலைகள் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வருகிறது. அதன் முதற்கட்டப் பணியாக தோழர்கள் எஸ். பாலச்சந்திரன் மற்றும் கோவிந்தசாமி ஆகியோர் மொழிபெயர்த்துள்ள சிலப் புத்தகங்களை பதிப்பிப்பது எனும் முடிவெடுத்தோம். எஸ். பாலச்சந்திரனும், கோவிந்தசாமியும் மொழிபெயர்த்து தற்போதைய அளவில் 2014 ல் குறளி வெளியீடாக , முதற்கட்டமாக வெளிவரும் புத்தகங்கள்:

பெட்ரோ பராமோ
எரியும் சமவெளி
ஜோதி ராவ் பூலே
முமியா சிறையும் வாழ்வும்
சூரியனைத் தொடரும் காற்று
இந்தியா; காலத்தை எதிர்நோக்கி
பாட்ரிஸ் லுமும்பா அரசியல் சிந்தனைகள்
போர் தொடர்கிறது
தெபாகா எழுச்சி
லுமும்பா இறுதி நாட்கள்
மார்டின் லுதர் கிங்,

ஆகிய 11 புத்தகங்கள் அக்டோபர் இறுதியில் வெளிவருகிறது. இது தவிர எஸ். பாலச்சந்திரன், வெ.கோவிந்தசாமி இவர்களது  மற்ற புத்தங்களுக்குமான உரிமையும் குறளி பதிப்பகத்திடம் உள்ளது.

தோழர்கள் இருவரும் புத்தக உரிமையை எங்களுக்கு வழங்கும்போது ஒரு  பைசா கூட பெறாமல் அவ்வுரிமங்களை எங்களுக்கு வழங்கினர். எங்களுக்கு உரிமம் கொடுத்தது போக சில புத்தகங்களை எங்களுக்கு முன்னமே என்.சி.பி.எச்க்கும், பாரதி புத்தகாலயத்திற்கும் உரிமம் கொடுத்துள்ளனர். நிற்க.

மேற்சொன்னப் 11 புத்தகங்களையும் செழுமைப்படுத்தி வெளியிடும் பணியில் குறளி பதிப்பகம் ஏராளாமான பணத்தையும், காலத்தையும் செலவிட்டிருக்கிறது. கடந்த ஒரு வருடமாக வேலை செய்து, புத்தகங்கள் முடியும் தறுவாயில் உள்ளது. இந்நிலையில் விடியல் பதிப்பக ட்ரஸ்டியான ராஜாராம் எங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் பதிப்பகம் ஆரம்பிக்கிறீர்களாமே…நல்லது… நாங்கள் பெட்ரோ பராமோ, எரியும் சமவெளி, இவ்விரண்டு நூல்களையும் விடியல் பதிப்பக வெளியீடாக கொண்டு வருகிறோம்  எனத் தகவல் சொன்னார்.  எங்களுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது.

விடியல் சிவா உயிரோடு இருந்த காலத்திலேயே அவரோடு பிணக்கு ஏற்பட்டு தோழர் பாலச்சந்திரனும் கோவிந்தசாமியும் விடியலில் இருந்து வெளியேறி இருந்தனர். விடியல் பதிப்பகத்திலிருந்து விலகியபோது தங்கள் படைப்புக்களை வெளியிடக் கூடாது என்று எழுத்து மூலமாக கடிதமும் அறிவிப்பு, கொடுத்திருந்தினர். எனவே சிவா உயிருடன் இருந்தவரை அவற்றை வெளியிடவில்லை. பின்னர் பாலச்சந்திரனும் கோவிந்தசாமியும், அவர்களின் அறத்திற்கும் கொள்கைகளுக்கும் ஒத்து வரும் பதிப்பக சூழல் இல்லாத நிலையில்,  தங்களது மொழிபெயர்ப்பு நூல்களை மறுபதிப்பு செய்வதை தவிர்த்து வந்தனர். இச்சூழலில் விடியல் சிவா இறந்து விட்டார். விடியலை டிரஸ்டாக சுவீகரித்துக் கொண்ட ‘முதலாளிகளின்’ போக்கு எங்களுக்கும் உறுத்தலாக இருந்து வந்த நிலையில், தோழர் கொற்றவை மொழிபெயர்த்த ரோசா லுக்சம்பர்க் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை அவர்களுக்கு கொடுக்க விருப்பமில்லாமல் போனது. இந்நிலையில் பாலச்சந்திரனை சந்திக்க நேர்ந்தது.

இப்படிப்பட்டச் சூழலில் நாமே ஏன் பதிப்பகம் தொடங்கி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்களைக் கொண்டு வரக்கூடாது எனும் பேச்சின் முடிவில் உதயமானதே குறளி பதிப்பகம். இதில் ராஜாராமின் போக்கு விடியல் டிரஸ்டி-முதலாளி ராஜாராமின் பதிப்பக அபகரிப்புத் தாண்டி, தோழர் சிவாவின் உறவினரும் தோழருமான கல்யாணி குறித்து அவர் பேசிய ஆணாதிக்க ஆபாசப் பேச்சுக்கள்  செய்திகளாக எங்களுக்கு வரவே, இனி விடியலோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என முடிவெடுத்தோம்.

பால் ஃப்ராலிச் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் ரோசா லுக்சம்பர்க் – அவரது வாழ்க்கையும், பணிகளும் எனும் புத்தகத்தை கொற்றவை மொழிபெயர்த்திருக்கிறார். விடியலுக்கு அதைக் கொடுப்பதாக சிவா இருக்கும் போது முடிவு செய்யப்பட்டிருந்தது. சிவாவின் மறைவுக்குப் பின்னர், ராஜாராமின் ‘உண்மை’ குணங்கள் தெரிய வருவதற்கு முன் மொழிபெயர்ப்பின் முதல் பிரதியை விடியலுக்கு மெயில் அனுப்பியிருந்தார் கொற்றவை. விடியல் ராஜாராம் மற்றும் ராமச்சந்திரனின் அதிகாரப் போக்கு பிடிக்காமல் போனதன் விளைவாக அப்பதிப்பகத்திற்கு தருவதாக இருந்த லுக்ஸம்பர்க் புத்தகத்தையும் அனுமதியின்றி வெளியிடக்கூடாது என முறைப்படி அறிவித்தார் கொற்றவை. மேலும் அப்புத்தகத்தில் ஆங்காங்கு திருகுவேலைகள் செய்யாதீர்கள் என்பதையும் சொன்னோம். எங்களது இந்த முடிவுக்கு விடியல் பதிப்பகத்தின் புத்தகவிற்பனையாளர் ராமச்சந்திரனின் அணுகுமுறையும் கூடுதல் காரணம். (அப்புத்தகத்தையும் அவர்கள் இதுபோல் திருகு வேலைகள் செய்து வெளியிட வாய்ப்பு உள்ளது)

பின்னணி இப்படி இருக்க, பாலச்சந்திரன் மற்றும் கோவிந்தசாமியின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த புத்தகங்களை மறுபதிப்பு செய்யும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. யுவான் ரூல்ஃபோவின் படைப்புகளை செழுமைப்படுத்தி புதிய இணைப்புகளோடு வெளியிடும் வேலைகளும் நடந்து வருகிறது. இச்சூழ்நிலையில் இன்று விடியல் டிரஸ்டி ராஜாராம் எங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

பெட்ரோ பராமோ, எரியும் சமவெளி இரண்டையும் விடியல் பதிப்பிக்க உள்ளதாகத் தெரிவித்தார். அது எப்படி முடியும் அதற்கான உரிமத்தை தோழர் பாலச்சந்திரன் குறளி பதிப்பகத்திற்கு வழங்கி இருக்கிறாரே என்றோம். அதற்கு விடியல் டிரஸ்டி ராஜாராம் அம்மொழிபெயர்ப்புக்கு பாலச்சந்திரன் உரிமை கோரமுடியாது என்று சொன்னதோடு அது ‘கூட்டு உழைப்பு’ என்றும், அது போல் பலவேலைகள் நடந்திருக்கிறது அதை வெளியில் சொல்ல முடியாது என்றும் கூறினார். அதற்கு  நாங்கள் மொழிபெயர்ப்பாளர் பாலச்சந்திரனிடம் பேசிவிட்டுச் சொல்கிறோம் என்றதும் ‘வேலைகள் முடிந்து விட்டது வரும் செவ்வாய் புதனில் புத்தகம் வெளி வரும்’, (வரும் செவ்வாய் புதன் 16.09.2014, 17தேதிகளில் வெளிவருகிறது) அவர் பேசினால் நாங்க சமாளிச்சுக்கிறோம் என தெரிவித்தார். பாலச்சந்திரனிடம் நாங்கள் பேசியபோது - அவர் இது ஒரு  முறையற்ற செயல், கயமைத்தனம் அயோக்கியத்தனம் எனக் கூறியதோடு தோழர் கோவிந்தசாமியிடம் கலந்தாலோசித்ததன் படி, வழக்குத் தொடருவதே சரியான வழி என்ற  முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

மேற்கொண்டு மொழிபெயப்பாளர் ராஜாராம் சொன்ன வி.நடராஜ் அவர்களை பாலச்சந்திரன் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்ன மாதிரியான செயல் இது எனக் கேட்டதற்கு அவர் இவ்வேலையை கண்ணன்.எம்(ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரி, புதுவை) சொல்லித்தான் செய்கிறேன் அவர்தான் இதைச் செய்யச் சொன்னான் எனக் கூறியுள்ளார் எரியும் சமவெளி தொகுப்பில் பாலச்சந்திரன் மொழிபெயர்த்த 15 கதைகளை அப்படியே எடுத்தாள்வதோடு. மேலும் இரு சிறுகதையைச் சேர்த்து வெளியிடப் போகிறோம். இது கண்ணன்.எம்(ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரி, புதுவை)  சொல்லியே நடக்கிறது. மேலும் இதை அவர்கள் புதிதாகச் செய்து தரச்சொன்னாலும் செய்வேன் எனவும் கூறியிருக்கிறார். இதில் வெளிப்படையாகத் தெரியும் அம்சம் எஸ் பாலச்சந்திரனின் உழைப்பை சுரண்டும் நோக்கமே. இதில் விடியல் பதிப்பக ட்ரஸ்டியான ராஜாராம். மொழிபெயர்ப்பாளர் வி.நடராஜ், கண்ணன் எம். (ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரி, புதுவை) மூவரும் சேர்ந்து செய்யும் சதியெனவே கொள்கிறோம். சட்டப்படியான நடவடிக்கையை அவர்கள் மேல தொடுப்போம் என்பதை குறளி பதிவு செய்கிறது. மேலும் அவர் பாலச்சந்திரனிடம் இதைச் சொல்லும் போது எங்களது பார்வைகள் பதிவுகள் பதிப்பகத்திற்காக சம்பந்தப்பட்ட இந்த இரண்டு நூல்களையும் உங்களிடம் கேட்டு நீங்கள் கொடுக்கவில்லை, அதனால் இதை விடியலில் கொண்டு வருகிறோம் என்றும் சொல்லியிருக்கிறார். இதற்கு பெயர்தான் புரட்சிகரப் பதிப்பகமா…தோழர்கள்தான் சொல்ல வேண்டும். சம்பந்தப்பட்ட மொழிபெயர்ப்பாளர் பாலச்சந்திரனுக்கே தெரியாமல் பதிப்பை மறுபதிப்பு செய்வது என்பது திருட்டுக்கு நிகரானது. அதை விடியல் பதிப்பகம் செய்திருக்கிறது தோழர்களே.
                                            
இது விசயமாக. மொழிபெயர்ப்பாளர் பாலச்சந்திரனும், குறளி பதிப்பகமும் வழக்கு தொடரும் என்று ராஜாராமிடம் தெரிவித்தபோது, ராஜாரம் “நீங்க  வழக்கு தொடர்ந்துக்கோங்க” என்று அதிகாரத் தொணியோடு முடித்துக்கொண்டார்.

விடியல் பதிப்பகத்திற்கு டிரஸ்டி-முதலாளி ராஜாராம் தலைமை ஏற்ற பிறகு இது அவர்களின் கைவந்த கலையாக மாறிவிட்டது. தோழர் முருகவேளின் 
‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்’ எனும் புத்தகத்திற்கு வேறொரு மொழிபெயர்ப்பு என்ற பெரியரில் போப்பு என்பவரை வைத்து ஆங்காங்கு அடித்தல் திருத்தல் வேலை செய்து தலைப்பில் உள்ள ‘ஒப்புதலை’ நீக்கிவிட்டு மோசடித்தனத்துடன் வெளியிட்டது.

இதில் மாபெரும் அறுவெறுப்பு எனச் சொல்லத்தக்கது என்னவெனில், ஏற்கனவே முருகவேளின் மொழிபெயர்ப்பில் ஏழெட்டுப் பதிப்புகள் கண்ட ’ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் ’ மொழிபெயர்ப்பை ஆங்காங்கு சில்லறை வேலைகள் செய்து பதிப்பித்ததோடு பின்னுரையில் சிவா உயிரோடு இருந்த பொழுது திருத்த நினைத்தார். இப்பொழுது இறந்துவிட்டார். அதனால் திருத்த முடியவில்லை, அவரது ஆத்மா சாந்தியடையும் விதமாக இம்மொழிபெயர்ப்பை வெளியிடுகிறோம் என்ற தொனியில் அப்புத்தகத்தை போப்பு என்பவரின் மொழிபெயர்ப்பாக வெளியிட்டது.

இப்போது அதே போல் தோழர் எஸ் பாலச்சந்திரனின் மொழிபெயர்ப்பை நாங்கள் வெளியிடுகிறோம் முடிந்ததைப் பாருங்கள் என்ற வார்த்தைகளை விடியல் ட்ரஸ்டி ராஜாராம் முன் வைக்கிறார்.

முருகவேளுக்கு செய்த அதே மோசடியை தோழர் பாலச்சந்திரன் விசயத்திலும் செய்யத் துணிந்த விடியல் பதிப்பகத்தின் செயல்பாடுகளை அதன் ஆதிக்கப் போக்குகளை முறையாக வழக்குத் தொடர்ந்து எதிர்கொள்வோம். பத்திரிக்கைகளுக்கும், புத்தக விற்பனையாளர்களுக்கும், பாப்பசிக்கும், வாசகர்களுக்கும் விடியல் பதிப்பகத்தின் மோசடிகளை எடுத்துரைப்போம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். சம்பந்தப்பட்ட புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் பாலச்சந்திரன். அப்புத்தகத்தில் தனக்குதவியர்களின் பெயர்களை அவர் எழுதியதற்கு, அதைக் கூட்டுழைப்பு எனச் சொல்லும் டிரஸ்டி ராஜாராம் ஒரு சுரண்டல் பேர்வழி என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.


அவர்களின் திருகுவேலையாக, சம்பந்தப்பட்ட புத்தகத்தில் வேறொருவரை வைத்து ஆங்காங்கு சில வார்த்தைகளை மாற்றி வெளியிட்டால் அந்த அயோக்கியத்தனத்தையும் சான்றாராதரத்துடன் வெளிக்கொணருவோம்.

நம்மை போன்ற சிறு பதிப்பகங்களில் செழுமை படுத்த உதவுவோர் பெரும்பாலும் சக தோழர்களாகவும், மொழிபெயர்ப்பாளர்களாகவும் இருப்பார்கள். தொழில்முறை பதிப்பகங்கள் என்றால் ‘பதிப்பாசிரியர் (எடிட்டர்)’ இருப்பார். ஆனால் சின்ன சின்னத் திருத்தங்கல் சரி பார்த்தல்கள் மொழிபெயர்ப்பாளரின் பணிக்கு இணையாக முடியாது. அதன் காரணமாகவே உரிமம் மொழிபெயர்ப்பாளரிடமே இருக்கும்.  அப்படி இருக்கையில் வழக்கு தொடர்ந்து கொள்ளுங்கள் எனும் ராஜாராமின்  தொனியில் தெரிவது முதலாளித்துவ அதிகாரம், சட்டத்தை ஏமாற்ற எங்களுக்குத் தெரியும் எனும் ஓர் அகந்தை.  

தோழர்களே, முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராகப் போராடுவதற்கான அறிவூட்டும் படைப்புகளைக் கொண்டுவருவதாக மார்தட்டிக்கொள்ளும் விடியல் பதிப்பகம், இப்போது உழைப்பாளிகளைச் சுரண்டி, மொழிபெயர்ப்பாளரின் தக்க அனுமதி இன்றி மோசடி செய்து காசு பார்க்கும் இழி நிலைக்கு இறங்கி விட்டது. இந்நிலைக்கு உடந்தையாக மொழிபெயர்ப்பாளர் வி.நடராஜ், கண்ணன்.எம் (ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரி, புதுவை) உடந்தையாக இருக்கின்றனர் என்பதை அறிய எங்களிக்கு அதிர்ச்சி அளித்தது. (நடராஜை வைத்து கொண்டு வரவிருக்கிறோம் என்று ராஜாராம் சொன்னதை அடுத்து, அவரையும் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கலாம் என்று ஆலோசித்தோம். பாலச்சந்திரன் தொடர்பு கொண்டு கேட்க -  கண்ணன் சொல்கிறார் நான் செய்கிறேன் என்று நடராஜ் பதில் அளித்திருக்கிறார்…).

நீதிமன்றத்தின் வாயிலாக அவர்களுக்கு தக்க எதிர்வினையாற்ற இருக்கிறோம் என்பதை குறளி பதிப்பகம் அறிவிக்கிறது.

கூட்டு முயற்சி என்ற அபத்தமான வார்த்தையை வைத்து, விடியல் பதிப்பகமானது இவ்வேலைகளை தொடர்ச்சியாக செய்கிறது என்பதை இதன் வாயிலாக பதிப்பாளர்களும் புத்தக விற்பனையாளர்களுக்கும், பாப்பசிக்கும், வாசகர்களுக்கும் அறிவித்துக்கொள்கிறோம். விடியலின் இந்த மோசடிக்கு அவர்கள் ஆதரவளிக்கக்கூடாது எனும் வேண்டுகோளையும் இதன் மூலம் வைக்கின்றோம்.

விடியல் டிரஸ்ட்- விடியல் பதிப்பகத்தின் மோசடிக்கெதிராக குறளி பதிப்பகம் களம் இறங்கிப் போராடும். பதிப்புலகில் தொடர்ந்து வரும் விடியல் பதிப்பகத்தின், உழைப்புச் சுரண்டலுக்கு தக்க பதிலடி கொடுக்கும்.

Related Links

வியாபாரிகளிடம் சிக்கியுள்ளதா விடியல் பதிப்பகம்? - http://tinyurl.com/kvqk3xm

விடியல் பதிப்பகத்தின் விசமத்தனம் - HTTP://WWW.KEETRU.COM/INDEX.PHP/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/24651-2013-08-19-18-17-58


இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...