……….சொல்ல வேண்டிய வார்த்தைகளின் அர்த்தங்களை மனதில் நினைத்ததும் மௌனம் தலைகுப்புற நம்முன் விழுந்து மரிக்கிறது. சொல்லப்படாதவைகளோ சொல்லப்பட வேண்டியவருக்கு நாம் செலுத்தும் வன்முறையாகவும் மாறுகிறது.
வார்த்தைகளிலிருந்து மௌனத்திற்கும் மௌனத்திலிருந்து வார்த்தையின்மைக்கும் தாவிக்கொண்டிருந்தேன் உண்மையில் அது ஒரு ஊசலாட்டம்தான் இருந்துவிட்டுப்போகட்டுமென மனமும் பேசித்தீர் என அடம்பிடிக்கும் நண்பர்களும் கொண்டிருக்கிறேன்.
எல்லாவற்றையும் புரிந்து கொள்ள நினைக்கும் வன்முறையிலிருந்து சதா தப்பியபடியே அலைந்துகொண்டிருந்தவன் நிதானிக்க வேண்டியிருந்தது. நின்றுவிட்டேன். நான் விரும்பிக் கைக்கொண்டிருந்த, எவருக்கும் தர மறுத்த என் அனாதைத்தனத்தை ஒரு சிறு புன்னகையால் பிடுங்கியெறிந்திருக்கிறாள்.வழியும் பெயரற்ற கண்ணீரில் உப்புச்சுவை காற்றில் கரைகிறது.
இப்படியாக......
அவளை சரியாக கடற்கரையில் வைத்து சந்தித்தேன் என்பதை விட பார்த்தேன் என்று சொல்வேன். பார்த்தேன். கவிதைகளையும் கோபங்களையும் உடன் கொண்டு வந்திருந்தாள். நானும் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டுத்தான் போயிருந்தேன். பற்றிக்கொள்ள எதுவும் நடக்கவில்லை. நானறிந்த கவிகளைப் பேசியதைத்தவிர. இன்றுவரை எனக்கு அதில் ஆச்சரியமாய் இருப்பது எந்தப்புள்ளியில் நான் அவளை… அவளை….போகட்டும்….
வாழ்நாள்தோழியாய் வந்து நிற்கிறாள். எதையும் தொலைப்பதில் ஆர்வமுள்ள நான் மிகச்சரியாக என்னைத் தொலைத்திருக்கிறேன். புன்னகையில் கரையும் முகம் அவளுக்கு நித்ராவாகிய அவளுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். இருக்கிறேன்…இருக்கிறேன். இருக்கிறேன்.
வாழ்நாள் தோழனாய் நான் இருப்பேனென்பதை அவளுக்கு அவளை விட அவள் மேல் நான் வைத்திருக்கும் மரியாதையின் மீதமர்ந்து சொல்கிறேன்.
நித்ரா உன்னை மிச்சம் வைக்காமல் காதலிப்பேன்னென்பதை நான் உனக்கு வெகு ஆழமாய்ச் சொல்கிறேன். அது என்னையும் இழுத்துச்செல்லும் பாதாளம் என்பதையும் அறிவேன்.
உன் அன்பின் பெருங்கைகளுக்குள் அடக்கிக்கொள் இச்சிறுவுயிரை.
சிறுகுறிப்பு
நண்பர்களின் முகச்சுளிப்புகளை பிரியத்தின் மீது கட்டப்பட்டும் செங்கற்கள் என்பதாக மொழிபெயர்த்துக்கொள்கிறேன். அவர்களுக்கு என் அன்பு.