குற்றவாளிகளை கைது செய்யலாம்
முறுக்கிய கயிற்றில் அவர்களின் துரோகத்தை எழுதி தூக்கிலிடலாம்
வழியும் கண்ணீரை தூயகைகளால் ஏந்திப்பிடிக்கலாம்
நொறுங்கும் எலும்புகள் புகைய எரியூட்டலாம்
சிதைத்தீயை பாவ நதியால் நனைத்து
அஸ்தி கரைக்கலாம்
நண்பர்களே...
மாறாய்
ஒரு குற்றத்தை செய்வதென்பது அவ்வளவு எளிதல்ல
உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அந்த
நல்லவனின் முகமூடியை கிழித்தெறிய
நீங்கள்
கடவுளாகவேண்டும்
வலதுகையில் உலகை அழிக்க வல்லமை கொண்ட ஆயுதம் வேண்டும்
இடது கையில் குருதியேந்த திருவோடு வேண்டும்...
எல்லாவற்றையும் விட குற்றங்கள் என்ற பதமுடைய வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்திருக்கவேண்டும்
துரோகத்தின் மணத்தை உள்நாக்கால் இழுத்து நுரையிரலை நிரப்பியிருக்கவேண்டும்
ஆம்...
நீங்கள் உங்களுக்கெதிராய் முதலில்
புகார் செய்யவேண்டும்
உங்களிடமே
ஈவுஇரக்கமற்று...
கண்ணீர் சிந்தாது.