“சாவி கொடுத்த வீட்டுக்கடிகாரத்தைப் போன்ற வேறு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் டிக் டிக் என்று திரும்பத் திரும்பச் சொல்லியவாறு இருக்கிறார்கள். டிக் டிக்தான் நற்குணம் என்று மக்கள் அழைப்பதை விரும்புகிறார்கள்.
உண்மையில், இவர்களிடம் நான் வேடிக்கை செய்வேன். இத்தகைய கடிகாரங்கள் கிடைக்கும் போதெல்லாம், என்னுடைய கேலியினால் அவற்றுக்குச் சாவி தருவேன் ; டிக் டிக் என்பதோடு இசை ஒலியும் எழுப்பட்டுமென்று !”
- நீட்ஷே
இளவரசி கூறினாள்... நட்பினால் சாத்தியப்படாதது எதுவுமில்லை சாத்தானே. ஒரு சொல்லை மந்திரமாக்கினால் போதும். வாழ்வு முழுக்க என் அடிமை நீ. சாத்தான் மிகச்சாதாரணமாக சொல்லியது. நட்பு. அதுவும் இளவரசியின் நட்பு. அதிகாரத்தை முகமாய் மாற்றிய இளவரசியே, என் முன்னால் அடிமைக்குரிய சொற்களையோ, உன் நீதியையோ வீசியெறியாதே, சாமான்யர்களின் சொற்களுக்கு வேண்டுமானால் அது ஆணையாய்த் தெரியலாம், நான் வசைகளின் சொத்து. குறித்து வைத்துக்கொள். கடவுளின் அதிகாரங்கூடிய சொற்களும் என்னை அசைத்தது இல்லை.
இளவரசி கூறினாள், உன் வசைகளை இளவரசி நம்பவில்லை, ஆனால், அடிமைகளுக்கும், சாமான்யர்களுக்கும் நட்பு கிடைப்பதில்லை. அது மேலும் பொருட்படுத்தக்கூடிய ஒன்றல்ல, அரசர்களின் தூய ஒளிபொருந்திய நட்பே யான் பேச முடிந்த ஒன்று.
அறிந்து கொள் இளவரசி, உனது உன்னத பலிபீடத்தில் ஏறி தலையைக் கொடுக்கும் அப்பாவியின் இதயமும் துடித்துக்கொண்டேதான் இருக்கிறது. நட்பு அடிமைகளுக்கு வாய்க்காத ஒன்றென நீ உரத்துக்கூறியதை நான் பகிர்ந்து கொள்கிறேன். சரி சமமாக, தட்டுக்களில் பரிமாறப்படும் விசத்தைப் போல, தெரு நாயின் தாப நாவையொத்த என் நா அதை தட்டில் நக்கி வட்டங்களை வரைகிறது.
இளவரசி, நீ சாமான்யர்களையும், அடிமைகளையும் குறையுள்ளவர்கள் என்று, நீ ஒதுக்குவதிலிருந்து என்னாலும் உன்னை ஒதுக்கமுடியும். குறைகள்தான் மேன்மைகளை விகிதாச்சாரப்படி அளக்கும் தராசு. செங்கோலுக்கு வளையாத அறப்பீடம். உன்னதங்களை பலிபீடத்திற்கு கொண்டு செல்லும் காலத்தில் நான் பிறந்துள்ளேன். நியாயங்கள் என்ற ஒன்று எப்பொழுதும் வறியவருக்கு தன் இதயத்தைக் காட்டுவதில்லை, இளவரசிகளான உன் போன்றோருக்கோ தன் புட்டத்தை வெட்கமில்லாமல், வெற்றிகரமாகக் காட்டுகிறது. நட்பின் பெயரால் அந்தரங்கமும் இல்லாது போன புவியில்தான் என் கால்கள் பாவுகொள்கிறது நினைவில் கொள் இது சாத்தானின் சொற்கள்.
உண்மையில்
அந்தரங்கம் பேசாத பேச்சுக்களின் மௌனம்
எவளோ ஒருத்தி
அல்லது
ஒருவனின் தற்கொலைக் குறிப்புகள்,
சோர்வுற்றவர்கள் அந்தரங்கத்தைப் பந்தி விரித்து பரிமாறுகின்றனர்
விருந்து
மகிழ்வுடன் நிறைவுபெறும்போது
இசைக்கப்பட்ட காகிதக்குறிப்புகள்
எரிந்து மலர்கின்றன
சாம்பல்
பல சித்திரங்களை வரைந்துவிட்டும்
மேன்மையானவர்களின்
கண்களை உறுத்திவிட்டும் போகிறது.
சாத்தானின் ஓவியக்குறிப்பைப் பொறுத்தவரையில் சாமான்யர்களை வரைவதற்கும், இளவரசர்கள், இளவரசிகளை வரைவதற்கும் வண்ணங்களை பேதம் பிரிப்பதில்லை. சுருங்கச்சொன்னால் மரணத்தின் கரிய நிழலே அனைவருக்கும். என்னைப்பொருத்தவரையில் எந்த வேறுபாடுகளும் இல்லை. வேறுபாடுகளை விதிக்கும் பட்சத்தில் நான் கடவுளாகும் சாபத்தை அடைவேன். என்னளவில் அந்தரங்கம் நிரம்பியுள்ளவன், அம்மணமானவன் இவையே எளிதான என் விதிகள். எல்லாவற்றையும் நீதி என்ற சொல்லுக்குப் பதிலாய், இடும்போது வன்முறை தன் ஆகப்பெரிய கரங்களில் ஆயுதத்தை ஏந்தி விடுகிறது. சாமான்யர்களின் அந்தரங்கத்தை மதிக்காத இளவரசிகள், தங்களது அந்தரங்கத்தை வானளவ போற்றுகிறார்கள். அந்தரங்கமோ அவர்களைப்பொருத்த மட்டில், உன்னதமானவர்களின் படுக்கையறையாக கிடக்கும், பலிபீடங்களின் கள்ளத்தனமாகக் கசியும் இசைக்குறிப்பு. வெற்று முனகல். அவ்வளவே.
கேள் இளவரசி... இளவரசிகள் எப்பொழுதும் மௌனமாக இருக்கின்றனர். அடிமைகள் தாபம் மேலிட வார்த்தைப் பிச்சைகளைக் கோருகின்றனர். உண்மையில் இளவரசி அவர்களுக்கு ஆணையிடுகிறாள். அடிமைகளின் துர்நாற்றம் இளவரசிகளுக்கு ஆவதில்லை. குளித்துவிட்டு பெரும் பேரரசனைப் போல் வரச்சொல்கிறாள். அங்கு கால்களை விரித்து நடப்பது நட்போ, அந்தரங்கமோ இல்லை, ஆகக்கணம் பொருந்திய புகழின் பரிவர்த்தனைக் குறிப்புகள். அதிகாரத்தின் செங்கோலை வாய்க்குள் திணித்தபடி இளிக்கும் ஓர் வெற்றுப்புன்னகை.
நாவில் கசியும் ஈரத்தை எச்சிலெனவோ, குருதியெனவோ எழுதலாம். அப்பாவிகளுக்கு அந்தரங்கம் கிடையாது. அவர்கள் நடுத்தெருவில் முழு நிர்வாணமாக நிற்கின்றனர். உயர் குடிப் பிறப்பாளர்களுக்கு நட்பு ஒரு கொடுப்பினை. அவர்களின் சொல்லமுடியாத, நம்பிக்கையூட்டும், நல்லதன்மையின் ஒரு பகுதி. அது பிணக்காக்கைகள் உண்ணதாவாறு அவர்களால் வெட்கங் கெட்டதனமாக பாதுகாத்துக் கொள்ளப்படுகிறது.
ஏழைகள் எனப்படுவோரின் நட்பு இதுவரை எங்கும் விசாரிக்கப்படாமல் நாறிக்கொண்டிருக்கிறது,. நறுமணத் தைலம் பூசப்பட்ட உன்னதமானவர்களின் நட்பு, ஒரு பிணத்தைப்போல் ஆரவாரத்துடன் வீதிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. வீதியெங்கும் வன மலர்கள் கசங்கி வெம்புகிறது. அறிவாய் இளவரசி உன்னுடன் உரையாட எனக்கு அதி உன்னதமான மொழி தேவையில்லை. பிய்ந்து நாறிக்கிடக்கும், தைக்க முடியாத சொற்களினால்தான் எனது உணர்ச்சியை விவரிக்கமுடியும். யோசித்துக்கொள் உனது உன்னத மொழிகளை நான் புரிந்துகொள்கிறேன், எனது ஆபாசச் சொற்களின் அகராதியை நீ புரிந்து கொள்ளலாம், ஆனால் வாழமுடியாது. புகழுக்காக உடலை விரிக்கும் இளவரசன்கள், இளவரசிகளிடம் மட்டுமே தூய நட்பு ஒளிவிடமுடியும்.
இளவரசர்களும், இளவரசிகளும் செங்கோலுக்கு பிறந்தவர்கள். அவர்களுக்கு யாசகம் கேட்டறியாத துருப்பிடித்த நா, மேன்மையான சொற்களை மட்டுமே கேட்கும் ஊளையொழுகும் செவி, இரும்பாலான இதயம், தங்கத்தாலான குறி. இவை மட்டுமே வளம் பொருந்திய சொத்து. இவர்களே தங்கள் மேலான தொண்டைகளால் ஊளையிட்டு அதிகாரத்தை வன்புணர்ச்சி செய்கின்றனர். சில சமயம் ஏமாற்றி, பல சமயம் கெஞ்சி.
கேள் இளவரசி...இது இளவரசியின் எழுதப்படாத அரசக்குறிப்புகள்.
இளவரசியின் நட்பு எப்பொழுதும் உன்னதமானது. அழுக்கும், வியர்வையும் இல்லாதது, முக்கியமாய் குசு போடாதது. இளவரசியின் நட்புக்கு குறி கிடையாது, இருந்தாலும் இளவரசியின் முன் அது விடைக்கக்கூடாது. மிகுந்த உத்தமும் ஆன்மிகச் செல்வமும் கொண்ட குறிகள் மட்டுமே இளவரசி நாடக்கூடியவை. இளவரசி, இளவரசன்களின் நட்புக்கு எப்பொழுதும் காலம் தாழ்த்தாது தன்னைத் தாரைவார்த்துள்ளபடியே இருக்கவேண்டும். இளவரசியைப் பொருத்தமட்டில், நட்பில், பொருள் பரிவர்த்தனைகள் கிடையாது. ஒரு சல்லி நாணயம் கூட அவள் இரக்கக்கூடாது. இளவரசியின் நண்பர்கள் வானத்திலிருந்து புட்டம் குப்புற மல்லாந்து விழுகின்றவர்கள். வானிலிருந்தும், அதிகாரத்தின் உன்னதத்திலிருந்தும், தூவப்பட்ட பூக்களின் பின்னணியில் அவர்களின் நட்பு கீதம் நறுமணமாய் காற்றிலெறுகிறது. அவர்கள் மட்டுமே ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு இளவரசியைத் தவிர வேறு எவருமே நட்பாய் இருக்கக்கூடாது. இளவரசியின் மனச்சூட்டில் இதங்காணூம் செல்ல நாய்க்குட்டிகள் அவர்கள். முழு முற்றான நில நிலாவால் வந்தனம் செய்யப்படுகின்றனர். இளவரசி குறியற்ற ஆகிருதிகள், சிற்றசர்கள், மற்றும் தான் அணுக விரும்பாத அடிமைகள் கொண்ட தலைவி. குறி உள்ளோரை இளவரசி ஆசிர்வதிப்பதில்லை. ஒழுக்கம் மட்டுமே அவளுக்கு விரிந்த சிறகுகள். இதுவே இளவரசி நட்பு கொள்ளும் சாசன விதிகளின் பொன்பட்டுச் சொற்கள்.
இளவரசியைக் கேள்வி கேட்கிறது சாத்தான்.
ஆண் பெண் ஒழுக்கத்தை இவ்வுலகில் கடவுள் படைத்திருக்கலாம், ஆனால் நானோ சொல்லமுடியா, விவரிக்கமுடியா இயற்கையின் ஒரு பகுதியாய் உறுப்பைப் படைத்தது யாமே. இயற்கை பால்களாலானது. குறி இருப்பின் வேலை செய்யும். குறிகளுக்கு விதிவிலக்குகள் உண்டு. இளவரசி கேள் இதை உன் சாசனத்தில் பிழை உண்டு உன் கூற்றில். குற்றம் சொறுகப்பட்டிருக்கிறது. இளவரசி கூந்தலை ஆவியாக்கி உண்மை செப்பினாள். முட்டாள் சாத்தானே என் அருகில் வந்து உட்கார். என் கைகளை மெதுவாய் பிடித்துக்கொள். கதகதப்பு ஏறுகிறதா...இதுதான் உலகின் ஆகப்பெரிய நட்பு.
சாத்தான் பிளவை நாவாக்கி, வார்த்தைகளைக் கத்தரித்து அனுப்பியது. கேள் இளவரசி ... நான் பொய் சொல்லுவதில்லை. சாத்தான்கள் ஒரு போதும் பொய் சொல்லுவதில்லை. பூமிக்கு என் பொய்கள் பலனளிக்காது. ஆம் இளவரசி... உள்ளுருப்புக்களைத் தீண்டுவது, அல்லது தீண்டாமல் இருப்பது என்பது மனதுக்கு அதிகபட்ச சாத்தியங்களில்லாதது. அப்படிச் சொல்வோரின் குறி சந்தேகத்துக்குரியது, அல்லது இளவரசியாகிய நீ சந்தேகத்துக்குரியவள். வார்த்தைகளை ஒரு கஞ்சன் தன் காசுகளை எண்ணிச் செலவழிப்பது போல் நீ தூய குறிகளைக் கணக்கிட முடியாது. பொய்களால் மட்டுமே குறிக்கு பூச்சுற்றி வழிபடமுடியும். ஆனால், அளவில் பெரிய உண்மையோ, அளவில் சிறிய உண்மையோ, அது அதை அது தான்தோன்றித்தனமாக வெளிப்படுத்தும்.
நல்லது இளவரசி நீ கூறுகிற ஒழுக்கமான, தேர்ந்தெடுக்கப்பட்ட நட்பு சிறிதளவும் பரிவர்த்தனை, கொடுக்கல் வாங்கல் இல்லாதது. அப்படித்தானே. சாத்தானாகிய நான் உன் வார்த்தைகளை நம்புகிறேன். ஆனால் அர்த்தங்களை கேள்வி கேட்கிறேன்.அப்படியே ஆகட்டும். ஆனால் இளவரசி என்னை மன்னிக்க வேண்டும்.
குறிக்கப்பட்ட, இதுவரையில் உள்ள எழுத்துக்கள், பதிவுகள் ஆவணங்கள் எதிலும் சாமானியனின் உணவு உட்பட நட்பு, காதல், காமம், கேலி, இவை எதுவும் பதியப்படவில்லை, தலைவிகளும் தலைவன்களாலும், அவர்தம் தோழன்களும் தோழிகளுமாகத்தான் அனைத்தும் இருத்தப்பட்டு பதியப்பட்டிருக்கிறது. நாட்பட்ட மலத்தின் வாசனையையொத்த எந்த நாற்றமும் இளவரசிகளுக்கும், இளவரசன்களூக்கும், ஆள்வோருக்கும், ஆள்வோரின் தோழர்களுக்கும் நாசியில் ஏறியதேயில்லை. அதிகாரத்திற்கு வெகு அருகில் உள்ளோர், தவிர்க்கவியலாதவாறு தன் உடலை அடகு வைத்தே, வாழ்நாளைக் கழித்து வந்துள்ளார்கள் என்பதே என் பதிவு.
அதிகாரத்துக்குரியோரின் தூய குறிகளை, முழு முற்றான அதிகாரத்தை, யோனிச்சதையை கவ்வி இழுக்கும் எலிப்பொறியென நட்டுவைத்திருக்கும் ஆண்களின் குறிகளை கேள்விக்குறியாக்கி விளக்கிய சாமானியர்களை தேவடியாள் கூட்டம், குழுப்புணர்ச்சி மாந்தர்கள், ஆண் பெண் பொறுக்கிகள், மற்றும் பொறுக்கியுண்போர் என்று இளவரசியாகிய நீ உன் உன்னத ஒழுக்க விதிகளால் அழைப்பதென்பது, உன் கற்பிதமான, நீ கற்றுக்கொண்ட வார்த்தைகள், மற்றும் எழுத்துக்களின் வெற்று உத்தமத்தனத்தை, உன் பொய்க் கைவிளக்கேந்தி,சோர்வான, பிரகாசமான உன் வார்த்தைகளின் மூலம் நீ சதா தேடியலைவதைக் கண்டுகொள்கிறேன்.
பத்தினித்தனத்தை ஊர் முழுக்க பறைசாற்றுவதன் மூலம் உன் அகம் குளிரலாம் இளவரசி. ஆனால் உன் மனத்தின் அடியாழத்தில் புகழ் எனும் சர்ப்பம் வாய் திறந்து விழுங்கவும், ஆறாத வாதையாய் தன் குளிரமுடியா பகுதியில் அது தீராது பற்றியெரிந்து கொண்டிருப்பதையும் நான் அறிவேன் இளவரசி. பத்தினிகளும், பரத்தைகளும் முழுமுற்றான ஆணுக்காகவே படைக்கப்பட்ட வஸ்துகள் இளவரசி.
கவிஞன் சொல்லுகிறான்...
“கற்பை உறுப்பில் வைத்து காவல் காக்கும்
அத்தனை கண்களுக்கும் கள்ளக்காதல்
ஒரு புன்னகையைத் தருகிறது”
பத்தினித்தனத்தை நிரூபிக்க நீ உன் இளவரசர்களைத் துணைக்கழைப்பதில் உள்ள அறுவெறுப்பை சாமனியர்கள் அறிவார்கள் இளவரசி. இந்நிலமெங்கும், புழுதியறையும் இத்தேசமேங்கும் இருப்பது, இரண்டாயிரமாண்டு காலத்துக்கும் மேலான சாமான்யர்களின் ஆண் பெண் மனச் சித்திரங்கள் மட்டுமே இளவரசி. சிறு சதைத் துணுக்கு உன் காலை இடறி நீ கொட்டிக் கவிழ்த்த நிறங்களை அரச ஓவியம் என்று நீ சொன்னால் உன் இளவரசர்கள் நம்புவார்கள். உண்மையில் அது அப்படியில்லை இளவரசி. உடல் எல்லாவற்றையும் குரூரமாக ஏமாற்றும் ஆயுதம். அனைத்தையும் ஈவிரக்கமற்று பழிவாங்கும் கருவி, சக ஆணை ஆண் விரும்பும் காதலனிடம் மட்டுமே நீ உன் இளவரசிக்குரிய பெண்மையை அடகு வைக்கமுடியும். பெண்ணுடலின் தீராத ரகசியங்களை எள்ளலுடன் கீழே வீசியெறிந்த மனம் அவனுடையது. ஆனால், அவனுக்கு ஆண்களின் மேல் உள்ள காதல் உன் மேல் வராது. மேலும் அது தூய நட்பாய் இருக்க ஆகப்பெரிய சாத்தியங்கள் உண்டு.
உளவியலுக்குத் தெரிந்து, ஆண் பெண் நட்பில் காமம் வகிக்கும் கொடுமையான, மற்றும் எதார்த்தமான பாத்திரத்தில், ஊறி நிரம்பும் குழப்ப திரவத்தை சாத்தானாகிய நானறிவேன். அதை புகழுக்கும், காசுக்கும், தன்முன்னிருத்தலுக்கும் விலையாக்குவது, அல்லது ஆணுக்கு அதன் அர்த்த ரேகைகளை கைபிடித்துக் கூட்டிச்செல்வது, வரைபடத்தை விளக்குவது, இவைகளின் மூலம் மட்டுப்படலாம். மாறாய் சிறுதுளி பெரு நெருப்பைத் தணித்துவிடாது இளவரசி.
மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இன்றும் தணியாத நெருப்பு காமம் மட்டுமே. செலுத்தப்பட்ட அம்பென தைக்கும் விதிகளால் மட்டுமே காமத்தை வெல்லமுடியுமே இன்னும் அழுத்திச் சொன்னாள் தள்ளிப்போடப்படுமே தவிர நட்பினால் அல்ல. இளவரசிகளும், இளவரசர்களுக்கும் கொளுத்த சதைகளையுடைய அந்தப்புரம் உண்டு, சாமன்யர்களுக்கோ தன் உடலைத் தானே தின்க, சுயத்தை அறிய வெளிகள் இல்லை.
காமத்திடம் கெஞ்சி காரியம் சாதிக்கமுடியாது. கட்டளை, உடலை இருகூராக்கும் முன் முடிவுகள் இவைகளை களத்தில் வைப்பதே தற்காலிக சாத்தியங்கள். வயது கழிந்ததும், குறி சோர்ந்ததும், வேட்கை கொண்ட மிருகமெனக் காத்திருந்து, மூளையில் சிம்மாசனமிடும் காமத்தை வெல்ல முடியாத கிழவர்களை ஊர்திகளில் கண்டு திகைத்திருக்கிறேன். முதுக்காமம் சிறுமியறியாதது, இளம் பெண் கற்பழிப்பு என்ற வாக்கியத்தில் ஊறிய சதைகள், தன் மையமழிந்து, சிறுமிகள் கற்பழிப்பு, கிழவிகள் கற்பழிப்பு என்று தணிக்கையிடமுடியாத அரசாணைகளின் மூலம் நாளும் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
கிழவிகளையும், சிறுமிகளையும் கற்பழிக்க முடியாது என்பது இளவரசிகளுக்கும், இளவரசன்களுக்கும் தெரியாது. சாமான்யர்களுக்குத் தெரியும். அது வன் கொலை. இளவரசி உன் நட்பை நீ பறைசாற்றுவது நான் பத்தினிகளின் பத்தினி, என்ற உறுப்பையும் அது முன் வைக்கும் உடலையும் கொண்ட வெற்று வாக்கியங்கள் என்ற அளவில்தான் என்பது, வார்த்தைகளில் உள்ள வாக்கியங்களின் ஓசையில் தெரிகிறது. அப்படி இருப்பின் அது உன் பத்தினித்தனம் மட்டுமே. தவிர, நட்புக்கு அதில் சிறிதளவும் நம்பிக்கை கிடையாது, மேலும் இளவரசர்களை உன் பத்தினித்தனத்தை பிரயோகித்துப் பார்க்கும் சோதனைச் சாலை எலிகளாய் நீ மாற்றிக்கொண்டிருக்கிறாய். சோதனைச் சாலை எலிகள் மிகுந்த கவனமுடையது. ஓர் எல்லைக்கு மேல் ஆபாத்தானவை. ஆம் இளவரசி அவை தவிர்க்கமுடியாத வகையில் இளவரச எலிகள், இன்னும் மன்னிக்கமுடியாத ஆண் எலிகள் .
இளவரசி உன் மனதை பொய்களின் மூலம், நட்பு என்கிற எலியிடம் பலி வைக்கிறாய். ஆனால் எலிகள் உன்னை பயன்படுத்திய காலங்களையும் சோதனை செய்துகொள். எலிகள் வயதான பின் நிலைத்து நிற்கப்போவதில்லை. ஆய்வுப்பொருளான பத்தினித்தனமானது, வயதான குறிகளைக் கொண்ட எலிகளை புறந்தள்ளிவிடும். ( இன்னும் சொல்லக்கூசும் அளவுக்கு இளவரசர்கள் கிழவிகளின் பத்தினித்தனத்தை, அதன் தெளிந்த ஸ்படிக நட்பை பறைசாற்றுவதில்லை, ஆம் இளவரசி. கிழவிகளின் நட்பு இதுவரை ஏன் போற்றிப்பாடப்படவில்லை என்பதை இளவரசர்களின் அகராதிகள், அதன் வரலாறெங்கும் பதிந்து வைத்திருக்கிறது. பத்தினித்தனத்தைப் பொருத்தமட்டில் இளவரசர்களுக்கு அது இளம்பெண்களுக்கும், கொடூரமான மனநிலையுள்ளோருக்கு சிறுமிகளாகவும், ஆகக்கடைசியில் உள்ள வக்ர இளவரசர்களுக்கு பெண் என்ற வார்த்தைப் பிரயோகமே வன்புணர்ச்சிக்கும் உரியதாக இருக்கிறது. இங்குதான் தூய நட்பு இளவரசர்களுக்கு ஒளிவிடுகிறது. கிழவர்கள், கிழவிகள் பேரரசர்கள், பேரசிகளாக இருந்தாலும் நட்பு அங்கு தன் ஒளியை விடுவதில்லை. ) இளமையான எலிகளை நீ குறிவைக்கையில் அவை துரதிருஷ்டவசமாக இளைய ஆராய்சியாளனை நம்பும். வயது கழிந்ததும் அடையமுடியாத துக்கத்தை சோதனையில் கண்டு பிடித்திருப்பாய்.
உனக்கு மட்டுமே உத்தமர்கள், மற்றவர்களுக்கு அயோக்கியர்கள் என்று நீ கூறும்போது பாவிகளை மன்னிக்கவே நான் இப்பூமிக்கு வந்தேன் எனக்கூறும் என் எதிரி இயேசுவின் வாசகம் நினைவுக்கு வருகிறது. நல்லது இளவரசியே, நீ ஒருத்தியே, உன் நட்பு மட்டுமே உத்தமம், நீ பத்தினிகளின் ஒளிவிளக்கு , ஒழுக்கசாலி, அறிவின் தூய ஒளி, மகத்தான புத்திசாலி. உனக்கெதிராய் ஒரு நாளும் குறிகள் நீண்டதில்லை. உன் பத்தினிப்பார்வையில் பொசுக்கிய குறிகளும் எண்ணிக்கையிலடங்காதது. சாத்தானாகிய என்னை பாவிகளை மன்னிக்கும் இயேசு எப்பொழுதும் மன்னிக்கப்போவதில்லை. நான் அறிவேன் இளவரசி, பாவங்களின் தலைவனாகிய நான் இருக்கும் மட்டுமே அவன் வலது கை ஆசிர்வதித்துக்கொண்டிருக்கும்..
மேலும்...................
சிறு குறிப்பு :
ஆண் பெண் நட்பானது மகத்தான வாக்கியங்களால் எண்ணற்ற அடிக்குறிப்பு, மற்றும் மேற்குறிப்புகளாலும், மேன்மையான வார்த்தைகளால் விதந்தோதப்பட்டும், பூஜை மலர்களால், தூய அர்ச்சனைகளால் அர்ச்சிக்கவும், கொண்டாடப்பட்டும் வருகிற போது ஏன் கிழவர்கள், மற்றும் கிழவிகளின் நட்பு மட்டும் இன்னாள் தொட்டு, இதுநாள் வரையிலுமான வரலாறெங்கிலும் விதந்தோதப்படவில்லை. குறிக்கப்படக்கூட இல்லை. கிழவர்களுக்கும் கிழவிகளுக்கும் நட்பு சாத்தியப்படவில்லையா, அல்லது ஆண் பெண் நட்பானாது இளமையில் மட்டுமே சாத்தியமெனில், நட்பு சதையின் தினவைக் குறிவைப்பது, அல்லது அதைத் தடை செய்து தன்னை ஒப்பற்ற புனிதராக்கிக்கொள்வது என்ற குறியீட்டில்தான் தன்னை வாழ்வித்துக்கொண்டு வருகிறதா?
கிழவன் கிழவிகளின் ஆண் பெண் நட்பு ஏன் கவர்ச்சியாகக் கருதப்படவில்லை
"குற்றவாளிகளின் மொழி, நேர்மையை மிகுந்த அந்தரங்கத்தோடு பேசும்போது நீதி என்ற வெறும் சொல் தனது புட்டத்தை இடதும் வலதும் ஆட்டுகிறது.
நீதி, நேர்மை, வாய்மை, அதன் இறுதியில், மௌனம் கொண்ட வாய்களுக்கு, அதிகார இரும்பினால் பூட்டுப் போடும்போது, சாவிகளைக் கோமாளிகள் ஒளித்து வைக்கிறார்கள்."
- வசுமித்ர.
-தொடரும்....
[ நீட்ஷேவுக்கு...]