Saturday, April 9, 2011

அம்மாவின் அஸ்தி - சச்சிதானந்தன்.


அம்மாவின் அஸ்தி

குழந்தை பருவத்தில் நான்
கட்டித் தழுவிக்கிடந்த
அம்மாவின் உடலில் உணர்ந்த
அதே இளஞ்சூடு நிறைந்த சாம்பலிலிருந்து
இதோ அவளுடைய எலும்புகளைப்
பொறுக்கி எடுக்கிறேன்
இப்போதேனும் வலி உண்டாக்காமல்

ஒரு காலத்தில் இந்த அஸ்திகளுக்குள்
நான் இருந்திருக்கிறேன்
இன்னும் ஒரு வேண்டாத விருந்தாளியைப்
பட்டினி சூழ்ந்த வெளிச்சத்துக்கு அழைத்துவர
இந்த எலும்புகள்
இறுகி முறுகி நொந்திருக்கின்றன

பல ஆண்டுகள் உருண்டோடிய பின்னரும்
தன் பழைய வீட்டோடு
ஒத்துப்போகமுடியாத அவன்
இதோ ஒரு கருத்த பிறவியின்
வெளித்த நினைவுகளைத்
திரட்டிக்கொண்டிருக்கிறான்

ஓர் எலும்பு சிரசிலிருந்து -
ஒரு விதவையின் துயரிழைந்த பாசம்
இந்த மண்டை யோட்டுக்குள்
முள்ளடர்ந்த பூக்களை வைத்திருந்தது

ஓர் எலும்பு தோளிலிருந்து
ஒரு குடும்பம் முழுவதையும்
ஒற்றையாய்த் தூக்கி நிறுத்தியதால்
இந்தத் தோள் எலும்புகள் தேய்ந்து போயிருந்தன

இந்த எலும்பு முதுகிலிருந்து
விறகு பொறுக்கவும், அடுப்பூதவும்
மணிக்கணக்காக குனிந்து நின்றதாலேயே
இந்த முதுகெலும்பு வளைந்து போனது

இந்த மார்பு எலும்பின் மீது தான்
அவளுக்கு எதிரியாய்ப் போன
ஒரு உலகத்தின் மொத்தப் பாரமும்
ஏறி அமர்ந்திருந்தது
இதனடியில் துடிக்கும் ஒரு சிறைச்சாலை
தங்கச் சிறகுகளைக் கனவு கண்டு
பிள்ளைகளுக்கு அமுதம் சுரந்தது

இந்த வில்லா எலும்புகளின் கூண்டுக்குள்
பசி பிடறிமயிர் குலுக்கி
கர்ஜித்துத் திரிந்தது

இந்த எலும்பு பாதத்திலிருந்து
இந்தக் கால்களின் ஒவ்வொரு எலும்பிலும்
ஒரு நாளும் அவள் நடந்து தீர்க்கமுடியாத
தூரங்கள் இருந்தன


நெருப்புக் கழுவில் இந்த அஸ்திகளை
இப்போது நான் பாலினாலும்
பாசத்தினாலும் குளிர்விக்கிறேன்


ஏ, கடலே
அனைத்துப் படைப்புக்களும் அன்னையே
இவளை, உன் உன் சாலப் பழைய அலைகளில்
ஏற்று வாங்கிக்கொள்.
இவளைத் தொட்டிலிட்டுத் தாலாட்டு,
பூமியின் ஆதி உயிரை
நீ தாலாட்டியது போல.

இந்த அஸ்திகளிலிருந்து படைத்துத் தா
ஒரு புதிய ஏவாளை
வணங்காத சிரசு படைத்தவளை;

கடலும் கரையும்
அவளுடைய முலைப்பாலால் நிரம்பட்டும்

வளர்ந்து பெருகட்டும்
பூமியின் அன்புக்கு அருகதையுள்ள
ஒரு புதிய தலைமுறை
புதிய மனுஷன்
புதிய மனுஷி.

சச்சிதானந்தன் கவிதைகள்
தமிழில் சிற்பி
காவ்யா வெளியீடு



“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...