ஒரு
கவிஞன் உழைக்கும்போது நாடு அமைதியாக இருக்கிறது
கவிஞர்கள்
உழைக்கும் போது மனம் அமைதியாகிறது
கவிஞர்கள்
உழைத்து உண்ணும் போது இன்னும் அழகாக மாறுகிறது
கவிஞன்
உழைப்பைச் செலுத்தும்போது
கவிஞன் அலுப்பில் உறங்கும் போது
மினுமினுக்கிறது
கவிஞன் குறைந்த பட்சம் மண்வெட்டி பிடிக்கும் போது
மலர்கிறது
கவிதை
கவிதைகள்
கவிஞர்கள்
எழுத
உழைக்க வேண்டும்
காதலையும்
காமத்தையும் எழுதும் தறுவாயில்
கொட்டாவி விடும் கவிஞனை
காமமும்
காதலும்
இறுதியில்
கவிதையும் மன்னிக்காது
சமரசமின்றி
கவிஞன்
கவிஞர்கள் உழைக்க வேண்டும்
உழைப்பை உண்ணாத கவிஞன்
எழுதும் போது
கவிதை
மூச்சடைக்கிறது
அதன் கனங்கூடிய இருதயத்தை நோக்கியாவது கவிஞர்கள் தங்களது
கவிதையை
எழுதும்
கரத்தால் குத்தி தெளிய வைக்கவேண்டும்
கவிதைக்கும்
வார்த்தைக்கும்
சொல்லுக்கும்
உரிமை கோருபவனை
கவிஞன்
கவிஞர்கள் என்று அழைக்கக்கூடாது
கவிஞர்கள் ஆழப் புன்னகைக்க
உழைக்கும் போது
வியர்வை சிதறும்போது
மக்கள் கவிதை எழுதத்தொடங்குவர்
மக்களின்
கவிதையில்
கவிதையோ
கவிஞனோ
கவிஞர்களோ ஒருபோதும் இருக்கப்போவதில்லை
வெறுமனே ஒரு கவிதை
அவ்வளவே
கவிஞன் பிச்சையெடுக்கும் போது
அவன்
கனத்த தும்பிக்கை தூக்கி
ஒற்றை ரூபாயை மிகுந்த வலிவுடன்
இரக்கும் யானை பற்றி விசனங்கொள்ளக்கூடாது
சர்க்கஸ் கரடிகளை பற்றிச் சிந்திக்கக்கூடாது
முக்கியமாய் கவிஞன்
கவிஞர்கள்
அரசியல் பேசும்போது கவனமாயிருக்க வேண்டும்
கவிதையறியாது
கவிஞன்
தெருச்சண்டைகளை
புகார்களை
ஏசல்களை
இயலாமைகளை
வன்மத்தை
பாராளுமன்றத்திற்கோ
சட்டமன்றத்திற்கோ
நாடாளும் மன்றத்திற்கோ
மேலவை
கீழவைக்கோ
இன்னபிற மக்கள் இல்லாத சபைகளுக்கோ
கவிதையை
கைபிடித்து தரதரவென இழுத்துச் சென்று வன்புணர்ச்சி செய்ததாகிவிடும்
எதுகைகளை
மோனைகளை
கொலை செய்வதைப் போல்
கவிஞன்
கவிஞர்கள் எழுத வேண்டும்
ஒரு கவிதையை எழுத கவிஞன் ஓய்வெடுக்க வேண்டி இருந்தால்
அவன்
எவருக்கும்
சொல்லாமல்
தன் இறப்பை தன் காதில்
தனதிரு நாவை மடித்துஅழுத்தமாக ஓதவேண்டும்
பறந்து கொண்டிருக்கும் பறவை
சட்டென மடிந்து
செங்குத்தாய்
நிலம் வீழ்வதைப் போல.....
ஒரு கவிஞன் எப்படி இருக்க வேண்டும்,
ReplyDeleteஒரு கவிஞன் எப்படி இருக்கக் கூடாது,
கவிதையின் பாடு பொருளின் இயல்புகள் எவ்வாறு அமைய வேண்டும்,
கவிஞனிற்குரிய ஆளுமைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை இக் கவிதை தத்ரூபமாகச் சொல்லுகிறது.