Friday, August 26, 2011

மரண தண்டனை.
மனிதன் கண்டுபிடித்த கொலை ஆயுதங்களிலேயே மிகக் கொடூரமானதும் அற்பத்தனமானதும் அறுவெறுக்கத்தக்கதும் நீதியே. அதுவே சகமனிதனை அநீதி என்ற பதத்தால் சுட்ட விரும்புகிறது.  சக மனிதன் சக மனிதனுக்கு ஊறு விளைவிக்கும் போது, அவன் தனது மனநிலை, காலம்,பின் விளைவுகள் எதையும் தன் கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. அதுவே கொலையாக முடிகிறது. ஆனால் அரசு தனது அறப்புத்தகங்களிலிருந்து நீதிகளை வாரியிறைத்து முடிவு செய்கிறது மரண தண்டனை. மரணம் எப்பொழுதும் தண்டணை கிடையாது. அது வாழ்தலைப் போல ஒரு பேறு. ஆனால் அதை அரசே தனது செங்கோலினால் விநியோகிக்கும் போது, சட்டப்புத்தகங்களின் எண்கள் வழியாக ஒரு மனிதனின் கையில் திணிக்கும்போது,  தண்டனை என்கிற ஒரு சொல்லின் உச்சத்தை தொடுகிறது. அரசு தனது அதிகாரத்தின் மூலம் வழங்குவதால் அது ஒரு மனிதனுக்கு தண்டனைதான்.

பிறந்தவர்கள் சாகத்தான் வேண்டும் என்பதை விதியாகவோ, ஊழாகவோ, அல்லது அறிவியலாகவோ, கூட ஏற்றுக்கொள்ளட்டும். ஆனால் இதை ஒரு அரசு தன் சொற்களின் வழியாக, இது  நீதி,  இது அநீதி என்று பிரித்து வைத்து பேதம் பாராட்டுவதென்பது, மன்னிப்பு என்கிற ஒரு சொல்லை மதிப்பிழக்கச்செய்கிறது. மனிதன் கடவுளைக் கண்டுபிடித்ததன் மூலம் தனது ஆகப்பெரிய இருப்பை உறுதி செய்து கொண்டான்.

எல்லா தேசங்களிலும் கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் நிகழ்கின்றன. சம்பந்தப்பட்ட அமைப்புகள் அப்படுகொலைகளை தூய்மையாக்கல் என்று தான் அழைக்கின்றன. உண்மையில் ஒரு உயிர் என்பது இப்புவியில் நிகழும் எல்லாக் கருத்துகளையும் விட வலிமையான ஒன்று. முதலில் அவன் மனிதன். ஆனால் அரசு அவனை குடிமகன் என்கிரது சட்டங்கள் விதிகள் கோட்பாடுகள் இனம் மற்றும் மொழி என்ற பேதங்களை ஒரு தாய் குழந்தைக்கு சோற்றை ஊட்டுவது போல் அரசு தன் மக்களுக்கு நீதியை ஊட்டுகிறது. சில சமயம் குமட்டும் அளவுக்கு. அரசு மிகச்சரியாக பேதங்களைக் கற்பிக்கிறது. வர்க்கப்பகைமகைகள் இணக்கம் கானமுடியாதன் விளைவே அரசு என லெனின் சொல்வதை இக்கணத்தில் நினைத்துப் பார்க்கலாம்.

மனிதன் தான் கண்டுபிடித்த அனைத்திற்கும் தானே பொருப்பேற்றுக்கொள்ள வேண்டும். சுதந்திரத்தின் பெயரால் ஒரு மனிதன் உயிரை விடும்போது. அந்தத் தேவையை ஏற்படுத்திய இன்னொரு இனமும் செய்வது தற்கொலைதான். நான் நினைக்கிறேன்...இதுவரை நான் அறிந்திராத மனிதரின் கழுத்து இறுக்கப்படும்போது அவன் தான் மனிதனாய் பிறந்ததற்கு அவமானமுற்றிருக்கலாம். மூவரின்  உயிரை சட்டப்புத்தக எண்களோ அல்லது பிரிவுகளோ சிறிதும் புரிந்துகொள்ள முடியாது. அதை ஆழ்ந்து கற்ற மனிதன், தனது மூளையில் தான் கடவுளாகும் தருணத்திற்க்காகவே காத்திருக்கிறான். மரணத்தை தண்டனையாக்குவதன் மூலம் அவன் கடவுளாகிறான். கடவுள் தண்டனையளிக்கிறார்.

மனிதன் மகாத்மாவாகக் கூட இருந்தாலும் தனது வர்க்கச் சார்பு அல்லது இனச்சார்பு என்று வரும்போது தூக்கிலிடுவதை ஒரு வெறும் செயலாகவே மட்டும் பார்க்க முடிகிறது என்பதை காந்தியின் வழியாகவே இந்த காந்தியின் நாடு புரிந்துகொள்ள வேண்டும். 

போராடும் அமைப்புகளும் சில சமயம் பேதங்களின் பிடியில் தவிக்கும் அளவுக்கு, அரசு தனது நஞ்சை, மொழியின் இனத்தில் பெயரால் திணித்திருக்கிறது. அப்சல் என்கிற மனிதன் இப்படித்தான் பிரித்தாளப்பட்டான். இப்போது ஊடகங்கள் முன்வைக்கும் இப்பேதங்களை வரவேற்பது அரசுதான். தனிமனிதன் முன்னால் அரசு தன் கைகளை எப்பொழுதும் விரித்துக் காட்டியதில்லை. ஆனால், அது எதிர்பார்க்க முடியாத அளவுக்கு, ஆளும் கருத்தியலைக் கொண்ட ஆளும் வர்க்கத்தின் பிருஷ்டங்களைத் தேய்த்துக் கழுவுகிறது. இதை நான் துயரம் என்கிற அளவில் வகைப்படுத்த மாட்டேன். உண்மையில் அரசு செய்வது படுகொலை.

அரசானது ஒரு மனிதனுக்கு வழங்கப்படும் உச்சபட்ச தண்டணையே மரணம் என்று கருதுவதானது, சாமனியனும் அதைப் பின்பற்றலாம் என்ற உளவியலைத்தான் ஏற்படுத்துகிறது. தனிமனிதர்கள், இயக்கங்கள் இதையே பின் தொடர்கின்றன. கலைஞர்கள் தங்களது படைப்புகளில் வரும் ஆகச்சிறந்த பாத்திரங்களை மரணத்தின் மூலம்தான் முடிவுக்கு கொண்டுவருகிறார்கள். இப்பொழுது இருப்பது பாத்திரங்களல்ல நான்கு உயிர்கள்.


இந்திய அரசு தன்னை கடவுளின் இடத்தில்தான் வைத்துப் பார்க்கிறது. அங்கு பலிபீடங்கள் மட்டுமே இருக்கிறது. பலிகளுக்குத் தயாராக புதிய கருத்துக்களையும், அதற்கு வரிசையில் நிறுகும் உடல்களுக்கான கருத்தியல்களையும் தேவைகளையும் இந்த அரசே ஏற்படுத்துகிறது. உண்மையில் எரிக்க வேண்டியது  அரசு என்று ஆணையிட்டு வரும் அத்தனை சொற்களையும்தான். அரசு என்ற சொல்லை இக்கணத்தில் நான் இவ்வாறு உணர்கிறேன். அரசு உண்மையில் ஒரு பெரிய பைத்தியக்காரத்தனமான சொல்.

வந்தே மாதரம்.


  கடைசிக் காட்சி – திரை உயர்கிறது
  என் நாட்டு மக்களே !
  உங்கள் எல்லோரையும் நான் நேசித்தேன்
  வணக்கம், உஷாராக இருங்கள்.

  - ஜூலியஸ் பூசிக்.
  தூக்கு மேடைக் குறிப்பு.

- வசுமித்ர

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள்  (hit-or-miss reformer...