" இன்று புத்தக கண்காட்சியில் உயிர் எழுத்து ஸ்டாலில் வைத்து கவிஞர் சங்கர்ராமசுப்ரமணியனுக்கும் வசுமித்திரா என்பவருக்கும் தேவ தச்சன் கவிதைகளை முன் வைத்து பயங்கர அடிதடியாம். சங்கருக்கு ஃபோன் செய்து கேட்டேன். பரஸ்பரம் அடித்துக்கொண்டதில் கடைசியில் வசுமித்திரா தனது கட்டை விரலை கடித்துவிட்டதாகவும் டாக்டர் வீட்டில் ரத்தம்வடியும் விரலுடன் உட்கார்திருப்பதாகவும் தெரிவித்தார்(ன்). நல்லவேளை ’விரலோடு’ போயிற்று. இல்லாவிட்டால் என்னாவது என்று ஆறுதல் கூறினேன். தமிழுக்காக ரத்தம் சிந்துவது என்றுதான் நிற்குமோ தெரியவில்லை…"
மனுஷ்ய புத்திரன்
வணக்கம் மனுஷ்ய புத்திரன். என் பெயர் வசுமித்ர....வசுமித்திரா அல்ல....அதிலும் சங்கர்ராம சுப்ரமணியன் என்ற கவிஞருக்கும் வசுமித்திரா என்பவருக்கும்....நல்லது இந்த என்பவர் என்ற வசுமித்ர உங்களது உயிர்மையில் கவிதைகள் எழுதியிருக்கிறார். என் நினைவுக்குத் தெரிந்து 2003ல் தொடங்கி 2011 டிசம்பர் வரை வந்த உயிர்மையில் இரண்டு பேருக்குத்தான் அதிக பக்கங்களில் கவிதை வெளிவந்திருக்கிறதென்று நினைக்கிறேன். ஒன்று வசுமித்ர, இன்னொன்று மனுஷ்யபுத்திரன்.
மேலும் உங்களது பதிப்புப் பரப்பில் நீங்கள் தொலைத்த விமர்சனக் கடிதங்களில் என்னுடைய கடிதமும் ஒன்று. அது நீங்கள் பதிப்பித்து ஜெயமோகன் எழுதிய சுந்தரராமசாமி நினைவின் நதியில் என்ற நூலுக்கானது அதோடு அந்த விவகாரத்தில் நீங்கள் எனக்கு இரு முறை போன் செய்து கடிதத்தை
எடிட் செய்யலாமா என்று கேட்டீர்கள் நானும் சம்மதித்தேன். ஆனால் உயிர்மையில் அந்தக் கடிதம் வரவேயில்லை. நல்லது. மறுநாள் நேரில் வந்து கேட்டதற்கு கடிதம் தொலைந்து விட்டது என்றீர்கள். அதோடு என் கவிதைகள் குறித்துப் படித்த கவிஞர் க்ருஷாங்கினி என்னையும் என் மகள் நேயாவையும் சந்திக்க விருப்பம் உள்ளதாக தங்களிடம் தெரிவித்ததாகச் சொன்னீர்கள். அப்பொழுது எனக்கு திருமணம் ஆகவில்லை. மகிழ்ச்சி. பழைய நினைவுகளை மறப்பது உடலுக்கும் சில சமயம் மனதுக்கும் நல்லதுதான். ( சாரு, ஜெ.மோ விசயங்கங்களில் உங்களுக்கு இது உதவக் கூடும்.) கடிதத்தை தொலைத்து விட்டேன் என்று நீங்கள் கூறியதும் உங்களது பதிப்பில் எனது கவிதைத் தொகுதி வர எனக்கு விருப்பமில்லை என்று சொன்னேன். உயிர்மையில் கவிதைத் தொகுதி அதும் 2004 களில் எவ்வளவு பெரிய விசயம். மகிழ்ச்சி. அந்த கவிதைத் தொகுதிதான் "ஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்கு காரணங்கள் உள்ளன”. அது கருப்புப் பிரதிகள் வெளியீடாக வந்தது.
என் பெயர் தெரியாதது போல் நடிக்கும் உங்களது வார்த்தைகள் என் மனதைக் கொள்ளை கொள்ளுகிறது. இதை மனுஷ்யபுத்திரன் என்பவர் எனக்குச் சொன்ன செய்தியாகவே எடுத்துக்கொள்கிறேன். இன்னும் உங்களுக்குத் தெரியாத கவிஞர்கள், மற்றும் எழுத்தாளர்கள் அங்கு இருந்தார்கள். அந்த என்பவர்கள் குறித்து நாமும் பேசலாம்.
மனுஷ்ய புத்திரன்....சங்கருக்கு நீங்கள் போன் செய்வதற்கு முன், இந்த அடிதடியில் உங்களுக்கு அக்கறை இருக்கும் பட்சத்தில் சில விசயங்களை நீங்கள், கவிஞரை தெரிந்தவர் என்பதற்காக, அல்லது ஒரு பதிப்பாளராக, மேலும் கடை போட்டிருப்பவராகக் கூட சம்பவ இடத்திற்கு சென்று நடந்தது என்ன என்று கேட்டிருக்கலாம். அதை விடுத்து கட்டப் பஞ்சாயத்தார் போல் தீர்ப்பு கூறுவது வருத்தமாக உள்ளது. சங்கர் எழுதிய கவிதைக்கு ம.க.இ.க. தோழர்கள் அவரது வீட்டுக்குச் சென்று விவாதித்தது குறித்து அறிவீர்கள் என்றே நம்புகிறேன். அதையே எனக்கு சங்கர ராம சுப்ரமணியன் செய்தார். கேட்டதற்கு முதலில் வன்முறையை பிரயோகித்தது சங்கர ராம சுப்ரமணியன். இப்பொழுது கடித்தேன் என்று அவர் அழுத்தந் திருத்தமாக கூறியிருக்கிறார். அவர் என்னை அடித்தார் நான் அவரை அடித்தேன் சண்டையில் அவரது விரல் என் முகத்தில் பட்டிருக்கலாம், பற்களில் பட்டிருக்கலாம். திரைக்கதை போல் சண்டையை அதுவும் எதிர்பாராத சண்டையை எழுதி வைத்து சண்டை போட முடியாதது தானே. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் குடித்திருந்தார் என்பதையும், அப்பொழுது மருத்துவமனையில் அவருக்கு என்ன சிகிச்சைகள் வழங்கினார் என்றும் அப்படியே கேட்டுச் சொல்லுங்கள். இது குறித்து நான் சுந்தர புத்தனிடமும், ஆசிரியர் அசோகனிடமும் பேசி விட்டேன்.
தமிழுக்காக ரத்தம் சிந்துவது, மற்றும் சிறுநீர் பெய்வது போன்ற வசனங்களை எழுதும் போது கொஞ்சம் யோசியுங்கள். டாக்டர் வீட்டில் ரத்தம் வடிய என்பதன் மூலம் சங்கர் ராமசுப்பிரமணியன் மேல் உள்ள உங்களது இரக்ககுணம் பொதுப் பார்வைக்கு வந்திருப்பது குறித்து நான் மனம் மகிழ்கிறேன். மேலும் சம்பந்தப்பட்ட இரக்கக் குணம் குறித்து நான் பெரு மகிழ்ச்சி அடைவதோடு, அது தன் தன்மையை இழக்காமல் இருக்க என் அன்பையும் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.
இன்று புத்தகக் கண்காட்சிக்கு நான் வருவேன். மேலதிக தகவல்கள் தேவைப்படுமெனில் என்னைத் தாங்கள் தொடர்பு கொள்ளலாம். ஏனெனில் என் முகம் உங்களுக்கு நன்றாக ஞாபகம் இருக்கும் என்றே நம்புகிறேன். மேலும் நேற்று நீங்கள் விடியலில் வாங்கிய கோசாம்பியின் நூல் மற்றும் வன வாசி புத்தகங்களுக்கு நான் பில் போட்டதும், நூலை நீங்களும் உங்களுடன் வந்தவர் மறந்து சென்றதும், பின் சொல்லி அனுப்பியபோது கொடுத்ததும் நான்தான். முடிந்தால் இன்று பேசலாம்.
மேலும் உங்களது வரிகளுக்கு பின்னூட்டமாக கட்டை விரலைக் கடிக்கும் மனநோயாளி என்ற வார்த்தைகள் வருகின்றன. மிகவும் மகிழ்ச்சி. சங்கர் குடித்து சண்டையிட்டார் என்றதும் இது போன்றவர்கள் குடிகாரர்களை ஒழித்துக் கட்ட வேண்டும்...குடிகாரர்களே இப்படித்தான்...என்ற தூய குணங்களையும் அவர்கள் பார்வைக்கு வைப்பார்கள். உங்களது அறத்தையும், அதன் எதிர்பார்ப்புகளையும் நான் மதிக்கிறேன். வணக்கம். இந்த மனநோயாளி என்ற வார்த்தைகளோடு இனி வரப் போகும் வார்த்தைகளுக்காகவும் காத்திருக்கிறேன்.