அறிஞர் ஜெயமோகன் அவர்கள் பண்டிதர்
அயோத்திதாசரைப் பற்றி மூலச்சிந்தனையாளர் இவர்தான் என் தலித் உலகுக்கே
எடுத்துக்காட்டிய உத்தமப் பெருமான் ஆவார். ஒருவர் தலித்தாக இல்லாவிடினும்
உள்ளுக்குள் கொதிப்பேறி நாட்பட்ட அறமானது எரிமலைக் குழம்பெனத் தகிக்கும் எனில்
அவர் அறம் பற்றியும் எவர் பற்றியும் போதிக்கும் முகமாக எழுதலாம். எழுத்து
வெளியீடாக இதை வே.அலெக்ஸ் பதிப்பித்திருக்கிறார். பதிப்புரையில் இதுவரை
அயோத்திதாசரை தமிழ்ச் சமூகத்தில் இதுவரை யாரும் காணாதபோது, அவரை ஒரு மூலச்
சிந்தனையாளராக,
மிகவும்
அறமான தன் மானத்துடன் தனக்கேயுரிய பரபரப்புடம் ஜெயமோகன் கண்டுபிடித்து அவரை மூலச்
சிந்தனையாளர் என,
தலித்
மக்களுக்கே அறிவுறுத்தியபோது அரங்கம் கவனமாக செவிமடுத்து உரையை குறிப்பெடுத்து
அவ்வுரையை வரலாற்றாக்கும் வேலையைச் செய்தது. இவ்வுரையை கேட்கமட்டும்,
( அயோத்திதாசரின் உரையை
அல்ல ) கேட்கவென சென்னை விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி கரூர்
ஈரோடு என தேனி வரை அறிஞர் பெருமக்கள் வந்துள்ளனர்.
பதிப்பாசிரியர் இந்த உலகப்புகழ் உத்தமச்
சிறுகதையை தனது கணிப்பொறியில் தரவிரக்கம் செய்து படித்தபொழுது அவருக்கு ஆழ்ந்த
அதிர்ச்சியும் மனவேதனையும் மற்றும் உலுக்கிப் போடுதலும் நிகழ்ந்துள்ளது. உலுக்கிப்
போட்டதன் விளைவாக தனது சில நண்பர்களுக்காக பரிந்துரை செய்யும்போது அவர்கள்
படித்துக்கொண்டிருக்கும்போதே பொலபொலவென கண்ணீர் சிந்தியிருக்கிறார்கள். அதிலும்
ஒரு வாசகர் ஜெயமோகனது கதையை படிக்க மாட்டேன் என வீராப்பாக இருந்ததாகவும்
பதிப்பாசிரியர் சொல்லி அதை படித்ததும் ரியலி வெரி ஷாக்கிங் என்றதாகவும்
பதிந்துள்ளார்.
ஒரு வாசகனாக எனக்கு நூலைப் படித்ததும்
பெரிய பெரிய அதிர்ச்சியெல்லாம் வந்தது. சொல்லப்போனால் சில பல ஆண்டுகளுக்கு
முன்னால் எனது பழைய வாசிப்பில் கதைகளை, கதைகளாய், கதைகளாய் மட்டும்
படித்து இப்படி எனக்கு வந்த ஷாக்கீங், கண்ணீர், மற்றும் மனச் சோர்வு
இவைகளை,
உண்மைகளை
அறிய நேர்ந்தபோது மிகவும் ஷாக்கிங்காக வெட்கம் வந்தது.
அயோத்திதாசர் எழுத்துக்களில். அம்பேத்கரின்
எழுத்துக்களில் தெரியாத இந்த ஷாக்கிங், கண்ணீர், உலுக்கிப் போடுதல்
மற்றும் தவிர்க்கமுடியாத அதிர்ச்சிகளையெல்லாம் ஜெயமோகன் தனது சிறுகதையில்
ஷாக்கிங்க் நிறைந்த பல திருப்புமுனைகளோடு தந்துள்ளார். இடையிடையே மடங்கள் பற்றியும்
அறத்தின் தீராத வேட்கையுணர்வு, மின்னும் கண்கள், ஆழமான சோர்வு என்ற
பதங்கள் காந்திய அறிதலாய் முன்வைக்கப் படுகிறது.
அறம் என்பது அறிஞர் ஜெயமோகனின்
வழிமுறைகளில் தனிமனிதன் சார்ந்ததே. நூல் முழுக்க ஒரு தலித்தின் தனிமனித அறத்தைப்
பேச மற்ற ஆளும் மனிதர்களின் மன அறங்களைப் பேசியுள்ளார். அறம் என்றால்
மனிதர்களுக்குப் பொது அதில் ஒடுக்கப்பட்ட சாதியை நிர்ணயிக்கும் அந்த மனிதனின் அறம்
என்ன வாக இருக்கும் எனக் கேட்டுக்கொண்டேன். கதையின் இடையே வரும் அம்மா கேரக்டரானது
ஆசிரியருக்கு தனது சொந்த உளவியல் சிக்கல் நிறைந்த தனது அன்னையின் மரணத்தையே
இக்கதையிலும் கிளறியிருக்கிறது. இதை எனக்குத் தெரிந்து இந்த நூலில்தான் வெளிச்சமாக
எழுதியிருக்கிறார். நூல் பற்றி அதிகமாகவோ குறைவாகவோ சொல்ல ஒன்றுமில்லை.
நூறு நாற்காலிகள் ஒரு அதியற்புத கண்ணீர்
கதை. வரிகளில் துக்கம் வேண்டுவோர் மிகவும் நிதானமாக எழுத்து எழுத்தாய் படித்தால். கண்ணீர்
வர கட்டாயம் உத்திரவாதம். படித்துவிட்டு. விஷ்ணுபுர மடத்தில் இணைந்தால் மோட்சம்.
இவைகள் என் வாசிப்பின் தளுதளுப்பு
நிறைந்த கண்ணீர் கேள்விகள். தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம்.
1 இதைப் பதிப்பித்த வே.
அலெக்ஸ். அயோத்திதாசரவர்களின் எழுத்துக்களைப் படிக்கும்போது இந்த ஷாக்கிங் வகையறா
உணர்ச்சிகளை அடைந்ததாக எங்கும் பதிந்திருக்கிறாரா எனத் தெரியவில்லை.
2 அம்பேத்கரின்
எழுத்துக்களைப் படிக்கும் போது பதிப்பாசிரியருக்கும் மற்ற நண்பர்களுக்கும் கண்ணீர்
வந்ததா.
3 ஆசிரியர்
அறவுணர்வாளர் ஜெயமோகன் அம்பேத்கரின் மீதான அவதூறுகளை அறச்சீற்றத்தோடு வைத்த போது
எனக்குக் கண்ணீர் வந்தது, பதிப்பாசிரியருக்கு வந்ததா.....
4. அயோத்திதாசர் பற்றி
அம்பேத்கர் எங்காவது பேசியிருக்கிறாரா...?
எல்லா நாற்கலிகளிலும் என் இருப்பே என
ஜெயமோகன் நிரூபித்த இடமாக இந்த கதையை அவர் அறிவித்திருக்கிறார். நூலட்டையில் ஒரு
கலெக்டரின் உண்மைக்கதை எனப் போடப்பட்டுள்ளது. அந்த உண்மையான கலெக்டர் தனது வாதைகளை
குமுறல்களாய் வைக்க அதை ஆசிரியர் அறத்துளியாக கண்ணீராகப் பெருக்குகிறார்.
சிறுகுறிப்பு; இன்றைய காந்தி என்கிற
அவரது அறநூலை காந்தியின் அறத்தை படித்து அன்றெல்லாம் உக்கிப்போய் கண்ணீர்
துளிகளைச் சிந்திக்கொண்டே இருந்தேன். அந்த நள்ளிரவில் என் நண்பனுக்கு தாங்கமுடியாத
அழுகையோடு போன் செய்து அவன் என் அழுகை கேட்டதும், மிகுந்த விகசிப்பும்
விசும்பலுமாய் காந்தி என்றேன்...கெட்டவார்த்தையில் திட்டி படுக்கச் சொன்னான்.
“ கதையை எழுதும் நான்
வேறு என எப்பொழுதுமே சொல்லிக்கொள்வேன். என்னுடைய கருத்துலகிற்குக் கட்டுப்பட்டு
என் எழுத்து நிகழ்வதில்லை. அது பிறிதொரு வாழ்க்கைக்குள் நான் சென்று மீள்வதுதான்.அதன்
பின் அக்கதைகளுக்கு நானும் ஒரு வாசகன். இந்தக் கதையின் கருத்துக்களுக்கு அல்லது
உணர்ச்சிகளுக்கு நான் பொறுப்பல்ல, கதையை ஒருபோதும் என்குரலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அது ஒரு
துண்டு வாழ்க்கை. என் வழியாக அது மொழியாகியது.” இது ஜெயமோகன் எழுதிய
குறிப்பு. இதில் ஒளிந்துள்ள் அயோக்கியத்தனங்களையும் கண்ணீரோடு வாசித்த நான் அவரது
அடுத்த பாராவில் சிரிக்கத் தொடங்கினேன். அவருக்கான ஒரு நாயனத்தை ஊத எத்தனை துளைகள்.
எத்தனை விரல்கள். பிரம்மம் ஒக்கடே..பரபிரம்மம் ஒக்கட்டே....
துணைக்குறிப்பு; நூலில் ஒட்டுமொத்த
அரசியலையும் மேற்கண்ட வரிகளே எனக்கு உணர்த்தியது. ஒட்டுமொத்த நூலுமே, தன் பெயரை மட்டுமே
குறிக்க,
உதவும்
வரிகளை,
எழுத்தாக
முன் வைத்த ஜெயமோகனது அறக்குப்பை. நூலை வாசித்து முடித்ததும் எனக்கு சிறுநீர்
முட்டியது. நூலை வாசித்து கண்ணீர் மல்கிய பெருமக்கள் எனது விமர்சனத்தையும்
மேற்கண்ட வரிகள் வழியாகவே அணுகலாம்.