Thursday, February 19, 2015

சுக்குமிளகுதிப்பிலி.





புதிய புத்தகம் பேசுது, 2015, ஜனவரி, மலர் 12, இதழ் 11 ன்றை முன் வைத்து
ஓர் எதிர்வினை.


புதிய புத்தகம் பேசுது இதழ் ஆசிரியர், முதன்மை ஆசிரியர், மற்றும் ஆசிரியர் குழுவுக்கும், பேட்டியாளர் கீரனூர் ஜாகிர் ராஜாவை முன் வைத்தும்..

புதிய புத்தகம் பேசுது மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெகு ஜனப் பத்திரிக்கை என்பதை நினைவில் வைத்தே இக்கடிதத்தை எழுதுகிறேன்.

புத்தகம் பேசுது அட்டைப்படமாக கோணங்கியை பதிந்ததும், அவரது அரசியல் சொல்லாடலாக ( என்னால் அரசியல் இன்றி எதையும் அணுகமுடியாது)  “கலைஞனை நம்புவதும், கலைஞனை நோக்கி நகர்வதும்தான் மனிதகுல மீட்சிக்கான ஒரே வழி” என்ற வார்த்தையைப் பதாகையாய் அட்டைப் படத்தில் இட்டதும், நூலின் மத்தியில், கோணங்கியின் விரல்கள் காட்டும் வித்தைக்கு கீழே இதுவும் ஒரு வித்தையாய் அமைந்திருக்கிறது.

கலைஞனை நம்புவதும் கலைஞனை நோக்கி நகர்வர்தும் என்ற சொல்லாடல் கோணங்கியை முதலில் கலைஞன் என உறுதி படுத்துவதோடு, மனித குல மீட்சிக்காக போராடிய பல எழுத்தாளக் கலைஞர்களை அவருக்குத் தெரியும் என்ற தொனியும் உள்ளது. அதோடு அச்சுறுத்தும் வகையில் சமூகத்தின் மீட்சி கலைஞனால் மட்டுமே சாத்தியம் என்னும் பிரகடனத்தையும் முன் வைக்கிறது.  அப்பிரகடனத்திற்கு ஆதாரமாக, மனிதகுல மீட்சிக்காக பாடுபட்ட கலைஞன் ஒருவனைக் கூட எழுத்தாக்கம் பெற்ற பேட்டியில் பதிவு செய்யவில்லை. ஒரு வேளை தனிப்பட்ட முறையில் அப்படிச் சொல்லியிருந்தால் மனிதகுல மீட்சிக்காக கதை எழுதிய அக்கலைஞனை நானும் நம்பத் தயராயிருக்கேன். நிற்க

உரையாடல் முழுவதும்( இது எழுத்து வடிவில் பார்த்ததால் இதற்கு உரையாடல் என்ற மதிப்பைத் தருகிறேன்.. ஆனால் இது வெட்டி அரட்டை என்றே என் புத்தி வாசிக்கிறது.)  முழுவதும் சுயபுராணத்தை தாண்டி வேறு எதுவும் இல்லை என்பதே என் வாசிப்பு.  அதற்கு முழுகாரணம் பேட்டியாளர் கிட்டத்தட்ட கோணங்கியின் மாபெரும் தொழுகையாளராய் மட்டுமே காணக்கிடைக்கிறார். பேட்டி என்றால் என்னவென்றே தெரியாது, தான் நம்பிய மனிதகுல மீட்சியாளனை இச்சமூகமும் நம்ப வேண்டும் என்ற வேண்டுகோளும் கோரிக்கையுமே அதில் கொட்டிக்கிடக்கிறது. பேட்டியின் தலைப்பில் இருந்த மீட்சியானது எவ்வகையிலானது, மீட்சியளிக்கத்தக்கப் படைப்புகளை எழுதியவர்கள் யார் என்ற கேள்வி வரும் வரும் என கடைசிக் கேள்விவரை நான் காத்திருந்து ஏமாந்ததுதான் மிச்சம்.

இக்கடிதத்தின் வாயிலாக கோணங்கி, தான் நம்பிய அந்த மனித குல மீட்சியை நடத்தும் கலைஞனை அடையாளம் காட்ட வேண்டும். முதல் கேள்வி வழக்கமாக உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்றே தொடங்க வேண்டும்… நல்லது.. அது புதிய வாசகர்களுக்கு கோணங்கியை அறியத்தரும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அடுத்த கேள்விதான் பேட்டியை உளறலாய் முன் வைக்கிறது. பேட்டி எடுப்பவரும் உளறி, பேட்டியாளரும் போட்டி போட்டு உளறும் ஒரு பேட்டியை இதற்கு முன் எண்ணற்ற தடவைகள் வாசித்திருக்கிறேன். அதில் இது தலைசிறந்த இடத்தை வகிக்கிறது.

உழைக்கும் மக்களின் தத்துவம் மற்றும் அரசியல் பொருளாதாரத்துக்கான மாற்றங்களை மார்க்சியத்தில் கண்டடைந்த ஒரு கட்சியின் வெகுஜனப் பத்திரிகை.. இன்னும் யதார்த்த வாதத்தின் அடிப்படையை கட்டுக்குலையாமல் காப்பாற்றி வைத்திருக்கும் ஒரு அமைப்பிலிருந்து வெளிவரும் பத்திரிகையின் பேட்டியாளரிடம் இருந்து வரும் அடுத்த கேள்வி - கரிசல் காட்டு வெயில், அதில் மண்டையைக் கொடுத்தால் கடித்துக்கொள்ளும் வெள்ளரிக்காய், இதன் சுவைகளைக் கூறுங்கள் என்று. இதுதான் பேட்டியெடுக்கும் முறையா. இந்த உளறலை வைத்ததும் கோணங்கி வெள்ளரிக்காய் தோட்டம் போட்ட கதையை தண்ணீர் பாய்ச்சிய கதையை, மற்றும் அடுத்தடுத்த கேள்விகளில் வெள்ளரிக்காய்கள் எல்லாம் விற்றுத் தீர்ந்தன…இருந்ததில் நல்ல வெள்ளரிக்காயாய் பாரதி புத்தகாலயத்தில் வரப்போகிறது… இந்த வருடத்தில் வெள்ளரிக்காய் விளைச்சல் அமோகம் எனத் தொடர்கிறது.. என்ன கூத்து இது.

தோழர்களே, இதில் என் முக்கியமான கேள்வி அசல் வெள்ளரிக்காய் (ஈறுகளுக்கு நைந்து கொடுப்பதாயும் தாடையைப் பதம் பார்க்காத பிஞ்சு வெள்ளரிக்காய்காளாகவும் உள்ள,  மதினி மார்கள் கதையையும் கொல்லனின் ஆறு பெண் மக்களையும்- பாரதி புத்தகாலயம் வெளியிட இருக்கிறது என்று பேட்டியிலும் வெள்ளரி வியாபாரம்)  என கலைஞன் கோணங்கி கருதும் மற்ற பிதிரா, உப்புக்கத்தி, உடைபடும் நகரம். பாழி, பிதிரா, தா, இருள்வ மௌத்திகம் போன்ற வெள்ளரிக்காய்களை பாரதி புத்தகாலயம் பதிப்பிக்குமா( இன்னும் விமர்சனத்துக்கு உட்பட வேண்டிய வார்த்தை புத்தகாலயம் என்பதாகும்- கோயில் கருவரையில் சாமி இருக்கும் விழுந்து கும்பிடு எழுத்துக் கலையில் எழுத்தாளன்தான்  சாமி அவனைக் கும்பிடு.. என்ன தோழர்களே இது,. அறிவைத் தொழுதலா மார்க்சியப் புரிதல்) என்பதையும் சொன்னால் மேற்கண்ட வெள்ளரிக்காய் வியாபரம் பற்றியும் வெள்ளரிக்காய்கள் பற்றியும் நான் பேசத்தயார்.

முக்கியமாக யதார்த்தவாத்தின் அடிப்படையை இன்னும் நகர்த்தி பல இசங்களை குப்பைத்தொட்டிக்கு அனுப்பி வைத்த ஒரு அமைப்பு இப்படி ஒரு தனிமனித புளங்காங்கிதத்தை,  தான் அடைந்ததோடு அதை வாசகர்களும் அடைய வாய்புத் தருவது ஏன்? கீரனூர் ஜாகிர் ராஜாவுக்கு கோணங்கி எப்ப்டி சட்டை போடுகிறார் எப்படி தலை சீவுவார் என்பது ஆராய்ச்சிக்கு உரியதாக இருப்பது அவரளவில் நல்லதே. அதையே இலக்கிய வெள்ளரிக்காய் எனக் கூவி விற்பதது ஏன்? இதில் எனக்குள்ள வருத்தம் என்னவென்றால், புதிதாக எழுத வரும் வாசகன் வாயில் வெள்ளரிக்காய் விதையைத் திணித்து இதுதான் கலை, இதை எழுதியவன்தான் கலைஞன், அக்கலைஞனை நம்புவதுதான் உனக்கும் உன்னைப் போன்ற உருவங்களைக் கொண்ட மனிதகுலத்துக்கும் ஒரே மீட்சி எனச் சொல்லாமல் இருந்தால் சரி.

மிகவும் வருத்தமாக இருக்கிறது. பேட்டியாளரிடம் கோணங்கியை வாசித்தவனாக நான் உரையாடவும் காத்திருக்கிறேன்.

நேரில் உரையாட விருப்பமில்லையெனில் எனது பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளித்தாலும்கூட போதும்:

1.    கலைஞனை நம்புவதும், கலைஞனை நோக்கி நகர்வதும்தான் மனிதகுல மீட்சிக்கான ஒரே வழி” என்ற இந்த “தத்துவத்தின்” மூலம் சமூகத்தின் மீட்சிக்கு கோணங்கியும் அதை ஆவலுந்த கேட்ட கீரனூர் ஜாகிர் ராஜாவும் அதை பத்திரிக்கையில் அனுமதித்திருக்கும் ஆசிரியர் குழுவும் முன்வைக்கும் செயல்திட்டம் என்ன?

2.    கலை மனிதகுலத்தை மீட்குமெனில், மார்க்சிஸ்ட்-கம்யூனிஸ்ட் கட்சிக்கான, அரசியலுக்கான (பாராளுமன்றவாதமானாலும்கூட பரவாயில்லை) எல்லாவற்றிற்கும் மேலாக  புரட்சிக்கான தேவை இருக்கிறதா இல்லையா? கலையா? புரட்சியா? எது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீட்சிக்கான ஆயுதம்?

3.    கலை என்பது உங்களது பதிலாக இருந்தால், த.மு.எ.க.ச இதுவரை ‘உற்பத்தி’ செய்த, ‘அரவணைத்து’ கௌரவித்த கலைஞர்கள் மனிதகுல மீட்சிக்காக ஆற்றிய பங்கென்ன, இதுவரை கிட்டிய மீட்சிகள் என்னென்ன? மீட்சிக் கர்த்தாக்களாகிய அக்கலைஞர்கள் பட்டியல் கிடைக்குமா? ‘கலைஞர்களால்’தான் மனிதகுல மீட்சி நிகழப்போகிறது என்பதாக கோணங்கியின் பேட்டியின் மூலம் புத்தகம் பேசுகிறது முன்வைக்கிறதா?

4.    என்னைப் பொறுத்தவரையில் கலைஞன் என்றாலே அவன் எழுத்தாளன் மட்டுந்தானா…என் வாசிப்பின் அறிவில் எழுத்தை ஒரு துறையாக மட்டுமே கொள்கிறேன். பழக்கத்தில், ஓரளவு வாசிப்பில், சாத்தியப்பட்டிருக்கும் எழுத்தை மனித குல மீட்சிக்காக எப்படி முன்வைப்பீர்கள். விளக்குவீர்களா…

5.    இறுதியாக, விஞ்ஞானபூர்வமாக சமூகத்தை ஆய்வு செய்து, சமூக ஒடுக்குமுறைக்கான காரணிகளையும், அதைக் களைவதற்கான செயல்திட்டத்தையும் கொடுத்த கார்ல் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், மாவோ மற்றும் இதர புரட்சியாளர்களின் சிந்தனைகளை வழியொட்டி செயல்படும் செயல்வீரர்களால் மனிதகுல மீட்சி சாத்தியமாகப் போவதில்லை, ஆனால் நிகண்டுகளையும், கூகிள் தேடல் பொறியில் கிடைக்கும் சில ‘உயிரிகளின்’ பெயர்களையும் ஒட்டி வெட்டி, அனகோண்டாவின் வாய்க்குள் சிக்கி வெளித்தள்ளப்படும் ஒரு காட்டெருமையின் சிதறுண்ட எலும்புத்துண்டுகள் போல் தமிழை, படிமத்தை இரைத்து, கூழ் காய்ச்சிக் கொடுக்கும் கோணங்கி போன்ற கலைஞர்களால்தான் மனிதகுல மீட்சி சாத்தியமாகப்போகிறது இல்லையா தோழர்களே?


நகைச்சுவைக்காக

“இயேசுவை நம்புவதும் இயேசுவை நோக்கி நகர்வதும்தான் மனிதகுல மீட்சிக்கான ஒரே வழி”

 “அல்லாவை நம்புவதும் அல்லாவை நோக்கி நகர்வதும்தான் மனிதகுலமீட்சிக்கான ஒரே வழி”

 “இராமரை நம்புவதும், ராமரை நோக்கி நகர்வதும்தான் மனிதகுல மீட்சிக்கான ஒரே வழி

கடுங்குறிப்பாக

“கோணங்கியை நம்புவதும் (அவரை பேட்டியெடுப்பதும்), கோணங்கியை நோக்கி நகர்வதும்தான் மனித குல மீட்சிக்கான ஒரே வழி ”

உரையாட வருபவர்களின் கவனத்திற்கு;

மார்க்சை நம்புவதும் மார்க்சை நோக்கி நகர்வதும்தான் மனித குல மீட்சிக்கான ஒரே வழியா என்ற கேள்விக்கு அதன் இலக்கியத்தன்மை மதத்தன்மை நீக்கி பதில் சொல்ல நான் காத்திருக்கிறேன்.

மரியாதையுடன்

வசுமித்ர.


No comments:

Post a Comment

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...