இனி நீங்கள் சாதி குறித்து, மார்க்சிய அரசியலை
முன்வைத்து, எதை எழுதினாலும் அதில் உள்ள கருத்தை மறுத்து, நீங்கள் உயர்சாதி என்ற வார்த்தையை
வைத்து கவனம் கொள்ளப் படுவீர்கள். ஆனால் அது குறித்து எனக்குக் கிஞ்சித்தும் கவலையில்லை.
தலித் சாதியில் பிறந்ததனாலேயே தங்களைப் போராளிகளாகக் காட்டிக்கொள்ளும் காலம் இதுவாக
உணர்கிறேன். நாள்தோறும் முக நூலைத் திறக்கும் பொழுதும் பல லட்சம் சேகுவேராக்கள், பெரியார்கள்,
அம்பேத்கர்கள் புதிது புதிதாக முளைத்துக்கொண்டே இருக்கிறார்கள். தலித் அரசியலில் இவர்களின்
பங்கு லைக் போடுவதும். கருத்தியலாளர்களை நான்கு வரிகளில் ஆதிக்கசாதி என்ற சொல்லை முன்வைத்து, அந்த அடையாளத்தின்
மூலம் தான் சாதியற்றவர் என்று தங்களை முற்போக்காளாராய், தங்கள் இடத்தை நிலை நிறுத்திக்கொள்வது
தவிர வேறெந்தக் காரணமும் அதற்கு இல்லை. நான் எந்த சாதி என்று தெரியாமலேயே தலித் அடையாள
அரசியலை விமர்சித்த காரணத்தினாலேயே, பலமுறை ஆதிக்க சாதி என்று சொல்லி தங்களை தலித்
போராளிகள் என்று புனிதப்படுத்திக் கொண்டதை நானறிவேன். அவர்கள் அம்மக்களுக்குரிய நலன்களைச்
சுரண்டி அடைந்த பலன்களையும் அறிவேன்.
இப்பொழுது,
சமூகம் பிறப்பால் எனக்களித்த சாதி அடையாளத்தைச்
சொல்கிறேன்.
இயற்பெயர்;
வடிவேல் முருகன்
புனைப் பெயர்;
வசுபாரதி, வசுமித்ர
சாதி. ஆப்ப
நாடு கொண்டையன் கோட்டை மறவர்
அரசு சான்றிதழின்
படி; மறவர்.( பழங்குடி மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிலிருந்து இப்பொழுது
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என அடையாளம் கொடுக்கப்பட்டுள்ளது.)
இதுவே எனக்கு
சமூகம் வழங்கிய அடையாளம். ஆனால் அந்த அடையாளத்தை வைத்து, இதுநாள்வரையில் என் சாதி சார்ந்த
எந்த அனுகூலத்தையும் நான் அடைந்ததேயில்லை. இழப்புகள் எண்ணற்றவை. சொத்து பத்து என எதுவும்
எனக்கு இல்லை. இப்பொழுது இருப்பது, நான் என் சொந்த உழைப்பில் வாங்கியது. (என் காதல்
வரை முழுக்க என் உழைப்புதான். அடுத்தவர் மூலம் எந்தக் காயையும் நகர்த்தியதில்லை. மறைமுக
சேதிகள் இல்லை.)
அப்பன் சம்பாத்தியத்தாலோ
அக்காள், அண்ணன், உறவுகள் சம்பாத்தியத்தாலோ, சாதி சார் சங்கங்கள் அனுசரணையினாலோ, என்
வயிற்றை வளர்த்ததில்லை. என் வாழ்நாள் தோழியான நீங்களும் இதுவரை என் சம்பாத்தியத்தில்
சாப்பிட்டதில்லை. உழைத்துச் சாப்பிட வேண்டும் என்கிற இந்த யுகத்தின் பிரதிநிதிகள் நாம்.
19 வயதில் ஓடத்தொடங்கிய நான், இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சியில் தேனி மாவட்டத்தின் அறிவிக்கப்படாத முழு நேர ஊழியனாக, மாணவர் பெருமன்றத்தின்
மாவட்ட தொடர்பாளாராக, கோயமுத்தூரில் கட்டிட வேலை செய்யும் சித்தாளாக, ஸ்பின்னிங் மில்
வேலையாளாக, திருப்பூரில் ஹோட்டலில் வேலை செய்தவனாக, பனியன் கம்பெனியில் கண்காணிப்பாளனாக,
கயலான் கடையில் எடுபிடியாக, இன்னும் பல வேலை செய்திருக்கின்றேன். இன்று சின்னத் திரையில்
திரைக்கதை வசனம் எழுதுபவனாக இருக்கிறேன் அவ்வளவே. இந்தப் பயணத்தில், நான் கண்ட தலைவர்களையும்,
கேடுகெட்டப் பிழைப்பாளர்களையும், தலித் என்றால் என்னவென்றே தெரியாத தலித் முதலாளிகளையும்,
எந்த அறிக்கையும் படிக்காமல் தலித் மக்களுக்கு உயிரையும் விடத் தெரிந்த தலித்துகளையும்
நான் அறிவேன்.
என் தந்தைக்கு
இரண்டு தாரங்கள். மூத்த தாரத்தின் மகனாகிய நான் இப்பொழுதுவரை என் தந்தையை அப்பா என்றழைத்ததில்லை.
அவர் உழைப்பால் நான் வாய்க்கரிசி அளவுக்குக் கூட கஞ்சி குடித்ததில்லை. என்னை வளர்த்தது
என் அம்மாவும், அம்மாவின் அம்மாவும் மட்டுமே. இப்பொழுது இருக்கும் எனதறிவின்படி என்
தந்தையிடம் எனக்கு உறவோ பகையோ எதுவும் இல்லை.
இன்னும் குறிப்பாக,
நமக்கு நல்லது செய்பவர்கள் கெட்டது செய்பவர்கள்
என ஒரு பட்டியலைப் போட்டால், கெட்டது செய்பவர்கள் சொந்த சாதிக்காரர்களாகத்தான் இருக்கும்
என்பது என் புரிதல். இது இப்பொழுது தலித்துக்கள் என்று சொல்லும் போலி தலித்துகளால்
நடந்து கொண்டிருப்பதுதான் பெரும் வருத்தம் .
எனது சாதி,
முக்குலத்தோரில் ஒருவராகத்தான் என்னை அடையாளம் காட்டும். நான் மறுக்கவே மறுத்தாலும்
அப்படித்தான் அடையாளப்படுவேன். அடையாளப்படுத்தப்படுவேன். அதற்கு நான் பொறுப்பாக முடியாது. அதை நான் மறுப்பதன்
மூலமாக அது என்னை விட்டுவிடப் போவதும் இல்லை. ஆனால் என் கருத்தியல், மற்றும் செயல்பாடுகள்
வழியாக நான் அறியப்படுவேன் என்பதை நன்கு அறிவேன்.
தலித்திய விமர்சனங்களில்
ஏதேனும் ஒன்றைச் சொன்னால் நான் அதிகம் எதிர்கொண்டது நீங்க எந்த சாதி தோழர். இதைக் கேட்டவர்கள்
ஆதிக்க சாதியினர் அல்ல. அவர்களின் அச்ச உணர்வை நான் மதிக்கிறேன். ஆதிக்க சாதி தன் சாதிக்குத்
துரோகம் செய்ய வாய்ப்பிருக்கிறது என்பதை அவர்கள் வரலாறு அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது.
அது நியாயமான அச்சந்தான். அதே சமயம், நானும் தலித் சாதிதான், எனச் சொல்லி தலித்துகளைச்
சுரண்டுபவர்களையும் அவர்கள் அனுமதிக்கக் கூடாது என்பது என் வேண்டுகோள். அவ்வளவே. இதில் நம்ம சாதிக்காரன் என்ற பதம் அவர்களுக்குள்
தற்பொழுது உலா வருவதும் நான் அறிந்ததே. சொந்த சாதிக்கு துரோகம் செய்வது இப்பொழுது இந்த
போலித் தலித்துகள்தான்.
முகநூலில் தலித்
ஆதரவு பேசுவதென்பது ஒரு பேஷனாக மாறிவிட்டது. முதலில் நாத்திகம் பேசினால் அறிவாளி என்ற
சுயசார் பட்டம் கிடைத்தது. பின்னர் கம்யூனிஸ்ட்களை விமர்ச்சித்தால் அறிவாளி, இப்பொழுது
தலித் ஆதரவு என்ற வார்த்தை அவர்களுக்கு அந்த இனிப்பை வழங்கியிருக்கிறது. அவ்வளவே.
பள்ளியில் படிக்க
வந்த தலித் பெண்பிள்ளைகளை ஆபாச படங்கள் எடுத்து,
ஹோட்டலுக்கு அழைத்து ஒருவர் மாற்றி ஒருவராக வல்லாங்கு செய்து அதையும் படம் பிடித்து
ரசித்த ஒரு தலித்தான் நம்மை சாதியாளர்கள் எனச் சொல்லி தப்பித்தது. இதையும் அருகிலிருந்து
பார்த்திருக்கிறீர்கள். கவலை கொள்ள வேண்டாம்.
இங்கு நான்
சொல்வது ஒன்றுதான். தங்களை சாதி தாண்டி முற்போக்குப் போராளிகளாய்க் காட்டும் நபர்கள்,
தாங்கள் அறியப்படும் சாதியின் பெயரைக் குறிப்பிட்டு, அச்சாதியால் அவர்கள் அடைந்த நலன்கள்
இழப்புகள். மற்றும் ஏன் சொந்த சாதியை வெறுக்கிறார்கள், அதன் காரணமென்ன என விரிவாகப்
பேசியும், சாதி குறித்தும் எழுதினால் அவர்களது அவதானிப்புகளை அறியலாம். அதே போல் முகநூலில்
தலித்தியம் பேசுபவர்களும், தலித்தாய்ப் பிறந்தவர்களும் அவர்கள் அடைந்த அனுகூலங்கள்,
அந்த அனுகூலத்தினால், சக தலித்துகளுக்கு அவர்கள் செய்த நன்மைகள் இவற்றைச் சொன்னால்
சாதி சார்ந்த உரையாடல்கள், உண்மையின் அகத்திலிருந்து தொடங்கும்.
ஊரில் சாதிச்சங்கத்துக்கு
தலைக்கட்டு வரி செலுத்துபவர்கள்தான், இங்கு முன்னணிப் போராளிகளாக இருக்கிறார்கள். தங்கள்
உளுத்துப் போன படைப்புக்களை தலித் இலக்கியம், நானும் தலித்தான் எனச் சொல்லும் போலி
தலித்துகள் இருக்கிறார்கள். குறிப்பாக பெண்ணியம் பற்றி பெண்கள்தான் பேச வேண்டும் என்ற
வாதத்தைப் போல், தலித்தைப் பற்றித் தலித்துகள்தான் பேசவேண்டும் என்கிற தூய தலித் இலக்கிய
ஆசான்களும் இங்கு உள்ளனர்.
பொத்தாம் பொதுவாக
கவுண்டர் வன்னியர் நாயக்கர் தேவர் செட்டியார் என இன்னும் இருக்கும் அத்தனை சாதிக்காரர்களையும்,
சாதியின் பெயரால் நடக்கும் படுகொலைகளை முன்வைத்து, அவர்கள் அனைவருக்குமே சாதி புத்தி,
குத்திக் கொல்பவர்கள் எனச் சொல்லுவதில் எனக்கு உடன்பாடில்லை. அதே சமயம் அச்சாதியில்
உள்ளவர்கள் அதைக் குறித்துப் பேச வேண்டும் அதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும்
என்பதே என் விருப்பம். மேலும் அச்சாதிகளில் சாதி மறுப்புத் திருமணங்கள் செய்த அனைவருமே
வெட்டிக்கொலை செய்யப்படுவதில்லை.
தலித் என்ற
பெயரால் இன்று அம்பேத்கர் ரசிகர் மன்றங்கள், அடையாள அரசியல்கள், எல்லாம் நீக்கமற நிறைந்து
கிடக்கிறது. அவர்கள் தங்களை தலித் போராளிகள் எனச் சொல்லுவது, அதிலுள்ள கொடுமைகளுக்காக
அல்ல தங்களின் அறிவுப்பகட்டுகளுக்காக அடையாள அரசியலுக்காக என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
பார்ப்பன புத்தி
எனச் சொல்லுபவர்கள்தான் பறை பள்ளு புத்தியில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறார்கள்.
பார்ப்பன புத்தி என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டால் மற்ற சாதி புத்திகளையும் அவர்கள் ஏற்கிறார்கள்
என்றே அர்த்தம். சாதி உளவியல் குறித்தும் நீங்கள் அறியாதவரல்ல. ஆனால் நீங்கள் கவனிக்காமல்
செய்த இந்த பிழைக்காக வாழ்நாள் முழுதும் நீங்கள் விலைகொடுக்கப் போகிறீர்கள் என்பதை
நானறிவேன். ஆனால் அந்த வாழ்நாள் விலையானது நிச்சயம் ஆதிக்கம் செலுத்தும் சாதிக்கு ஆதரவாக
இருக்காது என்பதை நானறிவேன்.
இனி நான் ஏதேனும்
தலித்கள் குறித்த கூட்டத்திற்கு செல்ல வேண்டுமாயின், அங்கு பேசும் சூழல் வருமாயின்,
நான் என் சாதியை தாழ்மையுடன் சொல்லியே உரையாடுவேன்.
அப்படியே, அங்கு உரையாடுபவர்களும் தங்கள் சாதிப்பெயர்களைச்
சொல்லி பேசலாம். அங்கு அவர்கள் பேசுவதை வைத்து அவர்கள் ஆதிக்க சாதியா, தலித் சாதியா…இல்லை
தூய தலித் சாதியா.. போலி தலித்தா, இல்லை அடையாள அரசியலா, அதில் ஒளிந்திருப்பது என்ன
என அவர்கள் அவர்களின் பேச்சால், செயலால் அறியப்படட்டும்.
முகநூலில் நீங்கள் கவனக்குறைவாய்ச் செய்த ஒரு பிழைக்காக, வெற்றிகரமான சாதியாளாராக நீங்கள்
இதுவரை செய்த அனைத்துச் செயல்களும் பின்னுக்குத் தள்ளப்படும் என்பது எனக்கு ஆச்சரியத்தைத்
தரவில்லை. இங்கு இதுதான் விதி. இங்கு தலித்தாக பிறந்த ஒரே காரணத்தினால் ஐந்தாரு பியர்களைக்
குடித்துவிட்டுப் பேச முடியும். அதையும் தான் தலித் என்பதில் நிலைகொண்டுள்ள பெருமையுடனேயே
செய்ய முடியும்.
என்னை வெட்டியவரும்
நான் தேவன்டா…. என்று சொல்லித்தான் வெட்டினார். அதில் நான் செய்த முதல் விசயம் வன்முறை
என்றே என்னவென்று தெரியாத உங்களுக்கு அச்சம்பவத்தின் மூலமாக வன்முறையை அறிமுகப்படுத்தியது.
இரண்டாவது எனது காயங்களுக்கு மருந்தாக, இலக்கிய வாதிகள் பேசிய... அடுத்தவன் மனைவியை
இழுத்து வந்து வெட்டுப்பட்டவன், ஒயின் ஷாப்பில் குத்திவிட்டார்களாம் என்று தொடங்கி,
நீங்கள் பிள்ளையை விட்டு புகழ்தேடி வந்த அவதூறுகள் வரை பெற்றது. அப்பொழுதும் உங்களைக்
குற்றம் சாட்டுபவர்களின் வாய்களில் மௌனம் கனத்த பூட்டெனத் தொங்கியது. அவர்களின் விழாக்களில்
சம்பந்தப்பட்ட இந்த போலி தலித் போராளிகள் நல்லுடை அணிந்து, இரவில் மதுவருந்திப் புன்னகையோடு
காட்சியளித்தார்கள். நடப்பின் பெயரால் சுட்டியதற்குக்
கூட அது வேற தளம் இது வேற தளம் என்று தங்களை அர்த்தப்படுத்திக்கொண்டனர். இன்னும் அதன் மூலம் அவர்கள் முன் வைத்துக்கொண்டிருக்கும்
வியாக்கியானங்கள் ஏராளம். இதையும் நாம் சேர்ந்தே கண்டுகளித்தோம்.
தமிழ்கூறும்
நல்லுலகில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவன் குடித்தால் குடிகாரன், தலித் குடித்தால் கலகக்குடி.
இப்படியாக இலக்கியத்தில் முன் வைக்கப்பட்டு அதிகார அரசியலைக் கேள்விக் கேட்கத் தொடங்கி
அது இன்று அதே அடையாள அரசியலில் வேர்கொண்டாகிவிட்டது.
என் அறைக்கு
வா, என் வட்டத்துக்கு வா, என் செட்டில் சேர்,
குடிக்கலாம் கவிதை பாடலாம் நீ நம்மாளா மாறு, என அழைத்து ஆண் பெண் நண்பர்களின்
கூட்டுக் குடிமடம் நடத்தி, கூட்டிக்கொடுத்து அதையும் தலித் கணக்கில் சேர்க்கும் அபத்த
போராளிகளையும் நாம் அறிவோம். கூட்டுக்குடியைப் போட்டோ எடுத்து நட்பு வளர்ப்பவர்கள்,
இதைச் சொல்பவர்கள் வேறும் யாரும் அல்ல. இலக்கிய மேடைகளில் முற்போக்காளர்களாக, சாதி
கடந்தவர்களாக, தலித்தாக தங்களைக் காட்டிக்கொள்பவர்கள்தான். நாம் பேச வேண்டியதும் மன்னிப்புக் கேட்கவேண்டியதும் இந்த போலி தலித்துகளிடம் அல்ல.
இவர்கள் உண்மையில் தலித்துகளே அல்ல.
இறுதிக்குறிப்பாக;
தலித் ஆவணங்களைப்
பேசாது, அறிஞர்களை முன்வைக்காது, இங்கு தமிழில் அதிகமும் சீரழிந்தது தலித் இலக்கியம்தான்.
தலித் அரசியல் என்ற வார்த்தையின் வீரியத்தை நீர்த்துப் போகச் செய்ததும் பெரும்பாலான
இலக்கியவாதிகள்தான். புனைவு அது தன் வேலையைத் தானே செய்யும். அபுனைவின் தேவை அதிகரிக்கும்
இடம் என்ன, பெரும்பாலான தலித் கதையாடல்கள் ஏன் சுயசரிதைக் குறிப்பாக இருக்கின்றன, தலித்
பெண்ணிய கவிதைகளாகக் கருதப்படுபவைகள் எப்படி உடலை முன்வைத்து பேசும் காரணியாய் மாறியதோடு
அல்லாமல் அது ஏன் தீவிர சந்தைக் கவனம் கொள்கிறது என்பதையும் நாம் உரையாடியிருக்கிறோம்.
இன்னும் அழுத்திச் சொல்லுவதாக இருந்தால் வாழ்க்கைக்கும் படைப்புக்கும் சம்பந்தமில்லை
என்பதோடு கலையை கலைக்காகவே என்ற இலக்கியவாதிகள் இன்று சாதி சாதிக்காகவே என்பதில் எவ்வளவு
கவனமாக இருக்கிறார்கள் என்பது வரை உரையாடி இருக்கிறோம்.இதில் இந்த போலி தலித்துகள் இன்னும்
ஆபத்தானவர்கள் என்பதே என் எண்ணம்.
கலைஞர்களின்
படைப்படைப் பாருங்கள் என்று சொன்னவர்கள்தான் நமது அந்தரங்க வாழ்க்கையைப் பேசினார்கள்.
ஆனால் நமக்கோ அந்தரங்கங்கள் இல்லை. பெண் என்ற காரணத்திற்காய் நீங்கள் வார்த்தைகளால்
தாக்கப்பட்டிருக்கிறீர்கள், மார்க்சியம் பேசியதால் பெண்ணியவாதி என்று உங்கள் கருத்து
சுருக்கப்பட்டிருக்கிறது. அப்படிச் செய்தவர்களின் பின்னால் ஊக்கக் காரணியாய் இருந்தது
நீங்கள் பேசிய அரசியலோ கருத்தோ இல்லை. இவள் யார் இதைச் சொல்ல என்கிற அகந்தையும், நேற்று
வந்தவள் என்கிற பத்தாம் பசலித்தனமும், எங்கள் அமைப்பில் சேருங்கள் இல்லையென்றால் நீங்கள்
மார்க்சியர் இல்லை என்றே அர்த்தப்படும் மிரட்டல்கள்தான். உண்மை அறியும் குழு விசாரணைக்குக்
கூட கன்னத்தில் ரூஜ் தடவி லிப்ஸ்டிக் போட்டு ஜிகு ஜிகுவென வந்த போலி தலித் போராளியையும்
நீங்கள் களத்தில் கண்டிருக்கிறீர்கள்.
எல்லாவற்றிற்கும்
மேலாக தலித் அரசியல் என்னவென்றே தெரியாமல், அம்பேத்கரை படைப்பிலக்கியத்தின் வாயிலாகவும்,
அரசியலாளனாகவும் அறியாது, தன் பிறந்த சாதியின் பெயரை மட்டும் நம்பி, அதன் ஒடுக்கப்பட்ட விதங்களை முன்வைக்காது அடையாள
அரசியலை மட்டும் முன் வைத்து நானும் தலித்துத்தான் நானும் போராளித்தான் எனக் கூவுகிறவர்கள்
குறித்து இனி நான் தொடர்ந்து எழுதுவேன். அவர்களை நான் அறிவேன். கிடைக்கின்ற எல்லா மேடையிலும்
தன்னை பறையன், பறைச்சி, தாழ்த்தப்பட்டவள், ஒதுக்கப்பட்டவன் என்று மேடையேறிக் குரல்
கொடுத்ததன் மூலம் அவர்கள் பகட்டான லாப நோக்கங்களை மட்டுமே பங்கிட்டு உண்ணுகின்றனர்.
ஆனால் அந்த நலன்கள் உண்மையில் எவருக்குச் சேர வேண்டிய நலன் என்று அறியாது அவர்கள் முதுகிலேயே
அமர்ந்து, தலித் மேல் தானும் ஒரு தலித் எனச் சொல்லி சவாரி செய்வதைத்தான் என்னால் சகித்துக்கொள்ள
முடியவில்லை.
“போலி தலித்துக்கள் என்பவர்களைக் குறித்து நாம்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இப்பொழுது தூய தலித்துக்கள் சிலர் கிளம்பியிருக்கிறார்கள்.
இவர்கள்தான் தலித் அரசியலை, தலித் ‘சாதி’ அரசியலாக மாற்றப் போகிறவர்கள். அதிலும் ஒடுக்கப்பட்ட
சாதிகளில் எது அங்கு ஆதிக்க சாதியோ, அது மட்டுமே மிஞ்சப் போகும் அபாயமும் இருக்கிறது. நாளை அதுவும் ஆதிக்க சாதியாகி சாதி ஆணவத்தால் கொலை
செய்யும் நாள் தொலைவில் இல்லை. செய்தும் இருக்கிறது.” அம்பேத்கரே சொன்னது போல் பார்ப்பனியம் தலித்துகளிடமும்
இருக்கத்தான் செய்கிறது. பிறப்பின் அடிப்படையில் இவர்கள் பார்ப்பனியத்தைக் கேள்வி கேட்பது,
தங்களது பிறப்பின் அடிப்படையிலானாதாக இருக்கும் போது இதை தலித் பார்ப்பனியம் என்பதோடு
கூடுதலாக இவர்களை போலி தலித்துகள் என்றே என்னால் அழைக்க முடியும். தலித்தாக பிறந்துவிட்டால்
போதும் அவர் புரட்சியாளர்.
எனக்குத் தெரிந்து
முதலாளித்துவ, உலகமயமாக்கலில் காசில்லாதவன்தான் ஆகப்பெரிய தலித்.
நீங்கள் மீண்டு
வருவீர்கள் என்று நம்புகிறேன். நாம் விவாதித்தவைகளை உரையாடியவற்றை எழுத என் இருகைகளால்
முடியாது என்பதை ஞாபக மூட்டுகிறேன். காத்திருப்பேன்.
என் வாழ்நாள்
தோழியும்,
அறிவுத்துணையுமான
உங்களுக்கு
என் காதலும்
முத்தங்களும்
வசுமித்ர.