பிடலின் துப்பாக்கி
அஜிதாவின் துப்பாக்கி
பிரபாகரனின் துப்பாக்கி
தமிழ்
மலையாளம்
கியூபா
மக்கள்
கேரள காவல்துறைக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சம்பந்தமில்லை
புத்தனுக்கும் ராஜபக்ஷேவுக்கும் சம்பந்தமில்லை
அமெரிக்காவுக்கும் இயேசுவுக்கும் சம்பந்தமில்லை
நல்லது அப்படியே ஆகட்டும்
அதிகாரம் துப்பாக்கியால் வடிவமைக்கப்படும்போது
அதிகாரத்துக்கெதிராய் புல்லட்டுகளும் வடிவமைக்கப்படுகிறது
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டுத்தான் அரசு கொலை செய்கிறது
விமர்சனங்களை முன்வைத்துத்தான் நாம் தத்துவம் படிக்கிறோம்
குறுக்கும் மறுக்குமான வாதங்களில்
ஒரு குண்டுக்கு பலியாவதென்பது மரணத்தின் முகத்தில் காறி உமிழ்வதுதான்
அரசு என்று உச்சரிக்கும் போது
நாக்குழறுகிறது
அது எந்த வகையான அரசு என்ற விவாதத்தில்
எத்தனை சவப்பெட்டிகளுக்கு நாம் ஆணிகளைத் தயார் செய்யப் போகிறோம்
எண்ணிக்கைகள் இங்கு முக்கியம்
மாவோயிஸ்ட்கள் பலியாவதும்
போலிஸ்காரர்கள் வீரமரணம் அடைவதற்குப் பின்னுள்ள
அர்த்தங்கள் என்ன
என் அகராதியில்
பலி என்றது களப்பலியாகவும்
வீரமரணம் என்பது சம்பளத்துக்கு சாவதுமாகிறது
அத்தனை துப்பாக்கிகளுக்குள்ளும்
காண முடியாத குழந்தைகளும் மக்களும் இருக்கிறார்கள்
தோழர்களே உறங்குங்கள்
பாழாயப் போன போலிசாரின் துப்பாக்கிப் பின் வேறு என்னதான்
இருக்கமுடியும்
துப்பாக்கியைப் பிடித்திருப்பவனுக்கு அரசு சம்பளம் தருகிறது
உங்களுக்கு ஒரு பிடி வாய்க்கரிசி
கேரளாவை ஆளும் கட்சிக்கு என் பலிச்சோறு.
No comments:
Post a Comment