Sunday, October 29, 2017

தோழர் ஜி.ராமகிருஷ்ணனுக்கு பகிரங்கக் கடிதம்.

சிபிஎம் கட்சியின்  மாநிலச் செயலாளரான தோழர். ஜி.ராமகிருஷ்ணனுக்குப் பகிரங்கக் கடிதம்.





வணக்கம் தோழர், சமீபகாலமாக உங்கள் அமைப்பில் முழு நேர ஊழியராக இருக்கும் ஒரு சிலர் ஒரு புரட்சிகர முன்னெடுப்பை எடுத்துச்செல்கின்றனர். அதாவது முழுநேர ஊழியராக இருப்பவரே புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் அருகதையுடையவர் என்று எண்ணும் அளவுக்கு சென்றுவிட்டனர்.

பாரதி புத்தகாலயத்தில் பணிபுரியும் மேலாளர் சிராஜுதீன் என்பவர் நான் செய்யும் தொழிலைத் தெரிந்துகொண்டே அதை மானம் கெட்ட தொழில், அப்படிப் பிழைத்து அதில் வரும் வருமானம் அவமானத்திற்குரியது என்று பொதுவெளியில் தன் கருத்தை வைத்தார். அப்பொழுது அது குறித்து அவரிடம், மானம் கெட்ட தொழிலில் சம்பாரித்த காசை, உங்கள் பாரதி புத்தகாலயத்துக்கு நிதி உதவியாகச் செய்யலாமா என அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு,  “தோழர்.. மன்னிச்சிடுங்க உணர்சிவசப்பட்டுவிட்டேன்” என்றார். அந்த மன்னிப்பைப் பொருட்படுத்தினேன். அதே சமயம் அதை பொதுவெளியில் வைக்கச் சொன்னேன் அவர் செய்யவில்லை.

தோழர் எனது வேலை சின்னத்திரைத் தொடர்களுக்கு வசனம் எழுதுவது. அப்படி வசனம் எழுதிய பலருக்கு, உங்களது கட்சியின் கலை இலக்கிய அமைப்பான தமுஎகச சம்பந்தப்பட்ட சீரியலின் பெயரை அழைப்பிதழில் அச்சிட்டு விருதும் கொடுத்திருக்கிறது. மன்னிக்கவும். அந்த சீரியலும் புரட்சிகர கருத்தியலை வாரி வழங்கும் தொடரல்ல.

ஒரு நேரத்தில் சின்னத்திரையில் இருப்பவர்கள் எங்களது அமைப்பில் இருக்கிறார்கள் என்று கூறுவதில் பெருமிதம் அடைவதும், சில கேள்விகளை முன்வைத்தால் மானம் கெட்ட தொழில் அவமானகரமான வருமானம் எனச் சொல்லுவதும் ஏன். சின்னத்திரையின் எழுத்தாளர் சங்கத்தில் இருக்கும் நான் இதுகுறித்து ஏன் கேள்விகளை எழுப்பக் கூடாது.

மேலும் தோழர் இந்த ஒட்டுமொத்த வசைகளுக்கும் காரணமாக அமைந்தது எனது வாழ்நாள் தோழியான தோழர் கொற்றவை,  தோழர் ரங்கநாயகம்மா அவர்களின்  “சாதியப் பிரச்சினைக்கு தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத்தேவை!” என்ற நூலிலிருந்து கிளம்பியதுதான்.

அந்த நூலை முன்வைத்துப் பேசுகிறேன் என, அம்பேத்கரின் கருத்துக்களையோ அவரது ஆய்வுகளையோ மார்க்சியத் தளத்தில் முன்வைக்காது, சிபிஎம் கட்சி பொலிட் பீரோவில் பார்ப்பனர்கள் அதிகம் இருக்கிறார்கள், அது குறித்து எனக்கு கேள்விகள் இருக்கிறது என  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்களின் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா பொது ஊடகத்தில் பேட்டி கொடுத்துள்ளார். அந்தக் கேள்விக்கு இதுவரை தமுஎகசவோ, சிபிஎம் கட்சியோ எந்த விதமான பதில்களையும் தரவில்லை.

அதே சமயம், ஆதவன் தீட்சண்யாவை தனி நபர் துதி பாடலில் முன்வைத்த சிராஜுதீன், அவர் அடுத்த அம்பேத்கராக இருந்தால் என்ன என்று கேள்வியை முன்வைத்தார். மேலும் இன்னொரு நபரான கருப்பு கருணா என்பவர், பொதுவெளியில் அவன் இவன் எனப் பேசுவதையே முழுநேர ஊழியப் பணியாக செய்துவருகிறார்.  “வக்காலி” என்று அழைப்பது புரட்சிகர வசனமாக அவருக்கு இருக்கிறது. கட்சியின் தத்துவங்கள் சார்ந்தோ, அதன் விதிகள் சார்ந்தோ எதுவும் பேசத் தேவையில்லை. அவதூறுகளை இரைப்பதுதான் முழுநேர ஊழியரின் பணியா?

மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவன் என்ற அடிப்படையில், நான் சாதிகுறித்த ஒடுக்குமுறைகளை எதிர்ப்பவன். அத்தோடு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்ட காலத்துக்கு முன், அறிவிக்கப்படாத முழுநேர ஊழியனாய் இருந்திருக்கிறேன். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட கன்வீனராக, மாணவர் பெருமன்ற மாவட்ட கன்வீனராக, கட்சியின் உறுப்பினராக இருந்து பணிசெய்திருக்கிறேன். இப்பொழுது எந்த அமைப்பிலும் இல்லை.

மார்க்சிய வழியில் பயணிக்கும் என்னை, சிராஜுதின் என்பவர் எல்லா நேரங்களிலும் தேவர் சாதி என்றே சொல்லி அடையாளப்படுத்தி அவதூறும் பரப்பி வருகிறார். நானே என்னை சாதி நீக்கம் செய்து கொண்டபிறகு, அம்பேத்கரை விமர்சித்த ஒரே காரணத்தால், எனக்கு சாதி முத்திரை குத்தியும் அவதூறு செய்தும், வசுமித்ர என்னும் என் பெயரை பசுமித்ரா என்றெழுதுவதும், மானங்கெட்ட தொழில் செய்பவன் என்று சொல்வதையே ஒரு பணியாக நினைக்கிறார். இதுதான் உங்கள் அமைப்பு முழுநேர ஊழியர்களுக்கு கற்றுக்கொடுக்கும் விமர்சனப் பண்பா.

கிடாரி என்கிற திரைப்படத்தில் நான் நடித்ததையும். ஒரு வாய்ப்பாக முன்வைத்து அவதூறு செய்கிறார். தோழர் அந்தத் திரைப்படத்தில் வேலராமமூர்த்தியும் நடித்திருந்தார். செம்மலரின் வந்த கிடாரி விமர்சனத்தை தோழர் தமிழ்ச்செல்வன் எழுதியிருந்தார். அதில்  “அட நம்ம வேலா” என்றெழுதி புளங்காங்கிதம் அடைந்திருந்தார். அது சாதிப் பாசமா.. இல்லை வேறெதும் பாசமா என்று எனக்குத் தெரியவில்லை.

மேலும், சோம்நாத் சட்டர்ஜி என்று பெயரில் இருப்பதாலும், பூணுல் கல்யாணம் நடத்தியதாலும், அவர் பார்ப்பனர் என்று எனக்குத் தெரிகிறது. சாதி முறைகளை அவர் இன்னும் கடக்கவில்லை என்றும் புரிகிறது. அவப்பேறாக, நான் தீர்மானிக்கமுடியாத பிறப்பின் சாதியை வைத்துப் பேசும், உங்களது அமைப்பைச் சேர்ந்தவர்களை முன்வைத்து, இப்பொழுது எனக்கு சில விளக்கங்கள் தேவைப்படுகிறது. இந்த மாதிரியான அணுகுமுறைகள் மூலம்தான் சாதியைக் கடக்கமுடியும் என்று அவர்கள் நினைப்பதால் அதையே நானும் இப்பொழுது கேள்விகளாக முன்வைக்கிறேன்.

நீங்கள் என்ன சாதி, உங்களது வெகுஜன அமைப்பில் இருக்கும் தலைவர்கள் செயலாளர்களின் சாதிகள் என்ன? நீங்கள் எல்லாம் எப்படி சாதியைக் கடந்தவர்கள் என்று பாரதிபுத்தகாலயத்தின் மேலாளர் சிராஜுதின் எப்படி ஏற்றுக்கொண்டார் என்று தெரிவித்தால், நானும் அப்படிப் பட்ட சான்றிதழைப் பெறுவதற்கு ஆயத்தமாக உள்ளேன்.

மேலும், உங்களது அமைப்பில் சேர்ந்தால்தான், சாதியைக் கடக்கமுடியுமெனில், அதை பொதுவெளியில் வைத்து உரையாடுங்கள். நான் மட்டுமல்லாது, பலரும் உங்களது அமைப்பில் சேர்ந்து சாதியைக் கடப்பார்கள். சாதியை ஒழிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது சிபிஎம்மில் சேர்வது என்றானபின், இந்தியாவில் சாதி ஒழிந்துவிடும் இல்லையா!

தோழரே...

எஸ்.வி.இராஜதுரை உங்களது கட்சியின் தேசியச் செயலாளரான, பிரகாஷ் காரட்டுக்கு அரசியல் அரிச்சுவடி கூட தெரியாதெனச் சொல்லியவர். பாரதிய ஜனதாவுக்கும், சிபிஎம்முக்கும் வேறுபாடுகள் இல்லை எனச் சொன்னவர். அதற்கு இன்றுவரை சிபிஎம் எந்தப் பதிலும், விளக்கமும் கொடுக்கவில்லை. ஆனால், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அவருக்கு தேனி மாவட்டத்தில் மார்க்சிய அறிஞர் பட்டம் கொடுத்தார்கள்.  

அதே சமயம், உங்களது கட்சியின் பார்வையில், கண்டவர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கொடுக்கத் தேவையில்லை என்ற நோக்கம் இருக்கலாம். ஆனால் அப்படிச் சொல்லும் ஒருவரை மார்க்சிய அறிஞர் எனச் சொல்லுவது, பிரகாஷ் காரட்டுக்கு அரசியல் அரிச்சுவடி கூடத் தெரியாது என்பதை உங்கள் கட்சி வெகுஜன அமைப்பான தமுஎகச மார்க்சிய அறிஞர் பட்டம் கொடுத்திருப்பதால் அதை உறுதி செய்வதாகவே தோன்றுகிறது. மேலும் மார்க்சிய அறிஞர், விருது கொடுத்த மேடையிலேயே,  “மார்க்சியத்தை பன்றித்தத்துவம்” என அம்பேத்கர் சொன்னது சரி, என விளக்கம் கொடுத்தபோது, அங்கிருந்த சிபிஎம்மின் தோழர்களில், ஒருவர் கூட குரல் எழுப்பவில்லை. விவாதிக்க முனைந்த என்னையும் வெளியே தள்ளிச் சென்றார்கள்.

தோழர், நான் மேடையில் அதைப் பேசினேன் இதைப் பேசினேன் என்று திரிக்க, ஆதவன் தீட்சண்யா, சிராஜுதீன், கருப்பு கருணா போன்றவர்கள் முன்னெடுக்கலாம். ஆனால் நான் மேடையில் பேசியதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. மேலும் தேனியில் நடந்தது என்ன என்று நீங்கள் உங்கள் கமிட்டியில் ஒரு ஆய்வையும் செய்யச் சொல்லலாம். அதுகுறித்து என் தரப்பைச் சொல்ல ஆவலோடு காத்திருக்கிறேன்.

அதோடு அக்கூட்டத்தில் பங்கேற்ற தோழர். தி.சு.நடராஜன், பிராங்க்பர்ட் மார்க்சியவாதியெல்லாம் மார்க்சிய அறிஞர் என்று அழைக்கப்படுவதில் எனக்கும் உடன்பாடில்லை என்று என்னிடம் சொல்லவும் செய்தார். தமிழ்ச்செல்வன் ‘தம்பி உன் கருத்துக்கு எதிர்ப்பு மட்டுமல்ல ஆதரவும் இருக்கு’ என இதை முன்வைத்தே சொன்னார்.

கலந்துரையாடல் என அறிவித்துவிட்டு, மேடையில்  “மார்க்சியம் பன்றித்தத்துவம்” என்று வாதிடுபவருக்கு எதிராக, எந்தக் கேள்வியையும் கேட்காமல், என்னை வெளியே அனுப்பியதுதான் தமுஎகசவின் கருத்துச் சுதந்திரம் என்பதை அன்று அறிந்துகொண்டேன்.

மேலும் அதன் தொடர்ச்சியாக தமுஎகசவின் கலை இலக்கியத் தூண்களாக தேனியில் அறியப்படும் தோழர் சீருடையானிடம், ராஜதுரைக்கு நீங்கள் எப்படி மார்க்சிய அறிஞர் எனப் பட்டம் கொடுத்தீர்கள் எனக் கேட்டதற்கு, ராஜதுரையின் இரண்டு கட்டுரைகளை படித்தேன், அதனால் அவருக்கு அந்தப் பட்டம் ஏற்புடையதே என்றார். இதை பதிவு செய்யலாமா எனக் கேட்டதற்கு சம்மதமும் கொடுத்தார்.

அடுத்து தோழர் காமுத்துரை ஒரு கட்டுரையும் படிக்கவில்லை என்று சொன்னார். முக்கியப் பொறுப்பிலிருக்கும் தோழர்களே இப்படி இருக்கும் போது, ராஜதுரையை மார்க்சிய அறிஞர் எனச் சொன்னது யார். அதன் நோக்கங்கள் விளக்கங்கள் என்ன. மேலும் கம்யூனீஸ்ட் கட்சி அறிக்கையை மொழிபெயர்த்ததாலேயே அவர் மார்க்சிய பேரரறிஞர் என்று இப்பொழுதைய தமுஎகசவின் மாநிலச் செயலாளர் சு.வெங்கடேசன் அங்கு சொன்னதாக அறிந்தேன். இது ஒன்றுதான் மார்க்சிய அறிஞராகும் தகுதியா?

மேலும் புத்தகம் பேசுது இதழில் கோணங்கி குறித்து ஒரு துதி பேட்டி வெளிவந்தது. அது குறித்த எனது கேள்விகளை முன்வைத்து எழுதிய கடிதத்தை பிரசுரிக்கவும் இல்லை. ஆனால் அந்தப் பேட்டியில் கலைஞனை நம்புவதும் கலைஞனைப் பின் தொடர்வதுதான் மனிதகுலத்திற்கு விடுதலை என்று முன்னட்டையிலேயே கொட்டை எழுத்துக்களில் போட்டிருந்தார்கள். அப்படி நம்பும் வகையில் ஒரு கலைஞனை தமுஎகசவிலாவது சுட்டிக்காட்டமுடியுமா என எனக்குத் தெரியவில்லை. இதை ஒரு எழுத்தாளர் கூற்று என எடுத்துக்கொண்டாலும் அந்த எழுத்தாளர் கூற்றுக்கு பதில் சொல்லும் எழுத்தாளர் தமுஎகசவில் இல்லையா.

தோழர்... தொடர்ந்து இது போன்ற தனிமனிதக் குழுக்களை, அவர்களை முன்னெடுத்து முதுகு சொறியும் நபர்களை, முழுநேர ஊழியர்கள் என்றும், அவர்கள்தான் புரட்சியை முன்னெடுத்துச் செல்பவர்கள் என்றும் கவனத்தில் கொள்ள முடியுமா?

மேலும் ரங்கநாயகம்மாவின் புத்தகத்தை பாரதி புத்தகாலயம் தனது அடுக்குகளில் கூட வைக்காமல் ஒளித்து வைத்தே விற்கிறது. மாறாக ஆந்திராவில் சிபிஎம் கட்சியின் பத்திரிக்கையில் ரங்கநாயகம்மா தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இருக்கிறார். அவரது கட்டுரைகளை சிபிஎம்மின் கட்சிப் பத்திரிக்கை பிரசுரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது.

கட்சியில் இருந்துகொண்டு, தலித்தியம்தான் விடுதலை, மார்க்ஸ் தேவையில்லை என்று கருதும் நபர்கள், உங்கள் அமைப்பில் முழுநேர ஊழியராகவும், மற்றவர்களை ஏக வசனத்தில் திட்டி தன் பிழைப்புவாதத்தை வளர்த்துக்கொள்பவராகவும் இருப்பது ஏன்.

மேலும் தலித்தியத்தை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் மார்க்ஸ் தேவையில்லை எனும் இவர்களுக்கு நீங்கள் அறிந்த மார்க்சியத்தின் படி கூறும் பதில்கள் என்ன.

எல்லாவற்றிற்கும் மேலாக மார்க்சிய அறிஞராக ,செயலூக்கமான வழிகாட்டியாக பல புத்தகங்களை எழுதிய, இப்பொழுதும் எழுதிக்கொண்டிருக்கிற தோழர் ரங்கநாயகம்மாவை நக்கல் நையாண்டி செய்து சிராஜுதீன், ஆதவன் தீட்சண்யா கருப்பு கருணா போன்றவர்கள் ஆற்றும் பணிகளையும் நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.

உங்களது வாசிப்பு வசதிக்காக எனது கேள்விகளைத் தொகுத்துக் கேட்கிறேன்.

1.சின்னத்திரையில் கதை வசனம் எழுதுவது, சினிமாவில் நடிப்பது கேவலமான பிழைப்பா? அதில் வரும் வருமானம் அவமானகரமான வருமானமா?

2. சாதியப் பிரச்சினைக்கு அம்பேத்கர் சொல்லும் தீர்வுகள் என்ன?

3.புத்தரா கார்ல் மார்க்ஸா என்றும் அம்பேத்கரின் நூல் குறித்து உங்களது பார்வை என்ன?

4. சிபிஎம் கட்சி அம்பேத்கரின் சாதி ஒழிப்புக் கருத்தியல்களை எப்படி ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துகிறது.

5.சாதி ஒழிப்புக்கு மார்க்சியம் உதவுமா?
உதவுமெனில். அதன் தத்துவார்த்த புரிதல்கள் என்ன?

இறுதியாக, விமர்சனம் செய்வதற்கான உரிமையை, அரசியல் அமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியிருக்க, ஒரு நூலை எழுதியதற்காகவே சாதி முத்திரை குத்துவதும், அவதூறு செய்வதும், நூலை  “நரகல்” என்று சொல்வதுமாக இருக்கும் சிபிஎம் முழுநேர ஊழியர்களின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள். அமைப்பில் உள்ளதானலேயே இந்த அதிகாரம் கிடைத்துவிடுமா?

அதோடு, என் குறித்தான கேள்வியில், தேவர் சாதி சங்கங்களில் சென்று பிரச்சாரம் செய்வார்களா என்றொரு கேள்வி வந்தது. அதே பாணியை முன்வைத்து, சிபிஎம் தலைவர்கள் அனைவரும், அவர்களின் சாதி சங்கங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்திருக்கிறீர்களா என்று நான் கேட்கிறேன். மேலும் ஒருவர் இந்த சாதியில் பிறக்கவேண்டும் என்பது அவரது தேர்வாக இருக்கமுடியுமா.?

மறுபடியும் அழுத்தமாகப் பதிவு செய்கிறேன். சிபிஎம் பொலிட் பீரோவில் பார்ப்பனர்கள் அதிகம் இருக்கிறார்கள், தலித் உறுப்பினர் இல்லை எனும், ஆதவன் தீட்சண்யா கேள்விக்கு பதில் சொல்லவேண்டும்.

அதே சமயம், தலித்துக்களுக்கு வாய்ப்பளிக்காத சிபிஎம் கட்சியில், இந்த தலித்தியப் போராளிகள்,  அமைப்பாளர்களாக, பணியாளர்களாக, உறுப்பினர்களாக ஏன் இருக்கிறார்கள்.? என்பதையும் ஆய்ந்தறிந்து சொல்லுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

தலித்துக்களின் மேம்பாட்டிற்காக இந்த தலித்திய போராளிகள் கட்சிக்குள் இதுவரை என்ன வகையான போராட்டங்களை முன்வைத்திருக்கிறார்கள்,அதற்கு கட்சி கூறிய பதில்கள் என்ன, என்கிற ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் அதையும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
வசுமித்ர


No comments:

Post a Comment

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...