அப்படித்தான் இருக்கிறது
பத்திரிக்கையாளர்கள்
அமைதியாக
இருக்கும்போது
நாடு
தன் நிர்வாணத்தை
அமைதி நிரம்பிய
எள்ளலுடன் ஒருமுறை கவனித்துக்கொள்கிறது
உண்மையில்
பத்திரிக்கையாளர்கள்
நாட்டின்
குடிமக்களுக்கு
உள்ளது உள்ளபடி
மிக நேர்த்தியாக இல்லாவிடினும்
அசிங்கமாகவாவது
குடிமக்களுக்குக் காட்டிக்கொடுக்கவேண்டும்
மாறாய்
அவர்கள் விளம்பரம் செய்கிறார்கள்
விளம்பரம்
மக்களை
அவர்கள்
விரும்பவியலாதவாறு
வெறுக்க வெறுக்க
வன்புணர்ச்சி செய்கிறது
காகிதங்களிலோ
பத்திரிக்கையாளர்கள்
வசந்தங்களை இசைத்துக்கொண்டிருக்கின்றனர்
அறியமுடியாத துப்பாக்கிகளின் வர்ணனையை
ஆட்சியாளர்கள்
செய்திகளில் ஒளிபரப்புகிறார்கள்
ஆண்களின் இறுகிய பிருஷ்டமும்
பெண்களின்
தேர்ந்தெடுக்கப்பட்ட
நளினமான சதையும்
குடிமக்களுக்குக் காட்டப்படுகையில்
அரசியல்வாதிகள்
அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றனர்
பத்திரிக்கையாளர்கள் மௌனமாக இருக்கும் நாடு உருப்படப்போவதில்லை
ஆம்
மக்கள்
நிர்வாணத்தை எப்பொழுதும்
கொண்டாடிக் கொண்டிருக்கப்போவதில்லை
நிர்வாணம் என்பது அரசின் தத்துவார்த்தச் சொல்
அம்மணம்
இது
மக்களின்
சொல்லாக இருக்கிறது
நிர்வாணமாக இருப்பதென்பது
அரசியல்வாதிகளுக்கு உகந்ததாக இருக்கையில்
அம்மணத்தை மக்கள் வெறுக்கிறார்கள்
குழந்தைகள் அம்மணத்தை கேலி செய்கிறது
நடிகைகளின் நிர்வாணங்கள்
நிர்வாணத்தில் நாகரீகம் செலுத்தப்படுகையில்
அம்மணத்தில் பசி தன் விகாரத்தைக் காண்பிக்கிறது
மக்கள்
அமைதியாய் இருக்கின்றனர்
சொல்லமுடியாத
வார்த்தைகளை
திறக்க முடியா உதடுகளால் கடித்து மென்றபடி
அம்மணக் குருதி
கசியும் வரை
மக்கள்
எப்பொழுதும் இப்படியே இருக்கப்போவதில்லை
கசியும் குருதியில்
ஆட்சியாளர்களுக்கான வெடிகுண்டின்
கந்தகவாசனையை அறிந்து கொண்டிருக்கிறான்
கவிஞன்
அவன் நாசி எப்பொழுதும் மக்களையே நோக்கியிருக்கவேண்டும்
இப்படியாகத்தான் கவிஞன் தன்னை உற்பத்தி செய்கிறான்
இறந்து விடாமல்
பத்திரிக்கையாளர்களுக்கு
தகவல்கள் இருக்கிறது
செய்திகள் இருக்கிறது
உண்மையில் அழும்
குமுறும்
நெஞ்சில் அடித்துக் கதறும்
பத்திரிக்கையாளனே நாட்டுக்குத் தேவை
பத்திரிக்கைகள் பொய் சொல்லுகையில்
பத்திரிக்கையாளன் தலை குனிகிறான்
வரலாறு மிகுந்த வன்மத்துடன் அவனை நகர்ந்து செல்கிறது
பத்திரிக்கைகளுக்கு தெரியாத பத்திரிக்கையாளன்
அல்லது கவிஞனுக்குத் தெரியும்
உண்மையில்
பசித்த மக்கள்
உணவை உற்பத்தி செய்வதை விட வெடிகுண்டுகளை
உற்பத்தி செய்யவே விரும்புவார்கள்
பசி
வெடிகுண்டுகளின் புன்னகையைத் தயாரித்துவிடுகிறது
மக்கள்
புன்னகை செய்யும்பொழுது
அரசு மௌனமாகிறது.