Monday, October 4, 2010

ஒரு தந்தையின் நினைவுக்குறிப்புகள். ராஜன் கொலை வழக்கு.


'மிகமிக நுணுக்கமானவர்களே ஆகச்சிறந்த வன்முறையாளர்களாக இருக்கிறார்கள்.'

- தஸ்தயேவ்ஸ்கி

மகனை அரசுக்கு பறிகொடுத்து, காணமுடியாது பதறி, உண்மையில் மகன் என்னவானான்...எனத் தேடி ,கிடைப்பான் என்ற நம்பிக்கையுடன் பரபரப்பும் மகிழ்ச்சியுமாய் அலைந்து, ரகசியங்களால் ஓய்ந்து, இறுதியில் தன் மகன் அரசால் கொல்லப்பட்டான் என்றறிந்து, அவனுடலின் ஒரு துளிச்சாம்பல் கூட கரைக்கக் கிடைக்காது வீறிட்டலறும் குரலுடனும், தன் மகனைக் காக்கமுடியாத இயலாமையால் ஆன்மாவின் குற்றவுணர்ச்சிக்கு பதில் சொல்லமுடியாத துக்கத்திலும் தன் மகனின் இழப்பை பதிவு செய்திருக்கிறார். டி.வி. ஈச்சரவாரியர்.

இந்நுலின் வார்த்தைகளை நம்மிடம் வைப்பதற்காக அவர் கூறிச்செல்லுகிறார்

‘என்னிடம் அழுது தீர்ப்பதற்கான கண்ணீர் இன்னும் மிச்சமிருக்கிறது. உயிரின் துடிப்புகள் இன்னும் இந்த பலவீனமான உடலில் மீதமுண்டு. அதனால்தான் இதையெல்லாம் எழுத்த் தோன்றியது. நான் மனவருத்தம் கொள்ளச் செய்திருப்பதாக யாராவது நினைத்தால் சாபமேற்ற இந்தத் தகப்பனை பொறுத்துக்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து

தன் மகனை பூட்ஸ் கால்களால் அதிகாரத்தின் மமதையும் அதனால் விளைந்த திமிராலும், ஆணவத்தாலும் தன் மகனை எத்திக்கொன்ற காவல் துறை ஆய்வாளாரான புலிகோடனைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது ஏற்படும் தன் மனதின் குரலை....

டெலிவிஷனில் புலிகோடன் நாராயணனின் உருவத்தைப் பார்க்கும் போது, தெளிவான கருத்துக்களுடன் முறுக்கி விடப்பட்ட மீசையைத் திருகியபடி அவர் பேசும் தோரணையைப் பார்க்கும் போது மனதுக்குள் மின்னல்போல் ஒரு பகையுணர்வு தோன்றுவதுண்டு. என் மகனுக்கு நேரிட்ட அந்த துர்லபமான நிமிடங்கள் அப்போது என் மனதில் அலையடித்து மேலெழும். மனம் என்னையறியாமலேயே ஒரு கோபத்துடன் இழப்புகளைக் குறித்து கணக்கெடுப்பு நடத்தும். மறந்து விட்ட்தாக நினைத்துக்கொண்டிருப்பவை அதிகமாக மனதிற்குள் எழும்.

அரசு தன்னைத் தானே தின்று வளர்வதோடு மட்டுமில்லாது குடிகளின் உதிரத்தை அதிகார நாக்கால் உறிஞ்சும் அதன் ரத்தவெறியை மகனை இழந்த தகப்பன் பதிவு செய்திருக்கிறார். நாம் இன்னும் இந்தப் பூமியில் வசந்த்த்தை நோக்கியும், வாழ்வதற்கான கனவுகள் வரவேண்டி துயிலுக்காகவும் காத்திருக்கிறோம்.

நீதி தன் கால்களில் அணிந்திருக்கும் கனத்த பூட்ஸ்களால் அப்பாவிகளின் விரைகளை நசுக்கும்போது.....பார்வையாளனாய் இருக்கும் மனநிலையையை நானே என் மீது காறியுமிழ வேண்டியிருக்கிறது.

இலக்கியம் செய்யவேண்டிய தார்மீகப் பதிவென இந்நூலைத்தான் நான் கூறுவேன்.

ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்

பேராசிரியர் டி.வி. ஈச்சரவாரியர்.(மலையாளம்)

தமிழில்; குளச்சல் முகமது யூசுப்.

காலச்சுவடு வெளீயீடு

விலை. 100

Monday, September 13, 2010

அம்மணமானவர்களுக்கு அந்தரங்கம் தேவையில்லை...



குற்றவாளிகளை கைது செய்யலாம்
முறுக்கிய கயிற்றில் அவர்களின் துரோகத்தை எழுதி தூக்கிலிடலாம்
வழியும் கண்ணீரை தூயகைகளால் ஏந்திப்பிடிக்கலாம்
நொறுங்கும் எலும்புகள் புகைய எரியூட்டலாம்
சிதைத்தீயை பாவ நதியால் நனைத்து
அஸ்தி கரைக்கலாம்
நண்பர்களே...

மாறாய்
ஒரு குற்றத்தை செய்வதென்பது அவ்வளவு எளிதல்ல
உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அந்த
நல்லவனின் முகமூடியை கிழித்தெறிய
நீங்கள்
கடவுளாகவேண்டும்
வலதுகையில் உலகை அழிக்க வல்லமை கொண்ட ஆயுதம் வேண்டும்
இடது கையில் குருதியேந்த திருவோடு வேண்டும்...

எல்லாவற்றையும் விட குற்றங்கள் என்ற பதமுடைய வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்திருக்கவேண்டும்
துரோகத்தின் மணத்தை உள்நாக்கால் இழுத்து நுரையிரலை நிரப்பியிருக்கவேண்டும்
ஆம்...
நீங்கள் உங்களுக்கெதிராய் முதலில்
புகார் செய்யவேண்டும்
உங்களிடமே
ஈவுஇரக்கமற்று...
கண்ணீர் சிந்தாது.

Saturday, June 19, 2010

காமத்துப்பால் 2




23

வண்ணத்துப்பூச்சிகள்
சபிக்கும் இவ்விரவை
தனிமையின் பெருந்துயர் பற்றி என்மொழியில்
உனக்கொரு கவியெழுத பயன்படுத்துவேன்
அது தன்
இறக்கைகளை அடித்துக்கொண்டு
நிறமற்ற
என் காமத்தின் அனாதைதனத்தை
மொழிபெயர்க்கும்.

24

மின்னும்
இருமுலை நோக்கி
பின்னும்
இரு கண்கள்
நிதம்பமதிர
ஒளிப்பறை கொட்டும் சூரியன்
வெந்துருகும் விரல்களை உதறி
ஆவியெனத்தழுவ
என்முகத்தில்
மின்னும் இருமுலை நோக்கி
பின்னும் இரு கண்கள்

25

வானத்தைத் தானமிடும் கரங்கள் உனக்கு
சகி
ஆகாயம் பார்க்க ஒருமுறை
புணர்ந்தால் என்ன

அதன் விழிநீரை
மழைநீரென
என்னால் மொழிபெயர்க்க இயலாது

26

மழைக்கால
தானம் வேண்டி கரங்கள் நீட்ட
உள்ளங்கைக் கடுங்குளிரில்
பதிக்கிறாய்
நிதம்பவெப்பத்தை

என் கண்ணே...

27

வெப்பம் இளகும்
முன்னொரு கடும்பொழுதில்
என்னுடலை மொழிபெயர்க்க
வந்து விழுகிறது
உன்

அந்தரங்கச்சொற்கள்.

28

காமம் மிகு இரவில்
வானம்
தன்
ஒளியணைய
என்விழியில் மலர்வது
கண்ணே...
உன் யோனி

வெட்கம் தரையில் சிந்த
உன்னிதழில் மலர்வது
யென்குறி.


29

நிதம்பத்தை ஆகாயாத்தில் அழுத்தியுன் உறுதி தந்தாய்
மண்ணில் குறி பதித்து
என் உறுதி நான் தந்தேன்

நாமிருவர் புணர்கையில்
நம்மை வேவு பார்த்தது யார்.

30

உனதுடலின்
கூட்டுத்தொகை
புணர்ந்த வெளிச்சம்

எனதுடலின் கூட்டுத்தொகை
களைப்பின் இருள்.



31

ஒருமுறை
கோபத்தில் உனை நீயும்
கடுங்கோபத்தில்
எனை நானும் புணர்வதாய் சத்தியம் செய்தோம்

உரசிய கைகளில்
பற்றிய வெப்பத்தை
நாம் மீறி
நாமே புணர்ந்தணைத்தோம்.


32

ஒரு
காட்டைத்தணிக்கும்
காற்றைக் கண்டு
கைகொட்டிச் சிரித்தாய்

காடறியும் கண்ணே
புணர்ச்சியில்
நீ
கண்மூடும் பேரழகை.


33

உன்னை எனக்கும்
என்னை உனக்கும்
கையளித்த
பீஜமும்
யோனியும்
கல்லறையில் கண்மூடி
தியானத்திலிருக்கின்றன

தோழி
வா
நாம் புணர்வோம்
இன்னொரு கல்லறை தேடி.


34

புணர்ச்சியில் பெருகும் வார்த்தைகளை
தனித்தனியே
எழுதிப்பார்த்தோம்

நல்லது....
நாம் புணரவே செய்திருக்கிறோம்.


35


இறப்பில் சுருங்கியும்
பிறப்பில் விரிவும்
கொள்ளும் கண்கள்
புணர்ச்சியில் தன்னை மறந்து
மூடிக்கொள்கின்றன.

Monday, May 17, 2010

குளியலறை விதானத்தில் தொங்கும் தூக்குக் கயிறும்…சிறுமி நேயாவின் நெடுநல்வாடையும்....


1
அப்பா...
நான் உங்களைக் கொலை செய்யப்போகிறேன்
சரி மகளே
முத்தம் தா

இல்லையப்பா... குருதி கசிய
சரி மகளே
முத்தம் தா

அப்பா...
உங்கள் உடலைச் சிதைத்து
சரி மகளே
முத்தம் தா

அப்பா...
அப்பா...
நிஜமாகவே...

சரி மகளே
முத்தம் தா

அப்பா
இந்த விளையாட்டு பிடிக்கவில்லை
வேறு விளையாட்டு சொல்லித் தாருங்கள்

சரி மகளே
முத்தம் தா.


2
சபிப்பது பற்றிய
ஞானத்தைக் கற்றுக்கொள்கிறேனே அப்பா
அடம் பிடிக்கிறாள் நேயா

விழிகள் குமைய
அனுப்பிவைத்தேன் அவளை
என் முகத்தில் அறையுங்கள்
அவளை...
அவளை...
சாத்தானுக்கு அறிமுகம் செய்தேன்

நகங்களை நீட்டாதே
விழிகளின் நிறம் மாற்று
அவள் சிறுமி

அறிவுரைகளை
வேண்டுகோளாய்க் கொட்டி
வீடு திரும்பினேன் கண்ணீர்த் துணையுடன்

விரல்கள் உலரும் முன்
வீட்டுக்கு வந்தாள் சிறுமி நேயா குதித்தபடி
சாத்தான் நிழல்போல் பின்னால் நின்றான்

வழியனுப்ப வந்ததாகவும்
அவள் சிறுமியென்றும் சொல்லி அகன்றான்

பிறிதொரு நாள்
அலுவல் வேலையாய்ச் சாலையைக் குறுக்காகக் கடக்கையில்

நடை வீதியில் நின்று
சாத்தான் அனைவருக்காகவும்
ஆசீர்வதித்துக்கொண்டிருந்தான்.


3
துரோகம், மயக்கும் விழிகளுடன் வருகைபுரிகிறது
தனிமையில் பற்றியெரியும் என் அறையை நோட்டமிடுகிறது

நளினமான உடலசையக் கதவைத் தட்டுகிறது
திறந்த கதவின் வழியே வசந்தம் பீறிட்டு வீச
மயங்கிச் சரியும் துரோகத்தை அணைத்துக்கொள்கிறாள்
சிறுமி

அறைக்குள் நுழையும்
நான்
விசித்திர சப்தம் கேட்கிறேன்

ஒரு
குடம்
தண்ணீர் ஊற்றி
ஒரு
வனம் பூத்ததே...

என் விரல்கள் உதற
செவிக்குள் தாவரம் பூக்க

துரோகத்தைப்
புல்லாங்குழலாக்கி
என்
உதட்டில் பொருத்துகிறாள்
நேயா.


4
மீன்களை மயக்கி
நித்திரை கொள்ளச் செய்யும்
குளமொன்றிற்கு
முத்தம் தருகிறாள்
மகள் நேயா...

குளம்
கடலாக
திமிங்கிலங்கள்
விழித்தெழுகின்றன.


5
அறை அதிர
சுண்டுவிரலால் கதவு தட்டும் சப்தம்
முழு மௌனம் கொண்டு
தாழ் நீக்குகிறேன்

சூரியனின் ஒரு துண்டை வாயில் கடித்தபடி
ஒளித் திவலை வழிய அவன்
நண்பன் மற்றும் வீரியமிக்க எதிரி

வழியும் நீரைப் புறங்கையால் துடைத்தபடி
கால்களை நிதானித்து மாற்றி
எங்கே உன் சிறுமி
பார்க்க வேண்டும் அவளை

கனவுகள் குழம்ப
தரையில் அமர்கிறேன்

என் விழிகள் பார்த்தவனின் கைத்தொலைபேசி ஒலிக்க
சாவகாசமாய் கையில் எடுத்து
பதில் வாங்கக் காதில் பொருத்துகிறான்

எங்கே போனாய்
நான் உன் அறையில்...

சிறுமியின் குரல்
அறையை நிறைக்க
மயங்கிச் சாய்கிறான்

அவனுக்கு
சிறுமியென்றே அவளை விவரித்திருந்தேன்

சொல்லியிருக்க வேண்டும்
அவளுக்கு விலாப்புறம் இரண்டு சிறகுகள்
மற்றும்....

Sunday, March 14, 2010

ஒரு காதல் கடிதமும்….ஆளற்ற கடற்கரையில் கரையும் கருப்பு நிற காக்கைகளும்….


……….சொல்ல வேண்டிய வார்த்தைகளின் அர்த்தங்களை மனதில் நினைத்ததும் மௌனம் தலைகுப்புற நம்முன் விழுந்து மரிக்கிறது. சொல்லப்படாதவைகளோ சொல்லப்பட வேண்டியவருக்கு நாம் செலுத்தும் வன்முறையாகவும் மாறுகிறது.

வார்த்தைகளிலிருந்து மௌனத்திற்கும் மௌனத்திலிருந்து வார்த்தையின்மைக்கும் தாவிக்கொண்டிருந்தேன் உண்மையில் அது ஒரு ஊசலாட்டம்தான் இருந்துவிட்டுப்போகட்டுமென மனமும் பேசித்தீர் என அடம்பிடிக்கும் நண்பர்களும் கொண்டிருக்கிறேன்.

எல்லாவற்றையும் புரிந்து கொள்ள நினைக்கும் வன்முறையிலிருந்து சதா தப்பியபடியே அலைந்துகொண்டிருந்தவன் நிதானிக்க வேண்டியிருந்தது. நின்றுவிட்டேன். நான் விரும்பிக் கைக்கொண்டிருந்த, எவருக்கும் தர மறுத்த என் அனாதைத்தனத்தை ஒரு சிறு புன்னகையால் பிடுங்கியெறிந்திருக்கிறாள்.வழியும் பெயரற்ற கண்ணீரில் உப்புச்சுவை காற்றில் கரைகிறது.

இப்படியாக......

அவளை சரியாக கடற்கரையில் வைத்து சந்தித்தேன் என்பதை விட பார்த்தேன் என்று சொல்வேன். பார்த்தேன். கவிதைகளையும் கோபங்களையும் உடன் கொண்டு வந்திருந்தாள். நானும் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டுத்தான் போயிருந்தேன். பற்றிக்கொள்ள எதுவும் நடக்கவில்லை. நானறிந்த கவிகளைப் பேசியதைத்தவிர. இன்றுவரை எனக்கு அதில் ஆச்சரியமாய் இருப்பது எந்தப்புள்ளியில் நான் அவளைஅவளை….போகட்டும்….

வாழ்நாள்தோழியாய் வந்து நிற்கிறாள். எதையும் தொலைப்பதில் ஆர்வமுள்ள நான் மிகச்சரியாக என்னைத் தொலைத்திருக்கிறேன். புன்னகையில் கரையும் முகம் அவளுக்கு நித்ராவாகிய அவளுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். இருக்கிறேன்இருக்கிறேன். இருக்கிறேன்.

வாழ்நாள் தோழனாய் நான் இருப்பேனென்பதை அவளுக்கு அவளை விட அவள் மேல் நான் வைத்திருக்கும் மரியாதையின் மீதமர்ந்து சொல்கிறேன்.

நித்ரா உன்னை மிச்சம் வைக்காமல் காதலிப்பேன்னென்பதை நான் உனக்கு வெகு ஆழமாய்ச் சொல்கிறேன். அது என்னையும் இழுத்துச்செல்லும் பாதாளம் என்பதையும் அறிவேன்.

உன் அன்பின் பெருங்கைகளுக்குள் அடக்கிக்கொள் இச்சிறுவுயிரை.

சிறுகுறிப்பு

நண்பர்களின் முகச்சுளிப்புகளை பிரியத்தின் மீது கட்டப்பட்டும் செங்கற்கள் என்பதாக மொழிபெயர்த்துக்கொள்கிறேன். அவர்களுக்கு என் அன்பு.

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...