ஒரு வலி நிரப்பும் எழுத்தை
அதன் இறுகக் கட்டிய சொற்களை
மனப்பாடம் செய்யும் மாயாவியை
கவிதையெனக் கண்டுகொண்டேன்
மாயாவிக்கு நேர்ச் சொல்லென
கவிதை
பெண்பாலை
சூனியக்காரியென வரைந்து வைக்கிறது
ஒவ்வொரு ஆண்மகனும் தனது நிழல் விழா குறியிடத்தில்
அடிமையின் பெயரை வரைந்து வைக்கிறான்
கவிதை
தன் நிதானமில்லாத கால்களால்
நரம்பிறுக
வீசியெறிய முடியாத சொற்களை
கங்குகளென ஊதி
வனமெங்கும் வேர்களில் தீயைப் பற்றவைத்தபடி அலைகிறது
சரியும் பூக்களை
தன்
சிறுகுறிப்பில் வரும் சிறுமிகளுக்கு வாரியிறைக்கிறது
அது
சொல்ல முடியாதபடிக்கு
தன்னைக்
கவிதையென்று நம்பி
மாளமுடியா வலியில் கோணியழும்
தனது முகத்தை நிராதரவாய்
கண்ணாடியில்
வரைந்து வைக்கிறது
பெண்கள் சபிக்கப்பட்ட தேவதைகளெனவும்
ஆண்கள் ஆசிர்வதிக்கப்பட்ட சாத்தான்களெனவும்
ஒருமுறை
வசுமித்ர உறுமியது
கோரைப் பற்களில்
இளங்குருதி சொட்ட
கவிதைகள் புன்னகைக்கும் போது
அது தனது மத்தகத்தைக் கருணையில் அறைந்து தாழ்த்துகிறது
கவிதைகள்
தன்னை விளக்க முடியா சொற்களில்
அடகு வைக்கும்போது அர்த்தங்கள்
நுரைகொப்பளிக்கக் கொதிக்கிறது
கவிதையைத் தானமிடுவதென்பது
சாபத்தை ஏவி விடுவதுதான்
சமர்ப்பித்தலென்பது
கல்லறையில் சொற்கள்
தன் தாப நாவை உளியென
பொறி பறக்கச் செதுக்குவதுதான்
கவிதை
அருந்தும்
பருகும்
தீய்க்கும்
உமிழும்
சாத்தானின் இரட்டை நாவை பிரதியெடுத்து உள்ளிழுக்கும்
சதா உறுமியலையும்
வசுமித்ர
அதுவாகிறபோது
கவிதை தன் சாட்டையை வீசியடிக்கிறது
வரலாறு தன் கண்களை இறுகப்
பொத்திக்கொண்டு அம்மணத்தைத் திறந்து அமர்கிறது
குறியற்ற கவிதை
குறியை
அறுத்தெறிந்த கவி
பளுக்கக் காய்ச்சிய இரும்பென
அம்மணம் குளிர்ந்தடங்குகிறது
வரலாற்றை மொழிபெயர்ப்பதென்பது
ஆண்களை மொழிபெயர்ப்பதுதான்
ஆண்கள்
தங்களது
அவர்களது விரைத்த குறிகளால்தான்
வரலாற்றை எழுதுகின்றனர்
ஆம்
ஸ்கலிதம்தான் வரலாறு
ஸ்கலிதம்தான் அரசியல்
ஆண்களின் வரலாறு
ஆண்களின் அரசியல்
மற்றும்
ஆண்களால் துடைத்தகற்ற முடியாத கறை
சொல்
வசுமித்ர
கருந்துளைதான்
சூன்யம்
சூன்யம்தான் யோனி
யோனியின் மத்தகம் அடக்க
இனியிருக்கப் போவதில்லை
நீண்ட அங்குசம்
யோனியறிதல் தன்னையறிதல்
கவிதை
தன் சொற்களை ஏவி விடுகிறது
பரவட்டும் தீ
தீ..............................................