Friday, May 11, 2012

நித்ராவிடம் மன்னிப்புக்கேட்டல்...ஒரு 
பெயர்
அத்தகையக
வலி

சகி
பெயர் அற்ற ஒரு தேசம்
பெயரிடா தசை

ஒழுகும் குருதிச்சாற்றில்
மிதக்கும் துளியை கண்ணீரா
என்றழைத்தேன்

ஊனொழுகும் முத்தம்
உன் பெயர் சொல்லி கதறும் நினைவுகளை
மரணத்தை நோக்கி நடத்திச் செல்லுகிறேன்

காலன் தன் காதலை அறிவித்தாயிற்று
யுத்த நிலைமையில்
நழுவுகிறது காண்டீபம்
ராவணச் செவியில் விரும்பாது நுழைந்த சொல்

தோழியாய் நுழைந்தவளே
சகல ஊற்றையும் உன் பெயர் சொல்லியே அருந்தினேன்

அன்னம்
நீ

பசித்த வயிற்றைத் தடவி உணர்ந்திருக்கிறேன்

ஞாபகத்தில் சொறுகிய குறுவாளை
இன்று கனவில் கண்டேன்

கடற்கரை
காகம்
ஆளற்ற மணல்
துணையற்று அலையும் வெயில்

இங்கு நான் மட்டுமே நிற்கிறேன்
கப்பல்கள் தரையிறங்க தவிக்கின்றன

பறவைகள்
கடலை வெறிக்கையில்
எனது நினைவு மங்கத் தொடங்குகிறது

நீ மரணத்தை வார்த்தையாக்குகிறாய்
இந்திரியத் துளிகளென மிதக்கும்
கண்ணீரை
வழியும்
இரு துளைகளை அடைக்க
உன் காலடி மண்ணை யாசிக்கிறேன்

எனது யாசிப்புகள் உனை வந்தடைகையில்
கண்மணி

மரணத் தறுவாயில் இறுதியாய் நானெழுத நினைத்த கவிதையாய்
வந்து நிற்பாய்

உன் பெயரை காற்றில் அறைந்து சொல்ல முடியா
நாவையும்
உதட்டையும்
சாபத்தில் நனைத்து
ஈரப்படுத்தியபடி
அசையும் நினைவுகளை தொண்டைக்குழிக்குள்
வெற்றொலியென எழுப்பும்

என் சாவை மிக நெருக்கத்தில் காண்பாய்
என் சாவை
காண்பாய் மிக மிக நெருக்கத்தில்

ஒரு சிறிய கத கதப்பு
அவ்வளவே....

எனதன்பே
சாவில் துவளும் என் கைகளை துளியும் தீண்டாதே
அவைகளை ஈவிரக்கமற்று துண்டித்து விடு

உன் பெயர் சொல்லி
கண்ணீரால் நான் தினமும் குளிப்பாட்டிய உறுப்பு அது

எழுதிய கரங்களில்
வலிமையேற்றுவதென்பது
மரணத்துக்கொப்பானதுதான்....

2 comments:

  1. இறுகி தான் போகிறது வாசு , சில நினைவுகளும் உறவுகளும். கட்டற்ற கண்ணீரால் கழுவும் இந்த கவியின் நினைவுகள் ஏதேனும் ஒரு நிகழ்வில் சாந்தியுற செய்யும்.

    ReplyDelete
  2. வணக்கம் வேல் கண்ணன்.....கண்ணீர் பெருங்காவியங்களின் இறுதிச் சொல்லன்றோ...

    ReplyDelete

பொய்களுக்குத்தான் முழக்கங்கள் தேவை. உண்மை முனங்கினாலே போதும்

    0.உங்களப் பற்றிய அறிமுகம். மற்றும் படைப்புகள் ? ஊர்- போடிநாயக்கனூர். அம்மா வீரலட்சுமி ,  அம்மாச்சி செல்லம்மாள் இருவரும் கூலித்தொழிலாளிகள...