Wednesday, June 20, 2012

தேவதேவ....


மலம் தின்ன வைத்தல் 

கட்டு மீறத் துணிந்தவனை
இழுத்து வந்து உதைத்து, துடிக்கத் துடிக்கப்
பழுக்கக் காய்ச்சிய இறும்பினால் சூடு போட்டு
அவன் அலறலை
மீசையில் கைபோட்டு ரசித்தபடி
மீண்டும் அவனைக் குனியவைத்து
பிடரியில் மிதித்து அழுத்தி
மலம் தின்னச் செய்து
ஊரெல்லாம் பார்த்திருக்க
வெறிகொண்டாடி மகிழ்ந்தது
வேறு யாருமல்ல...
நான்தான்.....

இவ்வேளை, வருந்தி வருந்தி
இக்கவிதையை எழுதிக்கொண்டிருக்கும் நான்,
ஒரு தலித் அல்ல;
பார்ப்பானும் அல்ல;
ஒரு கவிஞன், இன்றைய பிரபஞ்சத்தின்
அதி சுரணை மிக்க ஒரே மனிதன். சமயங்களில்
தன்னைக் கடவுளெனச் சொல்லிக்கொள்ளும்
விசித்திரப் பிராணி


உச்சபட்ச வன்முறை பீரிடும் இந்த வெளிப்பாடு,
பெருந்துக்கமும் சுயமதிப்பும்
நீதியின்பாற் தீராத வேட்கையுமாய்த் தகித்தபடி
உலகின் ஒளியாய்ச் சுடர்பவர்களுக்காக அல்ல;
விடுதலைச் சிறுத்தைகளுக்காக அல்ல;
பகுத்தறிவுச் சிம்மங்களுக்காகவும் அல்ல;
தங்கள் வாழ்க்கைப் பாணியால்
சாதி - மத - சாமி - மல அக்னிக்குத்
தவறாது நெய் வார்த்துக் கொண்டிருப்பவர்களுக்காக,
மலம் தின்றுகொண்டிருக்கும் பார்ப்பனீயம்
தம் முகத்தைத் தானே பார்த்துக்கொள்ளுவதற்காக.
இரத்தம் செத்த சோனிகளும்
தோல் மரத்துப்போன பேமானிகளும்
மானம் மரியாதை வெட்கம் சூடு மற்றும்
சுரணை பெறுவதற்காக!


- தேவதேவன்

வணக்கம் கவி தேவதேவ....

நீண்டகாலம் கழித்து ஒரு சிறு வெஞ்சினம் பொங்க உங்களது கவிதைகளின் தொகுதியை மின்சாரமற்ற பகலில், அறை வெட்கையில் எனது இருதயத்தின் சளி ஓசையை கேட்கும் மௌனத்தில் வாசித்தேன்.


அன்ப...
மேற்கண்ட உமது கவிதையில் ஓடும் வஞ்சிக்கப்பட்ட மனத்தின் ஆற்றாமையை, பின்னுரை என்ற பேரில் " அமைதி என்பது மரணத் தறுவாயோ? வாழ்வின் தலைவாசலோ?” என்ற தலைப்பில் ( நவீனத்துக்குப் பின் கவிதை என்பதன் சுருக்கப்பட்ட வடிவம்) உலுத்துப் போன மனச்சான்றுடன் ஜெயமோகன் எழுதியிருக்கும் வக்ர மகிழ்ச்சியையும் கண்டேன். காலம் பெருந்தச்சனின் இயலாமையில் வைரமுருகி...இற்றுப்போயிருக்கிறது.


அன்ப....தேவ தேவ...

ஜெயமோகனுக்கு தங்களிடம் சொல்ல ஏதேனும் ஒரு சொல்லிருந்தால் சொல்லிவிடுங்களேன். கவி அமைதி, பீதியின் இறகல்லவா....அலைக்கழிப்பு, சித்தம் தடுமாறுதல்...இவைகளோடு, மனக்கசப்பும். கவிதையில் கொப்பளிக்கும் அறாத நீதியுணர்வைத்தான் வேதம் எனும் மலத்துணியில் நாளும் முக்கி, ஆட்காட்டி விரலுக்கும் கட்டைவிரலுக்குமிடையே அழுத்தி நசுக்கிக் கசக்கி, சூடான அதன் மணத்தை, நாசியில் ஏற்றி, அறிதல் என்றும் ஞானம் என்றும் தரிசனம் என்றும்,.... என்றும் வற்றாத தமிழால் குலை தள்ளி வருகிறார்.


எம் கவிஞ...

எல்லாவற்றையும் மறைக்க கோவணத்தில் துணி இல்லை இல்லவா...நாஞ்சில் நாடன் தன் கோவணத்தை விஷ்ணுபுரப் பட்டுத்தண்ணியில் அல்லவா சுற்றி மறைக்கிறார். பிருஷ்டத்தில் பொறித்திருக்கும் சாதியை எப்படி பொற்பட்டு நூலால் மறைக்க முடியும். எல்லாவற்றையும் பேச வைக்கும் மது பற்றிப் பேசியவர், அதி போதையில் இன்னும் நீ இந்துத்துவப் பசு...( இங்கு பன்றி என்பது உச்சபட்ச அழகு, அதனால் தவிர்த்திருக்கிறேன்) எனச்சொல்ல எது தடுக்கிறது. நீங்களும் பன்றி பற்றி எழுதியுள்ளீர்கள்தானே....


எம் அன்ப...

சொல்லக் கூடாத வார்த்தைகளை, எழுதிப் படிக்கையில் என்ன சுகம் கிட்டப் பெறுகிறது.

உம் நண்பர் நகுலன் சொல்லியிருக்கிறார்.


173.

அவன் உன்னுடன் இசைவதற்கு
அறிகுறியாக " ஆமாம் "
என்று தலையை
ஆட்டிக்கொண்டிருக்கும்போதே
உன்னைப் பார்த்துக்கொள்கிறேன்"
என்று உள்ளே
உறுமிக்கொண்டிருப்பான்.

174.

அவன்
எவர்களை ஒரு உத்தேசத்திற்காக
மதிக்கிறானோ
அந்த உத்தேசம் நிறைவேறியபின்
அவன் அவர்களை
அவமதிப்பான்
இதற்கு அவன் கொடுத்திருக்கும்
அர்த்தம்: ஆத்ம சுதந்திரம்.


175

அவன் அதிகமாகப் பேசமாட்டான்
ஏனென்றால்
தான் பேசினால் எங்கேயாவது
அகப்பட்டுக் கொண்டுவிட்டாலோ
என்ற
எச்சரிக்கையான வாழ்வு.

176

அவனைப் பற்றி
நாலுந்தெரிந்தவர்
சொல்வது; அவன் நல்லவன்;
ஆனால் அவனிடம் போகாமல் இருப்பது
நமக்கு நல்லது!

177

போகட்டும்”
என்னவானாலும்
நாலுபேர்
அவன் பேரைச் சொல்லுவார்கள்
பிறகு இருக்கவே
இருக்கிறது;
நாற்பது வெள்ளிக்காசு.


- நகுலன் தங்களிடம் மேற்குறித்த வரிகள் பற்றி பேசியதுண்டா, ஒரு வேளை கைப்பிரதியிலேயே கண்டு தாங்கள் புன்னகைத்திருக்கவும் கூடும்.


அன்ப....
தங்களது கவிதைகள் எனக்கு சில சமயம் வழிகாட்டி, சில சமயம் துலாக்கோல்,
சில சமயம் கவிதை...


ஆனாலும்..... நான் உங்கள்
ப்ரியத்துக்குரியவர்கள் பட்டியலில் இணைவதற்கு
சற்று யோசனையாகத்தான் இருக்கிறது...
" தேவதேவன்"
என் ஆள்
என்ற குரல், ஜெயமோகனின் ராம நாம தொண்டையின் அடிவயிற்றிலிருந்து வருகிறது.
ஏதேனும் நீதி சொல்லி ஒரு சிற்றம்பை எய்யமுடியுமா...வாலியின் குரலய்யா இது.


நான் நலம்
உங்கள் நலத்துக்கு உங்களையே பிரார்த்திக்கிறேன்...
சந்திக்கும் தருணத்தில் ஏதேனும் ஒன்று காலை இடறினாலும் என் பெயர் சுமக்கும் உடலை உங்கள் முன் காட்டிவிட்டுச் செல்வேன்.


சிறு நண்பன்....
வசுமித்ர...
No comments:

Post a Comment

பொய்களுக்குத்தான் முழக்கங்கள் தேவை. உண்மை முனங்கினாலே போதும்

    0.உங்களப் பற்றிய அறிமுகம். மற்றும் படைப்புகள் ? ஊர்- போடிநாயக்கனூர். அம்மா வீரலட்சுமி ,  அம்மாச்சி செல்லம்மாள் இருவரும் கூலித்தொழிலாளிகள...