Thursday, August 11, 2016

ரவிக்குமார் அவர்களுக்கு…“ அறிவு தனது விஷக்கொடுக்கைத் தனக்கெதிராகத் திருப்பியாக வேண்டும்.
 - நீட்ஷே.


ரங்கநாயகம்மா புத்தகம் வெளிவந்தது குறித்து, நீங்கள் அவருக்கு பதில் அளித்த முறையை தோழர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.

நீங்கள் ரங்கநாயகம்மா பற்றிச் சொன்ன கருத்து

// ஒரு columnist குறித்து என்ன சொல்வது? //

இந்திய அளவிலேயே இடதுசாரிகள் இன்னும்கூட அம்பேத்கரை பொருட்படுத்தி கற்க முன்வரவில்லை. மார்க்ஸை ஆழ்ந்து வாசித்த ஆயிரம் தலித் செயல்பாட்டாளர்களைப் பார்க்க முடியும். ஆனால் அம்பேத்கரை ஆழ்ந்து வாசித்த தலித் அல்லாத இடதுசாரிகள் எத்தனைபேர் இருப்பார்கள்?//
நீங்கள் சம்பந்தப்பட்ட நூலை முழுவதும் வாசித்தீர்களா?

வாசித்திருந்தால் அது குறித்து உங்கள் விமர்சனங்களை தாராளமாக வைக்கலாம். ஆனால் ஒரு columnist குறித்து என்ன சொல்லுவதென்று ஒரு அடையாளத்தை முன் வைத்துப் பேசியது சரியா. தமிழிக்கு எத்தனையோ விசயங்களை மொழிபெயர்ப்பின் மூலம் முன்வைத்த நீங்கள் இப்படி ஒரு கருத்தை வைத்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.

ஒரு விவாதத்திற்காக வைத்து உரையாடுவததென்றால், காலச்சுவடில் நீங்கள் என்ன எழுதி வந்தீர்கள் என்று விளக்கலாம்.  “பிள்ளை கெடுத்தாள் விளை” கதையை சாதியவாதியின் கதை என விமர்சிக்கப் பட்டபோது, ஒரு விமர்சகராக அக்கதையை தவறாக வாசிக்கக் கூடாது, மிகச் சரியா வாசிக்கப்படவேண்டும் என நீங்கள் எடுத்துக்காட்டி எழுதிய வரிகள் இதுதான்.

"தலித்துகளுக்கு இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும் அறிவுகிடையாது.. என்பது போன்ற தவறான கருத்துகள் வலுப்படவே வழிவகுக்கும்.அது நிச்சயமாக தலித்துகளுக்கு உதவக்கூடியதல்ல.."

கதைகளை எழுதுபவருக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் உங்கள் பார்வையில் columnist க்கு கிடையாதா, ஒரு காலம்னிஸ்ட் எதை எதை எழுதினால் நீங்கள் பொருட்படுத்தி உரையாடுவீர்கள் என்று சொல்ல முடியுமா. உங்களிடமிருந்து இப்படி ஒரு பதில் வருமென்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. வருத்தமாக இருக்கிறது.

மேலும் // மார்கஸ் போதவே போதாது அவருக்குப் பிறகான அத்தனை சிந்தனையாளர்களும் தேவை.//

அந்த சிந்தனையாளர்கள் யாரென்று சொன்னால் நிச்சயம் படிக்க வசதியாக இருக்கும். ஒருவேளை அவர்கள் பின்நவீனக் கருத்துக்கள், விளிம்பு நிலைச் சிந்தனைகள் என்ற அளவில் விமர்சித்து, பண்பாட்டுத் தளத்தினால விமர்சனங்களை மட்டும் முன்னெடுத்திருந்தாலும் பரவாயில்லை. அவர்கள் குறித்து நாம் பேசலாம்.

அதே போல்,

// மார்க்ஸை ஆழ்ந்து வாசித்த ஆயிரம் தலித் செயல்பாட்டாளர்களைப் பார்க்க முடியும். ஆனால் அம்பேத்கரை ஆழ்ந்து வாசித்த தலித் அல்லாத இடதுசாரிகள் எத்தனைபேர் இருப்பார்கள்?//

இந்தக் குறிப்பின் மூலம் நீங்கள் சொல்லுவது, அந்தளவுக்கு மார்க்சியர்கள் அம்பேத்கரை ஆய்வு செய்யவில்லை என்றே பொருள் கொள்கிறேன். நன்றி. ரங்கநாயகம்மா சம்பந்தமான இந்த நூலுக்கு இதுவரை வந்த பதில்களை ஒரு பருந்துப் பார்வையில் பார்த்தால், அதில் உங்களுக்கு ஒரு விசயம் கிடைக்குமென நம்புகிறேன்.

அம்பேத்கர் குறித்த ஒரு நூல் தெலுங்கில் 13 பதிப்புகள் வந்து ஆங்கிலத்திலும் வந்து இப்போது பதினாறு வருடங்களுக்குப் பிறகு தமிழில் வருகிறது. வந்ததும் முதல் குற்றச் சாட்டு அது ஆதிக்கசாதி போட்ட புத்தகம், புத்தகத்தை மொழிபெயர்த்தவர் ஆதிக்க சாதி, விலை குறைவாக இருக்கிறது, சதி, காசு வாங்கிக்கொண்டு போட்டிருக்கிறார்கள் என்ற விமர்சனங்கள்தான்.  வெட்ட வேண்டும் கொளுத்த வேண்டுமென்றெல்லாம் விமர்சனங்கள் வந்த போது அவர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது. அவர்களின் நூலறிவு என்ன விதத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். 

எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு விமர்சன நூலை ( நூல் வடிவில் இருப்பதால்) 
“ பீ ” என்று சொல்லும் அளவுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறது. தமிழில் இதுபோன்ற கறாரான விமர்சனங்கள் (!) வரும்போது, அம்பேத்கர் குறித்த விமர்சனங்களை ஆயிரம் புத்தகங்களை எப்படி முன்வைக்கமுடியும். கார்ல்மார்க்ஸை வப்பாட்டி வைத்தவர் என்று எழுதிய எழுத்தாளர்களும் தமிழில் இல்லாமல் இல்லை. அப்பொழுது மார்க்சியர்கள் யாரேனும் கொந்தளித்து இது போன்ற பீ விமர்சங்களைச் சொன்னார்களா எனத் தெரியவில்லை. ஏன் மார்க்ஸ் ஜெர்மன்காரர், வெளிநாட்டுக்காரர் என்ற அளவிலும் விமர்சன அறிவு வேலைசெய்த சமூகம் நம் தமிழ்ச் சமூகம் என்பது நீங்கள் அறியாததல்ல.

மார்க்சை ஆழ்ந்து கற்ற ஆயிரம் பேரெல்லாம் வேண்டாம். குறிப்பாக இரண்டு பேரைச் சுட்டினால் போதும். ஏன் கம்யூனிசத்தையும் பௌத்தத்தையும் முன்வைத்து தனது விமர்சனங்களை எழுதிய அம்பேத்கரையே முன்மாதிரியாகக் கொண்டு நீங்கள் உரையாடலாம். (நீங்களாவது மார்க்ஸை கற்றிருக்கிறீர்களா)
மார்க்ஸை ஆழ்ந்து வாசிக்கும் அவசியம் தலித் சிந்தனையாளர்களுக்கு ஏன் வந்தது என்பதிலிருந்து, அப்படி வாசித்து அவர்கள் முன்வைத்த முடிவுகளை நீங்கள் வைக்கலாம். அப்படி வைக்கும் பட்சத்தில் அந்த முடிவுகள் நோக்கி நாம் நம் உரையாடலைத் தொடரலாம்.

மேலும் உங்களது பக்கத்தில்,  சமஸ்கிருத பாடத்திட்டம் குறித்து நீங்கள் வைத்த வாதங்களையும் உங்கள் பக்கத்தில் கண்டேன். அதில் நீங்கள் குறிப்பிட்ட வார்த்தைகள் என்னை சற்று யோசிக்க வைத்தது.

// புராணங்களையும் கட்டுக்கதைகளையும் வரலாறு என வலியுறுத்தி அதன் அடிப்படையில் வரலாற்றுப் பாடங்களை மாற்றி எழுதிவரும் பாஜக அரசு, தாய்மொழி வழிக் கல்வியை ஆதரிப்பதுபோல பாசாங்கு செய்துகொண்டே சமஸ்கிருதத்தை உயிர்ப்பித்து அதை இந்தியா முழுவதும் அனைவர்மீதும் திணிப்பதற்குத் திட்டமிடுகிறது.//

இது நிச்சயம் தவறான ஒன்றுதான். சஸ்கிருததத்தை அல்ல, எந்தக் கட்டுக்கதைகளையும் நம்பி ஒரு மொழியை திணிப்பது மாபெரும் தவறுதான். அதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதே சமயம் புராணக்கதைகளைக் கொண்டு, அதை வரலாறாக மதித்து, அம்பேத்கர் ஆய்வு செய்தத்தை எப்படிப் பொருள் கொள்வீர்கள். அம்பேத்கரின் புத்தமும் அவர் தம்மமும்- எந்த  பௌத்த தத்துவங்களை முன்வைத்து, எந்த பௌத்த நூல்களை முன்வைத்து ஆராய்ந்து எழுதியது என நீங்கள் விளக்கினால் மகிழ்வேன். ( சமஸ்கிருதம் குறித்து அம்பேத்கரின் கருத்துக்களையும் முன்வைக்கலாம்)

சிறுகுறிப்பு;

//ஒரு தலைவரை நினைவுகூர இரண்டு வழிகள் இருக்கின்றன. அவரை வணக்கத்துக்குரிய குறியீடாக மாற்றி அவரது பிறந்த நாளிலும் நினைவுநாளிலும் மாலை மரியாதை செலுத்துவது ஒன்று; அந்தத் தலைவரின் கொள்கைகளை உயிர்ப்புடன் சமூகத்தில் பரவச் செய்வது இன்னொன்று. அம்பேத்கரை நினைவுகூர்கிறவர்களில் பெரும்பாலோர் இதில் முதல் பிரிவைச் சேர்ந்தவர்கள். அதனால்தானோ என்னவோ திரும்பிய பக்கமெல்லாம் அவருக்குச் சிலைகள் இருக்கின்றன. ஆனால் அவரது சிந்தனைகளோ புறக்கணிக்கப்பட்டுக் கிடக்கின்றன.// இதுவும் நீங்கள் கூறியதுதான்.

நீங்கள் எந்த வகையை முன்மாதிரியாகக் கொள்ளப் போகிறீர்கள் தோழரே.


No comments:

Post a Comment

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள்  (hit-or-miss reformer...