Monday, September 12, 2016

புத்தனின் மதுக்குடுவை: சர்க்கம் 9

இதுவுமது

பித்தேறிய சொற்களின் மீது நின்றுகொண்டு மூத்திரம் பெய்யும் தூர்த்தன்.



 " கனவு ரணங்களைப் பார்வைக்கு வைக்கிறது. ஒரு எளிய பெண், அல்லது பெயர் சொல்லி விளக்கி விடமுடியாத சிறுமி. அல்லது தனிமைகளால் ஆன தனிமை. நாளும் புண்களை நக்கிக்கொண்டிருக்கும் ஊதாரி,  அல்லது ஊதாரித்தனமான துரோகி. சொற்களை மண்டியிட்டு நக்கியூரும் பிராணி. கடவுளைச் சாத்தான் வழிமறித்துக் கொன்றதற்கு ஒரு சாட்சி. "

சித்தார்த்தன் தன் நெடுவழிப் பயணத்தைத் தொடங்குகையில், தூர்த்தன் வஞ்சனையேறிய புன்னகையோடு வழிமறித்தான்.சித்தார்த்தன் தன் காமத்தை சதையில் ஊறும் தினவாய்  கண்டுகொண்டான். தூர்த்தன் ஞானம் பற்றிய முதல் கேள்வியைத் தொடுத்தான். பற்று எதிலிருந்து தொடங்குகிறது. எதில் முடிவடைகிறது. சித்தார்த்தன் புன்னகை பூக்கும் முன், தூர்த்தன் வழிசெல்லும் யுவதியின் தனங்களை எச்சில் ஒழுகப் பார்த்தான். சித்தார்த்தப் புன்னகை சீரழிந்தது. தூர்த்தன் மிக மெதுவாய்ச் சொன்னான். சித்தார்த்தனே.. உனது ஞானம் சதை மறுத்த ஒன்று. நான் சதைகளால் நாளும் ஞானத்தை மெறுகேற்றி வருபவன். வெற்றுப் புன்னகையால் உன் வார்த்தையின் வாட்களை ஒளித்து வைக்காதே.  வீசு ஒளி சிதற. நான் உன் எதிரியல்ல, இருப்பினும் எனக்கு சொற்கள் இருக்கிறது. தூர்த்தனின் பார்வையில் காமம் களங்கமற்று தூய ஒளியை உமிழ்வதைப் பார்த்தபடி சித்தார்த்தன் சொன்னான். தூர்த்தரே.... சதை தர்க்கத்தையும், தத்துவத்தையும் நாளும் மறுக்கிறது. சொற்களை நம்பும் உடல் தன்னை ஏமாற்றிக்கொள்ளுகிறது. சதையை சொற்களை வைத்து அறுப்பவன் ஞானவானாகிறான். புன்னகையோடு தூர்த்தன்… அப்படியென்றால் என் ஞானத்தை எதனடிப்படையில் விளக்குவாய் சித்தார்த்தனே. சித்தார்த்தன் மிக அமைதியாக அமரலாமா எனக் கேட்க, தூர்த்தன் எச்சில் வடிக்கும் புன்னகையோடு ஒரு சதை அமரசொல்கிறது என்றான். 


சித்தார்த்தனை நோக்கி தனது தூர்த்த விரலை நீட்டி, நீ அறிவாய் சித்தார்த்தனே ,சதைகள் ஞானத்தை கடைவாயில் அரைத்துக் கொண்டிருக்கையில், வழியும் எச்சிலில் எதிர்பால் ஊடுருவுவதை. உன் ஞானம் காமத்தை அறிய மட்டுமே நினைக்கிறது. துறக்க அல்ல, காமத்தை அறிந்தவன் மட்டுமே காமத்தை துறக்க முடியும், என்று நீ உன் கருப்பு விழியைச் சுற்றிச் சுழற்றி சொல்லலாம். ஆனால் அறிதல் என்பது இறுகக்கட்டியெறியப்பட்ட சொற்கள். அவிழ்த்தால் அர்த்தங்கள் தங்களது காலத்தை இழந்து, கலைந்து ஓடும். உன் மௌனத்தை, புன்னகையை, சொற்களை சதைகளால் தீர்மானிக்கும் அலகு காமமே.  காமம் மட்டுமே. 


உடல்களை மறுத்து நீ ஓடியொளியமுடியாது. உன்னிடம் இருக்கும் உடலை மட்டுமே நீ சோதிக்க முடியும்.  உடலையே அல்ல, தன்னுடலில் ஊறியேறும் காமத்தை அறிந்தவனே அதை மற்றொரு உடலில் காணவிழைகிறான். சொற்கள் ஆண் பெண் பேதம் விதிக்கிறது. ஈருடல் அதை கேளிக்கையாக்குகிறது. பேதங்களை சொற்கள்தான் உண்டு பண்ணுகின்றன. காமத்தை அல்ல. எந்த வார்த்தையில் விசையேறித் தைக்கலாம் என்பதை இவ்வுடலான அம்பு அறியும்.


 கேள் சித்தார்த்தனே, சலனம் அது குறையறிதல். காமத்திற்கு சலனம் ஒரு பொருட்டேயல்ல. அது ஒரு வெறுஞ்சொல். அர்த்தத்தைத் தேடி அலைபவன் உடலை இழக்கத் தொடங்குகிறான். காமத்தை அல்ல. இடம், பொருள், ஏவல் மூன்றையும் காமம் நிறைத்து வைத்திருக்கிறது. ஒரு சொல் இத்திசையில் சரியாகச் செலுத்தப்படும், எனும் கவிஞனைக் காமம் தன் அருகதையால் வெல்கிறது. சொற்கள் அர்த்தங்களை இழக்கும் அல்லது இழக்க வைக்கும். காமத்தை நீ விளக்கிவிட, உனக்கு உன் சொற்கள் துணைக்கு வராது. தூர்த்தன் நான்., எனக்கு காமம் ஒரு கருவி. நான் என்னையே வெல்ல நினைப்பது என்பது எனக்கு முன்னால் இருக்கும் உலகை, உன்னையும் சேர்த்து வெல்லுவதுதான். நான் அர்த்தங்களை மறப்பது, அல்லது ஏற்பதும் இதனால்தான் நிகழ்கிறது. என்னை வெறுப்பதற்கு நான் உன்னை இந்த உலகை வெறுக்கவேண்டும். என்னைச் சுற்றி எதுவுமேயில்லை. ஆம் சித்தார்த்தனே வரிகளில் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள்தான் புலன்களை காற்றில் அலைக்கழியும் பாய்மரமெனச் செலுத்துகிறது. சொற்கள் தங்கள் அர்த்தங்களை என்று ஏமாற்றுகிறதோ அன்று சூன்யம் மிக சரியான அலகில் உடலை வந்தடையும். தூர்த்தன் எனக்கு என்னுடலில் காமம் எங்கு குடி புகுகிறது என்று நான் ஒரு நாளும் அறிய முயன்றதில்லை. அமைதி. காமம் என்னை தின்றுவிட்டுப்போகச் சம்மதிக்கிறேன். மிருகங்கள் சொற்களை உருவாக்குவதில்லை. சொற்கள் மனிதர்களை உருவாக்கிவிடுகிறது. நீ ஞானம் எனும் சொல்லைத் தேடியலைகிறாய் அது மௌனம் எனும் சொல்லில் கொண்டு போய் விடுகிறது. பாத்திரம் அறியட்டும் சித்தார்த்தரே மழைநீரை. நீ உன் கரத்தால் அதை ஏந்திப் பிடித்தலையாதே. சொற்களைக் குவித்து வைத்து, முத்தமிட்டு, அவற்றின் அர்த்தங்களை நீ செலுத்த முனையாதே, நீ செலுத்தும் அர்த்தங்கள் அக்கணமே நிலைத்து நிற்கும். பின் அவ்வர்த்தத்தை விளக்க வேறொரு சொல்லைத் தேடி இட்டு நிரப்புவாய்.

சொற்கள்….சொற்கள்…பித்தேறிய சொற்கள். சொற்களின் எண்ணிகையையும், அர்த்தங்களின் எண்ணிக்கையும் கூட்டினால் அகராதி தனது எடையை இழக்கும். அர்த்தங்களினால் விளக்க முடிந்த சொல்லை நீக்கிவிட்டால் போதும். பேரமைதி. முற்றிப் பழுத்த சொல் சுக்காகும். சாறு ஆவியாகும் காத்திரு, முதலில் நீ சொற்களை மறக்கவும் துறக்கவும் வேண்டும். யசோதரையைத் துறந்தவனே, இது கேள் சொற்களைத் துறப்பது கடினம். முழுத் துறவு. உலகிடமிருந்து, முடிவாக உன்னிடமிருந்து. இப்பொழுது உன் மனைவி உன் ஞாபகத்தை வழி மறிக்கும் ஒரு சொல், ராகுலன் விளக்கத்தின் பொருட்டு வந்து நிற்கும் துணைச்சொல். சொற்களை இழக்க நீ வெகுதூரம் அலையவேண்டும் காண்பாய், நீ புத்தன் என்பதை, உன் விழிகளால். தூர்த்த விழிகள் மின்னி மறைய புத்தன் கண்விழித்தான். 



கனவு ரணங்களை பார்வைக்கு வைக்கிறது. ஒரு எளிய பெண், அல்லது பெயர் சொல்லி விளக்கி விடமுடியாத சிறுமி. நாளும் புண்களை நக்கிக் கொண்டிருக்கும் ஊதாரி, அல்லது ஊதாரித்தனமான துரோகி. சொற்களை மண்டியிட்டு நக்கி ஊரும் பிராணி. கடவுளைச் சூன்யம் வழிமறித்துக் கொன்றதற்கு ஒரு சாட்சி.
                                                                                        ...

No comments:

Post a Comment

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...