நான்
நடந்துகொண்டிருந்தேன்
எப்போதாவது பறவைகள்
நடக்குமென்று
இக்கணத்தில் நான் சொல்லப்போவதில்லை
அதிகாரங்களை
சாலைகள்தான் தொடங்கிவைக்கின்றன
ஆலயங்களையும் எழுப்புகின்றன
உண்மையில்
பிச்சைக்காரர்கள் என்பதற்குமேல்
மனிதர்களிடம் வீசியெறிய வேறு சொல் இல்லை
அரசுகள்
தங்களின் வார்த்தைகளின் மூலமாகவே சுவாசிக்கின்றன
அரசுகள்
அதிகாரிகள்
அனைவரும் வார்த்தைகள் கிடைக்காது தவிக்கும்போது
அரசியல் சற்றுத் தடுமாறுகிறது
விலைபோகிறவர்கள் அதை சமன் செய்கிறார்கள்
நூலகத்துக்குச் செல்லும் வழியில்
குற்றவியல் நீதிமன்றமும்
சற்றுத் தள்ளி
அமைச்சகமும்
அப்பால்
இறுதியாக நூலகம்
கல்லறைத் தோட்டத்துக்கு அருகில் இருக்கிறது
அருமையான தேர்வு
நூலகத் தூசுக்களை சுவாசித்தபடி
எண்ணற்ற இதயங்கள் அங்கு இருமிக்கொண்டிருக்கின்றன
அரசுக்கு இணையானதுதான் கல்லறையும்
இரண்டிலும்
அவ்வப்போது
சாவமைதி ஏற்படும்
எல்லோரும் அமைதியாய் இருந்தால்
அதை
மயான அமைதி என்றுதான் நான் கூறுவேன்
மேலும்
எல்லோரையும் அமைதியாய் இருக்கச்சொல்லும்
ஒரு நாட்டை
கல்லறைத் தோட்டம் என்றழைப்பதில் எனக்கு
மாற்றுக்கருத்து இல்லை.
No comments:
Post a Comment