Sunday, November 12, 2017

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.





மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து -
பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள் 
(hit-or-miss reformers)

“ மார்க்சின் இயங்கியல் பொருள்முதல்வாதத்துடன், அம்பேத்கரின் சாதி ஒழிப்பு இயக்கத்தை இணைப்பதென்பது இந்தியப் புரட்சிக்கு ஒரு பரந்த பாதையை இடும் என்று கே.ஜி. சத்தியமூர்த்தி கருதுகிறார். ரங்கநாயகம்மாவுக்குப் பதிலாக அவர் எழுதிய ‘அம்பேத்கர் என்னும் சூரியன்’ எனும் தத்துவார்த்த ஆய்வறிக்கையில், இந்த அம்சத்தை அவர் விரிவாக விளக்கியுள்ளார்.” (ஆந்திர ஜோதி, ஏப்ரல் 30).

கடந்தகாலத்திலும் சரி, இன்றைக்கும் சரி ‘அம்பேத்கர் என்னும் சூரியன்’ நூலை எனது நூலுக்கான பதிலாக நான் கருதவே இல்லை. ஆனால், அந்த நூல் மார்க்ஸையும், அம்பேத்கரையும் கலப்பது எனும் மாபெரும் ‘தத்துவார்த்த ஆய்வாக’ முன்வைக்கப்படுவதால், அதில் உள்ள சில பகுதிகளுக்கு மட்டும் பதிலளிக்க விரும்புகிறேன்.

சத்தியமூர்த்தி (மக்கள் யுத்தக் கட்சி, சிபிஐ-எம்எல்லின் ஒருமுறை செயலாளர், பின்னர் அவர் பிஎஸ்பியில் சேர்ந்தார், பின்னர் பஹுஜன் குடியரசு கட்சியில் சேர்ந்தார், அதன் பின்னர் பல அமைப்புகளில் இருந்தார். சமீபத்தில் காலமானார்). தங்களுக்கு விருப்பமான வகையில் மண்ணுக்கேற்ற மார்க்சியம் அல்லது தேசிய மார்க்சியம் என்றெல்லாம் வளைக்க முயற்சிக்கும் ஏனோதானோவென்று அறிவொளி பெற்ற சீர்திருத்தவாதிகளுள் ஒருவர்.

தொழிலாளர்வர்க்கம் வர்க்கப் போராட்டம் தொடுப்பதன் மூலம் சுரண்டல்வாத வர்க்க உறவுகளையும், சுரண்டல்வாத உழைப்புப் பிரிவினையையும் ஒழிக்க வேண்டும் என்று மார்க்ஸின் மார்க்சியமானது வலியுறுத்துகிறது. இந்தக் கோட்பாட்டின்படி, வர்க்க முரண்பாடு நிலவும் எந்த ஒரு நாட்டிலும் வர்க்கப் போராட்டமே தொழிலாளர் வர்க்கத்தின் பிரதானக் கொள்கையாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட நாட்டின் குறிப்பிட்ட பிரச்சினையானது, அந்தப் பிரதானக் கொள்கையால் ஆளப்பட்டு, அடிப்படை நிலைமைகளை மாற்றியமைப்பதன் மூலம் மட்டுமே தீர்க்க முடியும்.

பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் விளைவால், சுரண்டும் வர்க்கமும் உற்பத்தியாளர்களாகி, தம் உழைப்பில் வாழத் தொடங்கும். எஜமானர்-தொழிலாளர் உறவுகள் மறையும். இந்த உண்மையை வலியுறுத்தும் மார்க்ஸின் கோட்பாட்டை சுரண்டும் வர்க்கம் நிராகரிப்பதில் வியப்பேதுமில்லை. ஆனால், உழைப்புச் சுரண்டலை ஒழிக்கச் சொல்லும் அக்கோட்பாட்டை இந்தியாவின் பெரும்பான்மை தொழிலாளர் வர்க்கங்களான பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கூட ஏற்காதது வியக்கத்தக்கதே. ஆனால் அவர்களின் தலைவர்கள் இதைப் பற்றி ஏதும் கற்றுக்கொடுக்காததே இந்த நிராகரிப்புக்குக் காரணம். பூர்ஷுவாமயமாதலே அவர்களின் இலக்கு! சுரண்டல் முறையிலேயே முன்னேறுவது. இது காரணமில்லையென்றால், மார்க்சியத்தை இத்தனை தூரம் அவர்கள் எதிர்க்க வேண்டிய அவசியமே இல்லை.

இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாடுகள் பிடிக்கவில்லையெனில் அத்தகைய தலைவர்கள் தாமாக மார்க்சியத்தைப் படித்து, தங்களுக்கென ஒரு கம்யூனிஸ்ட் அமைப்பை உருவாக்கலாம், தங்களின் மக்களுக்கு அதைக் கற்றுக் கொடுத்து, தங்களின் முன் இருக்கும் புரட்சிகர இலக்கைப் புரிய வைக்கலாம். மார்க்சியம் ஒன்றும் ஏற்கனவே இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சொத்தல்ல.

சத்தியமூர்த்தி போன்ற ஒரு தலைவரை நாம் எடுத்துக் கொண்டால், அவருடையது ஒரு கோட்பாடல்ல, முரண்பாடான இரண்டு கோட்பாடுகளின் கலவையாகும். ஒருபுறம், அவர் அம்பேத்கரின் மார்க்சிய எதிர்ப்பை தழுவிக் கொள்கிறார்  அதேவேளை பொதுமக்களிடம் மார்க்சியத்திற்கு இருக்கும் ‘மவுசை’ அவரால் தட்டிக் கழிக்கவும் முடியவில்லை. இத்தகைய தலைவர்கள் மார்க்சியத்தை முழுமையாக கைவிட மாட்டார்கள். அதனால் அவர்கள் சில புத்திசாலித்தனமான தீர்வுகளுக்கு வருகின்றனர்.

இந்த நாட்டில் கிடைக்கும் உடனடித் தீர்வு என்னவெனில், அம்பேத்கரையும், மார்க்ஸையும் இணைப்பது! அல்லது தேவைப்பட்டால் இந்தக் கலவையில் காந்தியையும் கலப்பது!

பெயர்கள் தானே எத்தனை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். சரி, கோட்பாட்டளவில் அந்த இரண்டையும் கலக்க முடியுமா? இணைக்க முடியுமா?

மார்க்சின் கோட்பாடு என்னது? உழைப்புச் சுரண்டல் உறவுகளை ஒழிப்பது. வர்க்கப் போராட்டம் வன்முறையல்ல. உழைப்புச் சுரண்டலைத் தொடர்வதற்காக எஜமானர்கள் தொடுக்கும் வன்முறையை நிறுத்துவதற்காகத் தேவைப்படும் வன்முறை அது. தொழிலாளர் வர்க்கத்திற்கான தற்காப்பு தவிற வேறெதுவுமில்லை. பழைய முரண்பாடான நிலைமைகளை மாற்றியமைத்தாலன்றி  வர்க்க உறவுகளிலிருந்து எழும் குறிப்பிட்ட எந்தப் பிரச்சினையையும் தனியாகத் தீர்க்க முடியாது. மார்க்சிடம் மதமில்லை. அவருடையது பொருள்முதல்வாதமாகும்.

அம்பேத்கருடையக் கோட்பாடு என்னது? வர்க்கப் போராட்டமே தேவையில்லை! சீர்திருத்தம் இருக்கிறது. சாதி கூடாது! மதம் அவசியம். அதை நாம் சீர்திருத்துவோம்! ஆன்மீகத்தைக் கைவிடக் கூடாது. சாதியை ஒழித்த பின்னர் நாம் வர்க்கம் பற்றி கவலைப்படுவோம்!

காந்தியின் கோட்பாடு என்னது? தொழிலதிபர்களைத் தொடாதீர்கள்! அவர்கள்தான் அனைத்து சொத்துகளின் தர்மகர்த்தாக்கள்! இந்த தர்மகர்த்தா முறை மூலம் உழைப்பாளர்களை பெருந்தன்மையோடு நடத்தினால் போதும். அப்படியென்றால் சாதி? நாம் தீண்டாமையைக் கைவிட வேண்டும். சாதி எப்போதும்போல் இருக்கட்டும். சலவைத் தொழிலாளி எப்போதும் சலவையே செய்யட்டும், கழிப்பறை தூய்மை செய்பவர் எப்போதும் கழிப்பறையையே தூய்மை செய்யட்டும், அதேபோல் பிராமணர் அவருடைய வேலையை செய்யட்டும். இது எவ்வளவு நல்லது! இந்துமதத்தில் என்ன தவறு இருக்கிறது, அது அற்புதமான மதம்! வாருங்கள் நாம் ராமரையும், அல்லாவையும் ஒன்றாகப் புகழ்ந்து பாடுவோம். போராட்டமா? கூடாது! கூடவே கூடாது! அது வன்முறையானது. இருப்பினும், அரசாங்கத்திற்கு காவல்காரர்களும், இராணுவ வீரர்களும் தேவை. அது வன்முறையாகாது.

அப்படியென்றால் வர்க்கப் போராட்டம்? அது கொடுமையான வன்முறை.

இப்போது, நாம் இம்மூன்று கோட்பாடுகளையும் அல்லது இரண்டையாவது இணைக்க வேண்டும். சரி இணைப்போம்! ஒன்றுகலக்குமா?

அம்பேத்கரின் கோட்பாடு: காந்திக்கு எதிரானது. மார்க்ஸுக்கு எதிரானது.
காந்தியின் கோட்பாடு: அம்பேத்கருக்கு எதிரானது. மார்க்ஸுக்கு 
எதிரானது.



மார்க்சின் கோட்பாடு: இரண்டிற்கும் எதிரானது.
                                  
வர்க்கக் கலப்பு மற்றும் சீர்திருத்தத்தவாதத்திற்கு எதிரானது.

புத்தரை எடுத்துக்கொண்டால், அவருடைய அஷ்டாங்க மார்க்கம், ஒன்றுக்கும் உதவாது.

இவற்றில் எந்த இரண்டையும் ஒன்றாகக் கலக்க முடியாது என்பதை இக்கோட்பாடுகளுக்கிடையில் உள்ள முரண்பாடுகளை அறிந்தவர்களுக்குத் தெரியும். அதை அறிந்தவர்கள் என்ன சொல்ல வேண்டும்? காந்தியின் கோட்பாடு பயனற்றது என்று தூக்கி எறிய வேண்டியும்.

அம்பேத்கரின் கோட்பாட்டிலிருந்து ‘சாதி ஒழிப்பு’ எனும் அம்சத்தை எடுத்துக்கொள்ள வேண்டும், ஆனால் சாதியை ஒழிப்பதற்கு, உழைப்புசார் உறவுகளை தலைகீழாக மாற்றியமைக்கும் இலக்கைக் கொண்ட வர்க்கப் போராட்டத்தால் மட்டுமே முடியும். கீழ்நிலை சாதிகளின் பொருளாதார நிலைமைகளை மாற்றியமைக்காமல் சாதி ஒழிப்பு சாத்தியமில்லை.

எல்லாவற்றிலும் ஒரு தர்க்கம் இருக்கும். அந்தந்த தர்க்கத்தின்படி, ஒற்றுமையும், முரண்பாடும் உருவாகின்றன. ‘குறிப்பிட்ட பிரச்சினைகள் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தினால் மட்டுமே தீர்க்க முடியும்’ என்று சொல்லக்கூடிய ஒரு கொள்கையை, ‘சாதியை ஒழித்த பின்பு மட்டுமே வர்க்கப் பிரச்சினையைக் கையில் எடுக்க வேண்டும்’ என்று சொல்லும் மற்றொரு கொள்கையை எப்படி இணைக்க முடியும். சத்தியமூர்த்தி போன்ற அறிவுஜீவிகளுக்கு எதுவும் சாத்தியம். தர்க்க நியாயங்கள் எதுவும் தேவையில்லை. அவரைப் பொறுத்தவரை, அம்பேத்கரையும், மார்க்ஸையும் இணைக்க முடியும். இரண்டையும் ஒரு கோட்பாடாக்க முடியும். பிறகு, மார்க்சியத்தை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் மாற்றலாம். போராட்டங்களைக் கைவிட்டு, கூட்டிணைப்புகளை விரிவுபடுத்தலாம். மார்க்சியத்தை நாம் மண்ணுக்கேற்ற மார்க்சியமாக மாற்ற வேண்டும். அதுதான் நமது நாட்டின் தேவை. அதாவது, மார்க்சியம் ஜெர்மனியில் ஜெர்மானிய மார்க்சியமாகவும், இங்கிலாந்தில் ஆங்கிலேயே மார்க்சியமாகவும், ஃப்ரான்சில் ஃப்ரெஞ்சு மார்க்சியமாகவும் இருக்கும். அதேபோல், இந்திய மார்க்சியம் என்று ஒன்று வேண்டும். நாட்டுக்கும், பிராந்தியங்களுக்கும் ஏற்றார்போல் மார்க்சியம் வர்க்கப் போராட்டத்தைக் கைவிட வேண்டும்.

நமது மண்ணுக்கேற்ற மார்க்சியமானது அம்பேத்கர், புத்தர் மற்றும் மார்க்சின் கலவையாக இருக்கும். காந்தி பக்தர்கள், ‘காந்தியையும் நாம் இணைத்துக் கொள்ள வேண்டும்!’ என்பார்கள். சாய்பாபாவின் பக்தர்கள் ‘பாபாவையும்’ சேர்த்துக் கொள்ளச் சொல்வார்கள்.

இது எப்படி ஒரு விவேகமுள்ள இணைப்பாக இருக்க முடியும்?  வெகு காலத்திற்கு முன்னரே அந்நிய நாடுகள் இதனை முயற்சித்துள்ளன! காலதாமதாமகவும், புத்திசாலித்தனத்துடனும் சத்தியமூர்த்தி மார்க்சியத்தை மண்ணுக்கேற்ற மார்க்சியமாக்குகிறார். ஆனால் அவர் தனது அறிவை சற்று குறை அறிவோடு வெளிப்படுத்தியிருக்கிறார். புத்தர், அம்பேத்கர் மற்றும் மார்க்ஸையும் சமன்படுத்தி, ‘இம் மூன்று மாபெரும் ஆளுமைகளும்’ (திருமூர்த்திகள்) சுரண்டலும், ஒடுக்குமுறையுமற்ற ஒரு சமூகத்தைக் கனவு கண்டவர்கள், தத்துவவாதிகள் என்றார். ஆனால் பாருங்கள், மூவரையும் ஒப்பிட்டவர் அம்பேத்கரை மட்டும்தான் ‘சூரியன்’ என்கிறார்! (’அம்பேத்கர் எனும் சூரியன்’ நூலைப் பார்க்கவும், அந்தப் புகைப்படங்கள் இருக்கும் பக்கத்தில் எண் இல்லை) ‘புத்தரும் அம்பேதகரும் சுரண்டலற்ற, ஒடுக்குமுறையற்ற சமூகங்களைக் கனவு கண்டார்களா’ எனும் கேள்வியை நான் ஒதுக்கிவிடுகிறேன். அதுபற்றி ஏதும் கேட்கக்கூட மாட்டேன். மூவரும் சமமான சிந்தனையாளர்கள் மற்றும் மாபெரும் ஆளுமைகள் என்றால், அதெப்படி அம்பேத்கர் மட்டும் ‘சூரியன்’ ஆனார்? அப்படியென்றால், புத்தர் யார்? அவர் இரண்டாம் சூரியனா? மார்க்ஸ் யார்? மூன்றாம் சூரியனா? மூவரும் சமம் என்று சொல்லிவிட்டு அம்பேத்கரை மட்டும் ’சூரியன்’ என்று சொன்னால், இதுபோன்ற கேள்விகள் எழாதா? ‘மூவரும் சூரியன்கள்’ என்று அவர் சொன்னால், ‘பூமியில் மூன்று சூரியன்கள் அல்லது இரண்டு சூரியன்கள் இருக்கிறதா’ எனும் கேள்வி தொடருமே! சரியோ தவறோ, ‘மூன்று சூரியன்கள்’ என்று ஏன் அவர் சொல்லவில்லை?

கன்ஷிராம் மற்றும் மாயாவதி போன்ற தலித் தலைவர்களின் பார்வையில் அம்பேத்கர் சூரியனாக இருப்பது சரி, ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை அம்பேத்கர் மட்டுமே இருக்கிறார், மார்க்ஸ் இல்லை. ஆனால், சத்தியமூர்த்தியின் வாதப்படி, ஒற்றைக் கண் பார்வையுடைய அறிவுஜீவி இல்லை அவர். மூன்று கண் பார்வை கொண்டவர்! அம்பேத்கர் என்னும் சூரியனை அவர் எப்படி சூரியனல்லாத புத்தர் மற்றும் மார்க்ஸுடன் ஒப்பிட்டார்? மற்ற இருவருக்கும் மேலாக அம்பேத்கரை வைத்திருந்தால் மட்டுமே அம்பேத்கர் சூரியனாக முடியும். ஒட்டுமொத்த சமூகத்தையும் தம் வெளிச்சத்தால் நிரப்பும் சூரியன் அம்பேத்கர்! புத்தரும், மார்க்ஸும் அம்பேத்கரின் இடம், வலம் என்று அருகில் நிற்கலாம். அப்படி இருந்தால் மட்டுமே அம்பேத்கர் சூரியனாக இருக்க முடியும்.

சத்தியமூர்த்தி கம்யூனிஸ்ட் கட்சியை கைவிடலாம் பரவாயில்லை, ஆனால் அவர் கம்யூனிசத்தையும் கைவிட்டு அடையாள அரசியலை தம் முக்கிய குறிக்கோளாகக் கைகொண்டார். ஒவ்வொரு அடையாளக் குழுக்களும் வெவ்வேறு பிரிவுகள். அவரவருக்கு சொந்தப் பிரச்சினைகள் உள்ளது. குறிப்பிட்ட பிரச்சினையைத் தீர்க்க குறிப்பிட்ட இயக்கங்கள் தேவை! அது நியாயமானதே. ஆனால் அத்தகைய அடையாளக் குழுக்களிடம் என்ன தீர்வு இருக்கிறது? பூர்ஷுவாமயமாதல்!

பூர்ஷுவாமயமாதல் மட்டுமே மார்க்சியத்திலிருந்து வர்க்க உணர்வை பிரிக்கக் கூடியது. நாம் பூர்ஷுவாக்களாக வேண்டும்! நாம் பூர்ஷுவா ஆட்சியாளர்களாக வேண்டும்! அது நடந்தால் அது ஒரு தலித் அறிவுஜீவிக்கு நல்லது. ஒரு தலித் முதலாளி ஆனால், தனக்குக் கீழ் ஆயிரக்கணக்கான தலித்துகளை தொழிலாளர்களாக அமர்த்தி சுரண்டிப் பிழைப்பது அவருக்கு ஆனந்தம் தரலாம். இத்தகைய குறுங்குழுவாத இயக்கங்கள் அத்தகைய தலித் வளர்ச்சியையே விரும்புகின்றன.

அடையாள, குறுங்குழுவாத இயக்கங்களின் செயல்பாட்டாளர்கள் தங்களுடைய பாத்திரம் என்ன, தங்களுடைய இடம் என்ன என்பதை மறந்துவிடுகிறார்கள். சமத்துவமற்ற உற்பத்தி உறவுகளில் அவர்களுடைய அடையாளக் குழு சிறைபட்டுக் கிடப்பதை அவர்கள் உணர்வதில்லை. தமது குழுக்கள் சுதந்திரமானவை, தங்களுடைய பிரச்சினைத் தனியானது மற்ற பிரச்சினைகளோடு தொடர்பில்லை, ஆகவே தனியான தீர்வைப் பெற முடியும் என்று அவர்கள் கனவு காண்கிறார்கள்.

பூமியானது, தன்னைத் தானே சுற்றி வருவதோடு, சூரியனையும் சுற்றி வருகிறது. இயற்கை விதி அது. ஒவ்வொரு குழுக்களுக்கும் அத்தகைய சட்டம் பொருந்தும். ஒவ்வொரு குழுக்களும் தங்களுடைய குறிப்பிட்ட பிரச்சினையைச் சுற்றி வருவதோடு, தனது வர்க்க உணர்வையும் சுற்றி வரவேண்டும். இல்லையென்றால் எந்த அடையாள-சூரியனும் எந்த அடையாளக் குழுக்களையும் காக்க இயலாது.

தலித் சாதிகளுக்காக அம்பேத்கர் எனும் சூரியன் ஏற்படுத்திய இடஒதுக்கீடு எனும்  வெளிச்சம் எத்தனை காலம் தொடரும்? உலகம் இருக்கும் வரையிலுமா? அப்படியென்றால் கீழ்நிலை சாதிகளும் அப்படியே இருக்க வேண்டும் இல்லையா? சாதி இருந்தால் மட்டுமே இடஒதுக்கீடு இருக்கும், இல்லையா?

ஆனால், இடஒதுக்கீடு என்பதும் ஒருவகையான பாகுபாடே. அது சுய-மரியாதை இன்மையைக் காட்டுகிறது. இடஒதுக்கீட்டை தற்காலிக நிவாரணமாகக் கருதி நிரந்தர தீர்வை நாம் தேடிப்போக வேண்டாமா? இல்லை இடஒதுக்கீட்டை நிரந்தரமாக்கி, கீழ்நிலை சாதிகளின் நிலையையும் என்றென்றைக்கும் தக்கவைக்கப் போகிறோமா?

சரி, இடஒதுக்கீடு என்பது தற்காலிக நிவாரணம் என்றால் சாதியமைப்பை ஒழிக்க நிரந்தரத் தீர்வு என்னது? கலப்புத் திருமணங்கள் ஒரு தீர்வு என்று அனைவருக்கும் தெரியும். சரி, கலப்புத் திருமணங்களைச் சாத்தியப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்? இதற்குப் பாதை தெரிய, ஒரு நூறு கலப்புத் திருமணங்களையாவது ஆய்வு செய்ய வேண்டும். (அம்பேத்கருடையதையும் சேர்த்து). என்னக் காரணங்களால் அந்த கலப்புத் திருமணங்கள் சாத்தியமாயிற்று என்று பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த சமூகத்திலும் கலப்புத் திருமணங்கள் நிகழ்வதற்கான நிலைமையை உருவாக்குவது அவசியம். இதுவே சாதி ஒழிப்பிற்கு நிரந்தர தீர்வு, இல்லையா?

மார்க்சியத்தை மண்ணுக்கேற்ற மார்க்சியமாக மாற்ற நினைக்கும் அறிவுஜீவிகள் கொஞ்ச நஞ்சமல்ல. அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் அவர்களைக் காணலாம். புச்சலப்பள்ளி சுந்தரைய்யாவை ‘மார்க்சிய காந்தி’ என்று குறிப்பிட்ட ஒரு கட்டுரையை சமீபத்தில் படித்தேன். ஒரு மார்க்சியருக்கும் காந்திக்குமான ஒப்புமைதான் சாத்தியமா? காந்தியின் எளிமையைப் பராமரிப்பதுதான் உண்மையில் மிகவும் செலவுமிக்கதாக இருக்கிறது என்று ஒருமுறை சரோஜினி நாயுடு குறிப்பிட்டதை இந்தக் கட்டுரையாளர் கேள்விப்பட்டதில்லையா? பகத்சிங்கின் மரணதண்டனைக்கு காந்திதான் காரணமாக இருந்தார் என்பது அவருக்குத் தெரியாதா? இளம் பெண்களை நிர்வாணமாக அருகில் படுக்கச் செய்து, ‘நான் எனது பிரம்மச்சரியத்தை பரிசோதிக்கிறேன்’ என்று தார்மீகக் கொள்கைகளை உதிர்த்ததை அவர் அறியமாட்டாரா? எந்த வகையில் காந்தி ஒரு உதாரணப் புருஷர்? சுந்தரைய்யாவை காந்தியோடு ஒப்பிடுவது எப்படி அவரை கௌரவிப்பதாகும்? கம்யூனிஸ்ட் கட்சிகள் இதற்கெல்லாம் வெட்கப்படுவதே இல்லை. மற்றவர்களின் விமர்சனங்களுக்கு செவிமடுப்பதில்லை எனும் அளவுக்கு பிடிவாதம் கொண்டவர்களாகி விட்டனர். தங்களது கூட்டங்களுக்குப் பெரும் மரியாதையுடன் பூர்ஷுவா அமைச்சர்களை கூப்பிட்டு மகிழ்கின்றனர். இத்தகைய பழக்கங்கள் அனைத்தும் மார்க்சியத்தை பூர்ஷுவா மார்க்சியமாக மாற்றுவதற்கான வெளிப்பாடுகளே.

பூர்ஷுவாமயமாக்கப்பட்ட கம்யூனிஸ்டுகளை பாட்டாளி வர்க்கம் சகித்துக் கொண்டால், அதற்கு மண்ணுக்கேற்ற மார்க்சியம் அல்லது தேசிய மார்க்சியம் கிடைக்கும். அது, பூர்ஷுவா ஆட்சியாளர்கள் பெருந்தன்மையுடன் அனுமதிக்கும் சட்டபூர்வ மார்க்சியமன்றி வேறில்லை. அதன் விளைவாக நாம் எங்கிருக்கிறோமோ அங்கேயே இருப்போம்: அடையாளக் குழுக்கள் அதே கீழ்நிலை உடல் உழைப்பிலும்; பெண்கள்  சமையலறையிலும்!

எந்த சூரியனும் நம்மைக் காக்க இயலாது. மார்க்சியம் பூர்ஷுவாமயமாக்கப்பட்ட பின்பு சூரியன் என்ன செய்கிறதென்று பார்ப்போம்!



                                                                             - ரங்கநாயகம்மா

No comments:

Post a Comment

இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...