Wednesday, November 1, 2017

த.மு.எ.க.ச என்னும் முகமூடிக்குப்பின் ஒளிந்திருப்பவர்கள் யார் ?




த.மு.எ.க.ச : தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்


தோழர்களே...

கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, இலக்கியமோ, தத்துவமோ, அல்லது தங்களது சொந்த நிலைப்பாடுகளைக் கூடச் சொல்வதாக இருந்தாலும், அது கட்சிக்கு விரோதமாகிவிடுமோ என்ற எச்சரிக்கையோடு, கட்சிக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும் பல தோழர்களை நான் சிபிஎம்மில் கண்டிருக்கிறேன். ஒரு வகையில் தங்களது கருத்துக்களை, அவர்கள் எத்தனை நாளைக்கு மூடி வைக்கப் போகிறார்கள், அல்லது நடைமுறை சார்ந்து, உள்கட்சி விவாதமாகவாவது அவர்களது கருத்தை முன்னெடுப்பார்களா என்று அவர்களிடம் கேள்விகளையும் வைத்திருக்கிறேன்.

சில தோழர்கள், தங்களது முடிவுகள் கட்சிக்கு எதிராக இருந்தாலும், கட்சி சொல்வதே எங்களது இறுதி இலட்சியம், அதுவே எங்களது வழிகாட்டி. மேலும் தங்களது கட்சி ஒரு போதும் தவறு செய்யாது என்று நம்பிக்கையுடன் கூறுவதும் உண்டு. அத்தகைய தோழர்கள் இன்று வரை சிபிஎம் கட்சியில் உண்டு. அது கட்சிக்கும், கட்சியின் திட்டத்திற்கும், வழிகாட்டுதலுக்கும் கட்டுப்பட்டு நிற்கும் ஒரு ஒழுங்கமைந்த பகுதி. கட்சியின் மீதான நற்புரிதலை மக்களுக்கு முன்வரிசையில் காட்டும் முகம்.

ஆனால் இப்பொழுது, பொது வெளியில், தங்களுக்கு எந்த இடமும் கிடைக்காத அடையாளப் பிரச்சினையில், தமுஎகச  அமைப்பை விசிட்டிங் கார்டாகவும், கம்யூனீஸ்ட் என்பதை ஒரு அடையாள பிரச்சினையாகவும் முன்வைத்து, தங்களுக்கான ஒரு இடத்தை அதில் உறுதி செய்தவர்களே, அங்கு நிறைந்துகொண்டிருக்கிறார்கள்.

வெற்றுக்கோஷங்களை தத்துவ முகத்தோடு வைக்கையில், அது இலக்கிய முகமாகவும், விருதுக்கு உரியதாகவும் தேர்தெடுக்கப்படுகிறது.  அப்படி விருது வாங்கிய பலர், விருது கொடுத்த அமைப்பின், இலக்கிய முகத்தை தங்களது அவதூறான எழுத்துக்களின் மூலமே சாட்சியமும் கூறி வருகின்றனர்.

மிகக் குறிப்பாக, அங்குள்ள பலருக்கு மார்க்சியத்தின் அடிப்படைக் கல்வி கூட கிடையாது. தேனி தமுஎகசவின் மாவட்டச் செயலாளராகவும், மாநில அளவில் உயர்ந்த பொறுப்புகளிலும் இருந்த தோழர் சீருடையானிடம், இராஜதுரை குறித்து உரையாடியதில், ராஜதுரை, செம்மலரில் இரண்டு கட்டுரைகள் எழுதியிருந்தார், அதை நான் படித்தேன், அதனால் அவரை மார்க்சிய அறிஞர் என்றே சொல்லுவேன் என்கிறார். கிட்டத்தட்ட தத்துவ வாசிப்பைக் கொன்றே விட்டார்கள்.


அடையாளம் வேண்டி வரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவே, அடிக்கடி கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அப்படி அடையாளப் பிரச்சினையில் உள்ளவர்கள், தங்களது அடையாளங்களை முன்னிருத்த, தொடர்ந்து தங்களது இலக்கியப் பிரச்சாரத்தை அவதூறுகளாக, ரசிகர் மன்ற பாணியில் மட்டுமே முன்வைப்பார்கள். தமுஎகசவிலிருந்து சிபிஎம் கட்சிக்கு ஓரிரு தோழர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையும் கட்சிக்குப் பொய்த்துப் போனது. வந்த ஒரு சிலரும் தங்களது அடையாளத்தை வெற்றிகரமாக அங்கு நிறுவியே விட்டார்கள்.

மேலும் இத்தகையோருக்கு, தமுஎகசவில் இருந்தாலே, அது ஒரு புரட்சிகரமான இலக்கிய செயல்பாடாகிப் போனதால், அங்கு மார்க்சியம் கற்கவேண்டிய அடிப்படையும் அவர்களுக்கில்லை. அதன் விளைவு சிபிஎம் கட்சி குறித்தும், மார்க்சியம் குறித்தும் அவர்களுக்கு அறிய வேண்டிய அவசியமில்லாமல் செய்துவிட்டது. தமுஎகச என்ற இலக்கிய அமைப்பு, சிபிஎம்மின் வெகுஜன அமைப்பு என்று கூடத் தெரியாத தமுஎகச தோழர்கள் பலர் அங்கு இருக்கின்றனர். அதே சமயம் சிபிஎம் கட்சியும், அதை ஒரு இலக்கிய அமைப்பாக மட்டுமே கருதுவதால் அவதூறாளர்கள் மீதான தனது தலையீடையும் தவிர்க்கிறது.

ஆக, இதுபோன்ற அடையாளப் பிரச்சினையில் உள்ளோருக்கு, முற்போக்கு முகமும், கம்யூனிஸ்ட் என்கிற அடையாளமும் இரட்டிப்பாகக் கிடைக்கிறது. இவர்கள் வெகுஜன மத்தியில் அறிமுகப்படுத்துவது, தங்களது அடையாள  இருப்பன்றி வேறும் எதுவும் இல்லை.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு வேண்டுமென்றால், தமுஎகசவை முன்னிருத்தியும், கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர் அட்டை வைத்துக்கொண்டும் அவதூறு செய்பவர்கள், மார்க்சியம் குறித்து பொருட்படத்தக்க நாலு பத்தியையாவது  எழுதியிருக்கிறார்களா என்று பார்த்தால் எதுவும் இல்லை. தங்களை முன்னிருத்தும் அவதூறு பாணியிலான, இலக்கிய அடையாளத்தை முன்வைத்து நகர்வதே இவர்களது பிரதான பணி.

கட்சியின் தத்துவார்த்த முகத்தை, சிபிஎம் கட்சியின் அதிகாரப் பூர்வமான நிலைப்பாடுகளை, தமுஎகசவின் இலக்கிய முகத்தை, இந்த அவதூறாளர்கள். தங்களது அடையாள அரசியலின் மூலம், பொதுவெளியில், தமுஎகசவை ஒரு தான்தோன்றித்தனமான அமைப்பு என்ற ரீதியில் வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அவதூறுகளை முன்வைத்து நகர்வதன் மூலம், தங்களது அடையாளத்தை அவர்கள் முற்போக்குப் பணியாக அறிவிக்கிறார்கள். இத்தகைய போக்கானாது சிபிஎம் கட்சிக்கே அவமானம் தேடித்தருவதாய் அமைகிறது. இவர்களை அம்பலப்படுத்துகையில், வெற்றிகரமாக அமைப்பின் பின் பதுங்குவார்கள். தங்களைத் தோழர்கள் என்றும் சொல்லிக்கொள்வார்கள். 

இந்த போக்கானது, தமுஎகசவின் வேலைப்பட்டியலில் வரலாற்றுத்தவறு என்கிற ஒரு வார்த்தையை சேர்த்து வைப்பதில்தான் போய் முடியும். அற்ப பாராட்டுதலுக்காக தங்களை மார்க்சியர்கள் என்று அழைத்துக்கொண்டு, நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். இலக்கியத்திலோ, மார்க்சியத்திலோ, இல்லை சிபிஎம்மின் அமைப்பு விதிகளோ கூட இவர்களுக்குத் தெரிந்திருக்கத் தேவையில்லை. அதையும் மிகுந்த பெருமையுடன் அறிவிக்கவும் செய்கிறார்கள்.

பொதுவெளியில் இத்தகைய அவதூறுகளையும், வசைகளையும், கேலி கிண்டல்களையும் முன் வைப்பவர்கள், தங்களது படைப்புக்களில் முற்போக்காளராக அறியப்படும் அவலமும் மிஞ்சுகிறது. எப்படியோ, சிபிஎம்மின் கட்சிக் கட்டுப்பாட்டை தமுஎகசவில் இருக்கும் அடையாள அரசியல்வாதிகள் வெற்றிகரமாக உடைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கண்டிக்க வேண்டிய தமுஎகச பொறுப்பாளர்களும், புத்தகம் எழுதியவர்களும் இந்த அவதூறைச் செய்வதால் நிலைமை மிகுந்த கவலைக்கிடமாக உள்ளது.

உதாரணங்களாக;

பாரதிப் புத்தகாலயத்தின் பதிப்பாசிரியராக இருக்கும் ப.கு.ராஜன் “ஏன் வாப்பா ஒரு பெண் ரௌடி இல்லைஎன்று கேட்டது கூட அத்தகைய நிலைப்படுதான். ஒரு பதிப்பாசிரியராக இருப்பவர், தனது  பணி எத்தகையது என்று கூடத் தெரியாது, இஸ்லாமிய மதத்திற்கெதிராக முன்வைத்த அக்கலகக் கவிதையை, தனது கச்சடாவான அவதூறுக்கு சேவகம் செய்ய வைக்கிறார். கிண்டல் செய்வது மட்டுமே மார்க்சிய நிலைப்பாடாக மாறிக்கொண்டிருக்கிறது. நையாண்டிகளின் மூலம் மார்க்சியத்தை நிலைநிறுத்தலாம், அல்லது தனது இருப்பையும் முன்வைக்கலாம் என்கிற மனோநிலையைத்தாண்டி இவர்  வளரவேயில்லை.

தமுஎகசவின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராய் இருக்கும் இருக்கும் கருப்பு கருணா  “வக்காலி  என்கிற வார்த்தையை பொதுவெளியில் உபயோகிக்கிறார். என் வரையில் வக்காலி என்ற சொல்  ‘வக்காலவோழிஎன்பதிலிருந்து துண்டித்து சுருக்கப்பட்ட வார்த்தை. இதற்கு அக்காளைப் புணர்பவன் என்ற அர்த்தம் இருக்கிறது. வேறு அர்த்தங்கள் இருப்பினும் அதை முன்வைக்கலாம். அவ்வார்த்தையை  வன்மக் கூச்சலோடு அவர் வைக்கிறார். அதற்கு அவ்வமைப்பைச் சார்ந்த பெண்ணியலாளர்கள், தத்துவவியலாளர்கள் தங்களது வரவேற்பையும் அளித்து வருகிறார்கள். அக்காளைப் புணர்பவர்கள் என்கிற வார்த்தை கூட தற்போது தமுஎகசவின் அரசியல் சொல்லாடலாய் மாறிய காலமிது. கண்டிப்பதற்கு யாரும் இல்லை. மேலும் தமுஎகசவின் மாநிலப் பொறுப்பாளராக இருக்கும் ஒருவரே, இது போன்ற மோசமான வார்த்தைகளை முன்வைத்து நகர்வதை எப்படி முற்போக்கு முகாம் என்று நாம் அழைக்கமுடியும்.

தமுஎகசவின் இலக்கிய முகமான ஆதவன் தீட்சண்யா, பொலிட் பீரோவில் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள், தலித்துகள் இல்லை என்பதாக  பொது ஊடகத்தில் கூறியவர். கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தமட்டில், அதன் கட்சிப் பொறுப்புக்களில் சாதி உட்பட, எந்த வகையான இடஒதுக்கீடும் இல்லை. ஒரு கம்யூனிஸ்ட் கட்சியாக இது சிபிஎம்முக்கும் பொருந்தும்.  இது தெரிந்தும், கட்சியின் மீது தலித் அமைப்புகள், அடையாள அமைப்புக்கள் வைக்கும் அதே குரலில் பேசுகிறார்.

மேலும், இப்பொழுது வந்த தடம் நவம்பர் 2017 இதழில்  மேற்கட்டுமானம், அடிக்கட்டுமானம் குறித்த, அவரது மார்க்சிய புரிதலை முன்வைத்துப் பேசியிருக்கிறார்.

அதாவது “பொருளாதார அமைப்பே அடிப்படைக் கட்டுமானம், சாதி போன்றவை மேற்கட்டுமானம். அடிக்கட்டுமானத்தை மாற்றிவிட்டால் மேற்கட்டுமானம் தானாக மாறிவிடும் என்பது  கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு. அடிக்கட்டுமானத்தை மாற்ற வேண்டுமானால், முதலில் அதன் மீதுள்ள மேற்கட்டுமானத்தைத் தகர்க்க வேண்டும் என்கிற அம்பேத்கரின் நிலைப்பட்டிற்கு காலத்தின் போக்கில் வந்து சேர்ந்திருக்கிறார்கள். சாதியத்திற்கு எதிரான போராட்டத்தை இணைத்துக்கொண்டால் தூயவடிவிலான வர்க்கப் போராட்டம் தீட்டாகிவிடும் என்கிற சிலரது சனாதன மனதை எதிர்த்தும் இடதுசாரிகள் போராட வேண்டியுள்ளதுஎன்று கூறியிருக்கிறார்.

அவரது அறிமுகக் குறிப்பில் தமிநாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் என்றும், த.மு.எ.க.ச வின் மாநில துணைப்பொதுச் செயலாளர் என்றும் சொல்லப் பட்டிருக்கிறது. அவரது அடிக்கட்டுமான, மேற்கட்டுமான புரிதலை ஒட்டி, எந்தக் கம்யூனிஸ்ட் கட்சி அம்பேத்கரின் மேற்கட்டுமானக் கருத்துக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது என்பதை விளக்கவேண்டும்.

அவர் சார்ந்த இவ்விரண்டு அமைப்புகளின் மையக் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அப்படியெனில் அக்கட்சியானது, அம்பேத்கர் வழிக்குச் சென்றுவிட்டதா என்பதை விளக்கும் கடமையும் அவர்களுக்கு இருக்கிறது, மார்க்சியர்களும் இதைக் கவனத்தில் கொண்டு விவாதிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் தூயவடிவிலான வர்க்கப் போராட்டம் என்றால் என்ன?


மேலும் எந்தக்  கம்யூனிஸ்ட் கட்சி இதை விவாதித்து, காலப்போக்க்கில் அம்பேத்கரின் வழிக்குச் சென்றது என்பதை தத்துவார்த்தப் போக்கில்    விளக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

அவர் கௌரவ ஆசிரியராக இருக்கும் அவரது புதுவிசை பத்திரிக்கை தொடங்கி இக்குரலே தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது. வர்க்கப் பார்வையை விட, சாதி அடையாளப் பார்வையே மேலோங்கியிருக்கிறது.

இவ்வாறாக ஒவ்வொரு ஊரிலும் தங்களுக்கென ஒருசில ரசிகர்களை இவர்கள் வளர்த்துவிடுகிறார்களே தவிர, வர்க்கப் பார்வையுடன் கூடிய படைப்பாற்றலையோ, தத்துவ வகுப்புகளையோ, அரசியல் உணர்வை உருவாக்கும் வேலைகளைச் செய்வதில்லை. குழுவாதமாக மட்டுமே பெரும்பாலான இடங்களில் நிகழ்ந்துவருகிறது.

சிபிஎம்மின் கட்சிக் கட்டுப்பாட்டுக்கும், திட்டத்திற்கும், அதன் மையத் தத்துவத்திற்கும் எதிராகவும், பொது ஊடகத்தில் பேசுவதன் மூலம் அவருக்கு அம்பேத்கரிய அடையாளம் கிடைக்கிறது. அம்பேத்கரின் நூல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெட்டி, அவற்றையும், வரலாற்றுக்குப் புறம்பான போக்கில், எந்த ஆய்வும் இன்றி,  தன்போக்கிலான அம்பேத்கரியமாக அறிமுகப்படுத்தி வருகிறார். மார்க்ஸ் அவசியத்தேவை என்கிற நூல் இவருக்கு நரகலுக்கு ஒப்பாக இருக்கிறது. அழுத்தமாகச் சொன்னால், அம்பேத்கர் மார்க்சியத்தை பன்றித்தத்துவம் எனச் சொன்னதை நியாயப்படுத்தும் இராஜதுரை, இவருக்குக் குருவாக இருப்பதால், இவருக்கும் மார்க்சியம் பன்றித்தத்துவமே. இவரைப் பொறுத்தவரையில் தமுஎகச என்பது தலித்திய அடையாள அரசியல்.

பாரதி புத்தகாலயத்தின் மேலாளர் முகமது சிராஜுதினுக்கு, தமுஎக்ச என்பது இஸ்லாமிய அடையாள அரசியல். அவரது மதத்தை சேர்ந்தவர்களை துணைக்கு அழைத்து, இஸ்லாமிய மார்க்சியமாய் முன்வைப்பவர். அ.மார்க்சின் சீடராக இப்பணியை தேர்ந்தெடுத்துச் செய்வதோடு, அவரையும் அடுத்த மார்க்சிய அறிஞராய் முன்வைப்பவர். அ.மார்க்ஸ். சிபிஎம் செய்த நந்திகிராம் விசயத்தை முன்வைத்து, சிபிஎம்மை குண்டர்களின் அமைப்பு, வன் புணர்ச்சி செய்பவர்கள் என்று புத்தகம் எழுதியிருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியை வேறு தொழில் செய்யப் போகலாம் என்றும் சொன்னவர். ஆனால், அ.மார்க்சின் இத்தகைய வாதங்களை கேள்விக்கு வைக்காமல், விவாதிக்காமல், அவரை குருவாக ஏற்று, அவரது இஸ்லாமியச் செயல்பாட்டுக்கு ஆதரவாகக் களம் அமைக்கும், இஸ்லாமிய முகமாக இவர்கள் ஒரு கோஷ்டி சேருகின்றனர். மார்க்சியப் பார்வையில் இஸ்லாம் குறித்து அங்கு விவாதங்கள் நடக்கிறதா என்றால் அதுவும் இல்லை.  இது தமுஎகசவில் இருக்கும் இஸ்லாமிய அடையாள அரசியலின் இன்னொரு முகம்.

மேலும் இவர்களை வைத்து தமுஎகசவை நாம் அடையாளம் காண்பதா எனக் கேள்வி  எழும்பினால்,    இவர்களை அப்படி நாம் வகைமைப் படுத்த முடியாது, இவர்கள் யாரும் எதுவுமே அறியாத நபர்கள் அல்ல, கட்சித் தலைமைக்கு நெருக்கமானவர்கள். கட்சியிடம் இருந்து சம்பளம் வாங்குபவர்கள், சிலர் முழுநேரப் பணியாளர்கள். வாங்கும் சம்பளத்திற்கு முதலாளிக்கு விசுவாமாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படை தாண்டி, தத்துவத்துக்கும் இவர்களுக்கும் இருக்கும் தொடர்பு எதுவுமில்லை.

தமுஎகசவின் சுய ஒழுங்குக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பில் (பதவிகளை மட்டுமே சொல்கிறேன், நபர்களை அல்ல) இருப்பவர்களே, வக்காலி, என்றும் ஏன் வாப்பா ஒரு ரவுடி இல்லை, என்றும் பேசுவதும்தான் தமுஎகசவின் இலக்கிய முகமா?

தமுஎகசவின் மாநிலச் செயலாளரான தோழர்.சு.வெங்கடேனிடம் ராஜதுரை எப்படி  மார்க்சிய அறிஞராவார், அவர் மார்க்சியத்துக்குச் செய்த பங்களிப்புகள் என்ன என்று நேரடியாகவும், பொதுவெளியிலும் கேள்வியை வைத்து, அவர் எந்தப் பதிலும் சொல்ல வில்லை. ஆனால் இத்தகைய அவதூறாளர்கள் எங்கள் அமைப்பில் யாருக்கு வேண்டுமானாலும் விருது கொடுப்போம் என்று கூக்குரலிட்டதோடு தங்கள் பணியை முடித்துக்கொள்ளுகின்றனர். இந்த அவதூறுகள் எல்லாம், மாநிலத் தலைமையின் கவனத்துக்குப் போகிறதா. தமுஎகசவில் இத்தகைய அவதூறாளர்கள் இருப்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறியுமா?

சிபிஎம் கட்சியின் கட்டுப்பாட்டை விட்டு, அதன் மார்க்சிய முகத்தைவிட்டு, இதுபோன்ற அவதூறாளர்களின் கையில் தமுஎகச நழுவிக்கொண்டிருக்கிறதோ என்கிற சந்தேகம் தலைதூக்க ஆரம்பித்து சில பல வருடங்களாயிற்று.  இன்றுள்ள நிலையில், இதுபோன்ற அவதூறாளர்களால், மத அடிப்படைவாத, சாதி அடிப்படைவாத, அவதூறு முகமாக திரிந்து காணப்படுகிறது. அம்முகத்திற்கு முன்னால் சிபிம்மில் இருக்கும் பல தோழர்கள் என்ன செய்வதென்றே தெரியாது இருக்கிறார்கள். இவர்களைப் பொருட்படுத்துவதா, இல்லை விமர்சிப்பதா என்கிற கேள்வியை, எப்படிப் பொருத்திப் பார்ப்பதென்ற குழப்பமும் அங்கு இருக்கிறது.


கட்சிக்கும், தமுஎகசவுக்கும் உழைத்த பல தோழர்கள் மறக்கப்பட்டு, இப்படி அவதூறு செய்பவர்கள், தாங்களே சிபிஎம் கட்சியின், தமுஎகசவின் உண்மையான  முகம் என்று பொதுவெளியில் அறிவித்து, தங்களை வெற்றிகரமாக நிறுவியும் வருகின்றனர்.

மேலும், இந்த அவதூறாளர்களை விமர்சிப்பதன் மூலம், ஒட்டுமொத்த தமுஎகசவையும், சிபிஎம்மையும் விமர்சிப்பதாக அடையாளப்படுத்தியும் வருகிறார்கள்.

வர்க்க அரசியலை முன்னெடுக்காமலும், வர்க்க உணர்வை மளுங்கடிக்கும் விதமாகவும் செயல்பட்டு, தனித்தனி அடையாள அரசியலை முன்வைத்து இயங்குவதென்பது முதலாளித்துவ வர்க்கத்திற்கு சேவை செய்வதற்கு சமமானதாகும்.


கட்சி இந்தப் போக்கை கண்டுகொள்ளாமல் இருப்பதென்பது ஆபத்தானதாக முடியும். கட்சித் தலைமை இதை உணராதிருப்பது, நாளைய வரலாற்றுத் தவற்றுக்கு இன்றே இடம் கொடுப்பதாகும்.

No comments:

Post a Comment

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...