மௌனம் என்பது சாவுக்குச் சமம்.
எதுவும் பேசாவிட்டாலும் சாகப்போகிறீர்கள்;
பேசினாலும் சாகத்தான் போகிறீர்கள்.
எனவே பேசிவிட்டுச் செத்துப் போங்கள்.
- தஹார் ஜாவூட்.
அம்பேத்கரது போதாமைகள், மற்றும் அவரது அறியாமை-பகுத்தறிவின்மை குறித்து ஆய்வுகளை மார்க்சியத்தை முன்வைத்து ஆம் திறனாய்வு செய்யும்பொழுது, சமத்காரமாக இங்கு ஒரு கேள்வி முன் வைக்கப்படும். அம்பேத்கரை இப்பொழுது விமர்சிப்பது பாசிஸ்டுகளுக்குத் துணைபோகும். பா.ஜ.க-வுக்கு எதிராக அனைவரும் ஒன்று கூட வேண்டிய இந்த நேரத்தில், அம்பேத்கரை விமர்சிப்பதால் அது அவர்களுக்கே வலுவைத் தரும் என்ற அக்கறையுடன் கூடிய அறிவுரையை ஒரு இடதுசாரிக் கூற்றாக வைப்பார்கள். இரண்டாவது கோஷ்டியோ தங்களை நடுநிலையாளர்கள் என்று அழைத்துக்கொண்டு இப்படியெல்லாம் செய்யலாமா? எங்களது புரட்சிகர நெஞ்சம் கலங்குகிறது, கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அம்பேத்கரை விமர்சிப்பது ஆளும் பா.ஜ.கவுக்கு நன்மையை விளைவிக்கும் என்று அழுது புலம்பும் ஒரு கூட்டம். மூன்றாவதாக அம்பேத்கரையே படிக்காமல் அடையாள அரசியலை முன்னெடுத்து அம்பேத்கரை புரட்சியாளராக நினைத்துக் கொண்டு அம்பேத்கரையே விமர்சிக்கிறாயா? நீ ஒரு சங்கி! நாங்கள் ஒரிஜினல் புரட்சியாளர்கள் தெரியுமா? என்றும், இப்படி அம்பேத்கரை விமர்சிக்கிறாயே...ஏய்! பீஜேபி பூச்சாண்டி வந்திடும்! என்று என்று கொந்தளிப்புமாக பரிதவிப்பார்கள். ஆனால் இதில் எந்தத் தரப்பும் அம்பேத்கரின் போதாமைகளைக் குறித்து அறிவார்ந்த விவாதமாக எதையும் நடத்துவது கிடையாது. அம்பேத்கரின் பகுத்தறிவின்மையை சாதியை அடிப்படையாகக் கொண்டு அவரே புரட்சியாளர் என்று கற்பனை செய்வதில் சுகம் காண்பதோடு முடித்துக்கொள்வார்கள்.
மாறாக, அதே பா.ஜ.க ஆளும் காலத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை பார்ப்பனக் கட்சி, பார்ப்பனர்களால் தோற்றுவிக்கப்பட்ட கட்சி என தலித்முரசும் கருப்புப் பிரதிகளும் தலித்திய அடிப்படையில் குற்றம் சாட்டி புத்தகம் வெளியிடும் போது அது யாருக்கு நலம் பயக்கும் என்ற கேள்வியை நாம் வைத்தால் மேற்கண்ட மூன்று கோஷ்டிகளும் சேர்ந்தாற்போல் வாயை இறுக மூடிக்கொள்ளும். அவர்களது முகமூடிகளும் கிழிந்து தொங்கும். அம்பேத்கரை விமர்சிக்காதே பா.ஜ.க பூச்சாண்டி வளர்ந்திடும் என்று இந்த பூச்சாண்டி வேலையைக் காட்டியே, கம்யூனிஸ்டுகளை பார்ப்பனக் கட்சி என்று நிறுவுவர்களுக்கு துணைபோன அறிஞர்கள் ஏராளம். ஆச்சரியம் என்னவென்றால் தலித் அடையாள அரசியலை முன்வைத்து கம்யூனிஸ்டுகளை பார்ப்பனக் கட்சி என்று சொன்னால் இப்பூச்சாண்டி வேலை செய்யாது. ஆச்சரியம்!!!
இந்த வகை பூச்சாண்டியை முன்வைத்து பல சிபிஎம் தோழர்களும் இதே கேள்வியை வைத்திருக்கிறார்கள். ஆனால் நிலைமையைச் சுட்டியதும் பல தோழர்கள் என் முகநூலில் தாங்கள் வைத்த பதிவுகளை அழித்துவிட்டு ஓடியதை புரிந்துகொள்ள முடிகிறது. அமைப்பின் மீதுள்ள விசுவாசத்தால் அமைப்பை முன்வைத்து பேசும் தலித் அடையாள அரசியல்வாதிகளின் கூற்றையே மார்க்சியத் தத்துவமாகக் கருதும் இதுபோன்ற தோழர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது.
இப்படிப்பட்டவர்களைத் தவிர, நடைமுறை யதார்த்தம் வேறு மாதிரியாகப் போவதை அர்ப்பணிப்புள்ள சிபிஎம் தோழர்கள், மார்க்சியத்தைக் கற்றவர்கள் எச்சரிக்கையோடு பார்ப்பதும் நிகழாமல் இல்லை. மார்க்சியக் கம்யூனிஸ்டு கட்சியில் எடுக்கப்படும் உச்சபட்ச அம்பேத்கரிய சார்பானது, மார்க்சியத்தைக் கதைக்கு உதவாத சித்திரமாக மாற்றி அம்பேத்கரியமே மார்க்சியம் என்ற நிலைமைக்கு தள்ளுவது குறித்து அவர்கள் அறியாமல் இல்லை. அடையாள அரசியலுக்கு முகம் கொடுக்க வேண்டிய தேவையைஅவர்கள் உணர்ந்துள்ளார்கள். சிபிஎம் கட்சி ஒரு கம்யூனிஸ்ட் கட்சியா? இல்லை அம்பேத்கரியக் கட்சியா? என்ற குழப்பங்கள் நிலவுவதையும் அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நிலைமையை தடுக்க எண்ணும்போது அது கைமீறிப் போகும் சூழலைக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து திகைத்தும் நிற்கிறார்கள்.
மார்க்சியப் பார்வையில் அம்பேத்கரை எப்படி அணுகுவது என்கிற பாடத்திட்டத்தை கட்சி முறையாக வெளிப்படுத்தாததன் பின்விளைவுகளே இவை அத்தனையும். இதைப் பயன்படுத்திக்கொண்ட பிழைப்புவாதிகள் அம்பேத்கரியத்தையே மார்க்சியமாக நினைத்து அடையாள அரசியலையே மார்க்சியத் திட்டமாக பொதுவெளியில் ஆர்ப்பாட்டமாக அறிவிக்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சி அம்பேத்கரைக் கவனிக்கவில்லை என்பதையே சொல்லி சொல்லி தங்களுக்கான ஒரு அதிகார வளையத்தைக் கட்டிக்கொண்டிருக்கும் இவர்களைக் கண்டு கட்சி தர்மசங்கடத்துக்குள்ளாவதும், எப்படி எதிர்ப்பது என்கிற துணிச்சலும் இல்லாத நிலையில் இருக்கிறது.
விமர்சனமற்ற இந்த அணுகுமுறையில், அடையாள அரசியலைக் கேள்வி கேட்டால் சிபிஎம் கட்சி சாதி பார்க்கிறது என்று சொல்லிவிடுவார்களோ என்ற அச்சம் கட்சிக்குள் நிலவுவதை தோழர்கள் வாயிலாக நாம் கேள்விப்படுகிறோம். நிலைமையும் இதுதான். விளைவு. மார்க்சியம் அறியாத தோழர்கள் குழம்புகின்றனர். மார்க்சியத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிக் கல்வியும் பரவலாக்கப்படவில்லை. நாளுக்குநாள் குழப்பங்கள் கூடிக்கொண்டே போகிறது.
ஏலவே, மரிச்ஜாப்பி நூல் குறித்து நாம் பேசியிருந்தாலும் ஒரு முன்னோட்டமாக சிலவற்றைப் பார்க்க வேண்டியிருக்கிறது. “மரிச்ஜாப்பி சிபிஎம் அரசின் தலித் இனப்படுகொலை” என்ற நூலை கருப்புப் பிரதிகளும் தலித்முரசுவும் இணைந்து வெளியிட்டது. நூலில் “மரிச்ஜாப்பியில் 17000க்கும் மேலான தலித்துகளைக் கொன்ற சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சி என்று தான் கண்ணால் கண்டதைப் போல தோழமை சார்ந்து! சொல்லியிருப்பார் கருப்புப் பிரதிகள் நீலகண்டன். நூலை மொழிபெயர்த்த இனியன் இளங்கோ அவர்களோ “1980 களில் ஜோதிபாசு தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி செய்தபோது, இந்தியத் துணைக்கண்டம் இதுவரை அறியாத வகையில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட தலித் மக்களின் கோர இனப்படுகொலை மரிச்சாப்பி என்ற இடத்தில் நடைபெற்றது. இந்த இனப்படுகொலை இந்நாள்வரையில் இந்தியாவின் பார்ப்பன ஊடகங்களால் வெளிப்படுத்தப்படாமல் மறைக்கப்பட்டுள்ளது. வரலாற்று அறிஞர்களும் தலித் செயற்பாட்டாளர்களும் கூட மரிச்சாப்பியில் நடைபெற்ற தலித் மக்களின் இனப்படுகொலையை அறியாதவர்களாக உள்ளநர்” என்று கூறுகிறார். ஆக இதை தமிழகத்தில் அறியச் செய்தது கருப்புப் பிரதிகள் பதிப்பகமும்- தலித் முரசுப் பதிப்பகமும் ஆகும்.
இதுநாள்வரையில் இந்தக் குற்றச்சாட்டுக்கு சிபிஐ-எம் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ன பதில் அளித்திருக்கிறது என்று பார்த்தால் பதில் பூஜ்யம். இதற்கு ஏன் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பதில் அளிக்க வேண்டுமென கேட்போருக்கு, முன்னணி கதைச் சுருக்கத்தை சொல்ல வேண்டியிருக்கிறது.
மார்க்சியத்தை முன்வைத்து அம்பேத்கரை விமர்சித்தால் அது தலித்-கம்யூனிஸ்ட் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கிறது என்றும், இது பிரித்தாளும் சூழ்ச்சி என்று வியாக்யானம் செய்யும் ‘தீண்டாமை ஒழிப்பு முன்னணியானது எனது முகநூலில் நடந்த ஒரு விவாதத்தில் நான் வைத்த வார்த்தைகளைத் திரித்து என் மீது வன்கொடுமை வழக்கிற்கான புகாரைக் தொடுத்து என்னைக் கைது செய்ய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. ஆச்சரியம் என்னவென்றால் வழக்கின் முகாந்திரமாக: “நவ இந்தியச் சிற்பி அம்பேத்கரை இழிவு படுத்திய வசுமித்ரா மீதுதீண்டாமை ஒழிப்பு முன்னணி புகார்” என்ற தலைப்பில் முகநூலில்,“நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். நான் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறேன். எமது இயக்கம் மதுரை உத்தப்புரம், திருச்சி எடமலைப்பட்டி, கோயம்புத்தூர் நாகராஜபுரம் ஆகிய இடங்களில் தீண்டாமைச் சுவர்களை அகற்றியது. எமது இயக்கம் 25க்கும் மேற்பட்ட ஆலயங்களில் சமத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி வன்கொடுமைகளுக்கு எதிரான எங்கள் வழக்கில் தான் ரூ.7.50 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது. இதனை அன்றைய தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள் சட்ட மன்றத்தில் அறிவித்தார். நாங்கள் நடத்தி வருகிற டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு இலவச மையத்தின் வழியாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசுத் துறைகளில் பணியாற்றுகின்றனர். எங்களுக்குப் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக தேனி மாவட்டம் கோடங்கிப் பட்டியைச் சேர்ந்த வசுமித்ரா என்பவர் தனது முகநூலில் இந்திய அரசியல் அமைப்பின் தந்தை பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தி பதிவிட்டுள்ளார். ஒடுக்கப்பட்டோர் நலனில் அக்கறை செலுத்திக் கொண்டே இந்தியாவின் ஒட்டுமொத்த நலன்களுக்கான அரசியல் சாசன சட்டத்தை உருவாக்கித் தந்தவர் டாக்டர் பி. ஆர்.அம்பேத்கர். இந்நிலையில் மேற்படி வசுமித்ரா சாதி மேலாதிக்க உணர்வுடன்” புத்தரின் ஆண்குறியில் அறிவைக் கண்டுபிடிக்கும் அம்பேத்கர்” என டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களை மிகக் கீழ்த்தரமாக இழிவு படுத்தியுள்ளார். மார்க்சிய, மற்றும் அம்பேத்கரிய இயக்கத்தினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் நிலையில் அதனை சீர்குலைப்பதும் மேற்படி வசுமித்ராவின் நோக்கம்.எனவே டாக்டர் பி. ஆர். அம்பேத்கரை இழிவு படுத்தி முகநூல் பதிவு செய்த சாதி இந்துவான வசுமித்ரா மீது பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரால் உயர்வாக மதிக்கப்படுபவரை இழிவு செய்வதற்கு எதிரான சட்டப்பிரிவுகளான SC/ST வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2018ன் பிரிவுகள் 3(1) (t), 3(1) (u), 3(1) (v) ஆகியவற்றில் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.” என புகார் அளித்தார்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில செயளாலர் சாமுவேல் ராஜா. எனது வார்த்தையைத் திரித்து புகார் கொடுத்த அவர் இப்பொழுது 20,000 க்கும் மேற்பட்ட தலித்துக்களைக் கொலை செய்ததாக தலித்துகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ-எம் கட்சியை விசாரிக்க முன்வருவாரா? தீண்டாமை ஒழிப்பு முன்னணி இதை கேள்வி எழுப்புமா? என்பதுதான் தார்மீகமான கேள்வி. வைக்காத வார்த்தைக்கே வழக்கு என்றால் இத்தனை ஆயிரம் பேரைக் கொன்ற சிபிஎம் கட்சியை அதாவது நூலாசிரியர்கள் கூறுவது போல் பார்ப்பனக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஏதும் கூறாமல் மௌனமாக இருப்பது ஏன்?
இந்த நூலில் தொடர்ச்சியாக இதே தலித் முரசு+கருப்புப்பிரதிகள் கூட்டணியில் அடுத்து வந்த நூல் “பார்ப்பனிய மண்ணில் மார்க்சியம்” அதன் தொடர்ச்சியாக இப்பொழுது எதிர் வெளியீடாக ‘குருதி நிலம் மரிச்ஜாப்பி படுகொலையின் வாய்மொழி வரலாறு” என்று தீப் ஹல்தார் எழுதிய நூலை வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில் இதுவரை சொல்லி வந்த எதற்கும் ஆவணப்பூர்வமான எந்த பதிவும் இல்லை என்பதால் வாய்மொழி வரலாறு என்ற தொனியில் இந்த நூல் தன்னை அறிவித்துக் கொள்கிறதா என்ற சந்தேகமும் வருகிறது.
இம்மூன்று நூட்களும் ஒரே குரலில் சொல்வது. மேற்குவங்கத்தை ஆண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட் (சிபிஐ(எம்)) ஒரு பார்ப்பனக் கம்யூனிஸ்ட் கட்சி. அந்த சாதி வெறியில்தான் தலித்துகளை ஆயிரக்கணக்கில் கொன்றது என்றே பகிரங்கமாக அறிவிக்கிறது, நானறிந்தவரையில் இந்நூல்களுக்கு சிபிஎம் கட்சியும் அதிகாரப்பூர்வ மறுப்பு என்று எந்த நூலையும் வெளியிட்டதாகத் தெரியவில்லை. காணவில்லை. அப்படி இருந்தால் தோழர்கள் உரைக்கவும்.ஆனால் குழப்பங்களே மிஞ்சுகின்றன.
‘பார்ப்பனிய மண்ணில் மார்க்சியம்’ என்ற ஒரு சமத்காரமான தலைப்பை வைத்துவிட்டு நூலுக்கு உள்ளே பார்ப்பனர்கள் பார்ப்பனர்கள் என்று சாதியை முன்வைத்துக் கதறுகிறது. தலித்துகளுக்குள்ளும் பார்ப்பனியம் இருக்கும் என்பதை தெளிவாக மறந்தும் போகிறது. நூல் வைக்கும் வாதத்தின் அடிப்படை. இந்தியக் கம்யூனிஸ்ட்கள் பார்ப்பனர்கள். அவர்கள் தொடங்கிய கட்சி கம்யூனிஸ்ட் கட்சி அல்ல. அது பார்ப்பனக் கம்யூனிஸ்ட் கட்சி. ஆக இந்தப் பார்ப்பனக் கம்யூனிஸ்ட் கட்சி தலித்துகளை பார்ப்பன சாதி வெறியால் அழித்து வருகிறது. இந்த வியாக்கியானங்களுக்கு சிபிஎம் பதில் சொல்வது அதன் கடமைகளில் ஒன்று. ஆனால் அதை சிபிஎம் செய்யத் தவறுவது ஏன்? கம்யூனீஸ்ட் கட்சி தலைவர்களின் மீது தத்துவத்தின் மீதும் காரண காரியமற்ற அவதூறுகளை சாதி அடிப்படையில் வைப்பதை அது எவ்வாறு புரிந்துகொள்கிறது என்பது தெரியவில்லை.
விசயங்களைக் காண்போம். பார்ப்பனர் அல்லாத தோழர்களுக்கு சிபிம் கட்சி ஒரு பார்ப்பனக் கட்சி என்று விளக்கி அவர்களை ஆபத்திலிருந்து தப்பிக்க உதவுவதைப் போல் நூல் தன்னை அறிவித்துக்கொள்கிறது. பார்ப்பனரல்லாதர் என்றால் தலித்துகளும் அதில் உள்ளடக்கமா என்றெல்லாம் கேள்வியில்லை.
தலித் முரசு+கருப்புப்பிரதிகள்_ இப்பொழுது புதிதாக இணைந்திருக்கும் எதிர்வெளியீடு சிபிஎம் கட்சியை பார்ப்பனக் கம்யூனிஸ்ட் கட்சி என்று சொல்வதில் உள்ள நியாயங்கள் என்ன? சம்பந்தப்பட்ட தோழர்கள் விழித்துக்கொள்வார்களா?
தலித் அடையாள அரசியலை முன்வைத்து தலித்துகளை கம்யூனிஸ்டுகள் கைவிட்டனர். அம்பேத்கருக்கு உரிய இடம் வழங்கவில்லை என்பதைப் போன்ற விமர்சனங்களை வெளித்தோற்றத்திற்கு வைக்கும் இவர்களது செயல்திட்டம் வேறொன்றுமில்லை. மார்க்சியத்தை கதைக்குதவாத சரக்காக முன்மொழிவது. கம்யூனிஸ்ட் கட்சியில் தோழர்களாக இருப்பவர்களை சாதி அடையாளமிட்டு தலித்துகளாக உருமாற்றி வெளியேற்றுவது. அடையாள அரசியலை முன்னிருத்துவது. இதற்குப் பலியான தோழர்கள் எண்ணிக்கையில் அதிகம். இதை நாம் கேள்விக்குட்படுத்த வேண்டி இருக்கிறது.
இந்த நிலைக்கு பதில்கொடுக்கும் விதமாக செயல்திட்டங்களை வைப்பதற்கு பதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்கிற தனி அமைப்பைக் கொண்டுவந்தது தலித் அடையாள அரசியல்வாதிகளுக்கு வரவேற்கும் அம்சமாகிப் போனது. எதிர்மறையாகிப் போன நிகழ்வுதான் இது. இதனடிப்படையில் மார்க்சியத்தை தத்துவமாக ஏற்காத தலித்தியவாதிகளுக்கு சாதி அடிப்படையில் பொலீட் பீரோவில் இடம் கொடுக்க வேண்டும் என்கிற கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளிருந்தும் தமுஎகசவிலிருந்தும் அடையாள அரசியல்வாதிகள் முழங்கும் நிலைக்கு இது கொண்டு சென்றுவிட்டது. ஒடுக்கப்படும் மக்களுக்காக தனது உயிரை ஈந்த கம்யூனிஸ்ட் கட்சியை பார்ப்பனியக் கட்சி என்று தலித்தியவாதிகள் குற்றம் சாட்டும்பொழுது தலைகுனிந்து நிற்பது ஏன்?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இதுகுறித்தி விவாதிக்க தோழர்களே இல்லையா என்ற கேள்வியும் முன்னிற்கிறது. பார்ப்பனிய மண்ணில் மார்க்சியம் என்ற எஸ்.கே.பிஸ்வாஸ் நூல் மார்க்சியத்தின் அடிப்படைகளைப் பேசியிருப்பதை பின்னர் பார்க்கலாம். ஆனால் சிபிஎம் கட்சியை குறித்து கண்ணால் கண்டதைப் போல பிஸ்வாஸ் எடுத்துவைக்கும் வாதங்கள் குற்றச்சாட்டுகளுக்கு சிபிஎம் கட்சியின் பதில் என்ன?
மார்க்சிய கொள்கைகளால் வழிநடத்தப்படும் வங்காள சமூகத்திலிருந்து -இதுவரை அகில இந்திய அளவில் புகழ்பெற்ற-ஓர் அறிவுஜீவி கூட ஏன் வரவில்லை எனக் கேட்கிறார் தலித் போராளியாக அறியப்படும் காஞ்ச அய்லய்யா. காஞ்ச அய்லாய்யவின் அறிவு கொஞ்சம் வித்தியாசமானது. சாதியின் பேரால் பிழைப்பு நடத்தவும் அதன் மூலமாக தன்னை அறிவுஜீவியாகக் காட்டிக்கொள்ளவும் ஆர்வமுடையவர் அவர்.
தலித் என்கின்ற போர்வையில் இவர்கள் கம்யூனிஸ்டுகளையே குறிவைப்பது ஏன்? நிலைமை இப்படி இருக்க ‘இந்துத்துவ அம்பேத்கர்’ உருவாவதில் இவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தலித் அடையாள அரசியல் தனக்குத்தானே எதிர்கொள்ளும் பிரச்சினையும் இதுதான்.
மார்க்சிய அடிப்படையில் அம்பேத்கரின் போதாமைகளை விமர்சித்த தோழர் ரங்கநாயகம்மாவின் ‘சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு:புத்தர் போதாது!அம்பேத்கரும் போதாது!மார்க்ஸ் அவசியத் தேவை!” என்ற நூலைக் குறித்து கொந்தளித்த கருப்புப் பிரதிகள் ம.மதிவண்ணன் என்பவரின் மூலம் ஒரு வசை நூலையே வெளியிட்டது. சிபிஎம் கட்சியினரை பார்ப்பனக் கட்சி என்றே அவரும் சாடினார். கம்யூனிஸ்டுகள் தலித்துகளுக்கு துரோகம் இழைத்தனர் என்று கொந்தளித்து, எவ்வளவு கொச்சையாகப் பேச முடியுமோ அவ்வளவு கொச்சையாக நூலில் எழுதியிருந்தார் ம.மதிவண்ணன். இந்த விவகாரத்தால் ஆதவன் இந்த நூலைக் குறித்து பேச அவரது அமைப்பச்சம் இடம்கொடுக்கவில்லை. இதிலும் கள்ள மௌனம்தான். இதற்கு தலித்முரசு பாண்டியனும் அருமையென்றார். அம்பேத்கரைப் படித்தேயறியாத கூட்டம் ஒன்று கூட்டத்தையும் போட்டது. ஆச்சரியப்படும் விதமாய் ‘இந்துத்துவ அம்பேத்கர்” நூல் குறித்து ஒரு முனகலைக் கூட வெளியிடவில்லை கருப்புப் பிரதிகளும், புனித பாண்டியனும். ஆனால் தலித்துகளை முன்னிறுத்தி இவர்கள் கம்யூனிஸ்டுகளை சாட எதற்கும் தயங்கியதேயில்லை. அயோத்திதாசர் வெள்ளைக்காரர்களுக்கு உருவிவிட்டுக்கொண்டிருந்ததாலா என்றெல்லாம் தன் சாதியை அடிப்படையாக வைத்து கொந்தளித்த ம.மதிவண்ணன் இந்துத்துவ அம்பேத்கர் குறித்து கனத்த அமைதியை வெளியிட்டார். மார்க்சியத்திற்கு எதிராகப் பேசி தலித் அடையாளத்தை முன்னிருத்தும் ஆதவன் தீட்சண்யா அந்த நூல் குறித்து ஆய்வுப்பூர்வமாகனும் ஆவணரீதியாகவும் மறுத்துப் பேசியதில்லை. அதே சமயம் மார்க்சியத்திற்கு விரோதமாகவும், அம்பேத்கர் சொல்லாததையெல்லாம் சொல்லியதாகவும் பிழைப்பை ஓட்டவும் தயங்கவில்லை. தங்களது தனிநபர் கருத்துக்களையே பொதுவெளியில் அமைப்பின் கருத்தாகவும் இவர்கள் வைப்பதில் சளைத்தவர்கள் இல்லை.
காரணங்கள் நிறைய இருக்கலாம். இதெல்லாம் போதாதென்று புனிதபாண்டியன் பௌத்த மதத்துக்கு மாறாவிட்டால் நீங்களெல்லாம் தலித்துகளே இல்லை அம்பேத்கரையே ஏமாற்றுகிறீர்களா என்ற தொனியில் தனது மதமாற்ற முயற்சியையே சாதி ஒழிப்புக்கான தீர்வாக வைக்கிறார். அதுமட்டுமின்றி வரலாற்றுக்கு முரணாக சாதி ஒழிப்பு நூலை “அம்பேத்கர் 70 ஆண்டுகள் கடந்துவிட்டன. அது மட்டுமல்ல அம்பேத்கர் லட்சோப லட்ச மக்களுடன் தாம் வாழும் காலத்திலேயே சாதியை ஒழித்தும் 50 ஆண்டுகள் (14.10.1956) நிறைவடைந்துவிட்டன.” என்று தேதிவாரியாகச் சொல்லும் அவர் கம்யூனிஸ்டுகளை மட்டும் பார்ப்பனக் கட்சி எனச் சொல்வதில் ஓயவே இல்லை.
இந்த வசைகளுக்கு பின்புலமாக இருப்பது எஸ்.கே.பிஸ்வாஸின் ‘பார்ப்பனிய மண்ணில் மார்க்சியம்’ என்ற நூல்.சிபிஎம் கட்சிக்குள் இருக்கும் தோழர்களை சாதிவாரியாக அணுகி பிரிக்கும் நிலையை கையிலெடுத்திருக்கிறது. அதன் மூலம் தலித்துகளை வெளியேறச் சொல்வதுடன்,பார்ப்பனரல்லாத அப்பாவித் தோழர்களும் சிபிஎம் கட்சியின் பார்ப்பன வெறியைக் கவனிக்குமாறு உருமுகிறது.
மரிச்ஜாப்பி கொலைகள் பேரழிப்பு என்று தொடங்கி சிபிஎம் கட்சியே முழுமுற்றான பார்ப்பன வெறிபிடித்த கட்சி என்றா பக்கத்துக்குப் பக்கம் முழுங்கும் இந்நூல் மார்க்ஸையும் விட்டுவைக்கவில்லை. போகிற போக்கில் ஒரு தகவலாகச் சொல்லுவதைப் போல் “ கார்ல் மார்க்சும் மதம் மாறிய கிறித்தவரே. அவர் தனது மூதாதையர்களின் பழமையான மதமான ஜூடாயிசம் சமூக மாற்றத்திற்கு எதிரானதாக இருந்ததால் அதைத் துறந்தார்” என்கிறது. இப்படிக் கூறிவிட்டு மார்க்ஸ் “ சிறுவராக இருந்த காலத்தில் அவர் கிறித்தவ மதத்திற்கு மாறினார். மார்க்சிற்கு சில ஆண்டுகளுக்கு முன் அவரது தந்தை கிறித்தவராக மாறினார். தனது மதமாற்றத்தின் மூலம் தனது பாட்டிக்கு அதிர்ச்சி அளிக்க விரும்பாத மார்க்ஸ், தனது பாட்டியின் மரணம் வரை காத்திருந்தார்.” என்றும் கூறுகிறது. இதனடிப்படையில் மார்க்ஸ் கிறித்தவத்தைப் பரப்பினார் என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டுமா? பிஸ்வாஸின் வரலாற்றுப் பார்வை இவ்வளவு நகைச்சுவையும் பரிதாப கோலத்திலும் காட்சியளிக்கிறது. இப்படிப்பட்ட குப்பை நூல்களை மார்க்சியத்திற்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எதிரான தத்துவார்த்த நூல் என தலித் முரசு முன்வைப்பதைப் பார்த்தால் நாம் சிரிக்கத்தான் வேண்டும்.
மார்க்ஸைக் குறித்து இப்படிச் சித்தரித்தாலும் அம்பேத்கரை மாபெரும் அறிவுஜீவியாகக் காட்ட மார்க்ஸைப் போலவே படித்தவர் மார்க்ஸைப் போலவே சிந்தித்தவர் என்று பல இடங்களிலும் அம்பேத்கரை மார்க்ஸுடன் பிஸ்வாஸ் பொருத்துகையில் கல்லறையில் மார்க்ஸ் எப்படியெல்லாம் சிரித்திருப்பார் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. போதாக்குறைக்கு பெரியார் குறித்துகூறுகையில் பெரியாருக்கு “அய்க்கிய நாடுகள் அவையின் (UNO) அங்கமான‘யுனெஸ்கோ’ அவரது தன்னலமற்ற மக்கள் சேவையைப் பாராட்டியது. தனது பாராட்டுரையில் அது இவ்வாறு தெரிவித்தது: “பெரியார் நவீன காலத்தின் தீர்க்கதரிசி. தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ். சமூகச் சீர்த்திருத்த இயக்கத்தின் தந்தை. அறியாமை மூடநம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களின் எதிரி” என்று விருதையும் கொடுத்து யுனெஸ்கோ பாராட்டியதாகக் கூறுகிறார் பிஸ்வாஸ். இதுகுறித்தான உண்மை பிஸ்வாஸ்க்குத்தான் தெரியாது நூலை வெளியிட்ட புனிதபாண்டியனுக்குமா தெரியாது. எப்படியோ பலித்தவரைக்கும் லாபம் என்றால் சரிதான்.
எம்.என்.ராய் தொடங்கி ஈ.எம்.எஸ் முதல் அனைவரும் பார்ப்பன சாதி வெறியர்களால இருந்தனர் என்றே பிஸ்வாஸ் உறுதிகூறுகிறார். இந்நூல் சித்தரிக்கிறது. இதற்கெல்லாம் மேலாக அம்பேத்கர் நினைத்தே பார்த்திராத விசயங்களையெல்லாம் அவர் சொல்லியதாக வார்த்தைகளை திரித்து வேறு பொருள் கொடுக்கிறது. முன்னுக்குப் பின் முரணான விசயங்களை முன்மொழிகிறது. ஜனநாயகம் தோற்றுப்போனால் கம்யூனிசம் வந்துவிடும் நம் நாடு அதோகதி ஆகிவிடுமென்றெல்லாம் அம்பேத்கர் முழுங்கியதை நாம் அறிவோம். இதற்கெல்லாம் மேலாக அடையாள அரசியலை முன்னெடுத்து கட்சிக்குள் மார்க்சியத்தை திரிக்கப் புகுந்த முத்துமோகன் அருணன் போன்ற ஏனையோ அம்பேத்கர் மார்க்ஸியத்திற்கு நெருக்கமாக வந்தார் அவர் ஒரு இந்திய மார்க்சிஸ்ட் என்ற வகையில் புளுகியது பக்கம் பக்கமாய்க் கிடக்கையில் பிஸ்வாஸ் ‘இந்துக் கம்யூனிஸ்டுகளிடமிருந்தும் அவர்களது இயக்கத்திடமிருந்தும் டாக்டர் அம்பேத்கர் லட்சக்கணக்கான மைல்கள் விலகி இருந்தார். அவர்கள் குறித்து அவர் மிகுந்த அச்சமும் விழிப்புணர்வும் கொண்டிருந்தார். அதனால் பார்ப்பனிய சோசலிச தலைவர்களான மது லிமாயி போன்றவர்களின் பெரும் முயற்சிகளாலும் கூட, சோசலில முகாமில் அவரை இணைய வைக்க முடியவில்லை. இருப்பினும் அவர் தோழர் ஸ்டாலினுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முயன்று அதில் பெருமளவு முன்னேற்றம் அடைந்தார். தோழர் ஸ்டாலின் மறைந்த அன்றுகூட டாக்டர் அம்பேத்கர் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் முழுநாளும் பட்டினி கிடந்தார்” என்கிறார் பிஸ்வாஸ் அம்பேத்கர் கம்யூனிஸ்டுகளைக் கண்டு அச்சம் அடைந்தார் ஆனால் ஸ்டாலினுடன் தனிப்பட்ட முறையில் நெருக்கம் ஏற்படுத்திக்கொள்ள நினைத்து அதில் பெருமளவு முன்னேற்றமும் அடைந்தாராம் அம்பேத்கர். சரி...அடைந்து?
தன்னால் முடிந்தவரையில் அம்பேத்கரை ஏதுமற்ற எதுவும் தெரியாத அப்பாவியாகத்தான் சித்தரிக்கிறார் பிஸ்வாஸ். நூல் முழுக்க இப்படியே பயணிக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்ப்பனர்கள் இந்தியாவை வெற்றிகரமாக அடிமைப்படுத்தி வந்தனர். அவர்களே இதற்குப் பொறுப்பு என்று ஒட்டுமொத்தமாக வரலாற்றைக் கைகழுவிவிட்டு பாய்ந்தோடுகிறார் பிஸ்வாஸ். எங்கே செல்கிறார். தலித் ஆபத்பாந்தவர்களை நோக்கி அவர்கள் யார்? கான்ஷிராம்,சந்த்ராம்,பாபு ஜெகஜீவன்ராம்,ராம்விலாஸ் பஸ்வான் தொடங்கி இறுதியாக “ சகோதரி மாயாவதி அவர்களை உத்தரபிரதேசம் அளித்தது.” என்று பெருமையுடன் கூறுகிறார். எல்லாமே பார்ப்பனர்கள் எல்லாமே பார்ப்பனர்கள் என்று கதறும் பிஸ்வாஸின் கதறலை நாம் பொருட்படுத்தினோமானால் இந்தியாவில் நடந்த நல்லதுக்கும் பார்ப்பனர்களே காரண,. அம்பேத்கரை நிர்ணய சபையில் சேர்த்தது முதல்கொண்டு என்று தாராளமாகக் கூறலாம்.
பார்ப்பனர்கள் கெட்டவர்கள் என்று கூறும் பிஸ்வாஸ் மாயாவதியின் அரசியல் பார்ப்பனியத் தன்மையோடு இருப்பதை ஏன் காண மறுக்கிறார்.விரிவஞ்சி நிறுத்துகிறேன்.
நூல் முழுக்க சிபிஎம் கட்சியினரை பார்ப்பனக் கட்சி என்று கூறியதுடன் ஸ்டேட்ஸ் மேன் இதழ் கூறுவதாக பிஸ்வாஸ் “ என்னுடைய பெயர் உங்களுக்கு(மக்களுக்கு) உரிமை உடையதாக விளங்கவேண்டும்.” ஆனால் ரத்தன் டாடாவின் மயிரைத் தொடக்கூட ஒருவரையும் அனுமதிக்கமாட்டேன்” என்று அவர் கூறியது அவர் மக்களுக்கானவர் அல்ல என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.” என்பதை எடுத்துரைக்கிறார்.
நந்திகிராம் விவாகரத்தில் சிபிஎம்மின் நிலைப்பாடு குறுத்து பல்வேறு பாரதூரமான விமர்சனங்கள் கண்டனங்கள் வந்துள்ளதை அனைவரும் அறிவோம். ஆனால் சிபிஎம் கட்சி பார்ப்பன் சாதி வெறியில்தான் அதைச் செய்தது என்ற குற்றச்சாட்டை தலித் அடையாள அரசியல் வாதிகள் தவிர வேறு ஒருவரும் வைத்ததில்லை மேற்கு வங்கம் குறித்தான பிரச்சினையில் அதன் அதிகாரப் போக்கைக் குறித்து தா.பாண்டியன்: “இடதுசாரி ஒற்றுமை என்ற பெயரால்,சுயமாக கருத்துக்களை வெளியிட மேற்கு வங்கத்தில் இடமே தரப்படவில்லை. கேரளாவில் இரு கட்சித் தலைமையும் மாறுபட்ட நிலைகள் தோன்றுகிறபோது பகிரங்கமாக விவாதிக்க், கருத்தை வெளியிட தயங்கியதே இல்லை. ஆனால் மேற்கு வங்கத்தில் கட்சிக் கூட்டம் போடுவதற்குக் கூட, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டத் தலைமையிடம் அனுமதி பெற்றபின்தான் கூட்டம் நடத்தமுடியுமாம். எத்தனை கொடிகள் கூட்டத்தை ஒட்டிப் பறக்கலாம் என்பதையும் மார்க்சிஸ்ட் கட்சிதான் தீர்மானிக்குமாம். இந்த அடிமைப்பட்ட நிலையை இப்போதுதான் தோழர்களால் கூற முடிகிறது. வெட்கப்படவேண்டிய செயல். மேற்கு வங்கத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே தொடர்ந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வந்ததை “ குடும்பக்கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது” என தோழர் இந்திரஜித் குப்தா குறிப்பிடுவார்.
தனித்து சுயமாக இயங்குகிற தனித்தன்மையை இழந்து இடதுசாரி ஒற்றுமை என்பது, இடதுசாரி இயக்கம் முழுவதையும் பாதிக்கும். அதைத்தான் மேற்குவங்கத்தில் காண்கிறோம். 34 வருட கூட்டணி ஆட்சியில் 20 ஆண்டுகளாக இந்தியக் கம்யூனிஸ் கட்சியும் மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தது. எனவே அப்போதுதான் சிங்கூர் நந்திகிராம் வால்மார்ட் பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு மறுப்பு, மாவோயிஸ்டுகளை ஒடுக்குவது என்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனீஸ்ட் கட்சியினர் இழைத்த கிரிமினல் தாக்குதல்கள், நில ஒப்படைப்பு நின்று போனது பற்றி, இந்தியக் கம்யூனிஸ்ட்கட்சியின் தேசியக் குழு கூட்டங்களில் கேள்வி கேட்ட போதும், விவாதிக்கக் கேட்டபோதும், இடதுசாரி ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சி என்ற பதிலடி கிடைத்தது. ரிக்சா வண்டியை மனிதர்கள் இழுப்பதை நிறுத்தவேண்டும் என தோழர் டாங்கே சொன்னபோது இடதுசாரி ஒற்றுமையை உடைக்க காங்கிரசின் கையாள் முயல்கிறார் எனக் கூறியதைக் கேட்டேன்.” என்ற வகையில் மேற்கு வங்க அரசு குறித்து தோழர்.தாபாண்டியன் போன்றோர்கள் குற்றச்சாட்டுகளை வைத்த போதும் கூட அதை பார்ப்பனக் கம்யூனிட்ஸ் கட்சி என்று குறிப்பிட்டதில்லை.
இங்கு பிரச்சினை என்னவென்றால் அம்பேத்கருக்கு பொருள்முதல்வாத அடிப்படைகள் தெரியாது. அதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் மார்க்சிய நூல்களிலிருந்து மேற்கோள்களைப் பொறுக்கி எடுக்கும் பிஸ்வாஸ்க்குக் கூடவா அதன் அடிப்படைகள் தெரியாது.
பொருள்முதல்வாத அடிப்படை தெரியாத காரணத்தால் பிஸ்வாஸ் தன்னை மறந்து நூல் முழுக்க பார்ப்பனர்களை சூப்பர்மேன்களாகச் சித்தரிக்கிறார். இது அம்பேத்கரிடம் தொடங்கிய பிரச்சினை. சூரியகுலத்தில் பிறந்த சத்திரியர்கள் பலசாலிகள் சந்திர குலத்தில் பிறந்தவர்கள் மானம் கெட்டவர்கள் என்ற அளவுக்கு புரிந்து வைத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்த அம்பேத்கரின் பகுத்தறிவின்மையைத்தான் பிஸ்வாஸ் இந்த நூலிலும் ஆய்வென முன்வைக்கிறார். இவர்களைப் பொறுத்தவரையில் பார்ப்பனர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் எப்படி வேண்டுமானாலும் வரலாற்றை மாற்றியமைப்பார்கள் என்ற சாதி ரீதியிலான விளக்கமே இவர்களது ஆய்வாக இருக்கிறது.
மார்க்சியத்தின் அடிப்படைகளை ஓரளவுக்காவது அறிந்திருந்தால் பிஸ்வாஸ் இப்படி பார்ப்பனர்களை வரலாறு முழுக்க சாகசக்காரர்களாக சித்தரித்திருக்க மாட்டார். மிக எளிமையான கேள்வியாக பார்ப்பனர்கள் ஏன் மற்ற நாடுகளை தங்களது சூப்பர்மேன் பவர்களாக கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை என்ற எளிய கேள்வியாவது தோன்றியிருந்தால் இந்த முரண்பட்ட அணுகுமுறை வந்திருக்காது. சாதியும் உற்பத்தி உறவுகளும் என்னவென்று அவர் அறியாத மனநிலையில் தான் நினைத்தையெல்லாம் கொட்டிக் கவிழ்த்திருக்கிறார். சாதியின் பொருண்மை அதன் தேவைப்பாடுகள் எந்த வர்க்கத்துக்கு சேவை செய்தது என்கிற அடிப்படைக் கேள்வி கூட அவருக்கு எழவில்லை.
பிஸ்வாஸ்-புனிதபாண்டியன் போன்றோருக்கு பௌத்தமே சாதியை ஒழிக்கவல்லது, பிராமணர்கள் செத்தால் போதும் எல்லாம் முடிவுக்கு வந்துவிடும் என்கிற இந்த பகுத்தறிவற்ற மனநிலையை நாம் என்ன சொல்ல முடியும்? பூஜிக்கும் வகைமைகளை பார்ப்பனர்களிடம் கற்றுக்கொண்டு அம்பேத்கரை பூஜிப்பதிலும் தலித் போர்வையில் சாதித்தூய்மைவாதம் பேசுவதும்தான் இவர்களது முற்போக்கு செயல்பாடுகள்!
இரண்டாயிரம் வருடங்களாக பீடித்திருக்கும் ஜாதி நோயை பூர்வ பௌத்தமே ஒழிக்க முடியவில்லை. அதை ஒழிக்க அம்பேத்கரின் பௌத்தத்தால் எப்படி முடியும்? பௌத்தம் சாதிக்கு தனது பங்கை அறிவித்ததில்லையா?
பார்ப்பனர்களின் வரலாற்றுப் பாத்திரத்தை சாதியோடு பொருத்தி வைப்பதால் எந்த சாதியையும் ஒழித்துவிடமுடியாது. அதன் அடிப்படைகள் வேறு. இயங்கு தளம் வேறு. “இந்தியத் தத்துவ இயல் முழுவதும் கூட நிலப்பிரபுத்துவ யுகத்தின் படைப்பேயாகும். இதுவும் கிரேக்க தத்துவ இயலைப் போலவே உடலுழைப்பில்லாத, உணவு, உடை போன்ற கவலைகளில்லாதவர்களின் சிந்தனையின் பலனேயாகும். அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் தத்துவ இயலைப் படைத்ததில் நிலப்பிரபுகளுக்கு நேரடிப் பங்கு இருந்தது. உபநிஷத்துகளின் தத்துவத்தை உருவாக்கியதில் பிரவாஹன், ஜனகர், அஸ்வபதி, கைகேயர் போன்ற அரசர்களுக்கு முக்கியப் பங்கிருந்தது. யாகங்களின் போது அளிக்கப்பட்ட தட்சணைகளைப் பெற்றுக்கொண்ட புரோகித (பிராமண) வர்க்கம் மக்களின் உண்மை நிலையைப் பார்க்கத் தவறிய போது, பிராமணர்களின் சடங்குகள் ஓட்டைப்படகு என்று சொல்லி ‘பிரம்ம ஞானம்’ என்ற இருட்டறையை நிலப்பிரபுக்கள் (சத்திரியர்கள்) தயார் செய்தனர். வேதகால ரிஷிகள் எதார்த்தவாதிகள். அவர்கள் உலகம் எப்படி இருக்கிறதோ, அதை அப்படியே ஏற்றுக்கொண்டு அதிகபட்ச மகிழ்ச்சியை அடைய விரும்பினர். அவர்களுடைய வாழ்க்கை லட்சியம் வீடு வாசலையும், மனைவி மக்களையும் துறந்து காட்டுக்கு ஓடிப்போவதல்ல! அவர்களது குறிக்கோள் “புத்திர பௌத்திரர்களுடன் வீட்டிலேயே மகிழ்ச்சியாக வாழ்வது” தான்! (கிரீடந்தஹ புத்ரைர்ன் த்ரு ப்ர்மோத மானாஹ ஸ்வேதமே.’) அவர்கள் தனது குறிக்கோளை நன்கு புரிந்திருந்தனர். தேனும், பாலும் கலந்த ‘ஸோமரஸம்’ என்னும் லாகிரிப் பொருளைப் பருகி, ‘ஸோம ரஸம் குடித்து அமரர்களாகிவிட்டோம்” என்று கூறிக்கொண்டனர்.(அபயம் ஸோமமம்ருதாபவேம்)
பிராமணர்கள் செய்து வந்த யாகங்களில் நடந்ததென்ன! மக்கள் குழுக்காலத்தின் மக்கள் அனைவரும் ஓரிடத்தில் கூடி, உண்பதும், குடிப்பதும், ஆடுவதும் பாடுவதுமாக இருந்தனர். அவர்கள் அப்போதைக்குத் தெய்வங்களை மனிதர்களைக் காட்டிலும் சற்றே உயர்ந்தவர்களாக எண்ணிக் கொண்டிருந்ததால், தமது களியாட்டாங்களில் தெய்வங்களையும் இணைத்துக் கொண்டு அவர்களையும் மகிழ்விக்க விரும்பினர். தமக்காகத் தயாரித்து வைக்கப்பட்டிருந்த ஸோமரஸத்தின் கோப்பைகளைக் காட்டி, தமது பெரிய தெய்வமான இந்திரனை, “இந்திரனே வருக! ஸோமரஸத்துடன் இக்கோப்பைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பருகி உன் புகழ்பாடும் கீதங்களைக் கேட்டு மகிழ்க! என்று வரவேற்றுக் கொண்டிருந்தனர். (“இந்திர ஆயாஹிவீயதே, இமே ஸோமா அலங்கிருதாஹ எஷாம் பாஹி ஷ்ருதி ஹவம்”) ... ஆனால் சில காலத்துக்குப் பிற்கு ஆரியர்கள் மற்ற இனத்தவர்களுக்கு அக்கம் பக்கத்தில் சிறுபான்மையினராக வாழத் தொடங்கியதும், ஆடுமாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த அவர்கள் விவசாயமும், மற்ற கைத்தொழில்களும் செய்ய ஆரம்பித்ததும், கழிந்துபோன, அப்பழைய நாட்கள் மீண்டும் திரும்ப முடியாது. அதனால் இப்போது அந்த யாகங்கள் பழைய விழா நாட்களின் உயிரில்லாத நகல்களாக மட்டுமே ஆகிவிட்டிருந்தன. அவைகள் இப்போது புரோகிதர்களின் வருவாய்ச் சாதனங்களாக மட்டும் இருந்துவிட்டன. ஆகவே வளர்ச்சியில் முன்னேறிய சமுதாயத்தை யாகங்கள் இப்பொழுது திருப்திப்படுத்த முடியாது. இதனாலேயே சடங்குகளை எதிர்த்து உபநிஷத்துக்களின் ‘பிரம்ம வாதம்’தோன்றிற்று.
‘மறுபிறவி’ சித்தாந்தம் நமக்கு முதன்முதலில் உபநிஷத்துகளிலேயே காணப்படுகிறது. வேதங்கள் பரலோகத்தில் ‘அமரனாவதைப் பற்றிக் கூறியபோது, உபநிஷத்துக்கள் இவ்வுலகத்திலேயே மறுபிறப்பு குறித்து வலியுறுத்தின. வர்க்கங்களாகப் பிரிந்த சமுதாய அமைப்பைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட வாதம் இதுவென்பதை ஏற்கனவே குறிப்பிட்டோம். புரோகிதர்களுக்கு வெள்ளி அல்லாமல் தங்கத்தையே தானமாகத் தந்து நடத்தும் யாகங்களுக்கான பலன், தேவலோகத்திலே மட்டும் கிடைத்து, இவ்வுலகத்தில் எவ்விதப் பயனும் இல்லை என்று சொன்னால் பெருஞ்செலவு செய்து யாகங்களைச் செய்பவர்களுக்கு மகிழ்ச்சியாயிருக்குமா? அதனால் இவ்வுலகத்தில் செல்வந்தனாக இருப்பது முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பயன் என்று கூறப்பட்டது. இது ஒரே கல்லால் இரண்டு மாங்காய்களை அடிப்பதாகும். பிராமணர்களுக்குக் கொடுக்கப்படும் தானங்களின் பயனும், யாகங்களின் பலனும் இவ்வுலகச் சமுதாயத்திற்குள்ளேயே காட்டுவது, சமுதாய ஏற்றத்தாழ்வுகளை நியாயமானவை என்று நிரூபிப்பதாகும். ‘மறு பிறப்பு’ சித்தாந்தத்தின் மூலம் இப்பிறப்பு ஒன்றே என்று கருதாதீர்கள். ஆகவே சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அகற்றவோ, ஏழ்மையை ஒழிக்கவோ முயற்சிக்காதீர்கள் என்று அடக்கப்பட்ட வர்க்கத்திற்கு உபதேசிக்கப்பட்டது. உங்களுடைய ஏழ்மை கடவுள் சித்தம் மட்டுமல்ல: அது உங்கள் முற்பிறப்பின் வினைப் பயனேயாகும். மற்றவர் செல்வத்தைக் கண்டு நீங்கள் பொறாமைப் படக்கூடாது. சமுதாயத்தில் ஏழை - பணக்கார வர்க்கங்கள் சாஸ்வதமாக இருக்கின்றன: ஏனெனில் இவை மூலமாகவே நல்ல - கெட்ட காரியங்களுக்குப் பலன்கள் கிடைக்கின்றன. மலையை முட்டி மோதிக் கொள்வதற்குப் பதிலாக நீங்களும் நல்ல காரியங்களைச் செய்யுங்கள்! தான தருமங்களும், யாகங்களும் புரியுங்கள்! இதனால் அடுத்த பிறவியிலாவது அரச குடும்பத்திலோ பணக்காரக் குடும்பத்திலோ பிறந்து வைபோகங்களை அனுபவிக்கலாம்.
‘மறுபிறப்பு’ சித்தாந்தம் கண்டுபிடித்ததும் ‘சொர்க்க லோகம்’ என்ற கருத்தையும் விட்டுவிடவில்லை. இந்த ஆயுதமும் அப்படியே வைத்துக்கொள்ளப்பட்டது. இவ்விதம் உபநிஷத யுகத்தைச் சேர்ந்த நிலப்பிரபுத்துவம் அறிவுடையவர்களை ‘பிரம்மஞானம்’, முடிவில்லாத பிரம்மம்’(நேதி நேதி), தெரிந்து கொள்ளப்பட முடியாதவன் (அக்ஞேய) போன்ற புதிர்களில் சிக்கவைத்துவிட்டது. நிலப்பிரபுத்துவம் எதார்த்த உலகத்தை மறுத்து, அதைத் துச்சமாகவும், சாரமற்றதாகவும் வர்ணித்து அறிவாளர்களை மற்றொரு பக்கம் செலுத்திவிட்டது. எஞ்சிய சாதாரண மக்கள் சமூகப் புரட்சிப் பாதையிலிருந்து விலகிச் செல்ல சொர்க்கமும் - மறுபிறப்புமே போதுமானவையாக இருந்தன. பல்வேறு உள்நாட்டு - வெளிநாட்டு மதங்களால் மதங்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. அவற்றால் மக்கள் எங்கே மதங்களிலேயே நம்பிக்கை இழந்துவிடுவார்களோ என்று அஞ்சி “நதிகள் பல, ஆனால் கடல் ஒன்றே” என்னும் தத்துவம் பேசப்பட்டது. எல்லா மதங்களிடத்திலும் சகிப்புத் தன்மையும், எல்லா மதங்களும் சரியானவையே என்னும் கருத்தும் பிரச்சாரம் செய்யப்பட்டன.
இந்தியாவில் பிற்காலத்தில் நிகழ்ந்த மத வளர்ச்சியை ஆராய்ந்தால் இன்னும் பல விஷயங்கள் தெரிகின்றன. உபநிஷத்துகளின் ‘பிரம்ம ஞானம்’ ஆரியர்களின் மூளையிலிருந்து உதித்ததாகும். அக்காலத்திலும் நிறப்பிரச்சினை - ஆரியர், ஆரியரல்லாதாரின் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்னும் பிரச்சினை அல்லது பொருளாதார நலன்களின் முரண்பாடு - முடிவுக்கு வரவில்லை. ஆகையால் இப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய தேவையும் இருந்தது. வியாபார வளர்ச்சி இப்பணியைச் செய்தது. வியாபாரிகள் பெரும்பாலோர் ஆரியல்லாதவரே! வணிக யுகம் தோன்றுவதற்கு முன்பு அவர்கள் ஏதாவது ஒரு தொழிலோ, (எண்ணெயும் சாராயமும் தயாரித்தல், உணவு விடுதிகளையும்,மது விடுதிகளையும் நடத்துதல், பொன், வெள்ளி நகைகளைத் தயாரித்தல்) விவசாயமோ செய்துவந்தனர். வியாபார வர்க்கத்தில் பல்வேறு ஜாதிகள் இருந்தன. ‘கணங்கள்’ என்னும் குடியரசுகளைச் சேர்ந்த அவர்கள் ‘வர்ண அமைப்பை’ (பிராமண, ஷத்ரிய, வைசிய, சூத்திர என்னும் அமைப்பை) எதிர்ப்பவர்கள். அகர்வால், அக்ரஹரி, ரோஹதகி அல்லது ரஸதோகி ஆகிய ஜாதிகள் வணிக வர்க்கத்தைச் சேர்ந்தவையே! வணிக வர்க்கம் சமாதானத்தை விரும்புவதென்பதை கூறியுள்ளோம். அதனால் வர்ணப் போராட்டத்திற்கெதிரான கருத்தை வணிக வர்க்கம் ஆதரித்ததில் வியப்பில்லை. இதன் காரணமாகவே வைசிய இனம் பவுத்த, சமண மதங்களின் மகத்தான ஆதரவாளனாக மாறியது.” என்கிறார் ராகுல்ஜி.
வர்க்கப் பார்வை கொண்டு சிந்திக்கும் போது மதத்தின் ஆதாரத் தேவை யாருடைய நலனைப் பிரதிபலிக்கிறது என்பது தெள்ளெனத் தெரிகிறது அல்லவா? இதனை அடிப்படையாகக் கொண்டு இன்னும் எளிமையாக புரிந்து கொள்ள பாலகோபல்: “எந்த வடிவத்தில் கூறினாலும், எத்தனை வித்தியாசங்கள் இருந்தாலும் இறுதியாக இந்த மதங்கள் அனைத்தின் சாராம்சம் ஒன்றுதான். தாம் விளைவிக்கும் விளைச்சல் பாதிக்கு மேல் சுரண்டல் வர்க்கங்களின் கிடங்குகளுக்குப் போகிறது. ஆயினும், விவசாயி உழைக்க வேண்டும். தான் நெய்த துணி, கட்டும் வீடு, செதுக்கும் சிற்பம்,வேறொருவரின் அலங்காரம், வேறொருவரின் ஆடம்பரம், தனக்கு மட்டும் கூரை குடிசையே மிஞ்சும். ஆயினும், கூலிக்காரன் உழைக்க வேண்டும். இந்த உழைப்புச் சுரண்டலை அவன் வெறுக்காமல் அங்கீகரிக்கும் வகையில் பார்த்துக்கொள்வதே மதத்தின் முக்கியமான கடமை. மதத்தைப் புரோகிதர்கள் தமது சுயநலன்களுக்காகப் படைத்தார்கள் எனும் வாதத்தைக் காரணவாதிகள், நாத்திகர்கள் பிரச்சாரம் செய்தார்கள். பூஜைகள், திருமணங்கள், திதிகள் பிராமணர்களுக்கு எவ்வளவு ஆதாயத்தை சேர்க்கின்றன என்பதைக் கணக்கிட்டு, அதுவே மதத்தின் ‘பொருளியல் அடித்தளம்’ என நினைப்பார்கள். இது மிகவும் அறிவியலற்ற அணுகுமுறை. உழைப்பவன் உழைப்புச் சுரண்டலுக்கு உட்படுவதைக் கவனிப்பதே மதத்தின் கடமை. இதற்கு ஒரு கருவியாக பணியாற்றும் புரோகிதர்கள் அந்தப் பணியில் ஒரு பணியாக தமது சுயநலனைக் கவனித்துக் கொள்கிறார்கள். ஆன்மா நிலையானது எனும் சித்தாந்தத்தை எடுத்துக் கொள்வோம். இந்த உடல் நிலையற்றது எனவும், துச்சமெனவும், நாம் உடைகளை மாற்றுவதைப் போல் ஆன்மா உடைகளை மாற்றுகிறது எனவும் (பகவத் கீதையில் கூறியதைப் போல்) பிரச்சாரம் செய்வதில் உள்ள நோக்கம் என்னவென்றால் இந்த உடல் நிலையற்றது; அற்பமானது; ஆகவே, அது செய்கிற உழைப்பாகட்டும்...அந்த உழைப்பை சுரண்டுவதாகட்டும் பெரிய விசயமாக கருதாமல் நிலையான ஆன்மாவுக்கு மோட்சத்தைச் சாதிக்க வேண்டிய ஏற்பாட்டில் கவனமாக ஈடுபடுங்கள் என உழைக்கும் மக்களுக்கு கூறுதல். இந்த சித்தாந்தத்தின் ஒரு பகுதியாகவே இறந்தவர்களுக்கு உணவளிக்கும் திதி சடங்குகள் தோன்றின. இது அவற்றின் தோற்ற வரலாற்றின் பிரதான அம்சம். ஆனால், பிற திதி சடங்குகளைச் செய்விக்கும் பிராமணர்கள் ஆயிரத்தெட்டு விதிகளை உருவாக்கி ஒருவர் மரணத்தை தமது பண்டிகையாக மாற்றினார்கள். திதி சடங்குகளை எவ்வளவு சிறப்பாக செய்கிறோமோ அவ்வளவு சுக போகங்கள் இறந்தவர்களுக்குக் கிடைக்கும் என நம்பவைத்து தமது வாழ்க்கையை உத்தரவாதப்படுத்திக் கொண்டார்கள். மந்திர தந்திரங்களும் பூஜை சடங்குகளும் இவ்வாறானவையே. அவற்றின் நோக்கம் பூஜாரிகளின் வயிற்றை நிரப்புவதல்ல. சாதாரண மனிதனை (உழைப்பாளியை) சமூகத்தில், இயற்கையின் முன் சக்தியற்றவனாக நிறுத்துவதே. தனக்கு எதுவும் தெரியாது. இந்த உலகம், அதில் கஷ்ட நஷ்டங்கள், அவற்றிற்கான காரணங்கள் தனக்குப் புரியாது. இவ்வுலகமோ, பரலோகமோ கடவுளை கேட்க வேண்டுமானாலும் அதுவும் தன்னால் முடியாது. அதற்காக ஒரு தந்திரம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கும். அது பூஜாரிகளுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். வாழ்க்கை தன் போக்கில் போக வேண்டுமானாலும் திருமணம், பிறப்பு அனைத்துக்கும் சடங்குகள் இருக்கும். அவையும் பூஜாரிகளுக்கு மட்டுமே தெரியும். இவை அனைத்தின் நோக்கமும் உழைப்பாளிக்கு, இந்த உலகத்தை புரிந்துகொள்ளும் தகுதியும் சக்தியும் இல்லையென நம்பவைத்து, எத்தகைய சுரண்டல் அக்கிரமங்கள் அவன் மீது சுமத்தினாலும் அதுவே இயற்கை தர்மம் என, பாழாய்ப்போன இதுவே தனது வாழ்க்கை எனக் கருதி அக்கிரமங்களுக்கு அடங்கிப் போகச் செய்தல். புரோகிதர்களுக்குத் தவிர உழைப்பாளர்களுக்கு கல்வியில்லாமல் செய்ததின் நோக்கமும் இதுவே. இந்த முறையில் வேலையில் வேலையாக பிரபஞ்ச ஞானத்தின் மீது தனது ஏகபோகத்தின் துணை கொண்டு புரோகிதர்கள். தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்வார்கள். இதுவே தவிர, அவர்கள் வயிறு நிரப்பவே மதம் இருக்கிறதென்றும், அவர்கள் பூஜை சடங்குகள் மூலம் சேர்ப்பதே சுரண்டல் எனவும் நாத்திகர்கள் செய்கிற சித்தாந்தங்கள் அர்த்தமற்றவை. நாத்திகர்களுக்குப் புரியாத விசயம், கடந்த காலத்து மன்னர், நிலப்பிரப்புத்துவ வர்க்கங்களுக்கு தெளிவாகப் புரிந்திருந்தது. பிராமணர்கள் தமது வயிற்றை நிரப்ப மட்டுமே இல்லை எனவும், நிலப்பிரபுத்துவ சுரண்டலை நிலைக்கச் செய்யவே இருக்கிறார்கள் எனவும் அங்கீகரித்து பிராமணர்களுக்குக் காணிக்கையாக அக்ரகாரங்களை மானியங்களாக கொடுத்து அவர்களையும் நிலப்பிரப்புக்களாக்கினார்கள். அதே போல் புத்த விகாரங்களுக்கும், முஸ்லீம் மசூதிகளுக்கும், கிருத்துவ சர்ச்சுக்களுக்கும் மானியங்கள் கொடுத்து மத அமைப்பு முறையை நிலப்பிரபுத்துவ வர்க்கத்திற்குள் மேலும் நெருக்கமாக இழுத்துச் சேர்த்துக்கொண்டனர்.” என்கிறார் பாலகோபால்.
மதம் சாதி குறித்தான பண்புகளை ஆராயாமல் எல்லாப் பழியையும் பார்ப்பனர்கள் மீது தூக்கிப் போடுவது என்பது பார்ப்பனர்களை இந்திய வரலாற்றில் தீர்மானகரமான சக்தியாக கருதுவதற்குச் சமம். அவபுகழாக துதிபாடுவதற்குச் சமம்.
இதன் மறுதலையாக அம்பேத்கர் குறித்தான ஒரு தத்துவப் பார்வையை டெல்டும்ப்டே தனது பாணியில் எடுத்துரைக்கிறார்: நெருக்கடிக்களுக்கான காரணங்களைப் பகுத்தாய்வு செய்ய முனைகையில் தலித்துகள் செய்யும் முதல் காரியம், அந்த நெருக்கடிகளுக்கான புறக்காரணங்களைச் சொல்வதுதான். தாங்கள் மிகச் சரியானவர்கள் என்பது போல் அவற்றைக் கூறும் போக்கு தலித்துகளிடம் உள்ளது. தங்களைப் பாதிக்கும் எல்லாவற்றுக்கும் அவர்கள் எளிதான தீர்வை வைத்திருக்கிறார்கள்: பார்ப்பனர்கள் இல்லாவிட்டால் வேறு யார் மீதாவது பழிசுமத்துவது. தலித்துகள் ஒருகாலத்தில் மகத்தான மக்களாக இருந்தார்கள்; பார்ப்பன மோசடிக்காரர்கள் தங்கள் சாஸ்திர சூழ்ச்சிகளைக் கொண்டு தலித்துகளை மனிதனுக்குக் கீழான நிலைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்; தலித் பண்பாடு மிக உயர்ந்ததாக இருந்தது; ஆனால் மேலாண்மை செலுத்தும் பார்ப்பனியப் பண்பாடு அந்த தலித் பண்பாட்டுக்குக் குழி பறித்துவிட்டது - இதுதான் அவர்களது பதில். தலித்துகளை அடிமைப்படுத்த பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சிகளை நாம் மறுக்கவில்லை. ஆனால் புறக்காரணங்கள் மீதே திரும்பத் திரும்ப பழிசுமத்துவது, தங்களது பலகீனங்கள் சிலவற்றை அறிந்து கொள்ள உள்நோக்கிய பார்வையைச் செலுத்த முடியாதபடி அவர்களது கண்களை மூடிவிடுகிறது. அவர்களது விடுதலை என்னும் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், அவர்கள் தங்களது பலகீனங்கள் மீது உள்நோக்கிய பார்வையைச் செலுத்துவதுதான் புறச் சக்திகளின் மீது பழிசுமத்துவதைவிட முக்கியமானது. எடுத்துக்காட்டாக, யாரோ ஒருவர் அவர்களை ஏமாற்றுவதாக வைத்துக் கொள்வோம். அதனோடு சேர்ந்த மற்றொரு உண்மை என்னவென்றால், அவர்களிடம் சில பலகீனங்கள் இருப்பதால்தான் யாரோ ஒருவரால் அவர்களை ஏமாற்ற முடிகின்றது என்பதாகும். இந்த நோக்கு நிலைதான் அவர்களுக்கான சிறந்த எதிர்காலத்துக்கான பாதையை வகுத்துத் தரும். புறச்சக்திகள் மீது பழி சுமத்துவது, பாதிக்கப்பட்டவருக்கு உளவியல் ரீதியான ஆறுதலைத் தருமேயன்றி, அவர் உலகியல்ரீதியாகத் தனது பலகீனங்களைக் கடந்து வருவதற்கு உதவாது. நடந்த தவறுகள் என்ன என்பது குறித்த ஆய்வு செய்கையில், உள் பலகீனங்களுக்குப் பொறுப்பான புறச்சக்திகளைத் தேடுவதை விடுத்து தங்கள் சுயத்தைத் தேடுவதுதான் அம்பேத்கரியர்களுக்கு நல்லது.” என்கிறார். டெல்டும்ப்டே.
பார்ப்பனர்கள் தலித்துகளை ஒடுக்குவதில் அடைந்த சுயலாபங்கள் என்ன? அப்போதைய அரசின் தோற்றத்திற்கும், கட்டுமானத்திற்கும் அதில் பங்கில்லையா? எத்தனை பார்ப்பனர்கள் அரசர்களாக இருந்துள்ளனர் என்பதெல்லாம் கேள்விகள். ஆனால் அம்பேத்கரைப் புனிதப்படுத்துபவர்களோ புத்தராலும், அவரது பௌத்தத்தாலும், கடந்த இரண்டாயிரம் வருடங்களாக ஒழிக்க முடியாமல் முடங்கிப் போன ஒரு தத்துவத்தை மறுபடியும் அம்பேத்கரிய பாணியில் தூசு தட்டி ஓட வைக்கவே முயல்வதோடு அதையே அம்பேத்கரியமாக வரையறுக்கவும் செய்கிறார்கள். விளைவு, அது போலச் செய்தல் அடிப்படையில் மிகத் தெளிவான“பார்ப்பனிய பௌத்ததையே” முன்வைக்கிறது.
டெல்டும்ப்டேவின் குறைந்த பட்ச அக்கறை மார்க்சியர்களுக்கு தலித்துகளை கைவிடவேண்டாம் என்கிற அக்கறையிலும், தலித்துகள் மார்க்சியத்தை கற்கவேண்டும் என்கிற அறவாத அடிப்படையை வைத்து முன்னெழுபவை. நல்நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் புனிதபாண்டியன் நீலகண்டன் போன்றோருக்கு சாதி என்பது பிழைப்புவாதக் கருவி.
தலித்துகளை பார்ப்பனார்களாக அம்பேத்கரைப் பார்ப்பன பூசாரியாக மாற்றிவைத்து அவரே தீர்வு அவரே அனைத்தும் என ஓதத் தொடங்குகிறது. புத்தர் சாதியை ஒழிக்க வந்தவரில்லை. துக்கத்தை ஒழிக்க வந்தவர். சாதி மறுப்பியலாக புத்தரிடம் என்ன கிடைக்கும். அடிமைப்பட்டவன், கடன் பட்டவன், படைவீரன் இம்மூவரையும் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்று சொல்லி ஆளும் வர்க்கத்திற்கு அவராலான சேவையைச் செய்தவர். மேலும் பிக்குகள் உழைக்கக் கூடாது என்கிற விதியையும் வகுத்தவர். அக்கால கட்டத்தில் அவரால் அணுகமுடிந்த எல்லை இதோடு முடிந்து போனது. ஆண்டிக்கும் அரசனுக்கும் ஒரே துக்கம் என்ற கருத்தியலை வைத்ததும் அக்காலத்தைய அவைதீக மரபுகளிலிருந்து எடுக்கப்பட்ட பகுத்தறிவுக் கொள்கைகளையும் அவரால் கருணையோடு முன்வைக்க மட்டுமே முடிந்தது. செயலூக்கமாக அதில் அவரால் எதையும் செய்ய முடியவில்லை. விளைவு. வரலாற்றின் முதல் மதமாக பௌத்தம் மாபெரும் நிறுவனமாகியது. ஆனால் இவர்களைப் பொறுத்தவரை பார்ப்பனர்கள் சூப்பர் மேன்கள். விளைவாக இந்தியாவை பார்ப்பனர்களே தீர்மானித்தார்கள். என்று பிஸ்வாஸ் எடுத்துரைக்கிறார். இந்த நிறக்குருடு சாதியவாதத்தால் ஆனது.
சிபிஎம் கட்சியின் மீது குற்றம் சாட்டுவதற்கான கருத்தியல்கள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக சிபிஎம் கட்சியை பார்ப்பனக் கட்சி என்று சொல்லுவது ஏன்? இதற்கெல்லாம் மேலாக இந்துத்துவ அடிப்படைகளை தாக்குவதை விட்டுவிட்டு தலித்தியம் என்ற பெயரால் மார்க்சியர்களை பார்ப்பனர்கள் என்று சொல்வது யாருடைய வேலைத்திட்டம்? இந்த வேலைத்திட்டத்தின் பின்னால் இருப்பது யாருடைய லாபம்?உண்மையில் இவர்கள் யாருக்கு சேவகம் செய்கிறார்கள்? இதெல்லாம் அடிப்படைக் கேள்விகள்.
நிலைமை இப்படியிருக்க, அம்பேத்கரைக் குறித்த எனது விமர்சனத்தை திரித்து தனிநபராய் இருக்கும் காரணத்தால் அமைப்பைத் துணைக்கழைத்து பாசிச மனநிலையோடு என் மீது புகார் அளித்திருக்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி 20000த்திற்கும் மேற்பட்ட படுகொலைகளை செய்த சிபிஐ-எம் கட்சியின் மீது என்னவிதமான நடவடிக்கையை மேற்கொள்ளும்? இந்தக் குற்றச்சாட்டை நூலாக வைத்திருப்பது தலித் அடையாள அரசியல்வாதிகள். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பார்வையில் தலித்துகள். என்ன செய்யப்போகிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி?
எதற்கெடுத்தாலும் அம்பேத்கரை வைத்து அடையாள அரசியல் செய்வதும், வன்கொடுமை வழக்கைக் பூச்சாண்டித்தனமாகக் காட்டும் தமுஎகசவின் மாநிலச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா இது குறித்து எங்கேனும் குரல் எழுப்பியுள்ளாரா? பொலீட் பீரோவில் தலித்துகள் இல்லை என பொதுவெளியில் ஆதங்கப்படும் அவரது கோரிக்கையை சிபிஎம் பரிசீலிக்கிறதா? இந்நூல்கள் குறித்து தலித்போராளி வேசம் போடும் அவரது கருத்துகள் என்ன?
அம்பேத்கரை விமர்சித்தாலே வன்கொடுமை வழக்கின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கொதித்து தன் இருப்பை அறிவித்துக்கொள்ளும் ஆதவன் தீட்சண்யா, இருபாதியிரத்திற்கும் மேற்பட்ட கொலைகளை பார்ப்பனக் கம்யூனிஸ்டுகள் செய்தனர் என்ற தலித்துகளின் குற்றச்சாட்டுக்கு எப்படிப் பதில் அளிப்பார். இத்தகைய பிழைப்புவாதிகளைக் கூட விட்டுவிடலாம்.
மார்க்சியத்தைத் செயலூக்கம் கொண்ட தத்துவமாக ஏற்று களத்தில் நிற்கும் எண்ணற்ற சிபிஎம் கட்சியினருக்கும், தமுஎகச தோழர்களுக்கும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் அர்ப்பணிப்போடு செயல்படும் தோழர்களுக்கும்- தலித்தியவாதிகள் வைக்கும் கேள்விகளை முன்வைத்து
1.சிபிஎம் கட்சி பார்ப்பனக் கட்சியா?
2.இருபதாயிரம் தலித்துகளை கம்யூனிஸ்ட் கட்சி கொன்றதா?
3.நந்திகிராம் குறித்து உங்களது கருத்தென்ன?
இதற்கான பதில்கள் என்ன?
உண்மையில் இது நடந்திருந்தால் சிபிஐ-எம் கட்சி பாசிஸ்டுகளின் கட்சி என்றே குறிப்பிடுவேன். இல்லையென்றால் தலித்துகள் தங்களது அடையாள அரசியலால் இடதுசாரிகளை ஒழித்துக்கட்ட பரப்பிய அவதூறென்பேன்.
இதெல்லாம் காலம் சென்ற கட்டுக்கதைகள் என்று கூற நினைத்தால் இப்பொழுது ஜனவரி 2022இல் வெளிவந்த நூலான “குருதி நிலம்” நூலோ “மேற்கு வங்க கம்யூனிஸ்ட் ஆட்சியில் நடந்த மரிச்ஜாப்பி படுகொலைக்கு தெளிவாக ஒரு காரணத்தைக் கூற முடியும்-சாதி” என்கிறது. அதோடு “பந்தாலாவிலிருந்து சிங்கூர்-நந்திகிராம் வரை பல பாலியல் வன்முறை மற்றும் அரசியல் கொலைகளுக்கு சிபிஐ -எம் அரசிற்குப் பங்கிருப்பதாக சமூகச் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்” “தீப்ஹல்தார் தான் பத்திரிக்கையாளராக ஆனதன் நோக்கமே மரிச்ஜாப்பியின் கதையை என்றாவது எழுதவேண்டும் என்ற உந்துதல்தான் என்கிறார்.” இதெல்லாம் போக சிபிஎம் தலைவருக்கு செருப்பு மாலை போட்டது வரை நூலில் தகவல்கள் இருக்கிறது.
தோழர்களே உரையாடுங்கள்.
உரையாட வேண்டும்...
உரையாடல் தொடரும்...
-வசுமித்ர.