Thursday, September 6, 2012

காலச்சுவட்டின் இடது கால் பெருவிரலை மனுஷ்ய புத்திரன் என்பவர் கடித்தார் ………..



 சின்ன விசயங்களின் கடவுள் என்ற நூலை முன்வைத்து....



2000 வருட( இந்தக் காலக்கணக்கில் எனக்கு சந்தேகம் என்றும் உள்ளது) தமிழ் வரலாற்றில் ஒரு நூலை மொழிபெயர்ப்பதில் அடித்துப் பிடித்துக்கொண்டு ஆவலாதி பொங்க பதிப்பகங்கள் போட்டி போட்டு வெளியிடுவது உண்மையிலேயே மிகுந்த வரவேற்புக்குரியது. நான் இதில் மிகுந்த உவகையடைகிறேன். எழுத்தாளர்களின் பயன் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருவது குறித்து ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், இப்புத்தக அடிதடி குறித்த காலச்சுவடு கண்ணன் அளித்த விளக்கங்கள் மிகுந்த உத்வேகத்தை எனக்களித்தது.

காரணம் எனது சுயநலமே.  நான் எழுதிக்கொண்டிருக்கும் நாவலா கவிதையா கதையா என வகைப்படுத்த முடியாத தோற்றத்தில் வரும் எனது வார்த்தைகளைத் தொகுத்து வெளியிட இதே போல் பதிப்பாளர்கள் சண்டையிட்டால் நான் ஜென்ம சாப்ல்யம் அடைவேன். அவர்கள் நூலை வெளியிடக்கூடத் தேவையில்லை. சண்டையிட்டு அதை பதிவிட்டால் போதும். நிம்மதி.

கவிஞர் சுகுமாரனுக்கு மனுஷ்ய புத்திரன் என்பவர் முகப்புத்தக வாயிலாக  ஒரு கூற்றை பதிவிட்டிருப்பதாக காலச்சுவடு கண்ணன் இம்மாத காலச்சுவட்டில் ( செப் 2012) எழுதியிருக்கிறார். வாசகம் கீழ்க்கண்டவாறு.. “ கவிஞர்கள் எப்போதும் எதற்காகவும் உண்மையை விட்டுக்கொடுக்காதவர்கள் இல்லையா ?” என்று மனுஷ்ய புத்திரன் என்பவர் கேட்டிருக்கிறார்.

இவர் உயிர்மை என்ற பத்திரிக்கையும் அதன் பின் உயிர்மை பதிப்பகமும் தொடங்கியிருக்கிறார். சமீப வருடங்களாக தனது சொத்தான உயிர்மை பத்திரிக்கையில் இவர் கவிதைகள் எழுதிவருவதாகச் சொல்லுவதோடு அதை தனது பத்திரிக்கையிலேயே மனத்துணிவோடு வெளியிட்டு வருகிறார். அதோடுமட்டுமில்லாது அதைத் தொகுப்பாக வெளியிடும் அவரது தன்னப்பிக்கை மன உறுதி என்னை மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தும் ஒன்று.

இங்கு இப்பொழுது எனக்கு கேள்வியாக எழுவது ஒன்றே ஒன்றுதான். கவிஞர் சுகுமாரன் கவிஞர்தான். அதனால் உண்மையைப் பேச வேண்டும். ஆம கவிஞர்கள் எப்போதும் எதற்காகவும் உண்மையை விட்டுக்கொடுக்காதவர்களே. இந்த மனுஷ்யபுத்திரன் என்பவரும் ஒரு காலத்தில் கவிஞராக அறிமுகமானவரே. அதனால் எதற்காகவும் உண்மையை விட்டுக்கொடுக்காமல் தனது பதிப்பகத்தில் எந்தெந்தக் கவிஞர்களிடம் காசு வாங்கிக்கொண்டு புத்தகம் போட்டேன் எனச் சொன்னால் ஒரு வாசகனாக மகிழ்வேன்….

இந்தக் காசுக்கு 300 காப்பிகள் போடுவேன் இந்தக் காசுக்கு 500 காப்பிகள் போடுவேன் அதோடு புத்தகத்தை எழுதியவரே இத்தனை காப்பிகள் வாங்கிச் செல்லவேண்டும் என்கிற  ஷரத்தையும் இணைத்தால் பெரு மகிழ்வு கொள்வேன். ஏனெனில் இங்கு கவிப்பட்டாளங்கள் தங்கள் துவக்குகளை தூக்கிக் கொண்டு சுஜாதா புத்தகம் போட்டாங்கள்ல அந்தப் பதிப்பகத்துல என் புக்கு வந்திருக்கு, ஜெயமோகன் புத்தகம் போட்டாங்கள்ல அந்தப் பதிப்பகத்துல என் கவிதபுக்கு வந்துருக்கு நானும் கவிஞராக்கும் என தோள் உயர்த்தி, மூக்கு விடைத்து  பிற எழுத்தாளர்களின் தோளில் ஏறி பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். இதில் சம்பந்தப்பட்ட கவிஞர்களைப் பார்த்து, மதிப்பிற்குறிய கவிப்பெருந்தகைகளே அவர்கள் எழுதினார்கள் புத்தகம் போட்டார்கள். நீங்கள் என்ன செய்தீர்கள் என்ற கேள்வியைக் கேட்டால் சம்பந்தப்பட்ட புத்தகம் போட்ட கவிஞர்கள் செவியில் ஏராளாமான ஊமத்தம் பூக்கள் மலர்வதோடு அதை வாசகக் காதுகளிலும் சுற்றிவிடுகிறார்கள்.

புத்தகம் போட்டு அதை கழுதைப் பொதியெனச் சுமந்து நண்பர்களுக்கு இலவசமாய் வழங்கும் அவர்களது   வள்ளல் குணம் வியக்கத்தக்கது.  இது  எந்த விதத்திலும் அவர்களது தயாள குணத்தை பாதிக்கவில்லை என்பதையும் இங்கு பெருமையோடு நினைவுபடுத்துகிறேன்.

காசு கொடுத்தால் அட்டை முதல் அட்டை வரை தரமான புத்தகங்களை அச்சிட்டுத் தருகிறோம் என்ற விளம்பரத்தில் ஒரு துணை நிறுவனத்தையும் இந்த மனுஷ்யபுத்திரன் என்பவர் நடத்திவருகிறார். அதில் புத்தகங்கள் வெளிவந்திருந்தால் சம்பந்தப்பட்ட   கவிஞருக்கு வார்த்தைகளைவிட வண்ணத்தில், அட்டைப்பட ஓவியங்களில், அதன் செய் நேர்த்திகளில் எவ்வளவு தேர்வு…என்னே ரசனை  என விதந்தோதலாம். ஆனால் உயிர்மையில் புத்தகம் போட்டு,  கொடுத்த காசுக்காக பின்னட்டையில் நாலுவரிகளைக் கூவுவதை என்ன வென்று சொல்வது.

சிறுகுறிப்பு;

காலச்சுவடு காசு வாங்கிக்கொண்டு புத்தகம் போட்டாதாக ஒரு தகவல் கூட வாசகானான என் காதுகளை எட்டவில்லை… இருந்தால் உரையாடலாம்…ஏனெனில்  கவிஞர்கள் எப்போதும் எதற்காகவும் உண்மையை விட்டுக்கொடுக்காதவர்கள் இல்லையா ?” வாழ்க வளமுடன்( இதை பிரபலமாக்கியது வேதத்திரி மகரிஷி)


பெருங்குறிப்பு; இதை மனுஷ்ய புத்திரன் என்பவர்தான் சொல்லவேண்டும் என்பதில்லை. சம்பந்தப்பட்ட புத்தகம் போட்ட கவிஞர்களே சொல்லலாம். ஏனெனில் கவிஞர்கள் எப்போதும் எதற்காகவும் உண்மையை விட்டுக்கொடுக்காதவர்கள் இல்லையா…. ‘கதவைத் திற காற்று வரட்டும்….” ( இதை கவிதையில் எழுதியவர் சுந்தரராமசாமி, பிரபலப்படுத்தியவர் சுவாமி நித்யானந்தா என்பவர்.




காசுகொடுத்தா மனுஷ்யபுத்திரன் புத்தகம் போடுவார்.... மச்சான் நீ போடேன்...நீ போடேன் என்று உயிர்மைக்கு கவிஞர் பிடிக்கும் வேலையைச் செய்யும் ஒரு எழுத்தாளரையும், அவரைக் கண்டால் மனம் வருத்தப்படும் ஒரு நண்பரையும் நான் அறிவேன்.

இந்தக் குறிப்பு எனக்கு நானே சொல்லிக்கொள்வதற்காக…


வாழ்த்துக்களுடன்….
வசுமித்ர.

Monday, July 9, 2012

நூறு நாற்காலிகளும்....ஒரு ஜெயமோகனும்.


அறிஞர் ஜெயமோகன் அவர்கள் பண்டிதர் அயோத்திதாசரைப் பற்றி மூலச்சிந்தனையாளர் இவர்தான் என் தலித் உலகுக்கே எடுத்துக்காட்டிய உத்தமப் பெருமான் ஆவார். ஒருவர் தலித்தாக இல்லாவிடினும் உள்ளுக்குள் கொதிப்பேறி நாட்பட்ட அறமானது எரிமலைக் குழம்பெனத் தகிக்கும் எனில் அவர் அறம் பற்றியும் எவர் பற்றியும் போதிக்கும் முகமாக எழுதலாம். எழுத்து வெளியீடாக இதை வே.அலெக்ஸ் பதிப்பித்திருக்கிறார். பதிப்புரையில் இதுவரை அயோத்திதாசரை தமிழ்ச் சமூகத்தில் இதுவரை யாரும் காணாதபோது, அவரை ஒரு மூலச் சிந்தனையாளராக, மிகவும் அறமான தன் மானத்துடன் தனக்கேயுரிய பரபரப்புடம் ஜெயமோகன் கண்டுபிடித்து அவரை மூலச் சிந்தனையாளர் என, தலித் மக்களுக்கே அறிவுறுத்தியபோது அரங்கம் கவனமாக செவிமடுத்து உரையை குறிப்பெடுத்து அவ்வுரையை வரலாற்றாக்கும் வேலையைச் செய்தது. இவ்வுரையை கேட்கமட்டும்,

( அயோத்திதாசரின் உரையை அல்ல ) கேட்கவென சென்னை விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி கரூர் ஈரோடு என தேனி வரை அறிஞர் பெருமக்கள் வந்துள்ளனர்.

பதிப்பாசிரியர் இந்த உலகப்புகழ் உத்தமச் சிறுகதையை தனது கணிப்பொறியில் தரவிரக்கம் செய்து படித்தபொழுது அவருக்கு ஆழ்ந்த அதிர்ச்சியும் மனவேதனையும் மற்றும் உலுக்கிப் போடுதலும் நிகழ்ந்துள்ளது. உலுக்கிப் போட்டதன் விளைவாக தனது சில நண்பர்களுக்காக பரிந்துரை செய்யும்போது அவர்கள் படித்துக்கொண்டிருக்கும்போதே பொலபொலவென கண்ணீர் சிந்தியிருக்கிறார்கள். அதிலும் ஒரு வாசகர் ஜெயமோகனது கதையை படிக்க மாட்டேன் என வீராப்பாக இருந்ததாகவும் பதிப்பாசிரியர் சொல்லி அதை படித்ததும் ரியலி வெரி ஷாக்கிங் என்றதாகவும் பதிந்துள்ளார்.

ஒரு வாசகனாக எனக்கு நூலைப் படித்ததும் பெரிய பெரிய அதிர்ச்சியெல்லாம் வந்தது. சொல்லப்போனால் சில பல ஆண்டுகளுக்கு முன்னால் எனது பழைய வாசிப்பில் கதைகளை, கதைகளாய், கதைகளாய் மட்டும் படித்து இப்படி எனக்கு வந்த ஷாக்கீங், கண்ணீர், மற்றும் மனச் சோர்வு இவைகளை, உண்மைகளை அறிய நேர்ந்தபோது மிகவும் ஷாக்கிங்காக வெட்கம் வந்தது.

அயோத்திதாசர் எழுத்துக்களில். அம்பேத்கரின் எழுத்துக்களில் தெரியாத இந்த ஷாக்கிங், கண்ணீர், உலுக்கிப் போடுதல் மற்றும் தவிர்க்கமுடியாத அதிர்ச்சிகளையெல்லாம் ஜெயமோகன் தனது சிறுகதையில் ஷாக்கிங்க் நிறைந்த பல திருப்புமுனைகளோடு தந்துள்ளார். இடையிடையே மடங்கள் பற்றியும் அறத்தின் தீராத வேட்கையுணர்வு, மின்னும் கண்கள், ஆழமான சோர்வு என்ற பதங்கள் காந்திய அறிதலாய் முன்வைக்கப் படுகிறது.

அறம் என்பது அறிஞர் ஜெயமோகனின் வழிமுறைகளில் தனிமனிதன் சார்ந்ததே. நூல் முழுக்க ஒரு தலித்தின் தனிமனித அறத்தைப் பேச மற்ற ஆளும் மனிதர்களின் மன அறங்களைப் பேசியுள்ளார். அறம் என்றால் மனிதர்களுக்குப் பொது அதில் ஒடுக்கப்பட்ட சாதியை நிர்ணயிக்கும் அந்த மனிதனின் அறம் என்ன வாக இருக்கும் எனக் கேட்டுக்கொண்டேன். கதையின் இடையே வரும் அம்மா கேரக்டரானது ஆசிரியருக்கு தனது சொந்த உளவியல் சிக்கல் நிறைந்த தனது அன்னையின் மரணத்தையே இக்கதையிலும் கிளறியிருக்கிறது. இதை எனக்குத் தெரிந்து இந்த நூலில்தான் வெளிச்சமாக எழுதியிருக்கிறார். நூல் பற்றி அதிகமாகவோ குறைவாகவோ சொல்ல ஒன்றுமில்லை.

நூறு நாற்காலிகள் ஒரு அதியற்புத கண்ணீர் கதை. வரிகளில் துக்கம் வேண்டுவோர் மிகவும் நிதானமாக எழுத்து எழுத்தாய் படித்தால். கண்ணீர் வர கட்டாயம் உத்திரவாதம். படித்துவிட்டு. விஷ்ணுபுர மடத்தில் இணைந்தால் மோட்சம்.

இவைகள் என் வாசிப்பின் தளுதளுப்பு நிறைந்த கண்ணீர் கேள்விகள். தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம்.

1 இதைப் பதிப்பித்த வே. அலெக்ஸ். அயோத்திதாசரவர்களின் எழுத்துக்களைப் படிக்கும்போது இந்த ஷாக்கிங் வகையறா உணர்ச்சிகளை அடைந்ததாக எங்கும் பதிந்திருக்கிறாரா எனத் தெரியவில்லை.

2 அம்பேத்கரின் எழுத்துக்களைப் படிக்கும் போது பதிப்பாசிரியருக்கும் மற்ற நண்பர்களுக்கும் கண்ணீர் வந்ததா.

3 ஆசிரியர் அறவுணர்வாளர் ஜெயமோகன் அம்பேத்கரின் மீதான அவதூறுகளை அறச்சீற்றத்தோடு வைத்த போது எனக்குக் கண்ணீர் வந்தது, பதிப்பாசிரியருக்கு வந்ததா.....

4. அயோத்திதாசர் பற்றி அம்பேத்கர் எங்காவது பேசியிருக்கிறாரா...?

எல்லா நாற்கலிகளிலும் என் இருப்பே என ஜெயமோகன் நிரூபித்த இடமாக இந்த கதையை அவர் அறிவித்திருக்கிறார். நூலட்டையில் ஒரு கலெக்டரின் உண்மைக்கதை எனப் போடப்பட்டுள்ளது. அந்த உண்மையான கலெக்டர் தனது வாதைகளை குமுறல்களாய் வைக்க அதை ஆசிரியர் அறத்துளியாக கண்ணீராகப் பெருக்குகிறார்.

சிறுகுறிப்பு; இன்றைய காந்தி என்கிற அவரது அறநூலை காந்தியின் அறத்தை படித்து அன்றெல்லாம் உக்கிப்போய் கண்ணீர் துளிகளைச் சிந்திக்கொண்டே இருந்தேன். அந்த நள்ளிரவில் என் நண்பனுக்கு தாங்கமுடியாத அழுகையோடு போன் செய்து அவன் என் அழுகை கேட்டதும், மிகுந்த விகசிப்பும் விசும்பலுமாய் காந்தி என்றேன்...கெட்டவார்த்தையில் திட்டி படுக்கச் சொன்னான்.

கதையை எழுதும் நான் வேறு என எப்பொழுதுமே சொல்லிக்கொள்வேன். என்னுடைய கருத்துலகிற்குக் கட்டுப்பட்டு என் எழுத்து நிகழ்வதில்லை. அது பிறிதொரு வாழ்க்கைக்குள் நான் சென்று மீள்வதுதான்.அதன் பின் அக்கதைகளுக்கு நானும் ஒரு வாசகன். இந்தக் கதையின் கருத்துக்களுக்கு அல்லது உணர்ச்சிகளுக்கு நான் பொறுப்பல்ல, கதையை ஒருபோதும் என்குரலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அது ஒரு துண்டு வாழ்க்கை. என் வழியாக அது மொழியாகியது.இது ஜெயமோகன் எழுதிய குறிப்பு. இதில் ஒளிந்துள்ள் அயோக்கியத்தனங்களையும் கண்ணீரோடு வாசித்த நான் அவரது அடுத்த பாராவில் சிரிக்கத் தொடங்கினேன். அவருக்கான ஒரு நாயனத்தை ஊத எத்தனை துளைகள். எத்தனை விரல்கள். பிரம்மம் ஒக்கடே..பரபிரம்மம் ஒக்கட்டே....

துணைக்குறிப்பு; நூலில் ஒட்டுமொத்த அரசியலையும் மேற்கண்ட வரிகளே எனக்கு உணர்த்தியது. ஒட்டுமொத்த நூலுமே, தன் பெயரை மட்டுமே குறிக்க, உதவும் வரிகளை, எழுத்தாக முன் வைத்த ஜெயமோகனது அறக்குப்பை. நூலை வாசித்து முடித்ததும் எனக்கு சிறுநீர் முட்டியது. நூலை வாசித்து கண்ணீர் மல்கிய பெருமக்கள் எனது விமர்சனத்தையும் மேற்கண்ட வரிகள் வழியாகவே அணுகலாம்.

Sunday, June 24, 2012

பின் தொடரும் ஜெயமோகனின் குரல்...






விடியலின் வலிமை அது வெளியிட்ட முக்கியமான மொழியாக்கங்கள்தான் . தேபிபிரசாத் சட்டோபாத்யாயவின் இந்திய தத்துவ மரபில் நிலைத்திருப்பவையும் அழிந்தவையும்முதல் சமீபத்தில் வந்த டிராட்ஸ்கியின் வாழ்க்கை வரலாறு வரையிலான ஆக்கங்களால் விடியல் தமிழ்ச்சிந்தனை மரபில் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நிலைத்திருக்கும்.அதற்காகவே நீங்கள் பெருமைகொள்ளவேண்டும். இதை விடியலின் நூல்களை எல்லாம் வாங்கிய வாசகனாக நான் சொல்லலாமில்லையா? ”
- ஜெயமோகன்


ஜெயமோகன் உங்களின் நினைவுப்பிழை எந்தளவுக்கு முட்டாள்த்தனமானது என்பதை என் நினைவில் இருந்து சொல்கிறேன். உங்களது காரியக் கிறுக்கிற்கு உதவி செய்யும் முட்டாள்தனங்களையும், வக்ரத்தின் அடிப்பூச்சுக்களையும் தொடர்ச்சியாக அறிந்த எனக்கு எந்த நினைவுப் பிழையும் கிடையாது.

உங்களது விஷ்ணுபுரம் எனும் நூலை குறைந்தபட்சம் 7 முறை வாசித்தவன் நான். ஒரு மிகப்பெரிய உழைப்பை சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது என்ற என் நினைவு எனக்கு 22 களிலேயே வயதிலேயே இருந்தது. இப்பொழுது எனக்கு 33 வயது. அன்பரே உங்களைச் சந்தித்த போது விடைத்த காதுடன் எனக்கு உளுந்தவடை உபசரிப்புடன் தேநீரும் அளித்து மூன்று நாள் என்னுடன் தங்கி உரையாடுவோமா எனக் கேட்டவர் நீங்கள். உங்களை சென்னை நோக்கி தொலைக்காட்சி தொடருக்கு வசனம் எழுதுவீர்களா எனக் கேட்டதும் நான்தான். இன்று நீங்கள் நிற்கும் இடம் உங்கள் உழைப்பினால் மட்டுமென்றால் நேரிடையாகக் கேட்கிறேன். அதற்குள் சதிகளே இல்லையா. டால்ஸ்டாயும் தஸ்தாயெவ்ஸ்கியும் தூய யேசுகள் தேவ குமாரர்கள் என அரிப்பெடுத்து வசனங்களை நூல்களாக எழுதி வரும் நீங்கள், அவர்கள் அறம் என  எதைக் கூறுகிறார்கள் என ஒரு முறையாவது யோசித்ததுண்டா...


உங்களை தூக்கிச் சுமந்த தமிழினி வசந்தகுமாரிடம் நீங்கள் விடியல் பற்றிக் கேட்டிருந்தால் அவர் சொல்லிய்டிருப்பாரே. அறிவு கெட்டுப் போனதோடு நாறி, இந்த்துவத்துப் புழுக்களை நிரப்பிக் கொண்டு அலையும் உமது மூளையில், நினைவு என்பது சார்பும், காசும் உள்ளவரை தானே அய்யா. இதற்கு நாஞ்சில் நாடனும்  வேறு வேலை பார்த்துக் கொடுக்கிறார்.


நிற்க. விஷ்ணுபுரத்தை களவாட நீங்கள் ஒட்டுமொத்தமாக தமிழில் பயன்படுத்திய நூலின் தலைப்பையே தப்பும் தவறுமாக சொல்லியிருக்கிறீர்கள். அதன் தலைப்பு இதுதான். இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும். அந்த நூலை விடியல் பதிப்பிக்கவில்லை. பதிப்பித்தது சென்னை புக்ஸ். பொ.வேல்சாமி தான் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் கரிச்சான் குஞ்சுவின் கண்ணுக்கு ஆயிரம் ரூபாய் வைத்தியம் செய்து மொழியாக்கம் செய்து பதிப்பிக்கப் பட்ட நூல் அது. எல்லாவற்றையும் மறக்கும் உமக்கு எத்தனை ஞாபகப் பிழை என தெளிவாக நீங்கள் சொல்லலாம். மேலும் உங்களது ஞாபகப் பிழை விடியல் சிவாவின் எத்தனை வருட உழைப்பை கேலி செய்கிறது தெரியுமா உங்களுக்கு. தான் திருடி பிறறையும் நம்பமாட்டான் என்பதற்கு நீங்கள் முழு உதாரணம்.


உங்களைத் தாங்கி நிற்கும் தமிழினி வசந்தகுமார், மற்றும் நுண்மான் நுழைபுல நாஞ்சில் நாடன், இப்பொழுது குப்பைகளை மறுபதிப்பு செய்யும் கிழக்குப் பதிப்பக உரிமையாளர்கள்....உங்களுக்கு இவ்விசயத்தில் நண்பர்களாக இல்லாமல் இடது சாரியாக அவர் பதில் எழுத வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன்.

அதோடு தமிழினியின் வலிமை, இளமை, குறைந்தபட்ச நேர்மை, இன்னும் பல மைகளையும், பின் உயிர்மைகளையும், கிழக்குப் பதிப்பகத்தின் வலிமைகளையும் கவிதா பதிப்பகத்தின் பணமை....... நாம் பேசலாம்.


நீங்கள் சொன்னபடி விடியல் பதிப்பகம் வெளியிட்ட நூல்களுக்காக சிவா பெருமிதப்படவேண்டும்,  இது உண்மைதான். சிவா வேறு விடியல் வேறல்ல. ஆனால் நீங்கள் பெருமைப்பட பொள்ளாச்சி மகாலிங்கத்தின் பாதங்களும் இன்னும் எண்ணற்ற நாற்றமெடுத்த வார்த்தைகளும் உள்ளது. இதை உங்களை வாசித்த ஒரு வாசகனாகத்தான் எழுதுகிறேன். ஒரு வாசகனாக அதை எழுத உங்களுக்கு உரிமை இருப்பது போல் தமிழினியையும் உயிர்மையையும் கிழக்கையும் ஒரு வாசகனாக கேள்வி கேட்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது.


வாசகனாக
வசுமித்ர


சிறு குறிப்பு;  விடியலில் வெளிவந்த மொழியாக்கங்கள் தாண்டி அது வெளியிட்ட உள்ளூர் படைப்பாளிகளின் ஆக்கங்கள் குறித்து நான் பேசுவதற்காக காத்திருக்கிறேன். அதைவிட இன்னும் விரிவாக. உள்ளூர் படைப்பாளிகளுக்கு சொறிந்து கொடுக்கும் பதிப்பகங்கள் குறித்தும் நாம் பேசலாம் ஜெயமோகன்.

Wednesday, June 20, 2012

தேவதேவ....






மலம் தின்ன வைத்தல் 

கட்டு மீறத் துணிந்தவனை
இழுத்து வந்து உதைத்து, துடிக்கத் துடிக்கப்
பழுக்கக் காய்ச்சிய இறும்பினால் சூடு போட்டு
அவன் அலறலை
மீசையில் கைபோட்டு ரசித்தபடி
மீண்டும் அவனைக் குனியவைத்து
பிடரியில் மிதித்து அழுத்தி
மலம் தின்னச் செய்து
ஊரெல்லாம் பார்த்திருக்க
வெறிகொண்டாடி மகிழ்ந்தது
வேறு யாருமல்ல...
நான்தான்.....

இவ்வேளை, வருந்தி வருந்தி
இக்கவிதையை எழுதிக்கொண்டிருக்கும் நான்,
ஒரு தலித் அல்ல;
பார்ப்பானும் அல்ல;
ஒரு கவிஞன், இன்றைய பிரபஞ்சத்தின்
அதி சுரணை மிக்க ஒரே மனிதன். சமயங்களில்
தன்னைக் கடவுளெனச் சொல்லிக்கொள்ளும்
விசித்திரப் பிராணி


உச்சபட்ச வன்முறை பீரிடும் இந்த வெளிப்பாடு,
பெருந்துக்கமும் சுயமதிப்பும்
நீதியின்பாற் தீராத வேட்கையுமாய்த் தகித்தபடி
உலகின் ஒளியாய்ச் சுடர்பவர்களுக்காக அல்ல;
விடுதலைச் சிறுத்தைகளுக்காக அல்ல;
பகுத்தறிவுச் சிம்மங்களுக்காகவும் அல்ல;
தங்கள் வாழ்க்கைப் பாணியால்
சாதி - மத - சாமி - மல அக்னிக்குத்
தவறாது நெய் வார்த்துக் கொண்டிருப்பவர்களுக்காக,
மலம் தின்றுகொண்டிருக்கும் பார்ப்பனீயம்
தம் முகத்தைத் தானே பார்த்துக்கொள்ளுவதற்காக.
இரத்தம் செத்த சோனிகளும்
தோல் மரத்துப்போன பேமானிகளும்
மானம் மரியாதை வெட்கம் சூடு மற்றும்
சுரணை பெறுவதற்காக!


- தேவதேவன்

வணக்கம் கவி தேவதேவ....

நீண்டகாலம் கழித்து ஒரு சிறு வெஞ்சினம் பொங்க உங்களது கவிதைகளின் தொகுதியை மின்சாரமற்ற பகலில், அறை வெட்கையில் எனது இருதயத்தின் சளி ஓசையை கேட்கும் மௌனத்தில் வாசித்தேன்.


அன்ப...
மேற்கண்ட உமது கவிதையில் ஓடும் வஞ்சிக்கப்பட்ட மனத்தின் ஆற்றாமையை, பின்னுரை என்ற பேரில் " அமைதி என்பது மரணத் தறுவாயோ? வாழ்வின் தலைவாசலோ?” என்ற தலைப்பில் ( நவீனத்துக்குப் பின் கவிதை என்பதன் சுருக்கப்பட்ட வடிவம்) உலுத்துப் போன மனச்சான்றுடன் ஜெயமோகன் எழுதியிருக்கும் வக்ர மகிழ்ச்சியையும் கண்டேன். காலம் பெருந்தச்சனின் இயலாமையில் வைரமுருகி...இற்றுப்போயிருக்கிறது.


அன்ப....தேவ தேவ...

ஜெயமோகனுக்கு தங்களிடம் சொல்ல ஏதேனும் ஒரு சொல்லிருந்தால் சொல்லிவிடுங்களேன். கவி அமைதி, பீதியின் இறகல்லவா....அலைக்கழிப்பு, சித்தம் தடுமாறுதல்...இவைகளோடு, மனக்கசப்பும். கவிதையில் கொப்பளிக்கும் அறாத நீதியுணர்வைத்தான் வேதம் எனும் மலத்துணியில் நாளும் முக்கி, ஆட்காட்டி விரலுக்கும் கட்டைவிரலுக்குமிடையே அழுத்தி நசுக்கிக் கசக்கி, சூடான அதன் மணத்தை, நாசியில் ஏற்றி, அறிதல் என்றும் ஞானம் என்றும் தரிசனம் என்றும்,.... என்றும் வற்றாத தமிழால் குலை தள்ளி வருகிறார்.


எம் கவிஞ...

எல்லாவற்றையும் மறைக்க கோவணத்தில் துணி இல்லை இல்லவா...நாஞ்சில் நாடன் தன் கோவணத்தை விஷ்ணுபுரப் பட்டுத்தண்ணியில் அல்லவா சுற்றி மறைக்கிறார். பிருஷ்டத்தில் பொறித்திருக்கும் சாதியை எப்படி பொற்பட்டு நூலால் மறைக்க முடியும். எல்லாவற்றையும் பேச வைக்கும் மது பற்றிப் பேசியவர், அதி போதையில் இன்னும் நீ இந்துத்துவப் பசு...( இங்கு பன்றி என்பது உச்சபட்ச அழகு, அதனால் தவிர்த்திருக்கிறேன்) எனச்சொல்ல எது தடுக்கிறது. நீங்களும் பன்றி பற்றி எழுதியுள்ளீர்கள்தானே....


எம் அன்ப...

சொல்லக் கூடாத வார்த்தைகளை, எழுதிப் படிக்கையில் என்ன சுகம் கிட்டப் பெறுகிறது.

உம் நண்பர் நகுலன் சொல்லியிருக்கிறார்.


173.

அவன் உன்னுடன் இசைவதற்கு
அறிகுறியாக " ஆமாம் "
என்று தலையை
ஆட்டிக்கொண்டிருக்கும்போதே
உன்னைப் பார்த்துக்கொள்கிறேன்"
என்று உள்ளே
உறுமிக்கொண்டிருப்பான்.

174.

அவன்
எவர்களை ஒரு உத்தேசத்திற்காக
மதிக்கிறானோ
அந்த உத்தேசம் நிறைவேறியபின்
அவன் அவர்களை
அவமதிப்பான்
இதற்கு அவன் கொடுத்திருக்கும்
அர்த்தம்: ஆத்ம சுதந்திரம்.


175

அவன் அதிகமாகப் பேசமாட்டான்
ஏனென்றால்
தான் பேசினால் எங்கேயாவது
அகப்பட்டுக் கொண்டுவிட்டாலோ
என்ற
எச்சரிக்கையான வாழ்வு.

176

அவனைப் பற்றி
நாலுந்தெரிந்தவர்
சொல்வது; அவன் நல்லவன்;
ஆனால் அவனிடம் போகாமல் இருப்பது
நமக்கு நல்லது!

177

போகட்டும்”
என்னவானாலும்
நாலுபேர்
அவன் பேரைச் சொல்லுவார்கள்
பிறகு இருக்கவே
இருக்கிறது;
நாற்பது வெள்ளிக்காசு.


- நகுலன் தங்களிடம் மேற்குறித்த வரிகள் பற்றி பேசியதுண்டா, ஒரு வேளை கைப்பிரதியிலேயே கண்டு தாங்கள் புன்னகைத்திருக்கவும் கூடும்.


அன்ப....
தங்களது கவிதைகள் எனக்கு சில சமயம் வழிகாட்டி, சில சமயம் துலாக்கோல்,
சில சமயம் கவிதை...


ஆனாலும்..... நான் உங்கள்
ப்ரியத்துக்குரியவர்கள் பட்டியலில் இணைவதற்கு
சற்று யோசனையாகத்தான் இருக்கிறது...
" தேவதேவன்"
என் ஆள்
என்ற குரல், ஜெயமோகனின் ராம நாம தொண்டையின் அடிவயிற்றிலிருந்து வருகிறது.
ஏதேனும் நீதி சொல்லி ஒரு சிற்றம்பை எய்யமுடியுமா...வாலியின் குரலய்யா இது.


நான் நலம்
உங்கள் நலத்துக்கு உங்களையே பிரார்த்திக்கிறேன்...
சந்திக்கும் தருணத்தில் ஏதேனும் ஒன்று காலை இடறினாலும் என் பெயர் சுமக்கும் உடலை உங்கள் முன் காட்டிவிட்டுச் செல்வேன்.


சிறு நண்பன்....
வசுமித்ர...




Friday, May 11, 2012

நித்ராவிடம் மன்னிப்புக்கேட்டல்...







ஒரு 
பெயர்
அத்தகையக
வலி

சகி
பெயர் அற்ற ஒரு தேசம்
பெயரிடா தசை

ஒழுகும் குருதிச்சாற்றில்
மிதக்கும் துளியை கண்ணீரா
என்றழைத்தேன்

ஊனொழுகும் முத்தம்
உன் பெயர் சொல்லி கதறும் நினைவுகளை
மரணத்தை நோக்கி நடத்திச் செல்லுகிறேன்

காலன் தன் காதலை அறிவித்தாயிற்று
யுத்த நிலைமையில்
நழுவுகிறது காண்டீபம்
ராவணச் செவியில் விரும்பாது நுழைந்த சொல்

தோழியாய் நுழைந்தவளே
சகல ஊற்றையும் உன் பெயர் சொல்லியே அருந்தினேன்

அன்னம்
நீ

பசித்த வயிற்றைத் தடவி உணர்ந்திருக்கிறேன்

ஞாபகத்தில் சொறுகிய குறுவாளை
இன்று கனவில் கண்டேன்

கடற்கரை
காகம்
ஆளற்ற மணல்
துணையற்று அலையும் வெயில்

இங்கு நான் மட்டுமே நிற்கிறேன்
கப்பல்கள் தரையிறங்க தவிக்கின்றன

பறவைகள்
கடலை வெறிக்கையில்
எனது நினைவு மங்கத் தொடங்குகிறது

நீ மரணத்தை வார்த்தையாக்குகிறாய்
இந்திரியத் துளிகளென மிதக்கும்
கண்ணீரை
வழியும்
இரு துளைகளை அடைக்க
உன் காலடி மண்ணை யாசிக்கிறேன்

எனது யாசிப்புகள் உனை வந்தடைகையில்
கண்மணி

மரணத் தறுவாயில் இறுதியாய் நானெழுத நினைத்த கவிதையாய்
வந்து நிற்பாய்

உன் பெயரை காற்றில் அறைந்து சொல்ல முடியா
நாவையும்
உதட்டையும்
சாபத்தில் நனைத்து
ஈரப்படுத்தியபடி
அசையும் நினைவுகளை தொண்டைக்குழிக்குள்
வெற்றொலியென எழுப்பும்

என் சாவை மிக நெருக்கத்தில் காண்பாய்
என் சாவை
காண்பாய் மிக மிக நெருக்கத்தில்

ஒரு சிறிய கத கதப்பு
அவ்வளவே....

எனதன்பே
சாவில் துவளும் என் கைகளை துளியும் தீண்டாதே
அவைகளை ஈவிரக்கமற்று துண்டித்து விடு

உன் பெயர் சொல்லி
கண்ணீரால் நான் தினமும் குளிப்பாட்டிய உறுப்பு அது

எழுதிய கரங்களில்
வலிமையேற்றுவதென்பது
மரணத்துக்கொப்பானதுதான்....

Thursday, May 3, 2012




வணக்கம் ராஜசுந்தரராஜன்....
உங்களது கேள்வி எனது பெயரின் பின்னொட்டான மித்ர என்ற வார்த்தைக்குள் இருக்கும் நேசத்தை விளக்குவாத எனக்கு அமைந்தது. அதில் ஒன்றும் பிரச்சினையில்லை. காந்தி என்ற பெயரில் எனக்கு மொடக்குடி நண்பர் உண்டு. இதுல இன்னும் விசேஷம் அவர் கோட்சேவை ரெம்ப நல்ல பையன்ப்பா...என்பார். நிற்க.
வலசை முதல் இதழ் உங்களுக்கு அச்சலாத்தி. எனக்கு அதன் தலையங்கம் உட்பட எல்லாம்.....அய்யோ...அம்மா.... அப்படியா.....
அய்யா....
நேசமித்ரன் கோணங்கியை நகல் எடுத்ததாக நான் சொல்லவில்லை. ஒரு வேளை அது ஜெராக்ஸ் என்ற அர்த்ததில் இருந்ததானால் தாங்கள் அப்படி புரிந்து இருக்கலாம். தோழரே...நகல் என்பதற்கு மூலத்தை வாசித்த அனுபவமாவது வேண்டும் பின்னட்டை முன்னட்டை, உள்ளே பக்கங்களை முகத்துக்குக் காற்று வருவது போல் புரட்டிவிட்டு அதில் உள்ள நடையை கேணைத்தனமாக வாந்தியெடுப்பதை நகல் எனச் சொல்ல முடியாது. மேலும் எவரை நகல் செய்தால் தன் பிழைப்பு ஓடும் என்பதன் பின்னால் உள்ள அரசியல்.
2,3,வருடத்துக்குள் இலக்கியச் சங்கங்களில் தன்னை பிரதிஷ்டை செய்ய பல இலக்கியவாதிகளைக் கண்டு தோளில் கைபோட்டு, இடுப்பைப் பிடித்து போட்டோ எடுப்பதுதான் நேசமித்ரனின் இலக்கிய கிராப்ஃட். பேருந்து நிலையங்களில் லேகியம் விற்பவருக்கும் அமிதாப் பச்சனுக்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும். நேசமித்ரன் எனும் குருவிலேகிய விற்பனையாளர்...ஒவ்வொரு பேருந்துநிலையத்திலும் அமர்ந்து போவோர் வருவோரையெல்லாம் கைதட்டி கூவியழைத்து உண்மையில் எழுத்து வைத்தியனான கோணங்கியின் பதங்களை கூவி கூவி பாட்டிலில் அடைத்து அய்யா சாமி அம்மா சாமி என விற்பதன் மூலம் தன்னை வைத்தியனாய் நிறுவுவது...என்ன ராஜசுந்தரராஜன் இது......
நேசமித்ரன் எழுத்துக்கள் வெறும் கழிவுக் குப்பை. மறுசுழற்சிக்குக்கூட உதவாத குப்பையே நேசமித்ரனின் எழுத்துக்கள். எந்த வரிகளையும் மேற்கோள் காட்டாதபடி வீசி நாறிக்கிடக்கும் பெருங்கிடங்கு. நீங்கள் வாசித்த எனது 2,3,கவிதைகளிலாவது பிரேம் ரமேஷ் சாயல் இருந்தால் விளக்கலாம். வாசித்தறிந்த தகவல்களை கவிதைகளாகத் தொகுக்கிறார் நேசமித்ரன்...என்று கூறியிருக்கிறீர்கள். உண்மையில் அதுவும் அப்படி இல்லை அய்யா...அதன் பேர் வாசித்தவைகள் அல்ல....வாந்தியை விழுங்குவது. அஃதே.
கோணங்கியின் மீதுள்ள அன்பும் மதிப்பும்தான் அவரை என்னை விமர்சிக்கச் சொல்லும் தைரியத்தையும், அதே சமயம் போலி நகல் குப்பைகளையும் கழித்துக் கட்டச் சொல்கிறது. என் வாசிப்பைப் பொருத்தவரை அறுத்து வெட்டி ஒட்ட முடியா நமது காலத்தின் மகத்தான புனைவுக் கவிஞன் கோணங்கி.
கதிரைவேற் பிள்ளை, அபிதாம சிந்தாமணி ,சூடாமணி பிங்கலம் திவாகரம், போன்ற நிகண்டுகளையும், அறிவியல் கலைச் சொற்களையும், பின் கோணங்கியின் புத்தகங்களையும் இன்னும் ரைட்டர்ஸ் கைடு, டூரிஸ்டர் கைடுகளையும் அருகே வைத்துக் கொண்டு இணைச் சொற்களை கோணங்கி போல் எழுதுவதாக தன்னைக் கற்பித்துக் கொண்டு கோணங்கியை முழு நிர்வாணமாக்கி கதறக் கதற வன்புணர்ச்சி செய்வது. அதை விடக் கொடுமை, தான் செய்த வன்புணர்ச்சியை விமர்சனம் என அவரையே கேட்க வைப்பது. அதைவிட வன்முறையின் உச்சம் (அது பொருக்கமாட்டாமல்தான் கூட்டத்தில் ஆதிரன் நீ கோணங்கியின் பின்னொட்டு என உங்களது பாணியில் நாசூக்காகச் சொன்னார். நான் கொஞ்சம் காத்திரமாகத்தான் சொன்னேன். )நிலைமை எவ்வளவு மோசம் பாருங்கள். நான் நேரடியாக விவாதத்திற்கு வருகிறேன். கோணாங்கியை ஓரளவுக்கு வாசித்தவன் நான். அதுகுறித்த விமர்சனங்களையும் எனது பதிவில் வைத்துள்ளேன். அது குறித்தும் நேசமித்ரனிடம் உரையாட காத்திருக்கிறேன். நான் பேசும்போது மொங்கா மொங்கா என்று முகத்தில் குத்திவிடும் அபாயம் உள்ளதால் நேசமித்ரன் என்னிடம் பேசமுடியாமல் இருப்பதாக புகார் வைத்திருக்கிறார். ஒரு வேளை எனைக் குத்த வைத்து என்னை இலக்கியவாதி லிஸ்டில் இருந்து தூக்கிவிடலாம் என நினைக்கிறாரோ என்னவோ. அய்யா என் கவிதை வேறு, மூக்கில் குத்தும் நான் வேறு. அவர் என்னுடன் உரையாட விரும்பினால் உங்களை வைத்தே மத்தியஸ்தம் பண்ணலாம். நிச்சயமாக மூக்கில் குத்தமாட்டேன். இளைஞர்களின் உடல் வன்முறையை முதியவர்கள் காணும் போது ஏற்படும் மன வன்முறையை என்னால் நிகழ்த்த முடியாது.
மேலும் வாசித்தறிந்த தகவல்களை கிராப்ட் மூலம் பெருங்கவியாக மாற்றலாம் அய்யா. ஏன் சொல்கிறேனென்றால். அறிவை ஐரோப்பா மூவகையாகவும், இந்திய வேத அறிவு மூவகையாகவும், பௌத்தம் மூவகையைச் சொன்னாலும் அதில் இரண்டை இறுதியில் விலக்குவதாயும் இருக்கிறது. பார்ப்பது ( பிரதியட்சம்.... வாசிப்பது)கேட்பது(ஸ்ருதி ), ஊகம் (அனுமானம்)இது போன்ற முறைகளின் மூலமாகவே அறிவும் அனுபவங்களும் பகிரப்படுகிறது. அப்படியிருக்கையில் கிராப்ஃட் என்பதும் ஒரு தொழிநுட்பம்தான் ஆனால் நேசமித்ரன் தன்னை ஒரு இலக்கியவாதியாக அறியச் செய்யும் முயற்சியில்தான் அவரது கிராப்ஃட் அதாவது அரசியல் இருக்கிறதே ஒழிய படைப்பில் அது எதுவும் இல்லை.
நடந்த உரையாடல்களை நீங்கள் வாசித்தறிந்திருந்தால் உங்களுக்கு ஒன்று புரிந்திருக்கும் எனது அனைத்து கேள்விகளுக்கும் கையப் பிடிச்சு இழுத்தியா பாணியில் பதிலாகவே அவர் வைத்தார். கேள்விக்கு பதில் என்ற எளிய வகையை அடித்து மூக்கை உடைப்பாய் என்று முன் வைத்தார்.இதைக் கூட புரிந்துகொள்ள முடியாதவர் பூக்கோ... சாக்கோ.. தெரிதா...தெர்தா..என எழுதுவது எனக்குக் கூச்சமாக இருக்கிறது. எல்லா பொறணிகளையும் பேசிவிட்டு பேசவே இல்லை என்ற அவரது பெருங்கருணை எனக்கு உண்மையில் அச்சத்தையே ஊட்டுகிறது. ஆனால் இவ்வச்சம் எனக்கு புதிதல்ல.
நேசமித்ரன் வாசித்தறிந்த என்று நீங்கள் சொல்வதுதான் பெருங்கொடுமை. அப்படி அவர் வாசித்து விதந்தோதிய கவிதைகள் ஏதேனும் உண்டா..அல்லது விமர்சனங்கள்...எதுவும் இல்லை. அவர் என்னை விதந்தோதி எழுதிய சிற்சில வரிகளும் ஆஹோ ஓஹோ வகையாறா ரசிகத் தொட்டியைச் சேர்ந்தவைகள்தான். பொருட்படுத்தும்படி ரசிக்கக் கூடத் தெரியாத ஒரு கோமாளி இனிமேல் எழுதக்கூடும் அதனால் அவரை நேரடியாக இல்லாமல் சுற்றி வளைத்து தாக்கியிருக்கிறேன் என்று சொல்லியுள்ளீர்கள். உங்கள் கருணை எனக்கு வாய்க்காவிட்டாலும், குறைந்த பட்சம் வளரும் படைப்பாளி வளர்ந்த படைப்பாளி பாதி வளர்ந்த படைப்பாளி என்ற பேதங்களில் எனக்கு உவப்பில்லை. ஒரு விமர்சனத்தை தாங்கமுடியாத இளம் படைப்பாளி எப்படி நாளை ஆகப் பெரிய விசயங்களை கையாளமுடியும்.
வளரும் படைப்பாளிகளை விமர்சித்தால் மனம் கோணும்...அப்படியா! அது உண்மை இல்லை. வயதான படைப்பாளிகளை விமர்சித்தால் இங்கு சகலமும் அல்லவா கோணுகிறது. வன்மமும் வெற்றுக் கூச்சலும் தங்களது கால்களை அவமானகரமாக விரித்து நாற்காலிகளில் அமர்கிறது. என்ன செய்யமுடியும். படித்தேன் பிடிக்கவில்லை என்று சொல்வதற்கு இளையமனம் முதிய மனம் என்ற பேதமெல்லாம் எனக்கில்லை. என்னுடைய கவிதைகளுக்கு நீங்கள் இட்ட பின்னூட்டம் என் கவிதைகள் உங்களை கிறங்கடித்திருக்கிறது என நான் பொருள் கொள்ளலாமா...அவைகளில் ரமேஷ் பிரேம் பாதிப்பு அல்லது பிரேமிள் பாதிப்பு உண்டா..


ரமேஷ்-பிரேதன் எழுத்துக்கள் குறித்து நீங்கள் வைத்த வாதம் எனக்கு ஏமாற்றத்தையே அளித்தது. இப்பொழுது அவர்களை நீங்கள் ஒரு முறை மறுவாசிப்புச் செய்யலாம். மேலும் அவர்கள் இருவரும் கவிதைகள் கட்டுரைகள், மற்றும் தத்துவத்தை கேள்விகேட்டல் என பழவகைகளில் தங்களது எழுத்துக்களை முன் வைத்தவர். பிரேமிள் கவிதைகளை முன் வைத்து ஒட்டுமொத்த ரமேஷ் பிரேதன் எழுத்துக்களை நீங்கள் வகைப் படுத்துவது. நீங்கள் பிரேமிளையும், ரமேஷ் பிரேமையும் இப்பொழுது மறுவாசிப்புச் செய்வதன் மூலம் அது தவறென உணரமுடியும். அவ்வளவே. அவர்கள் மூவருக்கும் படைப்பு ஒற்றுமைகளிலோ,படைப்புக்களிலோ எந்த சம்பந்தமும் இல்லை. இருக்கும் ஒரே சம்பந்தம் அவர்கள் தன்னளவில் படைப்பாளிகள். நிற்க.
மேலும் உங்கள் வாயிலாக இரண்டாவது வலசையில் மொழிபெயர்ப்புச் செய்த சக்திச் செல்வியின் டயானாக் கவிதை குறித்த உங்களது அபிப்ராயத்தைச் சொன்னால் மூணாவது இதழ் இன்னும் கொஞ்சம் தேறும் இல்லையா. அய்யா.... கயவாளித்தனத்தை தேர்ச்சி என்றால் என்னால் பொறுத்துக்கொள்ளமுடியாது. சம்பந்தப்பட்ட கவிதையை வாசித்தவனாக நான் மொழிபெயர்ப்பாளருக்கு வைக்கும் முடிபு இதுதான் இவ்வளவு கேவலமான மொழிபெயர்ப்பைச் செய்வதற்க்கு உங்களுக்கு தைரியம் ஊட்டியது யார்....ஆரம்பத்தில் இருந்தேவா இல்லை இடையிலேயா...


மூலப் பிரதி மொட்டைப் பிரதி குட்டைப் பிரதி...கார்லோஸ்...பூக்கோ...ஜிங்கிலுஸ்சுலதான்....மங்குலுவஸ்தான்...யஸ்கா பாரூட்வி....என பல பெயர்களை வாந்தியெடுக்கும் நேசமித்ரன்... புகைரத பயணச்சீட்டில் உள்ள ஆங்கிலத்தைக் கூட வாசிக்கத் தெரியாதென என்னைச் சொன்ன நேசமித்ரன் இக்கவிதையை தனது இதழில் அச்சேற்றியிருப்பது அவரது கோங்கில அறிவையும் அதன் பின்னாலுள்ள டோங்கில அரசியலையும் ஓரளவுக்கு எனக்குச் சொல்லுகிறது.வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் அலைந்து திரிந்ததால் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் நிச்சயம் உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கும் என நம்புகிறேன் என் பொருட்டாவது அக்கவிதையை தாங்கள் எனக்கு மொழிபெயர்த்து உதவினால் மிக்க மகிழ்ச்சியடைவேன் என்பதோடு நான் நண்பர்களோடு நடத்தும் குறளி இதழில் அச்சேற்றுவேன் என உறுதி கூறுகிறேன். எனக்கிந்த உதவியைச் செய்யுங்கள்.
உங்கள் விளம்பர மோகம் பற்றி நான் கூறியது உங்களை சங்கடப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். பெருங்காயாமாகியிருந்தால் இன்னுமொரு மன்னிப்பு. நீங்கள் நேரடியாகவே தம்பி எனது படைப்புக்களை படி எனச் சொல்லலாம். என்ன படித்துவிட்டுப் பேசுவேன். அவ்வளவே.
வெளி நாடுகளில் இருந்ததால் சமகால படைப்புக்களை வாசிக்கமுடியவில்லை என நீங்கள் நேரடியாகச் சொன்னது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் இங்கு நிகழ்காலத்திலும் எதையும் படிக்காது ஜும்புல்லிக்கா பறவை ஏகிக் கூர் நுனி தனிதமன் ஜெல்லி ஜவ்வுடு பரவல்தான் இலக்கியவாதி மனமாக தன்னை நினைத்துக்கொள்கிறது.


அய்யா இறுதியாக மறுபடியும் நான் கூறுவது ஒன்றுதான் எனது கேள்விகளுக்கு நேசமித்ரன் பதில் சொல்லாத காரணம் நான் நடுமூக்கில் நச்சுன்னு குத்துவேன் என்பதால்தான். இல்லையென்றால் அவர் நிறைய பதில்களைச் சொல்லியிருப்பார் என்ற தோற்றப் போலியையும் வாந்தியெடுக்கிறார். போதாக் குறைக்கு தன் எழுத்துக்கள் சொற்செட்டு அடர்த்தி என்றெல்லாம் சொல்லும் போது எனக்கு அளவிடமுடியா கடுப்பு வருகிறது. அகராதியில் ஒரு சொல்லுக்கு பல சொற்செட்டுகள் உண்டு அதற்கெல்லாம் நேசமித்ரன்தான் காரணமா. அயோக்கியத்தனத்தின் உச்சமில்லையா இது.


செநெல் கீறி முளைக்கா
வன்நிலத்தில் தூவிக் கிறங்க
அசோக் பைரில்லம் தெளிச்சூரிய நிழல்.


என்பதெல்லாம் கவிதையா அய்யா....


அய்யா...நேசமித்ரனின் வார்த்தைகளில் உள்ள மாற்று உளவியலைமுன் வைத்து உரையாடினால் இவ்வளவு மோசமாக எழுதினால் எவனும் அடிப்பானோ என்ற ஒரு உள்ளுணர்வு பயம்தான் என நினைக்கிறேன்.
அய்யா முகவீதியையும் நாடோடித் தடத்தையும் நான் வாசிக்க எண்ணியதுண்டு. மேலும் அத்தொகுதிகளில் வசந்த குமாரின் நேர்த்தியான அட்டைப் படங்கள் இன்னும் என் நெஞ்சை விட்டு அகலவில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் அப்புத்தகங்களை வாங்கலாமென்றால் திருவாளர் நேசமித்ரன் தொந்தரவு செய்துவிடுகிறார். உங்களது கவிதை பற்றின ஒரு பார்வையை ஒளிக்குறிப்புகள் என அவரது தள முகப்பில் இட்டது உங்கள் மீதான வாசிப்பை என்னைத் தள்ளிப் போடச் செய்தது. அது தவறுதான். மாற்றிக்கொள்கிறேன். மேலும் இதில் நேசமித்ரனுக்கும் பங்குண்டு...அவரது பிளாக் முகப்பில் சே குவேரா படத்தைப் போட்டு ஒரு வாசகத்தைச் சே சொன்னதாக சொல்லியிருந்தார். ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ நடுங்குவாயானால் நீ என் தோழன்”, அய்யா உண்மையில் இது நேசமித்ரனின் வார்த்தைகள் ஆனால் அதைச் சே படத்தைப் போட்டு மொழிபெயர்ப்பென்ற பெருங்கேவலத்தைச் செய்திருந்தார். எனது புகை ரத பயணச்சீட்டை ஆங்கிலத்தில் வாசிக்கமுடியாத அறிவுதான் சே அப்படிச் சொல்லியிருக்கமாட்டாரே...அவரு துப்பாக்கி தூக்குற ஆளாச்சேன்னு ஆங்கில அறிவு மற்றும் அதன் சீவியான நேசமித்ரனிடம் அது நடுங்குவாயானால் இல்லை பொங்கினாயானால்....எனக் கேட்டேன். ஒரு சிறு நன்றியுடன் உடனே நடுங்குவாயானால் பொங்குவாயானால் என மாற்றம் நிகழ்ந்தது. சேர்ந்தாற்போல் ஒரு நாலு வார்த்தையை அதன் தத்துவப் பின்புலத்தோடு பெயர்க்க முடியாத ஒரு மண்ணாந்த்தை என் ஆங்கில அறிவைக் கேள்வி கேட்பது எனக்கு மிகுந்த அவமானத்தை தருகிறது. காலனியாதிக்க மலத்தையும் மக்கிய குப்பைகளையும் அதுவும் வெறு பெயர்களாய் எழுதி மதிக்கிற போக்குக்களை என்னால் மரியாதை கொடுத்து விளிக்கமுடியாதய்யா. எனக்கு ஆங்கிலம் சொல்லித் தர வெ.ஶ்ரீராம், சா,தேவதாஸ், குறிப்பிட்ட எல்லை வரை இரா.நடராசன்...அதற்கும் மேலாக இப்பொழுது கொற்றவை இருக்கிறார். மேலும் இதுவரை வாசித்து வந்த என் வாசக அறிவு ஒரு படைப்பாளிக்கும் மொழிபெயர்ப்பாளனுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்தும் பக்குவத்தைக் கொடுத்திருக்கிறது.


அய்யா என் வார்த்தைகளில் உள்ள தவறுகளை தாங்கள் சுட்டிக் காட்டினால் மிக்க மகிழ்வேன். மேலும் இளைய மூத்த என்ற பதங்களில் எனக்கு உவப்பில்லை. காலந்தாழ்த்தி பிறந்ததனால் நான் என்ன செய்யமுடியும். காலத்தைக் குறை கூற முடியாதில்லையா. நாம் குறிப்பதோ மனிதக் காலம்தான்.


எல்லாவற்றிற்கும் மேலாக என்னை பொருட்படுத்தி பதில் சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி. அதேபோல் இக்கடிதத்தில் நான் வைத்திருக்கும் கேள்விகளையும் தங்கள் பார்வையில் விளக்கினால் என்னால் உரையாடமுடியும்.


அன்புடன்
வசுமித்ர.




“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...