Tuesday, August 30, 2016

அறிவு நாணயமற்ற ஆதவன் தீட்சண்யா





நேற்று ஒரு தோழரிடம் பேசிக்கொண்டிருந்த போது ஆதவன் தீட்சண்யா ரங்கநாயகம்மாவின் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு என்கிற நூல் குறித்து தொலைக்காட்சியில் பேசியிருக்கிறார் என்ற தகவலைச் சொன்னார். நானும் பரவாயில்லை நூலை முழுதாகப் படித்துவிட்டு அறிவு நாணயத்தோடு ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியிருப்பார் என்று அந்தக் காணொளியைப் பார்த்தேன். ஏமாந்ததுதான் மிச்சம்.

சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு... எனும் நூலை இந்துத்துவ அம்பேத்கர் என்ற நூலோடு ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். இதிலிருந்தே, ஆதவன் ரங்கநாயகம்மாவின் நூலை முழுதாக இன்னும் படிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ரங்கநாயகம்மாவின் நூல் ஆதவன் சொல்லியபடி அம்பேத்கரின் மேற்கோள்களை பிறாய்ந்து எடுத்து தன் மனநிலைக்கு ஏற்றார் போல் எழுதிய நூல் அல்ல. அது, அம்பேத்கரின் சாதி ஒழிப்பு ஆய்வில், காணப்படும் முரண்பாடுகளை முழுவதுமாக ஆராய்ந்து எழுதிய நூலாகும். அதே போல் புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலின் வழி, அம்பேத்கரின் புத்தரைக் கேள்வி கேட்டு விவாதித்து பௌத்தம் போதாது என்பதை முன்வைத்திருக்கிறது. மாற்றாக மார்க்சியத்தை முன் வைத்து அதன் தேவையை வலியுறுத்துகிறது. ஆனால், ரங்கநாயகம்மாவின் நூலைப் படிக்காமலேயே அது அம்பேத்கரை திரித்திருக்கிறது என்ற அவரது அறிவுநாணயமற்ற அவதூறை நினைத்துதான் நாம் வெட்கப்பட வேண்டியிருக்கிறது.


இந்துத்துவ அம்பேத்கர் நூல் பற்றிச் சொல்லுகையில் அம்பேத்கர் சொன்னதைத்தான் ஆர் எஸ் எஸ் செய்கிறது என்கிற மாதிரி திரிக்கிறார்கள் என்று சொன்ன ஆதவன் ரங்கநாயகம்மாவின் நூல் என்ன வகையில் திரிக்கிறது என வெளிச்சம் போட்டுச் சொல்லியிருக்க வேண்டும். சொல்ல முடியாமல் தடுத்ததற்கு ஒரே காரணம் அந்த நூலை அவர் இன்னும் முழுமையாகப் படிக்கவே இல்லை என்பதே. ஒருவேளை படித்திருந்தாலும் நூலின் தர்க்க நியாயங்களை எதிர்கொள்ள துணிவின்றி ஊடகங்களில் அவதூறைச் சொல்லி தப்பித்தல் உத்தியை கையிலெடுப்பதே அவரால் செய்ய முடிந்த பணியாக இருக்கிறது. அப்படி அம்பேத்கரை திரித்து  ஆர் எஸ் எஸ் சொன்னது போல் ரங்கநாயகம்மா, அம்பேத்கரை எங்கு எப்படி எவரின் நலனுக்காகத் திரித்திருக்கிறார் என்றாவது சொல்லியிருக்க வேண்டும். அதையும் சொல்லவில்லை. எதையோ சொல்ல வந்து தடுமாற்றம் அடைந்து முழித்ததைத் தாண்டி அதில் வேறு விசயங்கள் ஏதுமில்லை.

நூலை ஆதவன் முழுமையாக வாசித்திருக்கும் பட்சத்தில் ரங்கநாயகம்மாவின் நூல் அம்பேத்கரை எங்கு என்ன விதமாக திரித்திருக்கிறது என்பதை ஆராய்ந்து  இதுதான் அம்பேத்கர் சிந்தனைகள் என்று ஒரு நூலோ, ஏன் நூல் கூட வேண்டாம் ஒரு கட்டுரையாவது எழுதலாம். எழுத வேண்டும். மார்க்ஸியத்தை முன்னெடுக்கும் ஒரு நூலை இந்துத்துவ நூலோடு ஒப்பிடும் அவரது கயமை வருந்தத்தக்கது.

அம்பேத்கரின் நூல்களையும் படிக்காதவர் ஆதவன் என்று உறுதியாக நாம் கூற முடியும், ஒரு நூலைப் படிப்பது என்பது அதை அறிவுக்கு உட்பட்டு ஆராய்வது, காலத்துக்கு ஏற்ற கருத்தா என்று ஆராய்வதே ஒரு நூலைப் படிப்பதாகும். இது என் கருத்து. மாறாக பைபிளை, குரானை, கீதையை தினம் தினம் பாராயணம் செய்யும் சாமியார் படிப்பு படிப்பே அல்ல. மத வாசிப்பு. தொழுகை. பாராயணம். அவ்வளவே! ஆதவன் அம்பேத்கரை விமர்சனத்துக்கு அப்பாற்றப்பட்ட கடவுளாக, அறிவுக்கு ஒவ்வாத நிலையில் வைத்திருப்பது அம்பேத்கருக்கே ஒவ்வாத ஒன்றாகத்தான் இருக்கும். மேலும் சோறு,  மானம், ரோஷம் என்ற கருத்தியல்களைக் கேள்வி கேட்கிறார். உண்மையில் இது நல்ல கேள்வி. சோறு, பணம் இல்லாவிட்டால் மானத்தோடு வாழவே முடியாது. அப்படி யாரேனும் சொன்னால் அது கண்டிக்கப் படவேண்டியதே. ஆனால் அம்பேத்கரின் எழுத்துக்களைப் பைபிள் போல் வேத பாராயணம் செய்யும் ஆதவன் அம்பேத்கரின் மான ரோஷ கருத்தியல்கள் குறித்து படித்திருப்பாரா. 

“நாங்கள் அடைந்துள்ள இழப்புக்காக நீங்கள் ஏன் அழுகிறீர்கள் என்பதுதான் அவர்களிடம் நான் கேட்கும் கேள்வி. மனித ஜீவன்களுக்கு அருமையிலும் அருமையானது விலைமதிப்பற்ற சுயமரியாதையே தவிர பொருளாதார ஆதாயமோ அனுகூலமோ அல்ல. நற்பண்பும் நற்குணமும் படைத்த ஒரு பெண்மணி ஒழுக்கக் கேட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை நன்கு அறிவார். எங்கள் பம்பாயில் விலைமாதர்கள் வசிக்கும் ஒரு வட்டாரம் உள்ளது. இங்குள்ள பெண்கள் காலை 8 மணிக்கு எழுந்திருக்கிறார்கள்; அருகிலுள்ள உணவுவிடுதியில் காலை சிற்றுண்டி கொண்டுவரும்படி பணிக்கிறார்கள்; ( பெண்கள் பேசும் குரலில் இங்கு டாக்டர் அம்பேத்கர் பேசுகிறார்) “ ஓ சுலைமான் ஒரு தட்டுக் கொத்துக்கறியும்(கீமா) ரொட்டியும் கொண்டுவா. அவ்வாறே சுலைமான் தேநீர், கேக்கோடு கொத்துக்கறியைக் கொண்டு வருகிறார்.ஆனால், தாழ்த்தப்பட்ட சகோதரிகளுக்குச் சாதாரண ரொட்டியும் சட்னியும் கூட கிடைப்பதில்லை. அப்படியிருந்தும் அவர்கள் அன்பும் பண்புமிக்க விழுமிய வாழ்க்கை நடத்துகிறார்கள்.”

இது அம்பேத்கர் சொன்ன கருத்து. இந்தக் கருத்துக்கும் பொருளாதாரச் சிந்தனைக்கும் மானம் மரியாதைக்கும் விழுமிய வாழ்க்கைக்கும், விபச்சாரத் தொழிலுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா?

இதை எந்தத் தொகுதியில் சொல்லியிருக்கிறார் என்பதை அம்பேத்கரின்  எழுத்துக்கள் 7000 பக்கங்களுக்கு மேல்  இருக்கிறது  என பக்க எண்ணிக்கையைச் சொல்லும் அவரே எடுத்துச் சொல்லலாம். அல்லது ஆய்வுக்குழு அமைத்தும் சொல்லலாம்.

இந்துத்துவ அம்பேத்கர் என்று அவர்கள் திரிப்பது போல், இந்துத்துவ மார்க்ஸ் என்றோ, இந்துத்துவ பெரியார் என்றோ திரிக்கமுடியுமா? அப்படித் திரிக்க அவர்களுக்கு ஏதுவான வாசகங்கள் எதையும் மார்க்ஸோ அல்லது பெரியாரோ சொல்லியிருப்பார்களெனில் அவரே  அதை எடுத்து இயம்பலாம். அப்படி திரிப்பதன் மூலம் அவர்கள் யாருக்குச் சாதகமாக தலைவர்களை வளைக்கிறார்கள், என்ன நோக்கமென்றாவது அறியலாம். எதை எதோடு ஒப்பிடுவது என்கிற சிற்றறிவு கூட இல்லாது அம்பேத்கரை ரங்கநாயகம்மா திரிக்கிறார் என்பது அறிவு நாணயத்துக்கு அழகல்ல.

ஆதவன் பேட்டியில் சொல்லியிருப்பதாவது “ரங்கநாயகம்மாவின் நூல் அம்பேத்கரின் வாசகங்களைத் திரித்து வலிந்து பொருள்கொண்டு தீராத காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில், இவனுக்கெல்லாம் வந்த வாழ்வப் பார்த்தியா...உலகம் முழுக்க இவனைக் கொண்டாடுது என்கிற எரிச்சலுற்ற மனநிலையோடு நூல் எழுதப்பட்டிருக்கிறது’ என வலிந்து பொய் கூறும் ஆதவன் அந்த நூலை படிக்காமலேயே இது போன்ற கருத்துக்களை முன் வைத்தற்குக் காரணம், நூல் கூறும் நியாயங்களை ஏற்றுக்கொள்ளாத அவரது சுயசாதி மனப் பதட்டமும், பயமும் தவிர வேறெதுவுமே இல்லை.


மேலும் மார்க்ஸியத்தின் அடிப்படை நூல்களைக் கூட ஆதவன் வாசித்தது இல்லை என்பது அவரது உரையாடல்களை வைத்தே அறிந்து கொள்ளலாம். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் பொலிட் பிரோவில் பார்ப்பனியர்கள் அதிகம் உள்ளதில் தனது வருத்தத்தைப் பகிர்ந்திருக்கும் அவர் இதுகுறித்து தானும் எழுதியுள்ளதாக கூறியிருக்கிறார். அப்படி எழுதியது என்ன?

அல்லது இது குறித்து அவர் சார்ந்த அமைப்பான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இது குறித்து ஏதேனும் ஒரு கேள்வியையோ, அல்லது உரையாடலையோ, எழுத்துப் பூர்வமாக விவாதமாக வைத்திருப்பாரெனில் அதைச் சுட்டிக்காட்டலாம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு  எதாவது முறையான பதிலைச் சுட்டியிருந்தாலும் இணைக்கலாம். அத்தோடு பெரும்பான்மை பார்ப்பன சாதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி எனக் குறைபட்டுக்கொண்டு, உள்ளத்தில் கேள்விகளை அடக்கி வைத்திருந்த அவர், சம்பந்தப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி தலித்துக்களுக்கு எதிராக பார்ப்பனியத்திற்கு ஆதரவாக எடுத்த தீர்மானங்களை இங்கு ஆதாரத்தோடு எடுத்துச் சொல்ல வேண்டும். இந்தக் கடமையும் அவருக்கு இருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவின் பிரதிநிதித்துவத்தை எந்த அடிப்படையில் பரிந்துரைக்கலாம்.  அம்பேத்கரை அவர்கள் ஏற்றுக்கொண்டவர்களாக இருக்க வேண்டுமா? இல்லை மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவர்களாக இருக்க வேண்டுமா? கட்சி கட்டுப்பாடுகளை மதிக்க வேண்டுமா? இல்லை அதையும் கழட்டிப் போட வேண்டுமா? ஒருவேளை பிரதிநிதித்துவம் செய்துவிட்டால் எல்லா விடிவும் வந்துவிடுமா என்பதை ஆய்வின் மூலம் விளக்கினால் - அது அவர் சார்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உதவும், அவருக்கும் உதவும், மேலும் எனக்கும் அது உதவுவதோடு, இங்கு இருக்கும் ஏனைய தலித் கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சிகளோடு இணைய அல்லது, தலித் கட்சிகளோடு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைய ஒரு நல்வாய்ப்பாக இருக்கும்.

உண்மையில் ரங்கநாயகம்மாவின் நூல் அம்பேத்கரை வேண்டாம் என்றோ  நிராகரித்தோ பேசவில்லை. அவரது லட்சியம், போராட்டங்களைக் கணக்கிலெடுத்து மதிப்பதோடு, அவரை விமர்சனத்துக்கு உட்படுத்தவும் செய்கிறது. அம்பேத்கரை படிக்காமலேயே நீங்கள் கடவுளாக்கி வணங்குவது போல ரங்கநாயகம்மா வணங்கவில்லை. ஏனெனில் அவர் அம்பேத்கரைப் படித்திருக்கிறார். அதனால் அவரை ஐக்கியம் மற்றும் விமர்சனத்தோடு அணுகியிருக்கிறார். ஆனால் ஆதவனைப் போல் ஏற்றுக்கொண்ட தலைவரை கடவுள் இடத்துக்கு உயர்த்துவது அத்தலைவரை கீழிறக்கும் செயலே அன்றி வேறல்ல. எந்த ஒரு தலைவரையும் விமர்சனப் பூர்வமான அணுகுமுறையின் மூலமாக அணுகுவதே அவரைப் பின்பற்றவும், அவர்தம் லட்சியங்களை வளர்த்தெடுக்கவும் உதவும். மாறாக கடவுள் என்று சொல்வது, அவரை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராக மாற்றிவைப்பதோடு, பாசிச கருத்தியலையும் முன் வைப்பதென்றாகிறது. இதுதான் அம்பேத்கர் விளக்கிய தலித் பார்ப்பனியம்.

காஞ்ச அய்லய்யாவின் பேட்டி ஒன்றை படிக்கையில் எனக்கு இதுதான் எனக்கு ஞாபகம் வந்தது. அய்லய்யா அம்பேத்கரை புத்தர், ஏசு, முகமது நபிகள், மார்க்ஸ் ஆகியோரோடு ஐந்தாவது இறைத்தூதர் என்பேன் என்று பதில் அளித்திருக்கிறார். இதைப் பதில் என்பதற்கு பதில் உளறியிருக்கிறார் என்றே நான் சொல்வேன். கார்ல் மார்க்ஸை இறைத்தூதர் என்ற வரிசையில் வைக்கும் அவரது எண்ணம் கண்டிக்கத்தக்கது. அம்பேத்கரோ பௌத்தத்தைக் குறித்து பேசுகையில் எந்த மதத்துக்கும் ஒரு இறைத்தூதர் இருக்கிறார், புத்தர் அப்படியில்லை என்பதை மத மாற்றக் காரணிகளில் ஒன்றாய், மிக முக்கியமான காரணியாய் முன் வைக்கையில் - அய்யலய்யா அம்பேத்கரையே இறைத்தூதர் என்று முன்வைப்பது அம்பேத்கரை கேலி செய்வதற்கு சமம். இந்த தொழுகை மனப்பான்மையே நேரடியாக பாசிசக் கருத்தியலுக்குக் கொண்டு செல்கிறது. அதோடு  எவர் ஒருவரையும்  விமர்சிக்க அச்சமுறும் நிலையை ஏற்படுத்துகிறது.

இந்து ஆன்மீகமே பாசிசம் என்று சொல்லுகிற போது இஸ்லாம் ஆன்மீகம், கிருத்துவ ஆன்மீகம், பௌத்த ஆன்மீகம் பாசிசம் இல்லையா? அந்தந்த நாடுகளில் கோலோச்சும் மதங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன. கருத்துச் சுதந்திரத்தை தெருவுக்குத் தெரு வைத்துக் கொண்டாட்டிக் கொண்டிருக்கிறதா? இப்படி ஆளாளுக்கு ஒரு இறைத்தூதரை நிர்மாணம் செய்தால் கருத்து சுதந்திரத்துக்கும், விமர்சனத்துக்கும் ஒரு சிலை செய்து வைத்து அதை இருட்டறையில் மூடிவிட்டுச் செல்லலாம்.




Sunday, August 14, 2016

நித்ரா.... நின் சோக நிலத்தில் விளைகிறது எனதான துக்க கோதுமை.





சூரியகாந்தியின் முகத்தோடு நீ புன்னகைக்கையில்
உழவன் போல் மகிழ்ச்சியடைகிறேன்
உனது சாயைகளைக் கண்டு நிழல்
தன்
அருகாமையை உணர்கிறது

பசித்த
மற்றும் எளிய வரிகளினூடாக நான் உனக்கு ஒன்று சொல்கிறேன்
நான் காதலிக்கிறேன்
உன் அருகாமையில்
செவ்வனே சரிசெய்து பழுது பார்க்கப்பட்ட
எனது இதயம்
உனக்கான நேரத்தை மிகத் துல்லியமாகக் காட்டுகிறது

பிரிவின் போது ஆழ முத்தமிடும் உனது உதடுகளில்
பெருங்கடல் ஒளிந்திருக்கிறதென்பதை நானறிவேன்

எனது தெய்வங்களும் எனது நிலமும்
நீயல்லா வானமும் எனக்குத் தேவையில்லை
நீயாக இருப்பதில்
என் காதல் இன்னும் வேர்பிடித்துப் பூக்கிறது
உனது சுயமரியாதைகளில்
எனது வார்த்தைகள் அகம்பாவத்துடன் நுழைய
நான் என்னை அனுமதிப்பதில்லை
எல்லா வார்த்தைகளிலும்
உனது
காதல் பரிவர்த்தனையை நிகழ்த்திக்கொண்டேயிருக்கிறாய்

சட்டமிடப்பட்ட ஓவியத்தைக் கண்டு பதறும்
ஓவியன் போல் நான் திகைக்கிறேன்
உனது
பிரிவுகளில் நான் எச்சரிக்கையாயிருக்கிறேன்

நாடோடி தனது கால்களை
கனவில் தொலைத்தது போல் திடுக்கிறேன்

நித்ரா...
நள்ளிரவில் பிரிவென்பது
விவரிக்கமுடியா கொடுமையான கொலைக்கருவி
முத்தமிடுவதைப் போலவோ
கட்டியணைப்பதைப் போலவோ
கண்ணீர் மல்கவோ நாம் ஒரு பிரிவை அனுமதிக்கக்கூடாது

பிரிவை அதன் குகையிலேயே சந்திக்கவேண்டும்
எப்போதும்
நளினம் குடியேறும் பிரிவுகளிடம்
எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்
கொஞ்சும் பிரிவுகளிடமும்...

எனது பிரிவையும்
உனது பிரிவையும் உரசிப்பார்க்கையில்
பறக்கும் பொறி எனது அந்தகத்தை குணப்படுத்தப்பட்டும்

உன்னை தேவதையென்பதற்கு பதில்
நான் சாத்தானாக மாறமல் இருப்பதற்கான
பாடத்திட்டங்களை  எனக்குக் கற்றுத் தா
எல்லோரிடமும்
காதல்
தன் சிவப்புக் கம்பளத்தை விரிக்கிறது
குருதியோடும்
கண்ணீரோடும்
நிணத்தோடும்
புன்னகையோடும்
வன்மத்தோடும் எத்தனை பாதங்கள் கடந்து போயிருக்கும்

அன்பே நமது சிவப்புக்கம்பளத்தை சுருட்டி
வனத்தில் வீசிவிட்டேன்
இனி அது பறவைகளுக்கனது

நாம் காதலிப்பதென்பது
உயிர் வாழ்வதுதான்
அதிகாரத்தின் கண்களைக் குருடாக்கிவிட்டு
உனது சொந்த ஆணவத்தை ஓங்கி முத்தமிடுகிறேன்

நிச்சயம் அது கம்பீரமாய் இருக்கும்
என்னைப் பொறுத்தவரையில்
உன்னிடம் மண்டியிடுவதென்பது
தாய்மொழி தெரியாத சிசுவின் முன்
காத்து நிற்பதைப் போன்றது
சிறு
புன்னகை
சிறிய கண்கள்

அப்படியே நிகழட்டும் அது....

எனது ஆணவத்தில் தீ கொளுத்தியெறியும்
உனது கேள்விகளை எனது கதவுகளைத் திறந்து வரவேற்கிறேன்
பரவட்டும் தீ
என் தத்துவ ஆசிரியர்கள்
கருகி சாம்பலாகட்டும்

எஞ்சிய எலும்புத் துண்டுகளைச் சேகரிக்கையில்
எனது எலும்புகள் மிஞ்சாது பார்த்துக்கொள்
நித்ரா
உனக்கு
நீ விரும்பிய
என் காதல்
உனக்கு....


Thursday, August 11, 2016

புத்தரும் அவரது தம்மமும் – அம்பேத்கர் - சில கேள்விகளை முன்வைத்து...




இந்த நூலைப் படிக்காதவர்களான முன்னாள் கவிஞர்களும், முன்னாள் ஆய்வாளார்களும்  சாதி ஒழிப்பு நூலையும் படிக்கவும் போவதில்லை என்பது அவர்களின் விமர்சனப்பூர்வமான (படிக்காமல் பேசுவது) அணுகுமுறைகள் நன்றாகக் காட்டுகிறது.


புத்தரும் அவர் தம்மமும் நூல் குறித்து இதுவரை ஆராய்ச்சிப் பூர்வமாக இவர்கள் எழுதிய, அல்லது வேறு யாரேனும் எழுதிய கட்டுரைகளை முன் வைத்து நகர்வதன் மூலம் வாசிப்பவர்களுக்கு ஒரு வழியைக் காட்டலாம். இவையெல்லாம் என் வேண்டுகோள்.

பூக்கோ, தெரிதா, சார்த்தர் எழுதிய நூல்களை மேற்கோள்களாகச் சுரண்டி இட்டது போல், அம்பேத்கரையும் சுரண்டி எழுதி தங்களது, அறிவை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் யாருக்கு என்ன பயன் இருக்க முடியும்?


புத்தரை ஒரு வாசகச் சுவாராசியத்திற்காக முன்வைக்கும் இவர்கள், பின்நவீனத்துவம், குடி, கூட்டுக்குடி, அறம் சார்ந்த வாழ்க்கைமுறைகள், குறித்த தங்களது கலக வாழ்க்கையை மேல்தள  உரையாடல்களாக நியாயப்படுத்திப் பேசியதும், எழுதி வந்ததும் ஏன் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.


எனக்குத் தெரிந்து பௌத்த இயல்களை முன்வைத்துப் பேசிய எவரையும் இவர்கள் படிக்கவில்லை என்பதும் வெளிச்சமாகிறது.

அம்பேத்கர் எழுதிய புத்தரும் அவரது தம்மமும் நூலுக்கு தமிழில் வந்த ஆய்வுப் பூர்வமான விமர்சனங்களையும்,  அல்லது ஒரே ஒரு கட்டுரையையாவது, இங்கு சுட்டுவதன் மூலம் பௌத்தம் குறித்து நாம் விவாதிக்கலாம் நண்பர்களே.


மேலும் சில  கேள்விகள்;

1.மார்க்சியத்தைப் பெருங்கதையாடல் என்றவர்கள் பௌத்தத்தை பெருங்கதையாடல் எனச் சொல்லமுடியுமா? முடியாதென்றால் எப்படி. முடியுமென்றால் விளக்கலாம்.

2அம்பேத்கர் பின்நவீனத்துக்கு முன்னோடியானது எப்போது?

3.அம்பேத்கர் புத்தரும் அவரது தம்மமும் நூலை எழுதவதற்கு ஆதாரங்களாக உள்ள நூல்கள் எவை.?

4.மறுபிறப்பை அம்பேத்கர் நம்புவதாக சொல்லியிருக்கிறார். இதன் விளக்கத்தை, பின்நவீன வெளிச்சத்திலோ, அல்லது கவிதை முறையில் கூட விளக்கலாம்.( பதிலுக்கு அதே முறைகளில் விவாதமும் அமையும் )

5.பௌத்தத்தின் இன்றைய பெறுமதி என்ன?

6.புத்தரா கார்ல் மார்க்ஸா கட்டுரையில், மார்க்சியம் சம்பந்தமாக அவர் ஆய்வு செய்த நூல்கள் எவை. எவை.?

7.புத்தர் தன் தந்தையின் சொத்துக்களைப் பறிமுதல் செய்துவிடாதீர்கள் என்ற கூற்று பௌத்த தத்துவ இயல்களில் எங்கு இருக்கிறது. அல்லது அனுமானமா?

8.கடன்பட்டவரையும், சிப்பாய்களையும் மதத்தில் இணைத்துக்கொள்ள தடைவிதித்ததன் பின் புலம் என்ன?

9.பார்ப்பனியம் அரசுடைமையாளர்களை சார்ந்து வளர்ந்தது போல், பௌத்தம் வளர்ந்தது எதனால்? அதன் பின்விளைவுகள் என்ன?

10,“மதம் ஏழைகளுக்கு அவசியமானது. மதம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவசியமானது. ஒரு மனிதன் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டுதான் வாழ்கிறான். வாழ்க்கையின் ஆணிவேர், அடிவேர் நம்பிக்கையில்தான் பொதிந்துள்ளது. இந்த நம்பிக்கை இழகப்படுமானால் வாழ்க்கை என்ன ஆவது? மதம் நம்பிக்கையை அளிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, ஏழை எளிய மக்களுக்கு ஒரு செய்தியைக் கூறுகிறது. –பயப்படாதீர்கள், வாழ்க்கை நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கும், இது உறுதி என்று _ இதனால்தான் ஏழைகளும் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களும் மதத்தை அரவணைத்துக்கொள்கிறார்கள்.” இது அம்பேத்கர் கூறியது. 

இது குறித்து உங்களது விவாதங்கள் என்ன?

11. புத்தரின் கையில் ஸ்வஸ்திக் முத்திரை இருந்தது என அம்பேத்கர் தன் நூலில் குறிப்பிடுகிறார். இதுகுறித்த ஆராய்ச்சிகள் என்ன?


12. காலாவதியான சிந்தாந்தம் என்று ஒன்றுண்டா, அப்படி காலாவதியானதன் தொடர்ச்சியாக எந்த காலாவதியாக சிந்தாந்தமும் தோன்றியதில்லையா?

13. படிக்காமல் ஒரு நூலை   ‘பீ’ யிக்கு ஒப்பச் சொல்வதன் மூலம், இவர்களின் எந்த நூலையும் படிக்காத ஒருவன் அட்டையை மட்டும் பார்த்துவிட்டு  இவை அனைத்தையும்  ‘பீ’ என்று சொல்ல வாய்ப்பளிப்பார்களா? 


நினைவூட்டல் ; 500 பக்க அளவுக்கு இழுத்துப் போகும் பெரும் கேள்விகளும் உண்டு.


                   

“ கடவுளாக இருந்தாலும், அவன் குற்றமற்றவன் 

அல்ல என்று நேருக்கு நேர் வாதிடத் துணியும் 

கலகக்காரர்களுக்கு இந்த உலகம் 

கடமைப்பட்டுள்ளது” – 


அம்பேத்கர்.









ரவிக்குமார் அவர்களுக்கு…



“ அறிவு தனது விஷக்கொடுக்கைத் தனக்கெதிராகத் திருப்பியாக வேண்டும்.
 - நீட்ஷே.


ரங்கநாயகம்மா புத்தகம் வெளிவந்தது குறித்து, நீங்கள் அவருக்கு பதில் அளித்த முறையை தோழர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.

நீங்கள் ரங்கநாயகம்மா பற்றிச் சொன்ன கருத்து

// ஒரு columnist குறித்து என்ன சொல்வது? //

இந்திய அளவிலேயே இடதுசாரிகள் இன்னும்கூட அம்பேத்கரை பொருட்படுத்தி கற்க முன்வரவில்லை. மார்க்ஸை ஆழ்ந்து வாசித்த ஆயிரம் தலித் செயல்பாட்டாளர்களைப் பார்க்க முடியும். ஆனால் அம்பேத்கரை ஆழ்ந்து வாசித்த தலித் அல்லாத இடதுசாரிகள் எத்தனைபேர் இருப்பார்கள்?//
நீங்கள் சம்பந்தப்பட்ட நூலை முழுவதும் வாசித்தீர்களா?

வாசித்திருந்தால் அது குறித்து உங்கள் விமர்சனங்களை தாராளமாக வைக்கலாம். ஆனால் ஒரு columnist குறித்து என்ன சொல்லுவதென்று ஒரு அடையாளத்தை முன் வைத்துப் பேசியது சரியா. தமிழிக்கு எத்தனையோ விசயங்களை மொழிபெயர்ப்பின் மூலம் முன்வைத்த நீங்கள் இப்படி ஒரு கருத்தை வைத்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.

ஒரு விவாதத்திற்காக வைத்து உரையாடுவததென்றால், காலச்சுவடில் நீங்கள் என்ன எழுதி வந்தீர்கள் என்று விளக்கலாம்.  “பிள்ளை கெடுத்தாள் விளை” கதையை சாதியவாதியின் கதை என விமர்சிக்கப் பட்டபோது, ஒரு விமர்சகராக அக்கதையை தவறாக வாசிக்கக் கூடாது, மிகச் சரியா வாசிக்கப்படவேண்டும் என நீங்கள் எடுத்துக்காட்டி எழுதிய வரிகள் இதுதான்.

"தலித்துகளுக்கு இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும் அறிவுகிடையாது.. என்பது போன்ற தவறான கருத்துகள் வலுப்படவே வழிவகுக்கும்.அது நிச்சயமாக தலித்துகளுக்கு உதவக்கூடியதல்ல.."

கதைகளை எழுதுபவருக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் உங்கள் பார்வையில் columnist க்கு கிடையாதா, ஒரு காலம்னிஸ்ட் எதை எதை எழுதினால் நீங்கள் பொருட்படுத்தி உரையாடுவீர்கள் என்று சொல்ல முடியுமா. உங்களிடமிருந்து இப்படி ஒரு பதில் வருமென்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. வருத்தமாக இருக்கிறது.

மேலும் // மார்கஸ் போதவே போதாது அவருக்குப் பிறகான அத்தனை சிந்தனையாளர்களும் தேவை.//

அந்த சிந்தனையாளர்கள் யாரென்று சொன்னால் நிச்சயம் படிக்க வசதியாக இருக்கும். ஒருவேளை அவர்கள் பின்நவீனக் கருத்துக்கள், விளிம்பு நிலைச் சிந்தனைகள் என்ற அளவில் விமர்சித்து, பண்பாட்டுத் தளத்தினால விமர்சனங்களை மட்டும் முன்னெடுத்திருந்தாலும் பரவாயில்லை. அவர்கள் குறித்து நாம் பேசலாம்.

அதே போல்,

// மார்க்ஸை ஆழ்ந்து வாசித்த ஆயிரம் தலித் செயல்பாட்டாளர்களைப் பார்க்க முடியும். ஆனால் அம்பேத்கரை ஆழ்ந்து வாசித்த தலித் அல்லாத இடதுசாரிகள் எத்தனைபேர் இருப்பார்கள்?//

இந்தக் குறிப்பின் மூலம் நீங்கள் சொல்லுவது, அந்தளவுக்கு மார்க்சியர்கள் அம்பேத்கரை ஆய்வு செய்யவில்லை என்றே பொருள் கொள்கிறேன். நன்றி. ரங்கநாயகம்மா சம்பந்தமான இந்த நூலுக்கு இதுவரை வந்த பதில்களை ஒரு பருந்துப் பார்வையில் பார்த்தால், அதில் உங்களுக்கு ஒரு விசயம் கிடைக்குமென நம்புகிறேன்.

அம்பேத்கர் குறித்த ஒரு நூல் தெலுங்கில் 13 பதிப்புகள் வந்து ஆங்கிலத்திலும் வந்து இப்போது பதினாறு வருடங்களுக்குப் பிறகு தமிழில் வருகிறது. வந்ததும் முதல் குற்றச் சாட்டு அது ஆதிக்கசாதி போட்ட புத்தகம், புத்தகத்தை மொழிபெயர்த்தவர் ஆதிக்க சாதி, விலை குறைவாக இருக்கிறது, சதி, காசு வாங்கிக்கொண்டு போட்டிருக்கிறார்கள் என்ற விமர்சனங்கள்தான்.  வெட்ட வேண்டும் கொளுத்த வேண்டுமென்றெல்லாம் விமர்சனங்கள் வந்த போது அவர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது. அவர்களின் நூலறிவு என்ன விதத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். 

எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு விமர்சன நூலை ( நூல் வடிவில் இருப்பதால்) 
“ பீ ” என்று சொல்லும் அளவுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறது. தமிழில் இதுபோன்ற கறாரான விமர்சனங்கள் (!) வரும்போது, அம்பேத்கர் குறித்த விமர்சனங்களை ஆயிரம் புத்தகங்களை எப்படி முன்வைக்கமுடியும். கார்ல்மார்க்ஸை வப்பாட்டி வைத்தவர் என்று எழுதிய எழுத்தாளர்களும் தமிழில் இல்லாமல் இல்லை. அப்பொழுது மார்க்சியர்கள் யாரேனும் கொந்தளித்து இது போன்ற பீ விமர்சங்களைச் சொன்னார்களா எனத் தெரியவில்லை. ஏன் மார்க்ஸ் ஜெர்மன்காரர், வெளிநாட்டுக்காரர் என்ற அளவிலும் விமர்சன அறிவு வேலைசெய்த சமூகம் நம் தமிழ்ச் சமூகம் என்பது நீங்கள் அறியாததல்ல.

மார்க்சை ஆழ்ந்து கற்ற ஆயிரம் பேரெல்லாம் வேண்டாம். குறிப்பாக இரண்டு பேரைச் சுட்டினால் போதும். ஏன் கம்யூனிசத்தையும் பௌத்தத்தையும் முன்வைத்து தனது விமர்சனங்களை எழுதிய அம்பேத்கரையே முன்மாதிரியாகக் கொண்டு நீங்கள் உரையாடலாம். (நீங்களாவது மார்க்ஸை கற்றிருக்கிறீர்களா)
மார்க்ஸை ஆழ்ந்து வாசிக்கும் அவசியம் தலித் சிந்தனையாளர்களுக்கு ஏன் வந்தது என்பதிலிருந்து, அப்படி வாசித்து அவர்கள் முன்வைத்த முடிவுகளை நீங்கள் வைக்கலாம். அப்படி வைக்கும் பட்சத்தில் அந்த முடிவுகள் நோக்கி நாம் நம் உரையாடலைத் தொடரலாம்.

மேலும் உங்களது பக்கத்தில்,  சமஸ்கிருத பாடத்திட்டம் குறித்து நீங்கள் வைத்த வாதங்களையும் உங்கள் பக்கத்தில் கண்டேன். அதில் நீங்கள் குறிப்பிட்ட வார்த்தைகள் என்னை சற்று யோசிக்க வைத்தது.

// புராணங்களையும் கட்டுக்கதைகளையும் வரலாறு என வலியுறுத்தி அதன் அடிப்படையில் வரலாற்றுப் பாடங்களை மாற்றி எழுதிவரும் பாஜக அரசு, தாய்மொழி வழிக் கல்வியை ஆதரிப்பதுபோல பாசாங்கு செய்துகொண்டே சமஸ்கிருதத்தை உயிர்ப்பித்து அதை இந்தியா முழுவதும் அனைவர்மீதும் திணிப்பதற்குத் திட்டமிடுகிறது.//

இது நிச்சயம் தவறான ஒன்றுதான். சஸ்கிருததத்தை அல்ல, எந்தக் கட்டுக்கதைகளையும் நம்பி ஒரு மொழியை திணிப்பது மாபெரும் தவறுதான். அதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதே சமயம் புராணக்கதைகளைக் கொண்டு, அதை வரலாறாக மதித்து, அம்பேத்கர் ஆய்வு செய்தத்தை எப்படிப் பொருள் கொள்வீர்கள். அம்பேத்கரின் புத்தமும் அவர் தம்மமும்- எந்த  பௌத்த தத்துவங்களை முன்வைத்து, எந்த பௌத்த நூல்களை முன்வைத்து ஆராய்ந்து எழுதியது என நீங்கள் விளக்கினால் மகிழ்வேன். ( சமஸ்கிருதம் குறித்து அம்பேத்கரின் கருத்துக்களையும் முன்வைக்கலாம்)

சிறுகுறிப்பு;

//ஒரு தலைவரை நினைவுகூர இரண்டு வழிகள் இருக்கின்றன. அவரை வணக்கத்துக்குரிய குறியீடாக மாற்றி அவரது பிறந்த நாளிலும் நினைவுநாளிலும் மாலை மரியாதை செலுத்துவது ஒன்று; அந்தத் தலைவரின் கொள்கைகளை உயிர்ப்புடன் சமூகத்தில் பரவச் செய்வது இன்னொன்று. அம்பேத்கரை நினைவுகூர்கிறவர்களில் பெரும்பாலோர் இதில் முதல் பிரிவைச் சேர்ந்தவர்கள். அதனால்தானோ என்னவோ திரும்பிய பக்கமெல்லாம் அவருக்குச் சிலைகள் இருக்கின்றன. ஆனால் அவரது சிந்தனைகளோ புறக்கணிக்கப்பட்டுக் கிடக்கின்றன.// இதுவும் நீங்கள் கூறியதுதான்.

நீங்கள் எந்த வகையை முன்மாதிரியாகக் கொள்ளப் போகிறீர்கள் தோழரே.


“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...