எனது தனிமை விஷம்
அருந்தி மகிழுங்கள்
ஆண்டவரே
பொல்லாப்புக்கு ஆக்கினையாக்கி
துரோகத்தால் வாழச்சொல்லும் உங்கள் கருணைக்கு அய்யோ
பாவம்
ஆண்டவரே
நான் மனிதன்
இது உங்களை மீறிய
செயல்
சொல்
வாழ்க்கை
ஏன் ஆண்டவரே
எங்களை வழிமறிக்கிறீர்கள்
கடவுள்களால் ஆன சாபங்களால்
எங்கள் தேசம் நிரம்பி வழிகிறது
சாலைப் போக்குவரத்தில் நீங்கள் எந்தக் குறியை
மதிக்கிறீர்கள்
பச்சையையா
இல்லை
மஞ்சளையா
தவிர்க்கமுடியாமல்
சிவப்பையா
சிவப்பையா
எங்கள் தேசத்தில்
ஆளுக்கொரு நிறம்
ஆளுக்கொரு கடவுள்
ஆண்டவரே
ஆளும் அதிபர்
முன் நீங்கள் நின்றால்
அவர் தானே கைகட்டி
ஒரு கம்பெனியும் வைத்துத் தருவார் ஆண்டவரே
வாங்கிப் பிழைத்துக்கொள்ளுங்கள்
கொல்லுங்கள்
எங்கள் தேசம் ஏழைகளின் தேசம்
சிரிப்பில் இறைவனைக் கண்டும்
அழும்போது
புரட்சியாளர்களையும் துணைக்கு அழைக்கிறோம்
நல்லது ஆண்டவரே
இது வழிப்போக்கனின் சொல்
மதிக்க வேண்டாம்
நிச்சயம்
நீங்கள் எங்கள் வழிக்கு வரும்போது
முதலாளிகளுக்கு எதிராய் நிற்பீர்கள்
அப்போது ஆண்டவரே நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்
ஆண்டவர்களைத் தோழர்களாய் அழைப்பது என்பது
அவமானத்திற்குரிய செயல் அல்ல
தோழர்கள்
ஆண்டவர்களை ஆதி முதலே அடையாளம் காட்டி வந்தார்கள்
நாங்கள்தான் ஏமாந்து போனோம்
ஆண்டவர்கள் அனைவரும் அதிகார வர்க்கத்தினர்
என்கிறார்கள்
கம்யூனிச பூதத்தை
உசுப்பி விட்ட இரு இளைஞர்கள்
ஆண்டவரே
இப்பொழுது எங்களுக்கு துணைக்கிருப்பது
அந்த இரு சின்னஞ்சிறிய பூதங்கள்தான்
மன்னியுங்கள் ஆண்டவரே
மனிதர்களை அரவணைக்கும்
தோழர்களை பூதம் என்றழைப்பதற்கும்
எதுவுமே செய்யாத
உங்ககளை ஆண்டவரே என்றழைப்பதற்கும்
சற்றுக் கூச்சமாக இருக்கிறது
தயவு செய்யுங்கள் ஆண்டவரே
இப்பொழுது உங்களைப் பார்க்கத்தான்
பயமாய் இருக்கிறது
எங்கள் அதிபர்
முதலாளிகளை ஆண்டவர் என்கிறார்
முதலாளிகளின் சிரிப்பில்
ஆண்டவர் தங்கப்பல் தெறிக்க மின்னுகிறார்
நாங்கள்
அமைதியாய் இருக்கிறோம்
பசித்த வயிறு
தீயாய்
எரிகிறது.
No comments:
Post a Comment