Thursday, September 21, 2017

அம்பேத்கரும் அவரது புத்தரும்




    அம்பேத்கரின்
"புத்தரும் அவரது தம்மமும்" 
      நூலை முன்வைத்து 


சித்தார்த்தர் திருமணம் ஆகி குழந்தை பெற்றதும் திடீரென சுத்தாதனருக்கு அசித்தர் சொன்ன சோதிடம் நினைவுக்கு வருகிறது. இதுவரை சுத்தோதனர் எங்கும் அது குறித்து கவலைப்பட்டதாக குறிப்பிடாத அம்பேத்கர், திருமணம் முடிந்து ஒரு குழந்தை பெற்ற பிறகு ஏன் அவருக்கு ஞாபகம் வருகிறது அதற்கான காரணங்கள் எவை என குறிப்பிடவில்லை. அந்த அச்சம் இப்பொழுது ஏன் அவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை யசோதராவைத் திருமணம் செய்ய விருப்பமில்லாமல் இருந்திருக்கலாம். இல்லறவாழ்க்கையில் நாட்டமில்லாமல் இருந்திருக்கலாம், இதன் பின்னாவது சுத்தோதனர் அசித்தர் கூறிய  கணிப்பை எண்ணி பயந்து இது போன்ற முயற்சிகளைச் செய்திருக்கலாம். ஆனால் நீண்ட தாம்பத்ய வாழ்க்கையில் சித்தார்த்தர் ஈடுபட்டு ஒரு குழந்தையும் பெற்ற பிறகு சுத்தோதனருக்கு ஏன் அந்த கணிப்பு அச்சத்தைத் தந்திருக்க வேண்டும். காரணங்களாக அம்பேத்கர் எதையும் கூறவில்லை.

ஒருவேளை இல்லற வாழ்க்கையில் சித்தார்த்தர் அலுத்துப் போய் துறவு முடிவை எடுக்கலாம் என்று எண்ணினாரோ என்னவோ. ஆனால் உண்மையில் இதுவாக இருக்கலாம் என்ற நமது கணிப்பு உறுதியாகும் படி சில விசயங்களை சுத்தோதனர் சித்தார்த்தருக்கு செய்து கொடுக்கிறார். அது அவருக்கு கோடைகாலத்தில், குளிர்காலத்தில் கார் காலத்தில் வாழ என மூன்று அரண்மனைகளையும் கட்டிக்கொடுத்ததோடு குலகுருவின் உதாயினர் ஆலோசனைப்படி பெண்களைக் கொண்டு அவ்வரண்மனைகளை நிரப்புகிறார்.  சுருக்கமாக மூன்று அந்தப்புரங்களை கட்டிக்கொடுக்கிறார் மன்னர். நூலில் இதற்கு முன்னரும் இதற்குப் பின்னரும் சுத்தோதனரை அம்பேத்கர் மன்னர் என்றும் பேரசர் என்றுமே வர்ணிக்கிறார். இதோடு இதற்கு முன்னர் கபிலவஸ்துவின் ஆட்சியதிகாரம் பற்றி அம்பேத்கர் கூறியுள்ளதை ஒப்பு நோக்குவோம்.

கபில வஸ்து நாட்டின் சாக்கியர்கள் கொண்டு இருந்த அரசியல் தன்மை பற்றி அறிவதற்கு அதிகம் இல்லை. அவை குடியரசா, குழு அரசா என்பது பற்றிய தகவலும் இல்லை.

ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிய வருகிறது சாக்கியர்களின் குடியரசில் அரச குடும்பங்கள் பலவாய் இருந்தன- சுழற்சி முறையில் அவை முறை போட்டு ஆண்டன.

என்று கூறிய அம்பேத்கர். சித்தார்த்தர் பிறந்ததும் சுழற்சி முறையில் பட்டத்திற்கு வந்த சுத்தோதனர் இங்கு தன் மகன் வாழ்வதற்கான மூன்று அந்தப்புரங்களைக் கட்டிக்கொடுக்கிறார். இது அவரது தனிப்பட்ட வருவாயா? அல்லது அரசனானதால் மக்கள் சொத்தில் கட்டப்பட்டதா என்று குறிப்புகள் இல்லை, ஆனால் மன்னர் இளவரசருக்குக் கட்டிக்கொடுத்தார் என்று சொல்லத் தயங்கவில்லை அம்பேத்கர். அப்படியானால் சுத்தோதனர் ஊதாரித்தனமான ஒரு அரசனாகவே இருந்திருக்க வேண்டும். நினைத்த மாத்திரத்தில் மூன்று அரண்மனைகளைக் கட்டிக்கொடுக்க முடிகிறது என்றால் அவரால் எத்தனை அடிமைகள் அல்லது உழைப்பாளிகள் சித்திரவதை அனுபவித்திருக்க வேண்டும் என்பதை இங்கு நாம் நினைத்துப் பார்க்கலாம். ஆனால் அம்பேத்கர் சித்தார்த்தரின் துறவுக்கு எவ்வளவு பெரிய தடைகள் இருந்தது அவற்றை  தெய்வப் பிறப்பான சித்தார்த்தர் எப்படி சமாளித்தார் என்று அவதார மகிமையைப் போல் சித்தரிப்பதிலேயே கவனம் செலுத்துகிறார். எந்த இடத்திலும் சித்தார்த்தருக்கு திடிரென நம் தந்தை ஏன் மூன்று அரண்மனைகளையும், அதில் பெண்களையும் நிரப்புகிறார் என்ற கேள்வி எழவே இல்லை.

அந்த மூன்று அரண்மனைகளிலும் சுத்தோதனர் தனது குலகுரு உதாயினரின் ஆலோசனைப்படி, சித்தார்த்தரை மயக்க பெண்களை அனுப்பி வைக்கிறார். அந்தப் பெண்கள் எப்படி மயக்க முயற்சித்தனர் என்பதை, பகுதிக்கு மேல் அலுப்பூட்டும் எழுத்துக்களால் படிக்க பெரும் அலுப்பாக இருக்கிறது. ஓரிரு உதாரணங்களாக

‘இமவதப் பார்வத வனங்களில் உலவும் யானையைப் போல அடர்ந்த சோலைகளில் பெண்களில் கூட்டத்தோடு இளவசரசை அவர்கள் உலவச் செய்தனர்.'

'தேவ வனத்தில் அப்ஸரஸ்கள் சூழ வீற்றிருக்கும் சூரியனென அந்த மகிழ்வனத்தில் பெண்கள் புடைசூழ அவர் ஒளி படைத்தவராய் வீற்றிருந்தார். மற்றவர்களோ தம்பொன்னுடைகள் மின்மினுக்க, இங்குமங்கும் உலாவி, மெல்லிய உடைக்குள் மிளிரும் தம் உடலழகைக் காட்டி அவரை மயக்க முயன்றனர்.’

என்று விவரித்துச் செல்கிறார். அதில் குறிப்பிட்ட ஓரிரு வருணைகளைத்தவிர இலக்கிய நயம் எதிலும் இல்லை. இலக்கிய நயத்தோடு அவர் கூறியிருப்பதில் சில உதாரணங்கள்

போலிப் போதையில், தன் நீல உடை அடிக்கடி நெகிழுமாறு நடித்த மற்றொரு பெண் இருளில் பளிச்சிடும் மின்னலென தன் நாவை நீட்டி அசையாமல் நின்று அழகு காட்டினாள்

மற்றவர்கள் சிலர், தம் இன்மதுவின் மணம் வீசும் இனிய வாயின், செவ்வில இதழ்களைச் சுழித்து அவர் காதுகளில் கிசுகிசுத்தனர். என் இரகசியங்கள் உம்மால் அறியப்படட்டும்.

இது போன்று ஆங்காங்கு சில மின்னல் கீற்றுகள் தென்படுகிறது. ஆனால் இவைகளில் வாசகர்களாகிய நாம் கவனிக்க வேண்டிய மூன்று முக்கியமான விசயங்கள் இருக்கிறது.

ஒன்று; 

எந்தப் பெண்ணாவது இது ஒரு தொழிலா என்று கேட்டு தன் சுயமரியாதையை வெளிப்படுத்தவில்லை. அரசன் ஆணையிட்டதும் இளவரசரை வண்டுகள் போல் மொய்க்கத் தொடங்கிவிடுகின்றனர். இதன் மூலம் சாக்கிய குலத்து இளம் பெண்கள் மன்னர் ஆணையிட்டதும் அடிமைகள் போல் தங்களது உடலை ஈவதற்கு முன்னே வருகின்றனர். சுத்தோதனாரது பண்ணைகளில் ஆண்களான அடிமைகளும், உழைப்பாளர்களும் கொளுத்தும் வெயிலில் வேலை செய்து அரசனின் வருவாயைப் பெறுக்கவேண்டியது. அவர் தம் பெண்கள் இங்கு அந்தப்புரத்தில் இளவரசனை மயக்க வேண்டியது. இதுவே அன்றைய நிலைமை என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

இளவரசரின் உறுதியைக் குலைக்க பெண்கள் அந்தப்புரத்திற்கு செல்ல வேண்டும் என்று சொல்பவர் குலகுரு, அதற்கு கட்டளையிடுபவர் அரசர். அது குறித்து எந்தக் கேள்வியையும் கேட்காதவர் அம்பேத்கரது சித்தார்த்தர்.

சித்தார்த்தரது இளம் பருவக் குணநலன்கள் குறித்து

ஒருமுறை தன் நண்பர்களோடு அவர், தன் தந்தையின் பண்ணைக்குச் சென்றார். அங்கே கொளுத்தும் வெய்யிலில், கந்தல் உடைகளுடன். வேலையாட்கள் ஏர் உழுதல், அண்டை வெட்டுதல், மரங்களை வெட்டுதல் போன்ற கடுமையான வேலைகளைச் செய்வதைக் கண்டார்.

இந்தக் காட்சி அவரை மிகவும் பாதித்தது

ஒரு மனிதன் மற்றொருவரைச் சுரண்டுவது சரியாகுமா? என்று அவர் தன் நண்பர்களைக் கேட்டார். வேலையாள் கடுமையாக உழைக்கவும், அதன் பயனை எஜமானன் சுகமாய் அனுபவிக்குமாக இருப்பது எப்படி சரியாகும் என்றார்?”

என்று புத்தரின் இளம்பருவ கருணை உள்ளத்தை  எழுதிய அம்பேத்கர், அந்தப்புரத்தில் தன்னை படுக்கையில் வீழ்த்த வந்திருக்கும் பெண்களின் மனநிலை குறித்து சிறிதும் கவலைப்பட்டதாக எங்கும் சொல்ல வில்லை. இதை ஒரு வேலையாக ஏன் தன் தந்தை நினைக்கிறார் என்று இப்பொழுதும் அவரிடம் கேட்கவில்லை. கேட்கவும் தோன்றவில்லை. சிறுவயதில் பண்ணை அடிமைகளின் கோலங்கள் அவர் மனதை உறுத்தி தொந்தரவு செய்தது போல், தான் வளர்ந்து, ஒரு குழந்தைக்கு தகப்பான பின்பும் ஏன் இதுபோன்ற மயக்கும் காரியங்கள் என்ற கேள்விகள் எழவில்லை. அம்பேத்கருடைய சித்தார்த்தரின் குணம் உண்மையில் எத்தகையது. தேர்ந்தெடுத்த விசயங்களில் மட்டும்தான் அவரது கவனம் செல்லுமா. இத்தனைக்கும் இந்த கேளிக்கூத்துக்கள் ஓரிரவில் நடந்தவைகள் அல்ல

அவரை வசீகரீப்பதற்காகப் புகழ்வதும், அவர் இளமையை, அழகைப் பாராட்டுவதுமாகப் பெண்கள் எடுத்த முயற்சி மாதக் கணக்கிலும், ஆண்டுக்கணக்கிலும் நீண்டும் தோல்வியுற்றது.

என்று கூறுகிறார் அம்பேத்கர். இத்தனை மாதங்களில் ஆண்டுகளில் பெண்களே, நீங்கள் அடிமைகளா உங்களது பிழைப்பு ஒரு பிழைப்பா என்று பெண்களை நோக்கிக் கேட்டிருக்க வேண்டும். அல்லது சுத்தோதனரை அழைத்து, கட்டிய மனைவி இருக்கும் போது இதுபோன்ற களியாட்டங்களில் ஈடுபடச் சொல்வது ஒரு தந்தைக்கு அழகா. பெண்கள் ஆண்களை மயக்கும் பண்டங்களா, இதற்கும் மேலாக, இது போன்ற மோசமான காரியங்கள் குறித்து என் மனைவி  என்ன நினைப்பாள். இதெல்லாம் ஒரு முறையா. அடிமைப் பெண்களை, அல்லது உழைக்கும் வர்க்கப் பெண்களை இதுபோன்ற கட்டளைகளுக்கு அடிபணியச் சொல்வது சரியா என்று கேட்டிருக்க வேண்டும். கேட்கவே இல்லை. குறைந்தபட்சம் இது கேவலமான செயல் இதில் நான் ஈடுபடமாட்டேன் என்றாவது சொல்லியிருக்கலாம் சொல்லவில்லை, ஆனால் சித்தார்த்தர் ஒன்றே ஒன்றை நினைத்திருக்கிறார். அது என்ன தெரியுமா

"இளமை நிலையற்றது என ஏன் இந்தப் பெண்கள் உணரவேயில்லை? என்ன குறை உள்ளது இவர்களிடம்? இருக்கும் அழகையெல்லாம் அழித்துவிடுமே முதுமை

இந்த முதுமை இளமைப் பிரச்சினைதான் அவருக்கு எண்ணத் தோன்றியிருக்கிறது. அதுவும் மாதக் கணக்கிலும் ஆண்டுக்கணக்கிலும். அப்பெண்களின் தன்மான உணர்ச்சி குறித்தோ, ஏழ்மை நிலைகள் குறித்தோ, மன்னருக்குக் கட்டுபடவேண்டிய நிலைமைகள் குறித்தோ, யதோசரையின் மனநிலை குறித்தோ எதுவும் தோன்றவில்லை என்பதையே அம்பேத்கரின் விவரிப்புகள் காட்டுகிறது.

மேலும் உதாயினர் இளவரசரை மயக்குங்கள் என்றதும், அந்தப் பெண்கள் உள்ளக் கிளர்ச்சியுற்று இளவரசரை வெற்றி கொள்வதற்குத் தம்முடைய நிலைக்கு மேம்பட உணர்வு பெற்றனர் என அம்பேத்கர் குறிப்பிடுகிறார். இது உண்மையிலேயே மேம்பட்ட உணர்வா என்ன?

இரண்டு ;

எந்த ஒரு முடிவையும் சங்கத்தைக் கூட்டி எடுக்கும் சாக்கிய குலம் அரசரது இந்த முடிவை, பெண்களை அந்தப்புர அடிமையாக்குவதை எப்படி சம்மதித்தது. சம்மதித்தது என்றால் சாக்கிய குல சங்கம் ஒரு தனிமனித விவகாரத்தில் எதையும் செய்யலாம் என்றே விதியை வகுத்துக் கொடுத்திருக்கிறது என்றே அர்த்தப்படுகிறது.

மூன்று

அம்பேத்கரது வர்ணனைகளைக் கவனித்தோமானால் அது மத, புராண வர்ணனைகளை மிஞ்சிக் காணப்படுகிறது. புராண வர்ணனைகளையே அவர் இங்கு பெரிதும் எடுத்தாள்கிறார். அப்சரஸ்கள் சூழ வீற்றிருக்கும் சூரியனைப் போல என்கிறார். மேலும் இதற்கு சித்தார்த்தரும் உடன்பட்டிருக்கிறார் என்பது போல் சில இடங்களில் காணப்படுகிறது.

தங்கள் வில்லென வளைந்த புருவமும், வசீகரம் மிக்க பார்வையும், காதல் மொழிகளும், கனிச்சுவைப் புன்னகையும், நளின சித்ர நடையும் கூட அந்தப் பெண்களுக்குத் தன்னம்பிக்கையைத் தரவில்லை.

ஆனாலும் குலகுருவின் போதனைகளும், இளவரசரின் நயமான நடையும், அப்பெண்கள் அருந்தியிருந்த மதுவும், நேசமும் அவர்களுக்குள் உறுதிப்பாட்டை மீட்டன

என்கிறார். இளவரசரைப் பெண்கள் உலாவச் செய்தனர் என்றும் கூறுகிறார். இதன் மூலம் சித்தார்த்தர் அவர்களுக்கு நம்பிக்கை வரும் படி நடந்தாரா என்ன என்ற கேள்வி வருகிறது. அதே சமயம் இளவரசரை மயக்கி படுக்கையில் வீழ்த்துங்கள் காம சுகத்தைத் தாருங்கள் என உதாயினரின் உரையைக் கேட்ட பெண்கள், எப்படியாவது இளவரசரைத் தம்வசப்படுத்த உறுதி மேற்கொண்டர் என்று எழுதிய அம்பேத்கர் அடுத்த உரையாடலிலேயே அந்த நம்பிக்கையை அப்பெண்கள் இழந்ததாகக் கூறி பின் குல குருவின் போதனை, மது, மற்றும் இளவரசரின் நயமான நடை என்று கூறுகிறார். இங்கு சாக்கிய குலப் பெண்கள் குடிப்பதை ஒரு தவறாகக் கருதவில்லை என்று கருத்து மேலும் வலுப்பெறுகிறது.

ஒரு நாளில் இது நடந்திருந்தால் கூட அப்படி நடக்க வாய்ப்பில்லை இளவரசர் அவர்களை விரட்டியடித்தார் என்று முடித்து வைத்திருக்கலாம். ஆனால் இளவரசரை மயக்கும் இந்தக் கொடுமையானது மாதக் கணக்கிலும், ஆண்டுக் கணக்கிலும் அல்லவா தொடர்ந்தது என்கிறார் அம்பேத்கர். ஒரு நாளில் கூடவா இது தவறென அவர்கட்கு திருமணம் முடித்துக் குழந்தையும் பெற்ற இளவரசர் சுட்டிக்காட்டவில்லை. காட்டவேயில்லை.

இப்படி பல மாதங்கள் ஆண்டுக்கணக்கில் அப்பெண்கள் அடைந்த தோல்வியை உதாயினர் ஒவ்வொரு நாளும் வேவு பார்த்து வந்திருக்கிறார். யதார்த்த மொழியில் சொல்ல வேண்டுமென்றால் இன்றைக்கு நடக்குமோ, நாளைக்கு  நடக்குமோவெனக் காத்திருந்தார். நடக்கவில்லை. ஆனால் அடுத்து என்ன செய்கிறார். குலகுரு உதாயினர் இளவரசரிடம் பேசுகிறார். இங்கு உதாயினரின் புனித மரபுக்கதைகளை ஆதாரமாகக் கொண்ட போலியான வார்த்தைகளை கேட்ட இளவரசர் என்று குறிப்பிடும் அம்பேத்கர் அந்த வாதங்களைச் சொல்லும் முன் கொள்கைக் கோட்பாட்டு வழிமுறைகளில் வல்லவரான உதாயினர் என்றே கூறுகிறார். அப்படியென்றால் இளவரசர் உதாயினர் ஒரு கருங்காலி என்றே நினைத்திருக்க வேண்டும். நினைக்கவில்லை. பெண்களை அனுப்பி என்ன செய்யச் சொல்கிறீர்கள், இதற்கான நோக்கம் என்ன, இதன் அடிப்படைகள் என்ன? இதற்கான அவசியங்கள் ஏன் ஏற்பட்டது என்று கோபமாவது பட்டிருக்க வேண்டும். இல்லை, இளவரசர்தான் கருணையாளராயிற்றே,

உதாயினர் மகாபாரதக் கதைகளில் பெண்களால் மோசம் போன முனிவர்களையும், மதவாதக் கதைகளையும் எடுத்துச்சொல்லி அடுத்தவர் மனைவியைப் புணர்ந்த முனிவர்களின் கதைகள், பக்தையைப் புணர்ந்த சந்திரன் கதைகளையும் சொல்லி, சோமாவின் மனைவி ரோகினிமேல் அகஸ்தியர் ஆசை வைத்தார்; இவ்வாறே லோபமுத்திரைக்கும் சேர்ந்ததாய் சுருதிகள் கூறுகின்றன என்று விளக்கி

இவ்வாறாக மாபெரும் நாயகர்களே இழிவான இன்பங்களைக் கூடவிடாமல் தேடி உழன்றும், புகழ்பெற்றனெரன்றால், அவ்வின்பத்தின் இன்றியமையாமைதானே இதற்கெல்லாம் காரணமாக இருக்கமுடியும்

ஆகவே இளமையும் ஆற்றலும் வனப்பும் மிகுந்த தாங்கள் தங்களுக்கேயுரியதும், உலகமே உவப்பதுமான இன்பத்தை ஏன் மறுத்தலிக்கிறீர்கள்?.”

பிரதம அமைச்சர் உதாயினரின் இத்தகைய புனித மரபுக் கதைகளை ஆதாரமாகக் கொண்ட போலியான வார்த்தைகளைக் கேட்ட 'இளவரசர் இடிமுழக்கக்குரலில் தன் மறுப்பை வெளிப்படுத்தினார் என்று கூறுகிறார்.

இங்காவது இளவசர் இடிமுழக்கக் குரலில் பெண்களை இவ்வளவு தரக்குறைவாக பேசும் மத நூல்களை ஆதாரமாகக் கொண்டு எனக்கும் அந்த ஈனத்தனத்தைச் செய்யத் துணிந்தீரே என்று கேட்கப் போகிறார் என்று நாம் நினைக்கலாம்( அப்படிக் கேட்டால் முதல் நாளிலேயே இது உனக்குத்தெரியவில்லை ஏன் மாதக் கணக்கில் ஆண்டுகணக்கில் அமைதியாய் இருந்தீர் என்று உதாயினர் கேட்கக் கூடும்) ஆனால் இளவரசர் தன் ஆண்மைத்தனத்தையே முன்னிருத்துகிறார். தன்னை அவர் தவறாக எடைபோட்டுவிட்டார் என்று பேச்சைத் தொடங்குகிறார். தனது மதவாத உரையை முற்றும் துறந்த முனிவர் போல் பெண்கள், உணர்ச்சிகள் இவற்றை அடக்குவது, பற்றி குலகுருவுக்குப் போதிக்கிறார். இங்கும் ஒரு சிறிய தர்க்கப் பிழை உள்ளது. முன்னர் குறிக்கும் போது குலகுரு உதாயினரென்ற அம்பேத்கர் அடுத்தபடியாக சித்தார்த்தருக்குப் போதிக்கும் பொழுது பிரதம அமைச்சர் என்று குறிப்பிடுகிறார். குலகுருவே பிரதம அமைச்சராகவும் இருந்தாரா, இருந்தார் என்றால் அதை ஏன் குறிப்பிடவில்லை என தெரியவில்லை.

உதாயினர் பெண்களிடம் கூறும்போது

எனவே, மன்னரின் குலமரபு இவரோடு முடிவு பெற்றுவிடாமல் இருப்பதற்காக உங்களுடைய கைவரிசையெல்லாம் துணிவோடு காட்டுங்கள் என்று கூறுவதாக அம்பேத்கர் கூறுகிறார்

அப்படியெனில் சுத்தோதனரின் குலமரபு இப்படித்தான் பல பெண்களிடம் கைவரிசையைக் காட்டியிருக்கிறது என்று பொருள் கொள்ளலாமா.மேலும்

'சாதரண பெண்கள் சாதாரண ஆண்களையே வசப்படுத்துவார்கள், ஆனால் இயல்பிலேயே உயர்ந்தவர்களும் வசப்படுத்துவதற்குக் கடினமானவர்களுமான ஆண்களை வசப்படுத்துவோரே உண்மையான பெண்களாவர்'

என்று கூறுவதிலிருந்து உதாயினரின் ஆண் மனம் எத்தகையப் போக்கு கொண்டது என்று நாம் அறியலாம். அதே சமயம் இவ்வகையான மோசமான அறிவுரைகளைச் சொல்லும் உதாயினரை அம்பேத்கர் கொள்கை கோட்பாட்டு நெறிகளில் வல்லவரான உதாயிணர் என ஏன் குறிப்பிடுகிறார் எனத் தெரியவில்லை.

ஒரு இடத்தில் கூட அம்பேத்கரின் சித்தார்த்தர்  தன் தந்தையின் கேவலப் போக்கினைச் சுட்டிக்காட்டவில்லை. அந்தப்புரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட பெண்களின் மனநிலைகள், மற்றும் யசோதராவின் மனம் எந்தளவு புண்பட்டிருக்கும் என்று வருந்தவேயில்லை, அம்பேத்கரின் பார்வையில் இங்கு புத்தர் மட்டுமே கதைநாயகன். எனவே அவரது துக்கமே பெருந்துக்கம். மற்றவர்களைப் பற்றிக் கவலையில்லை. மேலும் இந்த அந்தப்புர விவகாரங்களில் யசோதரா என்ன நினைத்தார், இதை எப்படி எதிர்கொண்டார் என்ற யதார்த்த ரீதியான காரணங்கள் எதையும் அம்பேத்கர் சொல்லவில்லை.

மேற்கண்ட உரையாடலில் நாம் இன்னொன்றைக் கவனிக்க வேண்டும். அது அகஸ்தியர் பற்றியது. இங்கு புராணக் கதைகள் சொல்லும் போலியான வாதத்தை இடிமுழக்கத்தோடு இளவரசர் மறுத்துக் கூறியிருக்கிறார். ஆனால் அம்பேத்கர் அகஸ்தியர் பற்றி புராணக் கதைகளை ஆதாராமக் கொண்டு பேசியதை இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது.

மதமாற்றத்திற்கான நாகபுரியை நான் ஏன் தேர்ந்தெடுத்தேன் என்று அம்பேத்கர் கூறும்பொழுது

நாகர்களை ஆரியர்கள் சுட்டெரித்த நிகழ்வுகளை புராணங்களில் படிக்கலாம். அகஸ்தியரால் ஒரே ஒரு நாகரை மட்டும் காப்பாற்ற முடிந்தது. அவரது வழித்தோன்றியவர்களே நாங்கள். மிகக் குரூரமான அடக்குமுறை, ஒடுக்குமுறையைச் சகித்துக்கொண்டு வந்த நாகா மக்களுக்கு இதிலிருந்து மீள ஒரு மனிதர் தேவைப்பட்டார். அந்த மாமனிதரை அவர்கள் கௌதமபுத்தரில் கண்டனர்.

இங்கு நாகர்களைக் காப்பாற்றிய அகஸ்தியரை அவர் புராணத்திலிருந்து எடுத்தாரா?, இல்லை தன் கற்பனையிலிருந்து எடுத்தாரா ? இல்லை இந்த அகஸ்தியர் வேறா? என நாம் குழம்புவதைத் தவிர வேறு வழியில்லை. தமிழில் இருக்கும் அகத்தியரை நாம் அறிவோம்.

புத்தரின் அறிவுரை கேட்டு வாயடைத்துப் போன உதாயினர் நடந்த சேதியை சுத்தோதனருக்கும் தெரிவித்துவிட்டார். சுத்தோதனருக்கு உறக்கம் போய்விட்டது. சுத்தோதனரின் மூடத்தனத்தை எண்ணி நம்மால் இங்கு வியக்காமல் இருக்க முடியாது. அசித்தரின் கணிப்பு குறித்து திடீரென வந்த அச்சம் குறித்து நாம் சில சந்தேகங்களை முன்னர் எழுப்பியிருந்தோம். திருமணவாதற்கு முன்பு இதை முயன்றிருக்க வேண்டும். செய்யவில்லை, ஆனால் திருமணம் ஆகி குழந்தை பெற்றுத் தகப்பனானதும் அசிதரின் கணிப்பு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறதென்றால் அந்தக் கணிப்பை சுத்தோதனர் எவ்வளவு மதித்திருக்க வேண்டும்.

இளவரசருக்கு அந்தப்புர ஏற்பாட்டைச் செய்தபின் என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்று கண்காணித்திருக்க வேண்டும். இளவரசர் துறவியாகிவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்த சுத்தோதனர் அரண்மனைகளைக் கட்டிக்கொடுத்துவிட்டு தன் வேலையை மட்டும் பார்த்திருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது. அப்படி என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்குமளவுக்கு சுத்தோதனர் என்ன செய்தார். ஆட்சிப் பணியைச் செய்தாரா, அல்லது அவர் தன் அந்தப்புரத்தில் இருந்தாரா தெரியவில்லை. ஆனால் மாதக் கணக்கிலும் ஆண்டுக்கணக்கிலும் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் இருந்து உதாயினர் மூலமாக சேதி கேட்டு

 "இதயத்தில் அம்பு தைத்த யானையைப் போல், அவர் துன்பத்தில் துடித்தார்"

என்கிறார் அம்பேத்கர். அதோடு சித்தார்த்தரை உடலின்ப வாழ்வின்பால் ஈடுபடவைத்து அதன் மூலம் வாழ்க்கையில் ஏற்படப் போவதாகத் தோன்றும் திருப்பத்திலிருந்து அவரை திசை திருப்புவதற்கு ஏதாவது வழி வகை காண அவரும் அவருடைய அமைச்சர்களும் நெடுநேரம் கலந்தாலோசித்தனர், எனினும் அதுவரையில் கையாண்டு பார்த்ததைத் தவிர வேறு வழிகளெதுவும் அவர்களுக்கும் புலப்படவில்லை.

சித்தார்த்தர் மணம் முடித்து ஒரு குழந்தை பெற்ற பிறகும், பல பெண்களை அனுப்பி அவரை வசமிழக்கச் செய்வதுதான் வழி என சுத்தோதனர் மட்டுமல்ல அவரது அமைச்சர்களும் கூட இதே மனநிலையில்தான் இருந்திருக்கிறார்கள் என்றால் சாக்கிய குலத்தின் பெருமை எத்தகையது என்பதை புரிந்து கொள்ளலாம். சுத்தோதனரின் எண்ணமும் அவருக்கு யோசனை சொல்லும் அமைச்சர்களின் கீழும் வாழ்ந்த மக்கள் எப்பேர்ப்பட்ட துர்பாக்கியசாலிகள்.

மேலும் சித்தார்த்தரை மயக்கச் சென்ற பெண்கள் அவர் மயங்காததால்

"தாம் அணிந்திருந்த மாலைகள் வாடவும், அணிகலன்கள் ஒளியிழக்கவும், தம் நளினக்கலைகளாலும், நயத்தகு முயற்சிகளாலும் பயனேதும் விளையாமற் போகவே, ஆரணங்குகளின் தொகுப்பு, தம் நேசத்தை நெஞ்சின் ஆழத்தில் புதைத்தபடி கலைந்து போயிற்று

என்று சர்வ சாதாரணமாக அம்பேத்கர் முடிக்கிறார். இதனடிப்படையில் பார்த்தால் சுத்தோதனர் ஏற்பாடு செய்த அனைத்து பெண்களும் அவர்களாகவே விருப்பப்பட்டு சித்தார்த்தரை மயக்க வந்ததாகவே தெரிகிறது. இதை முன்வைத்து நாம் கேள்வி எழுப்பும் போது, இவர்கள் எந்த வர்க்கத்துப் பெண்கள். இளவரசரை மயக்க இவர்களை எங்கிருந்து சுத்தோதனர் வரவழைத்தார். இவர்களின் அடுத்த பணி என்ன? இதோடு முடிந்ததா இல்லை கபில வஸ்துவில் இருக்கும் பல அரசர்களுக்கு இதே பணியைச் செய்வார்களா என்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. அவர்கள் கலைந்து போயினர் என்பதுடன் முடித்துக்கொள்கிறார். மேலும் சித்தார்த்தரின் உடல் அழகு சதா சர்வ காலமும் பெண்களை மயக்கிக்கொண்டெ இருந்தது என்று வேறு சில இடங்களிலும் முன்வைக்கிறார் அம்பேத்கர். அதாவது பெண்கள் மயக்கம் கொள்ளும் வகையில் இருந்தால்தான் அது ஆணின் பேரழகு என்பது அம்பேத்கரின் அழகு பற்றிய கோட்பாடு.


இத்தோடு, புத்தரின் அழகை அம்பேத்கர் முடித்துக் கொள்ளவில்லை. இதுவரை சொல்லியது போதாதென்று, அதற்கென அவருடைய (புத்தருடைய) தனிப்பெருந் தோற்றத்தின் சிறப்பு என்று ஒரு தனி அத்தியாயம் கொடுத்தே விளக்கியிருக்கிறார்.

சில பௌத்த இலக்கிய நூல்களின் கருத்துக்களை வைத்து புத்தரை, புனிதர், அழகு மிக வாய்ந்தவர் என்று தொடங்கும் அம்பேத்கர்,

பொன்மலைச் சிகரம் போன்ற வடிவம், உயரம், வலுமிக்கவர், மகிழ்ச்சி ததும்பும் தோற்றம், நெடிய தோள்கள், சிங்க நடை, வேழ நோக்கு, அவர் தம் அழகும், பொன்னென ஒளிரும் பரந்த நல் மார்பு,அவர் புருவம், நெற்றி, வாயிதழ்கள், உடலை, கரங்களை, நடையை, அவரது குரல் தனிச்சிறப்பான இனிமையுடையதாய், பேரிகையின் நாதமென ஈர்த்ததாய், வசீகரம் மிக்கதாய் துள்ளலும், தொய்வின்மையும் உடையதாய், அவர் குரலினிமை கேட்போரை பிணித்தது, அவர் தம் பார்வை வியந்து பணியத் தூண்டியது, அவர் யாது கூறுகிறார் என்பது கூட அத்துணை முக்கியமானதாயில்லை அவருரை கேட்டோர் எவரையும் தம் விருப்பிற்கீத்து உணர்வினை உந்துபவராயிருந்தார் அவர்

என்று புத்தரின் அழகை சலிக்க சலிக்க, கூறியது கூறியே வர்ணித்துச் செல்கிறார். பகுத்தறிவை தள்ளிவைத்து ஒரு பக்தராய் மட்டுமே அம்பேத்கர் தன்னை முன்வைக்கிறார் என்பதை இங்கு நாம் மறுக்க முடியாது.

மேலும் மறுபடியும், ‘அவரை நேரில் கண்டவரின் சாட்சியம் என்று ஒரு தலைப்பில் மறுபடியும் புத்தரின் அங்க லட்சணங்களை கூறத் தொடங்குகிறார்.

"அந்த முப்பத்திரண்டு அங்க அடையாளங்களும் புத்தருக்கிருப்பதை உறுதிபடுத்திக்கொண்ட பிராமணர் சாலே, புத்தர் உயர்பேரறிவெய்திவிட்டார இல்லையா என்பதை இன்னும் அறியாமலிருந்தார்."

சாலே ஒரு அறிவு கெட்ட பிராமணர். இல்லையா, இல்லையென்றால் 32 அங்க லட்சணங்கள் இருக்கும் போதே அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். தெரியவில்லை. மேலும் புத்தரை சோதிக்க எண்ணுகிறார், ஆனால் 32 அங்க லட்சணங்களை புத்தர் குழந்தையாய் இருந்தபோதே  பார்த்துக் கணித்த அசித்தர் கெட்டிக்கார பிராமணர். ஆம் புத்தர் பிறந்த போது நாற்பது பற்களுடன் பிறந்தார்.

இந்த, 32 அங்க லட்சணங்களைக் கண்டும் நம்பாத அந்த பிராமணர் சாலே, புத்தரை ஞானவான், மாமனிதர், புனிதர்தான், புத்தர்தான் என  எதை வைத்து உறுதியாக நம்புகிறார் என்று தெரியுமா?

மூத்த முதிய பிராமணர்களும், குருக்களின் குருக்களும், அரஹத்களானோரும், உயர்பேரறிவெய்திய அனைவரும் தம்மைத் தாமே போற்றிப்புகழ்ந்து பாடி தம்மை வெளிப்படுத்துவர் என்று தான் கேள்வியுற்றதை நினைவுக்குக் கொண்டு வந்து அதன் மூலம் உயர்வெய்தியவர் என உணர்ந்து, கீழ்க்கண்ட புகழ்மொழிகளால், புத்தரை நேருக்கு நேர் மெச்சிப் புகழலானார்.

என்கிறார் அம்பேத்கர்.

இதிலிருந்து தம்மைத்தாமே போற்றிப் புகழ்ந்துபாடி வெளிப்படுத்துபவரை, நாம் ஞானவான் என்றும் உயர்வெய்தியவர் என்றும், மூத்த முதிய பிராமணர்கள் என்றும் புத்தர் என்றும் தாரளமாக நம்பலாம் என அம்பேத்கர் முன்மொழிவதை எப்படி எடுத்துக்கொள்வது எனத் தெரியவில்லை. புத்தர் கூட தம்மைத் தாமே எங்காவது போற்றிப் புகழ்ந்து பாடி தன்னை வெளிப்படுத்தியுள்ளாரா? இதோடு சாலே என்ற அந்த பிராமணர் புத்தரை நோக்கி...


"ஐயன்மீர்! உம்முடல் அழகுற மிகப் பொருத்தமுற அமைந்து வளர்ந்துள்ளது; முத்துப்பற்களும், முழுநிறைவு உடலழகும் ஒவ்வொரு அங்க அடையாளமும் உம்மை மாமனிதரெனவே தெளிபடுத்துகின்றது.

தெள்ளிய கண்களும், தெளிவுறு அழகும், பொருந்திய உயரமும், நேர்கொண்ட பார்வையும், சோதரர் இடையொரு சூரியப் பேரொளியாய், மிகுந்த மரியாதைக்குரியவராய், மிக்கினியக் குரல்வளம் உடையவராய் உள்ள நீவீர் ஏன் வீட்டைத் துறக்கும் நிலையேற்று, அழகின் அரும்பும் பருவத்தை வீணாக்கினீர்கள்.

"உலகப் பேரரசராய் நாட்டில் உலாவர வேண்டியவர் நீங்கள்,; ஒரு கரையினின்று மறுகரைவரை கடலெல்லாம் உமது ஆளுகைக்குட்பட்டிருக்கவேண்டும். தங்கள் அரசாட்சியின் கீழுள்ள குறுமன்னரெல்லாம் பெருமிதம் கொள்ள வேண்டும். மானுடத்தை, அரசருக்கரசராய், நீவீர் ஆளவேண்டும்."

என நேருக்கு நேராக புகழ்வதாக அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

இந்த இடத்தில் நேரில் 32 அங்க லட்சணங்களைக் கண்டு சந்தேகப்பட்டு, கேள்விப்பட்டதை வைத்து புகழும் சாலே என்ற அந்த பிராமணனைப் பற்றி நாம் என்ன சொல்ல முடியும். ஆனால் அம்பேத்கர் இதைத் துணிந்து கூறுகிறார்.

மேலும் 32 அங்க லட்சணங்கள் உள்ளவர் ஞானத்தை அடைந்த பின்னும், அவரை மன்னாதி மன்னராக வேண்டும். மற்றவர்களெல்லாம் அவருக்குக் கீழ் குறுமன்னராக வேண்டுமென விரும்பும் பிராமணர் சாலே, எதுவும் அறியாதவர் என்று இதன் மூலம் தெரிகிறது.

இதற்கும் மேலாக தன்னை ஒருவர் இப்படி நேருக்கு நேர் புகழ, புத்தர் அதை அமைதியாக தலையாட்டிக் கேட்டுக்கொண்டிருந்தார் என நம்பவேண்டும் என்கிறாரா அம்பேத்கர்.

அடுத்தபடியாக அம்பேத்கரது ஆனந்தர் புகழ்கிறார்.

புத்தரின் மேனிநிறத்தை மிகமிகத் தூயதும், மிக மிக ஒளிமயமானதும் ஆகும் என்றும் ஒரு ஜோடி பொன்னுடைகள் உயர்வெய்திய புத்தரால் அணியப்பட்டால், அவை தம் அழகினை இழக்குமென தோன்றுவதாகவும் வர்ணிக்கிறார்.

இதிலிருந்து நமக்குக் கிடைக்கும் முடிவு, பகுத்தறிவாளர் புத்தரை அதிமனிதராகவும். கடவுள் ஸ்தானத்துக்கும் அம்பேத்கர் ஏற்றிப் புகழ்கிறார். மற்றவர்களும் அவ்வாறே ஏற்றுக்கொள்ள வேண்டுமென வற்புறுத்தவும் செய்கிறார்.

இதோடு, புத்தர் பரிவ்ராஜகம் மேற்கொண்ட துக்கத்தை தாங்கமுடியாத அவரது சிற்றன்னை கௌதமி

ஓ ! அவருடைய அந்த இரு அழகிய பாதங்கள்- முன்பகுதி பேரழகாய் இணைக்கப்பட்டிருக்குமே- கணுக்காலும் அத மிருதுவான மறைவும், நீலத்தாமரை மலரெனத் திகழுமே, மத்தியில் சக்கர மகிமை பொருந்திய அவை, வனத்தின் கடினத் தரைகளில் எப்படி நடப்பது

என்று அழுவதாக அம்பேத்கர் சொல்லுகிறார். மேலும்,

.....அப்போது அவர் (அம்பத்தா) அவருடைய (புத்தருடைய) உடம்பில் மகான்களின் உடம்பில் காணப்படும் முப்பத்திரண்டு அடையாளங்கள் உள்ளனவா இல்லையா என்று கவனித்துப் பார்த்தார். அவற்றில் இரண்டு தவிர மற்ற அனைத்தும் இருப்பதை அவர் கண்டார்.

அவர் இவ்வாறு சந்தேகக் குழப்பத்தில் இருப்பதை புத்தபிரான் அறிந்தார். அப்போது அவர் தம்முடைய அற்புத சக்தியின் மூலம் அவற்றைக் கண்டு கொள்ளச் செய்தார். ஆடையால் மறைக்க வேண்டிய உறுப்பு ஒரு உறையால் மூடப்பட்டிருப்பதைக் கண்டார், புத்த பிரான் நாக்கை நீட்டி அதைக் கொண்டு, தமது இரண்டு காதுகளையும், மூக்கு துவாரங்களையும், நெற்றியையும் தொட்டார்.

மேலும் இதே சந்தேகம் போக்கர்சாதி  என்பவருக்கும் வந்து,

....போக்கர்சாதி புத்தபிரானின் உடம்பில் மகானுக்குரிய முப்பத்திரண்டு அடையாளங்கள் உள்ளனவா என்று கவனித்தார். அவற்றில் இரண்டைத்தவிர மற்றவையெல்லாம் இருப்பதைக் கண்டார். அந்த இரண்டைப் பற்றியும் அவருக்கிருந்த சந்தேகத்தை புத்த பிரான் அம்பத்தாவுக்கு தீர்த்து வைத்தது போலவே தீர்த்தும் வைத்தார்


என்ற அம்பேத்கர், தனது குதிரையான கந்தகத்தை சித்தார்த்தர் வருந்திப் பிரிவதை விவரிக்கும் போது,

"ஐவிரலும் அகன்று மெல்லென விரிந்து சற்றே நடுப்பகுதி வளைவுற்ற அரிய ஸ்வஸ்திக் சின்னம் உடையதாயிருந்த தம் அழகுக் கரத்தால், கௌதமர் அதை அன்புடன் தடவிக்கொடுத்தபடியே நண்பரிடம் கூறுவது போல் கூறினார்."

இந்த சக்கர மகிமை போன்ற மற்ற வர்ணனைகளும் 32 அங்க லட்சணங்களும் லக்கண சூத்திரத்தில் குறிக்கப்பெற்றிருக்கிறது. இப்படி அங்க லட்சண சாஸ்திரங்களை முன்வைத்து புத்தரை கடவுளாகக் காணும் போக்கென்பது, முற்போக்கு பௌத்தத்திற்கு உரியதல்ல. மஹாயானத்திற்கே உரியது. அந்த 32 அங்க லட்சணங்கள் என்னவென்று பார்த்தால் அது பகுத்தறிவை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. புத்தரை அந்த பகுத்தறிவாளரை பகுத்தறிவின் கடவுளாக அம்பேத்கர் முன்வைக்கிறார். அதை சந்தேகிக்கக் கூடாதென்பதற்காக பல இடங்களில் அதை வலுவாக முன்வைக்கவும் செய்கிறார்.


லக்கண சூத்திரமானது 32 அங்க லட்சணங்களில் ஒன்றாக புத்தர் போன்ற உயர்வெய்திய, அதிமனிதர்களாய் இருப்போருக்கெல்லாம், மூத்த முதிய பிராமணர்களுக்கெல்லாம்  40 பற்கள் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. புத்தர் பிறந்த போதே நாற்பது பற்களுடன் பிறந்திருக்கிறார். புத்தர் குழந்தையாய் பிறந்தபோது அசிதர் அத்தனை பற்களையும் எண்ணிப் பார்த்திருக்கிறார். அதை அம்பேத்கரும் பல இடங்களில் பெருமையுடன் விவரிக்கிறார்.
  
இந்த அடிப்படையை முன் வைத்து நாம் வரும் முடிவு, அம்பேத்கர் புத்தரை பகுத்தறிவாளராக ஏற்றுக்கொள்ளவில்லை. பௌத்தம் சொல்லும் பகுத்தறிவு மரபையும் ஏற்றவரல்ல, அவர் நவயானியும் அல்ல.

பிறப்பாலும் வம்சத்தாலும் கிடைக்கும் கௌரவம் புத்தரது போதனைகளுக்கு எதிரானது...” “மிக உயர்ந்த ஞானம், உயரொழுக்க நெறி பெற்றவர்களுக்குப் பிறப்பால் வரும் கர்வம் அல்லது வம்சத்தால் வரும் கர்வம் என்பது கிடையாது...”**

என்ற புத்தரை, சிங்கக்கொடி, சீரியகுலம் எனப் பிம்பிசாரனின் குலப்பெருமையைப் புகழ்ந்து பேச வைத்த அம்பேத்கர் ஒரு மஹாயானி. மஹாயானி மட்டுமே.


வெளிவர இருக்கும் நூலிலிருந்து....




No comments:

Post a Comment

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...