உப
தலைப்பு: முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டு முழிக்கும் பொய்கள்
அசமத்துவமான
சூழ்நிலையை அரங்கேற்றிவிட்டு பாசிசம் என்றெல்லாம் வெண்புறா சரவணன் என்பவர் குமுறித்
தள்ளுவது குறித்து நானும் சில விசயங்களைப் பேச வேண்டியிருக்கிறது.
வெண்புறா
சரவணன், முதல்ல எந்த விருதை எப்டிக் கொடுத்தீங்கன்னு சொல்லுங்க அடுத்தபடியா அவரு மார்க்சிய
அறிஞரான்னு கேள்வி கேட்டதுக்கே அங்க நடந்த அலப்பறை என்னான்னு விரிவாப் பேசலாம். அதையும்
தெளிவா பேசணும். அப்பாடா எப்டியோ அங்க நடந்ததை திரிச்சு ஒரு பதிவு போட்டாச்சு, பஜனை
பாடியாச்சுன்னு ஓடிப்போகக் கூடாது.
என்னுடைய கேள்வி மிகவும் எளிமையானது: எஸ்.வி,.ஆர்
மார்க்சிய அறிஞர் என்றால் அதற்கான பங்களிப்புகளைச் சொல்லுங்கள். வாழ்நாள் சாதனையாளர்
விருதை நீங்கள் வழங்கலாம் எனக்கு அதில் எந்தக் கேள்வியும் இல்லை என அங்கேயே சொன்னேன். ஒரு விருதின் பெயரை மாற்றியக் கூறியதை பிழை என்று
சொல்லலாம், பிழையாக இருக்கும் பட்சத்தில் அதை ஒப்புக்கொள்ளப் போகிறேன். ஆனால் இதையே
பொய், புரட்டு என்று ‘கொந்தளிக்கும்’ உங்கள் ‘உண்மை வெறி’ கண்டு எனக்கு கொஞ்சம் நகைப்பாக இருக்கிறது. ஏனென்றால் என்ன விருது
வழங்கப்பட்டது என்பதல்ல பிரச்சினை, எஸ்.வி.ஆர் எப்படி மார்க்சிய அறிஞர் ஆனார் என்பதுதான்
பிரச்சினை.
சரி,
இப்போது நான் பிழையாக சொன்னது பொய் என்றால், உங்கள் அமைப்பின் ‘புரட்சியாளர், உண்மை
விளங்கி கருப்பு கருணா, கொடுக்கப்பட்ட விருது குறித்து என்ன போட்டிருக்கிறார் என்பதையும்
கொஞ்சம் ‘உண்மை வெறியை’ அடக்கிக்கொண்டு உற்றுப் பாருங்கள்!
இப்போது அவருக்கு என்ன பட்டம் கொடுப்பீர்கள். அங்கு உளறிவிட்டு இங்கு வந்து ’ஜால்ரா’ தட்டுகிறாரே! ஒருவரை வசைபாடுவது என்றால் ஏன் இத்தனை கொண்டாட்டம்?
அடுத்து,
அமைப்பில் இல்லாத உதிரியாகிய நானாவது விருதின் பெயரைத்தான் மாற்றி சொன்னேன் ஆனால் தமுஎகசவின்
போர்வாளான புதிய புத்தகம் பேசுதுவில் விழாவையும், விழாவில் வழங்கிய விருது குறித்தும்
ஒரு செய்தி வந்திருக்கிறது. அதைப் படித்துப் பாருங்கள் நகைச்சுவையின் உச்சமாக இருக்கிறது.
எந்தப் புத்தகத்துக்கு என்ன விருது கொடுத்தார்கள், எழுத்தாளர்கள் யார், நூலின் பெயர்
என்ன... என்றெல்லாம் எதுவும் தெரியாமல் அவர்கள் குழப்பிய புரட்சிகர குட்டையை கொஞ்சம்
தெளிவும் படுத்துங்கள்.
எஸ்.வி.ஆருக்கு
வழங்கப்பட்டது முற்போக்கு கலை இலக்கியத்திற்கான விருதுதான் என்பதை திருத்திக்கொள்கிறேன்.
ஆனால், அவர் மார்க்சிய அறிஞர் என்றால் எப்படி? விளக்குங்கள். இது ஒன்றுதான் நான் அன்று
முதல் இன்று வரை, இந்த நொடி வரை வைக்கும் கேள்வி. கேள்வி கேட்டாலே அவதூறு, மரியாதை
கெட்ட பேச்சு, அபத்தம், ஆபாசம், வசை, சாதி வெறி, சீரியல், படம், நடிப்பு இத்யாதி இத்யாதி
கையாலாகா புலம்பல்களை நிரம்ப கேட்டாயிற்று.
அதேபோல், தமுஎகசவில் அடையாள அரசியல் உள் நுழைந்து வெகுநாளாயிற்று. மேலும் என்னை
ஆதிக்க சாதி என்று சொல்வதன் மூலம் நீங்கள் புரட்சியாளராகலாம். அப்படி நீங்கள் செய்த
புரட்சியைச் சொல்லிவிட்டுச் சென்றால் மிக நன்றாகயிருக்கும். தமுஎகசவில் அடையாள அட்டை
வைத்திருப்பவரெல்லாம் இலக்கியவாதி, முற்போக்குவாதி என்று பிரகடனப்படுத்துவது என்ன மனநிலை
என்று எனக்குத் தெரியவில்லை. மேலும் இங்கு தமுஎகசவை முன்வைத்து இத்தனையும் பேசுவீர்கள்,
நாளை இதுகுறித்து கேள்வி எழுப்பினால் தனிப்பட்டக் கருத்து என்பீர்கள். உங்களுக்கு நான்
சொல்ல வருவது ஒன்றே ஒன்றுதான் பொய்யைப் பேசினாலும் கடைசிவரை ‘நின்று பேசுங்கள்’ சந்தர்ப்பத்திற்கு ஏற்ற மழுப்பல்வாதத்தை முன்வைத்து தப்பித்து
ஒடாதீர்கள்.
இப்பொழுது,
நிகழ்ச்சியில் யார் முதலில் ரங்கநாயகம்மா குறித்த கேள்வியைக் கேட்டார் என்பதைப்
பார்ப்போம். (சர்ச்சையைக் கிளப்பனும், வெலம்பரம் தேடனும்னுல்லாம் தேஞ்ச ரெக்கார்டையே
தேசிக்கிட்டிருக்கீங்களே, அப்படி எனக்கு அந்த நோக்கம் இருப்பின் நானல்லவா அந்தக் கேள்வியை
எடுத்த எடுப்பிலேயே கேட்டிருக்க வேண்டும்) உங்கள் பதிவின்படியே மோகன் குமாரமங்கலம்தான்
அந்த கேள்வியைக் கேட்டர். இது உண்மை! கேட்ட கேள்விக்கு எஸ்.வி.ஆர் நீண்ட விளக்கத்தைக்
கொடுத்திருக்கிறார் என்று நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்தால், உண்மையில் எஸ்.வி,.ஆர்
ஏதோ விளக்கம் கொடுத்திருக்கிறார் என்று பில்டப் செய்யும் இந்த இடத்திலேயே முதல் புளுகு
அரங்கேறிவிட்டது. அப்படி அவர் கொடுத்த விளக்கத்தை நீங்களாவது இங்கு விளக்கியிருக்கலாம்.
சரி,
அடுத்த சமாளிப்பு, கலந்துரையாடல் என்று போட்டிருந்தது எஸ்.வி,ஆர் உடல் நலம் கருதித்தான்
மேடையில் அவர் அமர கேள்விகள் கீழிருந்து கேட்கும்படி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது,
கார்ட்லெஸ் மைக் இத்யாதிகள் என்றெல்லாம் விளக்கம் கொடுக்கும் முன் எஸ்.வி,.ஆருக்கு
வயதாகிறது என்று மேடையில்தான் உங்களுக்குத் தெரிந்தது போலும். கூட்டத்துக்கு முன்னாடியே
இந்த ‘பிட்டு’ கிடைச்சிருந்தா கேள்வி பதில்னே போட்டிருக்கலாம்!
பாவம்!
கால
அவகாசம் குறித்து ஆதவன் எனக்கு முன்னால் பேசவில்லை என்பதற்கு அங்கிருந்தவர்களே சாட்சி!
ஆனால், அமைப்பின் பெயராலும், நட்பின் பெயராலும் அவர்கள் நடந்தது குறித்து மௌனம் காத்தால்
- இதை ஒரு கூட்டுச் சதி, அமைப்புச் சதி என்றுதான் நான் சொல்ல வேண்டியிருக்கும். அமைப்புவாத
அராஜகம் என்றும் சொல்ல முடியும்.
நான்
கேட்ட கேள்விக்கு விளக்கம் கொடுக்கிறேன் என எஸ்.வி.ஆர் என் கேள்வியைத் திரித்து கூட்டத்தின்
உணர்ச்சியைத் தூண்டினார். ஒருவேளை எஸ்வி ஆர்
என் கேள்விக்கு அளித்த பதிலை அங்கு ஒலிப்பதிவு ஏதேனும் செய்திருந்தால் பொதுவெளியில்
வைக்கலாம். மேடை ஏறப் போனதும் ஒருங்கிணைப்பாளரான
ஆதவன் முதலில் கேட்டது “என்ன கேட்கணும்” என்றுதானே தவிர நேரம்
குறித்தெல்லாம் பேசவே இல்லை. உண்மையில் பாடிகாட் முனீஸ்வரனாகத்தான் காட்சி அளித்தார்.
“நான் உங்ககிட்ட கேட்டுத்தான் அவருகிட்டக் கேட்கணுமா” என்றதும்
வேகமாக மைக்கின் முன் ’ஜனநாயகத்தோடும், பொறுமையோடும்’ வந்த
அவர் இதை ரங்கநாயகம்மா நூலுக்கான மேடையாக மாற்ற வேண்டாம் என்று ‘ஆணையிட்டார்’ (அது அப்படித்தான்)! ஆனால், எஸ்.வி.ஆர்தான் அதை ரங்கநாயகம்மாவின்
மேடையாக முழுக்க மாற்றியிருந்தார். அது குறித்து யாருமே உண்மையை சொல்லப் போவதில்லை
என்பதை உங்கள் கோஷ்டி கானம் தெளிவுபடுத்துகிறது.
மேலும்
கீழிருந்து கருத்துச் சொல்ல மேலே அழைத்தார் என்று சொல்வதைக் காணும்போது, பொய்யையே இப்படி
நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும் என்றால் உண்மையைப் பேச நான் என் நெஞ்சை நிமிர்த்தக்
கூடாதா?
”சபை நாகரீகம் அன்றி” என்று ஒரு வார்த்தையைப் போட்டிருக்கிறீர்கள். நான் வைத்தது ஒன்றும் கீழ்த்தரமான குற்றச்சாட்டு
அல்ல. எஸ்.வி.ஆர் பற்றிய தமுகசவின் மதிப்பீட்டிற்கு எதிரான ஓர் கருத்து. ஒரு விமர்சனபூர்வ
கேள்வி. அதற்கு சரியான பதில்தான் பதிலாக இருக்கமுடியும் அதை விடுத்து அப்படி பேசினார்,
இப்படிப் பேசினார், உடலை அப்படி அசைத்தார், இப்படி முறுக்கினார், தண்ணி குடித்தார்,
மூச்சு விட்டார், புட்டத்தைச் சொறிந்தார், விட்டத்தைப் பார்த்தார், சபை நாகரீகம் என்று
கொந்தளிக்கும் முன் எஸ்.வி.ஆர் எப்படி மார்க்சிய அறிஞர் ஆனார் என்று பதில் சொல்வதோடு
சு.வெங்கடேசன் பார்வையில், எப்படி அவர் மார்க்சியப் பேரறிஞர் ஆனார் என்றும் விளக்கிச்
சொல்லியிருந்தால் நாம் கற்றுக்கொள்ள ஏதேனும் அபத்தமில்லாமல் மிஞ்சியிருக்கும்..
அரங்கில்
முகம் சுளித்தார்கள் அப்படி இப்படி என்பதெல்லாம் உங்களது சொந்தக் கருத்தே அன்றி வேறு
எதுவும் இல்லை. ஒருவேளை ஜால்ராக்கள் முகம் சுளித்திருக்குமெனில், உண்மையைக் கூறினால்
முகம் சுளிக்கத்தான் செய்யும் என்பதே எனது பதில்.
முழுமையாகப் பேச கருத்துச் சுதந்திரம் வழங்கப்பட்டது போல் நடிக்கும் நடிப்பு
அபாரம். இன்னும் சொல்லப் போனால் எஸ்.வி,ஆர் உளறிய உளறலை உளறல் எனச் சொல்லப் போன போதுதான்
வயதில் மார்க்சியப் பெரியவரான எஸ்.ஏ.பெருமாள் போ போ என விரட்டியது. மிக்க மகிழ்ச்சியாக
இருக்கிறது.
மார்க்சிய
விஞ்ஞானிகளுக்கு வயது இருந்தால்தான் மார்க்சியம் பேசமுடியும் என்கிற புரிதல் உண்மையில்
ஒரு வரப்பிரசாதம்.
கீழ்த்தரமான வசைகள், அபத்தம், குற்றச்சாட்டுகள்...
என்பதெல்லாம் எனது ஒரே ஒரு விமர்சனத்தை நோக்கித்தான் வைக்கப்படுகிறது. அப்படி நான்
கீழ்த்தரமாக அபத்தமாக வசையாகக் கேட்டது ஒன்றே ஒன்றுதான். எஸ்.வி,.ஆர் மார்க்சிய அறிஞராக
மார்க்சியத்துக்கு என்ன பங்களிப்புச் செய்தார்? இப்பொழுது வரை அந்தக் கேள்விக்குப்
பதில் சொல்லாமலேயே அவரை மார்க்சிய அறிஞர் என்றே சொல்லிக் கொண்டிருப்பது அறிவு நாணயத்திற்கு
அழகல்ல திருவாளர் வெண்புறா அவர்களே. பொய்யையும்
சொல்லி, அதற்கு முலாம் பூச நீங்கள் சிரமப்படுவது நன்கு தெரிகிறது.
//அவரது
கீழ்த்தரமான வசைகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளித்த எஸ்விஆர் "மார்க்சிய
அறிஞர் என்று நான் சொல்லிக் கொள்ளவில்லை வசுமித்ர அது இந்த தோழர்களின் விருப்பம்//" எஸ்.வி.ஆர் தோழர்களின் விருப்பம் என்றெல்லாம் பொத்தாம்
பொதுவாகச் சொல்லவில்லை. . “என்னை நான் மார்க்சிய அறிஞர் என்று சொல்லவில்லை. தமுஎகசதான்
அப்படி அழைக்கிறது” என்றே சொன்னார். சுய பச்சாதாபத்தை முன்
வைத்தார். அது ஏதோ ‘அறிவார்ந்த’ பதில் போல் அங்கிருந்த ‘முற்போக்கு
எழுத்தாளர்கள்’ கைத்தட்டினார்கள். நேர்மையிருந்தால் ஒலிப்பதிவை வெளியிடுங்கள்.
ஆதவனுக்கு
இருப்பது மட்டுமே தார்மீகக் கோபம், அதையும் கட்டுப்படுத்திக் கொண்டார்... அங்கிருந்த
அனைத்து தமுஎகச நிதானிகள் கருமமே கண்ணாயிருந்தார்கள் அமைதிப் புறாக்களைப் பறக்கவிட்டார்கள்,
அய்யகோ மேடை நாகரீகம் தெரிந்து இருந்தார்கள்... என்பதெல்லாம் அங்கு வந்திருந்த தோழர்களுக்கே
வெளிச்சம். மேடை நாகரீகம் என்பது மேட்டிமைத்தனமின்றி
பாட்டாளி வர்க்கப் பண்பா? இதையாவது தெளிவுபடுத்திக்கொண்டு தலைப்பைக் கொடுத்திருக்கக்கூடாதா?
நான்
அரங்கை விட்டு வெளியேறியதும் தார்மீகக் கோபத்துடனும், கண்ணியத்துடனும் சொன்னதுதான்
மனநோய் எனும் ஆதவனின் ‘ஜனநாயகக் கருத்து’! உண்மையில் அங்கு
நடந்ததை இப்படித் திரித்துக் கூறும் உங்களுக்கு இருப்பது என்ன நோய் வெண்புறா சரவணன்?
கண்ணியமான மேடை தமுஎகச, ஜனநாயகம் என்றெல்லாம் சொல்லும் ஒரு அமைப்புதான் அரங்கத்தை விட்டு
வெளியே போன ஒருவரை மனநோய் பிடித்தவர் என்று சொல்லி தன் நோயை உச்சுக் கொட்டிக் கொண்டிருக்கிறதா?
//அதே
மனநிலையில் வெளியில் நின்றிருந்த -வசுமித்ரவுடன் நட்பில் இருக்கும் - சில தோழர்கள்
அவ்வளவையும் சகித்துக்கொண்டு அவரோடு இயல்பாக உரையாடினார்கள் என்பது.// அவர்கள் என்ன
லட்சணத்தில் உரையாடினார்கள் என்று அவர்களையே கேட்டுப் பாருங்கள் வெண்புறா. மேலும் தமுஎகசவுக்கு
இருக்கும் பல பணிகளைப் பற்றிய வியாக்கியானங்களில் மார்க்சிய அறிஞர் என்று ஒருவரை அழைப்பிதழில்
இட்டு, அழைத்து, அதன் மீது கேள்வி எழுந்தால் அதற்கும் பதில் சொல்வதையும் ஒரு பணியாக
எடுத்துக்கொள்ளலாம். அதுவும் ஒரு முக்கியமான பணிதான். ஏன் அங்கேயே தமிழ்ச் செல்வனிடம்
அது குறித்துப் பேசினேனே. அவரும் என்னிடம் பேசினாரே. தி.சு.நடராஜன் எஸ்.வி.ஆரை நான்
மார்க்சிய அறிஞராக ஏற்றுக்கொள்ளவில்லை என என்னிடம் வெளிப்படையாகவே சொன்னாரே. விசாரித்துப்
பாருங்கள். தமிழ்ச் செல்வனிடமும் பேசுங்கள். நானும் உரையாடக் காத்திருக்கிறேன்.
உண்மையில்
அங்கு வந்திருந்த தமுஎகச தோழர்களில் நூற்றுக்கு 99 சதமானோர் ராஜதுரை அவர்களின் நூலைப்
படித்திருக்கவே வாய்ப்பில்லை என்ற என் கருத்தில் இப்பொழுது வரை எந்த மாற்றுக்கருத்தும்
இல்லை. அப்படி படித்திருந்தால் மார்க்சிய அறிஞர் என்ற பட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க
மாட்டார்கள். அதேபோல் படிப்பது என்பதற்கு சரியான பொருள் தெரியாதவர்களே, புத்தகத்தை
புரட்டுவதை, வீட்டில் அலமாரியில் புத்தகத்தை வைத்திருப்பதையேகூட படித்துவிட்டதாகச்
சொல்லிக் கொள்வார்கள்.
மேலும்,
ததிங்கிணத்தோம் போடும் அவசரத்தில் என் கேள்வியை நீங்கள் என்னவாக திரித்திருக்கிறீர்கள்
என்பதற்கு மற்றொரு சான்று //தோழர்கள் அருணன், ச.தமிழ்செல்வன், ச.செந்தில்நாதன், சு.வெங்கடேசன்,
கே.வேலாயுதம் ஆகிய 5பேர் கொண்ட நடுவர்குழுதான் இந்த விருதுக்கு இவரை தேர்வு செய்தது. இந்த 'முதுபெரும் தோழர்கள்' வேலை வெட்டி ஏதுமற்றவர்கள்.
எனவே, வசுமித்ர தனது புரட்சிக் கம்பெனியில் ஏதாவது வேலையிருந்தால் போட்டுத்தரம்படி
கேட்கலாம்!// நான் கொடுக்கப்படும் விருது குறித்து மேடையில் எதிர் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
நான் சொன்னது ”அவருக்கு ...... என்ன விருது வேண்டுமானாலும் கொடுக்கலாம், ஆனால் மார்க்சிய
அறிஞர் என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி அவர் மார்க்சியத்திற்கு ஓரு
அறிஞராக செய்த பங்களிப்பு என்ன?......” இதுதான் என் கேள்வி. ஆனால் நான் ஏதோ அவருக்கு
விருது கொடுத்ததையே தட்டிக் கேட்டதாகத் திரிக்கிறீர்களே! இதுதான் நீங்கள் கீழடியில்
நோண்டி, நொங்கெடுத்த உண்மையா?
மேற்சொன்ன
நடுவர் குழு முற்போக்குக் கலை இலக்கியத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த ஆளுமைக்கான
விருதுக்கு எஸ்.வி.ஆரை தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் சம்பந்தப்பட்ட ஐவர் குழு அவருக்கு
மார்க்சிய அறிஞர் என்ற பட்டத்தையும் கொடுத்திருந்தால் அது விமர்சனத்துக்குரியது. அதற்கு
அவர்கள் பதில் சொல்லக் கடமையும் இருக்கிறது.
தமுஎகசாதான்
எஸ்.வி.ஆரை உருப்போட்டு மெத்த படித்தது என்றால் மார்க்சியத்துக்கு ஒரு அறிஞராக அவர்
செய்த பங்களிப்பை பட்டியலிடலாமே. அதை மட்டும் செய்ய முடியாமல் திணறுவது ஏன் திமிரற்ற
அடக்க சிகாமணி சரவணன் அவர்களே. கேட்ட கேள்விக்குப் பதிலைச் சொல்லாமல், எப்போது பார்த்தாலும்
ரவுடி, அராஜகவாதி, சாதியவாதி, மெத்த படித்த மேதாவி என ஒருவரை வசை பாடுவது என்ன வகை
‘இயம்’ என்று நீங்கள் விளக்கலாம்.
நான்
அனுதினமும் புரட்சி பற்றி கவலைப்படுவதாக எங்கேயும் சொன்னதில்லை. ஆனால் தமுஎகசவுக்கு
வக்காலத்து வாங்கும் நீங்கள் தமுஎகசவின் அறிக்கைகளை படித்திருப்பீர்கள். அதுதான் அணுதினமும்,
அணுநொடியும், புரட்சி பற்றி, ஜனநாயகம் பற்றி, பாசிசம் பற்றியெல்லாம் கவலைப்படுவதாக
எழுதியபடி சென்று கொண்டிருக்கிறது. அப்படி அணுதினமும் கவலைப்பட்ட அது, இப்பொழுது மார்க்சிய
அறிஞராக எஸ்.வி.ஆரை முன்வைத்திருக்கிறது எனும்போது, தமுஎகச எப்படியெல்லாம் மார்க்சியத்தைக்
கரைசேர்க்க கவலைப்படுகிறது என்பது நன்றாகப் புரிகிறது.
அனைவரும்
வருக! ஆதரவு தருக! டொனேஷனை அள்ளி வீசுக! ஆனால் கேள்வி மட்டும் ‘கேக்கப்டாதுன்னு’ போட்டிருந்தா நான் கொஞ்சம் உஜாரா இருந்திருப்பேன். மேலும், ஆதவன்
தீட்சண்யா அதுல இன்னொரு புளுகும் புளுகியிருக்கார். நானா ஓடிப்போய் எஸ்.வி.ஆருக்கு
முத்தம் கொடுத்தேன்னு. எஸ்விஆரே சொல்லட்டும் யார் முதல்ல முத்தம் கொடுத்ததுன்னு. அதுக்குப்
பிறகு எஸ்.வி,.ஆரும் நானும் என்ன பேசணும்னு அவரே சொல்லட்டும். இங்கையும் வந்து அவருக்கு
டப்பிங் கொடுக்கும் வேலை பார்ப்பது என்ன விதமான நோய் என்றும் அவரே சொல்லட்டும்.
நண்பர்களை முன்வைத்துக் குடித்துக் கும்மாளம் போட்டுக்கொண்டு
அதை புரட்சிகரத் தோழமை என்று சொல்ல வேண்டுமென்றால் நான் உதிரியே. அந்த உதிரியின் கேள்விக்கு
எந்தப் பதிலும் சொல்லாமல், மனநோய், கூட்டத்தில் இப்படித்தான் நடந்தது என்று பொய் சொல்லுவது,
அதற்கு கீழே நான்கைந்து கமெண்டுகளை அறிவுசார் தோரணையோடு இடுவதையெல்லாம் புரட்சி என்றால்
நான் உதிரிதான். மேலும் சீரியல் சீரியல் என்று
கூவி உங்களுக்கு பதில் சொல்லுபவர்களின் அறிவைக் கண்டு வியக்கிறேன். தமுஎகச எத்தனை சீரியல்
இயக்குனர்கள் வசன கர்த்தாக்களுக்கு விருது கொடுத்தது எனும் பட்டியலை எல்லாம் எடுத்துப்
போட்டால் அதன் முற்போக்கு வெளிச்சம் கண்கூசும். விட்டுவிடலாம்.
வயது
பற்றி எஸ் ஏ பெருமாளை முன்வைத்து என் வயதை எடை போட்டதுதான் இருப்பதிலேயே அபாரம். கம்யூனிஸ்ட்
கட்சி அறிக்கையை எழுதும்போது மார்க்ஸ்க்கு வயது முப்பது, எங்கல்ஸுக்கு வயது 29 தான்.
அந்த முப்பது வயது இளைஞன் எழுதிய சுமார் 50 பக்க அறிக்கையைத்தான் எழுபது வயதுக்கு மேல்
எப்படிப் படிக்க வேண்டும் என 500 பக்கங்களுக்கு மேல் விளக்கெண்ணெய் போட்டு விளக்கிக்
கொண்டிருக்கிறார் எஸ்வி,ஆர். நகைச்சுவைக்கு
ஒரு அளவே இல்லையா.
வசுமித்ரவை
கண்டு கொள்ளவேண்டாம், சீரியல், மண்ணாங்கட்டின்னு இவ்வளவு ததிங்கிணத்தோமையும் போட்டுட்டு,
அப்புறம் இது என் தனிப்பட்ட கருத்து, ஆனா தமுஎகச பொதுப்பட்ட கருத்து வேறன்னு எங்கையும்
போயி உளறிட்டு நிக்காதீங்க.
தெளிவா
ஆதாரத்தோட பேச வாங்க!
No comments:
Post a Comment